Wednesday, January 11, 2006

பாவை - இருபத்தேழு

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தனைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
முட நெய் பெய்த் முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!


கோவிந்தா! உன்னைக் கூடாரின் அன்பினையும் வெல்லும் முகுந்தா! நாங்கள் பெற விரும்பும் பரிசு எதென்று கேட்டால் என்ன சொல்வோம் தெரியுமா? ஊராரும் உலகோரும் அறிய உன்னுடைய பெயர்களைப் புகழ்ந்து பாடிப் பறை தட்டுவதே!

(கூடாரை வெல்லும் என்ற சொற்றொடருக்குச் சிலர் எதிரிகளைக் கொல்லும் என்றும் பொருள் கொள்வார்கள். அது சரியன்று என்று எனக்குத் தோன்றுகின்றது. இறைவனோடு கூடாரை, இறைவன் பெயரைச் சொல்லிப் பாடாரை, இறைவன் திருவடிகளை நாடாரை வேண்டிய பொழுதில் அன்பினால் வெல்லும் திறம் ஆண்டவனுக்கு உண்டு. அதைத்தான் இங்கே ஆண்டாள் குறிப்பிடுகின்றார் என்று தோன்றுகின்றது.)

மாதவா! உன்னருளாலே செல்வம் பல பெற்று அதனால் நல்ல அணிமணிகளான கைவளை (சூடகம்), தோள்வளை, தோடு, செவிப்பூ (காது மாட்டல்), கால் கொலுசு (பாடகம்) மற்றும் பல அரிய நகை வகைகளை அணிந்து கொள்வோம்! நல்ல ஆடைகளை உடுப்போம்!

(சைவத்தில் இகம்பரம் என்பார்கள். திகம்பரம் என்பது தவத்தார்க்கே. மற்றவர்களுக்கெல்லாம் இகம்பரமே! இந்த உலகத்தில் உள்ள இன்பங்கள் இகசுகம். அந்த உலகத்தில் கிடைப்பது பரசுகம். இகத்தை மறுத்து பரத்தை மட்டுமே (பரத்தையரை அல்ல) நினைப்பது துறந்தோர் உள்ளம். இறையருள் பரசுகம் மட்டுமல்ல இகசுகமும் வழங்கும். அதைத்தான் சுருக்கமாக வள்ளுவர் "பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லாகி யாங்கு" என்றார். அந்த கருத்தை ஒட்டியே ஆண்டாளும் இறையருளால் இகசுகமும் பெறுவோம் என்கின்றார். நல்ல அணிமணிகளும் அணிந்து இன்புறுவதைக் குறிப்பிடுகின்றவர் அடுத்த வரியில் உணவையும் குறிப்பிடுகின்றார்.)

நன்றாக உடுத்திக் கொண்டு நகைகளை மேலில் அடுக்கிக் கொண்டு பாலோடு சோற்றை வேக வைத்துக் குழைத்து அதனோடு இனிப்பும் நெய்யும் சேர்த்து பாயாசமாக்கி கைவழி வழியும் வகைக்குக் குழந்தை போலச் சுவைத்து உண்போம். அதுவும் நாங்கள் தனியாக உண்ணாமல் கூடியிருந்து உண்டு வயிறு குளிரக் காண்பாய் எம்பாவாய்!

அன்புடன்,
கோ.இராகவன்

5 comments:

said...

இராகவன். ஏதோ ஒரு காரணத்தால் இந்தத் திருப்பாவைப் பாசுரமும் அடுத்தப் பாசுரமும் எனக்கு மிகவும் பிடிக்கும். அடுத்தப் பாசுரம் பிடிப்பதற்கு என்ன காரணம் என்று தெரியும். ஆனால் இந்தப் பாசுரம் ஏன் பிடிக்கிறது என்று வெளிப்படையாகத் தெரியவில்லை.

கூடாருக்கு நீங்கள் சொல்லும் விளக்கமே மரபின் வழி விளக்கமும். கோவிந்தன் கூட மெனக்கெட்டு கூடாரை வெல்ல வேண்டாம். அவன் சீர்மையான குணங்களே கூடாரை வென்று அவன் அடியார் ஆக்கும் என்பது மரபுவழி விளக்கம். அதனால் தான் ஆண்டாள் கூடாரை வெல்லும் 'சீர்' கோவிந்தா என்றாள் என்பர்.

2ம் பாசுரத்தில் நோன்பு நோற்பதற்கு விலக்கவேண்டியதைச் சொன்னாள் - நெய்யுண்ணோம்; பாலுண்ணோம் என்று பலவாறாக. இங்கு நோன்பு அவன் அருளால் நன்றாக நிறைவேறியவுடன் வரும் கொண்டாட்டத்தைக் கூறுகிறாள்.

பலர் இல்லத்தில் இன்று 'பால்சோறு மூட நெய் பெய்து' ஒரு சுவையான அக்கார வடிசில் செய்து நைவேத்தியம் செய்வார்கள். ஜெயச்ரி அந்த அக்கார வடிசில் செய்முறையைப் பற்றி எழுதியிருந்ததை நான் முத்தமிழ்மன்றத்தில் படித்திருக்கிறேன்.

said...

குமரன்,

அக்கார அடிசல் பற்றி என் பதிவில் இருக்கிறது ( படத்துடன் ). பாக்கலாம் ஆனால் சாப்பிட முடியாது.
http://www.desikan.com/blogcms/wiki/index.php?id=thiruppavai_twentyseven

said...

ஆமாம் தேசிகன். போன வருடம் படித்திருக்கிறேன். அண்மையில் தான் ஜெயச்ரியின் கட்டுரையைப் படித்தேன். அதனால் அது முதலில் நினைவிற்கு வந்துவிட்டது.

said...

// இராகவன். ஏதோ ஒரு காரணத்தால் இந்தத் திருப்பாவைப் பாசுரமும் அடுத்தப் பாசுரமும் எனக்கு மிகவும் பிடிக்கும். அடுத்தப் பாசுரம் பிடிப்பதற்கு என்ன காரணம் என்று தெரியும். ஆனால் இந்தப் பாசுரம் ஏன் பிடிக்கிறது என்று வெளிப்படையாகத் தெரியவில்லை. //

ஆகா! அடுத்த பாட்டுக்கு என்ன காரணமோ! அதற்கான விளக்கத்தையும் போட்டாகி விட்டது. காரணத்தை நீங்கள் போடுங்கள்.

said...

// அக்கார அடிசல் பற்றி என் பதிவில் இருக்கிறது ( படத்துடன் ). பாக்கலாம் ஆனால் சாப்பிட முடியாது.
http://www.desikan.com/blogcms/wiki/index.php?id=thiruppavai_twentyseven //

ஆகா! அக்காரவடிசல்.....தூத்துக்குடியில் எங்கள் வீட்டுப் பக்கம் ஐயங்கார் வீடொன்று இருந்தது. அவர்கள் வீட்டில் நல்ல அக்காரவடிசல் கிடைக்கும். ம்ம்ம்ம். இப்பொழுது இந்த பெங்களூரில் எங்கு போவது. தேசிகன் புண்ணியத்தால் பார்க்கவாவது கொடுத்து வைத்திருக்கிறது. நன்றி தேசிகன்.