Thursday, January 12, 2006

பாவை - இருபத்தெட்டு

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவு ஒன்றுமில்லாத ஆய்க் குலத்து உந்தனைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றுமில்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை
சிறு பேர் அழைத்தனமும் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்


(இறைவனே உலகைக் கட்டி மேய்க்கின்றவன். நாமெல்லாம் பசுக்கள். அதனால்தான் அவனை ஆயன் என்கிறார்கள். தம்மையும் ஆயர் கூட்டத்தாராகக் கருதிக் கண்ணனை வேண்டும் பாடல் இது.)

எங்கள் தலைவனே! நாங்கள் ஆய்க்குலத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கு என்ன தெரியும்? ஆடு மாடுகளை மேய்க்கத் தெரியும். அவைகளைப் புல்வெளிகளிலும் கானகங்களிலும் திரிய விட்டு வளர்க்கத் தெரியும். அப்படி மேய்க்கையில் அவைகளுக்கு வேண்டிய கொப்புகளையும் குழைகளையும் இழுத்துப் போடுவதற்கு அவைகள் பின்னாலேயே செல்வோம். அப்படிப் போகையில் எங்களுக்குப் பசிக்கையில் கூட வந்த ஆயர்களோடு கூடி உண்போம். (அவனுக்கு என்ன தெரியும்? திங்கத்தான தெரியும் என்று சொல்வார்கள் அல்லவா. அது போலத்தான் இதுவும்.)

இதைத் தவிர வேறு என்ன அறிவு எங்களுக்கு இருக்கின்றது? அப்படிப் பட்ட இடையர் குலத்தைக் கடையர் குலமாக்காமல் உடையர் எனக்கருதிப் பிறந்தாயே! வாசுதேவா! என்ன புண்ணியம் நாங்கள் செய்திருக்க வேண்டுமோ!

குறை என்ற ஒன்று இல்லாததே உன்னுடைய குறை! அப்படி அப்பழுக்கற்ற கோவிந்தா! உன்னுடைய உறவில்லாமல் நாங்கள் பிழைப்பது எப்படி? எப்பொழுதும் எங்களோடு இருந்து கலந்து நலம் தருவாய்!

அறியாத பிள்ளைகள் நாங்கள். எங்களோடு நீ கூடிக் குலவுகையில் பாடிப் பரவுகையில் மிதமிஞ்சிய அன்பினால் மாதவா, கேசவா, பரந்தாமா, வைகுந்தா, தேவதேவா என்று உன்னைப் பேர் சொல்லி அழைத்து விடுகின்றோம். ஆண்டவன் நீ! உன்னைப் பேரைச் சொல்லிக் கூப்பிடுகிறோம் என்று சீற்றம் கொள்ளாதே!

இறைவா! இத்தனை நெருங்கியவனாக நீ எங்களுக்கு உன்னுடைய திருவருளைத் தருவாய் எம்பாவாய்!

(இறைவனுடைய கருணை நம்மேல் விழ நாம் என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும். அந்த வியப்பில்தான் ஆண்டாள் இப்படிப் பாடுகின்றார். இந்த நிலை சைவத்திலும் உண்டு. அருணகிரிக்கும் இதே வியப்பு. அதைத்தான் "ஆதாளியை ஒன்றறியேனை அறத் தீதாளியை ஆண்டது செப்புமதோ?" என்கிறார். வீண்பேச்சு பேசிக் கொண்டு திரிந்த என்னையும் ஒன்றும் அறியாத என்னையும் நன்மைகளை அறியாத என்னையும் ஆட்கொண்ட உன்னுடைய அன்பைச் சொல்ல முடியுமா என்று கேட்கிறார்.)

அன்புடன்,
கோ.இராகவன்

6 comments:

said...

அறிவு ஒன்றுமில்லாத ஆய்க் குலத்து உந்தனைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்

இதற்கு கண்ணன் நினைவைப் பற்றிய அறிவைத்தவிர வேறு எந்த அறிவும் இல்லாமல் இருந்து அவனுடன் பிறவி பெற்ற பயனை அடைந்த புண்ணியம் உடயவர்கள் என்றும் கொள்ளலமா?

உண்மையலேயே நாம் சொல்லும் பல அறிவுகளும் கடைசியில் அந்த அறிவில்தானே முடியவேண்டும்
அன்பன் தி.ரா. ச,

said...

அறிவு ஒன்றுமில்லாத ஆய்க் குலத்து உந்தனைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்

இதற்கு கண்ணன் நினைவைப் பற்றிய அறிவைத்தவிர வேறு எந்த அறிவும் இல்லாமல் இருந்து அவனுடன் பிறவி பெற்ற பயனை அடைந்த புண்ணியம் உடயவர்கள் என்றும் கொள்ளலமா?

உண்மையலேயே நாம் சொல்லும் பல அறிவுகளும் கடைசியில் அந்த அறிவில்தானே முடியவேண்டும்
அன்பன் தி.ரா. ச,

said...

இந்தப் பாடலுக்கு என் மனதில் தோன்றும் பொருள்:

சிறிது நேரத்திற்கு இன்பம் தரும் உலக இன்பங்கள் பின் சென்று உலக விஷயங்களை ரசித்து அனுபவிப்போம். இப்படி நல்லது எது கெட்டது எது என்ற அறிவு இல்லாத இந்த மானிட குலத்தில் நீயும் பிறக்கும் படியான புண்ணியம் நாங்கள் செய்திருக்கிறோம். இந்த மானிட குலத்தில் பிறந்தாலும் எந்த வித குறையும் இல்லாத கோவிந்தா. உன் தன்னோடு எங்களுக்கு இருக்கும் உறவு நீயே நினைத்தாலும் ஒழிக்க இயலாது. அறிவில்லாத சிறுபிள்ளைகளான நாங்கள் அன்பினால் 'டேய் கண்ணா, டேய் மாதவா' என்று சிறுபேரால் அழைந்திருந்தால் எங்கள் மேல் கோபம் கொண்டு அருளாதே; செய்யும் அருளைக் கோபமின்றிச் செய். இறைவனே உன்னையே என்றும் பணிந்திருக்கும் பேறினை அருள்வாய்.

said...

// அறிவு ஒன்றுமில்லாத ஆய்க் குலத்து உந்தனைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்

இதற்கு கண்ணன் நினைவைப் பற்றிய அறிவைத்தவிர வேறு எந்த அறிவும் இல்லாமல் இருந்து அவனுடன் பிறவி பெற்ற பயனை அடைந்த புண்ணியம் உடயவர்கள் என்றும் கொள்ளலமா? //

தி.ரா.ச, இப்படிக் கொள்ள முடியுமா என்று தோன்றவில்லை. ஏனென்றால் கண்ணனோடு யாரும் பிறவி பெறவில்லை. மாறாக கண்ணனே அவர்களுக்காக பிறந்து வந்தான். இப்படிப் பொருள் கொள்வதே சரியென்று தோன்றுகிறது.

// உண்மையலேயே நாம் சொல்லும் பல அறிவுகளும் கடைசியில் அந்த அறிவில்தானே முடியவேண்டும்
அன்பன் தி.ரா. ச, //
அறிவு மட்டுமல்ல அறிவின்மையும் முடியும் இடம் அதுதான். விளங்கச் சொன்னால் அனைத்தும் தொடங்கி அனைத்தும் முடிவது அங்குதான். அதைத்தான் பூஜ்ஜியம் என்கிறோம். இந்தக் கருத்தைக் கொண்டுதான் பூஜ்ஜியத்தைக் கண்டு பிடித்தவர்கள் இந்தியர்கள் என்கிறோம்.

said...

// சிறிது நேரத்திற்கு இன்பம் தரும் உலக இன்பங்கள் பின் சென்று உலக விஷயங்களை ரசித்து அனுபவிப்போம். இப்படி நல்லது எது கெட்டது எது என்ற அறிவு இல்லாத இந்த மானிட குலத்தில் நீயும் பிறக்கும் படியான புண்ணியம் நாங்கள் செய்திருக்கிறோம். இந்த மானிட குலத்தில் பிறந்தாலும் எந்த வித குறையும் இல்லாத கோவிந்தா. உன் தன்னோடு எங்களுக்கு இருக்கும் உறவு நீயே நினைத்தாலும் ஒழிக்க இயலாது. அறிவில்லாத சிறுபிள்ளைகளான நாங்கள் அன்பினால் 'டேய் கண்ணா, டேய் மாதவா' என்று சிறுபேரால் அழைந்திருந்தால் எங்கள் மேல் கோபம் கொண்டு அருளாதே; செய்யும் அருளைக் கோபமின்றிச் செய். இறைவனே உன்னையே என்றும் பணிந்திருக்கும் பேறினை அருள்வாய். //

அருமையான விளக்கம் குமரன். நான் மேலோட்டமாகச் சொன்னதும் இதுதான். ஆழப் பொருள் சொல்லாமல் விட்டதால் வேறு மாதிரி தெரிகிறதோ?

said...

//அறிவு ஒன்றுமில்லாத ஆய்க் குலத்து உந்தனைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம்//

//கொப்புகளையும் குழைகளையும் இழுத்துப் போடுவதற்கு//
கிராமத்தில் நாங்கள் பயன்படுத்திய வார்த்தைகள்.