ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைத்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தம் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்
நெடுமாலே! நீ ஒருத்தி மகனாய்ச் சிறையில் பிறந்தாய். தேவகியானவள் சிறையில் உன்னை ஈன்றாள். ஆனால் அவளது அண்ணன் கஞ்சன் உன்னைக் கொல்ல எண்ணியிருந்தான். நீ தப்பிச் செல்ல தங்கள் மனம் ஒப்பி இன்னொருத்தி மகனாக வளர யசோதையின் மடியில் இட்டார்கள்.
கோகுலத்தில் ஒளிந்து வளர்ந்தாய். அதே நேரத்தில் ஒளிர்ந்தும் வளர்ந்தாய். தறிகெட்டுப் போய் உனக்குத் தீங்கு நினைத்த கஞ்சன் கருத்தில் பிழையென்று நிரூபிக்க அவன் வயிற்றில் நெருப்பாகப் பற்றி அவனை மாய்த்த பரந்தாமா!
(தனது பிள்ளையை இழப்பது பெருங்கொடுமை. அப்படி முழுவதும் இழப்பதைக் காட்டிலும் தாற்காலிகமாகவது இழக்கத் துணிந்தனர் தேவகியும் வசுதேவரும். இறையருளால் இரவொடு இரவாக நந்தகோபன் வீட்டில் விட்டு வந்தனர். தனது பிள்ளையின் ஒவ்வொரு வளர்ச்சியையும் காண முடியாது ஒவ்வொரு நொடியும் வருந்தினர். அதே நேரத்தில் கண்ணனைக் கண்ணாக வளர்த்தாள் யசோதை. அப்படி வளர்ந்த கண்ணைக் கொல்ல நினைத்தான் மாமனாம் கஞ்சன். வஞ்சம் நிறைந்தவனாய்க் கண்ணனை அழைத்தான். ஆனால் அந்த அழைப்பே அவனை முடித்து விட்டது.)
முகுந்தா! உன்னுடைய பெயர்களைச் சொல்லிச் சொல்லிப் புகழ்ந்து வந்தோம். எங்களுக்கு உன்னருள் கிட்டுமாயின் எங்கள் வருத்தமெல்லாம் நீர்ந்து தீர்ந்து போகும். துன்பம் நீங்கிய இன்பம் பெருகி உன்னுடைய திருமகளுக்குக்குச் சரியான பொருத்தத்தையும், எங்களுக்கு நீ செய்யும் அன்புச் சேவகத்தையும் பாடிப் பாடி மகிழக் காண்பாய் எம்பாவாய்!
(திருத்தக்க செல்வமும் சேவகமும் என்ற அடியைப் பொருள் கொள்ளும் பொழுது தடுமாறிப் போனேன் என்றால் மிகையாகாது. பெரியவர்கள் செய்து வைத்திருக்கும் அருமையான விளக்கங்களையும் எடுத்துப் பார்க்க மனம் ஒப்பவில்லை. சரி. நாமே பொருள் காண்போம் என நினைத்து கண்ட பொருள்தான் மேலே உள்ளது.
திருத்தக்க என்பதைத் திரு என்றும் தக்க என்றும் பிரித்தேன். திரு என்றாள் திருமகள். அலைமகள். செல்வத்திற்கு நிலைமகள். அவளுக்குத் தக்க செல்வம் பரந்தாமனிடத்தில் இருக்கிறது என்று பொருள் கொள்ளலாம். அது என்ன அந்தச் செல்வம் என மனம் குடைந்தது. பிறகு தெளிந்தது. வைரத்தைத் தங்கத்தில் வைத்தால் ஜொலிக்கும். தகரத்தில் வைத்தால் இளிக்கும். திருவாக அமைந்தவளுக்குத் தக்க பொருத்தம் எல்லா வகையிலும் சிறந்தவன் என்று வைகுந்தனைச் சொல்வதாகத் தெளிந்தேன் நான். இது சரியாக இருக்குமென்றே மனம் எண்ணுகின்றது.)
அன்புடன்,
கோ.இராகவன்
Monday, January 09, 2006
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
பொருள் பொருத்தமாக இருக்கிறது இராகவன்.
கஞ்சன் வயிற்றில் நெருப்பு என நின்ற நெடுமாலே என்பதை நான் இதுவரை கண்ணன் பிறந்த நாள் முதல் கம்சன் இறக்கும் வரை அவன் எப்போது தன்னை கொன்றுவிடுவான் என்ற பயமாகிய நெருப்பு ரூபமாக எப்பொழுதும் அவன் வயிற்றில் இருந்தார் என்ற பொருளில் நினைத்திருந்தேன்.அப்படி பார்த்தால் கம்ச்ன் தான் மிக உயர்ந்த பக்தன். ஏனென்றால் அனவரதமும் கண்ணனை நினைத்தவன் அவனதான். ராகவன் உங்கள் நோக்கும் நன்றாக உள்ளது. திருதக்க செல்வமும் நல்ல உரையிடு. மற்றவர்களிடதில் செல்வம் எப்போது செல்வோம் என்று இருக்கும். அதனால்தான் லக்ஷமி யாரிடம் சென்றால் நிரந்தரமாக தங்கமுடியுமோ அங்கே சென்று திருத்தக்க செல்வம் ஆனாள். தி. ரா.ச.
இராகவன்,
திருத்தக்க என்ற பதத்திற்கு தங்கள் விளக்கம் அழகாகவும், பொருத்தமாகவும் இருக்கிறது. TRC சொன்னது போல் சிசுபாலனக்கும் 'கண்ணனை வைதே சொர்க்கம் போனவன்' என்று பெயர் உண்டு.
ரங்கா.
Post a Comment