Saturday, December 31, 2005

பாவை - பதினாறு

நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே மணிக்கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா நீ
நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்

(பாவை நோன்பில் கலந்து கொள்ள வேண்டிய அனைவரும் எழுந்து குளிர்ந்த நீரில் தூயமாய் நீராடியாகி விட்டது. மாயவனை ஆயவனைப் புகழ்ந்து பாடியாகி விட்டது. அடுத்து செய்ய வேண்டியது என்ன? அண்ணலுடைய திருக்கோயிலுக்குச் சென்று அவனையும் எழுப்ப வேண்டியதுதான்.)

திருவில்லிபுத்தூரில் ஓங்கி வளர்ந்தது இந்த ரங்க மன்னார் திருக்கோயில். அந்தக் கோயிலில் வாயிலில் பாதுகாப்பாக நிற்கும் பாதுகாவலனே! அழகிய கொடிகளைத் தொங்கவிட்டுள்ள தோரணவாயிலைக் காக்கின்றவனே! திருக்கோயிலின் மணிக்கதவம் தாள் திறவாய்!

(இறைவனைக் காணச் செல்கின்றோம். கதவம் தாளிட்டிருந்தால் நமக்கு எவ்வளவு துன்பமாக இருக்கிறது. அப்படியிருக்கையில் விடியலிலேயே எழுந்து சென்ற பொழுதும் கோயில் கதவம் தாளிட்டிருக்கக் கண்டால் ஆண்டாளால் தாங்க முடியுமா? அதான் வாயில் காப்போனிடம் கெஞ்சுகின்றார்.

இதே நிலை அப்பருக்கும் ஏற்பட்டது. திருமறைக்காட்டு விரிசடையான் கோயில் பூட்டப்பட்டுள்ளது. துடித்துப் போய் விடுகிறார். உடனே ஒரு பதிகம் எழுகின்றது.
பண்ணின் நேர் மொழியாள் உமை பங்கரோ!
மண்ணினார் வலஞ் செய் மறைக்காடரோ!
கண்ணினால் உமைக்காணக் கதவினைத்
திண்ணமாய் திறந்தருள் செய்மினீரே!" என்று கதறுகிறார். கண்ணீர் பெருக்குகின்றார். விளைவு? இறையருளால் திருக்கதவம் திறக்கிறது.
)

வாயில் காப்பானே! திருக்கோயில் கதவம் திறவாய்! இன்றல்ல! மாயன் மணிவண்ணன் என்றைக்கோ அறைந்து பாட பறைகளைத் தந்து ஆயர் சிறுமியராகிய எங்களுக்கு வாய் நேர்ந்து வாக்குறுதி தந்தான். அப்படியிருக்க கதவு மூடியிருக்கலாமோ!

விடியலில் எழுந்தோம். தூய்மையுடன் நீராடினோன். நோன்பிற்கான கிரிசைகள் செய்தோம். இப்பொழுது அந்த நந்தனுடைய துயில் எழுப்பப் பாட வேண்டும். அதற்கு முன்னர் செய்யப்பட வேண்டியது என்ன தெரியுமா? எந்தக் காரணமும் சொல்லாமல் தாமதிக்காமல் நேயநிலைக் கதவின் தாளினை நீக்குவாய் எம்பாவாய்!

அன்புடன்,
கோ.இராகவன்

4 comments:

said...

இராகவன்,

அப்பரின் பாடலைத் தொடர்பு படுத்தி தந்த விளக்கம் அருமை.

said...

நேய நிலைக்கதவம் என்று நீங்குமோ. அவன் நென்னலே வாய் நேர்ந்தான். தூயோமாய் நாம் தான் இன்னும் வரவில்லை.

said...

// இராகவன்,

அப்பரின் பாடலைத் தொடர்பு படுத்தி தந்த விளக்கம் அருமை. //

நன்றி ரங்கா. இரண்டும் ஒரே உணர்ச்சிதானே. ஆகையால் அப்படிப் பொருத்தமாக இட்டேன்.

said...

// நேய நிலைக்கதவம் என்று நீங்குமோ. அவன் நென்னலே வாய் நேர்ந்தான். தூயோமாய் நாம் தான் இன்னும் வரவில்லை. //

நெருப்போடு சேர்ந்ததெல்லாம் நெருப்பே என்பது போல தூயவனோடு உளத்தால் சேர்ந்தால் நாமும் தூயவராவோம். கரித்துண்டுகளாய் கசடுகள் விலகிடும்.