பேராசையெனும் பிணியில் பிணிபட்
டோரா வினையேன் உழலத் தகுமோ
வீரா முது சூர் பட வேலெறியும்
சூரா சுர லோக துரந்தரனே
ஆசைக்கும் பேராசைக்கும் உள்ள வேறுபாடு என்ன? ஆசையே துன்பத்திற்குக் காரணம். இயல்பாக வரும் இத்தகைய ஆசைகளிலிருந்து அறிவைப் பயன்படுத்தித் தப்பிக்கலாம். பேராசை மீளாத் துன்பத்திற்குக் காரணம். அறிவு வேலை செய்யாத பொழுதே பேராசை வருகிறது. ஆகையால் அறிவைக் கொண்டு தப்பிக்க முடியாது. அங்கே நாம் யாராலாவது காப்பாற்றப்பட வேண்டும்.
உலகம் முழுதும் எடுத்துச் சொன்னது. ஹிட்லர் கேட்கவில்லை. பேராசை அவன் கண்களை மறைத்தது, அறிவை மழுக்கியது. அவனைக் காப்பாற்ற யாரும் வரவில்லை. அவனும் அவனது கொள்கைகளும் அழிந்து போயின. ஆக பேராசையெனும் பிணியானது நல்ல விளைவுகளைத் தருவதைப் போலத் தோன்றினாலும் இறுதியில் தீமையையே தரும். பேராசையோடு பலமுறை பாரதத்தின் மீது படையெடுத்தான் கஜினி முகமது. பெருஞ் செல்வத்தைக் கைப்பற்றினான். அவனை இன்று வரலாறு திருடன் என்கிறது. இப்படியெல்லாம் கொடுமை செய்யும் பேராசை என்னும் நோயில் உழலத் தகுமோ!
அப்படிப்பட்ட பேரழிவிலிருந்து யார் நம்மைக் காக்க வல்லார்? மருத்துவரிடமே நோயைக் கூற வேண்டும். கண்டம் விட்டுக் கண்டம் தாவும் ஏவுகணைகளை உருவாக்கும் விஞ்ஞானியும் அறிவிற் சிறந்தவர்தான். ஆனால் அவரிடம் நோயைப் பற்றிச் சொன்னால் என்ன பயன்? பேராசைப் பிணியைப் போக்க வல்ல வல்லாளன் யார்? சுரலோக துரந்தரனாம். சுரர் என்றால் அமரர். இந்திரனா? இல்லை. அமர உலகத்திற்கு அதிபதி இந்திரன். உண்மைதான். ஆனால் துரப்பது (காப்பது) யார்?
சூரன் என்றால் சூரத்தனம் மிகுந்தவன். அப்படிப் பட்டவனே அமரர் உலகத்தைக் காக்க முடியும். ஒருவனுக்கு அடைமொழி கொடுத்தால் அதற்குச் சிறப்புக் காரணம் இருக்க வேண்டும். அப்படி அமரர் உலகைக் காக்கும் சூரனுக்கு என்ன சூரத்தனம் இருக்கிறது? "முதுசூர் பட வேல் எறியும் சூரா" என்கிறார் அருணகிரி. சூரன் மேல் வேலெறிந்து வென்று அமரர்தம் உலகத்தைக் காப்பது கந்தவேளே. இங்கே முதுசூர் என்ற சொற்றொடரைப் பயன்படுத்துகிறார். முது என்றால் பழைய என்று பொருள். வேலை முருகன் எறிந்ததும் சூரன் இறந்தகாலம். ஆகையால் முதுசூர். என்ன சொல்லாற்றல் அருணகிரிக்கு!
சூரனை வேலெறிந்து அழித்து அவனையும் அவன் புகழையும் இறந்தகாலத்திற்குத் தள்ளி அமரர்களுடைய உலகமாகிய அமராவதியைக் காக்கும் கந்தவேளே! பேரழிவைத் தந்து அழிக்கும் பேராசை என்னும் நோயில் விழாத வகைக்கு எல்லாரையும் காத்தருள வேண்டும்.
பக்தியுடன்,
கோ.இராகவன்
Monday, May 15, 2006
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
பேராசை பற்றி நானும் எண்ணியதுண்டு. ஆனால் பெரியோர்களின் சொல்லி உள்ள நடை அதை தாங்கள் விளக்கிய விதம் அருமை.
பேராசை என்பது பெருநஸ்டத்திற்கான முதல் படிக்கட்டு!
நல்ல பதிவு ராகவன்.
அருணகிரியின் மணிபிரவாள நடையும் அமைந்துள்ள சந்தமும் பாட சுகமாயிருக்கிறது. உங்கள் விளக்கங்கள் மேலும் சுவை சேர்க்கின்றன.
அருமையான விளக்கம்.பேராசைக்கும் ஆசைக்கும் நல்ல உதாரணம். ஆமாம் இந்த சொற்கள் வெள்ளம் எங்கிருந்து வருகிறது.ஒருவேளை இப்படி இருக்குமோ.
சொல்லும் அறியேன் சுதியறியேன்
சொற்கள் சுமக்கும் பொருளறியேன்
சொல்லைச்சொல்லும் விதியறியென்
தோய்ந்து சொல்ல நனறியேன்
எல்லையெல்லாதோர் ஞானஒளி
இதயத்தம்ர்ந்து ஆறுமுகமாய்
சொல்லை வெள்ளமெனப் பெருக்கும்
தோற்றம் கண்டேன் சுடர் கண்டேன்.
அன்பன் தி. ரா.ச
// சிவமுருகன் said...
பேராசை பற்றி நானும் எண்ணியதுண்டு. ஆனால் பெரியோர்களின் சொல்லி உள்ள நடை அதை தாங்கள் விளக்கிய விதம் அருமை. //
நன்றி சிவமுருகன். எல்லாம் முருகன் அருள்.
உங்க பதிவுக்கும் வரனும்னு பாக்குறது. இந்த வேலைதான் தொந்தரவு செய்யுது. முடிஞ்ச வரைக்கும் வர்ரேன்.
// மூர்த்தி said...
பேராசை என்பது பெருநஸ்டத்திற்கான முதல் படிக்கட்டு!
நல்ல பதிவு ராகவன். //
உண்மைதான் மூர்த்தியண்ணா. பேராசை கூடாது என்று இதற்குத்தான் பெரியவர்கள் படித்துப் படித்துச் சொல்லியிருக்கிறார்கள்.
// மணியன் said...
அருணகிரியின் மணிபிரவாள நடையும் அமைந்துள்ள சந்தமும் பாட சுகமாயிருக்கிறது. உங்கள் விளக்கங்கள் மேலும் சுவை சேர்க்கின்றன. //
மணியன், அருணகிரி தொடக்கத்தில் மணிபிரவாளத்தில் நிறைய எழுதியிருந்தாலும் போகப் போக தீந்தமிழில் நிறைய எழுதியிருக்கிறார். கந்தரலங்காரத்தைப் படியுங்கள். அப்பபா!
// TRC said...
அருமையான விளக்கம்.பேராசைக்கும் ஆசைக்கும் நல்ல உதாரணம். ஆமாம் இந்த சொற்கள் வெள்ளம் எங்கிருந்து வருகிறது.ஒருவேளை இப்படி இருக்குமோ.
சொல்லும் அறியேன் சுதியறியேன்
சொற்கள் சுமக்கும் பொருளறியேன்
சொல்லைச்சொல்லும் விதியறியென்
தோய்ந்து சொல்ல நனறியேன்
எல்லையெல்லாதோர் ஞானஒளி
இதயத்தம்ர்ந்து ஆறுமுகமாய்
சொல்லை வெள்ளமெனப் பெருக்கும்
தோற்றம் கண்டேன் சுடர் கண்டேன்.
அன்பன் தி. ரா.ச //
ஆகா! அந்த ஆனந்த நிலை எனைக் கொள்ளுமோ! எழுத்து என்பது ஒரு தவம். அதிலும் ஆன்மீக எழுத்து என்பது பெருந்தவம். அதைத் தரும் ஆறுமுகனின் கருணைக்கு அளவேது. எல்லாப் புகழும் அவனுக்கே.
நல்லதொரு தமிழ்த்தொண்டு இராகவன்.
என் பெயரின் ஒருபாதியும் அதுவே.
நீங்கள் தானா எனது கல்லூரி வகுப்புத் தோழன் மீனாட்சிசுந்தரத்துடன் இணைந்து பணிபுரிவது?
தங்கள் பெயரில் 'h' என்ற எழுத்து இல்லையோ?
// இராகவன் (எ) சரவணன் said...
நல்லதொரு தமிழ்த்தொண்டு இராகவன். //
நன்றி இராகவன். இராகவனுக்கு இராகவன் சொல்லும் நன்றி.
// என் பெயரின் ஒருபாதியும் அதுவே.
நீங்கள் தானா எனது கல்லூரி வகுப்புத் தோழன் மீனாட்சிசுந்தரத்துடன் இணைந்து பணிபுரிவது? //
ஆம். நான் நானேதான். உங்கள் வலைப்பூ பற்றிச் சொன்னதும் நாந்தான் உங்களை தமிழ்மணத்திற்கு வரச் சொன்னேன். வாருங்கள். கலக்குங்கள். பெயர்க்குழப்பம் வராமல் இருந்தால் சரி. :-))
// தங்கள் பெயரில் 'h' என்ற எழுத்து இல்லையோ? //
இல்லையே. H-ஐ விட்டேன்.
இராகவன் நல்ல விளக்கம். ஆசை, பேராசை என்று வேறுபாடு சொல்லி விளக்கம் தந்திருப்பது நன்றாக இருக்கிறது. ஓரா வினையேன் என்பதற்குப் பொருள் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே?
Post a Comment