முருகா, உன்னையே கணவனாக அடைய வேண்டுமென்று விருப்பம் கொண்டு வள்ளி நாச்சியார் அரும் பெரும் தவம் செய்து, அதன் பலனாக உன்னையே அடைந்தார். அழகான கூந்தல் அலங்காரம் கொண்ட வள்ளியின் திருவடிகளை அடையும், மேருமலையையை ஒத்தவரும், தேவர்களுக்கெல்லாம் தலைவரும், வேளையில் வந்து காப்பவருமான முருகா! எங்களையும் காத்து அருள்வாயாக!
காளைக் குமரேசன் எனக்கருதி
தாளைப் பணியத் தவம் எய்தியவா
பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்
வேளைச் சுரபூபதி மேருவையே
மேலே சொன்னது இந்தப் பாடலுக்கான வெளிப்படையான விளக்கம். அதை அப்படியே பொருள் கொள்வதிலும் தவறில்லை. அதே நேரத்தில் உட்பொருளை அறிந்து கொள்ள முடியுமானால் அது மிகவும் சிறந்தது. அதை இப்பொழுது ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். இந்தப் பாடலில் அருணகிரி உலக இயக்கத்தைப் பற்றிக் கூறுகிறார். மிகவும் ஆழமாக அறிந்து தெளிய வேண்டிய பாடலிது.
"காளைக் குமரேசன் எனக் கருதி" என்றால் "தனக்கான ஆண்மகன் என்று கருதி" என்று பொருள். காளை என்றால் ஆண்மகன் என்று வேறு எங்கு சொல்லியிருக்கிறார்கள்? புறநாநூறு உதவிக்கு வருகிறது. "ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே" என்ற பாடலில் "களிறு எறிந்து மீள்தல் காளைக்குக் கடனே" என்று வருகிறது. காளை என்ற ஆகுபெயர் இங்கே வீரத்தைக் குறிக்கிறது. முருகனே மணவாளனாக வரவேண்டும் என்று வள்ளி தவம் இருந்தார். அதைத்தான் "தாளைப் பணியத் தவம் எய்தியவா" என்கிறார் அருணகிரி.
சைவ சித்தாந்தம் என்ன சொல்கிறது? இந்த உலக இயக்கம் மூன்று சக்திகளால் ஆகின்றது. அவை இச்சை, கிரியை மற்றும் ஞானம். இச்சை என்றால் விருப்பம் அல்லது ஆசை. கிரியை என்றால் செயல். ஞானம் என்றால் அறிவு. ஒன்றின் மீது ஆசை வைத்து அதை அடைவதற்குக்கு வேண்டிய செயல் செய்யப்படுகிறது. அந்தச் செயலை அறிவதற்கும், பிறகு செயலாற்றுவதற்கும் அறிவு தேவைப்படுகிறது. உலகத்தில் எந்த இயக்கம் என்று பார்த்தாலும் மேற்சொன்ன மூன்று விளைவுகளுக்குள்ளேயே முடிந்து விடுகிறது. ஞானம் குறைவானால், செயலாற்றல் குறையும். ஆசை கை கூடாது. ஆசை தவறானால், அதை அடையும் அறிவும் இருந்தால் தவறான செயல் நடந்தேறும். இப்படி எல்லாமே மூன்று சக்திகளில் முடிந்து விடுகிறது.
இந்த மூன்று சக்திகளையும் ஒருங்கே கொண்டவர் முருகப் பெருமான். வள்ளி நாச்சியார் இச்சா சக்தி. தெய்வயானை அம்மை கிரியா சக்தி. வேல் ஞான சக்தி. ஆகையால்தான் வள்ளி தெய்வயானையோடு முருகனை வணங்குதல் மிகவும் சிறப்பு. முன்பே சொன்னது போல வள்ளிக்கு முருகனை அடையும் ஆசை இருந்தது. ஆகையால் தவம் செய்தார். அடைய விருப்பம் கொண்டு தவம் செய்தமையால் வள்ளி இச்சா சக்தியாகிறார்.
"வேளைச் சுரபூபதி மேருவையே" என்கின்ற சொற்றொடரை இப்பொழுது பார்ப்போம். மேரு மலை என்பது இமயமலையின் மற்றொரு பெயர். உலகத்தில் உயர்ந்த சிகரம் இமயத்தில்தானே இருக்கிறது. அதுபோல முருகக் கடவுள் உயர்ந்தவர் என்று பொருள். சுரபூபதி என்றால் தேவர்களின் தலைவன். அது சரி. அதென்ன வேளை? காலத்தினால் செய்த உதவி சிறிது எனினும் ஞாலத்தின் மானப் பெரிது என்கிறார் வள்ளுவர். அப்படி காக்க வேண்டிய வேளை வந்ததும் வேலைத் தூக்கிக் கொண்டு காக்கும் வேலை பார்க்க வருகின்றவன் கந்தன். அதனால்தான் அந்த வேளை என்ற அடைமொழி.
"பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்" என்றும் வருகிறதே. முன்பு ஒருமுறை முருகன் வள்ளியைப் பணிவாரா என்று பார்த்தோமே! "பணியா என வள்ளி பதம் பணியும்" என்ற வரிகளைச் சொல்கிறேன். பிறகு இங்கே மறுபடியும் வருகிறதே. இங்கே முருகன் வள்ளியைப் பணிகிறார் என்று வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறாரே அருணகிரி. என்ன நினைத்து சொல்லியிருப்பார்? அது ஒரு உட்பொருள். ஆசை அல்லது இச்சை என்பது அனைத்து செயல்களுக்கும் அறிவிற்கும் ஆதாரமாக இருப்பதைப் பார்த்தோம். உயிர்களுக்கு எல்லாம் ஆதாரமானது ஆன்மா. அந்த ஆன்மா விலகிவிட்டால் வெறும் உடலுக்கு எந்த ஆசையும் இல்லை. ஆகையால் செயலும் இல்லை. அதை அறியும் ஞானமும் இல்லை. அப்படிப்பட்ட ஆன்மாக்களை இறைவன் அணைத்துச் செல்வதுதான் "பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்" என்ற சொற்றொடர். வள்ளி நாச்சியார் இச்சா சக்தி. இச்சா சக்தி ஆன்மாவின் ஆதாரம். அந்த ஆன்மாக்கள் அடைவது இறைவன் திருவடியை. அதுவும் ஆன்மாக்கள் தேடிச்செல்ல வேண்டாம். பெருங்கருணையோடு இறைவனே ஆன்மாக்களை அணைத்துக் கொள்வான் என்பதைத்தான் அப்படிச் சுற்றி வளைத்துச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார் அருணகிரி.
பக்தியுடன்,
கோ.இராகவன்
Tuesday, June 27, 2006
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
ரசிக்கும்படி எழுதியிருக்கிறீர்கள்..
மிக அழகிய விளக்கம்.
நேர் விளக்கமும் சரி; உட்பொருள் விளக்கமும் சரி; ஒன்றையொன்று மிஞ்சும் வகையில் அமைந்துள்ளது.
மேலும் , ஒருவருக்கொருவர் அனுசரித்து, அரவணைத்துச் செல்லவேண்டிய பாங்கினையும், அருணகிரியார், மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்.
ஒருபக்கம், குமரேசன் எனக் கருதி வள்ளியம்மையார் அவன் தாளைப் பணிகிறாள்.
மற்றொரு பக்கம், அந்த பாளைக் குழல் வள்ளியின் பாதத்தை இவன் பணிகிறான்!!
அற்புதமாகச் சொல்லியிருக்கிறீர்கள்!
மேலும் சில கருத்துகள் மாலையில்!
அதிலும் அந்தத் தலைப்பு....!
குறும்புதான் உங்களுக்கு!
இராகவன். நன்கு விளக்கமாகச் சொல்லியிருக்கிறீர்கள். வழக்கம் போல அடியேனுக்கு சிறு மாற்றங்களுடன் விளக்கம் தோன்றுகிறது. :-)
இங்கு வள்ளியம்மைக்கும் குமரக்கடவுளுக்கும் இடையே நடக்கும் அன்புப்போட்டியை அருணகிரியார் வியக்கிறார் போல் தோன்றுகிறது. அதனை ஜீவனுக்கும் பரமனுக்கும் இடையேயான அன்புப்போட்டி என்றும் சொல்லலாம்.
வள்ளியம்மையோ இவனே தனக்குத் தலைவன் என்ற உறுதியுடன் ஐயன் தாளைப் பணிந்து தவம் செய்கிறார். தேவர் தலைவனாகவும் மேருமலையை ஒத்தவனுமான குமர'வேள்' செய்வதோ அந்த வள்ளியம்மையின் பதம் பணிவது. இதில் வள்ளியம்மை குமரவேளின் மேல் வைத்த அன்பு பெரிதா? வள்ளி பதம் பணியும் வேள் வள்ளியம்மையின் மேல் வைத்த அன்பு பெரிதா?
இப்போது இந்தப் பாடலைக் கொஞ்சம் மாற்றி எழுதிப் பாருங்கள். நான் சொல்லும் விளக்கம் அதில் தெரியும்.
பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்
வேளை, சுரபூபதி, மேருவையே
காளைக் குமரேசன் எனக்கருதி
தாளைப் பணியத் தவம் எய்தியவா?
எய்தியவா என்பது எய்தியவாறு என்னை? என்பதனை சுருக்கம்.
இறைவனை அன்றி மற்றொன்றை வேண்டாமல் நிற்பது ஜீவனின் இயற்கை; அந்த ஜீவனைத் தானே தேடி வந்து அடைவது இறைவனின் இயற்கை என்ற சைவசிந்தாந்தக் கருத்தும் இங்கு மறைபொருளாய் இருப்பதாகத் தோன்றுகிறது.
// Kuppusamy Chellamuthu said...
ரசிக்கும்படி எழுதியிருக்கிறீர்கள்.. //
நன்றி குப்புசாமி செல்லமுத்து.
// SK said...
மிக அழகிய விளக்கம். //
நன்றி SK.
// நேர் விளக்கமும் சரி; உட்பொருள் விளக்கமும் சரி; ஒன்றையொன்று மிஞ்சும் வகையில் அமைந்துள்ளது.
மேலும் , ஒருவருக்கொருவர் அனுசரித்து, அரவணைத்துச் செல்லவேண்டிய பாங்கினையும், அருணகிரியார், மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்.
ஒருபக்கம், குமரேசன் எனக் கருதி வள்ளியம்மையார் அவன் தாளைப் பணிகிறாள்.
மற்றொரு பக்கம், அந்த பாளைக் குழல் வள்ளியின் பாதத்தை இவன் பணிகிறான்!!
அற்புதமாகச் சொல்லியிருக்கிறீர்கள்! //
நன்றி SK. நான் எங்கே சொன்னேன். அருணகிரி சொன்னதைச் சொன்னேன். அவ்வளவுதான்.
// SK said...
அதிலும் அந்தத் தலைப்பு....!
குறும்புதான் உங்களுக்கு! //
:-)
// குமரன் (Kumaran) said...
இராகவன். நன்கு விளக்கமாகச் சொல்லியிருக்கிறீர்கள். வழக்கம் போல அடியேனுக்கு சிறு மாற்றங்களுடன் விளக்கம் தோன்றுகிறது. :-)
இங்கு வள்ளியம்மைக்கும் குமரக்கடவுளுக்கும் இடையே நடக்கும் அன்புப்போட்டியை அருணகிரியார் வியக்கிறார் போல் தோன்றுகிறது. அதனை ஜீவனுக்கும் பரமனுக்கும் இடையேயான அன்புப்போட்டி என்றும் சொல்லலாம்.
வள்ளியம்மையோ இவனே தனக்குத் தலைவன் என்ற உறுதியுடன் ஐயன் தாளைப் பணிந்து தவம் செய்கிறார். தேவர் தலைவனாகவும் மேருமலையை ஒத்தவனுமான குமர'வேள்' செய்வதோ அந்த வள்ளியம்மையின் பதம் பணிவது. இதில் வள்ளியம்மை குமரவேளின் மேல் வைத்த அன்பு பெரிதா? வள்ளி பதம் பணியும் வேள் வள்ளியம்மையின் மேல் வைத்த அன்பு பெரிதா?
இப்போது இந்தப் பாடலைக் கொஞ்சம் மாற்றி எழுதிப் பாருங்கள். நான் சொல்லும் விளக்கம் அதில் தெரியும்.
பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்
வேளை, சுரபூபதி, மேருவையே
காளைக் குமரேசன் எனக்கருதி
தாளைப் பணியத் தவம் எய்தியவா?
எய்தியவா என்பது எய்தியவாறு என்னை? என்பதனை சுருக்கம்.
இறைவனை அன்றி மற்றொன்றை வேண்டாமல் நிற்பது ஜீவனின் இயற்கை; அந்த ஜீவனைத் தானே தேடி வந்து அடைவது இறைவனின் இயற்கை என்ற சைவசிந்தாந்தக் கருத்தும் இங்கு மறைபொருளாய் இருப்பதாகத் தோன்றுகிறது. //
இதுவும் நல்ல விளக்கமாகவே தெரிகிறது குமரன். ஆனால் நானறிந்த வகையில் மரபுவழி விளக்கங்களில் எங்கும் இப்படிக் காணவில்லை. இச்சை, கிரியை, ஞானம் இது மூன்றுக்குள்ளேயே எல்லாம் சுத்திச் சுத்தி வரும். அநுபூதியில் கிரியை வெளிப்படையாக ஒரே ஒரு இடத்தில்தான் வருகிறது தெரியுமா? நான் சொல்வது தெய்வயானையை!
ராகவன் ஜீ,
வருகிற 9ம் தேதி இங்கே வலைப்பதிவர்கள் சந்திப்பு. உங்களை இந்த நெலமைல கூப்பிடறது கொஞ்சம் ஓவர்னாலும், வந்தால் மகிழ்வோம்! :)
(சம்பந்தமில்லாத பின்னூட்டத்திற்கு வழக்க்ம்போல மன்னிக்க! :) )
Post a Comment