Monday, October 30, 2006

40. படைப்பில் அடைப்பில்லாமல் இருக்க

ஏழு பிறப்பு என்று சொல்கின்றோமே! அதென்ன ஏழு பிறப்புகள்! வள்ளுவர் சொல்கிறார். மாணிக்கவாசகர் சொல்கிறார். அருணகிரி சொல்கிறார். எல்லோரும் சொல்கின்றார்கள். அதென்ன ஏழு பிறப்புகள்?
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவர்க்கு
எழுமைக்கும் ஏமாப்புடைத்து
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து - வள்ளுவர்

மா ஏழ் சனனம் கெட - கந்தரநுபூதியில் அருணகிரி

எல்லாப் பிறப்பும் பிறந்துளைத்தேன் - திருவாசகத்தில் மாணிக்கவாசகர்


தாவரங்கள், நீர்வாழ் உயிரிகள், விலங்குகள், பறவைகள், மனிதர்கள், மற்றும் தேவர்கள் என்பன அந்த ஏழு பிறப்புகள். ஏழு என்பது இங்கு எண்ணிக்கையைக் குறிப்பதல்ல. வகைகளைக் குறிப்பது. ஏழு வகையான பிறப்புகளில் நாம் உழல்கிறோம். உருவத்தில் மனிதராகவே பிறப்பெடுத்தாலும் உள்ளத்தால் இந்த ஏழில் ஒன்றாகவே இருப்பார்கள்.

இப்படி ஏழில் ஒன்றாகப் பிறந்து உலகமாயைகளில் வீழ்வதில் அருணகிரிக்கு விருப்பம் இல்லை. அப்படி மாயையில் மூழ்குவது மூடத்தனமாகப் படுகிறது. ஆகையால் "கோவே, கொடி போன்ற குறமகளின் தோளினைப் படரும் தெய்வமே, ஈசன் வணங்கிப் பணியும் குருவே!" என்றெல்லாம் வேண்டி ஏழுவிதமான பிறப்புகளிலுமிருந்து விடுதலை கேட்கிறார்.

மாவேழ் சனனம் கெட மாயைவிடா
மூவேடணை என்று முடிந்திடுமோ
கோவே குறமின் கொடிதோள் புணரும்
தேவே சிவசங்கர தேசிகனே


"சிவசங்கர தேசிகனே!" சிவசிங்கரப் பெருமானுக்கு முருகன் குருநாதனல்லவா! அது எப்படி? எல்லாரும் வேதங்களை ஓதுவார்கள். ஆனால் வேதங்களே ஓதுவது சிவனின் திருநாமத்தை. வேதமும் வேதத்தை ஓதுவாரும் என்றும் சென்று வணங்குவது கயிலையீசனை. கயிலையில் ஈசன் அமர்ந்திருக்கும் மேருமலைக்கு அருகில் இருப்பது கந்தமாதன பர்வதம். அங்கே முருகப் பெருமான் அமர்ந்திருப்பார். நான்முகன் அந்த பொழுது தேவனையும் தேவியையும் தரிசித்து வரப் புறப்பட்டார். வழியில் கந்தவேள் சக்திவேலோடு அமர்ந்திருக்கிறார். முருகனைப் பார்த்தார். ஆனால் பார்க்காமல் போனார். போனவர் ஈசுவரனையும் ஈசுவரியையும் வழிபட்டார். திரும்பி வருகையில் இருகையிருந்தும் முருகை வணங்கவில்லை. மீண்டும் பார்த்தும் பார்க்காமலும் போனார்.

இது பொய். பார்க்கமலே சென்றிருந்தால் தவறில்லை. பார்த்தும் பார்க்காமலும் போவது நடிப்பு. அப்படிச் சென்ற திசைமுகனை முருகப் பெருமான் அழைத்துக் கேட்டார். நான்முகனின் நான்கு தலைகளிலும் ஆணவம் ஏறிக்கிடந்தது.

"நான்முகனே! பார்த்தும் பார்க்காமல் போவது பெரியவர்க்கு அழகா?"

"முருகா! படைப்புக் கடவுள் நான். படைப்பில் அடைப்பு ஏற்படாமல் முனைப்பாக செயல்படும் வேளையில் பார்வை பிசகியிருக்கலாம்! அது குற்றமாகாது!" பிசகு பிரம்மன் நாக்கில் இருந்தது.

முருகன் பொறுத்தார். "சரி. உமது தொழிலுக்கு அடிப்படை?"

"முருகா! சிருட்டித் தொழிலை வேதங்களை எனது மனதில் உருட்டிப் படைக்கிறேன். நான்கு முகங்கள் வேதங்களாகிப் படைக்கின்றன!" நான்கு தலைகளிலும் கனம் அதிகரித்தது. முத்தொழிலுக்கும் மூல முதல்வன் ஈசன் என்பதைக்கூட மறந்தார். தானே அனைத்தும் என்ற கூடா கர்வம். அது பங்கப்பட வேண்டுமல்லவா! முருகன் வாய் திறந்தார்.

"சரி. வேதமே உமது நாதமென்றால். அதைச் செப்புக!"

வேதம் ஓங்காரமாகத் தொடங்கும். ஆகையால் ஓங்காரம் ஒலித்தார் பிரம்மன். அதை அப்படியே நிறுத்திய முருகன், அந்த ஓங்காரத்திற்குப் பொருள் கேட்டார். திகைத்துப் போனார் பிரம்மன். விக்கல் தொண்டையை அடைத்தது. விடை தெரியாமல் நாணம் வந்தது. "அவை நடுவே நீட்டோலை வாசியா நின்றான்" என்ற நிலை.

சினந்தார் முருகன். "பிரம்மனே! வேதங்களின் நாதன் என்று சொல்லும் உமக்கு அதன் தொடக்கத்திற்கே பொருள் தெரியவில்லை. இனி படைப்புத் தொழிலைச் செய்யும் தகுதியை இழந்தீர். உமது ஆணவம் இத்தோடு நீங்கட்டும்." கையை மடங்கி நான்கு தலைகளும் பொடிப்பொடியாக ஆகுமாறு குட்டினார். முருகப் பெருமான் தீண்டியதும் ஆணவம் போனது. ஆனாலும் பிரம்மனைச் சிறையிட்ட முருகன், படைப்புத் தொழிலைத் தாமே மேற்கொண்டார்.

பிரம்மன் படைத்ததைக் காக்கும் வல்லமை விஷ்ணுவிற்கும் அவைகளை அழிக்கும் திறமை ருத்திரனுக்கும் இருந்தது. ஆனால் முருகப் பெருமானின் படைப்புகள் சிறப்பாக இருந்ததால் அவற்றைக் காக்கவும் அழிக்கவும் விஷ்ணுவாலும் ருத்திரனாலும் முடியவில்லை. ஆகையால் காக்கும் தொழிலையும் அழிக்கும் தொழிலையும் கூட முருகப் பெருமானே மேற்கொண்டு முத்தொழிலுக்கும் தாமே அதிபதி என்பதை நிலைநாட்டினார். விஷ்ணுவும் ருத்திரனும் கயிலைக்கு ஓடி ஈசனை நாடி விழுந்து கதறினார்கள். வேலை போனால் கதறி அழத்தானே வேண்டும்.

அவர்களுக்கு வேலையை மீண்டும் வாங்கித்தருவதாக உத்தரவு கூறி ஈசன் முருகனிடத்தில் வந்தார். பிரம்மனை விடுவித்து படைப்புத் தொழிலையும் ஒப்படைக்கச் சொன்னார். தந்தை சொல்லைத் தனையன் மீறவில்லை. அப்படியே செய்தார். வேதத்திற்கு பொருள் தெரியுமா என்று ஈசன் முருகனைக் கேட்க, கந்தவேளோ சிவபெருமானையே மண்டியிடச் செய்து சீடனாக்கி உபதேசித்தார். ஆகையால் முருகனை எல்லாரும் தகப்பன்சாமியென்றும் சிவகுருநாதன் என்றும் பரமகுரு என்றும் இன்னும் பல பெயர்களிலும் புகழ்கின்றார்கள்.

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, October 23, 2006

39. வீண்பெருமை பேசுகின்றவர்களுக்கு என்ன பெயர்?

தோண்டத் தோண்ட நீர் தருவது நீருற்று. படிக்கப் படிக்க இன்பம் தருவது தமிழூற்று. அதிலும் இந்தப் பாடல் தீந்தமிழூற்று. சட்டென்று படிக்கின்றவர்களுக்கு ஒன்றும் புரியாதது போல இருக்கும். விளக்கிச் சொன்னால் அனைவருக்கும் பிடிக்கும்.

ஆதாளியை ஒன்று அறியேனை அறத்
தீதாளியை ஆண்டது செப்புமதோ
கூதாள கிராத குலிக்கிறைவா
வேதாள கணம் புகழ் வேலவனே


மனிதர்களாகிய நாம் நமக்குள் எத்தனை பாகுபாடு பார்க்கின்றோம். இனம், மதம், மொழி, நாடு என்று எத்தனையோ காரணிகள். அத்தனை காரணிகளையும் முழுமூச்சோடு பயன்படுத்தி வேற்றுமையை வளர்க்கின்றோம். ஆனால் தெய்வமும் அப்படி இருக்க முடியுமா? இருந்தால் அது தெய்வமாகுமா? திருக்குறள் என்ன சொல்கின்றது? "வேண்டுவார் வேண்டாதார் இலான்" என்று இறைவனைச் சொல்கின்றது. இறைவனுக்கு வேண்டப்பட்டவர்கள் வேண்டாதவர்கள் என்று யாரும் கிடையாது. வடமொழியில் "துஷ்ட நிக்ரஹ! சிஷ்ட பரிபாலன!" என்று இறைவனின் பண்பைக் கூறுவார்கள். அதாவது தீயவர்களை அழித்து நல்லவர்களைக் காப்பது இறைவனின் கடமை என்கிறது வடமொழி. ஆனால் தமிழ் இந்த வாதத்தை எந்தக் காலத்திலும் ஒப்புக் கொள்ளவில்லை.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் அப்படி சொல்லியிருக்கின்றார் என்றால் பிற்காலத்தில் அருணகிரியும் இந்தக் கருத்தையே வலியுறுத்துகிறார். எப்படி தெரியுமா?
மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
வைதாரையும் அங்கு வாழ வைப்போன்
வண்டுகள் மொய்க்கின்ற மலர்களால் கட்டப்பட்ட பூச்சரத்தை குழலில் சூட்டிக் கொள்ளும் வள்ளி நாச்சியாரைக் களவு செய்து கலவு கொண்டவன் முருகன். தன்னை யாரேனும் தமிழால் வைதாலும் கூட அவரைக் காப்பாற்றி வாழ வைப்பான் அந்த முருகன். பாருங்களேன்! கந்தனின் கருணையை! ஆகையால் சூரனுடன் போரிட்டு தேவர்களைக் காத்து சூரனுக்கும் வாழ்வளித்தான். சூரனை சேவலும் மயிலுமாக்கி தன்னுடன் வைத்துக் கொண்டானே! அந்த சேவலையும் மயிலையும் இன்றும் நாம் வழிபடுகின்றோமே! ஆக தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு என்கிறது தமிழ். கச்சியப்பரும் கூட இதே கருத்தைக் கந்தபுராணத்தில் குறிப்பிடுகிறார்.

ஆதாளம் என்றால் தன்னைப் பற்றியே பெருமை பேசுதல். பாருங்கள் இத்தனை சிறிய சொல்லில் எத்தனை பெரிய பொருள். ஆதாளி என்றால் தன்னைப் பற்றியே வீண்பெருமை பேசுகின்றவர். ஆதாளிவாயன் என்று ஊர்ப்பக்கம் இன்னமும் சொல்வதுண்டு. ஒன்றறியேனை - நல்லவைகள் ஒன்றும் அறியாதவனை. அறத்தீதாளி - அறத்திற்கு எதிரான தீய கருத்துகளை ஆள்கின்றவர். ஆண்டது செப்புமதோ - அருள் தந்து ஆட்கொண்டதை எப்படிச் சொல்வது? இந்த வரியை இப்பொழுது படியுங்கள். ஆதாளியை ஒன்று அறியேனை அறத்தீதாளியை ஆண்டது செப்புமதோ! "முருகா! வீண்பெருமை பேசித் திரிந்து கொண்டிருந்த என்னை, நல்லவைகள் என்று ஆன்றோர் கூறுவதையெல்லாம் அறியாத என்னை, தருமத்திற்கு எதிரான தீய கருத்துகளைக் கொண்ட என்னை, நீ வலிய வந்து ஆட்கொண்டாயே! அந்தக் கருணையை என்னவென்று சொல்வது?" அருணகிரி கதறுகின்றார். இதைத்தான் ஆங்கிலத்தில் subjugation என்று சொல்வார்கள்.

அப்படி ஆட்கொண்டது எப்படித் தெரியுமா? அதையும் அவரே சொல்கின்றார். கூதாள மலர் என்று ஒன்று உண்டு. மிகவும் அழகான மலராக இருந்தாலும் மலருக்குரிய நறுமணமில்லாமல் திகழும். பொதுவாக மணமில்லாத மலர்களை யாரும் விரும்பிச் சூடிக் கொள்வதில்லை. ஆனால் முருகப் பெருமானுக்கு கூதாள மலரும் சூட்டப் படுகிறது. கிராதகன் என்றால் கொலைத் தொழில் புரிகின்றவர். அவர்களுக்கு வேடவர் என்றும் பெயருண்டு. ஆனால் இன்றைக்குத் தீயவர்களைக் கிராதகர் என்று கூறும் வழக்கம் தமிழில் உள்ளது. கிராத குலிக்கு இறைவா - வள்ளியை மணம் புரிந்து கொண்டதன் மூலம், கொலைத்தொழில் புரிவதால் இழிவானவர் என்று மற்றவர்களால் கருதப் படும் வேடர்கள் குலத்திற்கும் தலைவனாக விளக்குகின்ற வேலவா!

மணமில்லாத கூதாள மலருக்கும் மதிப்பளித்து சூடிக்கொண்டு, வள்ளியை மணந்து கொலைத் தொழில் வேடுவருக்கும் தலைவனாகி, வேதாளங்களுக்கும் பூதங்களுக்கும் கூட இறைவனாக விளங்கும் வேலவரே! வீண்பேச்சும், நன்மையறியாதவனும் தரும நெறி ஒழுகாதவனுமாகிய என்னைக் கூட கருணை தந்து காத்தாயே! இந்தப் பெருமையை எப்படிச் சொல்வது!

பக்தியுடன்,
கோ.இராகவன்

Monday, October 16, 2006

38. அகந்தையால் கந்தையாவோமா!

அகந்தை. எத்தனை கொடிய நோய்! அகந்தை தாக்கியதால் வீழ்ந்தவர் எத்தனை பேர்கள்! சாதாரண மனிதர் முதல் பெரிய அறிஞர்கள் வரை அனைவரையும் சீண்டிப் பார்த்திருக்கின்றது அகந்தை. ஔவையாரையும் விடவில்லை இந்த அகந்தை. எப்படி வருந்துகிறார் பாருங்களேன்.

கருங்காலிக் கட்டைக்கு நாணாத கோடாலி
சிறுகதலித் தண்டுக்கு நாணும் - பெருங்கானில்
காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான் தோற்றது
ஈரிரவும் தூங்காது என் கண்

பெரிய பெரிய கருங்காலி மரங்களையெல்லாம் வெட்டித் தள்ளிய உறுதியான இந்த இரும்புக் கோடாலி, இளங் கதலித் தண்டுக்கு வளைந்து விட்டதே. கதலி என்பது வாழையின் ஒரு வகை. இந்தப் பெருங்காட்டில் மாடு மேய்க்கின்ற இந்தச் சிறுவனிடத்தில் தோற்றதால் இன்னும் இரண்டு நாட்களுக்கு உறக்கமே வாராதே என்று புலம்புகின்றார் ஔவையார்.

புலம்பலுக்குக் காரணம்? ஆணவம். செருக்கு தலைக்கு ஏற, தமிழில் தன்னை மிஞ்ச யாருமில்லையென்று இருந்தார் ஔவையார். "சுட்ட பழமா? சுடாத பழமா?" என்று கேட்டு செருக்கழித்தான் முருகன். அப்பொழுது ஔவையார் புலம்பியதுதான் மேலே குறிப்பிட்டது. அரிசியிலிருக்கும் கருக்கு சுவையை அழிப்பது போல, உள்ளத்தில் தோன்றும் செருக்கு பெருமையை அழித்து விடும். அதனால்தான் நம் முன்னோர்கள், "வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு" என்று சொல்லி வைத்தார்கள். ஆகையால் எவ்வளவு உயர்ந்தாலும் அடக்கமாக இருக்க வேண்டும். "நிலை உயரும் பொழுது பணிவு வந்தால், உலகம் உன்னை வணங்கும்" என்றார் கண்ணதாசன்.

சரி. அந்த அகந்தையை வளரவிடாமல் செய்வதெப்படி? அகந்தை கொடியைப் போன்றது. கொடி கொம்பினடியில் பிறந்தாலும், பிறகு கொம்பையே வளைத்து மூடிவிடும். அகந்தையும் அப்படித்தான். தான் தோன்றிய இடத்தையே மறைத்து விடும். கொடியை கூரிய வாளால் அரிந்து தள்ளுவது போல அகந்தையையும் அழிக்க வேண்டும். அதற்கான வாள் எது? "
பொறையாம் அறிவால்" என்ற அரிவாள் பயன்படும் என்கிறார் அருணகிரி. பொறுமையென்னும் அறிவு நல்ல விளைவுகளைத் தரும். பொறுத்தார் பூமியாள்வார் அன்றோ! இதைத்தான் "மனனே பொறையாம் அறிவால் அரிவாய் அடியோடும் அகந்தையையே!" என்கிறார் அருணகிரி.

கிரிவாய் விடு விக்ரம வேலிறையோன்
பரிவாரம் எனும் பதம் மேவலையே
புரிவாய் மனனே பொறையாம் அறிவில்
அரிவாய் அடியோடும் அகந்தையையே


மனப் பயிற்சியும் தேர்ந்த கல்வியும் பொறுமையென்னும் குணமும் இல்லாதார் என்ன செய்வது? அதற்கும் ஒரு வழி உண்டு. நன்றாக செல்வாக்கோடு வாழ்ந்த ஒருவன் அடிமையாகிப் போனால், அவனது செருக்கும் மமதையும் அழியும். அதற்காக இருக்கின்ற செல்வத்தையெல்லாம் விட்டு விட்டு அடிமையாகப் போவதா? அதற்கும் ஒரு வழி இருக்கிறது. முருகனுக்கு அடிமையாகி விட்டால்? இருக்கின்ற செல்வமும் வளமையும் அப்படியே இருக்க, முருகன் அருளெனும் செல்வமும் மேலும் பெருகும். ஔவையின் அகந்தையை நீக்கிய கந்தனுடைய கருணை நமக்கும் கிட்டும்.

அதற்காகத்தான் அருணகிரியும் வேண்டுகிறார். "கிரிவாய் விடு விக்கிரமவேலிறையோன்! பரிவாரம் எனும் பதமேவலையே புரிவாய்!" பரிவாரம் - முருகனுடைய அடியவர்கள் என்னும் பரிவாரம். அந்த அடியவர் கூட்டத்தில் இருப்பது பேரின்பம். நமக்கு ஒத்த நண்பர்கள் கிடைப்பது போல. அப்பேற்பட்ட கூட்டத்தில் நாமும் சேர்ந்தால் நல்வாழ்வு பெறலாம். "கிரவுஞ்ச மலையைத் தொளைத்த வேலுடைக் குமரா, உன்னுடைய அடியவர் கூட்டத்தைச் சேரும் பெருமையைத் தருவாய்! பொறுமை என்னும் பண்பால் அகந்தையை அழித்துக் காப்பாய் கந்தா!"

பக்தியுடன்,
கோ.இராகவன்

Tuesday, October 10, 2006

37. கற்கையில் வேண்டியது பணிவு

நாதா குமரா நம என்று அரனார்
ஓதாய் எனவோதியது எப்பொருள்தான்?
வேதா முதல் விண்னவர் சூடும் மலர்ப்
பாதா குறமின் பத சேகரனே


காலுக்கு அணிகலன் பூட்டும் வழக்கம் தமிழர்களுக்கு உண்டு. ஆண்கள் தண்டை அணிந்தால், பெண்கள் தண்டையும் அணிந்து அத்தோடு சிலம்பும் கொலுசும் சேர்த்து அணிவார்கள். அன்றைக்கே ஆண்கள் அணிவதை பெண்கள் அணிந்து கொள்வதும், பெண்கள் அணிவதை ஆண்கள் அணிந்து கொள்ளாமையும் வழக்கில் இருந்திருக்கின்றது.

சிவபெருமானுக்கு அணிகலம் எதுவென்றால் வெண்டலை மாலை. அதாவது மண்டையோட்டு மாலை. மண்ணை உண்ட மாலுக்கு அணிகலனோ குளிர்ச்சி பொருந்திய துளசி மாலை. முருகனுடைய திருவடிகளுக்கு அணிகலன் எது தெரியுமா? வானோர் முடி. அப்படித்தான் கந்தரலங்காரம் சொல்கிறது.
ஆலுக்கணிகலம் வெண்டலை மாலை அகிலமுண்ட
மாலுக்கணிகலம் தண்ணந் துழாந் மயிலேறும் ஐயன்
காலுக்கணிகலம் வானோர் முடியும் கடம்பும்கையில்
வேலுக்கணிகலம் வேலையும் சூரனும் மேருவுமே!


இதே கருத்தைத்தான் இந்தப் பாடலிலும் சொல்கின்றார். வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப் பாதா! வேதங்களை ஓதும் திசைமுகன் முதலான விண்ணவர்கள் அனைவரும் வந்து தொழும் திருவடிகள் முருகனுடையவை. அப்படிப் பட்ட முருகன் யாருடைய திருவடிகளைத் தொழுகின்றான் என்றால், அது வள்ளி நாச்சியார். அதை அழகாக "குறமின் பத சேகரனே" என்று அருணகிரி கூறுகின்றார். ஏன் தொழுகின்றார் என்பதைச் சென்ற பாடலில் பார்த்தோம்.

இப்படியெல்லாம் முருகனைப் புகழ்ந்து பேசி அருணகிரி யாசிப்பது என்ன? அவரும் ஒரு பொருளைத்தான் கேட்கின்றார். அதுவும் எப்பேற்பட்ட பொருள் தெரியுமா? ஈசன் முருகனிடம் கேட்ட பொருள். "நாதா குமரா நம என்று அரனார் உன்னை வணங்கி எந்தப் பொருளைக் கேட்டாரோ, அந்தப் பொருளை எனக்குத் தந்தருள்வாய் முருகா!" என்று இரக்கிறார் அருணகிரி.

சிவபெருமான் முருகனிடம் வணங்கிப் பெற்றது உபதேசம். அந்த உபதேசத்தைத் தனக்கும் அருள வேண்டுமென்று கேட்கின்றார் அருணகிரி. "நாவேறு பாமணத்த" என்று தொடங்கும் சுவாமிமலை திருப்புகழைப் பாருங்கள்.
"சேவேறும் ஈசர் சுற்ற மாஞான போத புத்தி
சீராகவே உரைத்த குருநாதா!
"
பரமசிவன் முருகனைச் சுற்றி வந்து உபதேசம் கேட்டாராம். கேட்பவன் சீடனல்லவா! அதனால்தான் அந்தப் பணிவு. இதையெல்லாம் ஏன் அருணகிரி திரும்பத் திரும்பச் சொல்கின்றார்? கற்கையில் பணிவு வேண்டும். பணிவில்லாத கல்வி பயனில்லாதது. அதை அனைவருக்கும் எடுத்துச் சொல்வதுதான் முருகன் சிவனுக்கு உபதேசம் செய்த கதை. அந்தப் பணிவோடு அருணகிரி, "திசைமுகன் முதலான விண்ணோர் தொழுதேத்தும் திருப்பாதங்களைக் கொண்ட முருகா! ஈசன் உன்னை வணங்கித் தொழுது பெற்ற உபதேசம் நானும் பெற வழி வகுப்பாய்!" என்று வேண்டுகின்றார்.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Tuesday, October 03, 2006

36. கணவன் மனைவிக்குள் பேதமில்லை

இந்த உடம்பு பஞ்சபூதங்களால் ஆனது. உடலில் நீர் இருக்கிறது. நெருப்பு இருக்கிறது. காற்று இருக்கிறது. அதுவும் மூச்சாக உள்ளேயும் வெளியேயும் சுற்றுகிறது. மண் இருக்கிறது. அதனால்தான் மண்ணோடு சேர்ந்து மண்ணாகி விடுகிறது. விண்வெளியும் இருக்கிறது. விண்ணின் பண்பு பரந்ததுதானே! மனத்தைக் காட்டிலும் பரந்தது ஒன்று உண்டா? இப்படி ஐம்பூதங்களால் ஆன உடம்பைப் படைத்தது பிரமன். விதி என்பதும் பிரமனைக் குறிக்கும். ஒருவருடைய பிறப்பையும் விதியையும் முடிவு செய்வதால் பிரனமுக்கும் விதி என்று பெயர்.

விதிகாணும் உடம்பை விடா வினையேன்
மதிகாண மலர்க்கழல் என்று அருள்வாய்
மதிவாள் நுதல் வள்ளியை அல்லது பின்
துதியா விரதா சுரபூபதியே

விதி காணும் உடம்பு என்பது நான்முகனால் படைக்கப் பட்ட ஐம்பூதங்களால் ஆன உடலைக் குறிக்கும். இந்த உடம்பு இகலோகத்திற்கு மட்டுமே உரியது. உலகத்தை விட்டுப் போகையில் உடம்பையும் விட்டு விட்டுதான் செல்ல வேண்டும். இப்படி இந்த உலகத்தில் இருக்கும் வரை உடலால் உந்தப் பட்ட வினைகள் அனைத்தும் விலக வேண்டும். அது எப்படி விலகும்? பிரமனே முதலில் இன்னதென்று முடிவு கட்டி மண்ணுலகத்திற்கு நம்மை அனுப்பி வைத்த பிறகு, வினை மாற வேண்டுமென்றால்?

அதற்கும் ஒரு வழி இருக்கிறது. ஒருவருடைய கழலடிகளைத் தொழுதால், பிரமன் தந்த வினையும், நம்மிடம் வந்த வினையும், போன பிறப்பிலிருந்து கொண்டு வந்த சொந்த வினையும் ஒழியும். மலர்க்கழல் என்கிறார் வள்ளுவர். யாருடைய கழல்களைச் சொல்கின்றார் அருணகிரி?

ஒரு அழகான சொல்லாடலைப் பார்ப்போம். மதிவாள் நுதல். நுதல் என்றால் நெற்றி. தமிழ்த்தாய் வாழ்த்தில் வரும் "தக்க சிறு பிறை நுதலும்" என்ற அடியை நினைவு கூர்க. மதி என்றால் நிலா. வாளின் பண்பு என்ன? பிறை போல லேசாக வளைந்திருக்கும். பளபளவென ஒளி வீசும். இப்பொழுது மதிவாள் என்றால் என்னவென்று விளங்கியிருக்கும். மதிவாளைப் போன்ற நெற்றி என்பதைத்தான் மதிவாள் நுதல் என்கிறார். பளபளத்து ஒளிவீசும் நிலாக் கீற்று போன்ற நெற்றி யாருக்கு இருக்கிறது. அதை வெளிப்படையாகவே சொல்லி விடுகிறார். மதிவாள் நுதல் வள்ளி.

மதிவாள் நுதல் வள்ளியை அன்றி வேறு யாரையும் துதியா சுரபூபதி முருகன். அந்த முருகப் பெருமானின் மலர்க்கழல்கள்தான் உடம்பை விடா வினைகளை நீக்கும். அதெல்லாம் சரி. அதென்ன வள்ளியை அன்றி யாரையும் துதிக்காத முருகன்? முருகன் வள்ளியைத் துதிக்கின்றாரா? ஆம் என்பதே விடை. அதில் ஒரு பெரிய உட்பொருள் அடங்கியிருக்கிறது. தேவயானையைத் துதிக்கும் முருகன் என்று சொல்லியிருக்கலாமே! ஏன் சொல்லவில்லை?

வள்ளி இச்சா சக்தி. தெய்வயானை கிரியா சக்தி. வேல் ஞான சக்தி. இச்சை உலகாயமானது. காயம் என்பது உடல். அந்த உடலோடு கூடிய வினை போக அருள வேண்டியது இச்சா சக்தி. இம்மைத் துயரத்தை முருகன் வள்ளி நாச்சியார் வழியாகத் தீர்க்கின்றார். அதற்காக நமக்காக எல்லாம் வல்ல முருகப் பெருமான் வள்ளியைத் துதிக்கின்றார். பாருங்கள் இதுதான் தெய்வப் பண்பு. முருகப் பெருமானின் அன்பு. உலகத்தாரின் பாவங்களை ஏசு கிருஸ்து சிலுவையாகச் சுமந்தார் என்றும் சொல்வார்களே!

இதில் மற்றொரு மறை பொருளும் இருக்கிறது. இல்லறத்தால் ஒழுக வேண்டிய முறையே அது. கணவன் மனைவி வழியாகக் நல்லவைகளைச் செய்வது. குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் பெரியவர் சிறியவர் பேதமில்லை என்பதை முருகப் பெருமான் வழியாக நமக்கு அருணகிரி காட்டுகிறார்.

அன்புடன்,
கோ.இராகவன்