Monday, August 07, 2006

28. யாரிடம் கடன் கேட்க வேண்டும்?

வாழ்க்கைத் தத்துவத்தைப் புரிந்து கொண்டு அதை அடுத்தவர்களுக்கு எடுத்துச் சொல்வதென்பது மிகவும் சிரமமான வேலை. ஆனால் அருணகிரிக்கு அது எளிதில் கைவந்த கலையாக இருந்திருக்கிறது. ஆம். இந்தப் பாடலில் இரண்டு வரிகளில் வாழ்க்கைத் தத்துவத்தைச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார். ஒன்றைச் சொல்லி, அதன் மூலம் சொல்லாத பலவற்றைச் சொல்வது.

மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான்
என்னே விதியின் பயனிங்கு எதுவோ
பொன்னே மணியே பொருளே அருளே
மன்னே மயிலேறிய வானவனே

நிலையாமைத் தத்துவத்தைப் பற்றி நிறையப் பேசியாகி விட்டது. ஆனாலும் யாரும் புரிந்து கொண்டது போலத் தெரியவில்லை. நாம் மகிழ்கின்ற விடயங்களெல்லாம் மின்னலைப் போன்றி தோன்றி மறையக் கூடியவை. ஒருவேளை அவை நிலைத்தாலும் மகிழ்ச்சி நிலைக்காது. சுவை மிகுந்த உணவுகளை உண்கிறோம். அந்தச் சுவை எவ்வளவு நேரம் இன்பம் தருகிறது. நாவில் உணவு இருக்கும் வரை சுவை தெரியும். அவ்வளவுதான். சரி. நாவில் தொடர்ந்து இருக்கட்டும் என்று உணவை வாயிலேயே வைத்திருந்தால் சுவை தொடருமா? சுவை சுமையாகிப் போகாதா? உலக இயக்கமாகிய கலவி இன்பமும் சிறு பொழுதே. மின்னலைப் போல. தோன்றும். நிற்பது போல நின்று உடனே மறையும்.

வாழ்க்கையே அப்படித்தானே. நேற்று பிறந்து, இன்று வாழ்ந்து, நாளை மடிவதுதானே வாழ்க்கை. மின்னலைப் போலத்தான். நினைக்காத பொழுது தோன்றி நினைக்காத பொழுது மறைவது. எப்பொழுது நடக்குமென்று கூற முடியாது. "மின்னே நிகர் வாழ்வு" என்கிறார் அருணகிரி நாதர். அந்த வாழ்வையும் நாம் விரும்புகிறோம். ஏன் விரும்புகிறோம் என்று யாருக்கும் தெரியாது. தெரியாமலே நடக்கிறது நமது வாழ்க்கை. ஏன் பிறந்தோம் என்று தெரியாமல் பிறக்கிறோம். தொடக்கமே கோணல். முதல் கோணல் முற்றும் கோணல். அப்படிப்பட்ட வாழ்வை நாம் தெரியாமலே விரும்புகிறோம்.

ஏன் விரும்புகிறோம்? எல்லாம் விதியின் பயன். விதி என்பது ஊழ். ஊழிற் பெருவலி யாவுள என்று கூறுகிறார் வள்ளுவர். பெரியவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஆகையால்தான் அவர்கள் அடக்கமாக வாழ்கின்றார்கள். அமரருள் உய்க்கின்றார்கள். நமக்கும் எடுத்துச் சொல்கின்றார்கள். வள்ளுவரைப் போல. அருணகிரி நாதரைப் போல. "என்ன இது! மானிடப் பிறப்பெடுத்து விட்டோம். எல்லாம் மின்னலைப் போல நடக்கிறது. இருந்தும் இதைப் போய் விரும்பிச் சீரழிகின்றோமே! இதைத்தான் விதியின் பயன் என்பதோ!" என்று வருந்துகிறார் அருணகிரி.

கடன் கேட்பதையும் கடனில்லாதவனிடம் கேட்க வேண்டும். ஏற்கனவே கடனாளியிடம் சென்று கடன் கேட்டால் கிடைக்குமா? நிலையில்லாத வாழ்க்கைச் சமுத்திரத்தைக் கடக்க நிலைப்பவரிடம்தானே கேட்க வேண்டும். என்றும் நிலைக்கும் கந்தனைக் கேட்கிறார் அருணகிரி. பொன்னே, மணியே, பொருளே, அருளே, மன்னே என்று அடுக்குகிறார் புகழாரங்களை. பொன் ஒளிரும். முருகன் ஒளி பொருந்தியவர். மணி குளிரும். ஆறுமுகர் குளிர்ச்சி மிகுந்த பார்வை கொண்டவர். பொருள் என்பது மெய்ப்பொருள். வேலவரின் ஞானமே மெய்ப்பொருள். அருள் நமக்கு வேண்டியது. கந்தவேள் அருளினால் நமது சொந்தவேள்.

இதையெல்லாம் கூறிவிட்டு மன்னே என்கிறார். அதாவது மன்னன். மன்னன் என்பவன் ஆள்கின்றவன். பழநி ஆண்டவன் என்றைக்கும் ஆள்கின்றவன் என்று சொல்கிறார். மயிலேறிய முருகனைப் புகழ்வதில் அருணகிரிக்கு அவ்வளவு ஆர்வம். முதலில் மயிலேறிய சேவகனே என்றார். இந்தப் பாடலில் மயிலேறிய வானவனே என்கிறார். பூவோடு சேர்ந்தவை அனைத்தும் மணக்கும் என்பது போல, முருகனோடு தொடர்புடைய அனைத்திற்கும் புகழ் கிடைக்கும்.

பக்தியுடன்,
கோ.இராகவன்

24 comments:

said...

//கடன் கேட்பதையும் கடனில்லாதவனிடம் கேட்க வேண்டும். ஏற்கனவே கடனாளியிடம் சென்று கடன் கேட்டால் கிடைக்குமா? // ஜிரா ... முழுக்கட்டுரையும் நன்றாக இருக்கிறது ... நல்லா தத்துவ மழை ... விளைச்சல் ... ! கண்ணுற்று பயனுற்றேன் !

எனக்கு தெரிந்து காலைக் கடன் என்றால் ... காலையில் பால் ஊற்றுகிறவனிடம் சொல்வது தான் :)

said...

நன்று கோ.இராகவன்

///
நிலையில்லாத வாழ்க்கைச் சமுத்திரத்தைக் கடக்க, நிலைப்பவரிடம் தானேகேட்கவேண்டும்
///

ஆனால், இதில் விசித்திரம் கேட்டாலும் கடக்க இயலுமா என்பதுதான்

said...

ராகவன்:

ஊழ் பற்றி வள்ளுவம் சொல்வதாக நீங்கள் குறிப்பிடுவது பற்றி எனக்கு மாற்றுக்கருத்துகள் உண்டு. வள்ளுவம் பற்றிய எனது புரிதல்கள் அடிப்படையிலும், சில உரையாசிரியர்களின் கருத்துக்கள் அடிப்படையிலும் நான் பல முறை இந்த ஊழ் (வினை) பற்றி யோசித்துள்ளேன்.

அந்தவகையில் உங்களுக்கு இந்த பதிவை சுட்ட விரும்பினேன். உங்களுக்கு இது எந்தவகையிலாவது பயன்பட்டால் மகிழ்வே!
http://ennappinnalgal.blogspot.com/2005/10/blog-post.html

இதுவும் கருதத்தக்கது.

http://www.maraththadi.com/article.asp?id=2006&print=1

நன்றி.

said...

ராகவன்...

படிக்கும் பொழுது தோன்றியது..

//இருந்தும் இதைப் போய் விரும்பிச் சீரழிகின்றோமே! //

விருப்பங்கள்தான் கஷ்டங்களுக்கு காரணம்..உண்மைதான்.. ஆனால் அவை இல்லாமல் வாழும் வாழ்க்கை எதற்கு?...என் இந்தப் பிறவி? அப்படி எதிலும் பிடிப்பு இல்லாமல் வாழ்வதால் என்ன பயன்? மரணத்திற்கு பிறகு என்ன நடக்கும்? யாருக்கும் தெரியாது.. ஒவ்வொரு மதமும் ஒவ்வொன்று சொல்கிறது. எது சரி என்பதில் எத்தனையோ சண்டைகள்...அப்படி தெரியாத உலகில்(அது ஒரு உலகமா?... எத்தனையோ கேள்விகள் பிரக்கும் இப்படி ஆரம்பித்தால்) வாழப்போகும் வாழ்கைக்கு இங்கு எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்காதே என்பது தவறாகப்படுகிறது எனக்கு..


மனிதனின் பற்றுகள், பாசங்கள்தான் வாழ்க்கையின் அச்சாணி.. அது இல்லாமல் போனால் அது வாழ்க்கையே அல்ல..வாழும் வாழ்க்கைக்கு அர்த்தமும் இல்லை...

இருக்கும் வரை நம்மை சுற்றி இருப்பவர்களை சந்தோஷமாக வைத்துக் கொண்டு வாழும் வாழ்க்கையே சொர்க்கம்.

said...

இராகவரே.. இங்கும் வணக்கத்தில் ஆரம்பித்து வாழ்த்தில் முடித்து வைப்பேன்...

அருமை.. அருமை.. மிக்க அருமை.. மனதாரப் பாராட்டுகிறேன்..

கந்தர் அநுபூதி அத்தனைப் பாடல்களையும் (முழு அர்த்தம் புரியாமல்) சிறு வயதிலேயே படித்திருக்கிறேன் [உபயம் மற்றும் நன்றி: எந்தை - நல்ல ஆசான்]..

அதற்குரிய முழு அர்த்தமும் தங்களின் வலைப்பூவில் தெரிந்து கொள்ளப் போகிறேன் ஒவ்வொன்றாக... மிக்க நன்றி இராகவன்..

யாரந்த ஜோசப் சார்? உங்கள் ஆசிரியரா?

ஒரு சந்தேகம்.. நீங்கள் திருமணமானவரா? அகவையில் மிக மூத்தவரா?

இந்தச் சந்தேகம் திடீரென்று தோன்றக் காரணம்?

தொடரும்...
(தெரியலீங்க.. திடீர்னு தோணிருச்சு.. என்னவோ தெர்ல.. உங்க பாணி எனக்கு ஒட்டுதோ ;-))

said...

// கோவி.கண்ணன் [GK] said...
//கடன் கேட்பதையும் கடனில்லாதவனிடம் கேட்க வேண்டும். ஏற்கனவே கடனாளியிடம் சென்று கடன் கேட்டால் கிடைக்குமா? // ஜிரா ... முழுக்கட்டுரையும் நன்றாக இருக்கிறது ... நல்லா தத்துவ மழை ... விளைச்சல் ... ! கண்ணுற்று பயனுற்றேன் !

எனக்கு தெரிந்து காலைக் கடன் என்றால் ... காலையில் பால் ஊற்றுகிறவனிடம் சொல்வது தான் :) //

பேப்பர்களில் பெயர் வந்தாலும் வந்தது.....உங்கள் கிண்டல் தாங்கவில்லை. :-))))))

said...

// மதுமிதா said...
நன்று கோ.இராகவன்

///
நிலையில்லாத வாழ்க்கைச் சமுத்திரத்தைக் கடக்க, நிலைப்பவரிடம் தானேகேட்கவேண்டும்
///

ஆனால், இதில் விசித்திரம் கேட்டாலும் கடக்க இயலுமா என்பதுதான் //

கடக்க வேண்டும் என்று அவன் விரும்பினால் கடக்கலாம்.

said...

தங்கமணி,

நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டிகளில் இருப்பது நல்ல திறனாய்வு. அங்கு பின்னூட்டம் இட முயன்றேன். முடியவில்லை.

ஊழ் என்பது முற்பிறவி வினை என்று சொல்வது எவ்வளவு பொருந்தும் என்று எனக்கும் தெரியவில்லை. விதி என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பது ஒரு வேளை அந்த மயக்கத்தைக் கொடுத்திருக்கலாம். ஊழ் அல்லது விதி என்ற வகையில் திருக்குறளையும் சிலப்பதிகாரத்தையும் வைத்து நான் புரிந்து கொள்வது "நடக்க வேண்டியது"

ஊழ் என்பது நடக்க வேண்டியது. அந்த நடக்க வேண்டியது தவறாக நடந்தாலும் ஊழையும் உட்பக்கம் காண்பர் உழைவின்றித் தாழாது உஞற்றுபவர். அதாகப் பட்டது எது எப்படிப் போனாலும் அதிலிருந்து மீண்டு வருவார்கள் உழைப்பாளிகள். அந்த வகையில்தான் நான் பொருள் கொண்டுள்ளேன். இப்பொழுது நான் சொல்லும் விளக்கத்தை இத்தோடு பொருத்திப் பாருங்கள். சரியாக வருமென்றே நினைக்கின்றேன்.

said...

// மனிதனின் பற்றுகள், பாசங்கள்தான் வாழ்க்கையின் அச்சாணி.. அது இல்லாமல் போனால் அது வாழ்க்கையே அல்ல..வாழும் வாழ்க்கைக்கு அர்த்தமும் இல்லை...

இருக்கும் வரை நம்மை சுற்றி இருப்பவர்களை சந்தோஷமாக வைத்துக் கொண்டு வாழும் வாழ்க்கையே சொர்க்கம். //

மனதின் ஓசை, நீங்கள் சொல்வதில் உண்மையில்லாமல் இல்லை. இதையும் அருணகிரி சொல்லியிருக்கிறார். வள்ளுவரும் அருணகிரியும் ஒத்துப் போகும் ஒரு கருத்துகளில் "துறந்தார்க்கு துப்புரவு வேண்டி மறந்தார்கள் மற்றையவர்கள் தவம்"

இல்லறம் தவறென்று சொல்லவில்லை. ஆனால் இல்லறத்திலேயே மூழ்காமல் கொஞ்சம் சமூகத்தின் பக்கமும் திரும்பிப்பார்க்க வேண்டும் என்கிறார்கள். பாரதிதாசன் சொல்வதும் அதுதானே!

said...

கலக்கல் பாடல்...

//பொன்னே மணியே பொருளே அருளே//

விளிப்பது போலவும் இருக்குது பாருங்க.

said...

// இராகவன் (எ) சரவணன் said...
இராகவரே.. இங்கும் வணக்கத்தில் ஆரம்பித்து வாழ்த்தில் முடித்து வைப்பேன்...

அருமை.. அருமை.. மிக்க அருமை.. மனதாரப் பாராட்டுகிறேன்.. //

நன்றி நன்றி. அனைத்தும் முருகனுக்கு.

// கந்தர் அநுபூதி அத்தனைப் பாடல்களையும் (முழு அர்த்தம் புரியாமல்) சிறு வயதிலேயே படித்திருக்கிறேன் [உபயம் மற்றும் நன்றி: எந்தை - நல்ல ஆசான்]..

அதற்குரிய முழு அர்த்தமும் தங்களின் வலைப்பூவில் தெரிந்து கொள்ளப் போகிறேன் ஒவ்வொன்றாக... மிக்க நன்றி இராகவன்.. //

ஆகா...தந்தை வழிப் பயிற்சி மிகச் சிறப்பு. எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன் இ.ச.

// யாரந்த ஜோசப் சார்? உங்கள் ஆசிரியரா? //

ஜோசப் சார் தெரியாதா? அவர் திரும்பிப் பார்க்கிறாரே. அவரை மரியாதையாக சார் என்று அழைத்து அப்படியே பழகி விட்டது. அவரும் வலைப்பூவில் பிரபலமானவர்.

// ஒரு சந்தேகம்.. நீங்கள் திருமணமானவரா? அகவையில் மிக மூத்தவரா?

இந்தச் சந்தேகம் திடீரென்று தோன்றக் காரணம்? //

வயதில் மூத்தவனா? என்னை விட வயதில் சிறியவர்களுக்கு மூத்தவன். பெரியவர்களுச் சிறியவன். வயதொத்தவர்களுக்குத் தோழன். :-) இந்த விடை எப்படி?

அது சரி. ஏன் தோன்றியது?

// தொடரும்...
(தெரியலீங்க.. திடீர்னு தோணிருச்சு.. என்னவோ தெர்ல.. உங்க பாணி எனக்கு ஒட்டுதோ ;-)) //

எனக்கென்று பாணி எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை. தொடரும் எல்லாரும்தானே போடுகிறார்கள்.

said...

//மனதின் ஓசை, நீங்கள் சொல்வதில் உண்மையில்லாமல் இல்லை.//
நன்றி ராகவன்.

// இதையும் அருணகிரி சொல்லியிருக்கிறார். வள்ளுவரும் அருணகிரியும் ஒத்துப் போகும் ஒரு கருத்துகளில் "துறந்தார்க்கு துப்புரவு வேண்டி மறந்தார்கள் மற்றையவர்கள் தவம்"//

மன்னிக்கவும்.. நான் அதிகம் இவரை பற்றி தெரிந்து கொண்டவனில்லை.அதனால் பதில் சொல்ல இயலவில்லை..எனக்கு படிக்கும்பொழுது தோன்றியதை சொன்னென்..

//இல்லறம் தவறென்று சொல்லவில்லை. ஆனால் இல்லறத்திலேயே மூழ்காமல் கொஞ்சம் சமூகத்தின் பக்கமும் திரும்பிப்பார்க்க வேண்டும் என்கிறார்கள். பாரதிதாசன் சொல்வதும் அதுதானே!//

இது நான் முழுக்க ஒத்துக் கொள்ளும் கருத்துதான்..நானும் அதே மாதிரி தான் சொல்லி இருக்கிறேன்..இல்லறம், சமூகம் என பிரித்து சொல்லவில்லை.. நம்மை சுற்றி இருப்பவர்க்ள் என கூறியதில் சமூகமும் அடங்கும்...உலகத்தின் மீது பாசம் இருக்க கூடாது என கூறுவதை ஆதரிப்பதாக இந்த பதிவு எனக்கு பட்டது..உலகத்தில் உல்ல நல்ல விஷயங்கள் அனைத்தின் மீதும் பாசம் வைக்கலாம்.. தவறு இல்லை என சொல்லவே நினைத்தேன்..நன்றி.

said...

// மனதின் ஓசை said...
//மனதின் ஓசை, நீங்கள் சொல்வதில் உண்மையில்லாமல் இல்லை.//
நன்றி ராகவன்.

// இதையும் அருணகிரி சொல்லியிருக்கிறார். வள்ளுவரும் அருணகிரியும் ஒத்துப் போகும் ஒரு கருத்துகளில் "துறந்தார்க்கு துப்புரவு வேண்டி மறந்தார்கள் மற்றையவர்கள் தவம்"//

மன்னிக்கவும்.. நான் அதிகம் இவரை பற்றி தெரிந்து கொண்டவனில்லை.அதனால் பதில் சொல்ல இயலவில்லை..எனக்கு படிக்கும்பொழுது தோன்றியதை சொன்னென்..

//இல்லறம் தவறென்று சொல்லவில்லை. ஆனால் இல்லறத்திலேயே மூழ்காமல் கொஞ்சம் சமூகத்தின் பக்கமும் திரும்பிப்பார்க்க வேண்டும் என்கிறார்கள். பாரதிதாசன் சொல்வதும் அதுதானே!//

இது நான் முழுக்க ஒத்துக் கொள்ளும் கருத்துதான்..நானும் அதே மாதிரி தான் சொல்லி இருக்கிறேன்..இல்லறம், சமூகம் என பிரித்து சொல்லவில்லை.. நம்மை சுற்றி இருப்பவர்க்ள் என கூறியதில் சமூகமும் அடங்கும்...உலகத்தின் மீது பாசம் இருக்க கூடாது என கூறுவதை ஆதரிப்பதாக இந்த பதிவு எனக்கு பட்டது..உலகத்தில் உல்ல நல்ல விஷயங்கள் அனைத்தின் மீதும் பாசம் வைக்கலாம்.. தவறு இல்லை என சொல்லவே நினைத்தேன்..நன்றி. //

என்னது நன்றி அது இதுன்னு கிட்டு.

நீங்கள் கூறிய கருத்து மிகச் சரியானதுதான். நீங்கள் எடுத்து வைத்த வாதமும் மிகச் சரிதான். இனிமே அடிக்கடி வந்து இப்பிடிச் செய்யனும்.

இன்னொரு விஷயம் சொல்றேன். எப்போதும் தப்பை அடுத்தவங்க மேல சொல்லித்தான் நெறையப் பேரு தப்பிக்கப்ப் பாக்குறாங்க. விபச்சாரம்னு வந்தாக் கூட அந்தப் பொண்ணுக்குத்தான் தண்டனை. ஆனா அருணகிரியோட பாயிண்டுல அந்தப் பொண்ணுகிட்ட தப்பு சொல்றத விட நம்ம கட்டுப்பாட்டுல கவனம் செலுத்தனும்னு சொல்றாரு. இன்னும் நெறைய இருக்கு.

said...

நன்றி அய்யா,

சங்க இலக்கியங்களிலிருந்து பழைய பாடலை எழுதியிள்ளீர்கள்.

எப்போதோ கல்லூரியில் தமிழ் ஆசிரியர் சொல்லித் தந்தது.

நன்றி தங்களின் தமிழ் ஆர்வத்திற்கு

சுகுமாரன்

said...

//என்னது நன்றி அது இதுன்னு கிட்டு. //

சரி ராகவன்.. இனிமே சொல்லல.. சரியா.. :-)

//நீங்கள் கூறிய கருத்து மிகச் சரியானதுதான். நீங்கள் எடுத்து வைத்த வாதமும் மிகச் சரிதான். இனிமே அடிக்கடி வந்து இப்பிடிச் செய்யனும்.//

அதுக்கென்ன.. தாராளமா செஞ்சிடுவோம்..தேன் குடிக்க கசக்குமா என்ன?

//இன்னொரு விஷயம் சொல்றேன். எப்போதும் தப்பை அடுத்தவங்க மேல சொல்லித்தான் நெறையப் பேரு தப்பிக்கப்ப் பாக்குறாங்க. //

கசப்பான உண்மைங்க..கண்கூடா இத எல்லா இடத்துலயும் பாக்க முடியுது :-(

//விபச்சாரம்னு வந்தாக் கூட அந்தப் பொண்ணுக்குத்தான் தண்டனை. //

உண்மைதான்.. கற்பை பொதுவினில் வைப்போம்னு யாரோ சொன்னதா ஞாபகம்.. பாரதியா? வைரமுத்துவும் சொன்ன மாதிரி ஞாபகம்.

//ஆனா அருணகிரியோட பாயிண்டுல அந்தப் பொண்ணுகிட்ட தப்பு சொல்றத விட நம்ம கட்டுப்பாட்டுல கவனம் செலுத்தனும்னு சொல்றாரு. .//

கரக்டுதாங்க..நேத்து கூட ஒரு பதிவுல "சந்தர்ப்பம் கிடைக்கும்வரை ஒருவன் நல்லவன்" என சொல்வதை விட்டு விட்டு "சந்தர்ப்பம் கிடைத்தாலும் அதனை தன்னை நீருபிக்க வாய்ப்பாக கருத கூடிய மனோபாவம்" வேண்டும்னு சொல்லி இருந்தேன்..

//இன்னும் நெறைய இருக்கு//

உங்கள மாதிரி ஆளுங்க அத சிம்பிலா சொன்ன தெரிஞ்சிகிட்டு போறோம் :-)

said...

பொருள் என்பது மெய்ப்பொருள். வேலவரின் ஞானமே மெய்ப்பொருள். அருள் நமக்கு வேண்டியது. கந்தவேள் அருளினால் நமது சொந்தவேள்
உண்மையான வார்த்தைகள்.
அதனால் தான் திரு.பாபநாசம் சிவன் " கந்தன் கருணை புரியும் வடிவேலன்" என்று பாடினார்

said...

நல்ல இனிய விளக்கம்!

'நடக்க வேண்டியது' எனச் சொல்லும்போது அதற்கு நம் செயலை மீறிய ஒரு கணக்கு இருக்க வேண்டுமே, ராகவன்?

மறுபிறவியில் அவ்வளவாக நம்பிக்கை இல்லாத மதங்களும்கூட விதி என்பதற்கு மனித யத்தனத்தைத் தாண்டிய ஒரு சக்தியின் அல்லது கடவுளின் முடிவு, டெஸ்டினி என்று தான் சொல்லுகின்றன. ஆங்கில அகராதிகளிலும் அப்படித்தான் போட்டிருக்கிறது!

இது முற்பிறவி சம்மந்தப்படாமலும் வரலாம்.

எந்தவோரு காரணமுமின்றி நிகழும் சில செயல்களைப் பார்த்து நம் முன்னோர் முற்பிறவி என்று சொல்லி வைத்தார்கள்.

நீங்கள் பிறிதொரு பதிலில் கூறியது போல, மரணத்திற்குப் பின் என்ன நடக்கும் எனத் தெரியாதபோது, அதே லாஜிக்கைப் பயன்படுத்தி, பிறப்புக்கு முன் என்ன நடந்தது என்பதையும் சொல்ல முடியாதுதானே, சாதாரண நம் போன்ற மனிதர்களால்!

ஒரு சில அறிந்தவர்கள் கூற்று சிலரால் ஒப்புக்கொள்ள முடியாததாகப் போகலாம்.
அதற்காக, அவை இல்லையென ஆகிவிடாது....இப்படித்தான் என யாரும் அறுதியிடும் வரை.

நன்றி.

said...

// இரா.சுகுமாரன் said...
நன்றி அய்யா, //

ஐயாவா! சரி பைய்யா! :-)

// சங்க இலக்கியங்களிலிருந்து பழைய பாடலை எழுதியிள்ளீர்கள். //

ஆமாங்க

// எப்போதோ கல்லூரியில் தமிழ் ஆசிரியர் சொல்லித் தந்தது. //

ஆகா...இன்னும் நெனவு வெச்சிருக்கீங்க. கண்டிப்பா பாராட்டனும்.

// நன்றி தங்களின் தமிழ் ஆர்வத்திற்கு
சுகுமாரன்
//

மிக்க நன்றி சுகுமாரன்.

said...

// தி. ரா. ச.(T.R.C.) said...
பொருள் என்பது மெய்ப்பொருள். வேலவரின் ஞானமே மெய்ப்பொருள். அருள் நமக்கு வேண்டியது. கந்தவேள் அருளினால் நமது சொந்தவேள்
உண்மையான வார்த்தைகள்.
அதனால் தான் திரு.பாபநாசம் சிவன் " கந்தன் கருணை புரியும் வடிவேலன்" என்று பாடினார் //

தி.ரா.ச, பாபநாசம் சிவன் முருகன் மேல் பாடிய பாடல்களின் வரிகள் கிடைக்குமா?

said...

// SK said...
நல்ல இனிய விளக்கம்!

'நடக்க வேண்டியது' எனச் சொல்லும்போது அதற்கு நம் செயலை மீறிய ஒரு கணக்கு இருக்க வேண்டுமே, ராகவன்? //

நடக்க வேண்டியது நம்மை மீறிய கணக்குதான். அதில் ஐயமென்ன. அந்தக் கணக்கு எந்தக் கணக்காக இருந்தாலும் "ஊழ் என்பது நடக்க வேண்டியது. அந்த நடக்க வேண்டியது தவறாக நடந்தாலும் ஊழையும் உட்பக்கம் காண்பர் உழைவின்றித் தாழாது உஞற்றுபவர்." சரியா?

// மறுபிறவியில் அவ்வளவாக நம்பிக்கை இல்லாத மதங்களும்கூட விதி என்பதற்கு மனித யத்தனத்தைத் தாண்டிய ஒரு சக்தியின் அல்லது கடவுளின் முடிவு, டெஸ்டினி என்று தான் சொல்லுகின்றன. ஆங்கில அகராதிகளிலும் அப்படித்தான் போட்டிருக்கிறது!

இது முற்பிறவி சம்மந்தப்படாமலும் வரலாம்.

எந்தவோரு காரணமுமின்றி நிகழும் சில செயல்களைப் பார்த்து நம் முன்னோர் முற்பிறவி என்று சொல்லி வைத்தார்கள்.

நீங்கள் பிறிதொரு பதிலில் கூறியது போல, மரணத்திற்குப் பின் என்ன நடக்கும் எனத் தெரியாதபோது, அதே லாஜிக்கைப் பயன்படுத்தி, பிறப்புக்கு முன் என்ன நடந்தது என்பதையும் சொல்ல முடியாதுதானே, சாதாரண நம் போன்ற மனிதர்களால்!

ஒரு சில அறிந்தவர்கள் கூற்று சிலரால் ஒப்புக்கொள்ள முடியாததாகப் போகலாம்.
அதற்காக, அவை இல்லையென ஆகிவிடாது....இப்படித்தான் என யாரும் அறுதியிடும் வரை. //

நல்ல விளக்கம் எஸ்.கே.

said...

மிக நல்ல பதிவு இராகவன்.

மன்னே என்பதற்கு இங்கே மன்னவனே என்பதை விட மன்னி நின்றவனே என்ற பொருள் பொருத்தமோ என்று தோன்றுகிறது. மின்னே நிகர் வாழ்வைப் பற்றிப் பேசியவர் நிலைத்து நிற்பவனே என்ற பொருளில் இறைவனை மன்னே என்கிறாரோ என்று தோன்றுகிறது. ஆனால் நீங்கள் பெரியோர்கள் சொன்னதைத் தான் இங்கே சொல்லியிருப்பீர்கள். அதனால் மறுத்துச் சொல்ல விரும்பவில்லை.

said...

சொல் ஒரு சொல்லில் நீங்க இட்டப் பதிவையும் கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள். நண்பர்கள் சில பின்னூட்டங்கள் இட்டிருக்கிறார்கள். சிலவற்றிற்கு உங்கள் பதில்கள் தேவையிருக்கலாம்.

said...

// குமரன் (Kumaran) said...
மிக நல்ல பதிவு இராகவன்.

மன்னே என்பதற்கு இங்கே மன்னவனே என்பதை விட மன்னி நின்றவனே என்ற பொருள் பொருத்தமோ என்று தோன்றுகிறது. மின்னே நிகர் வாழ்வைப் பற்றிப் பேசியவர் நிலைத்து நிற்பவனே என்ற பொருளில் இறைவனை மன்னே என்கிறாரோ என்று தோன்றுகிறது. ஆனால் நீங்கள் பெரியோர்கள் சொன்னதைத் தான் இங்கே சொல்லியிருப்பீர்கள். அதனால் மறுத்துச் சொல்ல விரும்பவில்லை. //

நன்றி குமரன்.

மன்னே என்ற சொல்லுக்கு எனக்குத் தோன்றியதும் மற்ற பெரியவர்கள் சொன்னதும் மன்னனே என்ற பொருளில்தான். மன்னி நின்றவனே என்றால் அதை மன்னியனே என்றுதானே சொல்லியிருக்க வேண்டும். மன்னி என்ற சொல்லிற்கு என்ன பொருள் கொள்கிறீர்கள். கொஞ்சம் விளக்குங்களேன்.

said...

இராகவன்,

மன்னுதல் என்றால் நிலைத்தல் என்ற பொருளில் வரும் என்று சொன்னேன். மன்னே என்றால் நிலைத்தவனே என்ற பொருளில் வரும் என்று நினைத்தேன்.

http://www.nithiththurai.com/name/female/49.html

இந்த வலைப்பக்கத்தில் மன் என்றால் நிலைபேறு என்று பொருள் சொல்லியிருக்கிறார்கள்.

மன்னிய, மன்னே, மன்னுதல் போன்ற சொற்களை கூகிளில் இட்டுத் தேடினேன்.

மன்னிய, மன்னுதல் போன்ற சொற்கள் வந்த இடங்களில் நிலைத்தல் என்ற பொருள் வருவது போல் இருக்கிறது. மன்னே என்று வரும் இடங்களில் மன்னவன் என்ற பொருளும் வரும் போல் இருக்கிறது. ஒருவேளை மன்னன் என்பதே மன் என்ற சொல்லடிப்படையாக வந்ததோ என்று தோன்றுகிறது.

மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே - இங்கே மன்னனே என்று பொருள் கொள்ளலாம்; மன்னியவனே என்றும் பொருள் கொள்ளலாம்.

சிந்தையும் மன்னியதுன் திருமந்திரம் - இங்கே நிலைத்தது என்ற பொருள் பொருந்துகிறது.

திருவருட்பா - மன்னே எனை ஆள் வரதா சரணம் - இங்கே மன்னனே; மன்னியவனே இரண்டும் பொருந்துகிறது.

திருவருட்பா - மன்னே கலப மயில் மேல் அழகிய மாமணியே - இங்கேயும் அப்படியே

திருவருட்பா - மன்னும் நின் அருள் வாய்ப்பதின்றியே இன்னும் இத்துயர் ஏய்க்கில் என் செய்கேன் - இங்கே நிலைத்தல் என்ற பொருள் வருகிறது.

இப்படியே திருவருட்பாவில் நிறைய காட்டலாம்.

திருக்குறள் 692:

மன்னர் விழைய விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கம் தரும்

தேடினால் நிறைய கிடைக்கிறது. அதனால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.