ஆதாரம் என்ற சொல் தமிழில் மிகவும் முக்கியமானது. உலகிலுள்ள ஒவ்வொன்றிற்கும் ஒன்று ஆதாரமாக இருக்கிறது. உடலுக்கு உயிர் ஆதாரம். உயிருக்கு ஆன்மா ஆதாரம். ஆதாரமில்லாதது ஒன்றுமில்லை. பெரும்பாலும் ஒன்றுக்கொன்று ஆதாரமாகவும் இருக்கும். நெய்யிற்கு கிண்ணம் ஆதாரம். கிண்ணத்திற்கு நெய் ஆதாரம். நெய் இல்லையென்றால் அதை வைக்கக் கிண்ணம் தேவையில்லை. கிண்ணம் இல்லையென்றால் நெய்யை சேமிக்க முடியாது. அதே போலத்தான் உடலும் உயிரும். ஒன்றில்லாவிட்டால் மற்றொன்றிற்குப் பயனில்லை.
இறைவனுடைய அருளும் அப்படித்தான். நமக்கெல்லாம் இறைவனுடைய அருள் வேண்டும். இறைவனுடைய அருள் பயனுறுவதற்கு நாம் வேண்டும். நாம் இல்லையென்றால் இறைவனுடைய அருள் மட்டுமிருந்து என்ன பயன்? அருள் இருக்க வேண்டும். அது இறைவனின் அடியவர்களைச் சேர வேண்டும். அடியார்களுக்கு இறைவன் அருளே ஆதாரம். அதுதான் அவர்களுக்கு வாழ்வளிக்கும். இப்பொழுது புரிகிறதா ஆதாரத்தின் ஆதாரம்.
ஆதாரம் இலேன் அருளைப் பெறவே
நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே
வேதாகம ஞான விநோதா மனோ
தீதா சுரலோக சிகாமணியே!
அருணகிரி படாத பாடெல்லாம் பட்டவர். பிறகு ஆண்டவனின் அருட்பார்வை அவர் மீது பட்டது. அருணகிரியாக இருந்தவர் அருணகிரி நாதரானார். முதலில் அவர் சிற்றின்பத்தில் மூழ்கிக் கிடந்த பொழுது இறைவன் அருள் என்னும் ஆதாரம் இல்லை. அதைத்தான் "ஆதாரம் இலேன் அருளைப் பெறவே" என்கிறார். "முருகா! உன்னுடைய அருள் கிடைத்தது. ஆனால் அதைப் பெறுவதற்கு எனக்கு என்ன ஆதாரம் இருந்தது? சிற்றின்பச் சேற்றில் உழன்று கொண்டிருந்த என்னை உன்னுடைய அருளைக் கொடுத்து கை தூக்கி விட்டாய். எனக்கு என்ன தகுதி என்று நீ கொஞ்சமும் நினைகக்வில்லையே! உன் கருணையே கருணை!"
"ஆதாரமிலேன் அருளைப் பெறவே நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே" என்ற வரிகளுக்கு இன்னொரு விதமாகவும் பொருள் கூறுவார்கள். "முருகா! உன்னுடைய அருளைப் பெறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லாமல் இருந்தேனே! நீ கொஞ்சமும் நினைத்துப் பார்க்கவில்லயே!" என்று. ஆனால் முருகன் நினைக்காமலா அருணகிரிக்கு வாழ்வு வந்தது? ஆகையால் இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒரு தவறு செய்து விட்டோம். இருந்தும் மற்றொருவர் உதவுகிறார். அவரிடம் என்ன சொல்வோம்? "ஐயா! நான் தப்பு செய்து விட்டேன். இருந்தும் அதையெல்லாம் நினைக்காமல் பெரிய மனது செய்ததற்கு நன்றி" என்றுதானே சொல்வோம். அந்த வகையில்தால் இங்கும் பொருள் கொள்ள வேண்டும். அருணகிரி செய்த தவறுகளை எல்லாம் நினைத்துப் பார்க்காமல் அருள் மழை பொழிந்தார் முருகன். தாயுள்ளம் முருகனுக்கு.
அந்தக் கருணை உள்ளம் கொண்டவனை எப்படிப் பாராட்டுவது? அவனது நலன்கள் என்ன? வேதாகம ஞான விநோதன். வேதங்களை அறிந்தவனே! அவைகளைக் கடந்தவனே! சரி. வேதம் என்றால் என்ன? எழுதாக் கிளவி நான்கு வேதங்களா? அப்படியும் கொள்ளலாம். உண்மையில் வேதம் என்பது மெய்ப்பொருள் தத்துவம். அந்த மெய்ப்பொருளைப் பற்றித் தமிழ் என்ன சொல்கிறது? "வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது நாதன் நாமம் நமச்சிவாயமே" என்கிறது தேவாரப் பதிகம். வேதம் நான்கிலும் அல்ல. மாறாக வேதம் நான்கினும். அதாவது நான்கு வேதங்களைக் காட்டிலும் நமச்சிவாயம் என்ற மந்திரம் மெய்ப்பொருளாகும். ஔவை சொல்வது என்ன? உமையோ இறைவனொரு பாகத்து ஒடுக்கம் என்று சொல்லியவள், இறைவனோ தொண்டருள்ளதுள்ளத்து ஒடுக்கம் என்று கூறியிருக்கிறாள். முருகப் பெருமான் தொண்டர்களுக்கான தெய்வம். தொண்டர்களுக்கு உள்ளுமிருந்து அவர்களைக் கடந்தும் இருக்கும் கருணைக் கடவுள். இப்பொழுது படியுங்கள். "வேதாகம ஞான விநோதன்!" புதுப் பொருள் புரிகிறதா!
இறைவனுடைய புகழை சொல்லால் அளக்க முடியாது. செயலால் விளக்க முடியாது. மனதால் அளக்க முடியுமா? வானம் விரிந்தது என்று சொல்வோம். எவ்வளவு விரிந்தது என்று இன்று வரைக்கும் எந்த அறிவியல் அறிஞரும் சொல்லியிருக்கின்றாரா? அதுபோலத்தான் இறைவனின் புகழும். அதைத்தான் "மன அதீதா" என்ற சொற்றொடரில் அழகாக விளக்குகிறார் அருணகிரி நாதர்.
"முருகா! எத்தனையோ குற்றங்கள் செய்தேன். உன்னுடைய அருளை அடைய எனக்கு எந்த ஆதாரமும் இல்லை. அடித்தளமும் இல்லை. இருந்தும் அதையெல்லாம் நினைக்காமல், ஓடி வந்து என்னை ஆட்கொண்ட பரமகுரு! நீ தொண்டருக்கும் தொண்டன்! வேத நாயகன்! வாக்கால் மனத்தால் அளக்கவொன்னா தனிப் பெருந் தெய்வம்! தேவலோகத்தின் மணிமுடி! உன் புகழ் வாழ்க!"
பக்தியுடன்,
கோ.இராகவன்
Tuesday, August 01, 2006
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
:))
///
இறைவனுடைய அருளும் அப்படித்தான். நமக்கெல்லாம் இறைவனுடைய அருள் வேண்டும். இறைவனுடைய அருள் பயனுறுவதற்கு நாம் வேண்டும். நாம் இல்லையென்றால் இறைவனுடைய அருள் மட்டுமிருந்து என்ன பயன்?
///
இதில் பொருட்குற்றம் இருக்கிறது.
:-)))
இந்த பிரபஞ்சம் எவ்வளவு பெரியது இதில் மனிதருக்கும் மட்டும்தான் அருள் பாவிப்பது இறையில் வேலையா?
:-))).
ஏன் பூமியில் புல் பூண்டு தொடங்கி அனைத்தும் உயிரே அவர்களுக்கு அருள் பாவிக்க மாட்டாரா இறை?
:-))).
மற்றபடி உங்களின் விளக்கம் மிக அழகாக இருக்கிறது.
இறைவனுடைய அருளும் அப்படித்தான். நமக்கெல்லாம் இறைவனுடைய அருள் வேண்டும். இறைவனுடைய அருள் பயனுறுவதற்கு நாம் வேண்டும். நாம் இல்லையென்றால் இறைவனுடைய அருள் மட்டுமிருந்து என்ன பயன்? அருள் இருக்க வேண்டும். அது இறைவனின் அடியவர்களைச் சேர வேண்டும். அடியார்களுக்கு இறைவன் அருளே ஆதாரம். அதுதான் அவர்களுக்கு வாழ்வளிக்கும்.//
என்ன அருமையான, சத்தியமான வார்த்தைகள் ராகவன்!
இனிய பதிவு இராகவன்,
//தாயுள்ளம் முருகனுக்கு.//
என்றுமே அப்படிதான்.
//ஔவை சொல்வது என்ன? உமையோ இறைவனொரு பாகத்து ஒடுக்கம் என்று சொல்லியவள், இறைவனோ தொண்டருள்ளதுள்ளத்து ஒடுக்கம் என்று கூறியிருக்கிறாள். முருகப் பெருமான் தொண்டர்களுக்கான தெய்வம்.//
அடியார்க்கு அடியாரானால் அவனருள் பெறலாம் என்று பல பெருமக்கள் சொல்லியுள்ளனர், மதுரையின் ஜோதி நாயகி சுவாமிகளும் "தஸுனுக் தாஸுனுக் தாஸ் ஹொயத் ஹரிக்ருப்பொ கரயி", 'அடியாருக்கு அடியாரானால் மாலவன் உன்னை அருளுவான்' என்று ஒரு பாடலில் சொல்லியுள்ளார்.
அடியாரே ஆதரமோ என்று எண்ண வைக்கும் அளவுக்கு அடியாருக்கு மிக உயர்ந்த பதவி தந்துள்ள இறைவன் மிகப்பெறியவன்.
//"ஐயா! நான் தப்பு செய்து விட்டேன். இருந்தும் அதையெல்லாம் நினைக்காமல் பெரிய மனது செய்ததற்கு நன்றி" என்றுதானே சொல்வோம். அந்த வகையில்தால் இங்கும் பொருள் கொள்ள வேண்டும். அருணகிரி செய்த தவறுகளை எல்லாம் நினைத்துப் பார்க்காமல் அருள் மழை பொழிந்தார் முருகன். தாயுள்ளம் முருகனுக்கு.//
அருமையான விளக்கம்.
// செந்தழல் ரவி said...
:)) //
என்ன ரவி. சிரிப்பு. என்னன்னு சொன்னா நாங்களும் சேந்து சிரிப்போம்ல. காசா? பணமா? காரணத்தச் சொல்லுங்க.
// குமரன் எண்ணம் said...
///
இறைவனுடைய அருளும் அப்படித்தான். நமக்கெல்லாம் இறைவனுடைய அருள் வேண்டும். இறைவனுடைய அருள் பயனுறுவதற்கு நாம் வேண்டும். நாம் இல்லையென்றால் இறைவனுடைய அருள் மட்டுமிருந்து என்ன பயன்?
///
இதில் பொருட்குற்றம் இருக்கிறது.
:-)))
இந்த பிரபஞ்சம் எவ்வளவு பெரியது இதில் மனிதருக்கும் மட்டும்தான் அருள் பாவிப்பது இறையில் வேலையா?
:-))).
ஏன் பூமியில் புல் பூண்டு தொடங்கி அனைத்தும் உயிரே அவர்களுக்கு அருள் பாவிக்க மாட்டாரா இறை?
:-))). //
இந்த உலகில் மனிதப்பிறவிக்கு மட்டுமல்ல அனைத்திற்கும் அருள் பாலிப்பவர் இறைவன். அதனால்தான் "ஒரு திரு முருகன் உதித்தனன் உலகம் உய்ய" என்கிறார். மனிதன் அல்ல. உயிரினங்கள் அல்ல. உலகம் முழுவதும் உய்யவாம். அதுதான் ஆன்றோர் ஒப்புவது. உலகம் உவப்ப என்றுதான் திருமுருகாற்றுப்படையே துவங்குகிறது.
ஆனாலும் நான் விளக்கியதில் பொருள் மயக்கம் போலத் தோன்றத்தான் செய்கிறது. இனிமேல் சற்றுக் கவனமாகச் சொல்கிறேன்.
// மற்றபடி உங்களின் விளக்கம் மிக அழகாக இருக்கிறது. //
மிக்க நன்றி குமரன் எண்ணம்.
// tbr.joseph said...
இறைவனுடைய அருளும் அப்படித்தான். நமக்கெல்லாம் இறைவனுடைய அருள் வேண்டும். இறைவனுடைய அருள் பயனுறுவதற்கு நாம் வேண்டும். நாம் இல்லையென்றால் இறைவனுடைய அருள் மட்டுமிருந்து என்ன பயன்? அருள் இருக்க வேண்டும். அது இறைவனின் அடியவர்களைச் சேர வேண்டும். அடியார்களுக்கு இறைவன் அருளே ஆதாரம். அதுதான் அவர்களுக்கு வாழ்வளிக்கும்.//
என்ன அருமையான, சத்தியமான வார்த்தைகள் ராகவன்! //
நன்றி ஜோசப் சார்.
// எழுத்துப் பிழை said...
நினைகக்வில்லையே : நினைக்கவில்லையே //
நன்றி எழுத்துப்பிழை. இனிமேல் என்னுடைய பதிவுகளில் உள்ள எழுத்துப்பிழைகளை நீங்கள் கண்டிப்பாகச் சுட்டிக்காட்ட வேண்டும். இது என்னுடைய வேண்டுகோள்.
// சிவமுருகன் said...
இனிய பதிவு இராகவன்,
//தாயுள்ளம் முருகனுக்கு.//
என்றுமே அப்படிதான். //
உண்மை சிவமுருகன்.
// //ஔவை சொல்வது என்ன? உமையோ இறைவனொரு பாகத்து ஒடுக்கம் என்று சொல்லியவள், இறைவனோ தொண்டருள்ளதுள்ளத்து ஒடுக்கம் என்று கூறியிருக்கிறாள். முருகப் பெருமான் தொண்டர்களுக்கான தெய்வம்.//
அடியார்க்கு அடியாரானால் அவனருள் பெறலாம் என்று பல பெருமக்கள் சொல்லியுள்ளனர், மதுரையின் ஜோதி நாயகி சுவாமிகளும் "தஸுனுக் தாஸுனுக் தாஸ் ஹொயத் ஹரிக்ருப்பொ கரயி", 'அடியாருக்கு அடியாரானால் மாலவன் உன்னை அருளுவான்' என்று ஒரு பாடலில் சொல்லியுள்ளார். //
நல்ல கருத்து. ஜோதி நாயகி சுவாமிகள் யார்? நடன கோபால நாயகி சுவாமிகள் வேறு இவர் வேறா?
// அடியாரே ஆதரமோ என்று எண்ண வைக்கும் அளவுக்கு அடியாருக்கு மிக உயர்ந்த பதவி தந்துள்ள இறைவன் மிகப்பெறியவன். //
மறுப்பே சொல்ல முடியாது சிவமுருகன். அனைத்தையும் கடந்து அனைத்திற்கும் உள்ளிருப்பது சிறியதா? பெரியதா?
// மணியன் said...
//"ஐயா! நான் தப்பு செய்து விட்டேன். இருந்தும் அதையெல்லாம் நினைக்காமல் பெரிய மனது செய்ததற்கு நன்றி" என்றுதானே சொல்வோம். அந்த வகையில்தால் இங்கும் பொருள் கொள்ள வேண்டும். அருணகிரி செய்த தவறுகளை எல்லாம் நினைத்துப் பார்க்காமல் அருள் மழை பொழிந்தார் முருகன். தாயுள்ளம் முருகனுக்கு.//
அருமையான விளக்கம். //
நன்றி மணியன்.
இராகவன்,
//நடன கோபால நாயகி சுவாமிகள் வேறு இவர் வேறா?//
இருவரும் ஒன்று தான் வித விதமாக அழைக்கிறோம்.
நல்ல விளக்கம் ராகவன்.
//"முருகா! உன்னுடைய அருள் கிடைத்தது. ஆனால் அதைப் பெறுவதற்கு எனக்கு என்ன ஆதாரம் இருந்தது? //
அருள் பெறத்தான் ஆதாரம் வேண்டுமோ? எந்த விதமான ஒதுக்கீடும் இன்றி அனைவருக்கும் அருள் பாலிப்பவன் அல்லவா அவன்!
முதலில் இது இனியது கேட்கின் என்பதைப் பார்க்காமல் என்னடா இவரு என்ன 'ஆ! தாரம்!' அப்படின்னு எழுதறாரேன்னு நினைச்சேன். :D
//உடலுக்கு உயிர் ஆதாரம். உயிருக்கு ஆன்மா ஆதாரம். //
இராகவன், கொஞ்சம் விளக்குவீர்களா? உடலுக்கு உயிர் ஆதாரம் - புரிகிறது. உயிருக்கு ஆன்மா ஆதாரம் - புரிகிற மாதிரி இருக்கிறது. ஆனால் நீங்கள் எந்தப் பொருளில் சொன்னீர்கள் என்று தெளிவாகப் புரியவில்லை.
'ஆதாரம் இலேன் அருளைப் பெறவே நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே' என்று படிக்கும் போது இன்னும் உன் அருள் வர நீ நினைக்கவில்லையே என்ற பொருள் தான் உடனே தோன்றுகிறது. ஆனால் உங்கள் விளக்கத்தைப் படித்த பிறகு 'ஆதாரம் இலேன் உன் அருளைப் பெறவே செய்தாய். அப்போது என் குறைகளை நீ தான் ஒரு சற்றும் எண்ணிப் பார்க்கவில்லையே. உன் கருணையே கருணை' என்று தான் இதற்குப் பொருள் தோன்றுகிறது. மிக்க நன்றி.
//"வேதாகம ஞான விநோதன்!" புதுப் பொருள் புரிகிறதா!
//
புரியவில்லையே?! :-) புரிந்த மாதிரி இருக்கிறது. புரியாத மாதிரியும் இருக்கிறது. மறைபொருளாகச் சொன்னால் எப்படி எனக்கெல்லாம் புரியும்?
வேத ஞான விநோதா என்று சொல்லவில்லையே. வேதாகம ஞான விநோதா என்று தானே சொல்லியிருக்கிறார். ஏன் ஆகமங்களைப் பற்றிப் பேசாமல் விட்டீர்கள்?
//ஏன் பூமியில் புல் பூண்டு தொடங்கி அனைத்தும் உயிரே அவர்களுக்கு அருள் பாவிக்க மாட்டாரா இறை?
//
செந்தில் குமரன்.
Super Catch. :-)
இராகவன். நாயகி சுவாமிகளின் பாடல்களை இட்டுவரும் வலைப்பூவின் பெயரே 'மதுரையின் ஜோதி' தான். கவனித்ததில்லையா? மதுரையின் ஜோதி ச்ரி நடனகோபால நாயகி சுவாமிகள் என்று சொல்வது வழக்கம்.
இரண்டு பொருள்படும் சொற்றொடர் இது.
இரண்டு வித விளக்கமும் கொடுத்து, முதல் விளக்கம் ஏற்று, இரண்டாம் விளக்கத்தை மறுத்திருக்கிறீர்கள்.
எனக்கென்னவோ இரண்டாம் விளக்கமே சரியெனப் படுகிறது.
காரணம் பின்வருமாறு!
நேற்று திருப்புகழ் பதிவு போட்ட பின்னர் நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன்.
அப்போது நான் அவருடன் பகிர்ந்த கருத்து இது.
அவர் கேட்டார்; 'அருணையார்தான் முருகனிடம் உபதேசம் பெற்று விட்டாரே முன்னமேயே! ஏன் எனக்கு நீ உபதேசிக்க வேண்டும் எனக் கேட்கிறார்?'
நான் சொன்னேன்:
அருணையார் மையலிடம் மயக்கம் கொண்டிருந்த போதோ, அல்லது முருகனிடம் ஞான உபதேசம் திருவண்ணாமலையிலும், வயலூரிலும், விராலிமலையிலும் பெறுதற்கு முன்னரோ, தன் பாக்களை எழுதவில்லை.
யாருக்கும் கிடைக்காத பிரணவ உபதேசம் பெற்ற பின்னரே அவர் திருப்புகழையும், கந்தர் அனுபூதி, அலங்காரத்தையும் பாடினார்.
ஆனால், அவர் பாடலகளை எல்லாம் படித்துப் பொருள் உணர்ந்தால், சிற்றின்பச் சுகத்தையும், விலைமாதர் வடிவையும், ஞானமில்லாதவன் வேண்டிடும் அருள் தேடலையும் பற்றியே இருக்கும்.
இதன் காரணம், அவரது தனிப்பெருங்கருணையே!
"யான் பெற்று விட்டேன்" என்ற எக்களிப்புப் பாடல்கள் அல்ல அவை!
"முருகா! எந்தத் தகுதியும் இல்லாத எனக்கே நீ கருணை செய்தனை!
உலகில் பல கோடி ஜீவராசிகள் இன்னும் இதை அடையவில்லை.
எனவே, நான் அவர் நிலையில் என்னை வைத்து உன் புகழைப் பாடுவேன்!
ஏனெனில், இதைப் படிப்பவர் என் அனுபவம் கிட்டியவரில்லை.
எனவே, அவர் பாடுதல் போலவே இப்பாடல்கள் அமையும்"
என முடிவு செய்து பாடியது போலவே இருக்கும்.
அந்தப் பொருளில் பார்த்தால், இப்பாடலை, நான் படிக்கும் போது,
"முருகா! ஏன் எனக்கு அருள் செய்ய நீ இன்னும் நினைக்கவில்லை"
என்ற இரண்டாம் பொருளுடன் என் நிலையும் ஒத்துப் போகிறது.
எனக்கும் பாடலின் மேல் ஒரு ஈர்ப்பு வருகிறது.
ஏனெனில், இப்போது அருணையார் பாடலை நான் பாட வில்லை!
என் நிலையை நான் பாடுகிறேன்!
நான் என்ன, எப்படிப் பாட வேண்டும் என அருணையார் எனக்கு ஒரு பாட்டு எடுத்துக் கொடுத்திருக்கிறார்!
தன்னலம் இல்லாத் தனிபெருங் கருணை அது!
இதுவே அவர் பாடல்களின் சிறப்பு!
இதுவே என் கருத்து!
மேலும், "வினோதன்" என்றால், புதுமையானவன் எனப் பொருள் வரும்!!
முருகன் ஒருவனே காண்பர்க்கு எளியன்!
யாராலும் எளிதில் அடையப் பெறுபவன்!
வேதங்களும், ஆகமங்களும், ஞான் யோகமும் ஒரு நெறிப்பாட்டை நிலை நிறுத்தி, இறைவனை இப்படித்தான் அடைய முடியும், வேண்டும் என அறுதியிட்டுக் கூறுபவை.
அவற்றின் கூற்றுப் படி பார்த்தால், அருணையார் செல்ல வேண்டிய இடம் நரகமே!
அத்தனை பாவங்கள், வேத ஆகம, ஞான விதிப்படி செய்திருக்கிறார்!
அவரையும் ஆட்கொண்டவன் முருகன்!
இது வேத ஆகம, ஞானங்களை மீறிய புதுமையான செயல்!
எனவே தான், நமக்கும் நம்பிக்கை ஊட்டும் வண்ணம், அருணையார் நமக்காக மறைபொருளாய்,இந்த "வேத ஆகம ஞான வினோதா" எனும் சொல்லைப் போட்டு கருணை புரிந்திருக்கிறார்!
இது ஒரு வகையான சிபாரிசு போன்றது!
நான் பாடும் போது, அதை முருகன் கேட்கும் போது, வேத ஆகம, ஞான விதிப்படி எனக்கு அருள் செய்ய வகை இல்லாது போயினும், முன்னம் அருணையாருக்கு, இது போன்று அருள் செய்ததை நினைவூட்டும் பொருள் பொதிந்த சொல் இது!
கருணையின் உச்சம்!
அருணகிரிநாதர் தாள் வாழ்க!
முருகனை உணர்ந்திடும்,
உணர்ந்து உள்ளம் உருகிடும்
அடியவர் போற்றும் பாடலிதை
அறிந்து போற்றிட்ட
அனுபூதி சொல்லும் அருமை அடியவர்
நண்பர் ராகவன் அவர்களே,
நன்றிகள் பல!
ஆம், சும்மா படிக்கவே சுகம்!
அறிந்தவர் பாடினால்.....
ஆம்!கேட்கவும் வேண்டும்!![வேண்டுமோ அல்ல!!!]
Post a Comment