Tuesday, September 12, 2006

33. சமயச்சண்டை வேண்டேன்

மத நல்லிணக்கத்தைப் பற்றி இன்றைக்கு யார் யாரோ பேசுகின்றார்கள். ஆனால் அன்றைக்கே சொல்லிலும் செயலிலும் காட்டியிருக்கின்றார் அருணகிரி. அருணகிரியின் காலகட்டம் சைவ வைணவச் சண்டைகள் நிறைந்த காலம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தத்துவங்களை வைத்துக் கொண்டு அதே சிறந்தது என்று சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். பற்றாக்குறைக்கு கன்னட தெலுங்கு நாடுகளிலிருந்து வேறு புதிய கருத்துகள் இறக்குமதி. அவர்களோடு சண்டை. அதற்கு முந்தய காலகட்டங்களை எடுத்துக் கொண்டால், பெரியாழ்வாரும் அப்படி சண்டையிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். பேசாமல் உழவாரப் பணி செய்து கொண்டிருந்த அப்பரைக் கூட இந்தச் சமயச் சண்டைகள் விட்டு வைக்க வில்லை. வந்த சண்டையை விடாமல் அவரும் இறைவன் அருளால் கல்லைக் கட்டிக் கடலில் போட்டாலும் கடலில் மிதந்தார். சுண்ணாம்புக் காளவாயில் வைத்துப் பூட்டினாலும் பொய்கையில் குளித்த தாமரையாக வெளியே வந்தார். "மூசு வண்டறை பொய்கையும் போன்றதே! ஈசன் எந்தை இணையடி நிழலே" என்று தேவாரமும் பாடினார். இன்றைக்கும் எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்தவர் மதத்தில் குற்றம் காண்பதே பலருக்கு மதத்தொழிலாகப் போய் விட்டது. ஊரெங்கும் உலகெங்கும் இந்தக் கொடுமைதானே நடக்கிறது. இயற்கைச் சீற்றங்களுக்கும் மற்ற மதத் தெய்வங்களைக் குற்றஞ் சொல்கிறார்களே!

இதெல்லாம் எதனால் வந்தது? மதச்சகிப்புத் தன்மை இல்லாததால் வந்தது. அவரவர் மதங்களையே முழுமையாக அறியாமையால் வந்தது. ஒருவருடைய கருத்தை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்றார் அண்ணாத்துரை. ஆகையால் வீண்சண்டை கூடாது. இப்படி மதங்களை வைத்துக் கொண்டு ஆன்மீகத் தலைவர்கள் எல்லாம் சண்டையிடுவதை அருணகிரி வெறுத்தார். தானும் அந்த நிலைக்கு ஆளாகக் கூடாதேயென்று வருந்தினார். ஆகையால் இறைவனை வேண்டி, "அப்பனே முருகா! அரைகுறையாக உண்மைகளை அறிந்து அவற்றைக் கொண்டு நிலையில்லாத கடலலை போல முளை குழம்பி, நானும் கூச்சலிட்டு கேவலப்பட்டு நிலையில் தாழ்வேனோ! அந்த நிலைக்கு என்னை ஆளாக்கி விடாதே வேலவா!" என்று வரம் கேட்கிறார்.

கலையே பதறிக் கதறித் தலையூடு
அலையே படுமாறு அதுவாய் உளதோ
கொலையே புரி வேடர் குலப்பிடி தோய்
மலையே மலை கூறிடு வாகையனே


அருணகிரி யாரோடும் சமயச் சண்டைக்குப் போனதில்லை. எந்தப் புறச்சமயத்தையும் குறை கூறவில்லை. அவரவர் வழி அவரவருக்கு என்று வாழ்ந்தவர். இறைவனை உண்மையாக உணர்ந்தவர்களுக்கு மட்டுமே இது சாத்தியப்படும். இப்பேர்ப்பட்ட வரத்தை இறைவனிடம் கேட்கும் பொழுது இறைவனைப் புகழ்ந்தே கேட்கிறார். எப்படிப் புகழ்கிறார்?

"கொலையே புரி வேடர்!" வேடுவர்கள் கொலைத்தொழில் புரிகின்றவர்கள். மக்களை அல்ல. மாக்களை. அதுவும் உண்பதற்கு. நாடு பிடிக்கும் ஆசையில் மக்களைக் கொல்கின்றவர்கள் அல்லர் வேடுவர். உணவிற்காக மட்டுமே விலங்குகளைக் கொல்லும் வழக்கமுடையவர். ஆகையால்தால் "கொலையே புரி" என்று அந்தக் கொலையைக் கூட உயர்வு நவிற்சியாகச் சொல்கிறார் அருணகிரி. அந்தக் குலத்தில் ஒரு பிடி இருந்ததாம். அந்தப் பிடியைக் கொண்டவனே என்று முருகனைப் புகழ்கிறார். பிடி என்றால்? பிடி என்றால் பெண் யானை. பெண் யானையின் நடையும் அழகுதான். அப்படி அழகாக நடக்கும் வள்ளியைக் கொண்டவன் முருகன்தானே!

"மலையே மலைகூறிடு வாகையனே!" உயர்ந்து நிற்பது மலை. ஆகையால்தான் மலை போல் உயர்ந்தவர்கள் என்று தமிழில் புகழ்கிறோம். உயர்ந்த பண்புகளை உடைய முருகனையும் மலையே என்று உயர்த்திச் சொல்கிறார். முருகன் எந்த மலையைக் கூறிட்டார்? தாரகாசுரனின் கிரவுஞ்ச மலையை வேலால் அழித்தார் முருகன். "அப்படி மலையைக் கூறிட்ட திறமுடையவனே! வேடுவர் குலமகள் வள்ளியைக் கொண்டவனே! கசடறக் கற்காதவர்கள் போல நானும் மூளை குழம்பித் தவித்து, சமயக் கூச்சலிட்டு வீழ்வேனோ! அப்படியெல்லாம் நேராமல் காத்தருள்வாய் முருகா!"

பக்தியுடன்,
கோ.இராகவன்

22 comments:

said...

ஜிரா,

நல்லா எழுதியுள்ளீர்கள்.

நல்ல பதிவு!!

நன்றி!!

said...

//இதெல்லாம் எதனால் வந்தது? மதச்சகிப்புத் தன்மை இல்லாததால் வந்தது.//

இது தாங்க இப்போதைக்கு தேவையான ஒன்று.

புரிஞ்சிக்கணும், அவங்க பெரியவங்களே சொல்லியிருக்காங்க, நாமும் சண்டை போடகூடாதுன்னு நம்ம பெரியவங்க சொல்லியிருக்காங்க.

ஆக எல்லா பெரியவங்களும் சொல்லியிருக்காங்க.

அததாங்க இப்போதைக்கு தேவையான ஒன்றுன்னு சொன்னேன்.

said...

சமயம் அறிந்து, சமயம் துறந்த, சமயோசிதமான பதிவு!

முருகனருள் முன்னிற்கும்!

said...

//ஆனால் அன்றைக்கே சொல்லிலும் செயலிலும் காட்டியிருக்கின்றார் அருணகிரி//

மிகவும் உண்மை ஜிரா! முருகனைப் பாடப் புகுந்த பல பாடல்களில், ராமனையும் கண்ணனையும் சேர்த்தே பாடி, இவ்வளவு பெருமைகளை உடைய மாலவனின் மருகா என்று தான் கூறுகிறார்.

SK அவர்களின் அண்மைப் பதிவில் கூட பார்த்தீர்களா? "தொந்தி சரிய" திருப்புகழ் பாடலில், "எந்தை வருக ரகுநாயக வருக" என்று தான் பாடுகிறார்.

முருகன் புகழ் பாடுவதற்கு என்றே முனைந்தது தான் திருப்புகழ்.
வேண்டுமானால், இன்னொரு தெய்வத்தினைச் சற்றே இறக்காமல், முருகனை மட்டும் ஏற்றிப் பாடி இருக்கலாம். ஆனால் அருணகிரி அப்படிச் செய்தாரில்லை. அதையும் தாண்டி ஒரு படி மேலே செல்கிறார்!

இப்படி ஒரு தெய்வத்தின் புகழ் பாடப் புகுந்த பின், அதில் இன்னொரு தெய்வத்தின் அவதார நிகழ்ச்சிகளையும், வீரப் பெருமைகளையும் பாடுகிறார் என்றால், அதற்கு அந்தக் காலகட்டத்தில் மிகப் பெரும் துணிவு இருந்திருக்க வேண்டும்.

வெறும் கவி்வாணருக்கோ, இலக்கிய ஆர்வலருக்கோ இவ்வளவு துணிபு வராது. நம் அருணகிரி அப்படியா? பட்டுத் தெளிந்த தத்துவ ஞானியல்லவா அவர்? அதனால் தான் கோட்பாடுகளையும் தாண்டி கோலோச்சுகிறார்! உண்மையிலேயே "புரட்சிக் கவி"!!

said...

//பெரியாழ்வாரும் அப்படி சண்டையிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்
அப்பரைக் கூட இந்தச் சமயச் சண்டைகள் விட்டு வைக்க வில்லை//

"சண்டை" என்பது சற்றே கனமான வார்த்தை. "வாதம் புரிய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்" என்று கொள்ளுதல் நலம்! - ok வா ஜிரா?

"ஈசன் இமையவரெல்லாம்
மந்திர மாமலர் கொண்டு" எங்கள் கண்ணனுக்குக் காப்பு கட்ட வாருங்கள் என்று சிவனாரைத் தான் அழைக்கிறார் பெரியாழ்வார். "நீரேறு செஞ்சடை நீலகண்டன்" என்று ஏத்துகிறார்.

மாறி வரும் உலகில் இப்போதெல்லாம், "best defence is offense" என்று ஆகி விட்டது போல்,
அப்போதைய காலத்திலும் வேண்டுமென்றே வம்புக்கு இழுக்கும் கலை(?)யில் வல்ல ஒரு சிலரால், நெறிகள் மாறி விடாமல் இருக்கத் தான், ஆழ்வாரும், அப்பரும் வாதம் புரிய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அப்போது கூட கண்ணியம் குறையாது பார்த்துக் கொண்டார்கள்.
முடிவாக நல்வழி என்ன என்றும் காட்டிச் சென்றார்கள்.

"அவர்அவர் தமதமது அறிவுஅறி வகைவகை
அவர்அவர் இறையவர் எனஅடி அடைவர்கள்
அவர்அவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவர்அவர் விதிவழி அடையநின் றனரே" - நம்மாழ்வார் அருளியது.

அருணகிரியார் அவருக்காக இல்லை; பிற்காலத்தில் சண்டையிடும் மனிதருக்கு எல்லாம் சேர்த்தே வேண்டிக் கொள்வதாகவே படுகிறது.
நாமும் கூடவே சேர்ந்து வேண்டிக் கொள்வோம்!

said...

ஜிரா...!
அருமையான கருத்துக்கள்...!

பதிவுக்கு ஒரு + குத்து !

:)

said...

நல்ல பதிவு..ஆனால் புரிய வேண்டியவர்களுக்கு புரியப்போவது/புரிய விடப்போவது இல்லை..அதுதான் வேதனையானது.

//இன்றைக்கும் எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்தவர் மதத்தில் குற்றம் காண்பதே பலருக்கு மதத்தொழிலாகப் போய் விட்டது. ஊரெங்கும் உலகெங்கும் இந்தக் கொடுமைதானே நடக்கிறது. இயற்கைச் சீற்றங்களுக்கும் மற்ற மதத் தெய்வங்களைக் குற்றஞ் சொல்கிறார்களே!//

கொடுமையான உண்மை.

//அரைகுறையாக உண்மைகளை அறிந்து அவற்றைக் கொண்டு நிலையில்லாத கடலலை போல முளை குழம்பி, நானும் கூச்சலிட்டு கேவலப்பட்டு நிலையில் தாழ்வேனோ! அந்த நிலைக்கு என்னை ஆளாக்கி விடாதே வேலவா!//

said...

நல்ல பதிவு!!

said...

மிக நல்ல பதிவு இராகவன்.

பெரியாழ்வார் சமயப் பிணக்குகளில் ஈடுபட்டாரா? புதிய செய்தி இராகவன். அடியேன் அறிந்த வரை பெரியாழ்வார் சமயப் பிணக்குகளில் ஈடுபட்டதாக அறியவில்லை. ஒரு எடுத்துக்காட்டாவது சொல்லுங்கள்.

திருமங்கையாழ்வாரும் சம்பந்தப்பெருமானும் வாதப்போர் செய்ததை அறிவேன். ஆனால் பெரியாழ்வார் சமயப் பிணக்குகளில் ஈடுபட்டாரா? ஒருவேளை பாண்டியன் சபையில் பரத்துவ நிர்ணயம் செய்ததைக் குறிப்பிடுகிறீர்களா? அது சண்டையில் சேருமா என்று தெரியவில்லை. மற்ற படி அவருடைய பாசுரங்களில் மற்ற சமயத்தாரைப் பற்றிப் பேசியதாகத் தெரியவில்லை.

பதிவைப் பற்றிய விரிவான பின்னூட்டங்கள் இட மீண்டும் வருகிறேன்.

said...

நல்ல பதிவு அருணகிரிநாதர் சொல்லி இருக்காருன்னாவது யாராவது கேக்கறாங்க பார்க்கலாம்.

said...

ஒருவரது குலமோ,வளர்ப்போ,செய்யும் தொழிலோ முருகன் அருளை பெறுவதற்கு ஒரு தடை அல்ல என்பதற்கு வள்ளியை மணம் புரிந்ததிலிருந்து நமக்கு தெரிகிறது.எப்படி கொலைத்தொழில் புரியும் வேடர்குலத்து வள்ளியை நீயெ தேடிச் சென்று வலிய மணம் புரிந்து கொண்டாயோ அது போல பல கொடிய செயல்கள் செய்த என்னையும் நீதான் வலிய வந்து ஆட்கொள்ளவேண்டும் என்று அருண்கிரியார் இரைஞ்சுவதாகவும் ஒரு பொருள் கொள்ளலாமா ராகவன்.
மத சம்பந்தமான உங்கள் விளக்கமும் நிலையும் அருமை.இன்றைய நிலைக்கு பொருத்தமானது.

said...

//அருணகிரி யாரோடும் சமயச் சண்டைக்குப் போனதில்லை. எந்தப் புறச்சமயத்தையும் குறை கூறவில்லை. அவரவர் வழி அவரவருக்கு என்று வாழ்ந்தவர். இறைவனை உண்மையாக உணர்ந்தவர்களுக்கு மட்டுமே இது சாத்தியப்படும். //

உண்மை. சாஸ்திர ஞானம் பெறுவதிலும் வாத பிரதிவாதங்களிலும் தன் காலத்தைக் கழிப்பவர்கள் பலர் அங்கேயே நின்றுவிடுகிறார்கள்.
"வெல்லாம லெவரையு மருட்டிவிட வகைவந்த
வித்தையென் முத்திதருமோ " -தாயுமானவர்
புதர்களிடையே சென்று தன் கொம்புகளை அவற்றில் சிக்கவைத்து , தலையை ஆட்டி ஆட்டி அதிலிருந்து விடுபடத்துடித்து, மேலும் சிக்குண்டு வேடனுக்கு இரையாகும் மானைப்போல் சமயச் சழக்குகளில் சிக்குண்டு மாய்வேனோ ? மிருகங்களை வேட்டையாடி உண்ணும் வேட்டுவக்குல வள்ளியை விரும்பி மணந்தவனே !
இதில் இன்னொரு செய்தியும் இருக்கிறது. வள்ளி திருமணம் உணர்த்தும் பெரிய உண்மை என்னவென்றால் வள்ளி என்பது பக்குவப்பட்டு இறைவனை அடையத்துடிக்கும் ஜீவாத்மா.அப்படிப்பட்ட ஜீவாத்மாவை பரம்பொருள் தானே வலிய வந்து ஆட்கொள்கிறான்.
இறைவனை அடைய சாஸ்திர ஞானமோ, வாதவிவாதங்களில் வெற்றியோ தேவையில்லை, செய்யும் தொழில் பேதமில்லை.' கொலையே புரி வேடவர் குலப்பிடி தோய் மலையே' .அவனை அடைய வேண்டி ஆன்மாவின் துடிப்பும் 'கற்றாவின் மனம்போலக் கசிந்துருகும்' மனமும் தேவை.

said...

இராகவன்,
அருமையான பதிவு. அற்புதமான கருத்துக்கள். அழகான தமிழ்நடை. காலமறிந்து தேவையறிந்து எழுதப்பட்ட பதிவு.

//அவரவர் மதங்களையே முழுமையாக அறியாமையால் வந்தது. //

உண்மை. முற்றிலும் உண்மை.

said...

// Sivabalan said...
ஜிரா,

நல்லா எழுதியுள்ளீர்கள்.

நல்ல பதிவு!!

நன்றி!! //

நன்றி சிவபாலன். சிவபாலன்னா முருகந்தானே. :-) உங்களுக்கு அடுத்து சிவமுருகனுடைய பின்னூட்டம். :-)

said...

// சிவமுருகன் said...
//இதெல்லாம் எதனால் வந்தது? மதச்சகிப்புத் தன்மை இல்லாததால் வந்தது.//

இது தாங்க இப்போதைக்கு தேவையான ஒன்று.

புரிஞ்சிக்கணும், அவங்க பெரியவங்களே சொல்லியிருக்காங்க, நாமும் சண்டை போடகூடாதுன்னு நம்ம பெரியவங்க சொல்லியிருக்காங்க.

ஆக எல்லா பெரியவங்களும் சொல்லியிருக்காங்க.

அததாங்க இப்போதைக்கு தேவையான ஒன்றுன்னு சொன்னேன். //

ஆமாம் சிவமுருகன். ஊரூருக்குப் பெரியவங்க சொன்னது இதுதான். ஆனா இதை எல்லாரும் விட்டுர்ராங்க. ஏன்னே தெரியலை. ம்ம்ம்...

said...

// SK said...
சமயம் அறிந்து, சமயம் துறந்த, சமயோசிதமான பதிவு!

முருகனருள் முன்னிற்கும்! //

மிக்க நன்றி SK.

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//பெரியாழ்வாரும் அப்படி சண்டையிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்
அப்பரைக் கூட இந்தச் சமயச் சண்டைகள் விட்டு வைக்க வில்லை//

"சண்டை" என்பது சற்றே கனமான வார்த்தை. "வாதம் புரிய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்" என்று கொள்ளுதல் நலம்! - ok வா ஜிரா? //

ஆமாம் ரவி. சண்டை சற்றுப் பெரிய சொல்தான். அதனால்தான் குமரனும் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டியதாகப் போயிற்று. மேற்கூறிய பெரியவர்களும் வம்புச்சண்டையிலிருந்து விலகிப் போனவர்கள்தான். அதாவது நாம் சும்மாயிருந்தாலும் நம்மேல் வந்து விழும் என்பதை எடுத்துக்காட்ட அப்படிச் சொன்னது.

said...

// கோவி.கண்ணன் [GK] said...
ஜிரா...!
அருமையான கருத்துக்கள்...!

பதிவுக்கு ஒரு + குத்து !

:) //

நன்றி கோவி. கருத்தாதரவுக்கும் +க்கும். :-)

// மனதின் ஓசை said...
நல்ல பதிவு..ஆனால் புரிய வேண்டியவர்களுக்கு புரியப்போவது/புரிய விடப்போவது இல்லை..அதுதான் வேதனையானது. //

புரிய விரும்புவோம் மனதின் ஓசை. நல்லதை நல்ல வழியிலேயே சொல்ல வேண்டும். சொல்லிக் கொண்டேயிருக்கலாம். ஒருவருக்குப் புரிந்தாலும் சரிதான்.

// ILA(a)இளா said...
நல்ல பதிவு!! //

நன்றி இளா. மொதமொதலா நம்மளோட இந்த வலைப்பூவுக்கு வந்திருக்கீங்க. வாங்க வாங்க.

// குமரன் எண்ணம் said...
நல்ல பதிவு அருணகிரிநாதர் சொல்லி இருக்காருன்னாவது யாராவது கேக்கறாங்க பார்க்கலாம். //

உண்மைதான் குமரன் எண்ணம். அவருஞ் சொல்லி ஆண்டுகள் நூத்துக்கணக்குல ஆச்சு. எல்லாரும் கேட்டா நல்லது.

said...

// குமரன் (Kumaran) said...
மிக நல்ல பதிவு இராகவன்.

பெரியாழ்வார் சமயப் பிணக்குகளில் ஈடுபட்டாரா? புதிய செய்தி இராகவன். அடியேன் அறிந்த வரை பெரியாழ்வார் சமயப் பிணக்குகளில் ஈடுபட்டதாக அறியவில்லை. ஒரு எடுத்துக்காட்டாவது சொல்லுங்கள்.

திருமங்கையாழ்வாரும் சம்பந்தப்பெருமானும் வாதப்போர் செய்ததை அறிவேன். ஆனால் பெரியாழ்வார் சமயப் பிணக்குகளில் ஈடுபட்டாரா? ஒருவேளை பாண்டியன் சபையில் பரத்துவ நிர்ணயம் செய்ததைக் குறிப்பிடுகிறீர்களா? அது சண்டையில் சேருமா என்று தெரியவில்லை. மற்ற படி அவருடைய பாசுரங்களில் மற்ற சமயத்தாரைப் பற்றிப் பேசியதாகத் தெரியவில்லை.

பதிவைப் பற்றிய விரிவான பின்னூட்டங்கள் இட மீண்டும் வருகிறேன். //

வாங்க குமரன் வாங்க. சண்டை என்று நான் பயன்படுத்திய சொல்லில் எடை உங்களை அப்படி நினைக்க வைத்திருக்கிறது என நினைக்கிறேன்.

இவர்கள் பிணக்குகள் தேடித் திரிந்தார்கள் என்று சொல்லவில்லை. சும்மாப் போனாலும் கூட மேலே வந்து விழும் என்ற பொருளுக்குச் சொன்னது. அதைத்தான் மேலே ரவியும் சுட்டிக்காட்டினார். நானும் ஒத்துக் கொண்டேன்.

விளக்கமான பின்னூட்டத்திற்குக் காத்திருக்கிறேன்.

said...

// தி. ரா. ச.(T.R.C.) said...
ஒருவரது குலமோ,வளர்ப்போ,செய்யும் தொழிலோ முருகன் அருளை பெறுவதற்கு ஒரு தடை அல்ல என்பதற்கு வள்ளியை மணம் புரிந்ததிலிருந்து நமக்கு தெரிகிறது.எப்படி கொலைத்தொழில் புரியும் வேடர்குலத்து வள்ளியை நீயெ தேடிச் சென்று வலிய மணம் புரிந்து கொண்டாயோ அது போல பல கொடிய செயல்கள் செய்த என்னையும் நீதான் வலிய வந்து ஆட்கொள்ளவேண்டும் என்று அருண்கிரியார் இரைஞ்சுவதாகவும் ஒரு பொருள் கொள்ளலாமா ராகவன்.
மத சம்பந்தமான உங்கள் விளக்கமும் நிலையும் அருமை.இன்றைய நிலைக்கு பொருத்தமானது. //

இல்லை தி.ரா.ச. இந்த இடத்தில்தான் அருணகிரி அழுத்தம் திருத்தமாக "கலையே பதறிக் கதறித் தலையூடு அலையே படுமாறு உளதோ" என்று கூறியுள்ளார். காக்க வேண்டுவது மற்ற எல்லாப் பாடல்களிலும் உள்ளதுதானே. இந்தப் பாடலில் குறிப்பாக சண்டை போட்டு மண்டை உடைவதைத் தடுக்குமாறு வேண்டுவதைச் சொல்லலாம். அருணகிரியும் ஒரு போட்டி செய்தார். வில்லிபுத்தூராருடன். ஆனால் வெற்றிக்காக இல்லை. மற்ற தமிழ்ப் புலவர்களைக் காப்பாற்றவும் வில்லிபுத்தூராரைத் திருத்தவுந்தான். அந்தப் போட்டியிலும் தமிழை மட்டுமே முன்னிறுத்தி வென்றார். தோற்ற வில்லிபுத்தூராருக்கு தண்டனை என்ன தெரியுமா? வில்லிபாரதம் எழுதுவது. ஆக தண்டனையும் கருணையும் ஒன்று. மேலே பாருங்கள். ஜெயஸ்ரீ இன்னும் அருமையாக விளக்கியிருக்கிறார்கள்.

said...

// ஜெயஸ்ரீ said...
//அருணகிரி யாரோடும் சமயச் சண்டைக்குப் போனதில்லை. எந்தப் புறச்சமயத்தையும் குறை கூறவில்லை. அவரவர் வழி அவரவருக்கு என்று வாழ்ந்தவர். இறைவனை உண்மையாக உணர்ந்தவர்களுக்கு மட்டுமே இது சாத்தியப்படும். //

உண்மை. சாஸ்திர ஞானம் பெறுவதிலும் வாத பிரதிவாதங்களிலும் தன் காலத்தைக் கழிப்பவர்கள் பலர் அங்கேயே நின்றுவிடுகிறார்கள்.
"வெல்லாம லெவரையு மருட்டிவிட வகைவந்த
வித்தையென் முத்திதருமோ " -தாயுமானவர்
புதர்களிடையே சென்று தன் கொம்புகளை அவற்றில் சிக்கவைத்து , தலையை ஆட்டி ஆட்டி அதிலிருந்து விடுபடத்துடித்து, மேலும் சிக்குண்டு வேடனுக்கு இரையாகும் மானைப்போல் சமயச் சழக்குகளில் சிக்குண்டு மாய்வேனோ ? மிருகங்களை வேட்டையாடி உண்ணும் வேட்டுவக்குல வள்ளியை விரும்பி மணந்தவனே !
இதில் இன்னொரு செய்தியும் இருக்கிறது. வள்ளி திருமணம் உணர்த்தும் பெரிய உண்மை என்னவென்றால் வள்ளி என்பது பக்குவப்பட்டு இறைவனை அடையத்துடிக்கும் ஜீவாத்மா.அப்படிப்பட்ட ஜீவாத்மாவை பரம்பொருள் தானே வலிய வந்து ஆட்கொள்கிறான்.
இறைவனை அடைய சாஸ்திர ஞானமோ, வாதவிவாதங்களில் வெற்றியோ தேவையில்லை, செய்யும் தொழில் பேதமில்லை.' கொலையே புரி வேடவர் குலப்பிடி தோய் மலையே' .அவனை அடைய வேண்டி ஆன்மாவின் துடிப்பும் 'கற்றாவின் மனம்போலக் கசிந்துருகும்' மனமும் தேவை. //

மிக்க நன்றி ஜெயஸ்ரீ. நான் சொன்னது. பின்னூட்டத்தில் விளக்கியது அனைத்தும் உங்கள் ஒரு பின்னூட்டத்தில் மிகச் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மிக்க நன்றி. இப்படிச் சொல்லக் கேட்பது எப்படிப் பட்ட இன்பம்.

said...

குறிப்புக்கள் சரியாக இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக இதைச் சொல்லுகிறேன். அருட்செல்வர் அருணகிரியார் மேல் குற்றம் சொல்வதற்காக அல்ல. அவரது திருப்புகழை ஓதி வழிபடும் முருக பக்தர் குழாமில் நானும் ஒருவன்.

//அருணகிரி யாரோடும் சமயச் சண்டைக்குப் போனதில்லை. எந்தப் புறச்சமயத்தையும் குறை கூறவில்லை. அவரவர் வழி அவரவருக்கு என்று வாழ்ந்தவர்.//

வேழமுண்ட விளாங்கனி என்று தொடங்கும் காசித் தலத்திற்கான திருப்புகழில்
"மாள அன்றமண் நீசர்கள் கழுவேற
வாதில் வென்ற சிகாமணி மயில்வீரா"
என்று சமணரை நீசர் என்று உரைக்கிறார்.

சமயபத்தி வ்ருதார்ச்சனை என்று தொடங்கும் வேறொரு திருப்புகழில்
"தமிழ்தனைக் கரைகாட்டிய திறலோனே
சமணரைக் கழுவேற்றிய பெருமாளே"
என்றும் பாடுகிறார்.

சைவம் தழைக்க அவதரித்த சம்பந்தப் பெருமானை முருகனின் அவதாரம் என்றே அருணகிரி பல இடங்களில் போற்றுகிறார். அதனால் இந்தக் கழுவேற்றம் பற்றிய பிரஸ்தாபம்.

மேலும், வில்லிப்புத்தூராருடன் அருணகிரி வாதம் செய்து வென்றதாகவும் கதை வழங்குகிறது (அவர் தோற்றார் என்று சொல்லும் versionகளும் உண்டு).

இது போன்ற சிற்சில பிறமத தூஷனைகள் இருந்தாலும், நிறுவனப் படுத்தப்பட்ட மதக் காழ்ப்புணர்ச்சி என்பது சைவம், வைணவம் உள்ளிட்ட இந்து மதங்களில் என்றும் இருந்ததில்லை. சச்சரவுகள் கூட பெரும்பாலும் கருத்தளவில் இருந்தனவே தவிர வன்முறைக்குப் போகவில்லை.

said...

ஜிரா,

நல்ல பதிவு!! அருமையான கருத்துக்கள்

நன்றி!!

FYI, http://balaji_ammu.blogspot.com/2006/09/ii.html