எளிதில் விளக்கம் சொல்லக் கூடிய பாடலிது.
கூகாவென என்கிளை கூடியழப்
போகாவகை மெய்ப்பொருள் பேசியவா
நாகாசல வேலவ நாலுகவித்
தியாகா சுரலோக சிகாமணியே
சிகாமணி என்றால் என்ன? சிகை என்றால் முடி. அந்த முடியில் சூடக்கூடிய மணிதான் சிகாமணி. ஒருவர் எத்தனைதான் அணிமணி புனைந்தாலும் முடியில் சூடக்கூடிய மணிதான் உயர்ந்து தோன்றும். ஆகையால்தான் மணிமுடி என்பது சிறந்தது. மன்னர்களுக்கு பட்டம் கட்டுகையில் கையணி பூட்டுவதில்லை. காலணி பூட்டுவதில்லை. மாறாக மணிமுடி பூட்டுகிறார்கள். அந்த நிகழ்ச்சியையும் முடிசூட்டு விழா என்றே அழைக்கிறார்கள். இதிலிருந்தே மணிமுடியின் பெருமையை அறிந்து கொள்ளலாம். சுரலோகம் என்றால் தேவலோகம். அந்த தேவலோகங்களுக்கு எல்லாம் மணிமுடி புணைந்து கொண்டவரே முருகா! தேவசேனாபதியல்லவா!
தமிழ்க்கவிதைகளில் நான்கு விதமுண்டு. அவை ஆசு, மதுரம், சித்திரம் மற்றும் வித்தாரம். இந்த நான்கிலும் சிறப்புடையவரே சங்கப் புலவராகத் தகுதி பெற்றவர். இந்த நான்கு கவிதைகளிலும் ஒருவர் சிறந்து விளங்க வேண்டுமானால் முருகப் பெருமானின் தனிக்கருணை வேண்டும். தமிழ்த் தெய்வமல்லவா!
"சிகராத்ரி கூறிட்ட வேலும் செஞ்சேவலும்
செந்தமிழால் பகர் ஆர்வம் ஈ" என்று அருணகிரிநாதர் திருப்புகழில் வேண்டுகிறார். வேலையும் சேவலையும் போற்றிப் புகழ வேண்டும். அதுவும் தீந்தமிழில். அப்படிப் புகழ்ந்து பாட வேண்டுன்ற ஆவலைத் தருவீர் வேலவரே என்று வேண்டுகிறார். இறைவனைப் பாடுகின்ற ஆர்வம் கூட இறையருளால்தான் தோன்றும். அப்படியிருக்க தமிழறிவு வாய்ப்பது என்பது......இறைவனின் பரிபூரணக் கருணையைக் காட்டுகிறது. அதனால்தான் நாலுகவித் தியாகா என்று புகழ்கிறார்.
நாகாசல வேலவா! நாகாசலம் என்ற மலை மீதமர்ந்து வேலைப் பிடித்த பெருமானே! நாகசலம் என்பது திருச்செங்கோடு என்றும் திருப்பதியென்றும் இரண்டுவிதமாகக் கூறுவார்கள். கந்தபுராணத்தில் "பண்டு தான் தங்கியிருந்த வேங்கடமலை" என்ற வரிகளிலிருந்து திருவேங்கடமலையில் முருகன் இருந்ததாகக் கூறுவார்கள். திருப்பதியில் இருக்கும் ஏழுமலைகளில் நாகாச்சலமும் ஒன்று. திருப்பதி சைவப்பதியா வைணவப்பதியா என்ற சர்ச்சை பல நூற்றாண்டுகளாகவே இருந்து வந்தது. பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் மிகப்பெரிய சர்ச்சைகள் நிகழ்ந்தன. ஆனால் அந்தச் சர்ச்சைகளும் அவற்றின் முடிவுகளும் சரித்திரச் சான்றுகளின் படியில்லாமல் வெறும் வாதத்தின் அடிப்படையில் நிகழ்ந்ததாகக் கூறுவார்கள். எது எப்படியோ! எல்லாத் தெய்வமும் ஒன்றே! ஆகையால் மதநல்லிணக்கத்திற்காக இங்கே நாம் திருச்செங்கோடு என்றே எடுத்துக் கொள்ளலாம். திருச்செங்கோடும் சிறப்பில் குறைந்ததல்ல. இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் விளக்கமாகக் குறிப்பிடுகிறார்.
"சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன் கை வேலன்றே" என்ற சிலப்பதிகார வரிகளிலிருந்து திருச்செங்கோட்டின் சிறப்பு விளங்கும்.
கூகா எனக் கிளை கூடியழும். எப்பொழுது? உடலென்னும் கூட்டிலிருந்து உயிரென்னும் பறவை தப்பித்துப் பறந்த பிறகு, உற்றாரும் உறவினரும் கடன் கொடுத்தோரும் கேட்டோரும் கூடிக் கதறி அழும். அப்படிப்பட்ட வகையில் இறப்பு நேராமல் காக்க அருணகிரிக்கு மெய்ப்பொருள் பேசினான் முருகன். மெய்ப்பொருள் என்றால் என்ன? உண்மையான பொருள். பொய் அழிந்து போகும். ஆனால் உண்மை அழிவில்லாதது. அப்படிப்பட்ட அழிவில்லாத பொருளைப் பற்றி முருகன் அருணகிரிக்கு உபதேசம் செய்திருக்கிறார். ஏற்கனவே "பிமரங்கெட மெய்ப்பொருள் பேசியவா" என்று கூறியிருக்கிறார். இங்கே போகா வகைக்கு அதே மெய்ப்பொருள் பயன்படுகிறது. அனைத்திற்கும் ஆகும் அந்த மெய்ப்பொருள். பரமசிவனுக்கும் அகத்தியருக்கும் அடுத்து முருகனிடம் உபதேசம் பெற்றது அருணகிரிதான். திருப்புகழில் சொல்கிறார்.
"சிவனார் மனம் குளிர உபதேச மந்த்ரமிரு
செவி மீதிலும் பகர் செய் குருநாதா!"
இரு செவி மீதிலும் பகர் செய்யும் குருநாதன் என்று முருகனைப் புகழ்கிறார். இரண்டு காதுகளிலும் சொல்ல வேண்டிய காரணம் என்ன? முருகனுடைய உபதேசம் கேட்கத் திகட்டாதது. மருந்தானாலும் விருந்து போனது. ஒரு முறை கேட்டதும் போதவில்லை சிவனுக்கு. மற்றொரு காதையும் காட்டுகிறார். என்ன கொடுப்பினை!
பக்தியுடன்,
கோ.இராகவன்
Tuesday, April 11, 2006
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
இராகவன்,
சரியான நேரத்தில் தான் இந்தப் பாடலை என் 'பங்குனி உத்திரம் - 3' பதிவில் போட்டு பொருளை இராகவன், இராமநாதன் பதிவுகளில் போய் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறேன்.
பங்குனி உத்திரத்திற்கு சிறப்புப் பதிவு ஏதும் இல்லையா?
// பங்குனி உத்திரத்திற்கு சிறப்புப் பதிவு ஏதும் இல்லையா? //
பங்குனி உத்திரச் சிறப்புப் பதிவா...அதுதான இது :-)
// சரியான நேரத்தில் தான் இந்தப் பாடலை என் 'பங்குனி உத்திரம் - 3' பதிவில் போட்டு பொருளை இராகவன், இராமநாதன் பதிவுகளில் போய் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறேன். //
ஆகா......நீங்களே எழுதியிருக்கலாமே.....நானும் படித்து மகிழ்ந்திருப்பேனே.....
//வேலையும் சேவலையும் போற்றிப் புகழ வேண்டும். அதுவும் தீந்தமிழில். அப்படிப் புகழ்ந்து பாட வேண்டுன்ற ஆவலைத் தருவீர் வேலவரே என்று வேண்டுகிறார். இறைவனைப் பாடுகின்ற ஆர்வம் கூட இறையருளால்தான் தோன்றும். அப்படியிருக்க தமிழறிவு வாய்ப்பது என்பது......இறைவனின் பரிபூரணக் கருணையைக் காட்டுகிறது.//
உங்களது உரையை படிக்கும்போது அந்த பரிபூரண கருணை உங்களுக்கு இருக்கிறது. என்று தெரிகிறது. மெய்பொருள் என்பது முருகன் பேசிய பிரணவ பொருளான ஓம் அல்லவா.பிரணவத்தின் உண்மை பொருளை சிவன் முலமாக நமக்கு உண்ர்த்தியவன்.தி ரா ச
ராகவன்! படித்தேன் மகிழ்ந்தேன். காலையிலேயே ஒரு நல்ல சொல்பொழிவு.
//இறைவனைப் பாடுகின்ற ஆர்வம் கூட இறையருளால்தான் தோன்றும். அப்படியிருக்க தமிழறிவு வாய்ப்பது என்பது // உங்களை பார்த்தாலும் அப்படித் தான் தோன்றுகிறது ராகவன். கந்தனின் கருனையை அழகாக சொல்கிறீர்களே. அருமை. (ஐயா தி.ரா.ச சொன்னது மாதிரியே)
/கடன் கொடுத்தோரும் கேட்டோரும் கூடிக் கதறி அழும். // :-)))
// உங்களது உரையை படிக்கும்போது அந்த பரிபூரண கருணை உங்களுக்கு இருக்கிறது. //
தி.ரா.ச அனைத்தும் முருகனருள்.
கற்றது கைமண்ணளவு என்று உற்ற கலைமடந்தை ஓதுகிறாள்....நானெங்கே! ஆயிரும் நீங்கள் சொன்னது போல இவ்வளவாவது தெரிந்திருக்கிறது என்றால் அது முருகனின் கருணையன்றி வேறெது.
// என்று தெரிகிறது. மெய்பொருள் என்பது முருகன் பேசிய பிரணவ பொருளான ஓம் அல்லவா.பிரணவத்தின் உண்மை பொருளை சிவன் முலமாக நமக்கு உண்ர்த்தியவன்.தி ரா ச //
உண்மை ஐயா...அப்பனும் மகனும் சேர்ந்து நடத்திய நாடகத்தை உலகறியுமே. அது அறிவாகுமே!
// ராகவன்! படித்தேன் மகிழ்ந்தேன். காலையிலேயே ஒரு நல்ல சொல்பொழிவு. //
நன்றி சிவா. ஒரு சின்ன திருத்தம். சொற்பொழிவு என்று சொல்ல வேண்டும். புணர்ச்சி விதி அப்படி. :-)
// /கடன் கொடுத்தோரும் கேட்டோரும் கூடிக் கதறி அழும். // :-))) //
இதை ரசித்தீர்களா :-) ஆங்காங்கு தெரியாமல் இது போல அங்கங்கு ஒளித்து வைப்பேன். இந்த முறை நீங்கள் கண்டு பிடித்து விட்டீர்கள். மிகுந்த மகிழ்ச்சி.
//நல்ல சொல்பொழிவு// இது ஒரு எழுத்துப் பிழையே ராகவன் :-)). அதுக்காக நம்ம எழுத்தில் பிழையே வராது என்று நினைத்து விடாதீர்கள் :-)
நியமாகவே நீங்கள் ஒளித்து வைத்த வரியை படித்து வாய்விட்டு சிரித்தேன்.
சே! மறுபடியும் ஒரு எழுத்துப்பிழை..அது நிஜமாகவே..நியமாகவே அல்ல..ஹி ஹி ஹி..
Post a Comment