உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணனைப் பாடேலோர் எம்பாவாய்
அன்புடையவளே! உனது வீட்டின் புழக்கடைத் தோட்டத்திற்குச் செல். அங்கிருக்கும் நீர் நிறைந்த கிணற்றைப் பார். காலையில் மலரும் செங்கழுநீர் மலர்கள் வாய் நெகிழ்ந்து விரிந்திருக்கின்றன. இரவில் மலரும் ஆம்பல் மலரோ வாய் கூம்பி காலையின் வரவைச் சொல்கின்றது.
(வாவி என்ற தமிழ்ச் சொல்லிற்குக் கிணறு என்று பொருள். இன்றைக்குத் தமிழில் வாவி என்ற சொற்புழக்கம் இல்லையென்றாலும் இந்த வாவி என்ற சொல் பாவி என்று மருவி கன்னடத்திலும் தெலுங்கிலும் புழங்குகின்றது.
நீர் நிரம்பிய கிணறுகளில் மலர்கள் பூத்திருக்கும். அப்படி செங்கழுநீர் மலர்ந்தும் ஆம்பல் வாய் கூம்பியும் உள்ளன. வந்து பார்த்தாவது விடிந்தது என்று தெரிந்து கொள்ளும் படி தோழியரிடம் கூறுகின்றார் நாச்சியார்.)
சாம்பல் நிறைத்திலும் செங்கொற்பொடி நிறத்திலும் ஆடையணிந்து கொண்ட தவத்தவர்கள் காலையில் நீராடி திருக்கோயிலுக்குச் சென்று மங்கலச் சங்கொலி முழங்கும் பேரின்ப ஒலியைக் கேளாய்!
ஏதோ எங்களுக்கு முன்னமே நீயெழுந்து கிளம்பி எங்களை எழுப்புவாய் என்று வீண்பேச்சு பேசிய தோழியே எழுந்திராய்! வரவர உனக்கு வெட்கமில்லாமலா போய் விட்டது!
(இந்தத் தோழி வாய்ச் சொல்லில் வீரம் மிகுந்தவள் போலிருக்கின்றது. ஆகையால் எல்லாரையும் தான் வந்து எழுப்புவேன் என்று சொல்லி விட்டுக் கடைசியில் தான் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கின்றாள். அந்த வெட்கமில்லாத வீண்பேச்சுக்காரியையும் விடாமல் எழுப்பி நோன்பில் சேர்க்கிறார்.)
வெண்ணிறச் சங்கும் மின்னிடும் சக்கரமும் இரண்டு கைகளிலும் ஏத்துகின்றானே நாராயணன்! தாமரை மலர்களை ஒத்த அழகிய விழியன்! அவனைப் பாடுவாய் எம்பாவாய்!
(இறைவன் புகழை நாத்தழும்பேற பாட வேண்டும். இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் சிறப்பாகச் சொல்லியிருக்கின்றார்.
பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராயணா வென்னா நாவென்ன நாவேபாண்டவர்களுக்குத் தூதாக நடந்தானைப் பாடிப் புகழாத நாவென்ன நாவே! நாராயணா என்ற பெயரைச் சொல்லாத நாவென்ன நாவே!)
அன்புடன்,
கோ.இராகவன்
Friday, December 23, 2005
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
இறைவன் புகழை நாத்தழும்பேற பாட வேண்டும். //
ஆமாம். பிரச்சினைகள் நிறைந்த இந்த காலத்தில் இறை புகழைப் பாட நமக்கெல்லாம் எங்கே நேரமிருக்கிறது?
பிரச்சினையே நாம்தான் என உணரும் காலம் வரும்போதுதான் புரியும் இறைவன் எத்தனை நல்லவன் என்று.
நாளுக்கு ஒரு மலர் என அருமையான தொடுக்கறீங்க ராகவன். மார்கழி மாசம் முடியறபோது நல்ல மணம் வீசும் மாலையா இப்பதிவுகள் அமையும்னு நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.
நாணாதாய் நாவுடையாய்
என்னும் போதெல்லாம்
என்னைச் சொல்வதாய்த் தோன்றும் :-)
பங்கயக் கண்ணானைப் பாடுவோம்.
"அயல் நின்ற வல்வினையை அஞ்சினேன்; அஞ்சி
உயநின் திருவடியை சேர்வான் - நயநின்ற
நன்மாலை கொண்டு நமோ நாராயணா என்னும்
சொன்மாலை கற்றேன் தொழுது"
(முதல் திருவந்தாதி - 57)
// ஆமாம். பிரச்சினைகள் நிறைந்த இந்த காலத்தில் இறை புகழைப் பாட நமக்கெல்லாம் எங்கே நேரமிருக்கிறது? //
எப்பொழுதும் பாட வேண்டுமென்ற அவசியமில்லை ஜோசப் சார். எப்பொழுதாவது நினைத்தாலும் போது. ஆனால் அன்போடு.
// பிரச்சினையே நாம்தான் என உணரும் காலம் வரும்போதுதான் புரியும் இறைவன் எத்தனை நல்லவன் என்று. //
உண்மைதான். பிரச்சனை வருகையில் இறைவன் நினைப்பு வருவதும் உண்மைதான். அது இன்பத்திலும் வந்தால் மேன்மை. எப்பொழுதும் இருந்தால் அது தூய்மை.
// நாளுக்கு ஒரு மலர் என அருமையான தொடுக்கறீங்க ராகவன். மார்கழி மாசம் முடியறபோது நல்ல மணம் வீசும் மாலையா இப்பதிவுகள் அமையும்னு நினைக்கிறேன். வாழ்த்துக்கள். //
நன்றி ஜோசப் சார். உங்கள் பாராட்டு பலிக்க விரும்புகின்றேன். :-)
// நாணாதாய் நாவுடையாய்
என்னும் போதெல்லாம்
என்னைச் சொல்வதாய்த் தோன்றும் :-) //
என்ன குமரன். பாவ மன்னிப்பு கேக்குறீங்களா? இறைவனுக்கு நீங்கள் வைத்திருக்கும் அன்பு கண்டிப்பாகத் தெரியும். அடுத்தவருக்கு எந்தக் கெடுதியும் செய்யாதாராய் உங்களை வைத்திருக்கின்றாரே. அதே சிறப்புதானே.
// "அயல் நின்ற வல்வினையை அஞ்சினேன்; அஞ்சி
உயநின் திருவடியை சேர்வான் - நயநின்ற
நன்மாலை கொண்டு நமோ நாராயணா என்னும்
சொன்மாலை கற்றேன் தொழுது"
(முதல் திருவந்தாதி - 57) //
அருமையான பாடலைத் தந்துள்ளீர்கள் ஞானவெட்டியான். மிகவும் அருமை.
Post a Comment