Monday, April 17, 2006

13. செம்மான் மகளைத் திருடிய பெம்மான்

கற்பு மணம் தெய்வயானை. களவு மணம் வள்ளி. பெற்றோர் பார்த்து, உற்றோர் சூழ, கற்றோர் புகழச் செய்து கொண்ட திருமணம் தெய்வயானையுடன். காட்டிற்குச் சென்று, வம்பு செய்து, கையைப் பிடித்து இழுத்து, கிண்டல் பேசி, மயக்கி, ஓடிச்சென்று பிறகு நம்பிராஜன் சம்மதத்துடன் செய்து கொண்ட திருமணம் வள்ளியுடன். அதனால்தான் திருடும் முருகன் என்கிறார். இரவோடிரவாக வீட்டிலுள்ளதை பிறரறியாமல் கொண்டு செல்வது திருட்டுதானே? ஆகையால் திருடும் திருடன் என்கிறார்.

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல்லற என்றலுமே
அம்மா பொருளொன்றும் அறிந்திலனே


செம்மான் மகள் என்றால்......செழுமையான மானின் வயிற்றில் பிறந்த வள்ளி என்று பொருள். திருமால் தவம் செய்கையில் இலக்குமி மான் வடிவில் வந்து நிற்க, மாலின் கருணையால் மானின் வயிற்றில் பிறந்த குழந்தை வள்ளி என்று கந்த புராணம் கூறுகிறது. வள்ளிக் கிழங்கு தோண்டிய மெத்தென்ற குழியில் மான் ஈன்ற குழந்தையை நம்பிராஜன் வளர்த்தான். இதென்னடா! புள்ளிமானும் பக்திமானும் கூடிக் குழந்தை வந்ததா என்று அருவெறுப்புடன் கேட்கலாம். வீம்புக்குக் கேட்டாலும் இதற்கும் விடை சொல்லலாம். பொதுவாகவே எந்த மதத்தை எடுத்துக் கொண்டாலும் இறைவனின் பிறப்பு அல்லது அவதாரம் என்பது மானிடப் பிறப்பிலிருந்து மாறுபட்டதாகவே கூறப்பட்டுள்ளது. கன்னி மேரி கணவனுடன் கூடாமல் ஏசுநாதர் அவதரித்தார் என்று நம்புகிறது கிருத்துவ மதம். புத்த மதத்திலும் மற்ற மதங்களிலும் இந்த வகையான நிகழ்வுகள் உண்டு. ஆகவே இந்த விஷயங்களை பெரிது படுத்தி விளக்கம் கொள்வதை விட கருத்தை மட்டும் கொள்வது நன்று. "நாடோறும் மேதோறும் நவிமகள் சேர் வேடுவன்" என்று இராமச்சந்திரக் கவிராயர் கூறுகிறார். மான் நாள்தோறும் ஓரிடத்தில் இராமல் ஓடியோடிச் சென்று நுனிப்புல் மேய்ந்து ஆராச்சி செய்து கொண்டிருக்கும். அதுதான் "நாடோறு மேதோறும்". நவி என்றால் மான். நவிமகள் - மானின் மகள்.

சரி. இப்படியெல்லாம் உள்ள இயற்கைக்குப் புறம்பான விஷயங்களை நீக்கிவிட்டும் இந்தப் பாடலுக்குப் பொருள் சொல்லலாம். பெம்மான் என்றால் பெரும் ஆள். அல்லவா. அதுபோல செம்மான் என்பதை செம்மையான ஆள் என்றும் கொள்ளலாம். வேட்டுவனாகப் பிறந்த நம்பி செம்மையான வாழ்வே வாழ்ந்தான். குலத்தால் வருவதல்ல குணம். ஆனால் குலத்தால் போற்றப்படலாம். நல்ல குணத்தை எல்லாக் குலமும் ஒரு குலமாக நின்று போற்ற வேண்டும். குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்.

செம்மையான நம்பிராஜனுடைய மகளைத் திருடிக்கொண்டு போன முருகனுக்கு என்ன? பெம்மான் முருகன் பிறவான் இறவான். முருகனுக்கு பிறப்பும் இறப்பும் கிடையாது. நெற்றிக் கண்ணில் தோன்றியது? "உலகம் உய்ய ஒரு திரு முருகன் உதித்தனன்" என்கிறார் கச்சியப்பர் கந்த புராணத்தில். தோன்றினான் என்றோ பிறந்தான் என்றோ கூறவில்லை. உதித்தனன் என்கிறார். இன்று உதிக்கும் சூரியன் நேற்றும் இருந்தது போல, என்றுமுள்ள முருகன் உதித்தான். பிறந்தால்தான் இறப்பு. இராமரும் கிருஷ்ணரும் பிறந்தார்கள். ஆகையால் முடிவில் இறந்தார்கள். சரயு ஆற்றில் தன்னுயிரை விடுத்து பாற்கடல் புகுந்தார் இராமாவதாரத்தில். வேடுவன் விட்ட அம்பு காலில் பாய மண்ணுலகு நீத்தார் கிருஷ்ணாவதாரத்தில். இது புராணங்களில் சொல்லும் வழக்கு. மீனாட்சியாக மதுரையை ஆண்ட உமையம்மை இறக்கவில்லை. மாறாக தாமாகவே கயிலை சென்றார். காரணம் அவரது பிறப்பு மானிடப் பிறப்பாக இருக்கவில்லை. வேள்வியில் தோன்றிய வேதநாயகியாக வந்தார் தமிழர்களுக்காக. ஒவ்வொரு புராணங்களும் ஒன்றையொன்று பார்த்து எழுதப்பட்டதல்ல. ஏதோ ஒரு பொது விதியின் பால் எழுந்ததாகவே உள்ளன. ஏசுநாதரும் சிலுவையில் இறந்து, பிறகு உயிர்த்தெழுந்தார். கிரேக்கக் கடவுளாகக் கருதப்படும் ஹெர்குலில் இறக்கவில்லை. மாறாக மண்ணுலகிலிருந்து தெய்வமாகவே ஒலிம்பஸ் மலைக்குச் சென்றான். காரணம் அவனது பிறப்பும் தெய்வாதீனமானது.

சரி. கருத்துக்கு வருவோம். பிறப்பு ஒழிய வேண்டும். அதற்குச் செய்ய வேண்டியது? இறைவனை வேண்டுவது. ஏற்கனவே கடன் வைத்திருப்பவனிடம் நாம் கடன் கேட்டுச் செல்ல முடியாது. ஆக பிறவா இறவாப் பெம்மான் யாரோ அவரிடமே கேட்க முடியும். அந்தத் தன்மையை உடைய முருகப் பெருமானிடம் பிறவித் துயரை நீக்குமாறு வேண்டுகிறார் அருணகிரி.

இதுவரை இரண்டு வரிகளுக்குத்தான் விளக்கம் சொல்லியிருக்கிறது. எவ்வளவு சொல்ல வேண்டியிருக்கிறது பாருங்கள். சின்ன அணுவிற்குள் ஒளிந்துள்ள பெரிய ஆற்றலைப் போலத்தான் இதுவும். சரி அடுத்த இரண்டடிகளைப் பார்க்கலாம்.

சும்மா இரு சொல்லற. இது முருகன் அருணகிரிக்கு உபதேசித்தது. தொழுநோயின் கொடுமை வாட்ட, துயர் தாங்காமல் தற்கொலை முடிவெடுத்தார் அருணகிரி. ஆற்றுக்கும் மலைக்கும் ஓடாமல், தாம்புக்கயிறைத் தேடாமல், கொடிய நஞ்சை நாடாமல், திருவண்ணாமலைக் கோபுரத்தை நாடினார். உச்சிக்கு ஏறினார். முருகாவென அழைத்து அங்கிருந்து கீழே குதித்தார். பசித்து குழந்தை அழுகின்ற போதே தாய்க்கு பால் சுரப்பது போல, ஓடி வந்தார் வேலவர். தாங்கி நின்றார் அருணகிரியை. அப்பொழுது செய்த உபதேசம்தான் "சும்மா இரு சொல்லற!" மிகவும் கடினமான உபதேசம். ஒன்றும் செய்யாமல் எப்படி இருப்பது. மனத்தின் கடிவாளம் எங்கெங்கோ போகிறதே. கையைக் காலைக் கூட ஓரிடத்தில் சும்மா வைத்திருக்க முடியவில்லை. ஒவ்வொரு புலனும் ஒவ்வொரு விதத்தில் எப்படியாவது எதையாவது தூண்டுகின்றனவே! அப்புறம் எப்படி சும்மாயிருப்பது? முயற்சித்துப் பாருங்களேன். அருணகிரி முயன்றார். வெற்றியும் பெற்றார். மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றாலும் சும்மா இருந்தார். முருகனே சொன்ன பிறகு அதற்கு மறுபேச்சேது.

சரி. சும்மா இருந்ததின் விளைவுகள் என்ன? சும்மா இரு சொல்லற என்று சொன்னதுமே அம் மாபொருள் ஒன்றும் அறிந்திலனே என்கிறார். சிற்றின்ப வாழ்வில் நீந்தித் திளைத்தவர் அருணகிரி. பார்க்கும் ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு இன்பத்தை அனுபவித்தார். நாமும் அனுபவிக்கிறோம். அப்படி அனுபவிக்கும் பொழுது இன்பமாகத் தோன்றினாலும் முடிவு துன்பமாகவே இருக்கிறது. தொலைக்காட்டியைப் பார்க்கிறோம். பார்க்கையில் அந்த நிகழ்ச்சிகள் இன்பத்தைக் கொடுக்கின்றன. ஆனால் நாளடைவில் கண்பார்வைக் கோளாறு வருகிறது. இது போலத்தான் ஒவ்வொன்றும். அப்படிப் பட்ட பொருட்களே நமக்கு மிகவும் முக்கியமானதாகத் தோன்றுகின்றன. அருணகிரிக்கும் அப்படித்தான் இருந்தது முருகனிடம் உபதேசம் கேட்பதற்கு முன்பு. பாடம் கேட்ட பிறகு அம் மாபொருட்கள் ஒன்றுமற்றவைகளாகின. பார்ப்பதெல்லாம் பரமன் மகன். கேட்பதெல்லாம் கந்தன் புகழ். வாசித்ததெல்லாம் வள்ளிமணாளன் பற்றி. நினைத்ததெல்லாம் அந்த நித்தியானந்தனைப் பற்றி. நோக்குமிடமெல்லாம் நீக்கமற நின்ற இறைவன் என்று பாரதி சொன்னது போன்ற நிலையை அடைந்தார் அருணகிரி.

பக்தியுடன்,
கோ.இராகவன்

26 comments:

said...

aahhhaaa.. arputham..
raghavan.. romba anupavithu ezhuthiirukkireerkal..
avvalavum anupavithu padithane..

Nandri,
endrendrum anbudan
seemachu

said...

//சும்மா இரு சொல்லற//

இது நம்மளால முடியுமா? முடியாதே. அதான் பிராப்பளம்.

அருமையான பதிவு ஜிரா.

said...

// aahhhaaa.. arputham..
raghavan.. romba anupavithu ezhuthiirukkireerkal..
avvalavum anupavithu padithane..

Nandri,
endrendrum anbudan
seemachu //

நன்றி சீமாச்சு. படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. ஒவ்வொரு செவ்வாயும் வாங்க.

said...

////சும்மா இரு சொல்லற//

இது நம்மளால முடியுமா? முடியாதே. அதான் பிராப்பளம். //

உண்மைதான். சும்மா இருக்க முடியாததாலதான் பிரச்சனைகள் எக்கச்சக்கமா வருது....எல்லாரும் தெரிஞ்சிக்க வேண்டிய உண்மை இது.

// அருமையான பதிவு ஜிரா. //

நன்றி இலவசம். (இலவசத்துக்கு நன்றியா? நன்றிக்கு இலவசமா? ;-) )

said...

//ஏற்கனவே கடன் வைத்திருப்பவனிடம் நாம் கடன் கேட்டுச் செல்ல முடியாது. ஆக பிறவா இறவாப் பெம்மான் யாரோ அவரிடமே கேட்க முடியும்.//

இராகவன், என்ன சொல்ல வர்றீங்க? இராமனும் கிருஷ்ணனும் பிறந்து இறந்ததால் (நீங்கள் மேலே சொன்ன படி), அவர்களிடம் போனால் கடன் வைத்திருப்பவரிடம் கடன் கேட்பது போலாகுமா? அப்படியா சொல்றீங்க? :-(

சரி. சரி. பாட்டுடைத் தலைவனைப் போற்றும் முகமாய் மற்றவரைத் தாழ்த்தும் பழைய இலக்கிய முறையில் பேசியிருக்கிறீர்கள் என்று விட்டுவிடுகிறேன். :-)

பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த
நாவேறு செல்வியும் 'நாரணனும்' ...தானறியா
... சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ

என்று ஒருவர் பாடவில்லையா?

said...

'அம்மா பொருள் அறிந்திலனே' என்று சொன்னதற்கு 'நோக்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்த இறைவனைக் காண்பது' எப்படி விளக்கமாகிறது? புரியவில்லையே. இந்த மரமண்டைக்குப் புரியற மாதிரி இன்னும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க இராகவன்.

said...

// சும்மா இருக்கும் ; நிலை எல்லோருக்கும் வருமா?
வாரியார் விளக்கத்துக் கீடாக உள்ளது ;உங்கள் விளக்கம்
தொடருங்கள்.
யோகன்
பாரிஸ் //

வாங்க யோகன். வாரியார் போன்ற அருந்தமிழ் அறிஞர்கள் நமக்குச் சொன்னதை வைத்துத்தானே நானும் தெளிந்து கொண்டேன். அவர் சொன்னதெல்லாம் தமிழ்த் தேன் கடல்.

said...

// இராகவன், என்ன சொல்ல வர்றீங்க? இராமனும் கிருஷ்ணனும் பிறந்து இறந்ததால் (நீங்கள் மேலே சொன்ன படி), அவர்களிடம் போனால் கடன் வைத்திருப்பவரிடம் கடன் கேட்பது போலாகுமா? அப்படியா சொல்றீங்க? :-( //

என்ன குமரன்...நான் சொல்ல வந்ததை விட்டுட்டு எங்கேயோ போறீங்க...நான் நாராயணனை ஒன்றும் சொல்லவே இல்லையே..

நான் எடுத்துக் காட்ட வந்தது...எங்கு பிறப்பு இருக்கிறதோ....அங்கு இறப்பும் இருக்கும் என்பதுதான்...அப்படி இறையருளால் இறப்பை வென்றவர் அருணகிரி என்றுதான் நான் சொல்ல வந்தேன். அதற்குதான் இத்தனை எடுத்துக்காட்டுகள்.

// சரி. சரி. பாட்டுடைத் தலைவனைப் போற்றும் முகமாய் மற்றவரைத் தாழ்த்தும் பழைய இலக்கிய முறையில் பேசியிருக்கிறீர்கள் என்று விட்டுவிடுகிறேன். :-) //

ஐயா...அப்படியில்லை....யாரையும் முடிந்த வரையில் இழிவாகப் பேசுவது மரபன்று. நிச்சயமாக பழந்தமிழ் மரபன்று. நான் நடுநிலையோடு பட்டதைச் சொன்னேன்.

// பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த
நாவேறு செல்வியும் 'நாரணனும்' ...தானறியா
... சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ

என்று ஒருவர் பாடவில்லையா? //

ஐயா....தலை பத்தும் கத்தரிக்க எய்தான் மருகன் என்றும் ஒருவர் பாடியது நான் அறிவேன்..

said...

// 'அம்மா பொருள் அறிந்திலனே' என்று சொன்னதற்கு 'நோக்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்த இறைவனைக் காண்பது' எப்படி விளக்கமாகிறது? புரியவில்லையே. இந்த மரமண்டைக்குப் புரியற மாதிரி இன்னும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க இராகவன். //

என்ன குமரன் இது...உங்களுக்கா புரியவில்லை........

நாம் பார்ப்பதெல்லாம் பெரியவை என்று நினைக்கிறோம்....அந்தப் பெரியவைகள் எல்லாம் ஒன்றுமில்லாதவைகளாகப் போனால்....நோக்குமிடமெங்கும் என்ன இருக்கும்?

said...

சும்மா இரு சொல்லற!" மிகவும் கடினமான உபதேசம். ஒன்றும் செய்யாமல் எப்படி இருப்பது. மனத்தின் கடிவாளம் எங்கெங்கோ போகிறதே. கையைக் காலைக் கூட ஓரிடத்தில் சும்மா வைத்திருக்க முடியவில்லை. ஒவ்வொரு புலனும் ஒவ்வொரு விதத்தில் எப்படியாவது எதையாவது தூண்டுகின்றனவே! அப்புறம் எப்படி சும்மாயிருப்பது? முயற்சித்துப் பாருங்களேன்.

சும்மா இருப்பது அவ்வளவு சுலபமா? தாயுமானவரைக்கேளுங்கள் அது எவ்வளவு கஷ்டம் என்று புரியும்
கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம்;
கரடிவெம் புலிவாயையும்
கட்டலாம்; ஒரு சிங்க முதுகின்மேற் கொள்ளலாம்;
கட்செவி யெடுத்தாட்டலாம்;
வெந்தழலி னிரதம்வைத் தைந்துலே கத்தையும்
வேதித்து விற்றுண்ணலாம்;
வேறொருவர் காணாம லுலகத் துலாவலாம்
விண்ணவரை யேவல்கொளலாம்;
சந்ததமு மிளமையோ டிருக்கலாம்; மற்றொரு
சரீரத்தி ன்ம்புகுதலாம்;
சலமே னடக்கலாம்; கனன்மே லிருக்கலாம்
தன்னிகரில் சித்திபெறலாம்;
சிந்தையை யடக்கியே சும்மா விருக்கின்ற
திறமரிது; சத்தாகியென்
சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே!
தெசோ மயானனந்தமே
- தாயுமானவர் (கிபி 1608 - 1662)

குதிரை, மதயானையை வசமா நடத்தலாம்.கரடி வெண்புலி வாயையும் கட்டலாம். ஒரு சிங்கத்தின்மேலேறி உட்கார்ந்து கொள்ளலாம். பாம்பை (கட்செவி) ஆட்டுதல் கூடும். நெருப்பில் பாதரசம் (இரதம்) இட்டு ஐந்து உலேகங்களையும் பொன்னாக்கி விற்று உண்ணலாம்.

வேற யாரும் காணாமல் உலகத்திலே உலா வரலாம். தேவர்களை (விண்ணவர்களை) வேலை வாங்கலாம். சதாகாலமும் இளமையோட இருக்கலாம். வேறொரு உடலில் புகுந்து கொள்ளலாம்.

நீரின் (சலம் - ஜலம்) மேல் நடக்கலாம். நெருப்பின் (கனன் - கனல்) மேல் தங்கி இருக்கலாம். தமக்கும் மேலான பிற சித்திகளைப் பெறலாம்.

ஆனால், மிக்க கடினம் யாதெனில் "மனத்தை அடக்கி சும்மா இருக்கின்ற திறம் அரிது".

உண்மையாகி என் மனதிற் குடி கொண்டிருக்கிற, அறிவான தெய்வமே, தேசோமயானந்தமே....

நன்றி ஹரிஹரன் தி ரா ச

said...

அற்புதம் ராகவன்! பிறப்பு இறப்பு பற்றி கூறி 'பிறந்தால்தான் இறப்பு' என்பதற்கு கூறிய கதைளில் நிறைய எனக்கு புதிது. 'சும்மா இரு சொல்லற'..சும்மா இருக்குறதுன்னா சும்மாவா. இங்கே தவம் இருப்பதையா 'சும்மா இரு' என்று குறிக்கிறார்?. திருச்செந்தூரில் வள்ளி குகை என்று இருக்கிறதே, புவியியல் படி திருச்செந்தூர் புராணத்தில் நம்பிராஜன் வாழ்ந்த இடமா..இல்லை வள்ளி அங்கு எப்படி வருகிறாள்...தெரியுமா?

இந்த தடவை கொஞ்சம் தாமதமாக வந்து படிக்கிறேன் :-).

said...

அருமை, ராகவன் மிக அருமை. யாழப்பாணத்தில் யோகர்சுவாமிகள் என்ற அருட்சித்தர் இருந்தார், அவர் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை 'சும்மா இரு' என்பதாக அறிந்திருக்கின்றேன். அதற்கான உட்பொருள் அப்போதுகளில் புரிந்ததில்லை.
ராகவன் நீங்கள் சமயச்சொற்பொழிவு ஆற்றுவீர்களா? உங்கள் உரைநடை அப்படி உணர்த்துவதால் கேட்டேன். தொடர்ந்து எழுதுங்கள். காத்திருக்கின்றோம்.
வாழ்த்துக்களும் நன்றிகளும்.

said...

//ராகவன் நீங்கள் சமயச்சொற்பொழிவு ஆற்றுவீர்களா? உங்கள் உரைநடை அப்படி உணர்த்துவதால் கேட்டேன். //

:-) :-) :-) :-)

said...

குமரன்!
உங்கள் சிரிப்பின் பொருள் யாதோ?

said...

மலைநாடான். என் சிரிப்பின் பொருள்:

நீங்கள் சொன்னது உண்மை. உண்மை. முழுவதும் உண்மை. உண்மையைத் தவிர வேறோன்றுமில்லை.

அன்பு நண்பரைப் பாராட்டி நீங்கள் எழுதியிருந்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது. அதனால் வந்த புன்னகைகள் தான் அவை. :-)

said...

நைஸ் ஃபெல்லோ ஜி.ஆர், நன்றாக இருந்தது இந்த பதிவு - ஏனைய பதிவுகளையும் புரட்டிப்பார்க்க வேணுமய்யா...

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க, என்று சொல்லிக் கொண்டே இருந்தால் சும்மா இருக்கும் வழி கிட்டாதோ...

said...

// ஆனால், மிக்க கடினம் யாதெனில் "மனத்தை அடக்கி சும்மா இருக்கின்ற திறம் அரிது".

உண்மையாகி என் மனதிற் குடி கொண்டிருக்கிற, அறிவான தெய்வமே, தேசோமயானந்தமே....

நன்றி ஹரிஹரன் தி ரா ச //

ஆகா! தி ரா ச, ஹரியண்ணாவின் பதிப்பைச் சரியான பொழுது நினைவு கூர்ந்திருக்கிறீர்கள். மிக நன்று.

said...

// 'சும்மா இரு சொல்லற'..சும்மா இருக்குறதுன்னா சும்மாவா. இங்கே தவம் இருப்பதையா 'சும்மா இரு' என்று குறிக்கிறார்?. //

சும்மா இருத்தல் என்பது தவமும் ஆகும். பாரதியார் சொல்லிய மோனத்திருத்தல். ஐம்புலன்களையும் வெச்சுக்கிட்டு சும்மாயிருக்கிறது. ஆனா அதையெல்லாம் விட உள்ளத்தை வெச்சுக்கிட்டு சும்மாயிருக்கிறது. உள்ளத்தை சும்மா இருக்கச் சொன்னா உடம்பும் சும்மா இருக்கும். அதன் பலன் நன்றே. ஆனால் கைவருவது மிகக்கடினம். இறையருள் வேண்டும்.

// திருச்செந்தூரில் வள்ளி குகை என்று இருக்கிறதே, புவியியல் படி திருச்செந்தூர் புராணத்தில் நம்பிராஜன் வாழ்ந்த இடமா..இல்லை வள்ளி அங்கு எப்படி வருகிறாள்...தெரியுமா? //

இல்லை. நம்பிராஜான் வாழ்ந்தது வள்ளிமலைச் சாரலில். திருத்தணிக்கு அருகில் ஆந்திர எல்லையில் இருக்கிறது.

வள்ளியம்மையின் கோயில் மட்டுமல்ல திருச்செந்தூர் முருகன் கோயிலும் குகைக்கோயிலே. சந்தன மலை என்னும் நுரைப்பாறைக் குகைக்குள் அமைந்திருந்தன கோயில்கள். நாளாவட்டத்தில் முருகன் கோயில் புதுப்பிக்கப்பட்டு மிகவும் பெரிதாகியது. வள்ளியம்மை குகை கடற்கரையில் சிறிதாக அமைந்து அழகுற இருக்கிறது. ஆனை துரத்தி வள்ளி உள்ளே நுழைந்தாள் என்று யாரேனும் கதை சொன்னால் அது தவறு. அந்த மலை வள்ளி மலை. அங்குதான் முருகப் பெருமான் வள்ளியை மணந்த இடம்.

said...

// அருமை, ராகவன் மிக அருமை. யாழப்பாணத்தில் யோகர்சுவாமிகள் என்ற அருட்சித்தர் இருந்தார், அவர் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை 'சும்மா இரு' என்பதாக அறிந்திருக்கின்றேன். //

ஆகா! சும்மா இரு என்பது முருகனே நேரடியாகச் சொன்ன உபதேசம். அதை யோகர் சுவாமிகள் அடிக்கடி உச்சரிப்பதில் வியப்பில்லை. யாழ்ப்பாணத்து யோகர் சுவாமிகள் பற்றி ஒரு பதிவு போடுங்களேன் மலைநாடன்.

// அதற்கான உட்பொருள் அப்போதுகளில் புரிந்ததில்லை.
ராகவன் நீங்கள் சமயச்சொற்பொழிவு ஆற்றுவீர்களா? //

பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்தில் தினம் ஒரு கவிதைக் குழுக்காக ஒரு முறையும் பாரதி பிறந்த நாள் விழாவிற்காக ஒரு முறையும் பட்டிமன்றத்தில் கலந்து கொண்டிருக்கிறேன். மற்றபடி சொற்பொழிவுகள் என்று ஆற்றியதில்லை. ஆனால் சமயச் சொற்பொழிவு ஆற்றும் விருப்பம் இருக்கிறது. முருகப் பெருமான் அருள் இருந்தால் அதுவும் நடக்கும்.

// உங்கள் உரைநடை அப்படி உணர்த்துவதால் கேட்டேன். தொடர்ந்து எழுதுங்கள். காத்திருக்கின்றோம்.
வாழ்த்துக்களும் நன்றிகளும். //

மிக்க நன்றி மலைநாடன். அடிக்கடி இந்தப் பக்கம் வாருங்கள்.

said...

// தமிழ்மணத்துலியா? ஜிரா கலக்குறீங்க..சும்ம இருக்கலாம்னு யோசிச்சா இத உங்களுக்கு சொல்லி இருக்கமுடியுமா? //

அது உண்மைதான். மொத்தமும் சும்மா இருக்க வேண்டியது அதை உணர்ரதுக்கு. உணர்ந்தப் புறம் எப்பப்ப சும்மா இருக்கனும்னு நமக்கே தெரிஞ்சிரும். ஆனா நான் இதுவரைக்கும் சும்மா இருந்ததில்லை என்பதும் உண்மைதான்.

said...

// நைஸ் ஃபெல்லோ ஜி.ஆர், நன்றாக இருந்தது இந்த பதிவு - ஏனைய பதிவுகளையும் புரட்டிப்பார்க்க வேணுமய்யா... //

நன்றி ஜீவா. இங்க எல்லாரும் ஜிரா ஜிரான்னு கூப்பிட்டுப் பழகியாச்சு. அதுனால நீங்களும் ஜிரான்னே கூப்பிடுங்க. அடிக்கடி நம்ம பக்கம் வாங்க. மகரந்தமும் இருக்கு. அதையும் புரட்டிப் பாருங்க.

// இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க, என்று சொல்லிக் கொண்டே இருந்தால் சும்மா இருக்கும் வழி கிட்டாதோ... //

அதுதானே பேரின்பம். கிட்டினால் நன்று. மிக நன்று.

said...

ராகவன் உங்கள் கட்டுரை உண்மையிலேயே அற்புதம். தயவு செய்து நீங்கள் சும்மா இருக்காதீர்கள். தொடர்ந்து எழுதுங்கள் என் போன்ற பாமரனும் உணரும் வகையில்.

வெகு நாள் வரையில் அதை
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலையே
என்று அரற்றுவதாகத்தான் நினைத்திருந்தேன்.

நீங்கள் T M Soundarrajan நடித்த அருணகிரிநாதர் படம் பார்த்திருக்கிறீர்களா

said...

அம்மா பொருளொன்றும் அறிந்திலனே

//முருகனிடம் உபதேசம் கேட்பதற்கு முன்பு. பாடம் கேட்ட பிறகு அம் மாபொருட்கள் ஒன்றுமற்றவைகளாகின. //

இந்த விளக்கத்தை முதல்முறையாகப் படிக்கிறேன். இப்படிப் பொருள் கொள்வதும் மிகப் பொருத்தமே. இதுவரை அம்மா என்பதை ஒரு ஆச்சரியத்தைக் குறிக்கும் சொல்லாக இந்தப் பாடலில் வருவதாகவே நினைத்திருந்தேன்.

இந்த "சும்மா இரு" என்பதே எல்லா உபதேசங்களின் சாரம் என்று அறியப்படுகிறது. சலனமற்றிரு. அலையற்றிரு, அசைவற்றிரு , வினைகளைச் செய், ஆனால் அவற்றால் அலைக்கழிக்கப்படாதிரு.

இதைக் குறித்து தாயுமானவர் சொல்வதைப் பாருங்கள் :

ஐயா அருணகிரி அப்பா உனைப்போல
மெய்யாக வோர்சொல் விளம்பினர்யார்-

தாயுமானவரின் குருவும் அவருக்கு உபதேசித்த இரண்டே சொற்கள் "சும்மா இரு" என்பதே
அதிலேயே எல்லாம் அடங்கிவிடுகிறது.வேதங்க்ளும் உப்நிடதங்க்ளும் சொல்லுவதும் அதைத்தான்.

"சும்மா விருக்கச் சுகஞ்சுகம் என்று சுருதியெல்லாம்
அம்மா நிரந்தரஞ் சொல்லவுங் கேட்டும் அறிவின்றியே
பெம்மான் மவுனி மொழியையுந் தப்பிஎன் பேதைமையால்
வெம்மாயக் காட்டில் அலைந்தேன் அந் தோஎன் விதிவசமே"

"மனத்தாலும் வாக்காலும் மன்னவொண்ணா மோன
இனத்தாரே நல்ல இனத்தார்-கனத்தபுகழ்
கொண்டவரும் அன்னவரே கூறரிய முத்திநெறி
கண்டவரும் அன்னவரே காண்."

said...

// supersubra said...
ராகவன் உங்கள் கட்டுரை உண்மையிலேயே அற்புதம். தயவு செய்து நீங்கள் சும்மா இருக்காதீர்கள். தொடர்ந்து எழுதுங்கள் என் போன்ற பாமரனும் உணரும் வகையில். //

நன்றி சூப்பர்சுப்ரா. எனக்குத் தெரிந்தவைகளை என்னால் முடிந்த வரையில் எடுத்துச் சொல்கிறேன்.

// வெகு நாள் வரையில் அதை
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலையே
என்று அரற்றுவதாகத்தான் நினைத்திருந்தேன். //

இல்லையில்லை. அம் மாபொருள் என்பதுதான் சரி. நீங்களும் ஜெயஸ்ரீயும் சொன்ன பிறகு நானும் தேடிப் பார்த்தேன். இங்கு வியப்புக்குறிப்பை விட விளம்புங்குறிப்புதான் பொருத்தமாகத் தெரிகிறது.

// நீங்கள் T M Soundarrajan நடித்த அருணகிரிநாதர் படம் பார்த்திருக்கிறீர்களா //

பார்த்திருக்கிறேன். படத்தின் முதல்பாதி சுமார் என்றாலும் இரண்டாம் பாதி நன்றாக இருக்கிறது. ஆனால் பாடல்கள் அனைத்தும் தேன். தமிழ்த் தேன். குறிப்பாக முத்தைத்திரு, தண்டையணி வெண்டயம், பக்கரை விசித்திரமணி எல்லாம் அற்புதம்.

ஆனால் இவைகளுக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல நான் விரும்பும் பாடல் மயில் விருத்தப்பாடல். காளி முருகனை மடியில் பிடித்து வைத்துக் கொள்ள, மயிலை ஆட வைக்கும் "சந்தானபுஷ்ப" பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.

said...

////முருகனிடம் உபதேசம் கேட்பதற்கு முன்பு. பாடம் கேட்ட பிறகு அம் மாபொருட்கள் ஒன்றுமற்றவைகளாகின. //

இந்த விளக்கத்தை முதல்முறையாகப் படிக்கிறேன். இப்படிப் பொருள் கொள்வதும் மிகப் பொருத்தமே. இதுவரை அம்மா என்பதை ஒரு ஆச்சரியத்தைக் குறிக்கும் சொல்லாக இந்தப் பாடலில் வருவதாகவே நினைத்திருந்தேன். //

ஜெயஸ்ரீ, நீங்கள் சொன்ன பிறகு நானும் சில விளங்கங்களைத் தேடிப் பார்த்தேன். அதில் நான் குறிப்பிட்டிருப்பதைப் போலத்தான் சொல்லியிருக்கிறார்கள்.

// இந்த "சும்மா இரு" என்பதே எல்லா உபதேசங்களின் சாரம் என்று அறியப்படுகிறது. சலனமற்றிரு. அலையற்றிரு, அசைவற்றிரு , வினைகளைச் செய், ஆனால் அவற்றால் அலைக்கழிக்கப்படாதிரு.

இதைக் குறித்து தாயுமானவர் சொல்வதைப் பாருங்கள் :

ஐயா அருணகிரி அப்பா உனைப்போல
மெய்யாக வோர்சொல் விளம்பினர்யார்- //

உண்மைதான். கற்றாரைக் கற்றாரே காமுறுவர்.

// தாயுமானவரின் குருவும் அவருக்கு உபதேசித்த இரண்டே சொற்கள் "சும்மா இரு" என்பதே
அதிலேயே எல்லாம் அடங்கிவிடுகிறது.வேதங்க்ளும் உப்நிடதங்க்ளும் சொல்லுவதும் அதைத்தான்.

"சும்மா விருக்கச் சுகஞ்சுகம் என்று சுருதியெல்லாம்
அம்மா நிரந்தரஞ் சொல்லவுங் கேட்டும் அறிவின்றியே
பெம்மான் மவுனி மொழியையுந் தப்பிஎன் பேதைமையால்
வெம்மாயக் காட்டில் அலைந்தேன் அந் தோஎன் விதிவசமே"

"மனத்தாலும் வாக்காலும் மன்னவொண்ணா மோன
இனத்தாரே நல்ல இனத்தார்-கனத்தபுகழ்
கொண்டவரும் அன்னவரே கூறரிய முத்திநெறி
கண்டவரும் அன்னவரே காண்." //

ஜெயஸ்ரீ தாயுமானவர் பற்றிப் பதிவுகள் போடுங்களேன். இதை நேயர் விருப்பமாகக் கொள்ளவும்.

said...

அருமையான விளக்கத்துடன் கூடிய பதிவு ராகவன், இன்று தான் படிக்கக் கிடைத்தது.