Friday, January 13, 2006

பாவை - முப்பது

வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி
அங்கப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்


பாற்கடலைக் கடையக் காரணமாகித் திருமகளை அடைந்த மாதவா! கேசவா! வைகுந்தா! வாசுதேவா! பரந்தாமா! முழுநிலவினைப் போன்ற ஒளி வீசும் திருமுகம் கொண்ட ஆயர் குலப் பெண்களாய் நாங்கள் கூடி உன்னைத் தேடிப் புகழ்ந்து வந்தோம்!

(வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி
கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே - என்கிறார் இளங்கோவடிகள். மேருமை மத்தாக்கி வாசுகிப் பாம்பை நாணாக்கிக் கடையும் பொழுது கடலில் ஆழ்ந்தது மலை. அப்பொழுது ஆமையாய் வந்து தாங்கினாராம் வைகுந்தவாசன்.
)

இறையருட் பறை கொண்ட வகையான அழகுமிகும் திருவில்லிபுத்தூரின் பெரியாழ்வாரின் செல்வப் புதவியான கோதை நாச்சியார் உண்மையான உளத்தோடு இறைவனை நாடிப் பாடியது இந்தத் திருப்பாவை. எப்பொழுதும் மலர்ந்திருக்கும் குளிர்ச்சி பொருந்திய தாமரை மலர்களைக் கோர்த்துக் கட்டியது போன்ற அற்புதமானவை இந்தச் சங்கத் தமிழ் மாலையிலுள்ள முப்பது பாக்கள்.

(பை என்றால் எப்பொழுதும் மலர்ச்சியுடன் இருக்கும் என்று பொருள். பைங்கமலம் என்றால் விளங்கக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் பைந்தமிழ் என்றதுமே பை என்ற சொல்லின் பொருள் விளங்கி விடுகின்றது அல்லவா.)

ஆண்டாளின் திருப்பாவையின் முப்பது பாக்களையும் உளமும் உருகிப் பாடுவார்களுக்கு கண்ணன் அருள் உறுதியாக உண்டு. மலையளவு உயர்ந்த இரண்டு தோள்களை உடையவரும் செம்மை பொருந்திய திருவிழிகள் திகழும் முகத்தை உடையவரும் அலைமகளை அணைமகளாகக் கொண்டவருமாகிய திருமாலின் திருவருளால் எங்கும் எப்பொழுதும் திருவருள் பெற்று இன்புறுவாய் எம்பாவாய்!

(திருப்பாவையின் முப்பது பாடல்களும் முடிந்தன. இந்தப் பாடல்களை உணர்வு கூடிப் பாடிப் பரவசமடைகின்றவர்களுக்கு மாலின் அருள் நிச்சயம் உண்டு என்று உறுதி செய்து, எல்லாரையும் பாவை நோன்பு என்னும் புனித வேள்வியில் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறார் ஆண்டாள்.)

அன்புடன்,
கோ.இராகவன்

2 comments:

said...

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்....

பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக.

said...

// எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்....

பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக. //

மிக்க நன்று. எங்கும் இன்பம் நிறைந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!