ஏழு பிறப்பு என்று சொல்கின்றோமே! அதென்ன ஏழு பிறப்புகள்! வள்ளுவர் சொல்கிறார். மாணிக்கவாசகர் சொல்கிறார். அருணகிரி சொல்கிறார். எல்லோரும் சொல்கின்றார்கள். அதென்ன ஏழு பிறப்புகள்?
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவர்க்கு
எழுமைக்கும் ஏமாப்புடைத்து
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து - வள்ளுவர்
மா ஏழ் சனனம் கெட - கந்தரநுபூதியில் அருணகிரி
எல்லாப் பிறப்பும் பிறந்துளைத்தேன் - திருவாசகத்தில் மாணிக்கவாசகர்
தாவரங்கள், நீர்வாழ் உயிரிகள், விலங்குகள், பறவைகள், மனிதர்கள், மற்றும் தேவர்கள் என்பன அந்த ஏழு பிறப்புகள். ஏழு என்பது இங்கு எண்ணிக்கையைக் குறிப்பதல்ல. வகைகளைக் குறிப்பது. ஏழு வகையான பிறப்புகளில் நாம் உழல்கிறோம். உருவத்தில் மனிதராகவே பிறப்பெடுத்தாலும் உள்ளத்தால் இந்த ஏழில் ஒன்றாகவே இருப்பார்கள்.
இப்படி ஏழில் ஒன்றாகப் பிறந்து உலகமாயைகளில் வீழ்வதில் அருணகிரிக்கு விருப்பம் இல்லை. அப்படி மாயையில் மூழ்குவது மூடத்தனமாகப் படுகிறது. ஆகையால் "கோவே, கொடி போன்ற குறமகளின் தோளினைப் படரும் தெய்வமே, ஈசன் வணங்கிப் பணியும் குருவே!" என்றெல்லாம் வேண்டி ஏழுவிதமான பிறப்புகளிலுமிருந்து விடுதலை கேட்கிறார்.
மாவேழ் சனனம் கெட மாயைவிடா
மூவேடணை என்று முடிந்திடுமோ
கோவே குறமின் கொடிதோள் புணரும்
தேவே சிவசங்கர தேசிகனே
"சிவசங்கர தேசிகனே!" சிவசிங்கரப் பெருமானுக்கு முருகன் குருநாதனல்லவா! அது எப்படி? எல்லாரும் வேதங்களை ஓதுவார்கள். ஆனால் வேதங்களே ஓதுவது சிவனின் திருநாமத்தை. வேதமும் வேதத்தை ஓதுவாரும் என்றும் சென்று வணங்குவது கயிலையீசனை. கயிலையில் ஈசன் அமர்ந்திருக்கும் மேருமலைக்கு அருகில் இருப்பது கந்தமாதன பர்வதம். அங்கே முருகப் பெருமான் அமர்ந்திருப்பார். நான்முகன் அந்த பொழுது தேவனையும் தேவியையும் தரிசித்து வரப் புறப்பட்டார். வழியில் கந்தவேள் சக்திவேலோடு அமர்ந்திருக்கிறார். முருகனைப் பார்த்தார். ஆனால் பார்க்காமல் போனார். போனவர் ஈசுவரனையும் ஈசுவரியையும் வழிபட்டார். திரும்பி வருகையில் இருகையிருந்தும் முருகை வணங்கவில்லை. மீண்டும் பார்த்தும் பார்க்காமலும் போனார்.
இது பொய். பார்க்கமலே சென்றிருந்தால் தவறில்லை. பார்த்தும் பார்க்காமலும் போவது நடிப்பு. அப்படிச் சென்ற திசைமுகனை முருகப் பெருமான் அழைத்துக் கேட்டார். நான்முகனின் நான்கு தலைகளிலும் ஆணவம் ஏறிக்கிடந்தது.
"நான்முகனே! பார்த்தும் பார்க்காமல் போவது பெரியவர்க்கு அழகா?"
"முருகா! படைப்புக் கடவுள் நான். படைப்பில் அடைப்பு ஏற்படாமல் முனைப்பாக செயல்படும் வேளையில் பார்வை பிசகியிருக்கலாம்! அது குற்றமாகாது!" பிசகு பிரம்மன் நாக்கில் இருந்தது.
முருகன் பொறுத்தார். "சரி. உமது தொழிலுக்கு அடிப்படை?"
"முருகா! சிருட்டித் தொழிலை வேதங்களை எனது மனதில் உருட்டிப் படைக்கிறேன். நான்கு முகங்கள் வேதங்களாகிப் படைக்கின்றன!" நான்கு தலைகளிலும் கனம் அதிகரித்தது. முத்தொழிலுக்கும் மூல முதல்வன் ஈசன் என்பதைக்கூட மறந்தார். தானே அனைத்தும் என்ற கூடா கர்வம். அது பங்கப்பட வேண்டுமல்லவா! முருகன் வாய் திறந்தார்.
"சரி. வேதமே உமது நாதமென்றால். அதைச் செப்புக!"
வேதம் ஓங்காரமாகத் தொடங்கும். ஆகையால் ஓங்காரம் ஒலித்தார் பிரம்மன். அதை அப்படியே நிறுத்திய முருகன், அந்த ஓங்காரத்திற்குப் பொருள் கேட்டார். திகைத்துப் போனார் பிரம்மன். விக்கல் தொண்டையை அடைத்தது. விடை தெரியாமல் நாணம் வந்தது. "அவை நடுவே நீட்டோலை வாசியா நின்றான்" என்ற நிலை.
சினந்தார் முருகன். "பிரம்மனே! வேதங்களின் நாதன் என்று சொல்லும் உமக்கு அதன் தொடக்கத்திற்கே பொருள் தெரியவில்லை. இனி படைப்புத் தொழிலைச் செய்யும் தகுதியை இழந்தீர். உமது ஆணவம் இத்தோடு நீங்கட்டும்." கையை மடங்கி நான்கு தலைகளும் பொடிப்பொடியாக ஆகுமாறு குட்டினார். முருகப் பெருமான் தீண்டியதும் ஆணவம் போனது. ஆனாலும் பிரம்மனைச் சிறையிட்ட முருகன், படைப்புத் தொழிலைத் தாமே மேற்கொண்டார்.
பிரம்மன் படைத்ததைக் காக்கும் வல்லமை விஷ்ணுவிற்கும் அவைகளை அழிக்கும் திறமை ருத்திரனுக்கும் இருந்தது. ஆனால் முருகப் பெருமானின் படைப்புகள் சிறப்பாக இருந்ததால் அவற்றைக் காக்கவும் அழிக்கவும் விஷ்ணுவாலும் ருத்திரனாலும் முடியவில்லை. ஆகையால் காக்கும் தொழிலையும் அழிக்கும் தொழிலையும் கூட முருகப் பெருமானே மேற்கொண்டு முத்தொழிலுக்கும் தாமே அதிபதி என்பதை நிலைநாட்டினார். விஷ்ணுவும் ருத்திரனும் கயிலைக்கு ஓடி ஈசனை நாடி விழுந்து கதறினார்கள். வேலை போனால் கதறி அழத்தானே வேண்டும்.
அவர்களுக்கு வேலையை மீண்டும் வாங்கித்தருவதாக உத்தரவு கூறி ஈசன் முருகனிடத்தில் வந்தார். பிரம்மனை விடுவித்து படைப்புத் தொழிலையும் ஒப்படைக்கச் சொன்னார். தந்தை சொல்லைத் தனையன் மீறவில்லை. அப்படியே செய்தார். வேதத்திற்கு பொருள் தெரியுமா என்று ஈசன் முருகனைக் கேட்க, கந்தவேளோ சிவபெருமானையே மண்டியிடச் செய்து சீடனாக்கி உபதேசித்தார். ஆகையால் முருகனை எல்லாரும் தகப்பன்சாமியென்றும் சிவகுருநாதன் என்றும் பரமகுரு என்றும் இன்னும் பல பெயர்களிலும் புகழ்கின்றார்கள்.
அன்புடன்,
கோ.இராகவன்
Monday, October 30, 2006
Subscribe to:
Post Comments (Atom)
45 comments:
// விஷ்ணுவும் ருத்திரனும் கயிலைக்கு ஓடி ஈசனை நாடி விழுந்து கதறினார்கள். வேலை போனால் கதறி அழத்தானே வேண்டும்.
//
இது கொஞ்சம் அதிகமா இல்லை...
முருகனுடைய பெருமைய சொல்லனும்னு ஸ்ரீமன் நாராயணன் ருத்திரன் கால்ல விழுந்து அழுதார்னு சொல்றது ரொம்ப ஓவர்...
//தாவரங்கள், நீர்வாழ் உயிரிகள், விலங்குகள், பறவைகள், மனிதர்கள், மற்றும் தேவர்கள் என்பன அந்த ஏழு பிறப்புகள்.//
ஐயா, இதில் ஆறு வகைக்களைத்தானே சொல்லி இருக்கிறீர்கள். ஏழாவது வகை என்னவோ?
அருமையான கட்டுரை. முருகனின் லீலையை நேரில் பார்த்த உணர்வினைத் தந்ததிற்கு நன்றி.
//தாவரங்கள், நீர்வாழ் உயிரிகள், விலங்குகள், பறவைகள், மனிதர்கள், மற்றும் தேவர்கள் என்பன அந்த ஏழு பிறப்புகள்//
ஜிரா, ஆறு தானே வருகிறது? இன்னுமொன்று?
(செந்திலை வணங்கும் அடியார் நீவிர், செந்தில் போல, 'அதாம்பா இது', என்று சொல்லி விடாதீர்கள் :-))
//மாயைவிடா மூ வேடணை//
இதையும் தாங்கள் விளக்கினால், கேட்டு இன்புறுவோம்!
கவிதைக்குப் பின் கதை என்பது மிக அருமை; அங்கே SK புகழ் பதிவில், கந்த புராணத்தைச் சிறுகதையாகத் தருகிறார். இங்கு அநுபூதிப் பதிவில், நீங்கள் தகப்பன் சாமிக் கதையைத் தருகிறீர். அருமை; அருமை!
தேன்கூடு அக்டோபர் போட்டியில் வெற்றி பெற்றமைக்கும் வாழ்த்துக்கள் ஜிரா! தொடர் கதையாக தொடரட்டும் வெற்றிகள், இது போல்!
பாலாஜி. சைவ வைணவ வேற்றுமைகளில் ஒன்று தானே நாரணன் சிவனைப் பணிவதாகச் சொல்வதும் சிவன் நாராணனைப் பணிவதாகச் சொல்வதும். எந்த தெய்வத்தை ஏத்துகின்றோமோ அந்த தெய்வத்தை உயர்த்தி மற்றவரைத் தாழ்த்துவது ஒரு மரபாக இருந்திருக்கிறது பாரதத்தில். வடமொழியிலும் சரி தமிழிலும் சரி இரண்டிலும் இது உள்ளது. அதனால் சைவ சிந்தாந்த மரபின் படி இராகவன் எழுதியதைக் கண்டு திடுக்கிட வேண்டாம்.
பிரம்ம முராரி சுரார்சித லிங்கம் - லிங்காஷ்டகம்
நூறு கோடி பிரமர்கள் நுந்தினர்
ஆறு கோடி நாராயணர் அங்ஙனே
ஏறுகங்கை மணல் எண் இந்திரர்
ஆறிலாத ஈசன் ஒருவனே - திருஞானசம்பந்தர்
அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர்
சிறியார் சிவப்பட்டார் செப்பின் - வெறியான
மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார்
ஈனவரே யாதலாம் இன்று - திருமழிசையாழ்வார்
நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான்முகமாய் சங்கரனைப் படைத்தான் - திருமழிசையாழ்வார்
புற்றில் வாழ் அரவும் அஞ்சேன்! பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்!
கற்றைவார் சடை எம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றும் ஓர் தெய்வம் தன்னை உண்டென நினைந்து எம் பெம்மான்
கற்றிலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சும் ஆறே - திருவாதவூரார் மாணிக்கவாசகர்
இன்னும் நிறைய எடுத்துக் காட்டுகள் தரலாம். உடனே நினைவிற்கு வந்தவை இவை மட்டுமே. :-)
இராகவன். எல்லோருக்கும் தெரிந்த கதையை இன்னும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். மிக்க நன்றி. நானும் 'மாயைவிடா மூவேடணை' பற்றி கேட்கவேண்டும் என்றிருந்தேன். இரவிசங்கர் கேட்டிருக்கிறார். அதற்கும் விளக்கம் சொல்லுங்கள்.
அசுரரை எழு பிறப்பில் விட்டுவிட்டீர்கள் என்று எண்ணுகிறேன்.
பரிசு பெற்றதுக்கு பாராட்டு! சுதர்சனோடு சேர்ந்து ட்ரீட்டுக்கு திட்டமிடுங்க ராகவன் நாங்கள்ளாம் உங்க பேட்டைதானே?:)
shylaja
// வெட்டிப்பயல் said...
// விஷ்ணுவும் ருத்திரனும் கயிலைக்கு ஓடி ஈசனை நாடி விழுந்து கதறினார்கள். வேலை போனால் கதறி அழத்தானே வேண்டும்.
//
இது கொஞ்சம் அதிகமா இல்லை...
முருகனுடைய பெருமைய சொல்லனும்னு ஸ்ரீமன் நாராயணன் ருத்திரன் கால்ல விழுந்து அழுதார்னு சொல்றது ரொம்ப ஓவர்... //
வெட்டி, என்னை விடச் சிறந்த விளக்கத்தைக் குமரன் கீழே தந்திருக்கிறார். அவரது கருத்துதான் எனதும்.
இன்னொரு கேள்வி கேட்டிருந்தீர்கள். உருத்திரனும் சிவனும் ஒன்றா என்று. இல்லை என்கிறது சைவ சித்தாந்தம். மூவரில் ஒருவரை தேவதேவன் என்பதா என்கிறது சைவ சித்தாந்தம். உருத்திரன் வெறும் சங்காரக் கடவுள். ஆதிசிவனே முத்தொழிலுக்கும் முதல்வோன். இது சைவக் கருத்து.
வாரியார் சுவாமிகளும் உருத்திரனைச் சிவன் என்று சொல்வது சிவநிந்தை என்று தெளிவு படக்கூறியிருக்கிறார்கள்.
// இது கொஞ்சம் அதிகமா இல்லை...
முருகனுடைய பெருமைய சொல்லனும்னு ஸ்ரீமன் நாராயணன் ருத்திரன் கால்ல விழுந்து அழுதார்னு சொல்றது ரொம்ப ஓவர்... //
ஸ்ரீமன் நாராயண் ருத்ரன் காலில் விழுகவில்லை. இருவரும் சேர்ந்து ஈசனைச் சரண் புகுந்தார்கள்.
// இலவசக்கொத்தனார் said...
//தாவரங்கள், நீர்வாழ் உயிரிகள், விலங்குகள், பறவைகள், மனிதர்கள், மற்றும் தேவர்கள் என்பன அந்த ஏழு பிறப்புகள்.//
ஐயா, இதில் ஆறு வகைக்களைத்தானே சொல்லி இருக்கிறீர்கள். ஏழாவது வகை என்னவோ? //
ஏழாவது உருத்திரன் அல்லது ருத்திரன் எனப்படும் வகை. அது சிறப்பிலும் சிறப்பான வகை. பலர் ருத்திரனைச் சிவன் என்று தவறாக நினைப்பதும் உண்டு.
// அருமையான கட்டுரை. முருகனின் லீலையை நேரில் பார்த்த உணர்வினைத் தந்ததிற்கு நன்றி. //
நன்றி கொத்ஸ்.
// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//தாவரங்கள், நீர்வாழ் உயிரிகள், விலங்குகள், பறவைகள், மனிதர்கள், மற்றும் தேவர்கள் என்பன அந்த ஏழு பிறப்புகள்//
ஜிரா, ஆறு தானே வருகிறது? இன்னுமொன்று?
(செந்திலை வணங்கும் அடியார் நீவிர், செந்தில் போல, 'அதாம்பா இது', என்று சொல்லி விடாதீர்கள் :-)) //
கண்டுபிடிச்சிட்டீங்களா....ஒழுங்கா எல்லாரும் படிக்கிறாங்களான்னு சோதிச்சுப் பாத்தேன். :-)
ஏழாவது வகை ருத்திர வகை.
//மாயைவிடா மூ வேடணை//
இதையும் தாங்கள் விளக்கினால், கேட்டு இன்புறுவோம்! //
ம்ம்...விடுபட்டு விட்டது. சரி. இதற்குக் குமரனே விளக்கம் சொல்லட்டுமே. இல்லையென்றால் கொத்ஸ் ஏன் சொல்லக்கூடாது. வெண்பாவை வெளுத்து வாங்குகிறார் அல்லவா!
// கவிதைக்குப் பின் கதை என்பது மிக அருமை; அங்கே SK புகழ் பதிவில், கந்த புராணத்தைச் சிறுகதையாகத் தருகிறார். இங்கு அநுபூதிப் பதிவில், நீங்கள் தகப்பன் சாமிக் கதையைத் தருகிறீர். அருமை; அருமை! //
நன்றி ரவி. அனைத்தும் கந்தனருள்.
// குமரன் (Kumaran) said...
இராகவன். எல்லோருக்கும் தெரிந்த கதையை இன்னும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். மிக்க நன்றி. நானும் 'மாயைவிடா மூவேடணை' பற்றி கேட்கவேண்டும் என்றிருந்தேன். இரவிசங்கர் கேட்டிருக்கிறார். அதற்கும் விளக்கம் சொல்லுங்கள். //
அதைத்தான் நீங்கள் சொல்லப் போகிறீர்களே...பிறகு நான் வேறு எதற்கு :-)
// அசுரரை எழு பிறப்பில் விட்டுவிட்டீர்கள் என்று எண்ணுகிறேன். //
இல்லை குமரன். சுரரும் அசுரரும் ஒரு வகைதான். வெவ்வேறு அல்ல. ஏழாவது வகை உருத்திர வகை.
இராகவன். எனக்குத் தெரியாமல் தானே உங்களைக் கேட்கிறேன். சொல்லுங்கள்.
சுரரும் அசுரரும் ஒரு வகை தான். ஒத்துக் கொள்கிறேன். ஆனால் எப்படி என்று கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்.
//இன்னொரு கேள்வி கேட்டிருந்தீர்கள். உருத்திரனும் சிவனும் ஒன்றா என்று. இல்லை என்கிறது சைவ சித்தாந்தம். மூவரில் ஒருவரை தேவதேவன் என்பதா என்கிறது சைவ சித்தாந்தம். உருத்திரன் வெறும் சங்காரக் கடவுள். ஆதிசிவனே முத்தொழிலுக்கும் முதல்வோன். இது சைவக் கருத்து.
//
அப்படினா சிவன் வேறு ருத்திரன் வேறா? இது வறைக்கும் கேள்விப்படாததா இருக்கே :-/
சரி.. இந்த கதைப்படி நம்மைவிட வயதில் பெரியவர் தலைகனத்துடனிருந்தால் அவரிடமிருந்து அந்த பதவியை பறித்துவிட்டு அதை நாம் செய்யலாமா??? (அத்துடன் நம் வயதிற்கு மீறி அவருக்கு தண்டனையும் தரலாமா?)
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பிரம்மாவிற்கு பிரணவ மந்திரத்திற்கு யார் பொருள் சொல்லி தந்தனர். (இல்லை இன்று வரை அதை அவர் தெரிந்து கொள்ளவில்லையா?)
அதை கற்றதால் அவருடைய படைப்புகள் சிறந்ததா? அப்படி சிறந்தால் காத்தலையும், அழித்தலையும் நாராயணனாலும், ருத்திரனாலும் மேற்கொள்ள முடிந்ததா?
//பாலாஜி. சைவ வைணவ வேற்றுமைகளில் ஒன்று தானே நாரணன் சிவனைப் பணிவதாகச் சொல்வதும் சிவன் நாராணனைப் பணிவதாகச் சொல்வதும். எந்த தெய்வத்தை ஏத்துகின்றோமோ அந்த தெய்வத்தை உயர்த்தி மற்றவரைத் தாழ்த்துவது ஒரு மரபாக இருந்திருக்கிறது பாரதத்தில். வடமொழியிலும் சரி தமிழிலும் சரி இரண்டிலும் இது உள்ளது. அதனால் சைவ சிந்தாந்த மரபின் படி இராகவன் எழுதியதைக் கண்டு திடுக்கிட வேண்டாம்.//
குமரன்,
இதை நான் ஒத்துக்கொள்கிறேன்...
அன்றைய காலகட்டத்தில் அவர்களுக்குள் சைவம், வைணவம் என்ற கோஷ்டி சண்டை அதிகமாக இருந்தது. ஆனால் இன்றைய நிலையில் இவ்வாறு எழுத வேண்டுமா?
ஜிரா,
இன்னும் நீங்க சொன்னது எனக்கு புரியவில்லை.
மும்மூர்த்திகள் யார்?
முப்பெரும் தேவியர் யார்?
மும்மூர்த்திகளின் தொழில் என்ன?
விநாயகரும், முருகரும் யார் பிள்ளைகள்?
ருத்திரன் மும்மூர்த்திகளில் ஒருவனா இல்லை ஈசன் மும்மூர்த்திகளில் ஒருவனா?
உமையவளும் பார்வதியும் ஒன்றா இல்லை வெவ்வேறா?
மூவேடணை என்று முடிந்திடுமோ
ஏழு பிறப்புக்குகளில் ஊர்வனவை விட்டு விட்டீர்களே.
மூவாசை மனைவி,மக்கள்,சுற்றம் அல்லது மண்ணாசை பொண்ணாசை பொன்னாசை இவைகள் என்று முடிந்து ஏழ்பிறப்பிலிருந்து விடுபடுவேனோ
//அவை நடுவே நீட்டோலை வாசியா நின்றான//
தமிழ்ல சொல்லுங்க :-)
சைவ சிந்தாந்தப் படி பிரமன், விட்டுணு, உருத்திரம் மூவரும் முத்தொழில் செய்யும் தேவர்கள். சதாசிவன் எனும் ஆதிசிவனே ஐந்தொழில்களும் செய்யும் பரம்பொருள். இதனைப் படித்திருக்கிறேன் இராகவன். அதனால் நீங்கள் உருத்திரன் என்று சொன்னதைப் புரிந்து கொண்டேன். ஆனால் உருத்திரனைச் சிவன் என்று நினைப்பதில் முழுதுமாகத் தவறு இல்லை. பதினென் ருத்திரர்களில் ஈசானனாகிய ஆதிசிவனும் ஒருவனாகக் குறிக்கப்படுகிறான். வடமொழி வேதத்தின் பாகமான ருத்ரம் உருத்திரனைப் பாடினாலும் சிவபெருமானைப் பாடுவதாகக் கூறுவதே மரபாக அமைந்துவிட்டது. அதனால் தான் சிவனையும் உருத்திரனையும் ஒருவராகப் பார்க்கத் தொடங்கினார்கள்.
வைணவ சிந்தாந்தத்திலும் இதே போல் உண்டு. பரம்பொருள் பரவாஸுதேவன். முத்தொழில் புரிவதற்காக ப்ரத்யும்னன், அநிருத்தன், சங்கர்ஷனன் என்று மூன்று தெய்வங்களாக பரவாஸுதேவன் அவதரிக்கிறான். அந்த முத்தேவர்களில் ப்ரத்யும்னன் பிரம்மனின் அந்தர்யாமி; அநிருத்தன் விஷ்ணுவின் அந்தர்யாமி; சங்கர்ஷனன் உருத்திரனின் அந்தர்யாமி. இப்படி உள்நின்று இயக்குபவனாக முத்தொழிலையும் செய்பவன் பரவாஸுதேவன். பதினென் உருத்திரர்களில் ஒருவனாக ஈசானன் இருப்பதைப் போல் பன்னிரு ஆதித்யர்களில் ஒருவனாக விஷ்ணுவும் இருக்கிறான்.
தேன்கூடு போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள் இராகவன். நான் வாக்களிக்க மறந்துவிட்டேன். மன்னிக்கவும். நான் வாக்களித்திருந்தால் ஒரு வேளை முதல் இடம் கிடைத்திருக்குமோ என்னவோ? பாருங்கள். நான் சொன்னபடி நடந்துவிட்டது. மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்கத் தானே நீங்கள் இதுவரை போட்டியில் கலந்து கொள்ளவில்லை? கலந்து கொண்டவுடன் இரண்டாம் இடம் கிடைத்துவிட்டது பாருங்கள். ;-)
//வேதத்திற்கு பொருள் தெரியுமா என்று ஈசன் முருகனைக் கேட்க, கந்தவேளோ சிவபெருமானையே மண்டியிடச் செய்து சீடனாக்கி உபதேசித்தார். ஆகையால் முருகனை எல்லாரும் தகப்பன்சாமியென்றும் சிவகுருநாதன் என்றும் பரமகுரு என்றும் இன்னும் பல பெயர்களிலும் புகழ்கின்றார்கள்.//
இப்படி ரவுஸ் பண்ணதாலதான் அவருக்கு சிவன் மாம்பழம் தரலை ;)
//இப்படி ரவுஸ் பண்ணதாலதான் அவருக்கு சிவன் மாம்பழம் தரலை ;)
//
ஞானபண்டிதனான அவனே ஞானப்பழம். அவனுக்கு இன்னொரு ஞானப்பழமா என்று ஐயன் தரவில்லையோ? :-) உடனே பிள்ளையார் ஞானப்பழம் இல்லையா என்று கேட்கக்கூடாது. :-) அவரும் தனக்கும் ஞானப்பழம் தேவையில்லைன்னு கையிலேயே வச்சுக்கிட்டிருக்கார் போல. :-)
ஜிரா,
அருமை என்று ஒரு வார்த்தையில் சொல்லி விடவும் முடியவில்லை. அதிகமும் சொல்லத் தெரியவில்லை.
குமரன் சொன்ன பன்னிரு நாராயணர்கள் நான் இதுவரை அறிந்திராது. பதிவோடு பின்னூட்டங்களும் போட்டி போடுவது பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
---------------
ருத்ரன் சிவனின் அம்சமென்றல்லவா நினைத்திருந்தேன்?
"....த்ரியம்பகாய த்ரிபுராந்தகாய த்ரிகாக்னி காலாய காலாக்னி ருத்ராய நீலகண்டாய ம்ருத்யுஞ்சயாய..."
இங்கே பின்னூட்டங்களைப் படித்தால் வேறு மாதிரி தோன்றுகிறதே.
-----------
//இந்த கதைப்படி நம்மைவிட வயதில் பெரியவர் தலைகனத்துடனிருந்தால் அவரிடமிருந்து அந்த பதவியை பறித்துவிட்டு அதை நாம் செய்யலாமா??? //
வெட்டிப்பயல் ரொம்ப விருப்பப்பட்டால் முருகா முருகா என்றபடியே அவர் வசிக்கின்ற புதரகத்தின் பெரியவர் செனியின் சொட்டை மண்டையில் சொடாய்ங் என்று ஒன்று வைத்து பரிசோதனை செய்து பார்க்கலாம்.
ஆனால் ஒன்று அய்யா... நேரடியாக(literal) முருகனை பாலோ செய்வதாக சொல்வோர்களெல்லாம் கடைசியில் விடாமல் பாலோ செய்யும் ஒரே விஷயம் தெய்வானை-வள்ளி என்று விளையாடுதல் மட்டுமே. :))
எல்லாரும் வந்து சொல்லிட்டாங்க!
இனியும் சொல்லலைன்னா அவமானம்!!
:))
இந்த ஏழுங்கற விஷயம் ரொம்பவே பேசப்படுதுங்க நம்ம ரிக்வேதத்துல!
பூமில ஏழு [1:22:16], ஏழு நாக்கு தீக்கு [1:58:7], ஏழு நதிகள் [1:32:12], ஏழு ஸ்வரங்கள், பாடகர்கள் [1:62: 4], ஏழு கோட்டைங்க [1:63: 7], ஏழு விதமான வெள்ளம் [1:72:8], ஏழு கதிர்கள் [1:105:9], ஏழு சகோதரிகள் [ 1:164:3],
இப்படி எத்தனையோ ஏழு இருக்குங்க!
அது போல பிறவிகள் ஏழுன்னு ஒரு கருத்து!
இங்க தாங்க கொஞ்சம் குழப்பம்!
சில பேரு ஏழுங்கறாங்க!
இன்னும் சில பேரு ஏழேழ் பிறவிங்கறாங்க!
ஏழேழ்னா பதினாலுன்னு சிலர் சொல்றாங்க!
இன்னும் சில பேரு நாப்பதொன்பது, ஏன் அதுக்கும் மேலெயேன்னு சொல்றாங்க.
அடுத்த ஏழு பிறவிக்கும்னு வள்ளுவர் சொல்லும் போது, நமக்கு ஒரு சந்தேகம் வருது.
இப்ப இருக்கறது மனிதப் பிறவி.
இதுக்கப்புறம் ஏழு பிறவி இருக்குன்னா, இங்க வர்றதுக்கு எத்தனை பிறவி ஆச்சுன்னு?
அப்போ.... இந்த ஏழு பிறவி அடி பட்டுப் போவுது இல்லீங்களா?
அப்படீன்னா, ஏழா, பதினாலா, நாப்பத்தொம்பதா இல்லை எத்தனை??
கொஞ்சம் தேடினேன்!
மாணிக்கவாசகர் கை கொடுத்தாரு!
"புல்லாகி,
பூடாய்,
புழுவாய்,
மரமாகி,
பல் விருகமாகி,
பறவையாய்,
பாம்பாகி,
கல்லாய்,
மனிதராய்,
பேயாய்,
கணங்களாய்,
வல்லசுராகி,
முனிவராய்,
தேவராய்,
செல்லா நின்ற இப்பிறப்பில்
எல்லாப் பிறப்பும் பிறந்து
இளைத்தேன் எம்பெருமான்!"
எத்தனையோ முறை படித்திருக்கிறேன் இதை!
எண்ணிப் பாருங்கள்!
பதினாலு வரும்!
ஈரேழு!
இந்த ஈரேழைத்தாங்க மாறி மாறிப் பிறந்து இளைச்சுப் போறோம்!
அந்தந்தப் பிறவில பண்றதை வைச்சு, எதுவா வேணும்னாலும் பிறந்து,
எப்பவோ முக்தி அடையறோம்.
எத்தனையோ கோடிப் பிறவிக்கு அப்புறம்!
62, 107, 398, 835 இது எல்லாத்திலியும் ஐயனும் இதைத்தான் சொல்லி இருக்காரு!
தனிப் பதிவு மாதிரி போயிடுச்சு!
மன்னார் திட்டறான்!!
வர்றேங்க!
:)
// குமரன் (Kumaran) said...
சுரரும் அசுரரும் ஒரு வகை தான். ஒத்துக் கொள்கிறேன். ஆனால் எப்படி என்று கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள். //
குமரன் கேட்க வேண்டிய கேள்வியா இது? சுரரசுரச் சண்டை என்பதே பங்காளிச் சண்டைதானே குமரன்.
// வெட்டிப்பயல் said...
//இன்னொரு கேள்வி கேட்டிருந்தீர்கள். உருத்திரனும் சிவனும் ஒன்றா என்று. இல்லை என்கிறது சைவ சித்தாந்தம். மூவரில் ஒருவரை தேவதேவன் என்பதா என்கிறது சைவ சித்தாந்தம். உருத்திரன் வெறும் சங்காரக் கடவுள். ஆதிசிவனே முத்தொழிலுக்கும் முதல்வோன். இது சைவக் கருத்து.
//
அப்படினா சிவன் வேறு ருத்திரன் வேறா? இது வறைக்கும் கேள்விப்படாததா இருக்கே :-/ //
அப்படித்தான் சொல்கிறது சைவம். ஆதியன் சிவம். ஓங்காரம் அவனது இருக்கை. முதலும் முடிவும் அற்ற பெருமான் அவர். அவரை மூம்மூர்த்தி என்று சொல்வது தவறு. பிற்காலத்தில் எல்லாம் கலந்த பொழுது எழுந்த வழக்குதான் சிவனையும் மூன்றில் ஒன்றாக்கும் நிகழ்வு என்று நான் நினைக்கிறேன். குமரன் ஏதேனும் வடமொழிப் பாடல் சொல்லி...இல்லை என்று சொல்லவும் முனையலாம். அப்படி எதுவும் இருக்கிறதா குமரன்?
// சரி.. இந்த கதைப்படி நம்மைவிட வயதில் பெரியவர் தலைகனத்துடனிருந்தால் அவரிடமிருந்து அந்த பதவியை பறித்துவிட்டு அதை நாம் செய்யலாமா??? (அத்துடன் நம் வயதிற்கு மீறி அவருக்கு தண்டனையும் தரலாமா?) //
எழுவது வயதுக் கிழவர் தவறிழைத்தால் ஐம்பது வயது நீதிபதி தண்டனை தரலாமா கூடாதா? கரிகால் பெருவளத்தான் வரலாறு தெரியுந்தானே. சிறுவன்றோ கொலுவீற்றிருப்பதென்றெண்ணி வழக்குரைக்க வந்த இரு பெரியோர் திகைத்தனர். சரியென்று பெரியவர் ஒருவரையே வழக்கு தீர்க்க அனுப்பி வைத்தான் கரிகாலன். வழக்கு நல்விதமாய்த் தீர்ந்த பின்னரே அந்தப் பெரியவர் கரிகாலந்தான் என்று தெரிந்தது. அக்கினிக் குஞ்சொன்று கண்டேன். அதைக் காட்டிடைப் பொந்திடை வைத்தேன். வெந்து தணிந்தது காடு. தழல் வீரத்தில் மூப்பென்றும் இளையதென்றும் உண்டோ (வரிகளைச் சொதப்பியிருக்கிறேன்). சைவக் கருத்துப்படி பார்த்தால் முருகனும் சிவனும் ஒன்றுதான். சிவம் என்பது பரம். சக்தி என்பது இகம். முருகன் என்பது இகபரம். ஆகையால் மும்மூர்த்திகளில் ஒருவரான நான்முகனைத் தண்டித்துச் சிறையிட்டது சரியே.
// இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பிரம்மாவிற்கு பிரணவ மந்திரத்திற்கு யார் பொருள் சொல்லி தந்தனர். (இல்லை இன்று வரை அதை அவர் தெரிந்து கொள்ளவில்லையா?) //
நல்ல கேள்வி. முருகன் திருக்கரம் பட்டுக் குட்டியதுமே பிரமன் ஆணவம் அகன்றது. ஆனால் ஓங்காரப் பொருளை அவர் முழுதுணர்ந்தார் இல்லை என்றே நான் அறிகிறேன். முக்கண்ணனுக்கும் கண்ணிக்கும் அவர்தம் மகனுக்குமே ஓங்காரம் தெளியும் என்பது சைவோர் நம்பிக்கை.
// அதை கற்றதால் அவருடைய படைப்புகள் சிறந்ததா? அப்படி சிறந்தால் காத்தலையும், அழித்தலையும் நாராயணனாலும், ருத்திரனாலும் மேற்கொள்ள முடிந்ததா? //
பிரமன் முன்போலவே படைப்புகளை குண்டக்க மண்டக்க செய்து வருகிறார் என்றே நம்புகிறேன். :-) ஏனென்றால் முருகன் பிரம்மனின் அறியாமையைக் கோவிக்கவில்லை. ஆணவத்தைதான் கோவித்தார். ஆணவம் போக வேண்டும் என்பதே இறைவன் திருவுளம். ஆகையால் பிரம்மன் மறுபடி அப்பாயிண்மெண்ட் ஆர்டரை வாங்கிக் கொண்டதால். அவர் எழுதிக் கொண்டிருக்கும் குண்டக்க மண்டக்க புரோகிராம்களை விஷ்ணு மெயிண்டெயின் செய்து கொண்டும் ருத்ரன் பெர்ஃபார்மன்ஸ் டெஸ்டிங் செய்து கிராஷ் செய்வதாகவும் நாரதா டுடே மூலம் அறிகிறோம். :-)
// அன்றைய காலகட்டத்தில் அவர்களுக்குள் சைவம், வைணவம் என்ற கோஷ்டி சண்டை அதிகமாக இருந்தது. ஆனால் இன்றைய நிலையில் இவ்வாறு எழுத வேண்டுமா? //
அது சரியா தவறா என்று எனக்குத் தெரியவில்லை. சமயங்களில் அது சிலரின் மனதையும் புண்படுத்தலாம். ஆனால் எல்லாரும் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன்.
// ஜிரா,
இன்னும் நீங்க சொன்னது எனக்கு புரியவில்லை.
மும்மூர்த்திகள் யார்?
முப்பெரும் தேவியர் யார்?
மும்மூர்த்திகளின் தொழில் என்ன?
விநாயகரும், முருகரும் யார் பிள்ளைகள்?
ருத்திரன் மும்மூர்த்திகளில் ஒருவனா இல்லை ஈசன் மும்மூர்த்திகளில் ஒருவனா?
உமையவளும் பார்வதியும் ஒன்றா இல்லை வெவ்வேறா? //
அடுக்கிவிட்டீர்கள் வெட்டி. முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது...இன்றைக்குள்ள கதைகளும் நம்பிக்கைகளும் அன்றைக்கே இருந்தவை அல்ல என்பதே. திருமுருகாற்றுப்படையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கந்தபுராணம் எழுதினால் அதில் இன்றைய கந்தபுராணத்தில் இருக்கும் சிலபல செய்திகள் இல்லாமலிருக்கும். சைவ வைணவ ஒற்றுமைக்காகவே திருமால் மருகா என்று பலமுறை பாடியிருக்கிறார் அருணகிரி. ஆனால் மாலுக்கும் முருகனுக்கும் ஒரு தொடர்பும் சொன்னதில்லை திருமுருகாற்றுப்படை. அவையெல்லாம் வெவ்வேறு மதநம்பிக்கைகள். பிறகு ஒன்றாகி..ஒன்றுக்குள் ஒன்றாகிய பிறகுதான் பலபுதுக்கதைகள் வந்தன. அப்படித்தான் முருகனும் சுப்ரமண்யனும் இணைந்ததாகச் சொல்வார்கள். சிவனும் ருத்ரனும் இணைந்ததும் அப்படியே. மாயனும் மாலும் இணைந்ததும் என்று சொல்வார்கள். இந்த இணைப்புகளுக்குப் பிறகே இப்பொழுது இருக்கும் நம்பிக்கைகள் உருக்கொண்டன என்று நினைக்கிறேன். ஆகையால்...இன்னமும் உங்கள் கேள்விக்கு நான் விடை சொல்ல வேண்டுமா!
இது தொடர்பாகக் குமரன் கருத்தை நான் ஆவலோடு எதிர்ப்பார்க்கிறேன்.
// வெட்டிப்பயல் said...
//அவை நடுவே நீட்டோலை வாசியா நின்றான//
தமிழ்ல சொல்லுங்க :-) //
நான் சொன்னது ஔவையின் தமிழ்ப்பாடல்.
கவையாகிக் கொம்பாகிக் காட்டதகத்தே நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள்! அவை நடுவே நீட்டோலை வாசியா நின்றான் அவனே நல்ல மரம்!
கிளைத்து இலைத்துப் பெருகி உயர்ந்து காட்டின் நடுவில் இருக்கும் மரங்களா நல்ல மரங்கள்? இல்லையில்லை. பலர் கூடிய அவையிலே நீட்டிய ஓலையொன்றைப் படிக்க முடியாமல் திக்கித் திணறி விழித்துப் புழுங்குகிறானே அவனே நல்ல மரம்! இதற்கு மேலும் விளக்கம் வேண்டுமா?
// இராமநாதன் said...
ஜிரா,
அருமை என்று ஒரு வார்த்தையில் சொல்லி விடவும் முடியவில்லை. அதிகமும் சொல்லத் தெரியவில்லை. //
பொதுப்பாட்டு பாடும் நீரா இப்படிச் சொல்வது! வியக்கிறேன் இராமநாதன்.
// குமரன் சொன்ன பன்னிரு நாராயணர்கள் நான் இதுவரை அறிந்திராது. பதிவோடு பின்னூட்டங்களும் போட்டி போடுவது பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. //
உண்மைதான். எனக்கும் மகிழ்ச்சிதான்.
---------------
// ருத்ரன் சிவனின் அம்சமென்றல்லவா நினைத்திருந்தேன்?
"....த்ரியம்பகாய த்ரிபுராந்தகாய த்ரிகாக்னி காலாய காலாக்னி ருத்ராய நீலகண்டாய ம்ருத்யுஞ்சயாய..."
இங்கே பின்னூட்டங்களைப் படித்தால் வேறு மாதிரி தோன்றுகிறதே. //
என்ன செய்வது இராமநாதன். சைவ சித்தாந்தம் சொல்வது அதைத்தான். சிவன் வேறு. ருத்ரன் வேறு. வாரியாரும் கிவாஜவும் கீரணும் இதுபற்றித் தெளிவாகவே சொல்லியிருக்கிறார்கள்.
-----------
// //இந்த கதைப்படி நம்மைவிட வயதில் பெரியவர் தலைகனத்துடனிருந்தால் அவரிடமிருந்து அந்த பதவியை பறித்துவிட்டு அதை நாம் செய்யலாமா??? //
வெட்டிப்பயல் ரொம்ப விருப்பப்பட்டால் முருகா முருகா என்றபடியே அவர் வசிக்கின்ற புதரகத்தின் பெரியவர் செனியின் சொட்டை மண்டையில் சொடாய்ங் என்று ஒன்று வைத்து பரிசோதனை செய்து பார்க்கலாம்.
ஆனால் ஒன்று அய்யா... நேரடியாக(literal) முருகனை பாலோ செய்வதாக சொல்வோர்களெல்லாம் கடைசியில் விடாமல் பாலோ செய்யும் ஒரே விஷயம் தெய்வானை-வள்ளி என்று விளையாடுதல் மட்டுமே. :)) //
:-)))))))))))))))))))))))
//இது தொடர்பாகக் குமரன் கருத்தை நான் ஆவலோடு எதிர்ப்பார்க்கிறேன்.
//
நான் வம்புக்கிழுத்தா நீங்க வரமாட்டீங்க. பல்லுடையும்; சொல்லுடையும்ன்னு போயிடுவீங்க. நீங்க இழுத்தா மட்டும் நான் சொல்லும் பல்லுமா வரணுமா? :-)
அவரவர் தமதமதறிவகைவகை
அவரவர் இறையவர் என அடியடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே.
என்னுடைய பின்னூட்ட விதியின் படி இந்தப் பாடலுக்கு விளக்கம் சொல்ல வேண்டும். அதனை என் ஜுனியர் இரவிசங்கர் வந்து செய்வார். :-)
//இன்னும் நீங்க சொன்னது எனக்கு புரியவில்லை.
மும்மூர்த்திகள் யார்?
முப்பெரும் தேவியர் யார்?
மும்மூர்த்திகளின் தொழில் என்ன?
விநாயகரும், முருகரும் யார் பிள்ளைகள்?
ருத்திரன் மும்மூர்த்திகளில் ஒருவனா இல்லை ஈசன் மும்மூர்த்திகளில் ஒருவனா?
உமையவளும் பார்வதியும் ஒன்றா இல்லை வெவ்வேறா?
//
பாலாஜி. இன்றைய நிலையில் நாம் என்ன நினைக்கிறோமோ நம் பெரியவர்கள் என்ன ஒற்றுமைகளை இந்த தெய்வங்களுக்கிடையில் சொல்கிறார்களோ என்ன உறவு முறைகளைச் சொல்கிறார்களோ அதனை எடுத்துக் கொள்வோம். ஆதியில் அப்படியிருந்ததில்லை. பின்னர் சேர்ந்தது; பின்னர் பிரிந்தது என்று பல ஆராய்ச்சிகள் இருக்கிறது. பலவற்றை நம்பமுடியும்; பலவற்றை நம்பமுடியாது. சொல்லாமல் விட்டதால் இல்லை என்று சொல்லிவிட முடியாது; சில இடங்களில் இல்லாததால் அது அந்தக் காலத்தில் இல்லை என்பதோ இதைச் சொன்னவர்கள் அதனைச் சொல்லவில்லை என்பதால் சொல்லாமல் விட்டது பின்னர் வந்தது என்றோ சொல்ல முடியாது. பல நூறு இலக்கியங்களில் சிலவே நமக்குக் கிடைத்திருக்கின்றன. அவையும் சொல்ல வந்தப் பொருளையே சொல்லிச் சென்றிருக்கலாம். நாம் இப்போது இருக்கும் காலத்திலேயே நடப்பது என்ன என்று தெளிவாகச் சொல்லமுடியாமல் இருக்க பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இது தான் இருந்தது இது இல்லை என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது. அவரவர் நம்பிக்கையின் அடிப்படையில் என்ன தோன்றுகிறதோ அதனை மட்டும் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டியது தான்.
இராகவன் சொன்னது போல் நம் நம்பிக்கையின் அடிப்படையில் ஏதேனும் சொல்லும் போது சில நேரம் மற்றவர் மனம் கொஞ்சம் திடுக்கிடத் தான் செய்கிறது. ஆனால் நம் நம்பிக்கை அறிவார்ந்த நம்பிக்கையாய் இருக்கும் போது அது தவறாகத் தோன்றுவதில்லை.
G Raghavan,
I will come back tomorrow after reading in detail !
ராகவன்,
முருகன் பிரம்மனுக்கு தலையில் கொட்டியவுடன் அவர் தலைகணம் குறைந்தது. அப்படியென்றால் சிறையில் அடைக்க வேண்டிய அவசியமென்ன?
படைத்தல் தொழிலை செய்யும் பிரம்மனுக்கு வேதத்தின் பொருள் தெரிய வேண்டிய அவசியமிருக்கிறதா இல்லையா?
அவசியமில்லையென்றால் அதை கேட்டு முருகன் அவரை தண்டிக்கத்தேவையில்லை.
அவசியமென்றால் பிறகு அவருக்கு சிறையிலிருந்து விடுப்பட்டவுடன் சொல்லி தந்திருக்க வேண்டும்.
நீங்க சொல்வதை பார்க்கும் போது என்னை நீ மதித்தால் போதும் நீ தவறு செய்வதை பற்றி நான் எனக்கு கவலையில்லை என்று சொல்வதை போலிருக்கிறது.
//முக்கண்ணனுக்கும் கண்ணிக்கும் அவர்தம் மகனுக்குமே ஓங்காரம் தெளியும் என்பது சைவோர் நம்பிக்கை.
//
பிரம்மனுக்கு முதலிலிருந்தே வேதத்திற்கு பொருள் தெரியாதா? இல்லை அதை அவர் தலைகணத்தால் மறந்தாரா?
முதலிலிருந்தே தெரியாதென்றால் அவரிடம் படைத்தல் தொழிலை கொடுத்தது ஆதிசிவனின் தவறு
ஜிரா,
பதிவு குறித்து சிலபல கேள்விகள் எழுந்தன. இங்கு இடப்பட்டுள்ள சிறப்பான பின்னூட்டங்களிலிருந்து எனக்குத் தேவையான பதில்கள் கிடைத்து விட்டன :) அருமையான நடை, உங்களுடையது.
இது போன்ற பதிவுகள் நல்ல விவாதத்தின் வாயிலாக, வாசிப்பவர்க்கு சுவையான தகவல்களை வழங்குகின்றன என்பது என் கருத்து. பாராட்டுக்கள்.
என்னளவில், இனிய தமிழில், பக்தியில் திளைத்து, (திருமாலோ, சிவனோ, முருகனோ) யார் மீது பாடல்கள் இயற்றப்பட்டிருந்தாலும், அவற்றை வாசிப்பதில் ஈடுபாடு உடையவன் !!!
எ.அ.பாலா
//அவரும் தனக்கும் ஞானப்பழம் தேவையில்லைன்னு கையிலேயே வச்சுக்கிட்டிருக்கார் போல. :-) //
குமரன்,
நம்ம வெட்டிக்குத்தான் ஞானமில்லை அவருக்கு கொடுங்கனு உங்க அண்ணன்கிட்ட சிபாரிசு செய்யலாமில்லை...
அப்பறம் இந்த மாதிரி வீணா கேள்வி எல்லாம் கேக்க மாட்டேன் ;)
ராகவா!
படித்த கதை, உங்கள் பாணியில் விளக்கியுள்ளீர்கள் நன்று!
மேலும் மாணிக்கவாசகர் மீனை விட்டுவிட்டாரே!! கரணம் ஏதாவது உண்டா????; அடுத்து ஈழத்தில் முத்தியடைந்த ஞானசம்பந்தராதீன மடாதிபதி (மணி ஐயர் என்பது செல்லப் பெயர்,பிரசங்கத்தால் புகழ் பெற்றவர்) ஓரு தடவை "எழுபிறப்பும் தீயவை தீண்டா! பழிபிறக்காப் பண்புடை மக்கட்பெறின்"....எனும் குறளுக்கு ,எழு பிறப்பென்பது......தொடர்ந்து வரும் பிறப்பு....முடிவற்ற பிறப்பு என விளக்கக் கேட்டேன். இது பற்றி உங்களின் கருத்தென்ன?????
யோகன் பாரிஸ்
யோகன் ஐயா. நீங்கள் சொன்னது போல் எழு பிறப்பு என்பதை வினைத்தொகையாகக் கொண்டு எழுந்த, எழுந்துகொண்டிருக்கும், எழும் பிறப்புகள் என்றும் விளக்கம் சொல்வதுண்டு. ஏழேழ் என்னும் போதோ எழ் என்னும் போது அது ஏழு என்ற பொருளிலேயே சொல்லப்பட்டிருக்கிறது.
//வெட்டிப்பயல் said...//
பாலாஜி
எங்கள் அத்தனை பேருக்கும் ஞானம் புகட்ட நீங்கள் எடுக்கும் முயற்சிகளைப் பார்க்கும் போது, கேள்வி ஞான குருவாக உங்களைக் கொள்ளலாம் போல் தோன்றுகிறது! :-))))ச்ச்சும்மா சொன்னேங்க!
"கேள்வியே வேள்வி!" :-))
//முருகன் பிரம்மனுக்கு தலையில் கொட்டியவுடன் அவர் தலைகணம் குறைந்தது. அப்படியென்றால் சிறையில் அடைக்க வேண்டிய அவசியமென்ன?//
சிறை என்பது இங்குத் தனிமைச் சிறை, கம்பிகள் போட்டு அடைக்கும் சிறை இல்லை! ஞானச் சிறை!
குட்டியதும், டீச்சர் குட்டு இல்லை; ஓட்டை எங்கு எழுந்ததோ, அங்கே அடைப்பது போல!
காலம் செல்லச் செல்லக் கதையில் நம் சொந்தச் சுவைகள் கூடி விடுகிறதே தவிர, மறைந்துள்ள பொருள் இது தான்.
ஆணவம் என்பது வெட்ட வெட்ட வளரும் களை போன்ற ஒன்று! அதை முற்றிலும் களைய வேண்டுமானால், வேரினைக் களைய வேண்டும்! ஒட்டையை மட்டும் பூசி மெழுகினால் மறுபடியும் இது விளையத் தான் செய்யும்!
அகங்காரம், மமகாரம் போனால் தான் ஓங்காரம் புலப்படும்!
குட்டியது என்பது corrective action.
ஞானச் சிறை preventive action.
அதற்காகவே இந்தச் சிறிய திருவிளையாடல்! இதில் அனைத்து பாத்திரங்களும் ஒருவரை ஒருவர் அறிந்தவரே! நம் பொருட்டுத் தான் நாடகமே அன்றி உயர்வு தாழ்வு இதில் இல்லை!
முருகன் போட்டியில் தோற்றது, சிவனார் வரம் கொடுத்து ஏமாந்தது, பெருமாள் அடிமுடி காணாமல் அலைந்தது என்று அனைவரும் தாழ்வது போல் உயர்ந்தும், உயர்வது போல் தாழ்ந்தும், விளையாடல்கள் எல்லாம் நீங்கள் கேள்வியும் கேட்டு, குறிப்பும் உணர்த்தத் தான்! :-)
//
படைத்தல் தொழிலை செய்யும் பிரம்மனுக்கு வேதத்தின் பொருள் தெரிய வேண்டிய அவசியமிருக்கிறதா இல்லையா?
//
பொருள் அறியாமலேயே பல பணிகள் செய்ய பலராலும் முடியும்; தானியங்கிகள்! ஆனால் பொருள் உணரும் விழைவினை வளர்த்துக் கொள்ள வேண்டும்; நாட்பட நாட்பட! அப்படி வளர்த்துக் கொள்ளாத போதும், பொருளே தானே தேடி வரும் உலக நன்மைக்காக!
அப்படி வரும் போது வேடிக்கையாக வந்து வேதாந்தத்தைச் சொல்லி விடும்! நம் வாழ்க்கையில் கூட இதைப் பொருத்திப் பார்க்கலாம்! :-))
//அவசியமில்லையென்றால் அதை கேட்டு முருகன் அவரை தண்டிக்கத்தேவையில்லை//
மேலேயே சொல்லி விட்டேன் என்று நினைக்கிறேன்! தண்டனை இல்லை அது! வாய்ப்பு, நமக்குப் பாடம்!!
//அவசியமென்றால் பிறகு அவருக்கு சிறையிலிருந்து விடுப்பட்டவுடன் சொல்லி தந்திருக்க வேண்டும்//
ஞானச் சிறையில் பிரம்மா அவர் விழைவுக்கு ஏற்ப அறிந்து கொண்டார். ஆணவம் விலகியதால், விழைவு வந்தது! அது சேர வேண்டிய இடம் கொண்டு சேர்த்து விடும்!
//நீங்க சொல்வதை பார்க்கும் போது என்னை நீ மதித்தால் போதும் நீ தவறு செய்வதை பற்றி நான் எனக்கு கவலையில்லை என்று சொல்வதை போலிருக்கிறது//
தவறும் செய்து விட்டு, ஆணவமும் தூக்கக் கூடாது! அப்படித் தூக்கினால், எதிர்பாராதவிதமாக, யாரிடம் இருந்து வேண்டுமானாலும், ஞான வேட்கை தொடங்கி விடும் என்பதே உட்பொருள்!
ஓங்காரம் அறிந்தவனுக்குப் பழப் போட்டியில் வெல்லத் தெரியாதா இல்லை, ஞானந்த மயம் தேவம் ஆகிய நாராயணனுக்கு சிவன் அடி விளங்காதா? சூட்சுமம் அங்கே தான்!
காலப் போக்கில் பல சித்தாந்தங்கள் அல்லது உரை ஆசிரியர்கள் தத்தம் அபிமானத்தால், அழுத்தம் கொடுத்து பதித்தனரே அன்றி அப்போதும் இழுக்கு செய்யும் எண்ணம் பெரும்பாலும் யாருக்கும் இல்லை! அப்படியே செய்தவர்களும் ஞானம் பெற்ற பின், சும்மா இருந்து விடுவார்கள், சொல் அற என்று!
நஹி நிந்தா நியாயம் - அதாவது நிந்தனை போல் தொனிக்கும் போற்றுதல் என்று சொல்லுவார்கள்!
//
அன்றைய காலகட்டத்தில் அவர்களுக்குள் சைவம், வைணவம் என்ற கோஷ்டி சண்டை அதிகமாக இருந்தது. ஆனால் இன்றைய நிலையில் இவ்வாறு எழுத வேண்டுமா?
//
மிகவும் நியாயமான கேள்வி!
யுகத்துக்கு யுகம் தர்மங்கள் மாறுவது யுகதர்மம்! பால்ய விவாகங்கள், பால்ய துறவறங்கள் என்று எல்லாம் மாறுவது போல் இதுவும் மாறலாம்! நாம் முயற்சியும் எடுக்கலாம்!
அப்படி ஒரு முயற்சி தான் ஆதிசங்கரரின் ஷண்மத நிறுவுதல்!
கவிநயம், ரசம் என்ற பெயரில் இது போன்ற "கலாய்த்தல்கள்" தொடர்வதும், கூடவே ஞானப் பகிர்வுகள் வளர்வதும் எல்லாம் ஒரு evolution தான்; அதில் தான் சுவையும் உள்ளது! மெய்யடியார்கள் இதற்கு வருந்தவே மாட்டார்கள்; மாறாகச் சிரித்தும் மகிழ்வார்கள்! :-))
என்ன... வார்த்தைகள் வலிக்கும் வார்த்தைகளாக இல்லாமல், கருத்தினை வலுக்கும் வார்த்தைகளாக அமையுமாறு முயற்சி செய்தால், poetic licence என்பது போல் நயங்கள் பல காணலாம்!
"சொல்லும் பொருளே நமோஸ்து" என்பதைப் போல் சொல்லையும் தாண்டி அதில் உள்ள பொருளைத் தேட இது போன்ற மீறல்களும் வழி வகுக்கும்!
கூடுமானவரை, பதிவுக்குத் தொடர்பாகத் தான் பேச முனைந்தேன்! நீண்டு விட்டது!
பதிவைத் தாண்டிய சிந்தனைகள் என்றால் பொறுத்து அருளவும்! கருத்துகள் தவறு என்றால் மறுத்தும் அருளவும்!!
நன்றி பாலாஜி! சிந்திக்கத் தெரியாத எனக்கு சிந்திக்க வழி வகுத்தீர்கள்! இது உங்கள் திருவிளையாடல் என்று கொள்ளலாமா? :-)
இதோ முத்தாய்ப்பாக நம்மாழ்வாரிடம் இருந்து!
உரைக்கின்ற முக்கண் பிரான் யானே என்னும்
உரைக்கின்ற திசை முகன் யானே என்னும்
உரைக்கின்ற அமரரும் யானே என்னும்
உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும்
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்
உரைக்கின்ற முகில்வண்ணன் ஏறக் கொலோ?
உரைக்கின்ற உலகத் தீர்க்கு என் சொல்லுகேன்
உரைக்கின்ற என் கோமளவொண் கொடிக்கே!
(பாசுரத்துக்கு)
சொல் - நான் சொல்லி விட்டேன்
பொருள் - நீங்கள் தேடலாமே? :-))
இந்த இடுகையை இரண்டு ஆண்டுகள் கழித்து இன்னிக்கு மீள் வாசிப்பு செஞ்ச போது, பல முறை வாய் விட்டுச் சிரித்தேன்! :)
பதிவுலகின் அன்றைய கால கட்டத்தையும் நினைச்சிக்கிட்டேன்! அப்போ நான் ரொம்ப ரொம்ப புதுசு! :)
பதிவர் ஜி.ராகவன் - பதிவர் வெட்டிப்பையல் (நாமக்கல் சிபி-ன்னு இப்போ பின்னூட்டத்தில் சேஞ்ச் ஆகி விட்டது) - இவர்கள் இருவருக்கும் நடந்த உரையாடல் அருமையிலும் அருமை! :)
நிந்தா ஸ்துதி என்னும் இகழ்வது போல் புகழ்தல் என்னும் முறையில் தான் இதைப் பார்க்க வேண்டும் என்று அப்போது குறிப்பிட்டு இருந்தேன்! அது அருணகிரியின் வாசகத்துக்கு மட்டுமே! ராகவனின் வாசகத்துக்கு அல்ல! இதை அப்போது நான் தெளிவாக எடுத்துரைக்கவில்லை போலும்!
அநூபூதி பற்றிய பதிவு என்பதால் அதில் அருணகிரியின் வாசகம் தான் பெரிதாகத் தெரிந்ததே ஒழிய, ராகவனின் வாசகம் பெரிதாகத் தெரியவில்லை!
முருகன் பிரணவப் பொருள் சொன்னான்!
அந்தப் பொருள் என்ன?
அது பிரம்மனுக்கு தவற்றை உணர்ந்த பின் சொல்லித் தரப்பட்டதா?
அந்தப் பொருள் சில பேரின் சொத்து மட்டும் தானா?
- இவற்றை எல்லாம் வெகு விரைவில் ஒரு தனியான பதிவில் இடுகிறேன்! :)
//ஆனால் முருகப் பெருமானின் படைப்புகள் சிறப்பாக இருந்ததால் அவற்றைக் காக்கவும் அழிக்கவும் விஷ்ணுவாலும் ருத்திரனாலும் முடியவில்லை//
இப்படி அருணகிரி சொல்லவில்லை!
இது உறுதி!
இப்படிச் சொல்வது ராகவன்! இதற்கான தரவுகள் உள்ளனவா ராகவன்?
அதாவது முருகன் படைக்கும் போது மட்டும் படைப்புகள் சிறப்பாக இருந்தன என்பதற்கு என்ன ஆதாரம்?
அப்படிச் சிறப்பான படைப்புகள் என்றால், அது தானே உலகத்துக்கு நன்மை? அப்படித் தானே தொடர்ந்து படைக்க வேண்டும்!
அதற்கு முருகனே அப்பணியைத் தொடர்ந்து இருக்கலாம்!
இல்லை அந்தச் சிறப்பான படைப்பு வித்தையை, யார் படைக்கிறார்களோ அவர்களுக்குச் சொல்லித் தந்திருக்க வேண்டும் அல்லவா?
நான் படைத்தால் நன்றாக இருக்கும்! நீ படைத்தால் சுமாரும் மோசமும் ஆகத் தான் இருக்கும் என்று சொல்ல இங்கே தனி ஈகோ ராஜ்ஜியமா நடக்கிறது?
ஒரு நிறுவனத்தில் யார் செய்தாலும், பணி செவ்வனே நடக்க வேண்டும் என்பது தானே குறிக்கோள்? Should be Process dependent & NOT people dependent அல்லவா? அது போலத் தானே உலக நன்மையும்! ஒருவனுக்குப் போதுமான பயிற்சி இல்லாவிடின் அதைத் தர வேண்டியதும் Transfer of Technology அல்லவா?
முருகன் படைத்தால் மட்டுமே உலக நன்மை! மற்றவன் படைத்தால் அதோ கதி என்றால் - அது தெரிந்தும் அப்படி நடக்க விடுவது யார் குற்றம்? முருகன் குற்றமா? இல்லை ஆதி சிவன் குற்றமா?
இதற்கான பதில்களை எல்லாம் நீங்கள் அப்போது அளிக்கவில்லை என்றே நினைக்கிறேன் ராகவன்! முடிந்தால் இப்போது அளியுங்கள்! :)
//விஷ்ணுவும் ருத்திரனும் கயிலைக்கு ஓடி ஈசனை நாடி விழுந்து கதறினார்கள். வேலை போனால் கதறி அழத்தானே வேண்டும்//
தேவையில்லையே! வேறு நல்ல வேலைகளும் தேடிக் கொள்ளலாமே! It is not end of the world! :)
//என்னுடைய பின்னூட்ட விதியின் படி இந்தப் பாடலுக்கு விளக்கம் சொல்ல வேண்டும். அதனை என் ஜுனியர் இரவிசங்கர் வந்து செய்வார். :-)//
உங்க ஜூனியர் அப்பவே உங்க பேச்சைக் கேட்கலை குமரன்! அந்தப் பாட்டுக்குப் பொருள் சொல்லவே இல்லை! :)
//எழுவது வயதுக் கிழவர் தவறிழைத்தால் ஐம்பது வயது நீதிபதி தண்டனை தரலாமா கூடாதா?//
தாராளமாகத் தரலாம்! ஆனால் தண்டனை மட்டுமே போதாது! பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணமும் நீதிபதி அளிக்க வேண்டும்! தவறான படைப்பால் பாதிக்கப்பட்ட உலக மக்களுக்கு நிவாரணம் கிடைக்க இந்த நீதிபதி வழி செய்தாரா? :))
//ஆனால் மாலுக்கும் முருகனுக்கும் ஒரு தொடர்பும் சொன்னதில்லை திருமுருகாற்றுப்படை//
முற்றிலும் தவறான செய்தி! :)
"முருகனருள்" ராகவனா, முருகன் பாட்டை இப்படி மறுத்துப் பேசியது?
ஆற்றுப்படையில் மால் மருகன் செய்தி சொல்லப்படவில்லையா? சங்க இலக்கியத்தில் அவன் மால் மருகன் என்று அறியப்படவில்லையா? வரிகள் தரட்டுமா?
//முக்கண்ணனுக்கும் கண்ணிக்கும் அவர்தம் மகனுக்குமே ஓங்காரம் தெளியும் என்பது சைவோர் நம்பிக்கை//
மிக மிகத் தவறான தகவல்!
வேறு எவர்க்கும் ஓங்காரமும் பிரணவமும் தெரியாது!
எமக்கு மட்டுமே தெரியும் என்றால், பிரணவம் என்ன குலச் சொத்தா? குலக் கல்வித் திட்டமா?
அப்படியா சைவம் சொல்கிறது? சேச்சே! இல்லவே இல்லை!
இப்படிச் சொல்லிச் சைவத்தை நீங்களே தாழ்த்தலாமா ராகவன்? எப்படி இதை நீங்களும் சொன்னீர்கள்? நானும் கவனிக்காது போனேன் என்று தெரியவில்லை!
Atleast now, lemme put the matter straight!
பிரணவப் பொருள் பல பேருக்குத் தெரியும்!
விநாயகர் ஓங்காரத்தின் மொத்த சொரூபம் என்று தான் சொல்லுவார்கள்! விநாயாகரே இடைச் செருகல் என்று சிலர் சொன்னாலும்....
ராகவன் சொல்லிய சைவ சித்தாந்தத்தின் படிப் பார்த்தாலும்...
நந்திகேஸ்வரருக்கு ஓங்காரப் பொருள் தெரியும்! அவர் அதை அப்படியே குரு பரம்பரைக்கு உபதேசம் செய்தார்! அந்த வழியில் வந்த திருமூலருக்கும் பிரணவப் பொருள் தெரியும்! அவர் அதைத் திருமந்திரத்திலும் சொல்லி உள்ளார்!
முக்கண்ணனுக்கும் கண்ணிக்கும் அவர்தம் மகனுக்குமே ஓங்காரம் தெளியும் என்பதற்கு யாதொரு தரவும் இல்லை! அப்படித் தமிழ்ச் சமயமான சைவம் சொல்லவும் இல்லை! அப்படிச் சொல்லி இருந்தால் அது இந்நேரம் தமிழுக்கும் சைவத்துக்கும் தான் இழுக்கு!
பிரணவப் பொருள் கதையைத் தனிப் பதிவாக இட வேண்டும் போல் இருக்கே! :)
ஆங் இது எல்லாத்தையும் விட முக்கியமான குற்றச்சாட்டு...
ராகவன் அப்போ மூத்த பதிவரு! என்னைக் கண்டுக்கிறவே இல்லை! :)
பின்னூட்டத்தில் நான் எதுனா சொன்னாலும் பதில் சொல்ல மாட்டாரு! அவர் லெவலுக்கு மூத்த பதிவர்களான குமரன், உருசிய மருத்துவர், வெட்டி - இவிங்களப் போன்றவர்களுக்குத் தான் பதில் சொல்லுவாரு! இதை நான் கன்னா பின்னா-ன்னு கண்டிக்கிறேன்! இது தான் என்னைப் பதிவெழுதத் தூண்டியது! இப்போ அடியேன் இந்த நிலைமையில் இருக்கேன்-ன்னும் சொல்லிக்கிடுறேன் :)
Post a Comment