நாதா குமரா நம என்று அரனார்
ஓதாய் எனவோதியது எப்பொருள்தான்?
வேதா முதல் விண்னவர் சூடும் மலர்ப்
பாதா குறமின் பத சேகரனே
காலுக்கு அணிகலன் பூட்டும் வழக்கம் தமிழர்களுக்கு உண்டு. ஆண்கள் தண்டை அணிந்தால், பெண்கள் தண்டையும் அணிந்து அத்தோடு சிலம்பும் கொலுசும் சேர்த்து அணிவார்கள். அன்றைக்கே ஆண்கள் அணிவதை பெண்கள் அணிந்து கொள்வதும், பெண்கள் அணிவதை ஆண்கள் அணிந்து கொள்ளாமையும் வழக்கில் இருந்திருக்கின்றது.
சிவபெருமானுக்கு அணிகலம் எதுவென்றால் வெண்டலை மாலை. அதாவது மண்டையோட்டு மாலை. மண்ணை உண்ட மாலுக்கு அணிகலனோ குளிர்ச்சி பொருந்திய துளசி மாலை. முருகனுடைய திருவடிகளுக்கு அணிகலன் எது தெரியுமா? வானோர் முடி. அப்படித்தான் கந்தரலங்காரம் சொல்கிறது.
ஆலுக்கணிகலம் வெண்டலை மாலை அகிலமுண்ட
மாலுக்கணிகலம் தண்ணந் துழாந் மயிலேறும் ஐயன்
காலுக்கணிகலம் வானோர் முடியும் கடம்பும்கையில்
வேலுக்கணிகலம் வேலையும் சூரனும் மேருவுமே!
இதே கருத்தைத்தான் இந்தப் பாடலிலும் சொல்கின்றார். வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப் பாதா! வேதங்களை ஓதும் திசைமுகன் முதலான விண்ணவர்கள் அனைவரும் வந்து தொழும் திருவடிகள் முருகனுடையவை. அப்படிப் பட்ட முருகன் யாருடைய திருவடிகளைத் தொழுகின்றான் என்றால், அது வள்ளி நாச்சியார். அதை அழகாக "குறமின் பத சேகரனே" என்று அருணகிரி கூறுகின்றார். ஏன் தொழுகின்றார் என்பதைச் சென்ற பாடலில் பார்த்தோம்.
இப்படியெல்லாம் முருகனைப் புகழ்ந்து பேசி அருணகிரி யாசிப்பது என்ன? அவரும் ஒரு பொருளைத்தான் கேட்கின்றார். அதுவும் எப்பேற்பட்ட பொருள் தெரியுமா? ஈசன் முருகனிடம் கேட்ட பொருள். "நாதா குமரா நம என்று அரனார் உன்னை வணங்கி எந்தப் பொருளைக் கேட்டாரோ, அந்தப் பொருளை எனக்குத் தந்தருள்வாய் முருகா!" என்று இரக்கிறார் அருணகிரி.
சிவபெருமான் முருகனிடம் வணங்கிப் பெற்றது உபதேசம். அந்த உபதேசத்தைத் தனக்கும் அருள வேண்டுமென்று கேட்கின்றார் அருணகிரி. "நாவேறு பாமணத்த" என்று தொடங்கும் சுவாமிமலை திருப்புகழைப் பாருங்கள்.
"சேவேறும் ஈசர் சுற்ற மாஞான போத புத்தி
சீராகவே உரைத்த குருநாதா!"
பரமசிவன் முருகனைச் சுற்றி வந்து உபதேசம் கேட்டாராம். கேட்பவன் சீடனல்லவா! அதனால்தான் அந்தப் பணிவு. இதையெல்லாம் ஏன் அருணகிரி திரும்பத் திரும்பச் சொல்கின்றார்? கற்கையில் பணிவு வேண்டும். பணிவில்லாத கல்வி பயனில்லாதது. அதை அனைவருக்கும் எடுத்துச் சொல்வதுதான் முருகன் சிவனுக்கு உபதேசம் செய்த கதை. அந்தப் பணிவோடு அருணகிரி, "திசைமுகன் முதலான விண்ணோர் தொழுதேத்தும் திருப்பாதங்களைக் கொண்ட முருகா! ஈசன் உன்னை வணங்கித் தொழுது பெற்ற உபதேசம் நானும் பெற வழி வகுப்பாய்!" என்று வேண்டுகின்றார்.
பக்தியுடன்,
கோ.இராகவன்
Tuesday, October 10, 2006
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
வழக்கம் போல் அருமையான விளக்கத்துடன், 'கற்கையில் பணிவு வேண்டும்' என்ற உயரிய தத்துவத்தையும் நறுக்கு தெரித்தாற்போல் சொல்லிய உங்கள் திறனுக்கு முடி [தலை] வணங்குகிறேன்.
மண்ணுண்ட மாலுக்கு மாலை துளசியாம்
விண்மதி சேகரன் ஈசனுக்கோ வெண்டலை
என்னவன் கந்தன் அடியதன் நேர்த்திக்கு
விண்ணவர் கேசமே காண்
மூலகருத்து : கந்தரலங்காரம்
விளக்க உதவி: ஜிரா
அன்பு இராகவா,
கற்கையிலல்லாது மற்றுமொரு நிலையிலும் பணிவுவேண்டுமென்பது ஆன்றோர் வாக்கு. அது என்னவெனில்,"நிலை உயரும்போதும் பணிவு வேண்டும்". அதையே கண்ணதாசனும் தன் பாடலில், "நிலை உயரும்போது பணிவுகொண்டால் உலகம் உன்னை வணங்கும்" எனப் பாடிச் சென்றார்.
இராகவன்,
அருமையாக எழுதிவருகிறீர்கள் எல்லா பதிவையும் இன்று படித்தேன். ரொம்ப நல்ல எழுதியுள்ளீர்கள்.
//வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப் பாதா!//
ஜிரா. நீங்கள் சொன்னது போல் திசைமுகன் முதலான விண்ணவர்கள் அனைவரும் வந்து தொழும் திருவடிகள் என்ற பொருள் ஏற்புடைத்தே.
ஆனால் அருணகிரி இங்கு ரொம்பவும் நயந்து அனுபவித்து சொன்னாரோ! விண்ணவர் "சூடும்" = சூடும் என்பது இங்கே மிக முக்கியமான சொல்!
மிகவும் விரும்பி அணிவதைத் தான் "சூடும்" என்று சொல்லுவார்கள்! "சூடிக்" கொடுத்த சுடர்க் கோதை என்று தான் ஆண்டாளும் காதல் சிறப்புறுகிறாள்!
ஏதோ தேவ சேனாபதியாய் இருப்பதனால், கடனே என்றோ, கட்டுப்பட்டோ, அமரர்கள் முருகனின் பாதங்களைத் தங்கள் சென்னியில் எடுத்து வைத்துக் கொள்ளவில்லை. அப்படி செய்திருந்தால் பாதங்களை 'அணிந்தார்கள்' என்று அருணகிரி சொல்லிவிட்டுப் போயிருப்பார்.
ஆனால் காதலால், மிகவும் விரும்பிச் "சூடினார்கள்" என்று சொல்வது எவ்வளவு நயம் பாருங்கள்!
மலர்ப்பாதங்களைச் சென்னியின் மேல் சூடுவது இன்றும் வைணவச் சம்பிரதாயங்களில் மிக முக்கியமான ஒன்று! சடாரி இல்லாத பெருமாள் கோவிலா?
இப்படி இறைவன் திருவடிகளைத் தம் தலை மேல் சூடும் அன்பை இங்கே அருணகிரி அழகாகப் படம் பிடித்துக் காட்டுவதாகவே தோன்றுகிறது!
அவன் தாளை இவர்கள் சூட,
இவள் தாளை அவன் சூட,
"'சூட'கமே தோள்வளையே", எனத் திருவடிகள் நமக்கு விலைமதிப்பில்லா அணிகலனாகவே ஆகி விட்டது எவ்வளவு சிறப்பு!!
இராகவன்,
நல்ல பதிவு.
செறிவு அறிந்து சீர்மை பயக்கும் அறிவுஅறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்
கதம்காத்துக் கற்றுஅடங்கல் ஆற்றுவான் செல்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து
// SK said...
வழக்கம் போல் அருமையான விளக்கத்துடன், 'கற்கையில் பணிவு வேண்டும்' என்ற உயரிய தத்துவத்தையும் நறுக்கு தெரித்தாற்போல் சொல்லிய உங்கள் திறனுக்கு முடி [தலை] வணங்குகிறேன். //
முடிவிலா மும்மொழிச் செல்வன் முருகனடி பணிதலே சிறப்பன்றோ! என் திறனும் அறனும் அவன் தந்திருக்க அவனைப் புகழ்தலே பெருமை. நான் கடை. கந்தன் சரக்கு. அருணகிரி சரக்கு மாஸ்டர். சரக்கைப் வியத்தலும் சரக்கு மாஸ்டரை வியத்தலும் நலமே!
// இலவசக்கொத்தனார் said...
மண்ணுண்ட மாலுக்கு மாலை துளசியாம்
விண்மதி சேகரன் ஈசனுக்கோ வெண்டலை
என்னவன் கந்தன் அடியதன் நேர்த்திக்கு
விண்ணவர் கேசமே காண்
மூலகருத்து : கந்தரலங்காரம்
விளக்க உதவி: ஜிரா //
வெண்பா என்பதைக்
கண்பா எனக் கருத்தாய்
என்பால் தந்த கொத்சே
நண்பால் அது தகுமே!
// ஞானவெட்டியான் said...
அன்பு இராகவா,
கற்கையிலல்லாது மற்றுமொரு நிலையிலும் பணிவுவேண்டுமென்பது ஆன்றோர் வாக்கு. அது என்னவெனில்,"நிலை உயரும்போதும் பணிவு வேண்டும்". அதையே கண்ணதாசனும் தன் பாடலில், "நிலை உயரும்போது பணிவுகொண்டால் உலகம் உன்னை வணங்கும்" எனப் பாடிச் சென்றார். //
மிகச்சரி ஐயா. உண்மையிலே மேன்மை நோக்கிச் செல்கையில் பணிவு வந்தே தீரும். பணிவிலா உயர்வு உயரமேயன்றி மேன்மையன்று. சரியா?
// சிவமுருகன் said...
இராகவன்,
அருமையாக எழுதிவருகிறீர்கள் எல்லா பதிவையும் இன்று படித்தேன். ரொம்ப நல்ல எழுதியுள்ளீர்கள். //
நன்றி சிவமுருகன். என்ன இப்பொழுதெல்லாம் பதிவுகள் குறைந்து போயினவே! வேலைப்பளுவா?
// வெற்றி said...
இராகவன்,
நல்ல பதிவு.
செறிவு அறிந்து சீர்மை பயக்கும் அறிவுஅறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்
கதம்காத்துக் கற்றுஅடங்கல் ஆற்றுவான் செல்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து //
மிகச்சரியாக குறள் எடுத்துக் குரல் கொடுத்திருக்கிறீர்கள். வெற்றி உமதே. :-)
// ஏதோ தேவ சேனாபதியாய் இருப்பதனால், கடனே என்றோ, கட்டுப்பட்டோ, அமரர்கள் முருகனின் பாதங்களைத் தங்கள் சென்னியில் எடுத்து வைத்துக் கொள்ளவில்லை. அப்படி செய்திருந்தால் பாதங்களை 'அணிந்தார்கள்' என்று அருணகிரி சொல்லிவிட்டுப் போயிருப்பார்.
ஆனால் காதலால், மிகவும் விரும்பிச் "சூடினார்கள்" என்று சொல்வது எவ்வளவு நயம் பாருங்கள்!
மலர்ப்பாதங்களைச் சென்னியின் மேல் சூடுவது இன்றும் வைணவச் சம்பிரதாயங்களில் மிக முக்கியமான ஒன்று! சடாரி இல்லாத பெருமாள் கோவிலா?
இப்படி இறைவன் திருவடிகளைத் தம் தலை மேல் சூடும் அன்பை இங்கே அருணகிரி அழகாகப் படம் பிடித்துக் காட்டுவதாகவே தோன்றுகிறது!
அவன் தாளை இவர்கள் சூட,
இவள் தாளை அவன் சூட,
"'சூட'கமே தோள்வளையே", எனத் திருவடிகள் நமக்கு விலைமதிப்பில்லா அணிகலனாகவே ஆகி விட்டது எவ்வளவு சிறப்பு!! //
அரங்கன் அடியவர் தமிழடிகளை எடுத்துப் போட்டுப் பதிவைச் சிறக்க வைக்கிறார். :-) மிகச்சரியான கருத்துதான் ரவி.
ஒரே சமயத்தில், பல அறிஞர்களிடம் பாடம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு இந்த பதிவில் இருப்பதாகவே நான் கருதிகிறேன்.
மிக்க நன்றி.
பாலா
வேதங்களை ஓதும் திசைமுகன் முதலான விண்ணவர்கள் அனைவரும் வந்து தொழும் திருவடிகள் முருகனுடையவை. அப்படிப் பட்ட முருகன் யாருடைய திருவடிகளைத் தொழுகின்றான் என்றால், அது வள்ளி நாச்சியார். அதை அழகாக "குறமின் பத சேகரனே" என்று அருணகிரி கூறுகின்றார்
வள்ளியின் கால்களை ஏன் தெரியுமா தலைமேல் குமரன் வைத்துக்கொண்டான்.சிவன் --பார்வதி,முருகன் --வள்ளி என்பது பராசக்தி தத்துவத்தின் ஒரு வெளிப்பாடு.மற்ற தெய்வங்கள் க.இயினால் அருள் பாலிப்பார்கள் பராசக்தி கால்களினால் அருள்பாலிப்பாள். அபிராமி பட்டரும்"மகிடன் தலைமேல் வந்தரி" என்கிறார்.
எல்லூரு மணிமாட நல்லூரின் அப்பர் முடி இடைவைகி அருளுமென் பதம்
எடு மேலெந் தொண்டர் முடி மேன் மறுத்திடவும் இடை வலிந்து ஏறும் பதம்
என்று வள்ளலாரும் போற்றும் பாதம்
பாட்டில் இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள். "பதவி வரும்போது பணிவு வரவேண்டும் தோழா"
நம்மில் பலருக்கு சிவபதவி வரும்போது கூட பணிவு வரமாட்டேன் என்கிறது
ஒவ்வொரு சொல்லுக்கும் மிகச் சிறப்பாய் பொருள் சொல்லிவிட்டீர்கள் இராகவன். அருமை.
கற்கையில் பணிவு வேண்டும். பணிவில்லாத கல்வி பயனில்லாதது. //
ஆமாம் ராகவன்..
பணிவு என்பது குருவிடம் கற்கையில் மட்டுமல்லாமல் அதற்குப் பிறகும் நம்மிடம் இருப்பது மிகவும் நல்லது.
பணிவு என்பது ஏதோ அடிமைத்தனம் என்று நினைப்பவர் நம்மில் பலர் உள்ளனர்.
அவர்களுக்கு நல்ல பாடம் சொல்கிறது உங்களுடைய இன்றைய பதிவு.
Post a Comment