ஆசானுடைய அருளிருந்தாலன்றி சீடன் கற்க முடியாது. முருகனுடைய அருளின்றி முருகனைப் பற்றித் தெரியவும் புரியவும் முடியாது. புரிந்தும் புரியாதது போல இருக்கிறதல்லவா. இதை இன்னமும் எளிமையாகப் பார்ப்போம். மிகவும் சாதுவான விலங்கு பசு. ஆகையால் அது சிறந்த வீட்டு விலங்காக இருக்கிறது. பசுவின் பால் உடல் நலத்திற்கு மிகவும் நன்று. பசுவின் மடியிலிருந்து பாலைப் பெற வேண்டும். அதற்குப் பசுவின் அருள் வேண்டும். வேண்டாதவர் தீண்ட முடியுமா? பிறகு பற்களைத் தேடத்தான் வேண்டும். ஆக எந்த ஒன்றிலிருந்தும் ஒன்றைப் பெற அந்த ஒன்றின் அருள் வேண்டும்.
முருகன் தனிவேல் முனிநம் குருவென்று
அருள் கொண்டறியார் அறியும் தரமோ
உருவன் றருவன் றுளதல் றிலதன்
றிருளன் றொளியன் றெனநின்றதுவே
(உருவன்று இருளன்று உளதன்று இலதன்று
இருளன்று ஒளியன்று என நின்றதுவே)
இந்த உலகத்தின் இயக்கத்திற்கு முருகனே (இறைவனே) விளக்கம். அப்படிப்பட்ட உலகிலே எதையும் அறிவதற்கு முருகனின் அருள் வேண்டும். முருகனை ஆசானாகக் கொண்டு அறிந்தாலொழிய எதுவும் அறிந்து கொள்ள முடியாது. முருகனைத் தனிவேல்முனி என்கிறார். வேல் தனியானது. ஆம். போர்க்களத்தில் வேல் நின்றால் யாரும் போரிட வர மாட்டார்கள். வேல் தனியாகத்தான் நிற்க வேண்டும். கதிர்வேலுக்கு எதிர்வேல் ஏது?
உருவமும் அருவமும் இல்லாதவர் முருகன். உருவம் இல்லையென்றால் அருவம்தானே. ஆனால் இங்கே உருவமும் அருவமும் இல்லாதவர் என்று கூறுகிறார். இருப்பது இல்லாதது என அனைத்தையும் கடந்த கடவுள் கந்தன். பகலிலே ஒளி. இரவிலே இருள். இந்த இரண்டிற்கும் அப்பாற்பட்டவம் இறைவன். இதுதான் கடைசி இரண்டடிகளுக்கான விளக்கம். எவ்வளவு எளிமையான கருத்து. இதை இப்படியே பொருள் கொண்டாலும் சரிதான். வாரியார் சுவாமிகள் இந்தப் பொருளையும் உடைத்து உட்பொருள் கண்டு சொல்லியிருக்கிறார். தமிழ்க்கடலல்லவா அவர்! அவரது விளக்கத்தைப் பார்ப்போம்.
"நாத விந்து கலாதி நமோநம" என்கிறது திருப்புகழ். நாதம் என்பது சேவல். ஓங்காரத்தைக் கொக்கரித்து உரைக்கும். மயில் ஓங்காரத்தை வடிவில் காட்டும். மயிற்பீலி விந்தின் வடிவம். நாதமும் விந்துவும் கூடியது உலக இயக்கம். முன்பே சொன்னது போல உலக இயக்கம் என்பது முருகனின் விளக்கம். அதனால்தான் "நாத விந்து கலாதி நமோநம" என்கிறது பழநி திருப்புகழ்.
விந்துவின் வடிவமான மயிலின் தோகை உருவம். நாதத்தின் வடிவமான சேவலின் ஒலி அருவம். (உருவன்று அருவன்று). விந்து உள்ளது. நாதம் இல்லாதது. (உளதன்று இலதன்று). இருண்ட மேகத்தைக் கண்டு மகிழ்ந்து ஓங்கார வடிவில் ஆடும் மயில். இருள் தீர்ந்து பகலவன் ஒளி பெருக்கும் வேளையில் ஓங்கார நாதமாகக் கூவுகது சேவல். (இருளன்று ஒளியன்று). உருவுக்கும் அருவுக்கும், இருப்பதிற்கும் இல்லாததிற்கும், இருளுக்கும் ஒளிக்கும் இடையில் நின்று வேலால் காப்பவன் முருகன். அவனை ஆசானாகப் பெற்று கற்றாலொழிய வேறு உய்வில்லை.
இந்தக் கருத்தைத்தான் கந்தரலங்காரத்தில் சொல்கிறார். கோழிக்கொடியனுடைய அடி பணியாமல் குவலயத்தில் (உலகத்தில்) வாழக் கருதுகின்ற மதியற்றவர்களே, ஊழ் எனப்படும் விதியின் கொடுமையிலிருந்து தப்பிப்பது வேறு எப்படி!
கோழிக் கொடியனடி பணியாமற் குவலயத்தே
வாழக்கருதும் மதியிலிகாள் உங்கள் வல்வினைநோய்
ஊழிற் பெருவலியுண்ணவொட்டாது!
பக்தியுடன்,
கோ.இராகவன்
Monday, April 24, 2006
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
இராகவன்,
அருமையாக விளக்கம் சொல்லியிருக்கிறீர்கள். வாரியார் சொன்ன விளக்கத்தை இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல்லியிருக்கலாம். ஏதோ அவசரமாய் எழுதியது போல் தெரிகிறது. (பாடலின் இரண்டாவது வரியைப் பிரித்துச் சொன்னதில் தட்டச்சுப் பிழையும் உள்ளது). என்ன அவசரம்? அலுவலகம் போக வேண்டிய அவசரமா?
இந்தப் பாடலுக்கு அடியேனுக்குத் தோன்றும் விளக்கத்தைப் பின்னர் சொல்கிறேன்.
முருகன் தனிவேல் முனி நம் குரு என்று
அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ
இந்த வரிகளுக்கு உங்கள் விளக்கம் போதும். மேல் விளக்கம் என்னிடம் இல்லை.
உருவன்று அருவன்று உளதன்று இலதன்று
இருளன்று ஒளியன்று என நின்றதுவே.
இந்த இரு வரிகளுக்கு எனக்குத் தோன்றும் விளக்கம்:
சைவ சிந்தாந்தத்தின் முப்பெரும் தத்துவங்கள் பதி, பசு, பாசம் எனப்படுபவை. தத்துவம் என்றால் அடிப்படையான இருப்பு உள்ளதொன்று. இந்தப் பிரபஞ்சத்தில் இருப்பவை அனைத்தையும் பதி, பசு, பாசம் என்பவற்றுள் அடக்கிவிடலாம். அதனால் இவை தத்துவங்கள் எனப்படுகின்றன. உயிராகிய ஜீவன் பசு என்றும், அந்த பசு அனுபவிக்கும் இந்த உலகம், உடல், புலன்கள், மனம், புத்தி (உயிரைத் தவிர மற்ற எல்லாமும்) பாசம் என்றும், இந்த இரண்டுக்கும் உரியவனான இறைவன் பதி என்றும் கூறுவார்கள். பசுவின் ஞானத்தை மறைத்து, பதியினை அறியாமல் தடுப்பதால் உடல் முதல் உள்ளவற்றைப் பாசம் என்பார்கள்.
இதில் பாசம் உருவம் உள்ளது; நிலையற்றது - அதனால் இலதென்று சொல்லப்படுவது; தன்னறிவு இல்லாதது, தான் இருக்கிறோம் என்ற அறிவு இல்லாதது, அறிவு என்னும் ஒளி இல்லாதது - அதனால் இருள் வடிவானது.
பசுவாகிய ஜீவன் உருவம் இல்லாதது - அருவமானது; நிலையானது - அதனால் உளதென்று சொல்லப்படுவது; தன்னறிவு உள்ளது, தான் இருக்கிறோம் என்ற அறிவு உடையது, அறிவெனும் ஒளி கொண்டது - அதனால் ஒளி வடிவானது.
இறைவனாகிய முருகனோ
உருவமான பாசமும் அல்லன்; அருவமான பசுவுமல்லன்.
உளதென்னும் பசுவும் அல்லன்; இலதென்ற பாசமுமல்லன்.
இருளான பாசமும் அல்லன்; ஒளியான பசுவுமல்லன்.
இவற்றினை எல்லாம் உரியவனான 'பதி' அவன். நம்மையும் நமதுடைமையையும் உடையவன் அவன்.
// அருமையாக விளக்கம் சொல்லியிருக்கிறீர்கள். //
நன்றி குமரன்.
// வாரியார் சொன்ன விளக்கத்தை இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல்லியிருக்கலாம். ஏதோ அவசரமாய் எழுதியது போல் தெரிகிறது. (பாடலின் இரண்டாவது வரியைப் பிரித்துச் சொன்னதில் தட்டச்சுப் பிழையும் உள்ளது). என்ன அவசரம்? அலுவலகம் போக வேண்டிய அவசரமா? //
எனக்கும் அதேதான் தோன்றியது. போதுமா போதுமா என்று யோசித்துத்தான் போதும் என்று நிறுத்தினேன்.
பிழைகள் எங்கிருக்கிறது என்று சுட்டிக்காட்டுங்கள். பொதுவாகவே நமது பிழைகள் நமக்குத் தெரிவதில்லை.
// இந்தப் பாடலுக்கு அடியேனுக்குத் தோன்றும் விளக்கத்தைப் பின்னர் சொல்கிறேன். //
கீழே சொல்லியிருக்கீர்கள். அதைப் படித்துக் கருத்து சொல்கிறேன்.
ராகவன்,
அருமை. தலைப்பைப் பார்த்ததும் நான்கூட உண்மையிலேயே இதுபோல முருகனின் ஒலியும் ஒளியுமோ என்று நினைத்துவிட்டேன் :-).
அற்புதமாக விளக்கம். மீண்டும் மீண்டும் படித்து பொருளை உணர்ந்து மனத்திலிருத்திக் கொண்டேன்.
உருவம் அருவம் என்பதற்கு நீங்கள், குமரன் இருவரும் அளித்த விளக்கம் மிக நன்று.
இறைவனை உணர்ந்த ஞானிகள் அனைவருமே இந்த விஷயத்தில் ஒன்றுபடுகிறார்கள் என்பது என் கருத்து.
அவனை எந்த உருவில் நாம் காண்கிறோமோ அதுவாகவே நமக்குத் தெரிகிறான். அருவமாகக் காண்போருக்கு அருவமாகத் தெரிகிறான்.
"உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மணியாய் மணியாய் ஒளியாய்" இருப்பவன்
ஆனால் அவன் உண்மையில் இவை இரண்டையும் கடந்தவன்.
உளன் எனில் உளன்; அவன் உருவம் இவ் வுருவுகள்
உளன் அலன் எனில், அவன் அருவம் இவ் வருவுகள்
உளன் என இலன் என இவை குணம் உடைமையின்
உளன் இரு தகையொடு ஒழிவு இலன் பரந்தே - நம்மாழ்வார்
தாயுமானவரும்
"அருவென் பனவுமன்றி
உருவென் பனவுமின்றி
அகமும் புறமுமின்றி-முறைபிறழாது
குறியுங் குடிணமுமன்றி
நிறைவுங் குறைவுமன்றி"
"இருளென் பதுவுமன்றி
ஒளியென் பதுவுமன்றி
எவையுந் தனுளடங்க-ஒருமுத லாகும்
உளதென் பதுவுமன்றி
இலதென் பதுவுமன்றி"
என்றே தான் உணர்ந்த இறைவனைச் சொல்கிறார்.
நாம் நன்மை என்று சொன்னால் அதற்கு எதிர்பதமான தீமை என்றும் ஒன்று உன்டு . இருள் என்றால் ஒளியும் உண்டு. எல்லா குணங்களுக்கும் இரட்டைத்தன்மை உண்டு. இறைவன் அந்த தன்மைகளைக் கடந்தவன். லலிதா சகஸ்ரநாமத்தில் "த்வைத வர்ஜிதா" என்று தேவிக்கு ஒரு நாமம் உண்டு. நல்லது தீயது, ஒளி இருள் போன்ற த்வைத (இரட்டை) நிலைகளைக் கடந்தவள் என்பதே அதன் பொருள்.
" இருதன்மை நாடாமல் நடுவே சும்மா தானமரும் நிலையிதுவே"
குமரன் நீங்கள் சொல்லும் விளக்கம் புதுமையாக உள்ளது. நான் இப்படிக் கேள்விப் பட்டதில்லை. ஆனாலும் பொருந்துகிறார்ப் போலத்தான் இருக்கிறது.
// ராகவன்,
அருமை. தலைப்பைப் பார்த்ததும் நான்கூட உண்மையிலேயே இதுபோல முருகனின் ஒலியும் ஒளியுமோ என்று நினைத்துவிட்டேன் :-). //
நன்றி முத்து. நீங்கள் சுட்டியில் கொடுத்திருந்த ஒலியும் ஒளியுமை இறக்கம் செய்து கண்டுகேட்டேன். மிக அருமை. இதுபோல இன்னமும் ஒலியும் ஒளியும் இருக்கிறதா? :-) இருந்தால் கொடுங்களேன்.
// அற்புதமாக விளக்கம். மீண்டும் மீண்டும் படித்து பொருளை உணர்ந்து மனத்திலிருத்திக் கொண்டேன்.
உருவம் அருவம் என்பதற்கு நீங்கள், குமரன் இருவரும் அளித்த விளக்கம் மிக நன்று.
இறைவனை உணர்ந்த ஞானிகள் அனைவருமே இந்த விஷயத்தில் ஒன்றுபடுகிறார்கள் என்பது என் கருத்து. //
உண்மைதான் ஜெயஸ்ரீ. ஞானத்தை வென்றவர்கள் ஒன்றுவதில் வியப்பென்ன. ஆகையால்தால் பெரியவர்களின் சொற்களைப் படிக்கையில் பொதுமை தெரிகிறது.
நீங்கள் குறிப்பிட்ட தாயுமானவர் வரிகளும் அப்படித்தானே.
//உருவன் றருவன் றுளதல் றிலதன்
றிருளன் றொளியன் றெனநின்றதுவே
(உருவன்று இருளன்று உளதன்று இலதன்று
இருளன்று ஒளியன்று என நின்றதுவே)
//
இராகவன்,
பிழை இந்த கடைசி இரண்டுவரிகளைப் பிரித்துக் கூறியதில் இருக்கிறது. 'உருவன் றருவன்'றென்பதனை 'உருவன்று அருவன்று' என்று சொல்லாமல், 'உருவன்று இருளன்று' என்று சொல்லியிருக்கிறீர்கள்.
அடியேன் சொன்னது புதுமையான விளக்கம் இல்லை இராகவன். மிகப் பழைய விளக்கம் அது. Jayashree பல எடுத்துக்காட்டுகள் கூறியிருக்கிறார். அதில் 'உருவாய் அருவாய் உளதாய் இலதாய்' என்பதற்கும் நம்மாழ்வாரின் பாசுரத்திற்கும் நான் படித்தப் பொருள் இது தான். என்ன நம்மாழ்வாரின் பாசுரத்தை விளக்கும் போது பசு, பாசம், பதி என்று சொல்லாமல் வைணவத்தில் அவற்றை சேதனம் (அறிவுள்ளது), அசேதனம் (அறிவில்லாதது), ஈஸ்வரன் (உடையவன்) என்று சொல்வார்கள். அதே மாதிரி சைவ சிந்தாந்தத்தில் பதியென்பது பசுபதியாகிய சிவபெருமான்; வைணவ சிந்தாந்தத்தில் ஈஸ்வரன் (உடையவன்) 'நம்மை உடையவன் நாராயணன்'. :-) மற்றபடி தத்துவங்கள் எல்லா இடத்திலும் ஏறக்குறைய ஒரே மாதிரி தான் இருக்கின்றன.
ராகவன்,
உண்மையிலேயே அருமையாக அதைப் பதிவு செய்திருக்கிறார்கள். எனக்கும் பிடித்திருந்தது. ஓசியில் சினிமா மற்றும் மெகாசீரியல்கள் இணையத்தில் தரும் ஆயிரெத்தெட்டு தளங்களில் ஒன்றில் அதிசயமாய் இதுவும் காணக் கிடைத்தது.
வழக்கம் போலவே உங்கள் சொற்பொழிவு நடையில் அழகாக சொல்லி இருக்கிறீர்கள். உருவமும் அருவமும் இல்லாதவன் என்பது புதிதாக இருக்கிறது. இறைவன் உருவம் இல்லாதவன், தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்போம். ஆனால் அருவமும் இல்லாதவன் என்றால் கொஞ்சம் புதிதாக தான் இருக்கிறது. நம் அறிவுக்கு அப்பாற்பட்டவன் தானே இறைவன்.
Post a Comment