Friday, December 16, 2005

பாவை - இரண்டு

நாளையும் நாளைமறுநாளும் விடுமுறை நாட்களாக இருப்பதால், அன்றைக்குரிய பாடல்களையும் இன்றைக்கே தந்து விடுகின்றேன்.

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்


ஆய்ப்பாடித் தோழிகளே! வாழ்வாங்கு இந்த உலகத்தில் வாழப் போகும் சிறுமிகளே! மார்கழியில் காலையில் எழுந்தோம். கண்ணனை நினைத்தோம். உடலை நனைத்தோம். புத்துணர்வோடு நோன்பைத் துவக்கினோம்.

அப்படித் துவக்கிய இந்தத் தூய நோன்பில் நாம் செய்ய வேண்டியன தெரியுமா? சொல்கிறேன் கேளுங்கள். ஆண்டவனை நாடித் தொழுவதும் பாடித் தொழுவதும் உண்டு. பாற்கடலில் மெல்லத் துயில் கொண்ட அந்தப் பரமன் அடியைப் பாடுவோம். (பைய என்பது தெற்கத்தித் தமிழ். இன்றும் பையப் போ என்பார்கள். பைய என்பது மெதுவாக என்று பொருள்படும்.)

இந்த நோன்பிலே நமக்குச் சில கட்டுப்பாடுகள் உண்டு. நெய்யுண்ணோம். பாலுண்ணோம். விடியலில் நீராடுவோம். கயலொத்த கண்களிலே மையல் தூண்டும் படியாக மையிட்டு எழுதோம். ஒரு மலராயினும் அது நறுமலராயின் அதில் சுகம் பெறுமலராகக் கருதிச் சூடோம். சொன்னால் தீமையொன்றை மட்டுமே பயக்கும் குறளி சொல்ல மாட்டோம். (தீக்குறளைச் சென்றோதோம் என்பதைப் பலர் திருக்குறள் என்று தவறாகப் பொருள் கொள்கின்றனர். அது தவறு. குறளி சொல்வது என்று தெற்கு வழக்கு. இன்றைக்குள்ள வழக்கில் அது கோள் சொல்வது. கோள் மூட்டுவது மிகக் கொடிய பாவம். அதை என்றைக்கும் செய்யக்கூடாது. ஆண்டாளின் பாடல்களைப் படித்துப் பொருள் கொள்ளும் பொழுது தென்பாண்டி வட்டார வழக்கு தெரியாமல் படித்துப் பொருள் கொள்வது முறையாகாது. தெரியாதவிடத்து தெரிந்தவர்களிடம் கேட்டுப் பொருள் பெற வேண்டும்.)

ஏன் நெய்யுண்ணோம்? நெய் சூடு. உடல் சூடானால் உள்ளமும் சூடாகும். மேலும் குளிர்காலத்தில் கொழுப்புப் பதார்த்தங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அது உடலுக்கு நன்று. ஏன் பாலுண்ணோம்? பாலினும் சுவையான தமிழ்ப் பாவினைப் பாடுகையில் பால் சுவையாகுமா? இல்லை சுவைக்கத்தான் ஆகுமா?

கண்களுக்கு அஞ்சனம் தீட்டோம். ஏன் தெரியுமா? அந்த அஞ்சனத் திரட்டுகள் இளைஞர்களின் உள்ளங்களைத் திரட்டுங்கள் என்று எங்கள் உள்ளம் நினையாமல் இருக்கத்தான் அப்படி. மலரிட்டும் முடியோம். வாடைக் காலத்தில் தூது செலுத்த வாடைப் பூவையா சூட்டுவோம்!

அத்தோடு முடிந்தனவா நமது கிரிசைகள்? இல்லை. கையேந்தி வருவோர்க்கும் வேண்டி வருவோர்க்கும் முற்றும் துறந்தவர்க்கும் சேவைகள் செய்வோம். ஏன் தெரியுமா? நமது குறளில் "துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றையவர்கள் தவம்" என்று சொல்லியிருக்கின்றது. சுய கட்டுப்பாடுகள் மட்டுமல்ல, சேவையும் நமது கிரிசையே. இப்படியெல்லாம் செய்து பரகதியை உய்ய இன்புற்று இந்தக் கிரிசைகள் செய்து மார்கழி நோன்பைத் தொடர்வாய் எம்பாவாய்!

அன்புடன்,
கோ.இராகவன்

4 comments:

said...

மிக நன்று இராகவன். எங்கு விரிக்க வேண்டுமோ அங்கு விரித்து, எங்கு சுருக்க வேண்டுமோ அங்கு சுருக்கி நன்றாய் விளக்கியுள்ளீர்கள். பைய என்பதற்கும் தீக்குறளைச் சென்றோதோம் என்பதற்கும் கொடுத்த விளக்கம் அருமை. தீக்குறள் என்பதற்குத் தவறானப் பொருள் கொடுத்து தமிழ்ப் பற்றுடையோர் திருப்பாவையை வெறுக்கும்படி சில தமிழறிஞர்கள் செய்திருந்தனர். இன்று நீங்கள் செய்ததைப் போல் சரியான விளக்கம் பலரும் கொடுக்க, அந்த தவறு திருத்தப்படும்.

said...

நன்றி குமரன். நான் இந்தப் பாடலை முதலில் படித்த பொழுது தீக்குறள் என்பதற்கு திருக்குறள் என்று பொருள் கொள்ளவில்லை.

காரணம் மிக எளிமையானது. இந்தப் பாடலில் வழக்கமாகச் செய்கின்றவைகளைச் செய்யோம் என்று கூறியிருக்கின்றார் ஆண்டாள். தீக்குறள் என்பதைத் திருக்குறள் என்று கொண்டால், அதை தினமும் ஓதிக் கொண்டிருப்பார் என்று பொருள் படும். அப்படி தினமும் ஓதி இந்த மாதத்தில் மட்டும் ஓத மாட்டோம் என்று சொல்லப் படுவதை தீது என்று எப்படிச் சொல்ல முடியும்? இந்தக் கேள்வியிலெயே அது திருக்குறள் என்ற வாதம் அடிபட்டுப் போகிறது.

மேலும் ஆண்டாள் பருவப் பெண். பொதுவாக அந்தச் சிறுவயதில் பெண்களிடத்தில் குறளி சொல்லும் பழக்கமிருக்கும். அதைக் குறைக்கவே குறளி சொல்லோம் என்று சொல்லியிருக்கின்றார் என்பது என் கருத்து.

இல்லை. அது திருக்குறள்தான் என்று யாரேனும் வாதிட்டால் அது அறியாமையே!

said...

இராகவன்,

தொல்காப்பிய நூற்பா பேராசிரியரின் உரையில் பாவைப் பாட்டு என்பது குறிப்பிடப்படுகிறது. பாவை நோன்புக்கு அடிப்படை தமிழ் நாட்டின் பழைய வழக்கத்தை தழுவியது. இந்த நோன்பு சங்க இலக்கியங்களான அகநானூறு, நற்றிணை, பரிபாடல்களில் பாவை நோன்பும் தைந்நீராடலுமாகக் குறிப்பிடப்படுகிறது.

”நேரிழை மகளிர் வார்மணல் இழைத்த வண்டற் பாவை“ என்று நற்றிணையில் உள்ளது. அகநானூறிலும் உள்ள கடற்கரையோரப் பாவை விளையாட்டுகள்தாம் நாளடைவில் சமய வடிவு பெற்றது என்று கூறுகிறார்கள். ‘தைந்நீராடல்’ என்றாலும் மார்கழித் திங்களில் பௌர்ணமியில் திருவாதிரையில் தொடங்கியதால் இந்த நீராடல் தை மாதத்தில் தொடர்ந்தது. அதனால் தைந்நீராடல் என்பதும் பொருந்தும் என்று இராகவையங்கார் குறிப்பிட்டுள்ளார். எப்படியும் மகளிரின் பாவை நோன்பு பழந்தமிழ் வழக்கம் என்பதில் சந்தேகமில்லை.

"தீக்குறளைச் சென்றோதோம்" - சிம்பிளாக ""கோள் சொல்லமாட்டோம்". இது நண்பர் டி.பி.ஆர். ஜோசஃப் சென்ன உள்ள தூய்மை.

said...

Dear Raghavan,
Payathuendra enpatharku adhiseshanakiya pambin mel paduthu oorangum endrm kollama? TRC