Tuesday, June 06, 2006

20. மானம் கப்பலில் குடி போகாமல் இருக்க

வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா
அடி அந்தமிலா அயில்வேல் அரசே
மிடி என்றொரு பாவி வெளிப்படினே

இந்தப் பாடலைப் பொருள் கொள்ளும் பொழுது கீழ்க்கண்ட முறையில் வரிகளை மாற்றி அமைத்துப் படித்தால் எளிதாகப் புரியும்.
அடி அந்தமில்லா அயில்வேல் அரசே
மிடி என்றொரு பாவி வெளிப்படினே
வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா

அடி என்பது தொடக்கம். அந்தம் என்பது முடிவு. அறிவு தொடக்கமும் முடிவும் அற்றது. ஞானத்தின் தொடக்கம் என்று எதைச் சொல்ல முடியும்? பிறக்கும் குழந்தை கூட பசிக்கு அழவும், பாலைக் குடிக்கவும் தேவைப்படும் அறிவோடுதான் பிறக்கிறது. அறிவுக்குக் கரை ஏது? அனைத்தும் அறிந்தவர் யார்? கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு. இது கலைமகள் வாக்கு. கலைமகளுக்கே அப்படியென்றால் நமக்கெல்லாம்? ஆகையால் அடக்கம் வேண்டும். அடக்கம் அமரருள் உய்க்கும்.

ஆக ஞானம் ஆதியும் அந்தமும் இல்லாது. ஞானத்தின் வடிவான வேலும் முதலும் முடிவும் இல்லாதது. அப்படிப்பட்ட வேலைத் தாங்கிய அரசே! முருகா! அதுதான் "அடி அந்தமிலா அயில்வேல் அரசே!"

அடுத்த வரிக்கு வருவோம். இந்த வரி மிடியைப் பற்றிப் பேசுகிறது. மிடி என்றால் வறுமை. வறுமை என்பது வாழ்வில் வெறுமை. கொடிது கொடிது வறுமை கொடிது என்கிறார் ஔவை. அதனிமும் கொடிது இளமையில் வறுமை. குழந்தைப் பருவமும் இளமைப் பருவமும் அனுபவிக்கும் பருவங்கள். அந்தச் சமயத்தில் வறுமையென்றால் அதுதான் கொடுமை. பழநி திருப்புகழ் சொல்கிறது. "செவிடு குருடு வடிவு குறைவு சிறிது மிடியும் அணுகாதே....எனையும் மனதொடு அடிமை கொளவும் வரவேணும்!" வறுமை வருமையில் எல்லாப் பெருமையும் சிறுமையடையும். பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை என்கிறார் வள்ளுவர். அதானால்தான் அருணகிரி வறுமையைப் பாவி என்கிறார். மிடி என்று ஒரு பாவி வெளிப்படின் என்னவாகும் என்று முருகனைக் கூப்பிட்டுச் சொல்கிறார்.

வறியவர் உண்பது குறைவு. குறைந்த ஊட்டம் உடலை இளைக்கச் செய்யும். கட்டிளம் காளையும் காய்ந்த கம்பந்தட்டையாவான். ஆக வடிவு குறையும். தனம் என்றால் செல்வம். நிலையில்லாததேயாயினும் செல்வம் பயனுள்ளது. அதுவும் போகும். விரும்பியதைச் செய்ய முடியாது. வேண்டியதை உண்ண முடியாது. நாடியதைக் கொள்ள முடியாது. அதனால் அடுத்த கட்டமாக வேண்டியது கிடைக்காமல் மனம் நோகும். நொந்த மனத்தால் குணம் கெடும். குணமில்லாத ஒருவனுடைய குடும்பம் நல்ல பெயரை எடுக்காது. ஆகையால் குடும்ப மானம் போகும். அது குலப் பெருமையைச் சாய்க்கும். பேரரசர் வழியில் வந்திருந்தாலும் பேரன் திருடினால் குலப்பெருமை நாசமாகாதா! அதைத்தான் "வடிவும் தனமும் மனமும் குணமும் குடியும் குலமும் குடிபோகியவா" என்கிறார். சுருங்கச் சொன்னால் மானம் கப்பலில் குடிபோகும்.

முதலும் முடிவும் இல்லாத ஞான வடிவமான வேலினைத் தாங்கிய அரசே! வறுமை என்ற வெறுமை தாக்குமானால் பெருமை போகும். உடன் வடிவு, செல்வம், மனத்தூய்மை, குணம், குடும்ப மானம், குலப்பெருமை எல்லாம் போகும். இந்தத் துன்பத்திலிருந்து வேலவா நீ காக்க வா!

பக்தியுடன்,
கோ.இராகவன்

9 comments:

said...

வறுமை வருமையில் எல்லாப் பெருமையும் சிறுமையடையும்.
வார்த்தை சித்தர் ஆகிவிட்டீர்கள்.வாரம் ஒன்றுதான் என்றாலும் சும்மா 'நச்சுன்னு' இருக்கு.தி ரா. ச

said...

romba nalla irukku raghavan avargale..

enakku oru sandhegam!adiyum mudiyum illadhadhu vel apdinnu en solreenga.. vilakkinaal nalla irukum!!

('adiyum mudiyum illaadha vel thaangiya arase' where 'adiyum mudiyum illai' enbhathu muruganin nyanathai kurikkumnnu naan nenachen...avar velaikurikirathunnu nenakavillai..appadiyaa??)

said...

// TRC said...
வறுமை வருமையில் எல்லாப் பெருமையும் சிறுமையடையும்.
வார்த்தை சித்தர் ஆகிவிட்டீர்கள்.வாரம் ஒன்றுதான் என்றாலும் சும்மா 'நச்சுன்னு' இருக்கு.தி ரா. ச //

வார்த்தைச் சித்தரா! அந்தப் பட்டந்தான் வலம்புரி ஜானுக்கு ஏற்கனவே குடுத்துட்டாங்களே தி.ரா.ச. எது எப்படியோ முடிஞ்ச வரைக்கும் வார்த்தைச் சுத்தரா இருக்கனும்.

said...

// Priya said...
romba nalla irukku raghavan avargale..

enakku oru sandhegam!adiyum mudiyum illadhadhu vel apdinnu en solreenga.. vilakkinaal nalla irukum!!

('adiyum mudiyum illaadha vel thaangiya arase' where 'adiyum mudiyum illai' enbhathu muruganin nyanathai kurikkumnnu naan nenachen...avar velaikurikirathunnu nenakavillai..appadiyaa??) //

வாங்க பிரியா. முருகனின் ஞானத்தை என்று நீங்கள் சொல்வதும் சரிதான். வேல் என்பது என்ன படைக்கருவியா? ஆமாம். போர்ப்படைக் கருவிதான். அறியாமை என்ற எதிரியோடு போடும் போருக்கான படைக்கருவிதான். ஆகையால்தான் வேல் என்பதே ஞானத்தின் வடிவம். ஆகையால் அதை அப்படிச் சொல்கிறோம்.
அறிவும் கூர்மை. வேலும் கூர்மை.
அறிவு ஆழமாக இருக்க வேண்டும். வேலும் ஆழமானது.
அறிவு விரிந்திருக்க வேண்டும். வேலின் இலையும் விரிந்திருக்கிறது.
இப்பொழுது புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

said...

பிரியா சொல்வதுபோல் இங்கு ஆதியும் அந்தமுமில்லா அருட்பெருஞ்சோதி என்பது போல அடிமுடி காணவியலாத அயில்வேலவா எனக் கொள்ளுதலும் சரியாகவே உள்ளது. உங்கள் வேல் பற்றிய விளக்கமும் அருமை.

said...

நன்றாய் இருக்கிறது இராகவன் தாங்கள் சொன்ன பொருள். வறுமை வந்தால் பத்தும் பறக்கும் என்று சொல்கிறார் சரி. ஏன் அதனை முருகனிடம் சொல்கிறார்? முருகனிடம் வறுமை வராமல் காப்பாற்று என்கிறாரா? பொருள் வேண்டும் என்று வேண்டுகிறாரா?

said...

arumaiyaana vilakkam raaghavan avargale.. adutha pathivukkaaga kaathirukiren

said...

குமரன் கேட்டதுதான் என் சந்தேகமும். அடுத்த பாடல் விடைதருமா?

said...

iniyathu.blogspot.com is very informative. The article is very professionally written. I enjoy reading iniyathu.blogspot.com every day.
instant cash loans
payday loan