Monday, November 13, 2006

42. வீட்டை விட்டுத் துரத்தினால்

தந்தையார் வழியிலே பெருஞ் செல்வம் மகனுக்கு வந்தது. மகன் அதை வீணாடம்பரஞ் செய்தான். கொஞ்சமும் அறம் செய்யவில்லை. "ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்" என்பது தமிழ் மூதாட்டி வாக்கு. கைக்காசு குறைந்தது. கடன் வாங்கினான். அதுவும் தீர்ந்தது. வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியவில்லை. வாசலில் அமீனா வந்து நின்றான். இதுவரை இருந்த இடம் காலாவதியாகி விட்டது என்ற நீதிமன்ற உத்தரவு வேறு. என்ன செய்வது? இருந்த வீட்டை விட்டு வெளியே வராவிட்டாலும் இழுத்துப் போடும் அதிகாரம் வாசலில் நிற்பவனுக்கு இருக்கிறது.

கண்ணீர் விட்டு புலம்பினால் விட்டு விடுவானா? இத்தனை நாள் இருந்த வீடல்லவா. நம் விருப்பபடியெல்லாம் செய்யக் காரணமாயிருந்த வீட்டை விட்டுத் துரத்தினால் என்ன செய்வது? தெருவிலா நிற்பது? வேறு வீடு வேண்டுமே? அப்பொழுது நமக்கு வேண்டியவர் வந்து, அவருடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றால் எவ்வளவு நிம்மதி கிட்டும்!

இதுதான் வாழ்க்கைத் தத்துவம். தாய் தந்தையர் கொடுத்த வீடு இந்த உடம்பு. நமது விருப்பப்படியெல்லாம் வளைந்து கொடுத்து இன்பம் நுகர்ந்த உடல். விதி முடிந்து விட்டது. காலதூதன் வாயிலில் நிற்கிறான். பெருங்கலகம் செய்து இதுவரையிருந்த உடம்பை விட்டுத் துரத்தப் போகிறான். அப்போது எங்கே போவது? இன்னொரு வீடு (உடம்பு) கிடைக்குமா?

அருணகிரி அதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. "முருகா! எனக்குத் தெரியும். இந்த நமன் வந்து கலகம் செய்வான். என்னை உடலைவிட்டுத் துரத்த வருவான். வேறு போக்கிடம் ஏது? அப்பொழுது நீ வா. வந்து என்னைக் கா. இந்த உடம்பாகிய வீட்டை விட்டுப் பிரித்து வீடுபேறு என்ற வீட்டை அருள்வாயாக!"

சாகாது எனையே சரணங்களிலே
காகா நமனார் கலகஞ் செயும் நாள்
வாகா முருகா மயில்வாகனனே
யோகா சிவஞானோப தேசிகனே


நமன் கவர்ந்தால் வீடுபேறு கிட்டாது. இறைவனே வர வேண்டும். அப்பொழுதுதான் வீடுபேறு கிட்டும். பெரிய வீட்டிற்குப் போக முடியும். என்னுடைய கிருத்துவ நண்பியுடன் பேசிக் கொண்டிருந்தேன். கிருத்துவ மதத்திலும் இதே கருத்து சொல்லப்படுகிறதாம். அதை salvation என்கின்றார்கள். நமது தமிழும் அதைத்தான் சொல்கிறது. தமிழில் இல்லாதது என்ன?

இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். "கா கா நமனார் வரும் நாள்" என்கிறார் அருணகிரி. இரண்டு முறை கா கா என்கிறார். அவசரமாகக் கேட்டும் பொழுது "குடு குடு" என்போம். "பர பர" என்று இரட்டைக் கிளவியும் உண்டே. அந்த நேரத்தில் தாமதம் செய்யக் கூடாது. அவ்வளவு அவசரம். அதனால்தான் சீக்கிரம் வர வேண்டும் என்று இரண்டு முறை அழைக்கிறார்.

வாகாக மயில் மீது ஏறி வலம் வருகின்ற முருகா! யோகா! சிவஞானமே சிறந்தது. அதையும் சிவனுக்கே உபதேசித்த பெருந்தேவரே! உயிர் பிரியும் வேளையில் காலனிடத்தில் என்னை விட்டு விடாமல் நீயாக விரைந்து வந்து மெய் வீட்டை (உடம்பு எனும் வீடு) விட்டு என்னைப் பிரித்து மெய் வீட்டைத் (உண்மையான வீட்டை) தருவாயாக.

பக்தியுடன்,
கோ.இராகவன்

12 comments:

said...

ஜிரா
மிக நன்று!
"காலன் எனைஅணு காமல் உனதிரு
காலில் வழிபட அருள்வாயே" என்ற புகழ் தான் நினைவுக்கு வருகிறது!

//salvation என்கின்றார்கள். நமது தமிழும் அதைத்தான் சொல்கிறது. தமிழில் இல்லாதது என்ன?//

"எல்லாப் பொருளும் இதன் பால் உள"!

said...

/இந்த உடம்பாகிய வீட்டை விட்டுப் பிரித்து வீடுபேறு என்ற வீட்டை அருள்வாயாக!"//
இதுதாங்க பக்தி

said...

நல்ல விளக்கம் இராகவன்.

said...

அருமையா விளக்கியிருக்கீங்க ஜி.ரா...
அதுவும் முதல்ல சொல்லியிருக்கிற தத்துவ கதை அசர வைத்தது.

//நமனார் கலகஞ் செயும் நாள்
வாகா முருகா மயில்வாகனனே//

இதுல வாகான்றது வருவதற்கு முன்பே அப்படின்ற அர்த்தத்திலா?

said...

எதையும் மூன்று முறை சொல்வது மரபு

அது போல் 'காகா' என்று முதலில் சொல்லி 'வாகா' என்று மூன்றாவதாய் யமன் வருகையில் வந்து காத்துவிடு
என்கிறார் போலும்

said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஜிரா
மிக நன்று!
"காலன் எனைஅணு காமல் உனதிரு
காலில் வழிபட அருள்வாயே" என்ற புகழ் தான் நினைவுக்கு வருகிறது! //

உண்மைதான் ரவி. திருப்புகழ், அநுபூதி, அலங்காரம் என்று அனைத்திலும் அழுத்திச் சொல்கிறார்.

// //salvation என்கின்றார்கள். நமது தமிழும் அதைத்தான் சொல்கிறது. தமிழில் இல்லாதது என்ன?//

"எல்லாப் பொருளும் இதன் பால் உள"! //

மறுக்க முடியாத உண்மை.

said...

// ILA(a)இளா said...
/இந்த உடம்பாகிய வீட்டை விட்டுப் பிரித்து வீடுபேறு என்ற வீட்டை அருள்வாயாக!"//
இதுதாங்க பக்தி //

அது அருணகிரிநாதருக்கு இருந்தது. அதுனால அவருக்குப் புகழ். அதுவும் திருப்புகழ். நமக்கு இல்லை. அதுனால தெருப்புகழ். :-)

// குமரன் (Kumaran) said...
நல்ல விளக்கம் இராகவன். //

நன்றி குமரன். குமரனா ஒரு வரிப் பின்னூட்டமிடுவது. நான் சொன்ன பொருளுக்கெல்லாம் மாற்றுப் பொருளும் சொல்லும் குமரனுக்கு வேலை நிறைய போலிருக்கிறது. :-)

said...

// ஒண்டிபுலி said...
தொடரட்டம் உங்கள் பணி..........வாழ்த்துகள் //

நன்றி ஒண்டிப்புலி. உங்கள் வருகையும் கருத்தும் இங்கு தொடர வேண்டுகிறேன்.

// வெட்டிப்பயல் said...
அருமையா விளக்கியிருக்கீங்க ஜி.ரா...
அதுவும் முதல்ல சொல்லியிருக்கிற தத்துவ கதை அசர வைத்தது. //

வெட்டி அது கதையல்ல. மனிதன் தோன்றிய காலந்தொட்டு நடப்பதே.

// //நமனார் கலகஞ் செயும் நாள்
வாகா முருகா மயில்வாகனனே//

இதுல வாகான்றது வருவதற்கு முன்பே அப்படின்ற அர்த்தத்திலா? //

நல்ல கேள்வி. அதுக்கு மேல மதுமிதா அழகா விளக்கம் சொல்லியிருக்காங்க பாருங்க.

said...

// மதுமிதா said...
எதையும் மூன்று முறை சொல்வது மரபு

அது போல் 'காகா' என்று முதலில் சொல்லி 'வாகா' என்று மூன்றாவதாய் யமன் வருகையில் வந்து காத்துவிடு
என்கிறார் போலும் //

சரியாச் சொன்னீங்க மதுமிதா. அருமையான விளக்கம். கா கா என்று காப்பாத்தச் சொல்லீட்டு நமன் வருகையில் வா...வந்து கா என்று சொல்கிறார்.

said...

வேறொன்றுமில்லை இராகவன். வீட்டை விட்டுத் துரத்துபவன் எவ்வளவு விரைவில் வருவானோ என்ற ஐயம் வந்ததால் அவன் வருவதற்குள் செய்ய ஏதாவது இருக்கிறதா என்று பார்க்கச் சென்றுவிட்டேன். போனால் அடியார் குழாத்துடன் போய்ச் சேர் என்று சொல்லித் திருப்பி அனுப்பிவிட்டான். அதனால் வந்துவிட்டேன்.

said...

நல்ல விளக்கம் ராகவன்.

// மெய் வீட்டை (உடம்பு எனும் வீடு) விட்டு என்னைப் பிரித்து மெய் வீட்டைத் (உண்மையான வீட்டை) தருவாயாக.//

நல்ல சொல்விளையாட்டு

வாகா என்றால் அழகானவனே என்றும் ஒரு பொருள் உண்டு.

said...

அருணகிரியாரின் பக்தி அமுதை தங்கள் பக்கங்கள் யாவும் அள்ளித்தந்துள்ளீர். நன்றி. தொடரட்டும் இத்திருப்பணி..