Monday, October 23, 2006

39. வீண்பெருமை பேசுகின்றவர்களுக்கு என்ன பெயர்?

தோண்டத் தோண்ட நீர் தருவது நீருற்று. படிக்கப் படிக்க இன்பம் தருவது தமிழூற்று. அதிலும் இந்தப் பாடல் தீந்தமிழூற்று. சட்டென்று படிக்கின்றவர்களுக்கு ஒன்றும் புரியாதது போல இருக்கும். விளக்கிச் சொன்னால் அனைவருக்கும் பிடிக்கும்.

ஆதாளியை ஒன்று அறியேனை அறத்
தீதாளியை ஆண்டது செப்புமதோ
கூதாள கிராத குலிக்கிறைவா
வேதாள கணம் புகழ் வேலவனே

மனிதர்களாகிய நாம் நமக்குள் எத்தனை பாகுபாடு பார்க்கின்றோம். இனம், மதம், மொழி, நாடு என்று எத்தனையோ காரணிகள். அத்தனை காரணிகளையும் முழுமூச்சோடு பயன்படுத்தி வேற்றுமையை வளர்க்கின்றோம். ஆனால் தெய்வமும் அப்படி இருக்க முடியுமா? இருந்தால் அது தெய்வமாகுமா? திருக்குறள் என்ன சொல்கின்றது? "வேண்டுவார் வேண்டாதார் இலான்" என்று இறைவனைச் சொல்கின்றது. இறைவனுக்கு வேண்டப்பட்டவர்கள் வேண்டாதவர்கள் என்று யாரும் கிடையாது. வடமொழியில் "துஷ்ட நிக்ரஹ! சிஷ்ட பரிபாலன!" என்று இறைவனின் பண்பைக் கூறுவார்கள். அதாவது தீயவர்களை அழித்து நல்லவர்களைக் காப்பது இறைவனின் கடமை என்கிறது வடமொழி. ஆனால் தமிழ் இந்த வாதத்தை எந்தக் காலத்திலும் ஒப்புக் கொள்ளவில்லை.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் அப்படி சொல்லியிருக்கின்றார் என்றால் பிற்காலத்தில் அருணகிரியும் இந்தக் கருத்தையே வலியுறுத்துகிறார். எப்படி தெரியுமா?
மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
வைதாரையும் அங்கு வாழ வைப்போன்
வண்டுகள் மொய்க்கின்ற மலர்களால் கட்டப்பட்ட பூச்சரத்தை குழலில் சூட்டிக் கொள்ளும் வள்ளி நாச்சியாரைக் களவு செய்து கலவு கொண்டவன் முருகன். தன்னை யாரேனும் தமிழால் வைதாலும் கூட அவரைக் காப்பாற்றி வாழ வைப்பான் அந்த முருகன். பாருங்களேன்! கந்தனின் கருணையை! ஆகையால் சூரனுடன் போரிட்டு தேவர்களைக் காத்து சூரனுக்கும் வாழ்வளித்தான். சூரனை சேவலும் மயிலுமாக்கி தன்னுடன் வைத்துக் கொண்டானே! அந்த சேவலையும் மயிலையும் இன்றும் நாம் வழிபடுகின்றோமே! ஆக தீயவரைத் திருத்தி நல்லவரைக் காப்பதே தெய்வப் பண்பு என்கிறது தமிழ். கச்சியப்பரும் கூட இதே கருத்தைக் கந்தபுராணத்தில் குறிப்பிடுகிறார்.

ஆதாளம் என்றால் தன்னைப் பற்றியே பெருமை பேசுதல். பாருங்கள் இத்தனை சிறிய சொல்லில் எத்தனை பெரிய பொருள். ஆதாளி என்றால் தன்னைப் பற்றியே வீண்பெருமை பேசுகின்றவர். ஆதாளிவாயன் என்று ஊர்ப்பக்கம் இன்னமும் சொல்வதுண்டு. ஒன்றறியேனை - நல்லவைகள் ஒன்றும் அறியாதவனை. அறத்தீதாளி - அறத்திற்கு எதிரான தீய கருத்துகளை ஆள்கின்றவர். ஆண்டது செப்புமதோ - அருள் தந்து ஆட்கொண்டதை எப்படிச் சொல்வது? இந்த வரியை இப்பொழுது படியுங்கள். ஆதாளியை ஒன்று அறியேனை அறத்தீதாளியை ஆண்டது செப்புமதோ! "முருகா! வீண்பெருமை பேசித் திரிந்து கொண்டிருந்த என்னை, நல்லவைகள் என்று ஆன்றோர் கூறுவதையெல்லாம் அறியாத என்னை, தருமத்திற்கு எதிரான தீய கருத்துகளைக் கொண்ட என்னை, நீ வலிய வந்து ஆட்கொண்டாயே! அந்தக் கருணையை என்னவென்று சொல்வது?" அருணகிரி கதறுகின்றார். இதைத்தான் ஆங்கிலத்தில் subjugation என்று சொல்வார்கள்.

அப்படி ஆட்கொண்டது எப்படித் தெரியுமா? அதையும் அவரே சொல்கின்றார். கூதாள மலர் என்று ஒன்று உண்டு. மிகவும் அழகான மலராக இருந்தாலும் மலருக்குரிய நறுமணமில்லாமல் திகழும். பொதுவாக மணமில்லாத மலர்களை யாரும் விரும்பிச் சூடிக் கொள்வதில்லை. ஆனால் முருகப் பெருமானுக்கு கூதாள மலரும் சூட்டப் படுகிறது. கிராதகன் என்றால் கொலைத் தொழில் புரிகின்றவர். அவர்களுக்கு வேடவர் என்றும் பெயருண்டு. ஆனால் இன்றைக்குத் தீயவர்களைக் கிராதகர் என்று கூறும் வழக்கம் தமிழில் உள்ளது. கிராத குலிக்கு இறைவா - வள்ளியை மணம் புரிந்து கொண்டதன் மூலம், கொலைத்தொழில் புரிவதால் இழிவானவர் என்று மற்றவர்களால் கருதப் படும் வேடர்கள் குலத்திற்கும் தலைவனாக விளக்குகின்ற வேலவா!

மணமில்லாத கூதாள மலருக்கும் மதிப்பளித்து சூடிக்கொண்டு, வள்ளியை மணந்து கொலைத் தொழில் வேடுவருக்கும் தலைவனாகி, வேதாளங்களுக்கும் பூதங்களுக்கும் கூட இறைவனாக விளங்கும் வேலவரே! வீண்பேச்சும், நன்மையறியாதவனும் தரும நெறி ஒழுகாதவனுமாகிய என்னைக் கூட கருணை தந்து காத்தாயே! இந்தப் பெருமையை எப்படிச் சொல்வது!

பக்தியுடன்,
கோ.இராகவன்

25 comments:

said...

//"துஷ்ட நிக்ரஹ! சிஷ்ட பரிபாலன!" என்று இறைவனின் பண்பைக் கூறுவார்கள். அதாவது தீயவர்களை அழித்து நல்லவர்களைக் காப்பது //
நடைமுறையில் அவ்வாறு உள்ளதா பாருங்கள். இல்லையே ஏன்?

said...

அன்பு இராகவா,

அருணாசலக் கவிராயர் தன் இராம நாடகக் கீர்த்தனைகளில் தாடகை வதத்தைக் கீழ்க் கண்டவாறு சித்தரிக்கிறார்.

எட்டுத் திசையிலும் ஒடி முட்டுமே இவள் ஆதாளி
முட்டினால் மலையும் பிளந்திடுமே து ளி து ளி
எட்டியும் பார்க்கக் கூடுமோ கிட்டி ஒருகாளிகூளி
விட்டுநான் சொல்ல வேணுமா மட்டில்லாப் பாவசண்டாளி"

ஈண்டு, ஆதாளி எனும் சொல்லைப் பேரிரைச்சலுடன் தம்பட்டம்(தன்+பட்டம்) அடித்து அட்டகாசம் செய்தவள் என்னும் பொருளில் கையாண்டுள்ளார்.

ம்..ம்..ம்..
இன்னும் வழக்கொழிந்த சொற்கள் எத்தனையோ?

said...

அருமையான விளக்கம் ஜிரா
//வீண்பேச்சும், நன்மையறியாதவனும் தரும நெறி ஒழுகாதவனுமாகிய என்னைக் கூட கருணை தந்து காத்தாயே! //

இதுதான் என் போன்றவர்களுக்கு ஒரே நம்பிக்கை.

''பேற்றைத்தவம் சற்றுமில்லாத என்னை ப்ரபஞ்சமென்னுஞ்
சேற்றைக் கழிய வழிவிட்டவா''

என்று அலங்காரத்திலும் இதே பொருளையொத்த பாடலுண்டு.

said...

அருணையாரின் கதறலுக்கு அழகான ஒரு விளக்கம்.
ஆதாளி, தீதாளி, கூதாள மலர், கிராதன், வேதாள என்று பல சொற்களுக்கும் அருமையான விளக்கம்.

நன்றி.

said...

மிக அருமை ராகவன்......

said...

நல்ல தமிழ்சொற்களை அறிமுகம் செய்த பாடல்.நல்ல விளக்கங்கள்.

said...

அருமையான பதிவு ராகவன்
அமலனாதிபிரான் பாசுரம் ஒன்று நினைவிற்குவருகிறது. பாணர் எனும் தன்பக்தனை தீண்டத்தகாத ஜாதி என்று கோவில் அர்ச்சகர் வெறுத்து ஒதுக்கவும் அரங்கன் அவரை தோளில் ஏற்றி தன் சந்நிதிக்கு அழைத்துவரும்படி வெறுத்த மனிதருக்கு உத்தரவிட்டார். பாணர் மிகவும் தயங்கிப்பின் இறைவன் ஆணை என்றதும் அவர்தம் தோளில் அமர்கிறார். கண் பனிக்கிறது நா தழுதழுக்கிறது.'இறைவா! நான் மாதவம் செய்தேன் இல்லை என்னை உன் அன்பால் ஆட்கொண்டாயே' எனக்கதறுகிறார்
'பாரமாகியப் பழவினை பற்றறுத்து என்னைத்தன்
வாரமாக்கிவைத்தான்வைத்ததன்றியென்னுள் புகுந்தான்
கோரமாதவம்செய்தனன்கொலறியேனரங்கத்தமான்திரு
ஆரமார்பதன்றோ அடியேனை ஆட்கொண்டதே'

said...

ஜிரா
உங்கள் அநூபூதி பதிவு, வழமை போல் அருமை!
//கூதாளம் பூ// - எருக்கம்பூ ??
//வேதாள கணம் புகழ் வேலவனே// - சிவகணங்கள் ஏத்தும் சிவ சொரூபனாகவே முருகனை இங்கு நமக்கு உணர்த்தி விட்டார், அருணகிரி!
மிகவும் அருமை!

//"துஷ்ட நிக்ரஹ! சிஷ்ட பரிபாலன!" என்கிறது வடமொழி. ஆனால் தமிழ் இந்த வாதத்தை எந்தக் காலத்திலும் ஒப்புக் கொள்ளவில்லை//

சற்றே மாறுபடுகிறேன்!
தமிழாகட்டும் , வடமொழியும் ஆகட்டும்;
இரண்டிலுமே இறைவன் "வேண்டுதல் வேண்டாமை இலான்' தான்;
"நிர்குண" ரூபன், 'சர்வ அந்தராத்மன்' என்று தான் அவனை அங்கும் சிறப்பிக்கிறார்கள்!
அசுரர்க்கு அருளி, தேவர்களை ஒறுத்த கதைகளும் உண்டு!

'சூரன் உடல் அற, வாரி சுவரிட வேலை விட வல' முருகப்பெருமான், பின்னர் சூரனை மயில் சேவலாக்கினான். இன்றும் முருகனுடன் சேர்த்து அவற்றையும் நாம் வணங்குகிறோம். அதே போல்,
இராவணன் சாபம் மாய்த்து, அவனுக்கு மீண்டும் திருநாடு தந்து, ஜய விஜயனாய், துவார பாலகனாய், மீண்டும் ஆக்கித் தன் அண்மையில் வைத்துக் கொள்ளவில்லையா! இன்றும் பக்தர்கள் துவாரபாலகரையும் சேர்த்து தான் வணங்குகிறார்கள்! மாபலிக்கும் அவன் அகந்தை அழித்து, தனியிடம் தந்து சிறப்பித்தவனும் அவனே!

நிக்ரஹ என்றால் அழித்தல் என்று பொருள், என்றே இன்னும் பலர் நினைக்கிறார்கள். அல்ல!
நி+க்ரஹ=இடம் இல்லாது; சுவடு இல்லாது, தங்க விடாது.
இதன் எதிர்ச்சொல் அனுக்ரஹம்; இடம் கொடுத்து, அருள் கொடுத்து என்று பொருள்.

இந்திரிய நிக்ரஹம் என்பார்கள்; இந்திரியங்களை அழித்து விடு என்று சொல்லவில்லை. இந்திரியங்களை அதன் போக்குக்கு இடம் கொடுக்காமல்,
அடக்கி ஆளல் என்பதே பொருள்!

ஆக "துஷ்ட நிக்ரஹ! சிஷ்ட பரிபாலன" என்பது அதர்மத்தை அடக்கி, அதை தர்மத்தின் பாதையில் திருப்பி, செழிக்கச் செய்வது என்பதேயாகும்.
'விநாசாயச //துஷ்கிருதாம்//' என்று தான் கீதையும் சொல்கிறதே அன்றி 'விநாசாயச //துஷ்டானாம்//' என்று சொல்லவில்லை!

ஆக இறைவனின் இந்த அபார கருணையுள்ளம் மொழிகளுக்கும் அப்பாற்பட்டது!
"முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழ வைப்பான்" நம் முருகன்!
அதே போல், "அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை, சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே" என்று சிறுசொல் சொன்னாலும், சீறி "அருளுவதாகவே" ஆண்டாளும் குறிப்பிடுகிறாள்!

ஆகவே, மொழி கடந்து, இரண்டிலுமே இறைவன் அபார கருணா மூர்த்தி! தீயன திருத்தி, நல்லன விருத்தி! இதுவே அவன் கருணை உள்ளம்! இவ்வாறு கொள்வது தான் சாலவும் ஏற்புடைத்தாக இருக்கும் என்பது அடியேன் சிந்தனை.

said...

''வீண்பெருமை பேசுகின்றவர்களுக்கு என்ன பெயர்?//

ராகவன் அய்யா,

திராவிட தமிழர்கள் என்று பெயர். எப்படியும் ஒரு ஐம்பது /அறுபது பேர் இருப்பாங்கன்னு நினக்கிறேன்.

பாலா

said...

அருமையான விளக்கம் சொல்லிவிட்டீர்கள் இராகவன். மிக்க மகிழ்ச்சி. உங்கள் விளக்கத்துடன் பாடலைப் படிக்கும் போது நன்கு விளங்குகிறது.

வடமொழி எப்படி இறைவனின் பண்பைக் கூறுகிறது என்ற உங்கள் கருத்தைப் படித்ததும் கொஞ்சம் நெருடியது. பின்னர் 'சரி. இராகவன் எப்பவுமே இப்படித் தானே. வடமொழி தனக்குத் தெரியாது என்பார். அதே நேரத்தில் வடமொழி இப்படித் தான் சொல்கிறது என்று அடித்துச் சொல்லுவார். மீண்டும் ஏன் அதே சுழல் வாதத்தில் போக வேண்டும்' என்று ஒன்றும் சொல்லாமல் விட்டுவிட எண்ணினேன். ஆனால் இரவிசங்கர் வந்து விளக்கமான நன்கு சொல்லியிருக்கிறார். நன்றிகள் மற்றும் பாராட்டுகள் இரவிசங்கர். :-)

said...

// 10 Comments -Show Original Post
Collapse comments

ENNAR said...
//"துஷ்ட நிக்ரஹ! சிஷ்ட பரிபாலன!" என்று இறைவனின் பண்பைக் கூறுவார்கள். அதாவது தீயவர்களை அழித்து நல்லவர்களைக் காப்பது //
நடைமுறையில் அவ்வாறு உள்ளதா பாருங்கள். இல்லையே ஏன்? //

துஷ்ட நிக்ரஹத்தை விடுங்கள். சிஷ்ட பரிபாலனாமவது சரியாக நடக்கிறதா என்று கேட்டுப்பாருங்கள். எல்லாரிடமும் இல்லை என்றுதான் விடை வரும். நீங்கள் சொல்வதும் ஒருவிதத்தில் உண்மைதான்.

சரி. மேலே ரவி துஷ்ட நிக்ரஹத்திற்கு விளக்கம் குடுத்திருக்கிறார் படித்தீர்களா?

said...

// ஞானவெட்டியான் said...
அன்பு இராகவா,

அருணாசலக் கவிராயர் தன் இராம நாடகக் கீர்த்தனைகளில் தாடகை வதத்தைக் கீழ்க் கண்டவாறு சித்தரிக்கிறார்.

எட்டுத் திசையிலும் ஒடி முட்டுமே இவள் ஆதாளி
முட்டினால் மலையும் பிளந்திடுமே து ளி து ளி
எட்டியும் பார்க்கக் கூடுமோ கிட்டி ஒருகாளிகூளி
விட்டுநான் சொல்ல வேணுமா மட்டில்லாப் பாவசண்டாளி"

ஈண்டு, ஆதாளி எனும் சொல்லைப் பேரிரைச்சலுடன் தம்பட்டம்(தன்+பட்டம்) அடித்து அட்டகாசம் செய்தவள் என்னும் பொருளில் கையாண்டுள்ளார்.

ம்..ம்..ம்..
இன்னும் வழக்கொழிந்த சொற்கள் எத்தனையோ? //

ஞானவெட்டியான் ஐயா......வழக்கொழிந்த சொற்களோடு இப்படி வழக்கொழிந்த பாடல்கள் எத்துணை உளவோ! ம்ம்ம்ம்ம்....உலகப் பாலையெல்லாம் நக்கிக் குடிக்கப் பூனையால் முடியாது என்பதும் நினைவிற்கு வருகிறது.

அருமையானதொரு பாடலை எடுத்துக் கொடுத்திருக்கின்றீர்கள்.

ஆதாளி-தம்பட்டம்-வீண்பெருமை....

said...

// இராமநாதன் said...
அருமையான விளக்கம் ஜிரா
//வீண்பேச்சும், நன்மையறியாதவனும் தரும நெறி ஒழுகாதவனுமாகிய என்னைக் கூட கருணை தந்து காத்தாயே! //

இதுதான் என் போன்றவர்களுக்கு ஒரே நம்பிக்கை. //

எனக்கும் அதுதாங்க நம்பிக்கை. எல்லாருக்கும் அதுதான் நம்பிக்கை.

// ''பேற்றைத்தவம் சற்றுமில்லாத என்னை ப்ரபஞ்சமென்னுஞ்
சேற்றைக் கழிய வழிவிட்டவா''

என்று அலங்காரத்திலும் இதே பொருளையொத்த பாடலுண்டு. //

முதல் பாடலே அதுதானே இராமநாதன். மிகவும் அழகான பாடல். குமரனின் பின்னூட்ட விதிப்படி நீங்கள் எழுதிய வரிகளுக்குப் பொருள் சொல்ல வேண்டுமே!!!!! ;-)

said...

// SK said...
அருணையாரின் கதறலுக்கு அழகான ஒரு விளக்கம்.
ஆதாளி, தீதாளி, கூதாள மலர், கிராதன், வேதாள என்று பல சொற்களுக்கும் அருமையான விளக்கம்.

நன்றி. //

நன்றி எஸ்.கே

// மெளல்ஸ், பெங்களூர் said...
மிக அருமை ராகவன்...... //

நன்றி மௌல்ஸ்

// மணியன் said...
நல்ல தமிழ்சொற்களை அறிமுகம் செய்த பாடல்.நல்ல விளக்கங்கள். //

நன்றி மணியன்

said...

// ஷைலஜா said...
அருமையான பதிவு ராகவன்
அமலனாதிபிரான் பாசுரம் ஒன்று நினைவிற்குவருகிறது. பாணர் எனும் தன்பக்தனை தீண்டத்தகாத ஜாதி என்று கோவில் அர்ச்சகர் வெறுத்து ஒதுக்கவும் அரங்கன் அவரை தோளில் ஏற்றி தன் சந்நிதிக்கு அழைத்துவரும்படி வெறுத்த மனிதருக்கு உத்தரவிட்டார். பாணர் மிகவும் தயங்கிப்பின் இறைவன் ஆணை என்றதும் அவர்தம் தோளில் அமர்கிறார். கண் பனிக்கிறது நா தழுதழுக்கிறது.'இறைவா! நான் மாதவம் செய்தேன் இல்லை என்னை உன் அன்பால் ஆட்கொண்டாயே' எனக்கதறுகிறார்
'பாரமாகியப் பழவினை பற்றறுத்து என்னைத்தன்
வாரமாக்கிவைத்தான்வைத்ததன்றியென்னுள் புகுந்தான்
கோரமாதவம்செய்தனன்கொலறியேனரங்கத்தமான்திரு
ஆரமார்பதன்றோ அடியேனை ஆட்கொண்டதே' //

என்னைச் சொல்லி விட்டு நீங்களும் ஒரு சிறப்பான பாடலும் தகவலும் தந்திருக்கிறீர்கள் ஷைலஜா :-)

உண்மைதான். அன்பு ஒன்றே உய்யும் வழி. ஆண்டன் அருளைக் கொய்யும் வழி. நன்மைகள் மழையாய்ப் பெய்யும் வழி. அன்பகத்தில்லா உயிர் வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த்தற்று. சரிதானே?

said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஜிரா
உங்கள் அநூபூதி பதிவு, வழமை போல் அருமை!
//கூதாளம் பூ// - எருக்கம்பூ ?? //

தெரியவில்லையே ரவி. இருக்க வாய்ப்புண்டு.

// //வேதாள கணம் புகழ் வேலவனே// - சிவகணங்கள் ஏத்தும் சிவ சொரூபனாகவே முருகனை இங்கு நமக்கு உணர்த்தி விட்டார், அருணகிரி!
மிகவும் அருமை! //

உண்மைதான் ரவி. முருகனையும் சிவனையும் வேறுபடுத்திப் பார்ப்பதேயில்லை என்பதும் சைவ வழக்குதான். அம்மையும் அப்பனும் சேர்ந்ததே கந்தன் என்று சொல்லும் அழகும் உண்டே.

// //"துஷ்ட நிக்ரஹ! சிஷ்ட பரிபாலன!" என்கிறது வடமொழி. ஆனால் தமிழ் இந்த வாதத்தை எந்தக் காலத்திலும் ஒப்புக் கொள்ளவில்லை//

சற்றே மாறுபடுகிறேன்!
தமிழாகட்டும் , வடமொழியும் ஆகட்டும்;
இரண்டிலுமே இறைவன் "வேண்டுதல் வேண்டாமை இலான்' தான்;
"நிர்குண" ரூபன், 'சர்வ அந்தராத்மன்' என்று தான் அவனை அங்கும் சிறப்பிக்கிறார்கள்!
அசுரர்க்கு அருளி, தேவர்களை ஒறுத்த கதைகளும் உண்டு!

'சூரன் உடல் அற, வாரி சுவரிட வேலை விட வல' முருகப்பெருமான், பின்னர் சூரனை மயில் சேவலாக்கினான். இன்றும் முருகனுடன் சேர்த்து அவற்றையும் நாம் வணங்குகிறோம். அதே போல்,
இராவணன் சாபம் மாய்த்து, அவனுக்கு மீண்டும் திருநாடு தந்து, ஜய விஜயனாய், துவார பாலகனாய், மீண்டும் ஆக்கித் தன் அண்மையில் வைத்துக் கொள்ளவில்லையா! இன்றும் பக்தர்கள் துவாரபாலகரையும் சேர்த்து தான் வணங்குகிறார்கள்! மாபலிக்கும் அவன் அகந்தை அழித்து, தனியிடம் தந்து சிறப்பித்தவனும் அவனே!

நிக்ரஹ என்றால் அழித்தல் என்று பொருள், என்றே இன்னும் பலர் நினைக்கிறார்கள். அல்ல!
நி+க்ரஹ=இடம் இல்லாது; சுவடு இல்லாது, தங்க விடாது.
இதன் எதிர்ச்சொல் அனுக்ரஹம்; இடம் கொடுத்து, அருள் கொடுத்து என்று பொருள்.

இந்திரிய நிக்ரஹம் என்பார்கள்; இந்திரியங்களை அழித்து விடு என்று சொல்லவில்லை. இந்திரியங்களை அதன் போக்குக்கு இடம் கொடுக்காமல்,
அடக்கி ஆளல் என்பதே பொருள்!

ஆக "துஷ்ட நிக்ரஹ! சிஷ்ட பரிபாலன" என்பது அதர்மத்தை அடக்கி, அதை தர்மத்தின் பாதையில் திருப்பி, செழிக்கச் செய்வது என்பதேயாகும்.
'விநாசாயச //துஷ்கிருதாம்//' என்று தான் கீதையும் சொல்கிறதே அன்றி 'விநாசாயச //துஷ்டானாம்//' என்று சொல்லவில்லை!

ஆக இறைவனின் இந்த அபார கருணையுள்ளம் மொழிகளுக்கும் அப்பாற்பட்டது!
"முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழ வைப்பான்" நம் முருகன்!
அதே போல், "அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை, சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே" என்று சிறுசொல் சொன்னாலும், சீறி "அருளுவதாகவே" ஆண்டாளும் குறிப்பிடுகிறாள்!

ஆகவே, மொழி கடந்து, இரண்டிலுமே இறைவன் அபார கருணா மூர்த்தி! தீயன திருத்தி, நல்லன விருத்தி! இதுவே அவன் கருணை உள்ளம்! இவ்வாறு கொள்வது தான் சாலவும் ஏற்புடைத்தாக இருக்கும் என்பது அடியேன் சிந்தனை. //

மிகவும் அருமையான விளக்கம் ரவி. கற்றது கைமண்ணளவுதானே. நல்லதொரு விளக்கம் தந்து புதுத் தகவலையும் சொல்லியிருக்கின்றீர்கள். மிக்க நன்றி. ராகவன் சொல்வதில் தவறு இருந்தால் அதை எடுத்துச் சொல்லலாம் என்ற உரிமைக்கும்...நான் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டேன் என்ற நம்பிக்கைக்கும் மிக்க நன்றி.

said...

// bala said...
''வீண்பெருமை பேசுகின்றவர்களுக்கு என்ன பெயர்?//

ராகவன் அய்யா, //

ஐயாவா! ஐயோ! பாலா!!!!!!!!!! சரி இருக்கட்டும். இது ஒரு மாதிரி நல்லாத்தான் இருக்குது. :-)

// திராவிட தமிழர்கள் என்று பெயர். எப்படியும் ஒரு ஐம்பது /அறுபது பேர் இருப்பாங்கன்னு நினக்கிறேன்.

பாலா //

பாலா, முடிந்த வரையில் பதிவிற்குத் தொடர்புடையவைகளையே பேசலாமே.

said...

// குமரன் (Kumaran) said...
அருமையான விளக்கம் சொல்லிவிட்டீர்கள் இராகவன். மிக்க மகிழ்ச்சி. உங்கள் விளக்கத்துடன் பாடலைப் படிக்கும் போது நன்கு விளங்குகிறது. //

நன்றி குமரன்.

// வடமொழி எப்படி இறைவனின் பண்பைக் கூறுகிறது என்ற உங்கள் கருத்தைப் படித்ததும் கொஞ்சம் நெருடியது. பின்னர் 'சரி. இராகவன் எப்பவுமே இப்படித் தானே. வடமொழி தனக்குத் தெரியாது என்பார். அதே நேரத்தில் வடமொழி இப்படித் தான் சொல்கிறது என்று அடித்துச் சொல்லுவார். மீண்டும் ஏன் அதே சுழல் வாதத்தில் போக வேண்டும்' என்று ஒன்றும் சொல்லாமல் விட்டுவிட எண்ணினேன். ஆனால் இரவிசங்கர் வந்து விளக்கமான நன்கு சொல்லியிருக்கிறார். நன்றிகள் மற்றும் பாராட்டுகள் இரவிசங்கர். :-) //

குமரன். உங்கள் மனம் புண்பட்டிருப்பது உங்கள் எழுத்தில் தெரிகிறது. அதற்காக என்னுடைய மன்னிப்பைக் கோருகிறேன். கந்தனைப் பற்றிச் சொல்லும் பதிவில் ஒருவர் மனம் புண்பட நான் காரணமானது எனக்கு மிகுந்த வருத்தமாக இருக்கிறது. என்னுடைய தவறுக்கு மன்னியுங்கள். இனிமேல் அப்படி எதுவும் செய்யாமல் இருக்க முருகன் எனக்கு நல்லறிவைக் கொடுக்கட்டும்.

said...

//ரவி..மிக்க நன்றி. ராகவன் சொல்வதில் தவறு இருந்தால் அதை எடுத்துச் சொல்லலாம் என்ற உரிமைக்கும்...நான் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டேன் என்ற நம்பிக்கைக்கும் மிக்க நன்றி.//

ஜிரா
1. //தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கை//
இது தான் எனக்குத் தெரியுமே - இதில் என்ன நம்பிக்கை வேண்டிக் கிடக்கு :-) - அநுபூதி அன்பர் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார் என்பது தான் உண்மை!

2. //அதை எடுத்துச் சொல்லலாம் என்ற உரிமைக்கும்//
ஹைய்யா, இது எனக்கு இப்போது தான் தெரியும்!
ஆக, நண்பன் ஜிரா மேல் இனி "உரிமை" எடுத்துக் கொள்ளலாம்;
பெங்களூர் வரும் போது எனக்கும் MTR-இல் டோக்கன் வாங்கி வையுங்கள் நண்பனே(ரே)! என்று உரிமையுடன் கேட்கிறேன் :-)) சேர்ந்து ஒரு வெட்டு வெட்டலாம். ராச்சாப்பாட்டுக்கு இருக்கவே இருக்கி ஹள்ளி மனே! இன்னா சொல்றீங்க! சரி தானே!!

said...

//பாலா, முடிந்த வரையில் பதிவிற்குத் தொடர்புடையவைகளையே பேசலாமே//

ராகவன் ஐயா,

மன்னிச்சுடுங்க ஐயா.
நீங்க ஏதோ கேள்வி கேட்டீங்கன்னு எனக்கு தெரிந்த பதிலை சொன்னேங்கய்யா.

அப்புறம் பாத்தா நீங்க இறைவன் பண்பைப் பத்தி விளக்கம் கொடுக்கிறீங்கன்னு புரிஞ்சுதங்கய்யா.

பாலா

said...

இறைவனுக்கு வேண்டப்பட்டவர்கள் வேண்டாதவர்கள் என்று யாரும் கிடையாது. //

ஆமாம் எல்லாரையும் ஒரே மாதிரிதான் பார்ப்பார்.

அதனாலதானே தீயவனும் வளமாக வாழ்கிறான்?

அனால் அவனைப்பார்த்து.. ச்சை.. நாம மட்டும் நல்லவனா இருந்து என்னத்த சாதிச்சோம் சில சமயங்கள்ல நல்லவங்களும் வழிதவறிப் போயிடறாங்க?

said...

அன்பு கண்ணபிரான்,இராகவன்,

////கூதாளம் பூ// - எருக்கம்பூ ?? //

கூதளம் எனில் தூதுவளை, வெள்ளரியாம். எருக்கு அல்ல.

said...

// 2. //அதை எடுத்துச் சொல்லலாம் என்ற உரிமைக்கும்//
ஹைய்யா, இது எனக்கு இப்போது தான் தெரியும்!
ஆக, நண்பன் ஜிரா மேல் இனி "உரிமை" எடுத்துக் கொள்ளலாம்;
பெங்களூர் வரும் போது எனக்கும் MTR-இல் டோக்கன் வாங்கி வையுங்கள் நண்பனே(ரே)! என்று உரிமையுடன் கேட்கிறேன் :-)) சேர்ந்து ஒரு வெட்டு வெட்டலாம். ராச்சாப்பாட்டுக்கு இருக்கவே இருக்கி ஹள்ளி மனே! இன்னா சொல்றீங்க! சரி தானே!! //

:-)))))))))) கண்டிப்பா. பெங்களூருக்கு வாங்க. MTR கூட்டீட்டுப் போறேன். நீங்க சைவம்னா அது போதும். அசைவம்னா இன்னும் நெறைய இடங்கள் இருக்கு.

said...

// tbr.joseph said...
இறைவனுக்கு வேண்டப்பட்டவர்கள் வேண்டாதவர்கள் என்று யாரும் கிடையாது. //

ஆமாம் எல்லாரையும் ஒரே மாதிரிதான் பார்ப்பார்.

அதனாலதானே தீயவனும் வளமாக வாழ்கிறான்?

அனால் அவனைப்பார்த்து.. ச்சை.. நாம மட்டும் நல்லவனா இருந்து என்னத்த சாதிச்சோம் சில சமயங்கள்ல நல்லவங்களும் வழிதவறிப் போயிடறாங்க? //

ஜோசர் சார்........நானறிந்த வரையில் இறைவன் எல்லாருக்கும் எல்லாமும் கொடுத்து விடுவதில்லை. இங்கு கூடினால் அங்கு குறைக்கிறான். அங்கு கூடினால் இங்கு குறைக்கிறான். ஆகையால்தான் வள்ளுவரும் "ஈன்றாள் பசிகாண்பாள் எனினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை"ன்னு சொல்லியிருக்காரு.

said...

// ஞானவெட்டியான் said...
அன்பு கண்ணபிரான்,இராகவன்,

////கூதாளம் பூ// - எருக்கம்பூ ?? //

கூதளம் எனில் தூதுவளை, வெள்ளரியாம். எருக்கு அல்ல. //

புரிகிறது ஞானவெட்டியான் ஐயா. தூதுவளைப் பூவிலும் இலையிலும் முள்ளுண்டு. ஆகையால் பறிப்பது கடினம். ஆயினும் ஏற்பது முருகன் பெருமை போலும்.