உல்லாச நிராகுல யோக விதச்
சல்லாப விநோதனும் நீ அலையோ
எல்லாம் அற என்னை இழந்த நலம்
சொல்லாய் முருகா சுர பூபதியே
இந்தச் செய்யுள் மிகவும் சிறப்பான செய்யுள். உரிக்க உரிக்க தாள் தரும் வெங்காயம் போல, படிக்கப் படிக்க பல பொருள் தரும் அருமையான செய்யுள் இது. கற்றறிந்த பெரியவர்களிடம் கேட்டால் சுகமாகச் சொல்வார்கள். நான் படித்தவைகளை வைத்துப் பொருள் கூறுகிறேன். இந்தச் செய்யுளில் கீழிருந்து மேலாகச் செல்லலாம்.
சுர பூபதியே! வடமொழியில் எதிர்ப்பதச் சொல் வேண்டுமெனில் அகரத்தை முதலெழுத்தாகச் சேர்த்துவிடுவார்கள். ஞானம். அஞ்ஞானம். பாக்யம். அபாக்யம். சுரர். அசுரர். என்றெல்லாம் வரும். காலப் போக்கில் தமிழிலும் அதன் தாக்கம் வந்தது. நீதி. அநீதி. கிரமம். அக்கிரமம். என்றெல்லாம் சொல்லிக் கொள்ளத் தொடங்கினோம். இவைகளும் தமிழ்ச் சொற்கள் அன்று.
அசுரர்களுக்கு எதிர்ப்பதம் சுரர். அதாவது தேவர்கள். அவர்களுக்குத் தலைவனே என்று அழைக்கிறார். சுரபதியே என்று சொன்னாலே போதும். பதி என்றால் தலைவன். பூ(மி) என்றால் உலகம். பூபதியே என்றால் உலகத் தலைவன். அனைத்து உலகங்களும் தேவர்கள் ஆட்சிக்கு உட்பட்டவை. அப்படிப் பட்ட தேவர்களின் உலகங்களுக்கே தலைவனாக விளங்குகின்றவனே என்று அழைக்கிறார் அருணகிரி. அதாவது தேவர்களுக்கு மட்டுமல்ல. அவர்கள் சார்ந்த அனைத்திற்கும் தலைவன் அவனே என்பது கருத்து.
இதற்கு ஒரு எடுத்துக்காட்டு சொல்கின்றேன் கேளுங்கள். மேலதிகாரி இருக்கின்றார். அவருக்குக் கீழே பல கிளையதிகாரிகள். கிளையதிகாரியின் நிர்வாகத்தைப் பார்வையிடக் கிளையலுவலகத்திற்குச் செல்கிறார். அங்கே மேலதிகாரிக்குத் தனி நாற்காலி கிடையாது. ஆனால் கிளையதிகாரி தனது நாற்காலியைத் தருவார். கிளையதிகாரி பயன்படுத்திய மேசையை மேலதிகாரி பயன்படுத்துவார். கிளையதிகாரிக்குக் கீழே பணிபுரிகின்றவர்களும் இப்பொழுது மேலதிகாரிக்குக் கட்டுப் பட்டவர்கள். அது போலத்தான் தேவர்கள் மட்டுமல்ல அவர்கள் ஆட்சிக்கு உட்பட்ட அனைத்துமே முருகப் பெருமானின் சொத்து.
சுர பூபதியே என்று அழைத்து என்ன கேட்கிறார்? நலம் சொல்லாய் முருகா என்று கேட்கிறார். அதாவது நலம் கொடுக்க வேண்டுகிறார். அதுவும் எப்படிப் பட்ட நலம்! எல்லாம் அற என்னை இழந்த நலம். மிகவும் செறிவுள்ள சொற்றொடர் இது. ஆழ்ந்து படித்தால் புரியும்.
பற்று நீங்கினால் பற்றற்றவனின் காலைப் பற்றலாம். புறப்பற்று அகப்பற்று என்று பற்றுகள் இரண்டு. எல்லாம் என்பது புறப்பற்று. என்னை என்பது அகப்பற்று. எல்லாம் அற என்றால் அனைத்துப் புறப்பற்றுகளும் அறுக்கப்பட வேண்டும் என்கிறார். என்னை என்பது அகங்காரம். நான் என்பது அது. அதை இழக்க வேண்டும். அப்படிப் பற்றுகளை நீக்க நல்வாக்கு தருவாய் முருகா என்கிறார்.
"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு" என்கிறார் வள்ளுவர்.
அதாவது, பற்றுகளை விட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே பற்றுகளை ஒழித்துவிடாது. அதற்கு பற்றுகளே இல்லாத ஒருவரைப் பற்ற வேண்டும். முள்ளை முள்ளால் எடுப்பது போல. இதே கருத்தைத்தான் அருணகிரியும் அநுபூதியில் கையாண்டுள்ளார். "எல்லாம் அற என்னை இழந்த நலம்" என்ற வரியை இப்போது சொல்லிப் பாருங்கள் பொருள் விளங்கும்.
இதில் மற்றொரு மறைபொருள் உள்ளது. புறம் என்றால் வெளியே. அகம் என்றால் உள்ளே. கடவுள் என்றால் என்ன? நம்மையெல்லாம் கடந்து எல்லாவற்றிலும் (எல்லாம்-புறம்) நிறைந்து, நமக்குள்ளும் (நான்,நமது-அகம்) உறைந்தவன். கட(ந்து) உள்(ளே உறைந்தவன்) கடவுள். உள்ளேயும் வெளியேயும் உள்ள பற்று போக வேண்டும். ஆற்றலை அளிக்க முடியாது. Newton's law. மாறாக மாற்றலாம். ஆக இந்தப் பற்றுகளை நீக்குவதற்கு பதிலாக உள்ளும் புறமும் நிறைந்த கடவுளின் மீதுள்ள பற்றாக மாற்ற வேண்டும்.
முதலிரண்டு அடிகளை இப்போது பார்க்கலாம். உல்லாச நிராகுல யோக இத சல்லாபனும் நீ அலையோ! இது பாராட்டு. முருகனின் பல பண்புகளைப் பாராட்டுகிறார். ஒன்றைக் கேட்கும் முன்னம், கொடுப்பவரைப் புகழ்ந்து கூறி, இதைக் கொடு என்று கேட்பதுதானே வழக்கம். பற்றுகளை ஒழிக்கும் படி கேட்குமுன்னர், முருகனைப் பாராட்டுகிறார் அருணகிரி.
உல்லாசம் என்றால் நிலையில் மாறுபாடில்லாதவன் என்று பொருள். எந்நிலையிலும் எந்த மாற்றமும் இல்லாதவன் இறைவன். அவனால் எல்லாம் மாற்றப்படும். ஆனால் அவனுக்கு எந்த மாற்றமும் இல்லை. நிராகுலன் என்றால் துன்பமில்லாதவன் என்று பொருள். நல்ல அருமையான வடமொழிப் பெயர். குழந்தைகளுக்கும் வைக்கலாம். யோகம். யோக வடிவானவன் என்று பொருள். இதமானவன். சல்லாபம் என்றால் பேசுதல். விநோதமென்றால் செய்தல். யோகமாகிய இதத்தைப் பற்றிப் பேசவும் செய்யவும் கூடியவன் முருகன் அல்லவா! இந்த இரண்டு அடிகளுக்கு இன்னும் பல பொருட்கள் உள்ளன. சொல்லக் குறைவிலாதவை. இப்போது நான்கு அடிகளையும் சேர்த்துப் படியுங்கள். எல்லாம் புரியும்.
அன்புடன்,
கோ.இராகவன்
Monday, February 06, 2006
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
இந்தச் செய்யுள் மிகவும் சிறப்பான செய்யுள். உரிக்க உரிக்க தாள் தரும் வெங்காயம் போல, படிக்கப் படிக்க பல பொருள் தரும் அருமையான செய்யுள் இது. //
உண்மைதான் ராகவன். ஆனா அத அழகா, சிம்பிளா நீங்க விளக்கின விதம் இருக்கே அது அருமை.
அப்புறம் நீங்க சொன்ன மேலதிகாரிக்கு இருக்கையளிக்கும் விஷயம்..
எனக்கு ரெண்டு விதமான அனுபவமும் இருக்கு.
ஒரு அதிகாரிக்கு என்னுடைய இருக்கையை அளித்தேன். 'That's your chair. How dare you ask me to sit on that?' என்றார். 'Very sorry Sir.' என்று எனக்கெதிரே இருந்த இருக்கையைக் காண்பித்தேன்.
வேறொருத்தர் 'Don't you have manners TBR? You should have offerred me your seat as soon as I entered your cabin. You expect me to sit on your visitor's Chair?' என்று கடித்தார். 'Sorry Sir I forgot.' என்று அவருக்கு என் இருக்கையைக் கொடுத்துவிட்டு எதிரே இருந்த வாடிக்கையாளர் இருக்கையில் அமர்ந்தேன்!
செய்யுளும் அருமை. அதன் விளக்கமும் நன்றாக அமைந்து இருக்கின்றது.
மேலும் தொடர வாழ்த்துக்கள்...
செய்யுளும் அருமை. அதன் விளக்கமும் நன்றாக அமைந்து இருக்கின்றது.
மேலும் தொடர வாழ்த்துக்கள்...
// உண்மைதான் ராகவன். ஆனா அத அழகா, சிம்பிளா நீங்க விளக்கின விதம் இருக்கே அது அருமை. //
நன்றி ஜோசப் சார்.
// அப்புறம் நீங்க சொன்ன மேலதிகாரிக்கு இருக்கையளிக்கும் விஷயம்..
எனக்கு ரெண்டு விதமான அனுபவமும் இருக்கு.//
அட! இப்பிடியும் நடந்திருக்கே. :-) இதென்ன முன்னப் போனா கடிக்கும். பின்னப் போனா இடிக்கும் கதையா!
கொஞ்சம் வேற மாதிரி சொன்னா....கீழதிகாரி பண்ற வேலைய மேலதரிகாரி பாக்க முடியும். ஆனா மேலதிகாரியோட வேலையைக் கீழதிகாரி பாக்க முடியாது.
// செய்யுளும் அருமை. அதன் விளக்கமும் நன்றாக அமைந்து இருக்கின்றது.
மேலும் தொடர வாழ்த்துக்கள்... //
நன்றி சண்முகி. ரொம்ப ரசிச்சுப் படிச்சிருக்கீங்கன்னு நினைக்கிறேன். ரெண்டு வட்டம் பாராட்டீருக்கீங்க. ரொம்ப நன்றி.
இராகவன்
அருமையாக விளக்கம் அளித்துள்ளீர்கள். மேலதிகாரி உதாரணம் மிகப்பிரமாதம்.தெரிந்ததை வைத்து தெரியாததை சிறப்பாக விளக்கம் செய்தீர்கள். நன்றி.
ஆனால் ஒருவாரம் காத்திருக்கவைக்கலாமா?காத்திருந்தால் எதிர்பார்த்திருந்தால் ஒரு நிமிஷமும்/வாரமும் வருஷமடி என்ற வைரமுத்துவின் வரிகல் நினைவுக்கு வருகிறது. தி. ரா. ச
ரொம்ப அருமையா எளிமையா விளக்கம் கொடுத்திருக்கீங்க இராகவன்.
தி.ரா.ச. சொல்ற மாதிரி வாரத்துக்கு ரெண்டுன்னு எழுதத் தொடங்குனா என்ன? நல்லா இருக்குமே.
உல்லாசமாய் எந்த விதக் கவலையும் இல்லாமல் (நிர்+ஆகுல) சல்லாபமாய் யாரால் இருக்கமுடியும்? ஒன்று எந்த விதப் பொறுப்பும் இல்லாதவனால் முடியும்; இல்லை எல்லாப் பொறுப்பையும் நிறைவேற்றியவனால் முடியும். மற்றவர்களால் முடிகிறதா? எத்தனைப் பொறுப்புக்கள்; எத்தனைக் கவலைகள். எல்லாம் அற வேண்டும் என்று சொல்கிறார்கள்; நான் எனது என்பதை மறக்கவேண்டும் என்றும் சொல்கிறார்கள். ஆனால் நடக்கிறதா? அது எப்படி நடக்கும்? எப்போது நடக்கும்?
தீ தன்னுடன் சேர்ந்த எல்லாவற்றையும் எரித்துத் தீயாக்குவது போல் யார் எல்லாப் பொறுப்பையும் நீக்கியவனாக/நிறைவேற்றியவனாக இருக்கிறானோ அவனைச் சேர்ந்தால் நாமும் எல்லாம் அற நம்மை மறக்கும் நிலை வரும்.
ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச:
எல்லாப் பொறுப்புக்களையும் அவற்றினால் எழுந்த கவலைகளையும் விட்டுவிட்டு என்னையே சரணடை. நான் உன்னை எல்லாவிதத் துன்பங்களில் இருந்து விடுதலை செய்கிறேன். வருந்தாதே. என்னும் கீதை தான் இங்கு நினைவிற்கு வருகிறது.
அருணகிரியார் இனிமேல் 'எல்லாம் அற என்னை மறந்த நலம்' வேண்டும் அதனைச் சொல்வாய்/அருள்வாய் என்று கேட்பது போல் தோன்றவில்லை.
உல்லாச நிராகுல யோகவித சல்லாப விநோதனும் நீயல்லவோ. கந்தா. உன்னை நான் அடைந்ததால் எல்லாம் அற எனை நான் 'இழந்த' அந்தப் பெருமையைச் சொல்லாய் முருகா தேவர்களின் அரசனே.
ஏற்கனவே அந்த நலம் கிடைத்துவிட்டது. இனி வேண்டுதல் இல்லை.
ரொம்ப நல்லாருக்கு ஜிரா..
பலரும் சொன்னா மாதிரி மேலதிகாரி விளக்கம் மிகப் பொருத்தம்.
அதே சமயத்துல குமரன் சொல்றதும் இன்னும் உகந்ததா இருக்குதுன்னு எனக்கு தோணுது. ஏன்னா, அநுபூதி வேண்டுதல் இல்லியே. கந்தனுடன் கலந்ததைக் குறித்த மகிழ்ச்சியின் வெளிப்பாடுதானே.
// இராகவன்
அருமையாக விளக்கம் அளித்துள்ளீர்கள். மேலதிகாரி உதாரணம் மிகப்பிரமாதம்.தெரிந்ததை வைத்து தெரியாததை சிறப்பாக விளக்கம் செய்தீர்கள். நன்றி.
ஆனால் ஒருவாரம் காத்திருக்கவைக்கலாமா?காத்திருந்தால் எதிர்பார்த்திருந்தால் ஒரு நிமிஷமும்/வாரமும் வருஷமடி என்ற வைரமுத்துவின் வரிகல் நினைவுக்கு வருகிறது. தி. ரா. ச //
நன்றி தி.ரா.ச
இந்தப் பாடல்களைப் பாடுவதற்கு அருணகிரிக்கு கொஞ்ச நேரம் கூடத் தேவைப்பட்டிருக்காது. அது முருகன் அருள்.
ஆனால் விளக்கம் சொல்வதற்கு எனக்கு உண்மையிலே கொஞ்சம் நேரம் வேண்டும். வாரம் ஒன்று என்று ஒழுங்காகச் சொல்லிய வண்ணமாவது செயல் வேண்டும் என்று நினைக்கிறேன். அவசரப்பட வேண்டாம் என்று நெஞ்சு சொல்கிறது.
// அருணகிரியார் இனிமேல் 'எல்லாம் அற என்னை மறந்த நலம்' வேண்டும் அதனைச் சொல்வாய்/அருள்வாய் என்று கேட்பது போல் தோன்றவில்லை.
உல்லாச நிராகுல யோகவித சல்லாப விநோதனும் நீயல்லவோ. கந்தா. உன்னை நான் அடைந்ததால் எல்லாம் அற எனை நான் 'இழந்த' அந்தப் பெருமையைச் சொல்லாய் முருகா தேவர்களின் அரசனே.
ஏற்கனவே அந்த நலம் கிடைத்துவிட்டது. இனி வேண்டுதல் இல்லை. //
அருணகிரியின் விஷயத்தில் அந்த அருள்நலன் கிடைத்து விட்டது. ஆனால் அருணகிரி பாடுவது அவருக்காகவா? நமக்காக அல்லவா!
அந்த அருள் அவருக்குக் கிட்டயதுமே அருணகிரி பாடிடவில்லை. அவர் சும்மாதான் இருந்தார். ஆனால் முத்து முத்தாகப் பாடச் சொன்னவன் ஒருவன். அவன் தான் முருகன். ஏன்? அருணகிரியின் பாட்டு எல்லாருக்கும் பயனாக வேண்டும் என்பதற்காகத்தான்.
அநுபூதி என்பது கந்தரோடு ஒன்றுவதற்கு. ஒன்றியபிறகு என்னவாயிற்று என்று சொல்ல முடியாது. அதையும் அருணகிரி ஒத்துக்கொள்கிறார். ஆகையால் நமக்கெல்லாம் வழிகாட்டியாக இந்தப் பாக்களை அருளியுள்ளார் என்றே கொள்ள வேண்டும்.
// ரொம்ப நல்லாருக்கு ஜிரா.. //
நன்றி இராமநாதன்.
// பலரும் சொன்னா மாதிரி மேலதிகாரி விளக்கம் மிகப் பொருத்தம். //
உண்மைதான். மிகச் சரியாகப் பொருந்தியிருக்கிறது.
// அதே சமயத்துல குமரன் சொல்றதும் இன்னும் உகந்ததா இருக்குதுன்னு எனக்கு தோணுது. ஏன்னா, அநுபூதி வேண்டுதல் இல்லியே. கந்தனுடன் கலந்ததைக் குறித்த மகிழ்ச்சியின் வெளிப்பாடுதானே. //
இதுக்கு நான் குமரனுக்கு விளக்கம் சொல்லீருக்கேன். அது உங்களுக்கு ஏற்புடையதா இருக்கா?
Post a Comment