அம் கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய் செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாயோ
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல்
அம் கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்
கண்ணா! மணிவண்ணா! நீயாளும் இந்த உலகம் மிகவும் பெரியது. மிகவும் அழகானது. இந்த உலகத்து அரசர்கள் எல்லாம் தங்கள் பெருமைகள் குறைந்து விடும் வகையில் உனது பள்ளியறைக் கட்டிலருகே வந்து கூடிச் சங்கம் போல் பணிந்து நிற்பர். அப்படித்தான் இன்று ஆய்ப்பாடிச் சிறுமியர்களாகிய நாங்களும் வந்து நிற்கின்றோம்.
(ஒரு நுட்பமான கருத்து இங்கே இருக்கிறது. ஊன்றிக் கவனிக்க வேண்டும். இறைவனடியைச் சேர்ந்தால் பெருமை என்றுதான் எல்லா நூல்களும் கூறுகின்றன. ஆனால் இங்கே ஆண்டாள் "அபிமான பங்கமாய்" அரசர்கள் வந்து நிற்பர் என்று சொல்லியிருக்கின்றாரே! அதாவது பெருமை குன்ற என்று! அது எப்படி?
முத்தும் பவழமும் பளபளப்பானவைதான். ஆனால் ஒரு வைரக்கல்லின் அருகில் ஜொலிக்க முடியுமா? வைரவொளியானது முத்தையும் பவழத்தையும் அமுக்கி விடுகின்றது அல்லவா. அது போல அரசர்கள் என்று தங்களை எண்ணிக் கொண்டிருக்கின்றவர்கள் அரசர்க்கு அரசர் முன் நிற்கும் பொழுது தாங்கள் ஒன்றுமில்லை என்பதை உணர்வதைத்தான் அபிமான பங்கம் என்கிறார் ஆண்டாள்.)
முகுந்தா! உனது திருவாய் மொழியே இனிய இசை. அப்படி இசையொலிக்கும் வகைக்கு உனது தாமரைப் பூவாயைத் திறந்து நல்மொழி கூறாய்!
கேசவா! செவ்வரியோடிய உனது அழகு விழிகள் துயிலெழும் பொழுது சிறுகச் சிறுக விழிக்கும் பொழுது எங்களை நோக்குவாய்!
புவிக்கு ஒளி கொடுக்கும் நிலவும் கதிரும் உன்னிரு விழிகளைப் போல. எப்படித் தெரியுமா? தீயவைகளைச் சுடும் நெருப்பாகவும் இருந்து, எங்களைக் காக்கும் கருணைக்குளிர் ஒளியாகவும் இருப்பதால் அப்படி. அப்பேர்ப்பட்ட விழிகளால் நீ எங்களை நோக்கும் பொழுது எங்கள் குறைகள் அனைத்தும் இழிந்து நிறைகள் அனைத்தும் பெருகக் காண்பாய் எம்பாவாய்!
(ஒளியைக் கொடுக்கின்ற பகலவன் குளிரைக் கொடுப்பதில்லை. குளிரும் மதியோ பேரொளியைக் கொடுப்பதில்லை. ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு வேலை. ஆனால் கண்ணன் மலர்விழிகளோ சுடும் பொழுது சூரியனாகவும் குளிரும் பொழுது மதியமாகவும் இருந்து சிறப்பிக்கிறது என்பதே இங்கு உட்பொருள். இறைவனால் அனைத்தும் ஆகும் என்பதைச் சொல்லப் புகுவதே இது.)
அன்புடன்,
கோ.இராகவன்
Friday, January 06, 2006
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
சங்கம் இருப்பார்போல் என்றால் கூட்டமாக வந்து என்றும் பொருள் படலாம். நீங்கள் சங்கம் போல் பணிந்து என்கிறீர்கள் கொஞ்சம் விளக்கம் தேவை. தி. ரா. ச
தி.ரா.ச, நீங்கள் சொன்ன பொருளில்தான் நானும் சொல்லியிருக்கிறேன்.
சங்கம் என்பதைக் கூடிக் சங்கமாக நின்று என்று தான் நான் பொருள் கொண்டுள்ளேன். செய்யுளில் உள்ள அதே சொல்லைப் பயன்படுத்தியிருப்பதால் சங்கம் போல நிற்பது என்ற பொருள் மயக்கத்தில் வந்திருக்கின்றது.
நீங்கள் சொன்ன பொருள் சரி. அதுதான் நான் சொல்ல வந்ததும். :-)
இராகவன், கிண்கிணி வாய் செய்த தாமரைப் பூ விற்கு நீங்க புதுமையான பொருள் சொல்லியிருக்கிறீர்கள். நன்றாய் உள்ளது.
ஆமாம் குமரன். அதைத் தெரிந்துதான் செய்தேன். விரும்பிதான் செய்தேன். :-)
அன்பு இராகவன்,
//சங்கம் இருப்பார்போல் என்றால் கூட்டமாக வந்து//
"சங்கம்" என்பதற்கு "விருப்பம்" எனும் பொருளுண்டு.
ஆக,
//விருப்பம் இருப்பார்போல் கூட்டமாக வந்து//
எனக் கொள்ளலாம் அல்லவா?
இராகவன்,
ஒரு சின்ன விளம்பரம் கொடுத்துக்கரேன்.
நீங்கள் சொல்லிவிட்டீர்கள், ஆனால் இன்னும் குமரன் வாயைத்திறக்கவில்லை. :(
ஸ்கந்தன், அலெக்ஸாந்தர் பத்தி தி.இரா.ச மற்றும் ஞானவெட்டியான் அவர்களின் கருத்துகளையும் தெரிந்துகொள்ள ஆவல். அதனால்,
ஸ்கந்தனும் அலெக்ஸாண்டரும்
இராகவன்,
prnathan @ gmail.com
க்கு எனக்கு ஒரு மின்மடல் போட முடியுமா?
அன்பு இராமநாதன்,
தங்களின் "ஸ்கந்தன் - கந்தன்" படித்துப் பார்த்தேன்.
நான் ஆய்வாளன் அல்ல. எனக்குத் தெரிந்ததெல்லாம் கொஞ்சம். "மெய்க்குள் சென்று எப்படி சிவனை வைத்து பெருமாளைப் பிடிப்பது" என்று நான் அல்லாடிக் கொண்டிருக்கிறேன்.
"அப்பம் தின்னவோ! அலால் குழி எண்ணவோ?"ன்னு திரு.மீனாட்சி சுந்தரம் பில்லை மணிமேகலையில் சொல்லுவார்.
ஆக, கந்தன் - ஸ்கந்தனை விட்டு விட்டு
நான் சிவசிவ! சங்கரா!ன்னு போயிடறேன்.
// ஆக, கந்தன் - ஸ்கந்தனை விட்டு விட்டு
நான் சிவசிவ! சங்கரா!ன்னு போயிடறேன். //
ஐயா! பூக்கள் வேறானாலும் அவற்றில் துளிர்க்கும் தேன் ஒன்றுதானே. தேனீயின் கூட்டிற்குப் போனபின் புளியந்தேனுக்கும் மாந்தேனுக்கும் மாறுபாடு உண்டா?
Post a Comment