முருகனிடத்தில் நேரடியாக உபதேசம் பெற்றவர்கள் மூவர். வேத நாயகனான ஈசன். பிறகு அருந்தமிழ் முனி அகத்தியர். கலியுகத்தில் அருணகிரிநாதர். இந்த மூவரில் முதலிருவரும் முருகனிடம் பெற்ற உபதேசத்தின் பலனாக நமக்கு எதுவும் உபதேசிக்கவில்லை. ஆனால் அருணகிரி இந்தப் பாடலில் வழியாக நமக்கு உபதேசிக்கிறார். உள்ளம் சஞ்சலப்படும் பொழுதெல்லாம் நினைக்கப்பட வேண்டிய பாடலிது.
கெடுவாய் மனனே கதிகேள் கரவா
திடுவாய் வடிவேல் இறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடுவேதனை தூள் படவே
விடுவாய் விடுவாய் வினையாவையுமே
மனமே முதலில் கெடுவது. எண்ணம் கெட்டபின் வண்ணம் கெடுகிறது. பிறகு தீய செயல்களைச் செய்யக் கூடாதென்ற திண்ணம் கெடுகிறது. வள்ளுவர் என்ன சொல்கிறார்?
ஈன்றாள் பசிகாண்பாள் எனினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை
பெற்ற தாயே பட்டினி கிடந்தாலும், அறிவில் சிறந்தவர்களால் தடுக்கப்பட்ட விலக்கப்பட்ட செயல்களைச் செய்யக்கூடாது. அப்படிப்பட்ட குற்றங்களைச் செய்யத் தூண்டுவது மனம். அதுதான் முதலில் திருந்த வேண்டும். நோயுண்டவர்களுக்கு பல உபாதைகள் இருக்கும். ஒவ்வொரு உபாதைக்கும் மருந்து கொடுப்பது முழுமையான பலனளிக்காது. நோயின் மூலகாரணத்திற்கு மருந்தளிப்பதே சாலச் சிறந்தது. ஆகையால்தான் தானும் கெட்டு தன்னையும் கெடுக்கும் மனத்தை அழைத்து உபதேசிக்கிறார் அருணகிரி. முருகனிடம் உபதேசம் கேட்டபிறகு அருணகிரியின் மனத்தில் அழுக்கிருந்திருக்குமா? இருந்திருக்காது. அவர் நமக்காகச் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். வயிற்றிலுள்ள குழந்தைக்குத் தாய் உணவு உண்பது போல. அருணகிரிக்குத் தாயுள்ளம்.
மனத்திற்குச் சொல்கிறார். கெடும் மனமே, கதி கேள். உய்வுற்று வாழ்வதற்கான கதியைச் சொல்கிறேன் கேள். முதலில் கரவாது இடுவாய். இதைதான் ஔவை "அறம் செய விரும்பு" என்கிறார். வறியர்கள் வந்து கேட்டால் ஆனதைச் செய் என்கிறார். உலகிற்கு வருகையிலும் வெறுங்கை. போகையிலும் வெறுங்கை. ஆகையால் உயிரோடு இருக்கையில் கொடுங்கையாக இராமல் கொடுக்கும் கையாக இருக்க வேண்டும். பாத்திரம் அறிந்துதான் பிச்சை போட வேண்டும். ஆகையால்தான் வள்ளுவரும் "வரியார்க்கு ஒன்று ஈவதே ஈகை" என்கிறார்.
அப்படி ஏழைகளுக்கு ஈகையில் தோன்றும் செருக்கை அழிக்க வேண்டும். எப்படி? கரவாது இடுவாய் வடிவேல் இறைதாள் நினைவாய். கொடுக்கும் பொழுது கந்தனைத் தொழுது கொடுக்க வேண்டும். நாமா கொடுக்கிறோம்? எல்லாம் அவனருள். ஆகையால் நமது கையால் கொடுத்தாலும் முருகன் திருவடியால் கொடுத்ததாக நினைக்க வேண்டும். இங்கே வடிவேல் இறைதாள் நினைவால் என்கிறார். அந்த கந்தனுடைய திருவடிகளைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் அதற்கே காலமும் நேரமும் பத்தாது.
நெடுவேதனை தூள்படவே சுடுவாய். உலகில் உயிர்களுக்கான உண்மையாதென்றால் பிறப்பும் இறப்பும். இரண்டும் உயிர்களால் தீர்மானிக்கப் படுகிறவை அல்ல. இந்த இரண்டும் இறைவனின் தீர்மானங்கள். இப்படிப்பட்ட பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் நாமாக தீர்மானிப்பதாக நினைத்துக்கொண்டு எடுக்கும் சில பல முடிவுகளால் உண்டாகும் வேதனைகளைச் சுடுவேண்டும். சுட்டால்தான் திருநீறு. வேதனையைச் சுட்டால் நிம்மதி என்ற நீறு கிடைக்கும். விடுவாய் வினையாவையுமே. வினைகள் இரண்டு. நல்வினை மற்றும் தீவினை. நன்மை பயப்பது நல்வினை. தீமை பயப்பது தீவினை. நல்வினைகள் இறைவனின் கருணை. அதில் விட ஒன்றுமில்லை.
ஆனால் தீவினைகள்? இன்னா செய்யாமை என்று வள்ளுவர் ஒரு அதிகாரமே எழுதியிருக்கிறார். இன்னா செய்வதால் அடுத்தவர்க்கு மட்டுமே தீமை என்றில்லை. அது செய்கிறவர் மேலேயே திரும்பும். எப்படி தெரியுமா? "கடையடைத்து வைத்துப் புடைத்தக்கால் நாயும் உடையானைக் கவ்வி விடும்" என்று பழமொழி நானூறு சொல்வதைப் போல. அடைத்து வைத்து அடித்தால், சொந்த நாயும் கூட ஒரு கட்டத்தில் கடித்துக் குதறிவிடுமாம். ஆக வினை விதைத்தவன் வினையறுப்பான். அந்த வினைகளை விட்டொழிக்க வேண்டும். அதன் தீவிரத்தை உணர்ந்தே "விடுவாய் விடுவாய்" என்று இரண்டு முறை கூறுகிறார் அருணகிரி.
அன்புடன்,
கோ.இராகவன்
Monday, March 13, 2006
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
"சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்"
கந்த சஷ்டி விரதம் இருந்தால் அக பையினுல் பக்தி வரும்
நம்மவர்கள் தமிழோடு விளையாடியவர்கள்
ராகவன்.. கொஞ்சம் http://payananggal.blogspot.com/2006/03/2_14.html இதைப் பாருங்க.. ( உங்களொட மெயில் ஐடி இல்லாததால இங்க போஸ்டிங் ) வந்து ஹெல்ப் பண்ணுங்க..
அன்புடன்
ஜீவா
பெற்ற தாயே பட்டினி கிடந்தாலும், அறிவில் சிறந்தவர்களால் தடுக்கப்பட்ட விலக்கப்பட்ட செயல்களைச் செய்யக்கூடாது. அப்படிப்பட்ட குற்றங்களைச் செய்யத் தூண்டுவது மனம். அதுதான் முதலில் திருந்த வேண்டும். //
அருமை ராகவன்!
//. உலகிற்கு வருகையிலும் வெறுங்கை. போகையிலும் வெறுங்கை. ஆகையால் உயிரோடு இருக்கையில் கொடுங்கையாக இராமல் கொடுக்கும் கையாக இருக்க வேண்டும்.//
என்னத்த சொல்றது.. வழக்கம் போலவே.. :))
அருமையான ஆன்மீகப் பதிவு.
//**வருகையிலும் வெறுங்கை. போகையிலும் வெறுங்கை. ஆகையால் உயிரோடு இருக்கையில் கொடுங்கையாக இராமல் கொடுக்கும் கையாக இருக்க வேண்டும்.**// அருமை ராகவன். எதுகை-மோனையில் விளையாடுகிறீர்.
//** ஆகையால் நமது கையால் கொடுத்தாலும் முருகன் திருவடியால் கொடுத்ததாக நினைக்க வேண்டும். **// உண்மை தான் ராகவன்! நீங்கள் சொல்ல வந்ததை கருத்தில் எடுத்துக் கொண்டேன்.
//** அடைத்து வைத்து அடித்தால், சொந்த நாயும் கூட ஒரு கட்டத்தில் கடித்துக் குதறிவிடுமாம். **// நல்ல பழமொழி. இப்படி எல்லாம் நல்ல தமிழில் பழமொழி படைத்திருக்கிறார்களா..இன்று தான் கேள்வி படுகிறேன்.
உங்கள் விளக்கம் நன்றி. அடுத்த செவ்வாய் கிழமை சொற்பொழிவுக்காக காத்திருக்கிறேன்.
அன்புடன்,
சிவா
// "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்"
கந்த சஷ்டி விரதம் இருந்தால் அக பையினுல் பக்தி வரும்
நம்மவர்கள் தமிழோடு விளையாடியவர்கள் //
உண்மைதான் என்னார். தமிழை வைத்துக் கொண்டு இறையருளால் முன்னோர்கள் செய்த விளையாட்டுகள் எத்தனை எத்தனை..அடடா!
இங்கே கொஞ்சம் பாருங்க!
http://www.harappa.com/script/maha12.html
அன்புள்ள ராகவன்
சிந்து சமவெளி நாகரீகத்தில் முருகன் இருந்ததாக இங்கே சொல்கிறார்கள்
அன்புடன் சாம்
ராகவன்,
அழகான கதை. கதைக்குள் கொஞ்சம் வந்தவுடனேயே எதிர்பார்ப்பு வந்துவிடுகிறது.
முடிவு அருமை, திடீரென வந்ந்ஹது. இரண்டுமுரை படித்து புரிந்து கொண்டேன். கல்லூரியில் பார்வையில்லாத சில நன்பர்களுடன் பழகிய ஞாபகம் வந்தது.
நானும் பார்வையில்லாதவர்களின் காதலைப் பார்த்து ஒருவன் திருந்தியது போல ஒரு கதை பண்ணினேன், கல்லூரியில்.
தொடருங்கள் உங்கள் கதைகளை.,
// ராகவன்.. கொஞ்சம் http://payananggal.blogspot.com/2006/03/2_14.html இதைப் பாருங்க.. ( உங்களொட மெயில் ஐடி இல்லாததால இங்க போஸ்டிங் ) வந்து ஹெல்ப் பண்ணுங்க..
அன்புடன்
ஜீவா //
ஜீவா, வெண்பா என்றால் உன் பா என் பா என்று ஓடிவருவார் இல்லை. ஆசிரியப்பா என்றால் ஆ சிரியப்பா என்பார். கலிப்பாவைக் களிப்பாவாகக் காண்பார் இல்லார். வஞ்சிப்பாவினை வஞ்சிப்பார். இருந்தும் நீங்கள் வெண்பாவைத் தன்பாவாகக் கருதித் தொடங்கியிருக்கிறீர்கள். இது வெற்றி பெற எனது வாழ்த்துகள்.
// அருமை ராகவன்! //
நன்றி ஜோசப் சார்.
// என்னத்த சொல்றது.. வழக்கம் போலவே.. :)) //
வழக்கம் போலவே சிரிப்பு வருதா ராமநாதன். ஹா ஹா...நானும் சிரிக்கிறேன்.
// அருமையான ஆன்மீகப் பதிவு. //
நன்றி மூர்த்தி அண்ணா.
// அருமை ராகவன். எதுகை-மோனையில் விளையாடுகிறீர். //
நன்றி சிவா. நீங்கள் குறிப்பிட்ட வரிகளை எல்லாரும் ரசித்திருக்கிறார்கள். அப்படி அமைந்தமைக்கு மகிழ்ச்சிதான்.
////** ஆகையால் நமது கையால் கொடுத்தாலும் முருகன் திருவடியால் கொடுத்ததாக நினைக்க வேண்டும். **// உண்மை தான் ராகவன்! நீங்கள் சொல்ல வந்ததை கருத்தில் எடுத்துக் கொண்டேன். //
நான் சொல்லவில்லை சிவா. அருணகிரி சொல்லியது. அதுவும் கூட முருகச் சொல்லச் சொல்லி. நிச்சயமாக நல்ல பலனையே கொடுக்கும்.
////** அடைத்து வைத்து அடித்தால், சொந்த நாயும் கூட ஒரு கட்டத்தில் கடித்துக் குதறிவிடுமாம். **// நல்ல பழமொழி. இப்படி எல்லாம் நல்ல தமிழில் பழமொழி படைத்திருக்கிறார்களா..இன்று தான் கேள்வி படுகிறேன். //
என்னங்க இப்படிச் சொல்லீட்டீங்க. பழமொழி நானூறுன்னே ஒரு நூல் இருக்கு. நானூறு பழமொழிகளை வைத்து எழுதிய நூல். ஒவ்வொன்றும் நான்கடி வெண்பா. நான் மேற்கோள் காட்டிய "கடையடைத்துப் புடைத்தக்கால்" பழமொழியும் அதிலிருந்து எடுத்துச் சொன்னதே!
உங்கள் விளக்கம் நன்றி. அடுத்த செவ்வாய் கிழமை சொற்பொழிவுக்காக காத்திருக்கிறேன்.
// தொடருங்கள் உங்கள் கதைகளை., //
நன்றி சிறில். இது சுபாவிற்கான பின்னூட்டம் என நினைக்கிறேன். அப்படியே அங்கே இட்டுவிட்டேன். :-)
//கொடுக்கும் பொழுது கந்தனைத் தொழுது கொடுக்க வேண்டும். //
நாம் கொடுக்கும் (சில) தருணங்களில் நான் என்ற ஆணவம்தான் தலைக்கேறி நிற்கிறது. ஆனால் நமக்கு ஒரு துன்பம் வந்தால் மட்டும் மனம் 'முருகா, என்னை கை விட்டு விட்டாயே, எனக்கு ஒன்றும் தர மாட்டேன் என்கிறாயே' என அரற்றுகிறது. அதே போல் ஒருவர் உதவி செய்தால் செய்தவர் ரூபத்தில் கடவுளே வந்து தந்ததாக சொல்கிறோம்.
நாம் கொடுக்கும்போது, கொடுப்பது அவன், அதற்கு நாமொரு கருவி மட்டுமே என்று நினைக்க தோன்றுவது இல்லை. இந்த அறிவு வர என்ன தவம் செய்ய வேண்டுமோ.
இந்தப் பாடலையும் விளக்கத்தையும் படிக்கிறப்ப அன்னை கோதையின் வரிகள் தான் நினைவிற்கு வருகிறது...
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி...
வித்தை பயிலும் மாணவனுக்குக் கொடுக்கும் ஐயமும், முற்றும் துறந்தவர்களுக்குக் கொடுக்கும் பிச்சையும் முடிந்த வரை எடுத்துக் கொள்ளுங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கை காட்டி....
தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி
மனத்தினால் சிந்திக்க
போய பிழையும்
புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும்....
இறைவனைத் தூய மலர்கள் தூவித் தொழுது, வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க, இதுவரை செய்த வினைகளின் பயன்களும், இனிமேல் செய்யப் போகும் வினைகளின் பயன்களும் தீயினில் பட்டு நீறாகும்....
இராகவன், வழக்கம் போல தமிழ் விளையாடுது. எனக்கும் வழக்கம் போல தலைப்புக்கும் சொன்ன பொருளுக்கும் உள்ள தொடர்பு புரியலை. :-)
ராகவன்,
//உலகிற்கு வருகையிலும் வெறுங்கை. போகையிலும் வெறுங்கை. ஆகையால் உயிரோடு இருக்கையில் கொடுங்கையாக இராமல் கொடுக்கும் கையாக இருக்க வேண்டும் //
மிக அழகாகச் சொன்னீர்கள்
//மனமே முதலில் கெடுவது. எண்ணம் கெட்டபின் வண்ணம் கெடுகிறது. பிறகு தீய செயல்களைச் செய்யக் கூடாதென்ற திண்ணம் கெடுகிறது. //
உண்மை. உண்மை. அதனால்தான் மனதிற்கு அறிவுறுத்துகிறார். உன்னுடைய வேதனைகளை, தீவினைகளை, ஆணவத்தை ஞானமென்னும் சுடரால் சுட்டுவிடு என்கிறார்.
// விடுவாய் விடுவாய் வினையாவையுமே //
இதில் விடுவாய் விடுவாய் என்று இரண்டு முறை சொல்வதில் ஒரு அர்த்தமுள்ளது. நல்வினை, தீவினை இரண்டையுமே விடுவாய் என்றும் பொருள் கொள்ளலாம். தீவினை விடுவது சரி, நல்வினையை ஏன் விடவேண்டும்?
இங்கு வினை என்பது வினைப்பயனைக் குறிக்கும். நாம் எத்தனை எத்தனையோ நல்வினைகள் புரிந்தாலும் , அந்த வினைகளின் பயன் நம் ஆன்மாவில் மிச்சமிருப்பதால் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்துகொண்டெயிருப்போம் ( நல்வினைகளின் பயனாய் நல்ல பிறவியே கிட்டும்). ஆனால் அருணகிரியார் வேண்டியது முக்தி அல்லவா? அவருக்குக் கிட்டியதும் அனுபூதியே அல்லவா? நல்வினைகளின் பயனையும் துறக்க வேண்டும் என்பதாலேயே விடுவாய் விடுவாய் என்று இருமுறை சொல்கிறார். வினையை விடுவாய் என்பதன் பொருள் ஒன்றும் செய்யாமலிருப்பதல்ல. வினையின் பயனை அவனிடம் விடுவது , செய்த நல்வினைக்கு சொந்தம்(ownership to action) கொண்டாடாமல் இருப்பது.
" இரு வினை பிறவிக் கடல் மூழ்கி
இடர்கள் பட்டலையப் புகுதாதே
திருவருட் கருணைப் ப்ரபையாலே
திர மெனக் கதியைப் பெறுவேனோ ? "
நல்வினை, தீவினை என்னும் இருவினைகளின் காரணமாக ஏற்படும் பிறவிக்கடலில் மூழ்கி நான் அல்லலுற்று அலையாமல் உன் திருவருளாகிய ஒளியால் திடமாக நற்கதி(மோட்சம்) பெறுவேனோ ?
என்று திருப்புகழில் வேண்டுகிறார். அவனது திருவருட் கருணையால் அநுபூதி கிட்டியபின் இருவினைகளையும் விடுவாய், விடுவாய் , நீயும் நற்கதி பெறுவாய் என்று நமக்கு சொல்கிறார் என்றும் பொருள் கொள்ளலாம்.
"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்"
// நாம் கொடுக்கும் (சில) தருணங்களில் நான் என்ற ஆணவம்தான் தலைக்கேறி நிற்கிறது. ஆனால் நமக்கு ஒரு துன்பம் வந்தால் மட்டும் மனம் 'முருகா, என்னை கை விட்டு விட்டாயே, எனக்கு ஒன்றும் தர மாட்டேன் என்கிறாயே' என அரற்றுகிறது. அதே போல் ஒருவர் உதவி செய்தால் செய்தவர் ரூபத்தில் கடவுளே வந்து தந்ததாக சொல்கிறோம். //
உண்மை. உண்மை. அவனன்றி ஓரணுவும் அசையாத பொழுது....இதுதானே உண்மை.
// நாம் கொடுக்கும்போது, கொடுப்பது அவன், அதற்கு நாமொரு கருவி மட்டுமே என்று நினைக்க தோன்றுவது இல்லை. இந்த அறிவு வர என்ன தவம் செய்ய வேண்டுமோ. //
செய்ய வேண்டிய தவமோ அருந்தமிழ் நூல்களைப் படிப்பதே. பலன் உறுதியாக உண்டு.
// இந்தப் பாடலையும் விளக்கத்தையும் படிக்கிறப்ப அன்னை கோதையின் வரிகள் தான் நினைவிற்கு வருகிறது... //
வரவேண்டுமே........பெரியவர்கள் எப்பொழுதும் பொதுவான நல்லவைகளையே சொல்லியிருப்பார்கள்.
// தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி
மனத்தினால் சிந்திக்க
போய பிழையும்
புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும்....
இறைவனைத் தூய மலர்கள் தூவித் தொழுது, வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க, இதுவரை செய்த வினைகளின் பயன்களும், இனிமேல் செய்யப் போகும் வினைகளின் பயன்களும் தீயினில் பட்டு நீறாகும்.... //
உறுதியாக. உள்ளம் என்னும் கிணற்றிலிருந்து இறைவன் பெயர்கள் என்னும் தண்ணீரை அன்பு என்று வாளி கொண்டு இறைத்து வாய்மொழியிசையாக ஊற்றினால்....நற்பலன் என்ற பயிர் விளையும்.
// இராகவன், வழக்கம் போல தமிழ் விளையாடுது. எனக்கும் வழக்கம் போல தலைப்புக்கும் சொன்ன பொருளுக்கும் உள்ள தொடர்பு புரியலை. :-) //
தலைப்பு தொடங்கத்தான். தொடங்கி....பதிப்புக்குள்ள அடங்கிய பின்னேயும் தலைப்பைப் பிடித்துத் தொங்கலாமா? :-)
// இதில் விடுவாய் விடுவாய் என்று இரண்டு முறை சொல்வதில் ஒரு அர்த்தமுள்ளது. நல்வினை, தீவினை இரண்டையுமே விடுவாய் என்றும் பொருள் கொள்ளலாம். தீவினை விடுவது சரி, நல்வினையை ஏன் விடவேண்டும்?
இங்கு வினை என்பது வினைப்பயனைக் குறிக்கும். நாம் எத்தனை எத்தனையோ நல்வினைகள் புரிந்தாலும் , அந்த வினைகளின் பயன் நம் ஆன்மாவில் மிச்சமிருப்பதால் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்துகொண்டெயிருப்போம் ( நல்வினைகளின் பயனாய் நல்ல பிறவியே கிட்டும்). ஆனால் அருணகிரியார் வேண்டியது முக்தி அல்லவா? அவருக்குக் கிட்டியதும் அனுபூதியே அல்லவா? நல்வினைகளின் பயனையும் துறக்க வேண்டும் என்பதாலேயே விடுவாய் விடுவாய் என்று இருமுறை சொல்கிறார். வினையை விடுவாய் என்பதன் பொருள் ஒன்றும் செய்யாமலிருப்பதல்ல. வினையின் பயனை அவனிடம் விடுவது , செய்த நல்வினைக்கு சொந்தம்(ownership to action) கொண்டாடாமல் இருப்பது. //
மிகவும் அருமையான விளக்கம் ஜெயஸ்ரீ. இதுதான் மிகப் பொருத்தமாக இருக்கிறது.
// நல்வினை, தீவினை என்னும் இருவினைகளின் காரணமாக ஏற்படும் பிறவிக்கடலில் மூழ்கி நான் அல்லலுற்று அலையாமல் உன் திருவருளாகிய ஒளியால் திடமாக நற்கதி(மோட்சம்) பெறுவேனோ ?
என்று திருப்புகழில் வேண்டுகிறார். அவனது திருவருட் கருணையால் அநுபூதி கிட்டியபின் இருவினைகளையும் விடுவாய், விடுவாய் , நீயும் நற்கதி பெறுவாய் என்று நமக்கு சொல்கிறார் என்றும் பொருள் கொள்ளலாம்.
"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்" //
உண்மைதான். இருவினையும் மும்மலமும் அற என்று பாடியதும் நீங்கள் சொல்லச் சொல்ல நினைவிற்கு வருகிறது.
ராகவன்,
நன்றி.
கீதை, அனுபூதி போன்றவற்றை ஒவ்வொருமுறை படிக்கும்போதும் ஒவ்வொரு விதமாக அர்த்தம் தெரிவது போலத் தோன்றும்.
இப்படியும் ஒரு பொருள் கொள்ளும் சாத்தியம் உண்டு என்பதையே நான் சொன்னேன்.
நெடுவேதனை தூள்படவே சுடுவாய். உலகில் உயிர்களுக்கான உண்மையாதென்றால் பிறப்பும் இறப்பும். இரண்டும் உயிர்களால் தீர்மானிக்கப் படுகிறவை அல்ல. இந்த இரண்டும் இறைவனின் தீர்மானங்கள். இப்படிப்பட்ட பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் நாமாக தீர்மானிப்பதாக நினைத்துக்கொண்டு எடுக்கும் சில பல முடிவுகளால் உண்டாகும் வேதனைகளைச் சுடுவேண்டும். சுட்டால்தான் திருநீறு. வேதனையைச் சுட்டால் நிம்மதி என்ற நீறு கிடைக்கும். விடுவாய் வினையாவையுமே. வினைகள் இரண்டு. நல்வினை மற்றும் தீவினை. நன்மை பயப்பது நல்வினை. தீமை பயப்பது தீவினை. நல்வினைகள் இறைவனின் கருணை. அதில் விட ஒன்றுமில்லை
நெடு வேதனை விடுவாய் விடுவாய். இங்கு நெடு வேதனை என்பதை இறப்பும் பிறப்பும் என்று கொள்ளலாம்.இரண்டுமே வினைப்பயனால் வருவதுதான் என்வேதான் விடுவாய் விடுவாய் என்று இரண்டுமுறை கூறினார்.இந்த இரண்டும் ரத்தத்தில் HDள் ள்Dள் மாதிரி தி ரா ச
நல்ல விளக்கம் தி.ரா.ச. அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
Post a Comment