Monday, January 02, 2006

பாவை - பதினெட்டு

உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண்
பந்து ஆர் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்


(இத்தனை பேரிடம் சொல்லியும் யாரும் கண்ணனை எழுப்பவில்லையே. சரி. நப்பின்னையிடம் சொல்லிப் பார்க்கலாம் என்று முனைகிறார் கோதையார். நப்பின்னை கண்ணனின் மனைவி. காளையை அடங்கிக் கைப்பிடித்த கன்னிகை. நப்பின்னையைப் பற்றித் தமிழ் நூல்கள் நிறையவே சொல்கின்றன. ஆனால் இன்றைய வைணவத்தில் நப்பின்னையைக் காணவில்லை என்பது வியப்பே. விவரம் தெரிந்த வைணவர்கள் விளக்கலாம்.)

கண்ணன் காதலியே நப்பின்னை! நீ யார் தெரியுமா? உனது புகுந்த வீட்டுப் புகழ் தெரியுமா? மதங் கொண்டு நிலை மறந்து ஓடிவரும் ஆனையைக் கண்ட விடத்தும் ஓடாது நின்று வென்றே திரும்பும் தோள்வலியை உடைய நந்தகோபன் உனது மாமன். அப்பேர்ப்பட்ட பேராயனின் மருமகளே! நறுமணம் கமழும் அழகுமிகும் நீண்ட கருங்கூந்தலைக் கொண்டவளே! உன் மாமியிடம் சொன்னோம். உன் மைத்துனரிடம் சொன்னோம். அவர்கள் வந்து உனது படுக்கையறையைத் தட்டித் திறந்து தொந்தரவு செய்யத் தயங்குகின்றார்கள். ஆகையால் உன்னைக் கேட்கின்றோம். நீயாவது வந்து கதவைத் திறப்பாயா!

பள்ளியறையை விட்டு வெளியே வந்து பார்! கோழியினங்கள் கூவிப் பொழுது விடிந்து பலகாலமாயிற்று. அந்தக் கோழிக் கூட்டங்கள் தத்தமது குஞ்சுகளோடு கூடிக் கொத்தித் தின்ன இரை மேய்கின்றன. மாதவிக் கொடி என்று அழைக்கப்படும் குருக்கத்திக் கொடிகளில் அமர்ந்து குயிலினங்கள் இன்னிசை கூவுகின்றன. அதையும் வந்து பார்!

இப்படியெல்லாம் உலகம் மகிழ்வுற்று தனது இயக்கத்தைத் துவங்கிய வேளையில் நீ மட்டும் கண்ணைப் பள்ளியறையிலேயே தள்ளி வைக்கலாமா? கைவிரல்களில் பந்தினைப் பற்றிக் கொண்டு விளையாடும் சிறுமியர்தான் நாங்கள். மறுக்கவில்லை. நாங்கள் கூட கோபாலன் மீது அன்பு கொண்டு பாட்டுப் பாடி மகிழ்ந்திட விரும்புகிறோம். நீ விரைந்து வந்து உனது செந்தாமரைக் கையில் அணிந்துள்ள வளையல்கள் அசைந்து இசைந்து ஒலியெழுப்பும் வண்ணம் கதவினைத் திறவாய் எம்பாவாய்!

அன்புடன்,
கோ.இராகவன்

11 comments:

said...

ஓடாத தோள்வலியனுக்கும், பந்தார் விரலிக்கும் புதுமையான விளக்கம். நன்றாய் இருந்தன.

said...

அது என்ன பல் கால் குயிலினங்கள் கொஞ்சம் விளக்கமுடியுமா?

said...

// ஓடாத தோள்வலியனுக்கும், பந்தார் விரலிக்கும் புதுமையான விளக்கம். நன்றாய் இருந்தன. //

நன்றி குமரன். இவற்றிற்கு நீங்கள் எதிர் பார்த்த விளக்கங்கள் என்ன?

said...

// அது என்ன பல் கால் குயிலினங்கள் கொஞ்சம் விளக்கமுடியுமா? //

ஐயா கால் என்ற சொல்லுக்குப் பல பொருள் உண்டு. இந்த இடத்தில் அழகு அல்லது வனப்பு என்று கொள்ள வேண்டும்.

பல் கால் குயிலினங்கள் = பல அழகுமிகும் குயிலினங்கள்.

said...

இராகவன்,

ஓடாத தோள் வலியன் என்பதற்கு எங்கும் எந்த நேரத்திலும் தவறாத வீரத்தை உடையவன் என்ற பொருள் கொள்வேன். பந்தார் விரலிக்கு நீங்கள் கொண்ட பொருள் தான்; ஆனால் அது ஆண்டாளையும் தோழியரையும் குறிப்பதாய்க் கொள்ளாமல் இங்கு அழைக்கப்படும் நப்பின்னையைக் குறிப்பதாய்க் கொள்வேன்.

பல் கால் என்பதற்கு பல முறை என்று பொருள் கொள்வேன்.

said...

//ஆனால் இன்றைய வைணவத்தில் நப்பின்னையைக் காணவில்லை என்பது வியப்பே. விவரம் தெரிந்த வைணவர்கள் விளக்கலாம்.//

விரைவில் என் பதிவில் மூ.ராகவ ஐயங்கார், சுஜாதா எழுதியவற்றை உள்ளிட முயற்ச்சிக்கிறேன்.

said...

ராமானுஜருக்கு பிடித்த திருப்பாவை ராமானுஜருக்கு திருப்பாவையில் ஈடுபாடு மிக அதிகம். அதனால் அவர் திருப்பாவை ஜீயர் என்ற பெயர் பெற்றார். இந்த பெயரையே அவர் விரும்பினார். “உந்துமத களிற்றன்” என்ற திருப்பாவை பாடிக்கொண்டு பிக்ஷைக்கு ஒரு நாள் பெரிய நம்பி திருமாளிகைக்கு (வீட்டிற்கு) சென்ற போது “செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்துதிறவாய்” என்று பாடி முடிக்க, நம்பியின் மகள் அத்துழாய் கைவளை குலுங்கக் கதவை திறப்பதும் ஒரோ சமயம் நிகழ, ராமானுஜர் அவளை நப்பின்னை என்று நினைத்து ஸாஷ்டாங்கமாக விழுந்து தண்டம் சமர்ப்பித்தார் (சேவித்தார்) என்று கூறுவர். இதனால் இந்த பாட்டை கோயில்களில் இன்றும் இரண்டு முறை பாடுவது வழக்கம்.

said...

//விரைவில் என் பதிவில் மூ.ராகவ ஐயங்கார், சுஜாதா எழுதியவற்றை உள்ளிட முயற்ச்சிக்கிறேன்.
//

தேசிகன். சீக்கிரம் போடுங்கள். காத்திருக்கிறோம். திருப்பாவை ஜீயரைப் பற்றிப் பின்னூட்டம் போட்டதற்கு மிக்க நன்றி.

said...

// விரைவில் என் பதிவில் மூ.ராகவ ஐயங்கார், சுஜாதா எழுதியவற்றை உள்ளிட முயற்ச்சிக்கிறேன். //

ஆகா! காத்திருக்கின்றே தேசிகன். கேட்டது கிடைக்கின்றதே! மிக்க நன்றி.

said...

// ராமானுஜர் அவளை நப்பின்னை என்று நினைத்து ஸாஷ்டாங்கமாக விழுந்து தண்டம் சமர்ப்பித்தார் (சேவித்தார்) என்று கூறுவர். இதனால் இந்த பாட்டை கோயில்களில் இன்றும் இரண்டு முறை பாடுவது வழக்கம். //

அற்புதமான தகவல் தேசிகன். உள்ளத்தின் ஆழத்திலிருந்து உணர்ச்சியோடு வந்திருந்தாலன்றி அப்படி ஒரு நிகழ்வு நேர்ந்திராது. இந்த நல்ல தகவலை இங்கு பரிமாறிக் கொண்டதிற்கு நன்றி.

said...

கானல் காடு நிகழ்வில் பேராசிரியர் தொ.பரமசிவம் இப்பாடல் கூறி,ராமானுஜர் குறித்தும் சொல்ல இயற்கை சூழலில் இயைந்து இன்பத்தமிழில் மகிழ்ந்து கிடந்ததை நினைவு கூறச் செய்தீர்கள் இராகவன் நன்றி

திசைகளில் இந்த உர்ல்
http://www.thisaigal.com/july05/ThedalUNI.html