Sunday, January 01, 2006

பாவை - பதினேழு

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊட அறுத்து ஓங்கி உலகு அளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்


(மார்கழி மாதத்து நோன்பு சிறப்பாகவே துவங்கி விட்டது. பேசி வைத்தபடி தோழியர் எல்லாரும் எழுந்து நோன்பில் கலந்தனர். அப்படியே மன்னாரின் திருக்கோயிலுக்கு வந்தால் கதவு மூடியிருக்கிறது. வாயிற்காப்பானிடம் கெஞ்சிக் கூத்தாடி அதையும் திறந்தாகி விட்டது. உள்ளே கண்ணன் உறங்குகின்றான். அவனுக்குத்தான் இப்பொழுது திருப்பள்ளியெழுச்சி பாட வேண்டும்.)

உணவு (சோறே), உடை (அம்பரமே), தண்ணீர் ஆகியனவும் அவைகளுக்கு மேலானவும் தந்து அறம் செய்து இவ்வுலக மக்களை எப்பொழுதும் காக்கும் எம்பெருமானே! நந்தகோபாலே! உறங்கியது போதும். எழுந்திடுவாய்!

(இந்த உலகத்தில் எல்லாம் ஆண்டவன் தந்தது. அந்த நன்றி மறவாமை வேண்டும். உணவு, உடை, உறைவிடம், உயிர் என்று எத்தனை பெரிய பட்டியல் இட்டாலும் அது இறையவன் செய்த அறமே. இது போன்ற உயிர்த்தேவைகள் மட்டுமல்ல, அறிவும் கூட ஆண்டவன் தந்ததென்று அநுபூதியில் அருணகிரியும் சொல்லியிருக்கின்றார். "யாமோதிய கல்வியும் எம்மறிவும் தாமே பெற வேலவர் தந்ததினால்".)

நந்தகோபாலனைப் பெற்றவளே! ஆயர் குலப் பெண்களுக்கெல்லாம் தலைவியாகிய அறிவுக் கொழுந்தே! குலவிளக்கே! எம்பெருமாட்டியே! யசோதையே! நீயாவது கொஞ்சம் அறிவுற்று எழுந்திருக்க மாட்டாயா! அப்படி எழுந்து உனது மைந்தன் கோவிந்தனையும் எழுப்புவாயாக!

வானத்தைக் கிழித்துக் கொண்டு ஓங்கி உயர்ந்து வளர்ந்து உலகை அளந்த தேவர் தலைவனே! உறங்கிக் கிடக்காமல் எழுந்திராய்!

(நாரணன் உலகளந்த பெருமையைப் பாடத கவிஞர் இல்லையென்றே தோன்றுகின்றது. சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவையில் இப்படிச் சொல்லியிருக்கின்றார் இளங்கோ.
மூவுலகும் ஈரடியான் முறை நிரம்பா வகை முடியத்
தாவிய சேவடி!

அதாவது மூன்று உலகங்களும் இரண்டு அடிகளுக்கே பத்தாத வகைக்குத் தாவிய சேவடியாம். )

செம்பொன்னாலான கழல்களைக் காலில் அணிந்த பலராமா, நீ உனது தம்பியோடு உறங்குவாயோ எம்பாவாய்!

(அன்னைக்கு அடுத்த பொறுப்பு அண்ணனுக்குத்தானே. ஆகையால்தான் யசோதையை முதலில் கேட்டவர்கள் அது நடக்காமல் அடுத்து பலராமனைக் கேட்கின்றார்கள்.)

அன்புடன்,
கோ.இராகவன்

4 comments:

said...

எல்லாம் ஒரு நோக்கத்தோடு தான் நடக்கிறது. தலைவன் பார்வை பெற வேண்டும் என்றால் முதலில் தலைவனிடம் செல்வாக்கு பெற்றவர் பார்வையைப் பெற்றால் அவர்கள் சிபாரிசில் காரியம் சுலபமாய் முடியும் இல்லையா? அதனால் தான் முதலில் தந்தையும் தாயையும் அண்ணனையும் எழுப்புகிறார். அவர்கள் சொன்னால் கண்ணன் கோதை கேட்பதைக் கொடுக்காமல் போய்விடுவானா?

அடுத்தப் பாட்டுல கண்ணன் மேல் இன்னும் அதிக செல்வாக்கு உள்ளவங்களை எழுப்புவாங்க பாருங்க. கோதை மனோதத்துவம் நல்லாத் தெரிஞ்சவங்க. :-)

said...

உண்மைதான் ராகவன் எல்லாமே அவன் தந்ததுதான் அதனால்தான் பெரியோர்கள் என்ன வேண்டுகிறார்கள் தெரியுமா
தினந்தோறும் தெழுகின்ற திருநாவைத் தாயேன்
மனமெல்லாம் மலர்கின்ற மலரடியைத் தாயேன்
எனதாக யான் ஓன்றும் இனிவேண்டேன் தாயே
உனதாக எனைக்கொள்ளும் வரம்வேண்டும் தாயே.

அன்பன் தி, ரா.ச

said...

// அடுத்தப் பாட்டுல கண்ணன் மேல் இன்னும் அதிக செல்வாக்கு உள்ளவங்களை எழுப்புவாங்க பாருங்க. கோதை மனோதத்துவம் நல்லாத் தெரிஞ்சவங்க. :-) //

ஆமாம். அதை அடுத்த பாட்டிலும் பாக்கலாம். அதையும் பதிச்சாச்சே.

said...

// தினந்தோறும் தெழுகின்ற திருநாவைத் தாயேன்
மனமெல்லாம் மலர்கின்ற மலரடியைத் தாயேன்
எனதாக யான் ஓன்றும் இனிவேண்டேன் தாயே
உனதாக எனைக்கொள்ளும் வரம்வேண்டும் தாயே. //

ஆகா அற்புதமான தொழுகை. என்ன ஒரு அன்பிருந்தால் இப்படி ஒரு தொழுகை தோன்றும்!