Monday, February 27, 2006

6. எது வந்தால் எது போகும்

உலகத்தில் எத்தனை நல்லவர்கள் இருந்திருக்கின்றார்கள். இன்னமும் இருக்கின்றார்கள். அவர்களாலன்றோ இன்றும் மழை பெய்கிறது. கடலானது கரைக்குக் கட்டுப்படுகிறது. பூமியும் சுற்றிக் கொண்டிருக்கிறது. அடுத்தவர் குற்றங்களையும் தம்மேல் ஏற்றிக் கொண்டு அதற்கு வழி தேடுகின்ற அந்த நல்லவர்களால்தான் நாம் இன்னமும் மூச்சு விட்டுக்கொண்டிருக்கின்றோம். அருணகிரிநாதரும் அப்படிப்பட்ட நல்லவரே. உலகத்தில் மக்கள் எந்தத் தவறுகளைச் செய்கிறார்களோ அவைகளைத் தன் மேல் ஏற்றி, அவைகளிலிருந்து காக்கும்படி முருகனை வேண்டுகிறார். எப்படி வேண்டுகிறார்? அதுதான் இந்தப் பாடல்.

மகமாயை களைந்திட வல்ல பிரான்
முகமாறும் மொழிந்து மொழிந்திலனே
அகமாடை மடந்தைய ரென்றயரும்
செகமாயையில் நின்று தயங்குவதே

கடைசி இரண்டு அடிகளைப் பாருங்கள். அகம் மாடு மடந்தையர் என்று அயரச் செய்யும் ஜெக(உலக) மாயையில் நின்று தயங்குவதோ! அகம் என்றால் வீடு. மாடு என்றால் செல்வம். மடந்தையர் என்றால் மனைவி மக்கள். வீடு மனைவி மக்கள் போன்றவைகள் அயர்ச்சியைக் கொடுக்கும் மாயைகள். அம்மாயைகளில் உழன்று அவைகளிலேயே வீழ்ந்து போகவேண்டுமோ என்று வேதனைப் படுகிறார். பாரதியாரும் கூட சிவசக்தியைப் பாடுகையில் "நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ" என்று கதறுகிறார்.

மாயை அறிவை மயக்கக் கூடியது. சைவ சித்தாந்தம் சொல்லும் மும்மலங்கள் கருமம், ஆணவம் மற்றும் மாயை. இவற்றில் மாயைதான் மற்ற மலங்கள் தோன்ற ஆதாரம். மாயை விலகினால் அறிவு பெருகும். அறிவு பெருகினால் வீடு மனைவி மக்கள் எல்லாம் அயர்ச்சியைத் தரா! அதற்குத்தான் ஆண்டவனை வேண்டுகிறார் அருணகிரி. அவருக்காக அல்ல. என்றும் அநுபூதியைப் படிக்கும் அன்பர்களுக்காக. அருணகிரிக்கு யாதும் ஊரே யாவரும் கேளிர். அவர் இங்கு பாடுவது இல்லறத்தை நல்லறமாக்காமல் துன்பத்தில் உழல்கின்றவர்களுக்கு.

மாயை களைய வல்லவர் யார்? ஒளி வந்தால் இருள் போகும். வளி (காற்று) வந்தால் வெக்கை போகும். தளி (உணவு) வந்தால் பசி போகும். அறிவு வந்தால் மாயை போகும். அறிவு மயமான கடவுள் யார்? வேல் ஞானத்தில் வடிவம். வேலவன் ஞான மயமானவன். மகமாயை களைந்திட வல்ல பிரான் என்று முருகனை அழைக்கிறார் அருணகிரி. அப்படி அன்போடு ஆறுமுகத்தை அழைத்ததும் மாயை விலகுமாம். வெளிச்சம் வருகையிலேயே இருள் விலகுவது போல இறைவனின் பெயரை உச்சரித்த மாத்திரத்தில் மாயை விலகுமாம்.

முகம் ஆறும் மொழிந்தும் ஒழிந்தது மாயை. இங்கே ஆறுமுகம் என்ற பெயரை பயன்படுத்துவதில்தான் சிறப்பு. ஆறுபக்கங்கள் கொண்ட கனசதுரம்(cuboid) எல்லாத் திசைகளையும் பார்க்க முடியுமல்லவா. அதுபோல ஆறு திசைகளிலும் மாயை சூழாமல் காக்க ஆறுமுகனே என்று அழைக்கின்றார். எத்தனை நுண்ணிய கருத்து பாருங்கள். முகம் ஆறும் நம்மைப் பார்க்க நமது துயர்களெல்லாம் ஆறும். ஆகவே எல்லோரும் ஆறுமுகனைத் தொழுது மாயை நீங்கப் பெற்று அறிவுமயமான வாழ்வு பெற்று உய்க.

பக்தியுடன்,
கோ.இராகவன்

16 comments:

said...

மகமாயை களைந்திட வல்ல பிரான்
முகம் ஆறும் மொழிந்தும் ஒழிந்திலனே
அகம் ஆடை மடந்தையர் என்று (அ)யரும்
சகமாயையுள் நின்று தயங்குவதே

அற்புதமான பாடல் வரிகள். அற்புதமான கருத்து. அற்புதமான விளக்கம். அற்புதம். அற்புதம். அற்புதம்.

வீடு, ஆடை, மனைவி மக்கள் என்று எப்போதும் அவர் நினைவே கொண்டு உன் நினைவை கொள்ளாது அயரும் உலக மாயையுள் நின்று இயங்குகிறேனே. மஹா மாயை ஆகியவையும் களைந்திட வல்ல தலைவா! ஆறுமுகா! உன் திருப்பெயர்களை மொழிந்தும் மாயையில் நின்று ஒழிந்திலனே! எப்போது வரும் உன் அருள்?

said...

ஆறுமுகத்திற்கு அற்புதமான விளக்கம் இராகவன். பத்து திக்கு தோறும் எனை பறந்து வந்து ரட்சிப்பாய் என்ற ஸ்கந்த குரு கவச வரிகள் நினைவிற்கு வந்தன.

said...

// வீடு, ஆடை, மனைவி மக்கள் என்று எப்போதும் அவர் நினைவே கொண்டு உன் நினைவை கொள்ளாது அயரும் உலக மாயையுள் நின்று இயங்குகிறேனே. மஹா மாயை ஆகியவையும் களைந்திட வல்ல தலைவா! ஆறுமுகா! உன் திருப்பெயர்களை மொழிந்தும் மாயையில் நின்று ஒழிந்திலனே! எப்போது வரும் உன் அருள்? //

என்றுமுள தீந்தமிழின் தலைவன்...தோன்றாத் துணையாய் அருள் காட்டும் பொழுது உணராவகை கொள்வது முறையாமோ! அறுமுகன் அருள் அருந்தமிழாய் நீர் காட்ட நாம் காணக் கொள்வதும் அதுவே!

said...

// ஆறுமுகத்திற்கு அற்புதமான விளக்கம் இராகவன். பத்து திக்கு தோறும் எனை பறந்து வந்து ரட்சிப்பாய் என்ற ஸ்கந்த குரு கவச வரிகள் நினைவிற்கு வந்தன. //

கண்டிப்பாக நினைவிற்கு வர வேண்டும். வேறு ஏதேனும் நினைவிற்கு வருகிறதா குமரன்? ;-)

said...

ராகவன்,

ஆறுமுகத்திற்கு நீங்கள் அளித்த விளக்கம் அதை அற்புதம். அதைப் படிக்கும்போது நினைவுக்கு வந்தது இந்த திருப்புகழ் பாடல் வரிகள்

"ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம் ...... என்றுபூதி

ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி
யார்கள் பதமே துணைய ...... தென்று நாளும்

ஏறுமயில் வாகன குகா சரவணா எனது
ஈசஎன மானமுன ...... தென்று மோதும்

ஏழைகள் வியாகுலம் இதேதென வினாவிலுனை
யேவர் புகழ்வார் மறையும் ...... என்சொலாதோ "

இந்த வரிகளின் பொருள் (சுருக்கமாக)

ஆறுமுகம் என்று ஆறுமுறை ஓதி திருநீறைப் பூசும் தவசிகளின் பாதமலரைத் தலையில் தாங்கும்(அந்த தவசிகள் பாதங்களை வணங்கும்) அடியவர்களின் திருவடிகளையே பின்பற்றி நடந்து, ஏறுமயில் வாகனா, குகா, சரவணா, என் ஈசனே!! எனது மானம் உனது மானமல்லவா என்று உன்னையே சரணடைந்த ஏழைகளின் குறைகளை நீ கேட்காவிட்டால், உன்னை யார் புகழ்வார்? நான் மறைகள் உன்னை என்ன சொல்லும் ?

இதில் அருணகிரியார் சொல்வது ஆறுமுகத்தின் பெருமை
முதலில் "ஆதியொடும் அந்தம் ஆகிய நலங்கள் ஆறுமுகம் என்று தெளிந்தறிந்து, முகமாறும் மொழிந்து மாயை ஒழிந்த தவசிகளை (மாதவர்) சொல்கிறார். பின்னர் அந்த தவசிகளின் பதம் பணியும் அடியவர்களைச் சொல்கிறார். அதன்பின் அந்த அடியவர்களின் பதமே துணையாக நடக்கும் ஏழைகளுக்கு இரங்காவிட்டால் உனக்கென்ன பெருமை என்று முருகனைப் பார்த்து கேட்கிறார். அடியவரின் அடியவருக்கு இத்தனை உரிமையென்றால் அந்த ஆறுமுகத்தின் மேன்மையை எப்படிச் சொல்ல?

நீசர் கட மோடெனது தீவினையெலா மடிய
நீடு தனி வேல் விடு ...... மடங்கல் வேலா
அசுரர்கள் மட்டுமல்லாது நம் தீவினைகளனைத்தும் அடியோடு ஒழிக்கும் வேலல்லவா அவன் கையில் தாங்குவது ?


. வேறெந்தத் திருப்புகழ் பாடலுக்கும் இல்லாத ஒரு சிறப்பு இதில் உள்ளது. ஆறுமுகம் ஆறுமுகம் என்று 6 முறை குறிப்பிடுகிறார் அருணகிரியார்.

ஆறுதிசைகளிலிருந்தும் மாயையிலிருந்து காப்பது,
ஆறரெழுத்து மந்திர ஸ்வரூபமாக இருப்பது ,
குண்டலினி மேலெழும்பி 6ஆவது நிலையான ஆக்ஞையில்(ஞான நிலை) நிலைபெறச்செய்வது. வேல் என்பது ஞானத்தின் உருவமே அல்லவா ?

என்று ஆறு விதமான பொருள் உண்டு என்று படித்திருக்கிறேன். 3 தான் நினைவில் உள்ளது.
நீங்கள் ஆறுமுகத்தைப் பற்றி எழுதியதைப் படித்தவுடன் எனக்கு இதை எழுதத் தோன்றியது. தவறுகளிருப்பின் மன்னிக்கவும். சுட்டிக் காட்டவும்

said...

ராகவனே ரமணா ரகுநாதா... ..


என்ன பக்தி முக்திருச்சு போல..


சரி சரி சீரியஸ்....

ஜனகர் கதை ஒண்ணு தெரியுமா உங்களுக்கு ?

அதாவது ஜனக மன்னர் ஒருக்கா கொறட்ட உட்டுக்குனு தூங்கிக்குனு இருந்தாராம். அப்ப ஒரு கனாக் கண்டாராம்..

ரொம்ப பராரியா துன்றதுக்கும் சோறு இல்லாம.. பாவம் மனுஷன் கஸ்டப்பட்டாராம் கனவுல.. கஸ்டம் னா அம்புட்டு கஸ்டமாம். த்டீர்னு ஆரோ வந்து எழுப்பிட்டாங்களாம்.

இப்ப அவருக்கு பெரிய கன்பூஷன். மன்னன் உண்மையா இல்லை கனவில் கண்ட மனிதன் உண்மையா.. ஜனகனாய் இருந்து ஏழையா கஸ்டப்படுவது போல் க்கனவுக் கண்டேனா அல்லது ஏழையின் உறக்கத்தில் கனவாய் இப்போது இருக்கிறேனா.. எது நிஜம்னு ஒரே கொழப்படி..

அதாங்க மாயைங்கறதுன்னு ஆரோ சொன்னாங்களாம்.. நமக்கு தான் ஒண்ணும் பிரிய மாட்டேங்குது..


" தூங்காமல் தூங்கி
சுகம்பெருவதெக்காலம்"


அன்புடன்

ஜீவா

said...

குரு.. நாவு பெங்களுரவர்னே... ஒந்து மெயில் jeeves_k at yahoo.com கெ கலுசுத்தீரா ??

டாங்ஸ்...
ஜீவா

said...

முதல் வரியை

//ஆறுமுகத்திற்கு நீங்கள் அளித்த விளக்கம் அதை அற்புதம் //

ஆறுமுகத்துக்கு நீங்கள் அளித்த விளக்கம் அதி அற்புதம்

என்று படிக்கவும். தவறுக்கு வருந்துகிறேன்

said...

ஆஹா...ஆஹா...ஆஹாஹா... ஜெயச்ரி அற்புதமான திருப்புகழ் பாடல்; மிக மிக அற்புதமான விளக்கம். நான் இது தான் முதன்முறை இந்தப் பாடலைப் படிப்பது. படித்தவுடன் புரியவில்லை (வழக்கம் போல்). உங்கள் சுருக்கமான விளக்கத்தைப் படித்தவுடன் மிக அற்புதமாகப் புரிந்தது பாடல் வரிகள். மீண்டும் வேண்டிக் கொள்கிறேன். ஏன் நீங்கள் தனியாக வலைப்பூ தொடங்கி தமிழமுதத்தை நாங்கள் பருக வழங்கக் கூடாது? இது காலத்தின் கட்டாயம் என்று நினைக்கிறேன். மற்றவர் பதிவில் பின்னூட்டங்களில் இருப்பதை விட உங்கள் வலைப்பூவில் பதிவுகளாக இருந்தால் இன்னும் நல்லதல்லவா? சீக்கிரம் தொடங்குங்கள்.

said...

ஜீவா. நானும் நீங்க சொன்ன ஜனகர் கதை கேட்டிருக்கேன். நல்ல கதை. வாழ்வே மாயம் என்பதற்கு பல முறை சொல்லப்படும் கதை. ஆனால் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. :-)

said...

அன்பு இராகவன்,

முருகனின் முகம் ஆறு. அது ஆற்றுப்படுத்தும் முகங்கள்.
இதையும் கொஞ்சம் எல்லோரும் படியுங்களேன்.

http://njaanamuththukkal.blogspot.com/2005/10/9.html

said...

ஜிரா ஆறுமுகத்துக்கு விளக்கம் பிரமாதம். முதலில் சிவபெருமனுக்கும் ஆறுமுகங்கள் இருந்தது. அவை ஈசானம்,தத்புருஷம்,வாமதேவம்,சத்யோஜாதம்,அகேரம்.&அதோ முகங்கள்.அதோமுகம் மிகவும் கொடியது. யாரையாவது பார்த்தால் அவன்கதி அவ்வள்வுதான். மிகப்பலமுள்ளவர்களை யாராவது பகைத்துக்கொண்டால் நாம் சொல்லுவோம் இனி அவன்கதி அதோகதிதான் என்று.அதோ என்றால் கீழ் என்று பொருள். அதை பின்னால் கிள்ளப்பட்டுவிட்டது. ஏன் தெரியுமா? பின்னால் தன் பிள்க்கு ஆறுமுகம் என்ற பெயர் வரப்போகிறது அதுவும் கருணைகூர்முகங்களாக இருக்கப்போகிறது எனவே கொடிய அதோமுகத்தை எடுத்துவிட்டு ஐந்துமுகமாக சுருக்கிக்கொண்டார் என்பது என் கருத்து.
அன்பன் தி ரா.ச

said...

குமரன்,

மிக்க நன்றி. நான் சொல்ல நினைப்பதை கோர்வையாக எழுத முடியுமா என்று மிகுந்த ஐயம் இருந்தது. உங்கள் வார்த்தைகள் எனக்கு மிகுந்த நம்பிக்கையைக் கொடுக்கின்றன. மீண்டும் நன்றி.

அது என்ன "காலத்தின் கட்டாயம்?" - தேர்தல் பிரச்சாரத்தின் பின்விளைவா? ))))

said...

//அது என்ன "காலத்தின் கட்டாயம்?" - தேர்தல் பிரச்சாரத்தின் பின்விளைவா? ))))
//

ஒரு கேள்வி. நீங்கள் தானே jsri என்ற பெயரிலும் பின்னூட்டம் இடுகிறீர்கள். அல்லது அவர் வேறு ஜெயச்ரியா?

said...

குமரன்,

அது நான் இல்லை. அவர்கள் மரத்தடி ஜெயஸ்ரீ என்று நினைக்கிறேன். நான் பின்னுட்டமிடுவது Jayashree என்ற பெயரில் மட்டுமே.

said...

// http://vtrc2.canalblog.com/

HELLO //

ஐயா நீங்க யாரோ எவரோ........இனியது கேட்கின்ல வந்து போட்டிருக்கீங்க. இனியது கேட்கினோட புகழ் வெளிநாடு வரைக்கும் போயிருச்சா.....