தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியத்
தூபம் கமழத் துயிலணை மேல் கண் வளரும்
மாமன் மகளே மணிக்கதவம் தாழ் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள்தான்
ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாயவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்
(வீடுவீடாகப் போய் அழைத்தும் சில தோழியர் இன்னும் தூங்கினர். அவர்களையும் எழுப்பித்தான் ஆக வேண்டும். தான் எழுப்பியது போதாதென்று அந்தத் தோழியரின் தாயாரையும் அழைத்து எழுப்பச் சொல்கின்றார் இந்தப் பாடலில்.)
மாமன் மகளே அடி தோழி! தூய மணிகள் தொங்கி அழகூட்டும் நல்ல மாடத்தில் இன்னும் விளக்கெல்லாம் எரிந்து கரிந்து புகையெழும் போதும் சொகுசான மெத்தையில் மேல் கிடக்கும் தோழியே! நீ தூங்கிக் கிடக்கும் அறையின் மணிக்கதவம் திறந்து வாராய்!
(கோதை நாச்சியாரை நான் வியக்காத பொழுதில்லை. கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் முன்னர் புரட்சிப் பெண்கவியாக திழந்திருக்கின்றார். அத்தோடு அவருடைய நூல்களில் அவர் பதிவு செய்தவை ஏராளம். ஏராளம். தென்பாண்டி நாட்டு வட்டார வழக்கில் ஒரு நூலை எழுதிய பெருமை. இவருக்கு முன்னர் இந்தப் பெருமைக்கு உரியவர் இளங்கோ. சிலப்பதிகாரத்தின் மூன்று காண்டங்களையும் படித்தால் ஒவ்வொரு காண்டத்திலும் அந்தந்த நாட்டு வழக்குகள் பயின்று வரும்.
இரண்டாவது அன்றைய பண்பாட்டையும் பழக்க வழக்கங்களையும் போகின்ற போக்கில் அழகாக ஆனால் மறைவாகச் சொல்வது. மின்சாரம் இல்லாத அந்தக் காலத்தில் night lamp ஏது? இரவில் எழுந்தால் தட்டுத் தடுமாற வேண்டியதுதானா? இல்லை. அதற்குத்தான் மாடக்குழிகளை வீடுகளில் வைத்திருப்பார்கள். இன்றைக்கும் பழைய வீடுகளில் மாடக்குழிகளைக் காணலாம். அந்த மாடக்குழிகளில் விளக்கு வைத்துக் கெட்டியான விளக்கெண்ணெய் அல்லது இலுப்பையெண்ணெய் ஊற்றி விளக்கேற்றுவார்கள். அதுவும் மெல்லிதாக எரியும்படி திரியை எண்ணெய்க்குள் வைப்பார்கள். இரவெல்லாம் எரிந்து காலையில் எண்ணெய் தீர்ந்து விடும். அந்த பொழுதில் எழுகின்றவர்கள் விளக்கை அணைத்து விடுவார்கள். அப்படி அணைக்காவிட்டால் திரியும் எரிந்து கருகி புகை எழும். அதுவரைக்கும் தூங்குகின்ற தோழியரைக் குறிக்கும் பொழுது இதை அழகாக மறைபொருளாகச் சொல்லியிருக்கின்றார்.
சிலர் தூபம் கமழ என்றதும் தூபம் காட்டுவதாக எடுத்துக் கொள்வார்கள். அது தவறென்று தோன்றுகின்றது. "சுற்றும் விளக்கெரியத் தூபம் கமழ" என்று பகுக்க வேண்டும். அப்பொழுது சரியான பொருள் கிடைக்கும்.)
மாமி, அவள் இன்னமும் தூங்குகிறாள். அவளை எழுப்புங்கள். ஏன் இப்படித் தூங்குகிறாள்? எழுப்பினாலும் எழுந்திருப்பதில்லை? என்னவாயிற்று? ஊமையாகப் போனாளோ? செவிடாகப் போனாளோ? இல்லை சோம்பல் (அனந்தல்) மிகுந்து போனாளோ? அதுவும் இல்லையென்றால் மந்திரத்தில் கட்டுண்டு மயங்கி ஏமப் பெருந்துயிலில் விழுந்தாளோ?
(ஏமப் பெருந்துயில் என்றால் coma. பெருந்துயில் நீண்ட தூக்கம். ஏமம் என்றால் இன்பம். ஏமப் பெருந்துயில் மீளக்கூடியதுதான். ஆகையால்தான் அந்தப் பெயர்.)
மாமாயனென்றும் மாயவனென்றும் வைகுந்தனென்றும் அவனுடைய திருப்பெயர்கள் பல. இன்னும் பல. அந்தத் திருப்பெயர்களைக் காலையில் எழுந்து சொல்லிச் சொல்லி இன்பம் பயில்வாய் எம்பாவாய்!
அன்புடன்,
கோ.இராகவன்
Friday, December 23, 2005
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
மாதவனை பற்றிய பாடல் என்பதால் இதில் 15 முறை மா அல்லது ம வருகிறது.கவனித்தீர்களா.
செவுடு மற்றும் ஊமைக்கு ஒரு புதிய தமிழ் வார்த்தை அனந்தல்.மாமாயன் மாயவன் என்ற வரியை பர்த்தால் கம்பரின் மாயமான் ஆகினான் மாயமான் ஆகினான் மாயமான் ஆகினான் வரிகள் நினைவுக்கு வருகிறது. திரு. குமரன் எப்படியும் என்னை கேள்வி கேட்பார்? அப்போது பதில். அன்பன் தி.ரா. ச
இராகவன். தூபம் கமழ்வதற்கும் ஏமப் பெருந்துயிலுக்கும் புதுமையான விளக்கம். :-) நன்றாய் இருக்கிறது.
ஆமாம் TRC Sir. நிச்சயம் விளக்கம் வேண்டும். ஆண்டாளே எல்லா விஷயத்தையும் மறைபொருளாய் இல்லாமல் விளக்கமாய்ச் சொல்லியிருக்கும் போது நீங்கள் அவ்வப்போது வந்து விடுகதை போட்டுவிட்டுப் போகிறீர்களே? இது நியாயமா? என்னைப் போன்ற சின்னப் பையன்கள் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியவற்றை எல்லாம் நீங்கள் தானே கற்றுத்தர வேண்டும்?
கம்பர் மூன்று முறை மாயமான் ஆகினான் என்று மாரீச்னை ராமன் பாண ம் போட்டு வதம் செய்த பொழுது உபயோகித்தார். பாண்ம் போட்ட உடன் மாய மானாக மாறினான், (1), மயம் காட்டும் மனாக மறைந்தான்(2), இராவணனுக்கு மிகப்பெரிய மா யமனாகிவிட்டான்(3) என்கிறார் ஆண்டளும் இதுபோலத்தான் மாயவன் மாமாயன் என்கிறார் போலும் அன்பன் தி. ரா.ச
அன்னை பராசக்தியோ மாயை. அவனின் தமயன் மாயவன் மாமாயை(மா மாயன்).
இப்படிக் கொள்ள இயலுமா?
// இராகவன். தூபம் கமழ்வதற்கும் ஏமப் பெருந்துயிலுக்கும் புதுமையான விளக்கம். :-) நன்றாய் இருக்கிறது. //
நன்றி குமரன். :-)
// அன்னை பராசக்தியோ மாயை. அவனின் தமயன் மாயவன் மாமாயை(மா மாயன்).
இப்படிக் கொள்ள இயலுமா? //
ஞானவெட்டியான், பராசக்தியா மாயை? அவளே மாமாயை. அவளுடைய தமையன் மாமாயன். சரிதானே?
Post a Comment