Tuesday, August 29, 2006

31.செவ்வானமே செந்தாமரையே

இந்தப் பாடல் சென்ற பாடலின் தொடர்ச்சி. "இல்லே எனும் மாயையில் இட்டனை நீ" என்று சென்ற பாடலில் வருந்திய அருணகிரிநாதர், இந்தப் பாடலில் எப்படிக் காப்பாற்றப்பட்டார் என்பதைச் சொல்கிறார்.

செவ்வான் உருவில் திகழ் வேலவன் அன்று
ஒவ்வாதது என உணர்வித்தது தான்
அவ்வாறு ஒருவர் அறிகின்றது அலால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவோ


தொடக்கமே முருகனின் பண்பை விளக்குகிறது. செவ்வேள் முருகன் செம்மைப் பண்புடையவன். அவனது மனம் மட்டுமல்ல உடலும் உடைகளும் கூட செம்மையானவை. எட்டுத்தொகை நூல்களில் தலையாயது குறுந்தொகை. இதில்தான் தருமிக்காக இறைவன் பாடிய "கொங்கு தேர் வாழ்க்கை" என்ற செய்யுளும் தொகுக்கப் பட்டுள்ளது. இந்த நூலுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். "தாமரை புரையும் காமர் சேவடி" என்று தொடங்கியவர், "பவழத்தன்ன மேனி" என்கிறார். அதாவது பவழம் போன்ற செக்கச் செவேலென்று இருக்கும் தெய்வம் என்கிறார்.

பொதுவாக நாம் வணங்கும் தெய்வங்கள் எல்லாம் நாம் கண்ட உருவகங்கள். செம்மைப் பண்பை உயர்வு செய்ய வேண்டி, தமிழர்கள் அனைத்திலும் செம்மையான தெய்வத்தைக் கண்டார்கள். தாமரை மலரும் சிவப்பு. ஆக திருவடிகளும் சிவப்பு. மேனியும் சிவப்பு. அநுபூதியிலும் அருணகிரி அதைத்தான் சொல்கிறார். "செவ்வான் உருவில் திகழ் வேலவன்!" விடியற்காலையிலும் மாலை வேளைகளிலும் நாம் விண்ணில் காணும் செந்நிறம் எத்தனை சுகமானது. பார்க்கப் பார்க்கத் திகட்டாடது. அத்தகைய செம்மையானவர் முருகன் என்பது அருணகிரி வாக்கு. இதை வேறுவிதாமகவும் பார்க்க வேண்டும். வானத்தின் செம்மை உதயத்திலும் அஸ்தமனத்திலும் விளங்கும். முருகனின் செம்மை இன்பத்தின் உதயத்திலும் துன்பத்தின் அஸ்தமனத்திலும் விளங்கும். ஆகையால்தான் "செவ்வான் உருவில் திகழ் வேலவன்" என்று புகழ்கிறார்.

"முருகா! பேரிறைவா! துன்பத்தில் உழன்று கொண்டிருந்தேன் நான்! உண்மையை உணராமல், நன்மையைப் புரியாமல், தன்மையை விளங்காமல் திரிந்தேன் நான்! அந்த மாயைகள் எல்லாம் விலக, அவைகள் எல்லாம் ஒவ்வாதவை என்று நீயே உணர்வித்தாய்! அப்படி உன் கருணையால் ஒவ்வாதவைகளை ஒருவர் உணர்வதைத் தவிர வேறு வழி எதுவுமில்லை. எம்மால் ஆவதொன்றுமில்லை." என்கிறார் அருணகிரி. சென்ற பாடலில் "மாயையில் இட்டதற்கு" முருகனைக் காரணம் கேட்ட அருணகிரி, இந்தப் பாடலில் முருகன் காப்பாற்றியதைச் சொல்கிறார். இறைவனாகப் பார்த்துக் காப்பாற்றா விட்டால் உய்ய வழி ஏது? இப்பொழுது நான்கு வரிகளையும் படியுங்கள்.
செவ்வான் உருவில் திகழ் வேலவன்
ஒவ்வாதது என உணர்வித்தது தான்
அவ்வாறு ஒருவர் அறிகின்றது அலால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவோ!
நாமாக ஒன்றைச் செய்ய முடியுமா? இறைவனின் திருவருளினாலன்றி பிழைக்க வழியேது? இறைவனை உணர்ந்து கொள்ளவும் இறைவனின் கருணை வேண்டும் என்கிறார் அருணகிரி. பட்டினத்தடிகளும் அப்படித்தானே! "காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே" என்று இறைவன் உணர்வித்த பிறகே உய்த்தார்.

பக்தியுடன்,
கோ.இராகவன்

13 comments:

said...

//பொதுவாக நாம் வணங்கும் தெய்வங்கள் எல்லாம் நாம் கண்ட உருவகங்கள். செம்மைப் பண்பை உயர்வு செய்ய வேண்டி, தமிழர்கள் அனைத்திலும் செம்மையான தெய்வத்தைக் கண்டார்கள்//

ஜிரா...ஒவ்வொரு பதிவிலும் ஒரு ஆழ்ந்த கருத்தை அசால்டாக(மன்னிக்கவும் வேகத்தில் அசால்டுக்கு சரியான தமிழ்ச்சொல் கிடைக்கவில்லை) சொல்லி விடுகிறீர்கள்!
முருகனைச் "செங்கோடன்" என்று அழைப்பது இப்போது நன்கு விளங்குகிறது! ஜோதிட இயலிலும், செம்மை நிறைந்த செவ்வாய் கோளுக்கும், "செங்கோடன்" முருகன் தான் அதி தேவதை! "செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க" என்று தான் அருணகிரியாரும் வாழ்த்துகிறார்.

ஆழி மாயனின் நீல வண்ணம் குறித்தும் பொருள் உரைத்தால், மனம் மகிழும். குமரனைக் கேட்டால், மாட்டேன் என்றா சொல்லப் போகிறார் :-)

//இறைவனின் திருவருளினாலன்றி பிழைக்க வழியேது? இறைவனை உணர்ந்து கொள்ளவும் இறைவனின் கருணை வேண்டும்//

உண்மை; உண்மை..."அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" என்றல்லவா ஆன்றோரும் அருளியுள்ளனர்!

said...

// kannabiran,Ravi Shankar (KRS) said...
//பொதுவாக நாம் வணங்கும் தெய்வங்கள் எல்லாம் நாம் கண்ட உருவகங்கள். செம்மைப் பண்பை உயர்வு செய்ய வேண்டி, தமிழர்கள் அனைத்திலும் செம்மையான தெய்வத்தைக் கண்டார்கள்//

ஜிரா...ஒவ்வொரு பதிவிலும் ஒரு ஆழ்ந்த கருத்தை அசால்டாக(மன்னிக்கவும் வேகத்தில் அசால்டுக்கு சரியான தமிழ்ச்சொல் கிடைக்கவில்லை) சொல்லி விடுகிறீர்கள்!
முருகனைச் "செங்கோடன்" என்று அழைப்பது இப்போது நன்கு விளங்குகிறது! ஜோதிட இயலிலும், செம்மை நிறைந்த செவ்வாய் கோளுக்கும், "செங்கோடன்" முருகன் தான் அதி தேவதை! "செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க" என்று தான் அருணகிரியாரும் வாழ்த்துகிறார். //

வாங்க KRS, இளங்கோவடிகளே செவ்வேள் எனக் கந்தனைக் கொண்டாடும் பொழுது.....நாமெல்லாம் கொண்டாடாமல் ஏது!

// ஆழி மாயனின் நீல வண்ணம் குறித்தும் பொருள் உரைத்தால், மனம் மகிழும். குமரனைக் கேட்டால், மாட்டேன் என்றா சொல்லப் போகிறார் :-) //

குமரன் எங்கே? குமரா வருக...விளக்கம் தருக...காத்திருக்கிறோம். கருணை காட்டுவீர்!

said...

அசால்ட்டுக்குத் தமிழ்ச் சொல் என்ன? ரொம்பவும் லேசாக என்று சொல்லலாமா?

said...

//செம்மைப் பண்பை உயர்வு செய்ய வேண்டி, தமிழர்கள் அனைத்திலும் செம்மையான தெய்வத்தைக் கண்டார்கள். தாமரை மலரும் சிவப்பு. ஆக திருவடிகளும் சிவப்பு. மேனியும் சிவப்பு. //

இராகவன். கருமையே பெரும்பாலும் மேனி நிறமாகக் கொண்ட தமிழர்கள் சிவப்பு நிறத்தை தெய்வமாகக் கண்டார்கள் என்பது வியப்பூட்டும் உண்மை. தென்புலத்தார் என்று இறந்தவர்களைக் குறிப்பிடுவதற்கும் ஏதோ வரலாற்று அடிப்படையான காரணம் இருக்கும் என்று நினைக்கிறேன் (குமரிக்கண்டம்) அது போல இறைவனை செம்மைக்குணமுடையவனாகப் பார்த்ததில் ஏதோ காரணம் இருக்கவேண்டும்.

said...

பதிவை இருமுறை படித்துவிட்டேன் இராகவன். பலவிதமான எண்ணங்கள் எழுகின்றன. ஒவ்வொன்றாக எடுத்து எழுதவேண்டும். மீண்டும் வருகிறேன்.

said...

"எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே?"

இதற்கு,
என்னால் எப்படி இன்னொருவர்க்கு எடுத்தியம்ப முடியும்?
என்பது இன்னும் சரியாக இருக்குமோ?

மேலும், இன்னொரு நிகழ்வையும் சொல்ல ஆசைப்படுகிறேன்!

அருணையார் இவ்வுலக வாழ்வை வெறுக்கிறார்!

கோபுரத்தின் உச்சியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொள்ள முடிவுறுகிறார்!

யாரும் பார்க்காத அந்தி நேரத்தைத் தெரிவு செய்கிறார்!

குதிக்கிறார்!

அப்போது முருகன் வந்து ஆட்கொள்ளுகிறார்!

அந்நேரம் செவ்வான நேரம்! அந்தி நேரம்!

அதோடு கலந்த உருவுடன் முருகன் வந்ததையே,
"செவ்வான் உருவில் திகழ் வேலவன் அன்று உணர்வித்தான்"
என அந்தக் குறிப்பிட்ட நேரத்தைச் சொல்கிறார் அருணகிரிநாதர்!

முருகனருள் முன்னிற்கும்!



//அசால்ட்டுக்குத் தமிழ்ச் சொல் என்ன? //

மிக இயல்பாக???

said...

செவ்வான் உருவில் திகழ் வேலவன் என்பதும் சிவந்தவன் சிவன் என்பதும் தெரிந்தது. அபிராமி பட்டரும் அன்னையைப் பற்றிப் பாடத் தொடங்கியதும் பாடுவது முழுதும் சிவந்த அவள் திருவுருவத்தையே!

உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம்
உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம்
மாதுளம் போது
மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி
மென்கடிக் குங்குமத் தோயமென்ன விதிக்கின்ற மேனி
அபிராமி என்றன் விழுத்துணையே.

பாடலின் விளக்கம்:
http://abiramibhattar.blogspot.com/2005/10/1.html

said...

நம்மாழ்வாரின் பாசுரம் ஒன்றும் நினைவிற்கு வருகிறது.

ஒருவண் ணம்சென்று புக்கெனக்கு ஒன்றுரை யொண்கிளியே
செருவொண் பூம்பொழில் சூழ்செக்கர் வேலை திருவண்வண்டூர்
கருவண்ணம் செய்யவாய் செய்யகண் செய்யகை செய்யகால்
செருவொண் சக்கரம் சங்கடை யாளம் திருந்தக் கண்டே

அழகில் சிறந்த கிளியே! ஒரே நோக்கத்தோடு சென்று எனக்காக ஒரு சொல் சொல்வாய நீ. ஒன்றை ஒன்று அழகில் மிஞ்சும் பூக்களை உடைய பொழில்களும் செந்நிறம் பொருந்திய கடற்கரையையும் உடைய திருவண்வண்டூர் செல்வாய். அங்கே இருக்கும் பல வண்ண மலர்களைக் கண்டு மயங்கிவிடாதே. எம்பெருமான் அடையாளங்களைச் சொல்கிறேன் - கருவண்ணம், சிவந்த வாய், சிவந்த கண், சிவந்த கை, சிவந்த கால், போரில் வில்லும் சக்கரம், சங்கு - இவ்வடையாளங்களைக் கண்டு அவனிடமே சென்று என்னைப் பற்றி ஒரு வார்த்தை சொல்.

said...

இன்னொரு பாசுரத்தில் நம்மாழ்வார் திருமாலிருஞ்சோலை அழகரசப் பெருமாளை (சுந்தரராஜப் பெருமாள்) இப்படிப்பாடுகிறார்.

கட்டுரைக்கில் தாமரைநின் கண்பாதம் கையொவ்வா,
சுட்டுரைத்த நன் பொன்னுன் திருமேனி ஒளி ஒவ்வாது,
ஒட்டுரைத்திவ் வுலகுன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும்,
பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதீ. 3.1.2.

விளக்கிச் சொல்லப் புகுந்தால் தாமரை உன் கண்கள், கால்கள், கைகளின் அழகுக்கும் செம்மைக்கும் ஒவ்வாது. சுட்டு உரைத்த நன்பொன்னின் ஒளியும் நிறமும் உன் திருமேனியில் ஒளிக்கு ஒவ்வாது. கூடி நின்று இவ்வுலகத்தாரெல்லாம் உன்னைப் புகழ்கிறார்களே அந்தப் புகழ்ச்சியெல்லாம் பயனில்லா உண்மைக்கு வெகுகீழே உள்ளதான புகழ்ச்சிகளாகக் காட்டுகின்றாயே பரஞ்சோதீ.

இப்படி எத்தனையோ எடுத்துக் காட்டலாம்.

said...

//அவ்வாறு ஒருவர் அறிகின்றது அலால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவோ!
//

நானே வழியாக இருக்கிறேன் - இயேசு நாதர்.

எல்லா அறங்களையும் விட்டுவிட்டு என்னையே சரணடை. நான் உன்னை எல்லா விதமான பாபங்களில் இருந்து விடுவித்து விடுகிறேன். கவலை வேண்டாம் - கீதாசார்யன்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி - வாதவூரார்

இந்தக் கருத்து திரும்பத் திரும்ப எல்லா திக்கிலும் எதிரொலித்துக் கொண்டே தான் இருக்கிறது. ஆனால் நாம் தான் உணர்வதில்லை போலும்.

said...

//ஆழி மாயனின் நீல வண்ணம் குறித்தும் பொருள் உரைத்தால், மனம் மகிழும். குமரனைக் கேட்டால், மாட்டேன் என்றா சொல்லப் போகிறார் :-)
//

ரவிசங்கர். இராகவனைக் கேட்டாலே சொல்லியிருப்பாரே!!

கடலுக்கும் வானுக்கும் நீல நிறம். கண்ணனுக்கும் நீல நிறம். உங்களுக்குத் தெரிந்தே தானே கேட்டீர்கள்?! ஆழி மாயன் என்று சொல்லும் போது திருவாழியான திகிரியைக் கையில் கொண்டவன் என்ற பொருளும் ஆழியாகிய கடல் வண்ணன் என்ற பொருளும் உண்டல்லவா? கடல்வண்ணன்; கார்வண்ணன் என்பதெல்லாம் அவன் பெயரல்லவா? எங்கும் நிறைந்த இறையை எந்நிறமும் இல்லாத கருநிறமாய்க் கண்டனர் முன்னோர். ஆனால் செம்மையிலும் விருப்பம். அதனால் அவன் அங்கங்களுக்கு செந்நிறம் இருக்கிறது.

said...

குமரன்
வந்ததற்கும் பொருள் தந்ததற்கும் நன்றி.

//பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதீ.//
பெருமாளை "முக்கண்ணப்பா" என்று ஆழ்வார் அழைப்பார். ஆனால் "பரஞ்சோதி" என்று ஆழ்வார் அழைப்பதை இன்று தான் தெரிந்து கொண்டேன்.

//ரவிசங்கர். இராகவனைக் கேட்டாலே சொல்லியிருப்பாரே!!//
சர்க்கரைப் பந்தலில் தேன் மாரியும் பொழிய வேண்டுமே; அதற்குத் தான் உங்களையும் உள்ளிழுத்தோம். :-)
மீண்டும் நன்றி.

said...

//விடியற்காலையிலும் மாலை வேளைகளிலும் நாம் விண்ணில் காணும் செந்நிறம் எத்தனை சுகமானது. பார்க்கப் பார்க்கத் திகட்டாடது. அத்தகைய செம்மையானவர் முருகன் என்பது அருணகிரி வாக்கு. இதை வேறுவிதாமகவும் பார்க்க வேண்டும். வானத்தின் செம்மை உதயத்திலும் அஸ்தமனத்திலும் விளங்கும். முருகனின் செம்மை இன்பத்தின் உதயத்திலும் துன்பத்தின் அஸ்தமனத்திலும் விளங்கும். ஆகையால்தான் "செவ்வான் உருவில் திகழ் வேலவன்" என்று புகழ்கிறார் //

அருமை.

வானம் செம்மையாகத் திகழும் சூரியன் தோன்றும் மற்றும் மறையும் நேரங்கள் சந்தியா காலம் எனப்படும். இறை வழிபாட்டுக்கும் மனமொன்றி தியானம் செய்வதற்கும் மிக உகந்த காலங்கள்.

சிவபெருமான் நெற்றிகண் நெருப்பிலிருந்து உருவானதால் செந்நிறம் உடையவர். வடமொழியில் "அக்னிபுவ' ஏன்றும் பெயர் உண்டு. தமிழிலும் முருகனுக்கு செய்யோன் (செம்மை நிறத்தவன்) என்ற பெயர் உண்டு.