Monday, March 20, 2006

9. குமரி பெற்ற குமரன்

அமரும் பதிகேள் அகமாம் எனுமிப்
பிமரங் கெடமெய்ப் பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பொரு தானவ நாசகனே


குமரன் யார்? கிரி ராஜகுமாரியின் மகன். எந்த கிரி? மேரு கிரி. இமயமலையரசன் இமவான் பெற்ற மகள் பார்வதி. பர்வத ராஜகுமாரி பார்வதி என்றும் கூறுவார்கள். அகிலாண்ட கோடி பிரும்மாண்ட நாயகி அவள். "அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையே! பின்னையும் கன்னியென மறை பேசும்!" உலகமனைத்தையும் பெற்றவளைக் கன்னியென மறைகள் கொண்டாடுகின்றன. அப்படிப்பட்ட கன்னியின் மகன் குமரனே! என்ன வியப்பு! கன்னி பெற்ற மகனா? கிருத்துவ வேதாகமங்களும் அப்படித்தான் சொல்கின்றன. மரியன்னையின் மைந்தன் ஏசுவைத்தானே உலக கிருத்துவர் தொழுகின்றனர். ஆயினும் கன்னி மேரி என்ற வழக்கும் உண்டே. அதுபோலத்தான் அருணகிரி இங்கே "குமாரி பெற்ற குமரன்" என்று குறிப்பிடுகிறார்.

சமர் என்றால் போர். போர்க்களத்தில் தன்னோடு பொருதும் தானவர்களை நாசம் செய்கின்றவனே! தானவர்கள் என்றால் அரக்கர்கள். கஸ்யபரின் மனைவிகளில் ஒருவளான தானை என்பவள் பெற்ற பிள்ளைகள் தானவர்கள் என்றும் கூறுவார்கள். போரிடுவதற்கு இறைவனுக்கு எதிரிகள் உண்டா? இல்லை. இறைவனுக்கு எதிரிகள் இருக்க முடியுமா? முடியாது. ஆனால் இறைவன் அடியார்களுக்கு எதிரிகள் இருப்பார்கள். தேவர்களைச் சிறையிட்ட சூரனால் முருகனைச் சிறையிட முடியுமா? இல்லை அப்படி நினைத்துப் பார்க்க முடியுமா? இறைவன் போர்க்கோலம் பூண்டிருப்பது அடியார்களின் பகையைத் தீர்க்க. திருஞான சம்பந்தர் தங்கியிருந்த சத்திரத்திற்கு நெருப்பு வைத்தார்கள். இறைவன் கருணை மழை பொழிந்தான். திருநாவுக்கரசை சுண்ணாம்புக் காளவாயிலில் இட்டார்கள். நீறு நீர்த்துப் போனது. அவரையே கல்லில் கட்டி கடலில் போட்டார்கள். அலை தாலாட்டியது.
பட்டினத்தடிகளுக்கு அப்பத்தில் நஞ்சு வைத்தார்கள். அது வைத்தவர் வீட்டைப் பற்றியது. ஆக அடியவர்களுக்குத் துன்பம் வருகையில் போரிட்டு அழிப்பவன் இறைவன். இது எந்த மதத்திற்கும் பொருந்தும்.

இதே வரிக்கு வேறு விதமாகவும் பொருள் கொள்ளலாம். நம்மோடு போருக்கு வரும் காமம், வஞ்சகம், தீய எண்ணங்கள், மதம், மாச்சர்யங்கள் ஆகியவைகளை எதிர்த்துப் போரிட்டு அழித்து நம்மைக் காக்கும் வேலன் என்றும் கொள்ளலாம். நமக்குள் எழும் தீய எண்ணங்களை அழிப்பது எப்படி? மருந்து சாப்பிட வேண்டும். எந்த மருந்து? அருள் தரும் தமிழ்க் கந்த மருந்து. உள்ளேயிருக்கும் அழுக்குகளைப் போக்க வெளியே இருக்கும் மருந்து உள்ளே போக வேண்டும் அல்லவா. அதுபோல உள்ளத்தில் இருக்கும் தீயவை போக இறைவனை அந்த உள்ளத்தில் குடியேற்ற வேண்டும். தீயவை அகலும். தூயவை பெருகும்.

இப்பொழுது பாடலின் முதல் இரண்டு வரிகளைப் பார்க்கலாம். சற்று முதிர்ந்த வரிகள். "அமரும் பதிகேள் அகமாம்" என்பதை "அமரும் பதி, கேள், அகம்" என்று பிரிக்க வேண்டும். பதி என்றால் வாழும் ஊர். திருவிளையாடற் புராணம் மதுரையை மதுரையம்பதி என்று சிறப்பிக்கிறது. சிலப்பதிகாரத்திலும் இந்த சொல் கையாளப்பட்டுள்ளது. "நீ யார்?" என்று வினவிய பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு விடையளிக்கையில் சொல்கிறார் கண்ணகி, "பெரும் பெயர்ப் புகார் என் பதியே." அமர்தல் என்றால் உட்கார்தல் அல்லது உறைதல். அமரும் பதி என்றால்? உட்காரும் கணவன் அல்ல. உறையும் ஊர். கேள் என்றால் வினவுவது எனலாம். ஆனால் இங்கே உறவுமுறைகளைக் குறிக்கும். "யாதும் ஊரே யாவும் கேளிர்" என்ற கனியன் பூங்குன்றனார் வாக்கை நினைவில் கொள்க.

அகம் என்றால் வீடு. எனது ஊர், எனது உறவுகள், எனது வீடு என்று கிறங்கும் மயக்கம். அதைத்தான் பிமரம் என்கிறார். பிரமை என்ற சொல் மருவிச் சிதைந்து இங்கே பிமரமானது. மனப் பிரமை என்றால் மன மயக்கம். அத்தகைய மயக்கம் கெட பேசியவா என்கிறார் முருகனை. முருகன் என்ன பேசினார்? மெய்ப் பொருள் பேசினார். உலகப் பற்றுகளோடு வாழ்ந்த அருணகிரி நாதருக்கு உபதேசம் பேசினார் முருகன். அந்த உபதேசத்தால் உலகப் பற்று போய் இறைப் பற்று வந்தது.

அன்புடன்,
கோ.இராகவன்

18 comments:

said...

< ! --

அருணகிரி இங்கே "குமாரி பெற்ற குமரன்" என்று குறிப்பிடுகிறார்
--- >

அருணகிரியின், முருகனை நேரில் கண்ட பெம்மானின் எழுத்துகளை படிப்பதென்றால் அது தனியானந்தம் தான்.

திருப்புகழிலா தெரியவில்லை. " மைந்தா வருக, மகனே வருக, எந்தை வருக.. இரகுநாதா வருக "என்றிருக்கும் ( வரிகள் சரியாக இருக்கிறதா தெரியவில்லை. மைந்தனுக்கும் மகனுக்கும் என்ன வேறுபாடு ?? இது பற்றி கிருபானந்த வாரியார் எழுதியிருந்தது பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன்.. புத்தகம் கிடைக்க வில்லை. விளக்கம் பிளீஸ்

அன்புடன்
ஜீவா

said...

ராகவன்!

படித்தேன். மகிழ்ந்தேன். முன்பெல்லாம் பொதுவாக ஆன்மீகம் படிக்க கொஞ்சம் கஷ்டமா இருக்கும். ஆனா உங்கள் நடையில் ரொம்பவே என்னை கவர்ந்து விட்டது ராகவன். 'திருவிளையாடல்' 'திருஞானசம்பந்தர்' மாதிரி பக்தி படம் பார்ப்பது, TMS/சீர்காழி பாட்டு கேட்டு உருகுவதோடு நம்ம பக்தி நின்னு போச்சு. அதனால படிச்சிட்டு திருப்பி ஒன்னும் கேட்க தெரியலை. தப்பா எடுத்துக்காதீங்க. உங்க பதிவுகள் லேசா என்னில் கொஞ்சம் அறிவை வளர்க்கிறது. அதற்கு நன்றி.

அன்புடன்,
சிவா

said...

// அருணகிரியின், முருகனை நேரில் கண்ட பெம்மானின் எழுத்துகளை படிப்பதென்றால் அது தனியானந்தம் தான். //

உண்மைதான். முருகனை முழுதுணர்ந்த மாமனிதர் அவர். தமிழ் பிழைக்க வந்த இறைத்தூதர்.

// திருப்புகழிலா தெரியவில்லை. " மைந்தா வருக, மகனே வருக, எந்தை வருக.. இரகுநாதா வருக "என்றிருக்கும் ( வரிகள் சரியாக இருக்கிறதா தெரியவில்லை. மைந்தனுக்கும் மகனுக்கும் என்ன வேறுபாடு ?? இது பற்றி கிருபானந்த வாரியார் எழுதியிருந்தது பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன்.. புத்தகம் கிடைக்க வில்லை. விளக்கம் பிளீஸ்

அன்புடன்
ஜீவா //

ஜீவா, எனக்கும் இந்த வரிகள் மிகவும் பழக்கமானவையாகவே இருக்கின்றன. எங்கு படித்தேன்...ம்ம்ம்..கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். தேடிப் பார்க்கிறேன்.

said...

// படித்தேன். மகிழ்ந்தேன். முன்பெல்லாம் பொதுவாக ஆன்மீகம் படிக்க கொஞ்சம் கஷ்டமா இருக்கும். ஆனா உங்கள் நடையில் ரொம்பவே என்னை கவர்ந்து விட்டது //

நன்றி சிவா. அடிக்கடி வாங்க. என்னால முடிஞ்ச வரைக்கும் சொல்றேன்.

// ராகவன். 'திருவிளையாடல்' 'திருஞானசம்பந்தர்' மாதிரி பக்தி படம் பார்ப்பது, TMS/சீர்காழி பாட்டு கேட்டு உருகுவதோடு நம்ம பக்தி நின்னு போச்சு. அதனால படிச்சிட்டு திருப்பி ஒன்னும் கேட்க தெரியலை. தப்பா எடுத்துக்காதீங்க. உங்க பதிவுகள் லேசா என்னில் கொஞ்சம் அறிவை வளர்க்கிறது. அதற்கு நன்றி.

அன்புடன்,
சிவா //

சிவா...நீங்க கண்டிப்பா கேள்வி எதுவும் கேக்கனுமுன்னு அவசியமில்லை. ஆனா படிச்சதுல எதுவுஞ் சந்தேகம் வந்துச்சுன்னா தயங்காம கேளுங்க....

said...

jeeves,

"எந்தை வருக ரகுநாயக வருக
மைந்த வருக மகனே இனி வருக
என்கண் வருக எனதாருயிர் வருக அபிராம

இங்கு வருக அரசே வருக முலை
உண்க வருக மலர்சோடிட வருக
என்று பரிவினொடு கோசலை புகல வருமாயன்

சிந்தை மகிழு மருகா"


இந்த வரிகள் திருப்புகழில் வருகின்றன. பல இடங்களில் திருமாலைப் புகழ்ந்து, பின் அவனது மருமகனே என்று முருகப்பெருமானை அருணகிரியார் கூறுவார் . இதுவும் அப்படியே.

என் தந்தையே வருக ( அன்னையர் தங்கள் பிள்ளைகளை "என்னை பெற்ற அப்பா" என்று கொஞ்சுவதைக் கேட்டிருப்பீர்கள்), சூர்யவம்ச தலைவனே வருக, என்று கோசலை கொஞ்சும் ராமனகிய திருமாலின் மனம் மகிழச்செய்யும் மருமகனே என்று பொருள்படும்.

மைந்தன் என்ற சொல்லுக்கு மகன் என்பதோடு மாணவன்(சிஷ்யன்), வீரன், வலிமையானவன் என்ற பல பொருள்களும் உண்டு.

said...

சரியாக எடுத்துக் கொடுத்தீர்கள் ஜெயஸ்ரீ. அருமையான பாடல். அருமையான விளக்கம்.

தமிழ் பிழைக்கவும் மத ஒற்றுமை நிலைக்கவும் அருணகிரி பட்ட பாடுகள் ஒவ்வொன்றும் அவர் பாடிய பாட்டுகள்.

said...

ராகவன்,

ஒவ்வொரு பாடலுக்கும், உங்கள் விளக்கங்களில் தெளிவும் மெருகும் கூடிக்கொண்டே போகிறது. தெள்ளத்தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.

"மகமாயை களைந்திட வல்லபிரான்" அல்லவா அவன்?

"இருந்த வீடும் கொஞ்சிய சிறுவறு முறுகேளும்
இசைந்த வூரும் பெண்டிரு மிளமையும் வளமேவும்
விரிந்த நாடும் குன்றமு நிலையென மகிழாதே
விளங்கு தீபம் கொண்டுனை வழிபட அருள்வாயே "

நானிருக்கும் இல்லமும், என்னைகொஞ்சும் என் பிள்ளைகளும், நான் மகிழ்ந்து இசைந்து வாழும் என் ஊரும் அதன் மக்களும், என் அன்பு மனைவியும், பரந்து விரிந்து இன்கனிச்சோலைகளும், தண்சுனைகளும் நிறைந்த நாடும் மட்டுமே என்றும் சாஸ்வதம் என்று அதிலேயே மூழ்காமல், உள்ளொளி தீபமேற்றி உன்னை வழிபட அருள்செய்வாய், முருகப்பெருமானே

என்று திருப்புகழில் வேண்டியதற்கு இசைந்து அருணகிரியாருக்கு 'பிமரம் கெட மெய்ப்பொருள் உரைத்து ', அவரை ஆட்கொண்டுவிட்டான். மாயை ஒழிந்து, அனுபூதி கிடைத்தது.

said...

போரிடுவதற்கு இறைவனுக்கு எதிரிகள் உண்டா? இல்லை. இறைவனுக்கு எதிரிகள் இருக்க முடியுமா? முடியாது. ஆனால் இறைவன் அடியார்களுக்கு எதிரிகள் இருப்பார்கள். தேவர்களைச் சிறையிட்ட சூரனால் முருகனைச் சிறையிட முடியுமா? இல்லை அப்படி நினைத்துப் பார்க்க முடியுமா? இறைவன் போர்க்கோலம் பூண்டிருப்பது அடியார்களின் பகையைத் தீர்க்க

உண்மைதான் ஜி.ராகவன்(கொஞ்சம் மாற்றி ராகவன் ஜி என்று அழைக்கலாமோ இனிமேல். முருகனைப்பற்றியும் திருப்புகழைப்பற்றியும் சிறப்பகப் பிரபலப்படுதியவர் குரு. ரகவன் ஜி) இறைவன் தனக்கு கெடுதல் செய்தவர்களையும் பொறுத்துக்கொள்வான் ஆனால் தன் அடியார்களுக்கு துன்பம் செய்தவர்களை தண்டிக்காமல் விடவேமாட்டான். இது எப்படி என்றால் நல்ல சித்திரை மாத மண்டைபிளக்கும் வெய்யிலில் அவன் தலைமீது நேராக அடிக்கும் வெய்யிலை பொறுத்துக்கொண்டு குடையில்லாமல் மனிதனால் நடக்கமுடியும்.ஆனால் அதே வெய்யில் தரையில் பட்டு எதிரொலிக்கும் போது தார் ரோடின்மீது செருப்பில்லாமல் நடக்கமுடியாது.தலை வெய்யிலைப் பொருத்துக்கொள்ளும் ஆனல் கால் கொள்ளது அது போன்றுதான் கருணைகூர் ஆறுமுகங்கள் ஒருமுகம் போதாதுஎன்று அடியவர்களை காப்பதற்காக காத்துக்கொண்டு இறுக்கின்றான்.அருணகிரிக்கு உபதேசம் செய்வதின் முலம் நமக்கு செய்வதாக எடுத்க்கொள்ளலாம் தி ரா ச

said...

// ஒவ்வொரு பாடலுக்கும், உங்கள் விளக்கங்களில் தெளிவும் மெருகும் கூடிக்கொண்டே போகிறது. தெள்ளத்தெளிவாக விளக்கியுள்ளீர்கள். //

நன்றி ஜெயஸ்ரீ. எல்லாப் புகழும் முருகனுக்கே.

ஒவ்வொரு செய்யுளுக்கும் விளக்கம் சொல்லி முடித்ததும் அதற்கு நீங்கள் தரும் பின்னூட்டமும் அதன் கருத்துகளும் மிக அழகு. :-)

said...

// உண்மைதான் ஜி.ராகவன்(கொஞ்சம் மாற்றி ராகவன் ஜி என்று அழைக்கலாமோ இனிமேல். முருகனைப்பற்றியும் திருப்புகழைப்பற்றியும் சிறப்பகப் பிரபலப்படுதியவர் குரு. ரகவன் ஜி)//

நானும் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். திருப்புகழ் அன்பர்கள் சபை ஏற்படுத்தித் திருப்புகழையும் முருகபக்தியும் அருணகிரியின் பெருமையும் பரப்பும் அவரோடு என்னை ஒப்பிட வேண்டாம். நான் சின்னஞ் சிறுவன்.

// இறைவன் தனக்கு கெடுதல் செய்தவர்களையும் பொறுத்துக்கொள்வான் ஆனால் தன் அடியார்களுக்கு துன்பம் செய்தவர்களை தண்டிக்காமல் விடவேமாட்டான். இது எப்படி என்றால் நல்ல சித்திரை மாத மண்டைபிளக்கும் வெய்யிலில் அவன் தலைமீது நேராக அடிக்கும் வெய்யிலை பொறுத்துக்கொண்டு குடையில்லாமல் மனிதனால் நடக்கமுடியும்.ஆனால் அதே வெய்யில் தரையில் பட்டு எதிரொலிக்கும் போது தார் ரோடின்மீது செருப்பில்லாமல் நடக்கமுடியாது.தலை வெய்யிலைப் பொருத்துக்கொள்ளும் ஆனல் கால் கொள்ளது அது போன்றுதான் கருணைகூர் ஆறுமுகங்கள் ஒருமுகம் போதாதுஎன்று அடியவர்களை காப்பதற்காக காத்துக்கொண்டு இறுக்கின்றான்.அருணகிரிக்கு உபதேசம் செய்வதின் முலம் நமக்கு செய்வதாக எடுத்க்கொள்ளலாம் தி ரா ச //

நல்ல விளக்கம் தி ரா ச. மிகப் பொருத்தம். மிகவும் பொருத்தம்.

said...

இராகவன்,
மிக அருமையான விளக்கம்.
\\"ஆக அடியவர்களுக்குத் துன்பம் வருகையில் போரிட்டு அழிப்பவன் இறைவன். இது எந்த மதத்திற்கும் பொருந்தும்."//
உண்மைதான். அதே போன்று இறைவன், தனக்கு அடியவனாய் இருப்பதை விட தன் அடியவரின் அடியவராய் இருப்பதையே அதிகம் விரும்புவான். பிரபந்தத்தில் திருப்பாணாழ்வார், அமலனாதிபிரானில் இதைப் போன்றுதான் கூறியிருக்கிறார்.

"அமல னாதிபிரா னடியார்க்கென்னை யாட்படுத்த
விமலன், விண்ணவர் கோன்விரை யார்பொழில் வேங்கடவன்,
நிமலன் நின்மலன் நீதி வானவன், நீள்மதி ளரங்கத் தம்மான், திருக்
கமல பாதம்வந் தென்கண்ணி னுள்ளன வொக்கின்றதே"

ரங்கா.

said...

அன்பு இராகவன்,
//இதே வரிக்கு வேறு விதமாகவும் பொருள் கொள்ளலாம். நம்மோடு போருக்கு வரும் காமம், வஞ்சகம், தீய எண்ணங்கள், மதம், மாச்சர்யங்கள் ஆகியவைகளை எதிர்த்துப் போரிட்டு அழித்து நம்மைக் காக்கும் வேலன் என்றும் கொள்ளலாம். நமக்குள் எழும் தீய எண்ணங்களை அழிப்பது எப்படி?//

மனதில் இறைச் சிந்தனை ஒன்றைத் தவிற வேறேதும் இல்லாமலிருக்க மேற்கூறியவை இயலும்; ஆயினும், மனமடங்க வழி சொல்லும் குமரனின் ஞானவேல் தத்துவத்தைக் கைக்கொள்ள எல்லாம் இயலுமே!

said...

நன்று குமரன் மற்றும் ஜெயஸ்ரீ :)

வாரியார் கட்டுரைகளில் படித்த நினைவு. புத்தம் கிடைக்க மாட்டேன் என்கிறது, கிடைத்ததும் மடலிடுகிறேன்.

அன்புடன்
ஜீவா

said...

நன்றாக உள்ளது

said...

// நன்று குமரன் மற்றும் ஜெயஸ்ரீ :)

வாரியார் கட்டுரைகளில் படித்த நினைவு. புத்தம் கிடைக்க மாட்டேன் என்கிறது, கிடைத்ததும் மடலிடுகிறேன்.

அன்புடன்
ஜீவா //

காத்திருக்கிறோம் ஜீவா. கிடைக்கும் பொழுது இடுங்கள்.

said...

// நன்றாக உள்ளது //

நன்றி என்னார். அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க.

said...

//நன்று குமரன் மற்றும் ஜெயஸ்ரீ //

குமரனுக்கும் இராகவனுக்கும் அடிக்கடி குழப்பம் ஏற்பட்டு விடுகிறது போலும் :-)

said...

பதிவின் தலைப்பு அருமை இராகவன் :-)

தானவ நாசகனுக்கு நீங்கள் கொடுக்கும் இரண்டாவது பொருள் ரொம்ப நன்றாக இருக்கிறது.