தமிழ் மொழி இல்லறத்தைச் சிறப்பித்து வழங்குகிறது. அதே நேரத்தில் "இல்லறமல்லது நல்லறமன்று" என்று சொல்லவும் தவறவில்லை. அதே நேரத்தில் அனைவரும் இல்லறத்தை ஏற்கும்படி வற்புறுத்தவும் இல்லை. "தவமும் அவமுடையார்க்கு ஆகும்" என்று வள்ளுவம் ஒப்புக்கொள்கிறது. ஆனால் பரத்தையர் ஒழுக்கத்தை எந்தத் தமிழ் நூலும் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. பரத்தையிடம் போன கோவலன் கேவலன் ஆனதைச் சிலப்பதிகாரம் சொல்கிறது. பொருந்தாக் காமம் இலக்கியங்களில் ஓரளவு ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் கூட கட்டிய மனைவி இருக்க பரத்தையரை நாடுவதைத் தமிழ் இலக்கியங்கள் ஏற்றுக் கொள்ளவதில்லை.. முருகப் பெருமானால் ஆட்கொளப் படும் முன்னால் அருணகிரி ஆசைகளின் கிரியாக இருந்தார். நாளும் ஒரு நாயகி என்று வாழ்ந்தார். பட்டுத் தெளிந்த பின் முன் செய்த குற்றங்களைப் பாடுகிறார். அவற்றிலிருந்தெல்லாம் காக்க முருகனை வேண்டுகிறார்.
மட்டூர்குழல் மங்கையர் மையல் வலைப்
பட்டூசல் படும் பரிசென்று ஒழிவேன்
தட்டூற வேல் சயிலத் தெரியும்
நிட்டூர நிராகுல நிர்ப்பயனே
மட்டு என்றால் தேன். மட்டூர் குழல் என்றால் தேனூறும் கூந்தல். கூந்தலிலே தேன் ஊறுமா? மலரில் தேனூறும். "மட்டவிழ் மலர் கொடு பணிவேனே" என்று திருப்புகழ் பிள்ளையாரைப் பணிகின்றது. அத்தகைய தேனூறும் மலர்களை அணிந்த மங்கையர் யார்? எல்லா மங்கையருமா? தெற்கில் மலர்களைச் சூடிக் கொள்வது பெண்களிடையில் பரவலான வழக்கமாயிற்றே! இங்கே யாரைச் சொல்கிறார்? அதைச் சொல்லத்தான் "மையல் வலை" என்று கூறுகிறார். குடும்பப் பெண்கள் மையல் வலை விரிக்க வேண்டியதில்லை. ஏனென்றால் கடை விரிக்காமலே வேண்டியது கிடைக்கும். மையல் வலை விரிக்கும் கண்களோடு தேனூறும் மலர்களைச் சூடிய மங்கையர் யாரென்று இப்பொழுது தெரிகிறதா?
விலைமாதர்களைக் குறை கூறுவதில் எந்த பயனும் இல்லை. விரும்பிக் கொள்ளப்படுவது கடையில் இருக்கிறது. ஆகையால் பரத்தையரை குற்றம் கூறவில்லை அருணகிரி. அந்த பரத்தையரின் மீது தனக்கு உண்டாகும் மயக்கத்தைத் தீர்க்கும் படி இறைவனடி பணிகிறார். பரத்தையர் இருப்பதால் போகிறோம் என்று சொல்லும் கருத்தில் அருணகிரிக்கு உடன்பாடு இல்லை. தான் செய்த தவறுக்குத் தானே பொறுப்பு. அதை மற்றவர் மேல் ஏற்றல் தகாது என்பது அப்பெருமகனார் கருத்து. இந்தக் கருத்து எல்லோரும் நினைவிற் கொள்ள வேண்டியது.
ஊசல் ஓரிடத்தில் நிலையாக இராது. அங்கும் இங்கும் ஆடிக்கொண்டே இருக்கும். பரத்தையர் மையல் வலையில் வீழ்ந்தாலும் அதே நிலைதான். ஊசலில் ஆற்றல் இருக்கும் வரை ஆடும். பிறகு நின்று விடும். அதுபோல செல்வம் இருக்கும் வரை பரத்தையர் வாசல் வரவேற்கும். பிறகு மூடிவிடும். பொய்யாமொழிப் புலவருக்கும் அந்த நிலை ஏற்பட்டது. பரத்தையர் ஆசையில் உண்டாகும் நிலையற்ற வாழ்க்கையெனும் மயக்கத்திலிருந்து காப்பாற்று கந்தா!
தட்டு என்றால் தடை அல்லது தடங்கல். தட்டுத் தடுமாறி என்ற பதத்தை நினைவிற் கொள்க. சூரனுடைய வீரமகேந்திரபுரியை நோக்கி வீரநடை போட்ட தேவர் படைகளைத் தடுக்கும் வகையில் தடையாக நின்றது கிரவுஞ்ச மலை. அது சூரனின் தம்பி தாரகாசுரனின் மாய மலை. தடங்கலாக நின்ற மலை (சைலம்) ஊடுருவ வேலை எறிந்தார் முருகப் பெருமான். கிரவுஞ்ச மலையும் தாரகாசுரனும் வீழ்ந்தனர். மாயை விலக வேலெறிந்தார் முருகன். வேல் ஞானத்தின் வடிவம். ஞானம் வந்தால் மாயை போகும். அதுதான் உண்மை. கந்தபுராணம் கதையல்ல. வாழ்க்கைத் தத்துவம். ஆகையால் அதைப் படித்துப் புகழ தத்துவ அறிவு தேவைப்படுகிறது.
நிட்டூரம் என்றால் வடமொழியில் துயர் செய்கிறவர். ஆகுலம் என்றால் துன்பம். நிர் என்பது எதிர்ப்பதச் சொல். இல்லாதது என்ற பொருளைக் கொடுக்கும். நிராகுலம் என்றால் துன்பமில்லாதது. பயம் என்றால் அச்சம். அச்சமில்லாதது நிர்ப்பயம். நிட்டூர நிராகுல நிர்ப்பயமே என்றால் "துன்பம் தருகிறவைகளைப் பற்றியும் துன்பமில்லாதவைகளைப் பற்றியும் எந்த அச்சமும் இல்லை". முருகனை வழிபடுகிறவர்களுக்கு எந்த பயமும் தேவையில்லை. முருகனுடைய திருவடி எல்லா அச்சங்களையும் நீக்கும். அஞ்சுமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும். அஞ்சேல் என வேல் தோன்றும்.
பக்தியுடன்,
கோ.இராகவன்
Monday, March 27, 2006
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
அன்பு இராகவன்,
//வேல் ஞானத்தின் வடிவம். ஞானம் வந்தால் மாயை போகும். அதுதான் உண்மை. கந்தபுராணம் கதையல்ல. வாழ்க்கைத் தத்துவம். ஆகையால் அதைப் படித்துப் புகழ தத்துவ அறிவு தேவைப்படுகிறது.//
ஆமாம் ஐயா! ஆமாம். அந்தத் உண்மையை(தத்துவத்தை)ப் புரிந்துகொள்ளுங்கள்; ஞானத்தின்பால் கொஞ்சம் நோக்கம் வைத்து நோக்குங்கள்; என்றுதான் இத்தனை நாட்கள் கூறிவருகிறேன்.
எல்லோரின் சிந்தனை மாறுமா?
ராகவன்,
நீங்க சொல்றது ரொம்பச் சரி. இல்லறமல்லது நல்லறமன்று. ஆமாம் 'தையல்' ரெடியா?
செவ்வாய் கிழமைக்கு காத்திருந்து படித்து விட்டேன். எளிமையான விளக்கம் தானய்யா உமது சிறப்பு. நன்றி.
"இல்லறமல்லது நல்லறமன்று" "தவமும் அவமுடையார்க்கு ஆகும்" இதில் ராகவனுக்கு எதுவோ :-)). சரி சரி! சீக்கிரம் துளசி அக்கா கேட்கிறது மாதிரி 'தையல்' பற்றிய செய்தி சொல்லுங்கள்.
//* கோவலன் கேவலன் ஆனதைச் சிலப்பதிகாரம் சொல்கிறது. அருணகிரி ஆசைகளின் கிரியாக இருந்தார் **// அழகாக சொல்லி இருக்கீங்க. ஆமாம்! அருணகிரி இன்னொரு கோவலனாகவா இருந்தார். எனக்கு தெரியாதே.
'மட்டூர் குழல்' விளக்கம் அருமை.
//** மாயை விலக வேலெறிந்தார் முருகன். வேல் ஞானத்தின் வடிவம். ஞானம் வந்தால் மாயை போகும். அதுதான் உண்மை. கந்தபுராணம் கதையல்ல. வாழ்க்கைத் தத்துவம். **// இறைவனை போற்றிப் பாடும் பாடலில் கூட வாழ்க்கை நெறிகளை பொதிந்து வைத்திருக்கிறார்கள் பார்த்தீர்களா நம் முன்னோர்கள். அருமை ராகவன்.
// ஆமாம் ஐயா! ஆமாம். அந்தத் உண்மையை(தத்துவத்தை)ப் புரிந்துகொள்ளுங்கள்; ஞானத்தின்பால் கொஞ்சம் நோக்கம் வைத்து நோக்குங்கள்; என்றுதான் இத்தனை நாட்கள் கூறிவருகிறேன்.
எல்லோரின் சிந்தனை மாறுமா? //
மாற வேண்டும் ஐயா. நிச்சயமாக மாற வேண்டும். தமிழர்கள் கொஞ்சமாவது இந்த நூல்களை முறையாகப் படித்துப் பொருளை உணர்ந்தாலே போதும். நன்மைகள் பல விளையும். நடக்க வேண்டும் என்பது என் கனவு. நடப்பது என்பது இறைவன் விருப்பம்.
நீங்கள் இந்தத் திரியில் வந்து கருத்துச் சொல்லி ஊக்கப் படுத்துவது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.
// ராகவன்,
நீங்க சொல்றது ரொம்பச் சரி. இல்லறமல்லது நல்லறமன்று. ஆமாம் 'தையல்' ரெடியா? //
ம்ம்ம்....இது பத்தியும் ஒரு பதிவு வரும். இன்னும் ரெண்டு மூனு மாசத்துல....அது வரைக்கும் கொஞ்சம் பொறுமை. கொஞ்சமே கொஞ்சம்.
// செவ்வாய் கிழமைக்கு காத்திருந்து படித்து விட்டேன். எளிமையான விளக்கம் தானய்யா உமது சிறப்பு. நன்றி.//
நன்றி சிவா. எளிமையான விளக்கம்தான் என் சிறப்பு என்றால் அதுதான் முருகனின் விருப்பு. :-)
// "இல்லறமல்லது நல்லறமன்று" "தவமும் அவமுடையார்க்கு ஆகும்" இதில் ராகவனுக்கு எதுவோ :-)). சரி சரி! சீக்கிரம் துளசி அக்கா கேட்கிறது மாதிரி 'தையல்' பற்றிய செய்தி சொல்லுங்கள். //
சீக்கிரமா......ம்ம்ம்ம்...முயற்சி பண்றேன். இப்போதைக்குத் துளசி டீச்சருக்குப் போட்ட பதில்தான் உங்களுக்கும். :-)
////* கோவலன் கேவலன் ஆனதைச் சிலப்பதிகாரம் சொல்கிறது. அருணகிரி ஆசைகளின் கிரியாக இருந்தார் **// அழகாக சொல்லி இருக்கீங்க. ஆமாம்! அருணகிரி இன்னொரு கோவலனாகவா இருந்தார். எனக்கு தெரியாதே. //
ஆமாம் சிவா. சிலருக்கு ரெண்டு இட்டிலி போதும். சிலருக்கு நாலு வேண்டும். அருணகிரிக்கோ நாற்பது வேண்டியிருந்தது. காமக்கள்ளை அள்ளி அள்ளி உண்டார். அதற்குப் பலனும் கொண்டார். தொழுநோய். அதுவரை மனைவியைத் திரும்பிக் கூடப் பாராதவர்....பரத்தையர் ஒதுக்க மனைவியை நாடினார். தன்னுடைய நிலையை எண்ணி மனைவி விரக்தியாகச் சிரிக்க...அதைத் தவறாக எண்ணி அவர் தற்கொலை செய்து கொள்ளச் சென்றார். அங்கு கிடைத்தது ஞானம்.
// 'மட்டூர் குழல்' விளக்கம் அருமை. //
நன்றி சிவா.
////** மாயை விலக வேலெறிந்தார் முருகன். வேல் ஞானத்தின் வடிவம். ஞானம் வந்தால் மாயை போகும். அதுதான் உண்மை. கந்தபுராணம் கதையல்ல. வாழ்க்கைத் தத்துவம். **// இறைவனை போற்றிப் பாடும் பாடலில் கூட வாழ்க்கை நெறிகளை பொதிந்து வைத்திருக்கிறார்கள் பார்த்தீர்களா நம் முன்னோர்கள். அருமை ராகவன். //
சிவா...என்னைக் கேட்டால் நம்முடைய பண்பாடும் வழிபாட்டு முறைகளும் மிகவும் வழிமாறிப் போய்க்கொண்டிருக்கின்றன. நல்வழியாயின் நன்று. ஆனால் தவறாகப் போகுமானால்.....அதற்குத்தான் இந்த நூல்களை எனக்குத் தெரிந்த வரைக்குமாவது எடுத்துச் சொல்வது.
//கூடா ஒழுக்கமும் பொருந்தாக் காமமும் இலக்கியங்களில் ஓரளவு ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் கூட //
எங்கே இராகவன் இவை ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கின்றன? அவற்றைச் சொல்லியிருப்பதால் ஏற்றுக் கொண்டார்கள் என்று பொருளா? இவை எல்லா கால கட்டத்திலும் எல்லா சமுதாயத்திலும் இருந்திருக்கின்றன. ஆனால் அவை சான்றோர்களாலும் இலக்கியங்களாலும் ஏற்றுக் கொள்ளப் பட்டதா என்றால் இருக்காது என்று தான் நினைக்கிறேன்.
//மட்டு என்றால் தேன்// இது நாள் வரை இந்தப் பொருள் எனக்குத் தெரியாது. 'மட்டவிழ் மலர் கொடு' என்பதற்கு மொட்டு அவிழ்ந்து கொண்டிருக்கும் மலர் கொண்டு என்று தான் பொருள் கொண்டிருந்தேன். இப்போது தேன் சிந்தும் மலர் கொண்டு என்ற பொருள் பொருந்துவதாகத் தோன்றுகிறது.
//விரும்பிக் கொள்ளப்படுவது கடையில் இருக்கிறது.//
அருமையான கருத்து. இது புலால் சாப்பிடுவதற்கும், தரங்கெட்ட திரைப்படங்களுக்கும் கூட சொல்லலாம். :-) முட்டை, கோழி கதை தான். விரும்பிக் கொள்ளப் படுவது கடையில் இருக்கிறது. கடையில் இருப்பதால் விரும்பிக் கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. :-)
//ஊசலில் ஆற்றல் இருக்கும் வரை ஆடும். பிறகு நின்று விடும். அதுபோல செல்வம் இருக்கும் வரை பரத்தையர் வாசல் வரவேற்கும். பிறகு மூடிவிடும். //
ஆயிரத்தில் ஒரு வார்த்தை. பரத்தையர் போலாம் நண்பர்கள், உறவினருக்கும் இது பொருந்தும்.
//பொய்யாமொழிப் புலவருக்கும் அந்த நிலை ஏற்பட்டது//
பொய்யாமொழிப் புலவர் என்று யாரைச் சொல்கிறீர்கள்? திருவள்ளுவரையா? அருணகிரிநாதரையா? திருவள்ளுவரைத் தானே பொய்யாமொழிப் புலவர் என்று சொல்வது வழக்கம். அவருக்கு எப்போது இந்த நிலை ஏற்பட்டது?
//செவ்வாய் கிழமைக்கு காத்திருந்து படித்து விட்டேன். எளிமையான விளக்கம் தானய்யா உமது சிறப்பு. நன்றி.
//
சிவா. நானும் செவ்வாய் செவ்வாய் பதிவு போட்டால் தொடர்ந்து படிப்பீர்களா? இல்லை நான் எழுதுவது எளிமையாக இல்லையா? :-)
ஜிரா,
முருகனே தானய்யா வந்திருக்கிறான் உன் வடிவில். அவன் பேசுவதாகவே எனக்கு இப்பதிவு தோன்றுகிறது.
அருணகிரியைக் காத்தவன் நம்மையும் காக்க மாட்டானா என்ற ஏக்கமே நம் தேடல். அவன் நிச்சயம் நிர்கதியாய் விடமாட்டான் என்கிற நம்பிக்கை இம்மாதிரி பதிவுகளால் இன்னும் உறுதிதான் அடைகிறது.
//பேற்றைத் தவஞ் சற்றுமில்லாத வென்னைப்ர பஞ்ச மென்னுஞ்
சேற்றைக் கழிய வழிவிட்ட வா.
//
என் மேல் இருப்பது சேற்றைவிட மோசமானதாகப் படுகிறது. ஆனால் அவன் இருக்கிறானே. அந்த தைரியம் தான்.
//ஊசல் ஓரிடத்தில் நிலையாக இராது. அங்கும் இங்கும் ஆடிக்கொண்டே இருக்கும். பரத்தையர் மையல் வலையில் வீழ்ந்தாலும் அதே நிலைதான். ஊசலில் ஆற்றல் இருக்கும் வரை ஆடும். பிறகு நின்று விடும். அதுபோல செல்வம் இருக்கும் வரை பரத்தையர் வாசல் வரவேற்கும். பிறகு மூடிவிடும். //
உண்மைதான். கைய்யில் காசில்லாதவன் கடவுளே ஆனலும் கதவைச்சாத்தடி என்ற பாட்டு நினைவுக்கு வருகிறது. சிற்றின்பத்தையே பேரின்பமாக கருதுபவர்களுக்கு பேரின்பத்தை அடைய எவ்வளவு கஷ்டபடவென்டும் என்பதற்கு அருணகிரியின் வாழ்க்கை ஒரு ஊதாரணம்.தி. ரா.ச
////விரும்பிக் கொள்ளப்படுவது கடையில் இருக்கிறது.//
அருமையான கருத்து. இது புலால் சாப்பிடுவதற்கும், தரங்கெட்ட திரைப்படங்களுக்கும் கூட சொல்லலாம். :-) முட்டை, கோழி கதை தான். விரும்பிக் கொள்ளப் படுவது கடையில் இருக்கிறது. கடையில் இருப்பதால் விரும்பிக் கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. :-) //
இல்லை...அப்படியில்லை குமரன்...என்றைக்கும் விரும்பப் படுவது நிச்சயம் கிடைக்கும். கடைக்குப் போகிறோம். இருக்கின்றவைகள் அத்தனையும் விரும்பப் படுவதில்லை. ஆனால் நீங்களும் பெரும்பான்மையானவரும் விரும்புவது கடையில் கிடைக்கிறது. தான் கொள்ளும் பொருளின் விளைவு கொள்கின்றவனாலேயே....விற்கின்றவன் இருந்தால் இவனுக்கு எங்கே அறிவு போயிற்று என்று மிக எளிதாகக் கேட்டு விடலாம்.
// பொய்யாமொழிப் புலவர் என்று யாரைச் சொல்கிறீர்கள்? திருவள்ளுவரையா? அருணகிரிநாதரையா? திருவள்ளுவரைத் தானே பொய்யாமொழிப் புலவர் என்று சொல்வது வழக்கம். அவருக்கு எப்போது இந்த நிலை ஏற்பட்டது? //
வள்ளுவர் சொல்லியவை பொய்மையின்மைதான். ஆனால் பொய்யாமொழி என்றே ஒரு புலவர் இருந்தார். இவருக்கும் விறுவிறுப்பான வரலாறு உண்டு. பிறிதொரு பொழுதில் அதையும் பார்க்கலாம்.
// ஜிரா,
முருகனே தானய்யா வந்திருக்கிறான் உன் வடிவில். அவன் பேசுவதாகவே எனக்கு இப்பதிவு தோன்றுகிறது. //
பெரிய பேச்சு இராமநாதன். கந்தனோடு என்னைச் சொந்தனாகச் சொல்வதில் உவப்பேயாயினும்....நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. அனைத்தும் அவன் தமிழ் அமிழ்து.
// அருணகிரியைக் காத்தவன் நம்மையும் காக்க மாட்டானா என்ற ஏக்கமே நம் தேடல். அவன் நிச்சயம் நிர்கதியாய் விடமாட்டான் என்கிற நம்பிக்கை இம்மாதிரி பதிவுகளால் இன்னும் உறுதிதான் அடைகிறது. //
இறைவனுடைய கருணை என்றும் நமக்குண்டு. கடை திறந்தே இருக்கிறது. கொள்ள விரும்புகின்றவர்களுக்குக் கருணையும் அன்பும் குறைவின்றிக் கிடைக்கும்.
// உண்மைதான். கைய்யில் காசில்லாதவன் கடவுளே ஆனலும் கதவைச்சாத்தடி என்ற பாட்டு நினைவுக்கு வருகிறது. சிற்றின்பத்தையே பேரின்பமாக கருதுபவர்களுக்கு பேரின்பத்தை அடைய எவ்வளவு கஷ்டபடவென்டும் என்பதற்கு அருணகிரியின் வாழ்க்கை ஒரு ஊதாரணம்.தி. ரா.ச //
சரியாகச் சொன்னீர்கள் தி.ரா.ச என்றும் இறையருள் காக்க நம்பி விரும்பினால்...அந்த அன்பு கிட்டும். நமது வீட்டுக் கதவைத் தட்டும்.
சரியாகச் சொன்னீர்கள் தி.ரா.ச என்றும் இறையருள் காக்க நம்பி விரும்பினால்...அந்த அன்பு கிட்டும். நமது வீட்டுக் கதவைத் தட்டும்
இரகவன்.ஜி அது எப்படி இப்படியா?
கந்தனைக் கருதினால் காரியம் கைகூடுமே
கண் கண்ட கடவுள் கிருபாகரனை
வேண்டி நின்றால் வேண்டியன தனே
வந்தடையுமே திருத்தணிகை மலையான் அருளாளே
நாளை எங்கள் வீட்டில் திருப்புகழ் பஜன் எல்லோர் நலத்துக்காகவும்.
மிக நல்ல வீணை தடவி - மிக இனிமையான இசையை எழுப்பும் வீணையைத் தன் திருக்கரங்களால் தடவிக் கொண்டு
குமரன்
இரவணன் ஒரு மிகச்சிறந்த வகையில் வீணை வாசிப்பதில் வல்லவன். வீணைக்கொடியுடைய வேந்தன்.சிவனேயே வீணாகாணத்தால் மகிழ்வித்தவன்.அப்பேற்ப்பட்ட இராவணனுக்கே வீணை இசையை கற்பித்தவ்ர் சிவபெருமான். அதனால் இங்கு தடவிக்கொண்டு என்று இருப்பதைவிட வாசித்துக்கொண்டு என்ற பொருளில் எடுத்துக்கொள்ளலாமா தி ரா ச
தி.ரா.ச. என்னோட கோளறு பதிகத்துக்கான பின்னூட்டத்தை நீங்க இங்கே போட்டுட்டீங்கன்னு நினைக்கிறேன்.
ஆமாம். நீங்க சொல்றது மிக்க சரி. மிக நல்ல வீணைதடவிங்கறதைப் படிச்சப்ப எனக்கு வீணைக் கொடியுடைய வேந்தனின் நினைவு தான் வந்தது. தடவி என்பதற்கு வாசித்துக் கொண்டு என்று தான் முன்னோர்கள் பொருள் சொல்லியிருக்கிறார்கள்.
//பரத்தையர் இருப்பதால் போகிறோம் என்று சொல்லும் கருத்தில் அருணகிரிக்கு உடன்பாடு இல்லை. தான் செய்த தவறுக்குத் தானே பொறுப்பு. அதை மற்றவர் மேல் ஏற்றல் தகாது என்பது அப்பெருமகனார் கருத்து. இந்தக் கருத்து எல்லோரும் நினைவிற் கொள்ள வேண்டியது.
//
அருணகிரியார் திருப்புகழில் மீண்டும் மீண்டும் முருகனிடம் இறைஞ்சுவது இதைத்தான்.
"அரிவையர்கள் தொடரு மின்பத் துலகுநெறி மிகம ருண்டிட்டு
அசடெனன மனது நொந்திட் ...... டயராமல்
அனுதினமு முவகை மிஞ்சிச் சுகநெறியை விழைவு கொண்டிட்
விழையு மொன்றைத்...... தவிர்வேனோ
பரிதிமதி நிறைய நின்ற தெனவொளிரு முனது துங்கப்
படிவ முக மவைகள் கண்டுற் ...... றகமேவும்
படர்கள் முழுவது மகன்றுட் பரிவினொடு துதி புகன்றெற்
பதயுகள மிசை வணங்கற் ...... கருள்வாயே "
பெண்களைத் தொடர்ந்து செல்லும் சிற்றின்ப நெறியில் மோகம்கொண்டு, அசடன், மூடனெனப் பேரெடுக்காமல்,தினமும் மனத்தால் அதையே விரும்பிச் செல்வதை தவிர்க்கமாட்டேனோ? முருகா !! குலகிரிகள் நடுநடுங்க, சிலுசிலுவென அலைகுலுங்க, வேலெறிந்தவனே ! உன் நிலவும், கதிரவனும் சேர்ந்து நின்றதுபோல் ஒளிவீசும் அறுமுகங்களையும் கண்டு என் உள்ளத்திருள் அகன்று உனை வணங்கி நிற்கும் பேற்றை அருளமாட்டாயா?
'தீதும் நன்றும் பிறர்தர வாரா'- எனவேதான் சிற்றின்ப வழியில் என் மனம் செல்லாது காப்பாய் என்று கேட்கிறார்.
திருப்புகழில் சொல்வது சுய அனுபவம். அநுபூதியில் சொல்வது நமக்கான அறிவுரை எனக் கொள்ளலாம்.
போன பாடலில் "பிமரம் கெட மெய்ப்பொருள் பேசியவா" என்று சொல்லிவிட்டாரே.
//அஞ்சுமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும். அஞ்சேல் என வேல் தோன்றும்// -அழகாகச் சொன்னீர்கள்
சுற்றிநில்லாதே போ பகையே துள்ளி வருகுது வேல் - பாரதி
// அப்பேற்ப்பட்ட இராவணனுக்கே வீணை இசையை கற்பித்தவ்ர் சிவபெருமான். அதனால் இங்கு தடவிக்கொண்டு என்று இருப்பதைவிட வாசித்துக்கொண்டு என்ற பொருளில் எடுத்துக்கொள்ளலாமா தி ரா ச //
தி ரா ச...நிச்சயமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் எனக்குத் தெரிந்த விளக்கம்.
நாமெல்லாம் வீணையை மீட்டிட வேண்டும். அப்பொழுதுதான் இசை பிறக்கும். அது நன்றாக இருக்குமா இல்லையா என்று சொல்ல முடியாது. ஆனால் ஈசன் எம்பெருமான் தடவினாலே இன்னிசை பிறக்கும். இந்த உலகமே இசையில் பிறந்தது. இசையில் அடங்குவது.
சரி. ஈசன் தடவினால்தான் இன்னிசை பிறக்குமா? எண்ணினால் பிறக்காதா? நிச்சயம் பிறக்கும். இறைவன் எண்ணத்தினால்தான் உலகில் அனைத்தும் நடக்கின்றன. ஆனால் நமக்குப் புரிகிறதா? தெரியாமலே போகின்றன. நமக்குத் தெரிய வேண்டியவைகளை இறைவன் நமக்காகச் செய்து காட்டுகிறார். அதுதான் வீணையைத் தடவுவது. அதனால்தான் நம்மில் பலருக்கு வீணை வாசிக்கத் தெரிந்திருக்கிறது. நமக்குத் தெரிந்த அனைத்துமே இறைவனால் கற்பிக்கப் பட்டவை என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
// திருப்புகழில் சொல்வது சுய அனுபவம். அநுபூதியில் சொல்வது நமக்கான அறிவுரை எனக் கொள்ளலாம்.
போன பாடலில் "பிமரம் கெட மெய்ப்பொருள் பேசியவா" என்று சொல்லிவிட்டாரே. //
சரியாகச் சொன்னீர்கள் ஜெயஸ்ரீ. கந்தர் அநுபுதீ என்பது நமக்காகப் பாடியது. அதில் அருணகிரி சொல்லும் குறைகள் எல்லாம் நமது குறைகள். நமக்காகப் பாடியிருக்கிறார் அப்பெருமகனார்.
Post a Comment