இந்த உடம்பு பஞ்சபூதங்களால் ஆனது. உடலில் நீர் இருக்கிறது. நெருப்பு இருக்கிறது. காற்று இருக்கிறது. அதுவும் மூச்சாக உள்ளேயும் வெளியேயும் சுற்றுகிறது. மண் இருக்கிறது. அதனால்தான் மண்ணோடு சேர்ந்து மண்ணாகி விடுகிறது. விண்வெளியும் இருக்கிறது. விண்ணின் பண்பு பரந்ததுதானே! மனத்தைக் காட்டிலும் பரந்தது ஒன்று உண்டா? இப்படி ஐம்பூதங்களால் ஆன உடம்பைப் படைத்தது பிரமன். விதி என்பதும் பிரமனைக் குறிக்கும். ஒருவருடைய பிறப்பையும் விதியையும் முடிவு செய்வதால் பிரனமுக்கும் விதி என்று பெயர்.
விதிகாணும் உடம்பை விடா வினையேன்
மதிகாண மலர்க்கழல் என்று அருள்வாய்
மதிவாள் நுதல் வள்ளியை அல்லது பின்
துதியா விரதா சுரபூபதியே
விதி காணும் உடம்பு என்பது நான்முகனால் படைக்கப் பட்ட ஐம்பூதங்களால் ஆன உடலைக் குறிக்கும். இந்த உடம்பு இகலோகத்திற்கு மட்டுமே உரியது. உலகத்தை விட்டுப் போகையில் உடம்பையும் விட்டு விட்டுதான் செல்ல வேண்டும். இப்படி இந்த உலகத்தில் இருக்கும் வரை உடலால் உந்தப் பட்ட வினைகள் அனைத்தும் விலக வேண்டும். அது எப்படி விலகும்? பிரமனே முதலில் இன்னதென்று முடிவு கட்டி மண்ணுலகத்திற்கு நம்மை அனுப்பி வைத்த பிறகு, வினை மாற வேண்டுமென்றால்?
அதற்கும் ஒரு வழி இருக்கிறது. ஒருவருடைய கழலடிகளைத் தொழுதால், பிரமன் தந்த வினையும், நம்மிடம் வந்த வினையும், போன பிறப்பிலிருந்து கொண்டு வந்த சொந்த வினையும் ஒழியும். மலர்க்கழல் என்கிறார் வள்ளுவர். யாருடைய கழல்களைச் சொல்கின்றார் அருணகிரி?
ஒரு அழகான சொல்லாடலைப் பார்ப்போம். மதிவாள் நுதல். நுதல் என்றால் நெற்றி. தமிழ்த்தாய் வாழ்த்தில் வரும் "தக்க சிறு பிறை நுதலும்" என்ற அடியை நினைவு கூர்க. மதி என்றால் நிலா. வாளின் பண்பு என்ன? பிறை போல லேசாக வளைந்திருக்கும். பளபளவென ஒளி வீசும். இப்பொழுது மதிவாள் என்றால் என்னவென்று விளங்கியிருக்கும். மதிவாளைப் போன்ற நெற்றி என்பதைத்தான் மதிவாள் நுதல் என்கிறார். பளபளத்து ஒளிவீசும் நிலாக் கீற்று போன்ற நெற்றி யாருக்கு இருக்கிறது. அதை வெளிப்படையாகவே சொல்லி விடுகிறார். மதிவாள் நுதல் வள்ளி.
மதிவாள் நுதல் வள்ளியை அன்றி வேறு யாரையும் துதியா சுரபூபதி முருகன். அந்த முருகப் பெருமானின் மலர்க்கழல்கள்தான் உடம்பை விடா வினைகளை நீக்கும். அதெல்லாம் சரி. அதென்ன வள்ளியை அன்றி யாரையும் துதிக்காத முருகன்? முருகன் வள்ளியைத் துதிக்கின்றாரா? ஆம் என்பதே விடை. அதில் ஒரு பெரிய உட்பொருள் அடங்கியிருக்கிறது. தேவயானையைத் துதிக்கும் முருகன் என்று சொல்லியிருக்கலாமே! ஏன் சொல்லவில்லை?
வள்ளி இச்சா சக்தி. தெய்வயானை கிரியா சக்தி. வேல் ஞான சக்தி. இச்சை உலகாயமானது. காயம் என்பது உடல். அந்த உடலோடு கூடிய வினை போக அருள வேண்டியது இச்சா சக்தி. இம்மைத் துயரத்தை முருகன் வள்ளி நாச்சியார் வழியாகத் தீர்க்கின்றார். அதற்காக நமக்காக எல்லாம் வல்ல முருகப் பெருமான் வள்ளியைத் துதிக்கின்றார். பாருங்கள் இதுதான் தெய்வப் பண்பு. முருகப் பெருமானின் அன்பு. உலகத்தாரின் பாவங்களை ஏசு கிருஸ்து சிலுவையாகச் சுமந்தார் என்றும் சொல்வார்களே!
இதில் மற்றொரு மறை பொருளும் இருக்கிறது. இல்லறத்தால் ஒழுக வேண்டிய முறையே அது. கணவன் மனைவி வழியாகக் நல்லவைகளைச் செய்வது. குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் பெரியவர் சிறியவர் பேதமில்லை என்பதை முருகப் பெருமான் வழியாக நமக்கு அருணகிரி காட்டுகிறார்.
அன்புடன்,
கோ.இராகவன்
Tuesday, October 03, 2006
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
இதில் மற்றொரு மறை பொருளும் இருக்கிறது. இல்லறத்தால் ஒழுக வேண்டிய முறையே அது. கணவன் மனைவி வழியாகக் நல்லவைகளைச் செய்வது. குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் பெரியவர் சிறியவர் பேதமில்லை//
உண்மைதான் ராகவன். கணவன் மனைவி வழியாகவும், மனைவி கணவன் வழியாகவும் நண்மைகளை செய்வதால் குடும்பத்திற்குள் பரஸ்பர அன்பும் மதிப்பும் பெருகும். கணவன் செய்த நற்செயல்களுக்கு மனைவிக்கும் மனைவி செய்த நற்செயல்களுக்கு மனைவிக்கும் புண்ணியம் கிடைக்கும். குடும்பத்திற்குள் கணவனுக்கும் மனைவிக்கும் சமபங்கு உரிமைகளும் கடமைகளும் உள்ளன. இதில் யார் பெரியவர் என்றோ சிறியவர் என்றோ பாகுபாடு இருத்தல் ஆகாது. சொல்வது சுலபம் கடைபிடிப்பது மிகவும் கடினம்தான்.. ஆனாலும் அப்படிப்பட்ட ஒரு முதிர்ச்சி நம் மனதில் ஏற்பட்டுவிட்டால் குடும்பம் ஒரு சொர்க்கம்தான்.. இல்லாவிட்டால்? கேட்கவே வேண்டாம்..
ஜிரா
//மதி வாள் நுதல்//
"வாடி வாடும் இவ் வாள் நுதலே" என்று திருமங்கையும் நெற்றியை வாளுடன் வைத்தே பேசுகிறார்!
வாணுதல் என்று பதம் பிரியாமல் பல இலக்கியங்களிலும் பயின்று வருகிறது என நினைக்கிறேன்
//வள்ளியை அல்லது பின்
துதியா//
இன்னும் சில இடங்களில் கூட இந்த இச்சா சக்தியைப் பணிதல் பற்றி வெளிப்படையாகக் காட்டுவார் அருணகிரி என நினைக்கிறேன்.
"வள்ளியின் பொன்னடி மீது நித்தமும் தன், முடியானது உற்று உகந்து பணிவோனே" என்று வரும்!
//பின் துதியா விரதா//
ஒரு முறை வாயால் துதித்தால் போதாதா? ஏன் விரதமாக அதைச் செய்ய வேண்டும்?
உலகின் தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல் (சிருஷ்டி, ஸ்திதி, சங்காரம்) இவை சக்தியோடு சேரும் போது தான் ஏற்படுகின்றன.
வெறும் 'சிவனே' என்று இல்லாமல், சக்தியோடு சேரும் போது சலனம் ஏற்பட்டு, தொழில்கள் ஏற்படுகின்றன.
முத்தொழில்களைத் தொடங்கு முன் விரதம் இருப்பது முறைமை. சலனத்தால் விளைந்த தொழிலுக்கு, சலனத்தின் பால் தானே விரதம் இருக்க முடியும்? அது தான் வள்ளியம்மையின் மீது துதியும் விரதமும்.
செளந்தரிய லஹரியில், சிவனார் அம்மையின் மேல் இருந்த நோன்பு பற்றிக் குறிப்பிடுவார், ஆதிசங்கரர்.
(சூரனை வதைக்கும் முன்னரும் பின்னரும், ஈசன் பால், முருகன் இருந்த விரதத்தையும் நினைவில் கொள்க. ஒரு காரியத்துக்கு எது காரணமோ, அந்தக் காரணத்தின் பால் விரதம் இருப்பது நியமம். ஆழி மாயனும் அலைமகள் மேல் இப்படி ஒரு விரதம் இருந்தது பற்றி, தனிப் பதிவில் தருகிறேன்)
விதி என்பது பிரும்மா என்று நன்கு சொன்னீர்கள்,பாபநாசம் சிவனும்"மால் மருகா,முருகா,குஹா,ஷண்முகா,மகபதியும்,விதியும்தொழும்......கார்த்திகேய கங்கேய கௌரிதனயா என்ற பாட்டில்.நல்ல விளக்கம்.
// சொல்வது சுலபம் கடைபிடிப்பது மிகவும் கடினம்தான்.. ஆனாலும் அப்படிப்பட்ட ஒரு முதிர்ச்சி நம் மனதில் ஏற்பட்டுவிட்டால் குடும்பம் ஒரு சொர்க்கம்தான்.. இல்லாவிட்டால்? கேட்கவே வேண்டாம்.. //
உண்மைதான் ஜோசப் சார். இது குடும்பத்திற்கு மட்டுமல்ல பொதுவிலும் ஆகும். அலுவலகம், வலைப்பூ, பள்ளி, கல்லூரி...எங்கும் எங்கும் பயன்படும்.
// வாணுதல் என்று பதம் பிரியாமல் பல இலக்கியங்களிலும் பயின்று வருகிறது என நினைக்கிறேன் //
ரவி, வாணுதல் என்பது சரியென்று தோன்றவில்லை. வாள்+நுதல் என்பது வாணுதலாகுமா? தெரியவில்லையே!
// ஆழி மாயனும் அலைமகள் மேல் இப்படி ஒரு விரதம் இருந்தது பற்றி, தனிப் பதிவில் தருகிறேன் //
தருக தருக....காத்திருக்கிறோம்.
// தி. ரா. ச.(T.R.C.) said...
விதி என்பது பிரும்மா என்று நன்கு சொன்னீர்கள்,பாபநாசம் சிவனும்"மால் மருகா,முருகா,குஹா,ஷண்முகா,மகபதியும்,விதியும்தொழும்......கார்த்திகேய கங்கேய கௌரிதனயா என்ற பாட்டில்.நல்ல விளக்கம். //
தி.ரா.ச, அந்தப் பாடலை முழுதும் தரயியலுமா?
இராகவன்,
நல்ல பதிவு. படித்துச் சுவைத்தேன்.
தங்கள் பதிவின் மூலம் தமிழ்த்தேன் குடித்தேன்.
மிக்க நன்றி.
// வெற்றி said...
இராகவன்,
நல்ல பதிவு. படித்துச் சுவைத்தேன்.
தங்கள் பதிவின் மூலம் தமிழ்த்தேன் குடித்தேன்.
மிக்க நன்றி. //
நன்றி வெற்றி. நான் சொல்ல வேண்டிய நன்றியை நீங்கள் சொல்கின்றீர்களே! :-)
இராகவன் மிக நல்ல பாடல். பல முறை பாடிப் பார்த்துக் கொண்டேன். :-)
விதி என்பது பிரமன் என்ற விளக்கம் மிகப் பொருத்தம். விதி என்றால் விதிகள் என்று பொருள் கொண்டாலும் விதிகளின் படி (According to Physical Laws) பிறந்து, வாழ்ந்து, இறக்கும் உடம்பை என்று பொருள் கொள்ளலாம். ஆனால் வினையேன் என்று சொன்னதால் 'விதி' என்பது வினைகளின் வழி நிற்கும் 'பிரமன் விதித்த விதி' என்பது பொருந்தும்.
//பிரமன் தந்த வினையும், நம்மிடம் வந்த வினையும், போன பிறப்பிலிருந்து கொண்டு வந்த சொந்த வினையும்//
இத்தனை விதமான வினைகளா? கொஞ்சம் விளக்குங்கள்.
வாள் நுதல் - வாள் என்றால் போர்வாளை இங்கே குறிக்கவில்லை என்று எண்ணுகிறேன். வாள் என்றால் ஒளி பொருந்திய என்று பொருள் படித்ததாக நினைவு. வாணுதல் என்று பல நூல்களில் பயின்று வந்துள்ளது. அதன் பொருளை விளக்கும் போது வாள்+நுதல் - ஒளிபொருந்திய நெற்றி என்றே பொருளுரைத்துப் படித்ததாக நினைவு. கூகிளாண்டவரைக் கேளுங்கள். நிறைய சுட்டிகள் தருகிறார் வாணுதலுக்கு.
வள்ளி பதம் பணிவதை பல இடங்களில் சொல்லியிருக்கிறாரே. 'பணி யாதென வள்ளி பதம் பணியும்...'
சமயச் சடங்குகளிலும் தான தருமம் செய்யும் போதும் கணவன் மனைவி இருவரும் சேர்ந்திருந்தே செய்ய வேண்டும் என்பது விதி. அப்படி இல்லற தருமங்களை சரிவரச் செய்யக் கணவனுக்கு உதவுவதாலேயே மனைவிக்கு 'தர்ம பத்தினி', 'தர்மசாரினி' என்று பெயர். அப்படி மனைவியின் ஒப்புதல் இல்லாமல் செய்யும் எந்தச் சமயச் சடங்கும் தான தருமங்களும் செல்லாது என்பது நம்பிக்கை. கண்ணகியும் சங்ககாலப் பெண்களும் இந்த இல்லறக் கடமைகளைப் பற்றி நிறைய பேசியிருக்கின்றனர்.
Post a Comment