இந்த மண்ணுலகில் தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. ஐந்து பூதங்களில் ஒன்று. உணவாகப் பயன்படுகிறது. உணவாக்கப் பயன்படுகிறது. தூய்மை செய்யப் பயன்படுகின்றது. மருந்தாக உதவுகிறது. மருந்தாக்க உதவுகிறது. இன்னும் பல பயன்கள். அதனால்தான் வள்ளுவரும் "நீரின்றி அமையாது உலகு" என்று புகழோங்கச் சொல்கிறார். நாமும் நீரின் முதன்மையையும் தேவையையும் உணர்ந்தவர்கள்தான். ஆகையால்தான் நமது பண்பாட்டில் பல கட்டுப்பாடுகள் உள்ளன. நீர்நிலைகளில் ஓராடையுடன் கூட குளியாமை. நீரில் உமிழாமை. நீரில் கழிவிடாமை. குளம் குட்டைகளை குழப்பாமை. இப்படி பல கட்டுப்பாடுகள் தமிழ்ப் பண்பாட்டில் இருந்தாலும் நாம் எவ்வளவு பின்பற்றுகிறோம்? இனிமேலாவது நாம் நீரினை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
எதையும் தூய்மைப் படுத்தும் பண்பு நீருக்குண்டு. கிருத்துவர்கள் கூட நீரினை ஞானஸ்தானத்திற்குப் பயன்படுத்துகின்றார்கள். இஸ்லாமியர்களும் கூட தொழுகைக்கு முன் நீரால் தூய்மை செய்து கொள்கிறார்கள். ஆகையால்தான் தமிழர்கள் இறைவனை நீரோடு தொடர்புடையவனாக வைத்தார்கள். தென்னாடுடைய சிவனின் தலையில் கங்கையை வைத்தவர்கள், தமிழ்க்கடவுள் முருகனை கங்கையில் உதித்த காங்கேயன் என்றார்கள். மந்தாகினி என்பது கங்கையின் மறுபெயர். அருணகிரி "மந்தாகினி தந்த வரோதயனே" என்று புகழ்வதில் வியப்பேது. வேண்டிய வரங்களைத் தருகின்ற வள்ளல் பெருமானல்லவா அவர்.
சிந்தாகுல இல்லொடு செல்வமெனும்
விந்தாடவி என விடப் பெறுவேன்
மந்தாகினி தந்த வரோதயனே
கந்தா முருகா கருணாகரனே
கந்தன் என்ற பெயரையும் ஸ்கந்தன் என்ற பெயரையும் பலர் குழப்பிக் கொள்வார்கள். இரண்டும் ஒரே தெய்வத்தைக் குறிக்கும் பெயரானாலும் இரண்டுக்கும் பொருள் வேறு. பொருளில் இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையவை அல்ல. "ஸ்கந்தஸ்ய கீர்த்தீம் அத்துலாம் கலி கல்மிஷ நாசினீம்". அதாவது கலியுகத்தின் துன்பங்களைத் தீர்க்க வல்லவன் என்று வடமொழி கூறுகிறது. தமிழ் என்ன சொல்கிறது? ஆனையைக் கட்டும் கட்டைக்குக் கந்து என்று பெயர். ஆனையை ஓரிடத்திலிருந்து கொண்டு செல்லும் பொழுது ஒரு பெரிய கட்டையைச் சங்கிலியோடு பிணைத்து அதன் காலில் கட்டி விடுவார்கள். நடுவில் எங்கேயேனும் தங்கினால் ஒரு குழி தோண்டி அதில் அந்தக் கட்டையைப் புதைத்து விடுவார்கள். அவ்வளவே. அந்தக் கட்டைக்குக் கந்து என்று பெயர். அதிலிருந்து பிறந்ததுதான் கந்தன் என்ற பெயர். ஆனையோடே இருந்து, அதன் நடவடிக்கைகளைத் தடுக்காது, அதே நேரத்தில் தேவையான பொழுது கட்டுப்படுத்துகின்ற கந்தினைப் போல கந்தனும் நம்முடனே இருந்து வாழ்வித்து, வேண்டிய பொழுது கட்டுப்படுத்தும் தன்மையுடைவன். பாருங்கள். தமிழில் பெயர் வைக்கும் பொழுது கூட எத்தனை நுட்பமாக நம் முன்னோர்கள் சிந்தித்திருக்கின்றார்கள்.
ஆகுலம் என்றால் துன்பம். சிந்தாகுலம் என்றால் துன்பம் தரக்கூடிய சிந்தை. அனைவருக்கும் இல்வாழ்க்கை சிறந்து விளங்குவதில்லை. அப்படி சிறப்பில்லாத இல்வாழ்க்கை உடையவர்கள், அதை எண்ணி எண்ணி துன்பத்திற்கு உள்ளாவார்கள். இதைத்தான் "சிந்தாகுல இல்" என்கிறார் அருணகிரி. செல்வம் பல இருந்தும் துயரம் சேரும் சிலருக்கு. அனைவருக்கும் செல்வம் இன்பத்தை வழங்குவதில்லை. அப்படிப்பட்ட செல்வமும், சிந்தாகுல இல்வாழ்க்கையும் இருந்தால், வாழ்க்கை நரகமாகும். எப்படிப் பட்ட நரகம் தெரியுமா? விந்திய மலைக் காடுகளைப் போல, செல்லும் வழி மறக்கச் செய்யும் நரகமாம். உண்மைதானே! சிந்தாகுல இல்லும் செல்வமும் இருந்தால் நமக்கு எல்லாம் மறந்து போகும். செய்ய வேண்டியதை மறந்து கண்டதைச் செய்து மென்மேலும் துன்பத்திற்கு ஆளாவோம். அப்படிப் பட்ட துன்பங்களுக்கு வாழ்வழித்து நமக்கு வாழ்வளிப்பார் முருகப் பெருமான்.
பக்தியுடன்,
கோ.இராகவன்
Tuesday, September 19, 2006
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
கருத்து செரிவான பதிவு. நன்றி. வாழ்த்துக்கள். வேகமான நடை. படிக்க சுவையாக இருந்தது.
கந்தன் என்பது ஸ்கந்தனின் திரிபுதான் என்பது என் அபிப்ராயம். தங்கள் விளக்கம் புதுமையாக இருந்தது. புதுமையாக அறிய முடிந்தது.
நன்றி
எங்க வீட்ல அம்மா, பாட்டி எல்லாம் சொல்லுவாங்க.. தெப்பக்குளத்துக்கு போரப்போ,, முதல்ல கால வைக்ககூடாதுன்னு.. கொஞ்சம் எடுத்து தலையில தெளிச்சுட்டு பின்னர் தான் கால விடனும்னு சொல்லுவாங்க
நல்லா இருக்கு ராகவன்...
மங்கை
//வரோதயனே//
வரம்+உதயனே
வரங்களைக் கொடுப்பது பற்றிக் கேட்டு இருக்கிறோம். வரங்களை உதயாமாகச் செய்வது பற்றி இப்போது தான் கேட்கிறேன்.
நல்ல வரங்களை மனதில் உதயாமாகச் செய்வதும் அவனே. "தியோயோனப் ப்ரோசதயாத்" என்று காயத்ரி குறிப்பதுவும் இந்த மனோ உதயம் தான்!
அருணகிரியார், வடமொழிச் சொல்லாடலிலும் அசத்துகிறார்!
//விந்தாடவி//
விந்தயா+அடவி
அடவி=காடு
ஜிரா,
இது போன்ற சொற்றொடர்களுக்கு, இறுதியாகப் பதம் பிரித்து தந்தால், என் போன்ற தமிழ் கத்துக்குட்டிகளுக்கு மிக உதவியாக இருக்கும். புது சொற்களும் தெரிந்து கொள்வோம் உங்கள் புண்ணியத்தில் :-) வேண்டுகோளாக வைக்கிறேன்!
கந்தனுக்கு நல்ல பொருளுரைத்தீர்கள். யாணை உபமானம் நல்ல எளிய உதாரணம்.கந்து வட்டிக்குக்ம் இதுக்கும் சம்பந்தம் இருக்காது என்று நினைக்கிறேன்.
சிவனுடைய நெற்றிகண்ணிலிருந்து கிளம்பிய ஆறு பொறிகலையும் வாய்வும்,அக்னியும் எடுத்துச்செல்லும் வழியில் தாங்க முடியாமல் மந்தாகினி என்ற கங்கையாற்றில் விட அவளும் அதை தாங்க முடியாமல் கரையில் சேர்த்தாள்.பார்வதிதேவி பொறிகளை எடுத்து தழுவி குளிரவைத்து கந்தனாக்கினாள்
கங்கையிலிருந்து வெளியே வந்ததால் மந்தாகினி தந்த வரோதயனே என்கிறார்.உமையால் ஒன்றுபடுத்தப்பட்டதால் கந்தன் என்றும் பெயர் பெற்றார்.
// ஜயராமன் said...
அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
கருத்து செரிவான பதிவு. நன்றி. வாழ்த்துக்கள். வேகமான நடை. படிக்க சுவையாக இருந்தது. //
நன்றி ஜயராமன். செறிவும் நடையும் கந்தன் தந்தது. அதன் சிறப்பும் குறையும் அவனுக்கே.
// கந்தன் என்பது ஸ்கந்தனின் திரிபுதான் என்பது என் அபிப்ராயம். தங்கள் விளக்கம் புதுமையாக இருந்தது. புதுமையாக அறிய முடிந்தது.
நன்றி //
என்னுடைய விளக்கம் புதுமையானது அல்ல. மிகப் பழையது. குறிப்பிட்டு சொல்லப் போனால் புறநாநூற்றில் "கந்து சுழிக்கும் கடாக் களிற்றின்" என்று விளக்கத்தோட வருகிறது. நான் மட்டுமல்ல வாரியார் சுவாமிகள், கி.வா.ஜ, கீரண் போன்ற முருகனடியவர்கள் அனைவரும் ஏற்கனவே சொல்லிய கருத்துதான்.
// மங்கை said...
எங்க வீட்ல அம்மா, பாட்டி எல்லாம் சொல்லுவாங்க.. தெப்பக்குளத்துக்கு போரப்போ,, முதல்ல கால வைக்ககூடாதுன்னு.. கொஞ்சம் எடுத்து தலையில தெளிச்சுட்டு பின்னர் தான் கால விடனும்னு சொல்லுவாங்க
நல்லா இருக்கு ராகவன்...
மங்கை //
உண்மைதான் மங்கை. தூய்மைப் படுத்தும் நீருக்கும் மதிப்பு கொடுக்கத்தான் வேண்டும். அதை ஒழுங்காகச் செய்தாலே "தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து ஓங்கு பெறும் செந்நெல்!"
// //விந்தாடவி//
விந்தயா+அடவி
அடவி=காடு
ஜிரா,
இது போன்ற சொற்றொடர்களுக்கு, இறுதியாகப் பதம் பிரித்து தந்தால், என் போன்ற தமிழ் கத்துக்குட்டிகளுக்கு மிக உதவியாக இருக்கும். புது சொற்களும் தெரிந்து கொள்வோம் உங்கள் புண்ணியத்தில் :-) வேண்டுகோளாக வைக்கிறேன்! //
கண்டிப்பாக ரவி. அடுத்த பதிவிலிருந்து முயல்கிறேன். எஸ்.கே இப்படித்தான் அழகாக எடுத்துக் கொடுப்பார்.
// தி. ரா. ச.(T.R.C.) said...
கந்தனுக்கு நல்ல பொருளுரைத்தீர்கள். யாணை உபமானம் நல்ல எளிய உதாரணம்.கந்து வட்டிக்குக்ம் இதுக்கும் சம்பந்தம் இருக்காது என்று நினைக்கிறேன். //
:-)))) இல்லை இல்லை...அது வேறு என்று நினைக்கிறேன்.
// சிவனுடைய நெற்றிகண்ணிலிருந்து கிளம்பிய ஆறு பொறிகலையும் வாய்வும்,அக்னியும் எடுத்துச்செல்லும் வழியில் தாங்க முடியாமல் மந்தாகினி என்ற கங்கையாற்றில் விட அவளும் அதை தாங்க முடியாமல் கரையில் சேர்த்தாள்.பார்வதிதேவி பொறிகளை எடுத்து தழுவி குளிரவைத்து கந்தனாக்கினாள்
கங்கையிலிருந்து வெளியே வந்ததால் மந்தாகினி தந்த வரோதயனே என்கிறார்.உமையால் ஒன்றுபடுத்தப்பட்டதால் கந்தன் என்றும் பெயர் பெற்றார். //
நல்ல விளக்கம் தி.ரா.ச
ராகவா!
கந்தனும்;ஸ்கந்தனும் வேறா! நான் ஒரே கருத்தென இருந்தேன். விளக்கம் நன்று!
யோகன் பாரிஸ்
என்னதான் வட்டியைக் கட்டிட்டாலும் அதுவும் கூடவே (எப்பவுமே யானைகூட வர்ற கந்து போல)
இருக்கறதாலே கந்துவட்டி ன்னு பேர் வந்துருச்சோ என்னமோ?
நீர் நிலைகளில் செய்யக்கூடாதது ஒரு நல்ல பதிவு ராகவன். மங்கையின் பாட்டிபோலத்தான் எங்க பாட்டியும்
சொல்வாங்க.
இராகவன், உங்களுக்கு இராகவன்னு கூப்பிட்டா பிடிக்குமா ஜிரான்னு கூப்பிட்டா பிடிக்குமா?
ஸ்கந்த: என்றால் இணைக்கப்பட்டவன் என்பது தான் அடிப்படைப் பொருள். அன்னை உமையவளால் ஆறு குழந்தைகள் ஒன்றாக இணைக்கப்பட்டதால் ஸ்கந்தன் என்ற பெயர் வந்தது வடமொழியில்.
பாடல் வரிகளுக்கு அருமையான பொருளுரை இராகவன். வரோதயனே என்றால் என்ன பொருள்? ரவிசங்கர் சொன்னது தான் பொருளும் விளக்கமுமா?
தென்னாடுடைய சிவனும் தமிழ்க்கடவுள் முருகனும் மட்டுமில்லை இராகவன். தென்னரங்கனும் ஆறுகளின் நடுவில் தானே பள்ளி கொண்டிருக்கிறான். :-)
அந்த கலங்களில் கிராமத்தில் எல்லாம் ஒரு சிறு குட்டையில் தான் குடிதண்ணீர் எடுக்க வேண்டும் அதற்கு காவல் போட்டிருப்பார்கள். அங்கு குளிக்கக் குடாது தண்ணீர் எடுத்து வந்து மேட்டில் தான் குளிக் வேண்டும் நனறாக எழுதியுள்ளீர்கள்
// Johan-Paris said...
ராகவா!
கந்தனும்;ஸ்கந்தனும் வேறா! நான் ஒரே கருத்தென இருந்தேன். விளக்கம் நன்று!
யோகன் பாரிஸ் //
யோகன் ஐயா...இனிமேல் அப்படி நினைக்க மாட்டீர்கள்தானே! :-)
// துளசி கோபால் said...
என்னதான் வட்டியைக் கட்டிட்டாலும் அதுவும் கூடவே (எப்பவுமே யானைகூட வர்ற கந்து போல)
இருக்கறதாலே கந்துவட்டி ன்னு பேர் வந்துருச்சோ என்னமோ? //
இருக்கலாம் டீச்சர். இதற்கு இராம.கி ஐயாவைத்தான் கேட்க வேண்டும்.
// நீர் நிலைகளில் செய்யக்கூடாதது ஒரு நல்ல பதிவு ராகவன். மங்கையின் பாட்டிபோலத்தான் எங்க பாட்டியும் சொல்வாங்க. //
ஆக பலருக்குச் சொல்லிக் குடுத்திருக்காங்க. ஆனா கேக்குறதுதான் கொறச்சல் இல்லையா டீச்சர். பொதுவாகவே தமிழர்களுக்குத் துப்புரவாக வைத்துக் கொள்ளும் பண்பு குறைவாக இப்பொழுது இருக்கிறது. ஒகேனகல் அருவியில் குடித்து விட்டு பாட்டில்களைப் போட்டு உடைப்பதும்...பிளாஸ்டிக் பைகளையும் பாட்டில்களையும் கண்ட இடத்தில் போடுவதும்...தின்ற பருக்கைகளை அப்படியே விடுவதும்...வேண்டாமென்றால் மொத்தமாக அங்கேயே கொட்டுவதும்...அப்பப்பா! இந்தப் பழக்கங்கள் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் நிறைய உள்ளது என்பதே உண்மை.
// குமரன் (Kumaran) said...
இராகவன், உங்களுக்கு இராகவன்னு கூப்பிட்டா பிடிக்குமா ஜிரான்னு கூப்பிட்டா பிடிக்குமா? //
அன்போடு எப்படி அழைத்தாலும் பிடிக்கும். அன்பிலா வாயால் எப்படி அழைக்கக் கேட்டாலும் பிடிக்காதுதான்.
// ஸ்கந்த: என்றால் இணைக்கப்பட்டவன் என்பது தான் அடிப்படைப் பொருள். அன்னை உமையவளால் ஆறு குழந்தைகள் ஒன்றாக இணைக்கப்பட்டதால் ஸ்கந்தன் என்ற பெயர் வந்தது வடமொழியில். //
ஆமாம். நீங்களும் தி.ரா.சவும் குறிப்பிட்டிருப்பது வடமொழி விளக்கம்.
// பாடல் வரிகளுக்கு அருமையான பொருளுரை இராகவன். வரோதயனே என்றால் என்ன பொருள்? ரவிசங்கர் சொன்னது தான் பொருளும் விளக்கமுமா? //
ஆம். எளிய சொல்லாக இருந்ததால் விரிவாக விளக்கிச் சொல்லவில்லை.
// தென்னாடுடைய சிவனும் தமிழ்க்கடவுள் முருகனும் மட்டுமில்லை இராகவன். தென்னரங்கனும் ஆறுகளின் நடுவில் தானே பள்ளி கொண்டிருக்கிறான். :-) //
ஆமாம். அரங்கமும் ஆனைக்காவும் அப்படித்தானே. சரியாகச் சொன்னீர்கள்.
நாமக்கல் வே. ராமலிங்கம் பிள்ளை அவர்கள் சிறுவனாக இருந்த போது இந்த நிகழ்ச்சி நடந்ததாக தன் சுய சரிதையில் கூறியுள்ளார்.
ஏதோ ஊருக்கு வண்டி கட்டிக் கொண்டு போயிருக்கிறார்கள். முழு நாள் பயணம். வழியில் ஒரு தோப்பில் இளைப்பாறி கட்டுச்சாத மூட்டையை அவிழ்த்திருக்கிறார்கள். அருகிலுள்ள கிணற்றிலிருந்து தண்ணீர் மொண்டு வந்திருக்கிறார்கள். தண்ணீரில் இருந்த பாசியின் ஒரு துண்டு பையனின் டம்ளர் தண்ணீரில் தென்பட, சிறுவன் ராமலிங்கம் அறுவறுப்புடன் கத்துகிறார். அப்போது அவரது அன்னை மிருதுவாகக் கூறுகிறார், "தம்பி, தாயைப் பழித்தாலும் தண்ணீரை பழிக்கக் கூடாது" என்று. அப்போதைக்கு சிறுவன் சமாதானமானாலும் இந்த சொற்றொடர் நியாயமானதுதானா என்ற சந்தேகம் அவரை பல காலத்துக்கு குடைந்து கொண்டிருந்தது. அழுக்குத் தண்ணீரை கூடப் பழிக்கலாகாதா?
பல ஆண்டுகள் கழித்து ஒரு ஊர் குளக்கரையில் ஒரு கல்வெட்டைப் பார்க்கிறார். அதில் "தண்ணிரைப் பிழைத்தால் வேந்தன் சினம் கொள்ளும்" என்பது போல எழுதியுள்ளது. அப்போதுதான் அவருக்கு அந்தச் சொற்றொடரின் சரியான ரூபம் புலனாகிறது. அதாவது, "தாயைப் பிழைத்தாலும் (தாய்க்கு அபசாரம் செய்தாலும்) தண்ணீரை பிழைக்கக் கூடாது" என்பதுதான் சரியான வாக்கியம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment