Monday, April 03, 2006

11. எருமையும் மயிலும்

அச்சம் போக்கும் பாடல் இது. உள்ளத்தில் அச்சம் தோன்றுகையில் உச்சரிக்க அச்சமும் போய் அச்சத்திற்கான காரணமும் போகும்.

கார்மாமிசை காலன் வரிற் கலபத்
தேர்மாமிசை வந்தெதிரப் படுவாய்
தார்மார்ப வலாரி தலாரி எனும்
சூர்மா மடியத் தொடு வேலவனே


தார் மார்பா! தார் என்றால் மாலை. ஆண்கள் அணியும் மாலைக்குத் தார் என்று பெயர். வட்டம் முழுமை பெற்றிருக்காது. தோளில் போடப்பட்டு இருபுறமும் தொங்கும். "கார்கடம்பத் தார் எம் கடவுள்" என்று இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் முருகனைக் குறிப்பிடுகிறார். குளிர்ந்த கடம்ப மலர்களால் ஆன மாலையை அணிந்த கடவுள் என்று பொருள். தோளின் இருபுறமும் பூக்களால் கட்டித் தொங்கினால் பூந்தார். வாழை மரத்தில் காய்த்துப் பூவோடு தொங்கினால் வாழைத்தார். இன்னமும் தமிழில் பழஞ்சொற்கள் நிறைய பயன்பாட்டில் உள்ளன. ஆனால் அருமை பெருமை தெரியாமலேயே நாம் பயன்படுத்துகிறோம். தார் அணிந்து காட்சி தரும் ஒரே பெண் தெய்வம் ஆண்டாள். கண்ணனுக்கான மாலையை அணிந்து கொண்டதால் ஆண்டாளுக்கும் தாரே சாற்றப்படுகிறது. ஆனால் நாளாவட்டத்தில் எல்லாம் மாலைகள் என்றே அழைக்கப்பட்டன.

வலன் என்ற அசுரனை அழித்தவன் இந்திரன். அதனால் அவன் வலாரி. தலத்தை அழிப்பவன் தலாரி. வலாரி தலாரி என்றால் வலாரியின் தலத்தை அழித்தவன். அதாவது இந்திரனுடைய அமராவதியைப் போரிட்டு அழித்தவன் சூரபதுமன். அந்தச் சூரன் முருகப் பெருமானுடன் போரிட்டான். ஆனால் முருகன் சூரனுடன் போரிட்டான் என்பது தவறு. சூரன் மீது முருகன் கருணை காட்டினார். ஆகையினால் அவனைத் தேடிச் சென்று ஆட்கொண்டார். இதையுணராத சூரன் ஆணவம் கொண்டு முருகனுடன் போரிட்டான். முடிவில் எல்லா போர்க்கருவிகளையும் இழந்து கடலடியில் ஒளிந்தான். கடலை வற்றச் செய்தார் வேலவர். விண்ணுக்கும் மண்ணுக்குமாய் பெரிய மாமரமாய் எழுந்தான் சூரன். வேலானது மரத்தைப் பிளந்தது. சேவலும் மயிலுமாய் சூரன் முருகனடி பணிந்தான். சூர்+மா மடியத் தொடு வேலவனே! புரிகிறதல்லவா! இதைத்தான் இளங்கோவும் "சூர்மா தடித்த சுடரனைய வெள்வேலே" என்று சிலப்பதிகாரத்தில் புகழ்கிறார்.

இப்படியெல்லாம் அருணகிரி எதற்கு அழைக்கிறார் முருகனை? காரணம் நமக்கிருக்கும் அச்சம்தான். இந்த உலகத்தில் ஒவ்வொருக்கும் ஒவ்வொரு அச்சமிருக்கும். எல்லோருக்கும் இருக்கும் பொதுவான அச்சம் இறப்பு. அந்த இறப்பு என்ற பெயரில் உடலையும் உயிரையும் கூறிட்டுப் பிரிப்பவன் கூற்றுவன். அதாவது எமதர்மன். கூற்றுவனுக்கு காலன் என்று பெயரும் உண்டு. கால் என்றால் காற்று என்று முன்னமே சொல்லியிருக்கிறேன். காற்று விரைந்து வருவதைப் போல வேளை வரும்போது விரைந்து வருகிறவன் காலன். அவனுடைய வாகனம் எருமை. அதற்குத் தெரிந்தது பொறுமை. காக்கும் கடவுளர்களுக்கு விரைந்து செல்லும் வாகனங்கள். உயிரெடுக்கும் கடவுளுக்கு மெதுவாகச் செல்லும் வாகனம். இல்லையென்றால் அழிவு நிறையும். அப்படி காலன் வந்து உயிரைக் கொண்டு போக வருகையில் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. உரமேறிய உடலாக இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. அப்படி காலன் கொண்டு போவதைக் காட்டிலும் ஆண்டவன் திருவடியில் வீழ்வது நன்றல்லவா!
"அடியேன் வதனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
" என்கிறார் தேவராய சுவாமிகள்.
"காலன் எனையணுகாமல் உனதிரு
தாளில் வழிபட அருள்வாயே
" என்கிறது திருப்புகழ்.

கலாபம் என்றால் மயிற்றோகை. கலபத் தேர் என்பது உருவகம். மயிலாகிய தேரில் என்று பொருள் கொள்ள வேண்டும். காரெருமை மீதேறி காலன் வரும்பொழுது, கந்தவேளே, மயிலாகிய தேர் மீதேறி வந்து எதிர்கொள்க! மயிலேறி வருக என்று சொல்லியாயிற்று. அந்த மயில் எது? சூரனே மயிலானன் என்பதைத்தான் அடுத்த இரண்டு வரிகளில் "சூர்மா மடியத் தொடு வேலவனே" என்று இணைத்திருக்கிறார் அருணகிரி.

பக்தியுடன்,
கோ.இராகவன்

15 comments:

said...

ராகவன்!

நீங்க தார்னு சொன்னவுடனேயே எனக்கு வாழைத்தார் தான் நினைவுக்கு வந்தது. நீங்களும் அதையே சொல்லிட்டீங்க.

//** வலன் என்ற அசுரனை அழித்தவன் இந்திரன். அதனால் அவன் வலாரி. தலத்தை அழிப்பவன் தலாரி. வலாரி தலாரி என்றால் வலாரியின் தலத்தை அழித்தவன். **// அழகு.

//** அவனுடைய வாகனம் எருமை. அதற்குத் தெரிந்தது பொறுமை. காக்கும் கடவுளர்களுக்கு விரைந்து செல்லும் வாகனங்கள். உயிரெடுக்கும் கடவுளுக்கு மெதுவாகச் செல்லும் வாகனம். இல்லையென்றால் அழிவு நிறையும் **// ஆஹா. வாகனத்தில் கூட அவர் அவர் வேலையை பொருத்து அமைந்திருக்கிறது. அருமை ராகவன். ஒரு சின்ன வேண்டுகோள், கடவுள்களின் வாகனங்களையும் அதை பற்றி விளக்கமும் வைத்து ஒரு பதிவு போட முடியுமா. தெரிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன்.

வழக்கமா சொல்றது தான். ஆனால் சொல்லாமல் போக மனசில்லை. உங்கள் நடை, செவ்வாய் தோறும் அழகான ஒரு சொற்பொழிவை கேட்ட திருப்தியை கொடுக்கிறது. நன்றி ராகவன்.

ஒரு சின்ன கேள்வி! கந்தசஷ்டி கவசம் படித்தால் உண்மையாகவே மனதில் ஒரு அச்சம் தெளியும். கந்தசஷ்டி கவசமும் ஒரு இலக்கியமா..யார் எழுதியது. சொல்லுங்கள் ராகவன் (நேரம் இருக்கும் போது மெதுவாக சொல்லுங்கள்)

அன்புடன்,
சிவா

said...

// ராகவன்!

நீங்க தார்னு சொன்னவுடனேயே எனக்கு வாழைத்தார் தான் நினைவுக்கு வந்தது. நீங்களும் அதையே சொல்லிட்டீங்க. //

அதே அதே....இன்னும் பல சொற்கள் பயன்பாட்டுல இருக்கும். ஆனா எப்படீன்னு தெரியாது. தெரிஞ்சவங்க எடுத்துச் சொன்னா மலைப்பா இருக்கும்.

////** அவனுடைய வாகனம் எருமை. அதற்குத் தெரிந்தது பொறுமை. காக்கும் கடவுளர்களுக்கு விரைந்து செல்லும் வாகனங்கள். உயிரெடுக்கும் கடவுளுக்கு மெதுவாகச் செல்லும் வாகனம். இல்லையென்றால் அழிவு நிறையும் **// ஆஹா. வாகனத்தில் கூட அவர் அவர் வேலையை பொருத்து அமைந்திருக்கிறது. அருமை ராகவன். ஒரு சின்ன வேண்டுகோள், கடவுள்களின் வாகனங்களையும் அதை பற்றி விளக்கமும் வைத்து ஒரு பதிவு போட முடியுமா. தெரிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன். //

கண்டிப்பா போடலாம். ஆனா இதைக் குமரன் செய்யனும்னு விரும்புறேன். நேரக் கொறச்சல்தாங்க காரணம்.

// வழக்கமா சொல்றது தான். ஆனால் சொல்லாமல் போக மனசில்லை. உங்கள் நடை, செவ்வாய் தோறும் அழகான ஒரு சொற்பொழிவை கேட்ட திருப்தியை கொடுக்கிறது. நன்றி ராகவன். //

ரொம்ப நன்றி சிவா. இந்த மாதிரி விஷயங்களைப் படிக்கிறது ஒரு இன்பம்னா...சொற்பொழிவாக் கேக்குறது இன்னொரு இன்பம். எனக்கும் நல்ல சொற்பொழிவுகள் கேட்கப் பிடிக்கும்.

// ஒரு சின்ன கேள்வி! கந்தசஷ்டி கவசம் படித்தால் உண்மையாகவே மனதில் ஒரு அச்சம் தெளியும். கந்தசஷ்டி கவசமும் ஒரு இலக்கியமா..யார் எழுதியது. சொல்லுங்கள் ராகவன் (நேரம் இருக்கும் போது மெதுவாக சொல்லுங்கள்) //

பின்னே...கந்தர் சஷ்டிக் கவசம் இலக்கியம் இல்லாமலா! முழுக்க முழுக்க ஆசிரியப்பா. தேவராய சுவாமிகள் எழுதியது. ஆறுபடை வீட்டிற்கும் ஆறு கவசங்கள் உள்ளன. ஆனா மிகவும் பிரபலமானது சூலமங்கலம் பாடி வெளிவந்துள்ள திருப்பரங்குன்றத்துக் கவசம்தான். இறையருளால் கிட்டிய நூல்களின் பலனும் நமது நம்பிக்கையும் சேர்கையில் நமது குழப்பங்களும் அச்சங்களும் நீங்குவதில் வியப்பேது சிவா!

said...

இதே கருத்தில் ஆதிசங்கரரும். பாரதியாரும் எப்படிபாடியிருக்கிறார் என்று பார்கலாமா.ஆதிசங்கரர் சுப்ரமண்ய புஜங்கத்தில் ஒரு ஸ்லோகத்தில்
க்ருந்தாந்ஸ்ய தூதேஷு சண்டேஷு கோபாத்
தஹச்சிந்திபிந்தீதி மாம் தர்ஜயத்ஸு
மயூரம் ஸமாருஹ்ய மாபீரிதி த்வம்
புரஸ்ஸக்திபாணிர் மமா யாஹி ஸீக்ரம்

என்னுடைய மரணகாலத்தில் எமனுடைய தூதர்கள் மிகுந்த கோபத்தோடு என்னைப் பார்த்து கொல்லு,வெட்டு என்று கூறிக்கொண்டு வருவார்கள். நீ அப்போது என்ன செய்யவேண்டும் தெரியுமா
உன் வாகனமான மயிலின்மீது ஏறிக்கொண்டு கையில் உனது சக்தி ஆயுதத்துடன் என் எதிரில் சீக்கிரமாக(தாமதம் செய்யாமல்) வந்து என் பயத்தைப் போக்க வேண்டும்
பாரதியாரோ
ஆலாலமுண்டவனடி சரணென்ற மார்க்கண்டன் தனதாவி கவரப்போய் நீ பட்ட பாட்டினை அறிகுவேன் இங்கு நாலாயிரம் காதம் விட்டகல் உனை விதிக்கிறேன் --ஹரி நாராயணனாக நின்
முன்னே உதிக்கிறேன் அட காலா உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன் என்றன் காலருகே வாடா சற்றே உனை மிதிக்கிறேன்
என்ன ஒரு தைர்யம் மற்றும் உரிமை இவர்களுக்கு கடவுளுக்கே ஆணையிடுகிறார்கள்.

said...
This comment has been removed by a blog administrator.
said...

காக்கும் கடவுளர்களுக்கு விரைந்து செல்லும் வாகனங்கள். உயிரெடுக்கும் கடவுளுக்கு மெதுவாகச் செல்லும் வாகனம். இல்லையென்றால் அழிவு நிறையும். அப்படி காலன் வந்து உயிரைக் கொண்டு போக வருகையில் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. உரமேறிய உடலாக இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. அப்படி காலன் கொண்டு போவதைக் காட்டிலும் ஆண்டவன் திருவடியில் வீழ்வது நன்றல்லவா!

நன்று சொன்னீர்க்ள் இரகவன். காக்கும் போது அவசரம்.ஆதிமூலமே என்று அழைத்தபோது கருடவாகனத்தில் விரைந்து வந்தான் திருமால்,சக்கிரத்தாழ்வாருக்கு இன்னும் அவசரம் ஆண்டவனுக்கும் முன்னால் சென்றுவிட்டார். ஆனல் சிசுபலனை வதம்
செய்யும்போது நூறு முறை அவன் குற்றம் பொருத்தான் அப்போது பொறுமை.
பட்டிணத்தாரும் இதை நினைத்தே வருந்துகிறார்.
முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள்ளோரும் முடிவிலொரு
பிடிசாம்ப ராய்வெந்து மண்ணாவ துங்க்ண்டு பின்னும் அம்பலவர்
அடிசார்ந்து நம் உய்ய வெண்டுமென்றே அறிவாரில்லையே
மாமன்னர்களும்,பெரியமனிதர்களும் முடிவில் இறந்து வெந்து பிடிச்சாம்பலாய் போவதைப் பார்த்தபின்னும் இன்னும் இந்த மனிதர்கள் இதேமாதிரி வாழ்வை நினைப்பதைவிட்டுவிட்டு அந்த கனகசபேசனுடைய திருவ்டிகளைப் பற்றி உய்யவேண்டும் என்ற அறிவேயில்லாமல் இருக்கிறார்களே என்று வருத்தப்படுகிறார். தி.ரா.ச

said...

sri.raghavan, so many good words from such a young person makes me so proud.sri Prabhandham Virivu Urai ezhuthi irukkireerkalaa?
thanks for the tip abt south usman road shop.(thulasithalam)revathi narasimhan.

said...

இராகவன், நம்ம இராமநாதனையும் கந்தரனுபூதிக்கு விரிவுரை எழுதத் தூண்டிவதற்கு இந்தப் பாடல் பெரும் உதவியாக இருந்தது உங்களுக்குத் தெரியும் என்று எண்ணுகிறேன். ஒரு முறை ஒரு பின்னூட்டத்தில் இந்தப் பாடலை அவர் சொல்ல நான் வழக்கம் போல் விளக்கம் கேட்க, அவர் சொன்ன விளக்கத்தில் மேலும் கேள்விகள் கேட்க, அவர் அதற்கு பதில்கள் சொல்ல என்று அந்த விளையாட்டு நன்றாகச் சென்றது. அதன் பின்னர் அவர் தனிப்பதிவாகவே போட்டு விளக்கம் சொல்லத் தொடங்கி விட்டார்.

இங்கேயும் 'தொடு வேலவனே'ன்னு தான் சொல்லியிருக்கார். வேலைத் தொடுபவனே என்று பொருளா? வேலைத் தொடுத்தவனே என்று பொருளா?

said...

மனு சார்/மேடம்,

நீங்கள் பிரபந்தம் என்று கேட்பது நாலாயிர திவ்யப் பிரபந்தம் என்று எண்ணுகிறேன். அப்படியென்றால் எனது 'விஷ்ணு சித்தன்', 'கோதை தமிழ்' வலைப்பூக்களைப் பாருங்கள். பிரபந்தங்களுக்குப் பொருள் சொல்ல விழைந்திருக்கிறேன்.

சுட்டிகள்:

http://vishnuchitthan.blogspot.com/
http://godhaitamil.blogspot.com/

said...

// sri.raghavan, so many good words from such a young person makes me so proud.sri Prabhandham Virivu Urai ezhuthi irukkireerkalaa?
thanks for the tip abt south usman road shop.(thulasithalam)revathi narasimhan. //

நன்றி மனு. திருப்பாவைக்கு எனக்குத் தெரிந்த வகைக்கு இதே வலைப்பூவில் மார்கழி மாதத்தில் நாளுக்கு ஒவ்வொன்றாகப் பொருள் சொல்லியிருக்கிறேன்.

நண்பர் குமரன் வைணவத்தில் கொஞ்சம் ஆழந்து சொல்கின்றவர். அவர் சிறப்பாக அவரது வலைப்பூக்களில் பொருள் சொல்லி வருகிறார். அதையும் படியுங்கள். உங்களுக்குப் பிடிக்கும்.

said...

// இராகவன், நம்ம இராமநாதனையும் கந்தரனுபூதிக்கு விரிவுரை எழுதத் தூண்டிவதற்கு இந்தப் பாடல் பெரும் உதவியாக இருந்தது உங்களுக்குத் தெரியும் என்று எண்ணுகிறேன். ஒரு முறை ஒரு பின்னூட்டத்தில் இந்தப் பாடலை அவர் சொல்ல நான் வழக்கம் போல் விளக்கம் கேட்க, அவர் சொன்ன விளக்கத்தில் மேலும் கேள்விகள் கேட்க, அவர் அதற்கு பதில்கள் சொல்ல என்று அந்த விளையாட்டு நன்றாகச் சென்றது. அதன் பின்னர் அவர் தனிப்பதிவாகவே போட்டு விளக்கம் சொல்லத் தொடங்கி விட்டார். //

ஆமாம். நன்றாக நினைவிருக்கிறது குமரன். கார் என்றால் என்னவென்று தொடங்கியது அந்தச் சர்ச்சை..அல்லவா.......

// இங்கேயும் 'தொடு வேலவனே'ன்னு தான் சொல்லியிருக்கார். வேலைத் தொடுபவனே என்று பொருளா? வேலைத் தொடுத்தவனே என்று பொருளா? //

தொளை பட்டு உருவத் தொடு வேலவனே....வெறுமனே தொடு வேலவனே என்று சொல்லவில்லை குமரன். அதற்கு முன்னால் "உருவத்" இருக்கிறது. ஆகையால் வேலால் தொட்டு அழித்தமை என்ற பொருளே பொருத்தமானது. தொடுத்தல் என்பதும் வேலைத் தொடுதல் என்பது அத்தனை பொருத்தமாக இராது என்பது என் கருத்து.

said...

//தொளை பட்டு உருவத் தொடு வேலவனே....வெறுமனே தொடு வேலவனே என்று சொல்லவில்லை குமரன். அதற்கு முன்னால் "உருவத்" இருக்கிறது. ஆகையால் வேலால் தொட்டு அழித்தமை என்ற பொருளே பொருத்தமானது. தொடுத்தல் என்பதும் வேலைத் தொடுதல் என்பது அத்தனை பொருத்தமாக இராது என்பது என் கருத்து.//

இராகவன்,

நான் கேக்கிறது என்ன? நீங்கள் சொல்றது என்ன? 'தொளைபட்டுருவத் தொடு வேலவனே' வரியைப் பத்தியா கேட்டேன்? இந்தப்பதிவுல வர்ற பாட்டுல 'சூர்மா மடியத் தொடு வேலவனே' என்று சொல்லியிருக்கிறாரே. இங்கு 'உருவ' வரவில்லை. அதனால் சூர்மா மடியத் வேலைத் தொடுத்தவனே என்று கூட பொருள் சொல்லலாமே? அதனைக் கேட்டேன். நீங்கள் அது தொடுதல் தான் தொடுத்தல் இல்லை என்று சொன்னீர்கள் என்றால் நான் ஒத்துக் கொள்கிறேன். எதுவாய் இருந்தால் என்ன? இல்லையா? :-)

said...

//தார் அணிந்து காட்சி தரும் ஒரே பெண் தெய்வம் ஆண்டாள்//
ராகவா...அன்னை மீனாட்சியை மறந்தீரோ?
இல்லை இல்லை...நீர் நல்லவர்...தங்களுக்கு ஆண்டாள் முதலில் தோன்றி மறைந்ததால் போலும்!

//
ஆறுபடை வீட்டிற்கும் ஆறு கவசங்கள் உள்ளன. ஆனா மிகவும் பிரபலமானது சூலமங்கலம் பாடி வெளிவந்துள்ள திருப்பரங்குன்றத்துக் கவசம்தான்
//
கடல் அலை கொஞ்சும் திருச்சீரலைவாய், (திருச்செந்தூர்) என்று கேள்வி. சரி தானே குமரன்?


நிழற்படம் மாற்றினீரோ? (வளரும் பையன் இவன் - Complan boy - நீர் தானோ?)

said...

"தொளை பட்டுருவத் தொடு வேலவனே"
" சூர்மா மடியத் தொடு வேலவனே"

முன்னது, மார்பையும், மலையையும் தொளை பட்டு உருவிச் செல்லுமாறு வேலை 'எறிந்த' வேலவனைக் குறித்தது.
பின்னது, சூரனாகிய மராமரம் அழிக்க வேலை 'எறிந்த' வேலவனைக் குறித்தது.

இரண்டிலும், 'எறிந்த' என்ற பொருளில் 'தொடு' எனும் சொல் வந்துளது என நினைக்கிறேன்.

நிற்க, சீரலைவாய்க் கவசமே பொதுவாக வழக்கத்தில் உள்ள கவசம்.

said...

ungal katturai inithu... sol virivu patriya aaivu merkollalama? yarenum merkondu ullanara?

said...

The explanations are very good. It is very strange, that persons like me who know nothing is asked to write something about Anubuthi by the Lord Shanmugan. A few persons who heard the explanation offered by me (Him) is finding way to the root of the poems. But I tried (trying) to make an impossible attempt to step into the mind of Arunagiri Swamigal and and wanted to bring out the real meaning the Swamigal conceived. I am also trying to connect the poems, as suggested by Mr. V.N. Kartikeyan in his book. Mr.NVK said that the link between the poems are made by thin threads. However, I find them woven with golden strong threads.
Anubhuti, is totally different from other poems, I feel. If you know the real meaning of the poems, undoubtedly, the Lord will appear before you.