அகந்தை. எத்தனை கொடிய நோய்! அகந்தை தாக்கியதால் வீழ்ந்தவர் எத்தனை பேர்கள்! சாதாரண மனிதர் முதல் பெரிய அறிஞர்கள் வரை அனைவரையும் சீண்டிப் பார்த்திருக்கின்றது அகந்தை. ஔவையாரையும் விடவில்லை இந்த அகந்தை. எப்படி வருந்துகிறார் பாருங்களேன்.
கருங்காலிக் கட்டைக்கு நாணாத கோடாலி
சிறுகதலித் தண்டுக்கு நாணும் - பெருங்கானில்
காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான் தோற்றது
ஈரிரவும் தூங்காது என் கண்
பெரிய பெரிய கருங்காலி மரங்களையெல்லாம் வெட்டித் தள்ளிய உறுதியான இந்த இரும்புக் கோடாலி, இளங் கதலித் தண்டுக்கு வளைந்து விட்டதே. கதலி என்பது வாழையின் ஒரு வகை. இந்தப் பெருங்காட்டில் மாடு மேய்க்கின்ற இந்தச் சிறுவனிடத்தில் தோற்றதால் இன்னும் இரண்டு நாட்களுக்கு உறக்கமே வாராதே என்று புலம்புகின்றார் ஔவையார்.
புலம்பலுக்குக் காரணம்? ஆணவம். செருக்கு தலைக்கு ஏற, தமிழில் தன்னை மிஞ்ச யாருமில்லையென்று இருந்தார் ஔவையார். "சுட்ட பழமா? சுடாத பழமா?" என்று கேட்டு செருக்கழித்தான் முருகன். அப்பொழுது ஔவையார் புலம்பியதுதான் மேலே குறிப்பிட்டது. அரிசியிலிருக்கும் கருக்கு சுவையை அழிப்பது போல, உள்ளத்தில் தோன்றும் செருக்கு பெருமையை அழித்து விடும். அதனால்தான் நம் முன்னோர்கள், "வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு" என்று சொல்லி வைத்தார்கள். ஆகையால் எவ்வளவு உயர்ந்தாலும் அடக்கமாக இருக்க வேண்டும். "நிலை உயரும் பொழுது பணிவு வந்தால், உலகம் உன்னை வணங்கும்" என்றார் கண்ணதாசன்.
சரி. அந்த அகந்தையை வளரவிடாமல் செய்வதெப்படி? அகந்தை கொடியைப் போன்றது. கொடி கொம்பினடியில் பிறந்தாலும், பிறகு கொம்பையே வளைத்து மூடிவிடும். அகந்தையும் அப்படித்தான். தான் தோன்றிய இடத்தையே மறைத்து விடும். கொடியை கூரிய வாளால் அரிந்து தள்ளுவது போல அகந்தையையும் அழிக்க வேண்டும். அதற்கான வாள் எது? "
பொறையாம் அறிவால்" என்ற அரிவாள் பயன்படும் என்கிறார் அருணகிரி. பொறுமையென்னும் அறிவு நல்ல விளைவுகளைத் தரும். பொறுத்தார் பூமியாள்வார் அன்றோ! இதைத்தான் "மனனே பொறையாம் அறிவால் அரிவாய் அடியோடும் அகந்தையையே!" என்கிறார் அருணகிரி.
கிரிவாய் விடு விக்ரம வேலிறையோன்
பரிவாரம் எனும் பதம் மேவலையே
புரிவாய் மனனே பொறையாம் அறிவில்
அரிவாய் அடியோடும் அகந்தையையே
மனப் பயிற்சியும் தேர்ந்த கல்வியும் பொறுமையென்னும் குணமும் இல்லாதார் என்ன செய்வது? அதற்கும் ஒரு வழி உண்டு. நன்றாக செல்வாக்கோடு வாழ்ந்த ஒருவன் அடிமையாகிப் போனால், அவனது செருக்கும் மமதையும் அழியும். அதற்காக இருக்கின்ற செல்வத்தையெல்லாம் விட்டு விட்டு அடிமையாகப் போவதா? அதற்கும் ஒரு வழி இருக்கிறது. முருகனுக்கு அடிமையாகி விட்டால்? இருக்கின்ற செல்வமும் வளமையும் அப்படியே இருக்க, முருகன் அருளெனும் செல்வமும் மேலும் பெருகும். ஔவையின் அகந்தையை நீக்கிய கந்தனுடைய கருணை நமக்கும் கிட்டும்.
அதற்காகத்தான் அருணகிரியும் வேண்டுகிறார். "கிரிவாய் விடு விக்கிரமவேலிறையோன்! பரிவாரம் எனும் பதமேவலையே புரிவாய்!" பரிவாரம் - முருகனுடைய அடியவர்கள் என்னும் பரிவாரம். அந்த அடியவர் கூட்டத்தில் இருப்பது பேரின்பம். நமக்கு ஒத்த நண்பர்கள் கிடைப்பது போல. அப்பேற்பட்ட கூட்டத்தில் நாமும் சேர்ந்தால் நல்வாழ்வு பெறலாம். "கிரவுஞ்ச மலையைத் தொளைத்த வேலுடைக் குமரா, உன்னுடைய அடியவர் கூட்டத்தைச் சேரும் பெருமையைத் தருவாய்! பொறுமை என்னும் பண்பால் அகந்தையை அழித்துக் காப்பாய் கந்தா!"
பக்தியுடன்,
கோ.இராகவன்
Monday, October 16, 2006
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
ஜிரா, வழமை போல அருமை.
தலைப்பே பாதி பதிவை உண்ட திருப்தி.
"கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு என்று
உற்ற கலை மடந்தை ஒதுகின்றாள்"
-இதுவும் ஒளவையார் தான் பாடினார். இப்படிப் பாடினவரே அகந்தைக்கு ஆளானால்? அப்பப்பா!
"சரஸ்வதி தேவியே கற்றது கைமண்ணளவு என்றால் நாம் எம்மாத்திரம்" என்று பாடிய ஒளவைக்கே அகந்தை தலை தூக்கியது என்றால் நாம் எல்லாம் எங்கே?
இது போன்ற "நாம் எல்லாம் எங்கே" எண்ணம் வந்து கொண்டே இருந்தால், சற்று, அகந்தையைத் தட்டி வைக்க முடியும். அதற்கும் அவன் அருள் வேண்டும்!
அருணகிரியார் சொல்லிக் கொடுக்கும் உபாயம், மனமிருந்தால் ரொம்பவே எளிது. முருகப் பெருமானுக்கு அடிமையாகி, அவன் அடியார் குழாத்தில் கலந்து மேவி விட்டால், அப்புறம் என்ன, என்றும் இன்பம் தான்!
அடியவர் பெருமை சொல்லி மாளாது. ஆனால் அடியவர் பெருமைகளில் மிக மிக முக்கியமான ஒன்று; விளையும் நன்மை என்னெவென்றால், நமக்கு இந்த அகந்தை அழியும்! அடியவர் பதிவுகளை இட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், சரியான நேரத்தில் எடுத்துக் கொடுத்தீங்க ஜிரா! மிக்க நன்றி.
அப்பறம் இன்னொரு கேள்வி.
அகந்தை வேறு; ஆணவம் வேறு தானே ஜிரா??
ஒளவைக்கு அகந்தை தான்; ஆணவம் இல்லைன்னு நினைக்கிறேன்.
அருமையாகச் சொன்னீர்கள் இராகவன். அகந்தையால் கந்தையாகாமல் ஐயன் தான் அடியேனைக் காக்கவேண்டும்.
பரிவாரம் - முருகனுடைய அடியவர்கள் என்னும் பரிவாரம். அந்த அடியவர் கூட்டத்தில் இருப்பது பேரின்பம். நமக்கு ஒத்த நண்பர்கள் கிடைப்பது போல. அப்பேற்பட்ட கூட்டத்தில் நாமும் சேர்ந்தால் நல்வாழ்வு பெறலாம்.
ஜி.ரா. என்ன்னையும் உங்கள் கூட்டத்தில் சேர்த்துக்கொண்டு நல்வாழ்வு கிடைக்கச்செயுங்கள்.
அகந்தை கொடியைப் போன்றது. கொடி கொம்பினடியில் பிறந்தாலும், பிறகு கொம்பையே வளைத்து மூடிவிடும். அகந்தையும் அப்படித்தான். தான் தோன்றிய இடத்தையே மறைத்து விடும். கொடியை கூரிய வாளால் அரிந்து தள்ளுவது போல அகந்தையையும் அழிக்க வேண்டும். //
உண்மைதான் ராகவன்.
அகந்தையால் கந்தலான பல அதிகாரிகளை என் வாழ்க்கையில் சந்தித்திருக்கிறேன்.
Post a Comment