கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தான் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் முர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்ட கிடத்தியோ
தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்
(காலை விடிந்தது. கடவுளை நினைத்து நீராடி முடிந்தது. நோன்பு துவங்கி அதன் பழக்கங்களை முடிவு செய்தாகி விட்டது. தோழியரையும் அழைத்தாகி விட்டது. சொன்னதுமே வந்தனர் சிலர். அழைத்ததும் வந்தனர் சிலர். இன்னும் சிலர் வரவில்லை. என்ன செய்வது? நன்கு தெரிந்த தோழியர்தானே. வீட்டிற்குச் சென்று கதவைத் தட்ட வேண்டியதுதானே. அதைத்தான் செய்கிறார் ஆண்டாள்.)
தோழி! விடிந்தது பொழுது. ஆனைச்சாத்தான் பறவைகள் கூட விழித்துக் கலந்து கீச்சுகீச்சென்று பேச்சு கொள்வது கேட்கலையோ! பேய்ப்பெண்ணே! இன்னமுமா கிடப்பது!
(ஆனைச்சாத்தான் என்ற பறவை மற்ற பறவைகளை விடச் சோம்பல் மிகுந்ததாம். இன்றைக்கு அந்தப் பறவையின் பெயர் நாம் அறியோம். நேரம் கழித்து எழும் பறவைகள் கூட எழுந்து கத்துகின்ற பொழுதும் தூங்குகின்றனரே சில தோழிமார் என்ற வருத்தத்தில்தான் பேய்ப் பெண்ணே என்று சொல்வது. தோழியரை உரிமையோடு கடிதல் அது.)
நம்மூர் ஆய்ச்சிகளை நீ அறிவாய். அந்த வாச நறுங்குழல் ஆய்ச்சியர்கள் தயிரினைப் பெரிய பானைகளில் ஊற்றி, அந்தப் பானைகளில் மரத்தாலான பெரிய மத்துகளை ஆழ்த்திக் கயிற்றை பிடித்துக் கொண்டு முன்னும் பின்னும் இழுத்துச் சளசளவென்று கடையும் பொழுது அவர்கள் கையணியும் காசுகளைக் கோர்த்த கழுத்தணியும் கலகலவென ஓசைப் படுத்துகின்றனவே! அதுகூட உன் காதுகளில் விழவில்லையா?
(ஆய்ச்சியர்கள் எப்பொழுதும் பாலோடும் தயிரோடும் மோரோடும் வெண்ணெய்யோடும் நெய்யோடும் புழங்குகின்றவர்கள். அந்த வாடை மிகுந்த கையை அடிக்கடி தலையில் தடவிக் கொள்வதால் அவர்கள் குழல் நறுமணம் கொண்டதாம். இதே கருத்தை வேறொரு இலக்கியத்தில் ஆயர்களுக்குப் படித்த நினைவு இருக்கிறது. பள்ளியில் படித்தது. எந்த இலக்கியம் என்று நினைவில் இல்லை.)
அடி தோழி! நாராயண மூர்த்தியாம் கேசவனை நாங்கள் எல்லாம் உன் வீட்டு வாசலில் வந்து நின்று அன்போடு பாடும் பொழுதும் நீ படுக்கையில் கிடக்கலாமா? அது முறையாமோ! எழில் மிகுந்தவளே! விரைந்து எழுவாய். கதவைத் திறவாய் எம்பாவாய்.
அன்புடன்,
கோ.இராகவன்
Thursday, December 22, 2005
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
என்ன ராகவன் சவுக்கியமா?
உங்கள் சமீப காலத்திய பதிவுகளின் நோக்கமும் அவற்றை நீங்கள் சொல்கின்ற அழகே அழகு ராகவன்.
எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியலை. ஜமாய்ங்க.
வாழ்த்துக்கள்
இராகவன்,
ஆனைச்சாத்தான் - வலியன் பறவைகள் என்று சில புத்தகங்களில் படித்தேன். ஆங்கிலத்தில் 'Seven-sisters' என்று அழைக்கிறார்கள். நான் திருச்சியில் பார்த்திருக்கிறேன். சாம்பல் நிறத்தில் இருக்கும்.
இராகவன்,
என் மகளுக்கு மிகவும் பிடித்தப் பாடல் இது. அவளைத் தூங்க வைப்பதற்காக எத்தனையோ பாடல்கள் பாடுவேன்; ஆனால் இந்தப் பாடல் பாடினால் பாடல் முடிவதற்குள் தூங்கியிருப்பாள் :-)
தேசமுடையாளை எழுப்பும் பாடல் இது; ஆனால் எங்கள் வீட்டு தேசமுடையாள் (தேஜஸ்வினி) இந்தப் பாடலைப் பாடினால் தூங்குகிறாள். :-)
Hi Raghavan,
Your blog is very nice. I used to read 'Thirupavai' at Margazhi month in my school days. But till date i don't know the meaning of each and every line in those pa's. You are doing a very good very job by giving meaning for the pa's.
Keep it up.
இராகவன், குமரன்:
அருஞ்சொல் விளக்கம் தேவை - தேசமுடையாள்
// என்ன ராகவன் சவுக்கியமா? //
நல்லாருக்கேன் ஜோசப் சார்.
// உங்கள் சமீப காலத்திய பதிவுகளின் நோக்கமும் அவற்றை நீங்கள் சொல்கின்ற அழகே அழகு ராகவன்.
எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியலை. ஜமாய்ங்க. //
பாராட்டு ரொம்ப சந்தோஷமா இருக்கு சார். என்னால முடிஞ்சதச் சொல்றேன். அவ்வளவுதான் சார்.
// ஆனைச்சாத்தான் - வலியன் பறவைகள் என்று சில புத்தகங்களில் படித்தேன். ஆங்கிலத்தில் 'Seven-sisters' என்று அழைக்கிறார்கள். நான் திருச்சியில் பார்த்திருக்கிறேன். சாம்பல் நிறத்தில் இருக்கும். //
தகவலுக்கு நன்றி தேசிகன். அந்தப் பறவையின் படம் கிடைத்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன்! எங்களுக்கும் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.
// என் மகளுக்கு மிகவும் பிடித்தப் பாடல் இது. அவளைத் தூங்க வைப்பதற்காக எத்தனையோ பாடல்கள் பாடுவேன்; ஆனால் இந்தப் பாடல் பாடினால் பாடல் முடிவதற்குள் தூங்கியிருப்பாள் :-) //
ஆகா உங்களுக்குப் பாடவும் வருமா! இது தெரியாமப் போச்சே. திருப்பாவை பாடல்களை நீங்கள் பாடிப் பதிவு செய்து எங்களுக்கு அனுப்புங்களேன்.
// தேசமுடையாளை எழுப்பும் பாடல் இது; ஆனால் எங்கள் வீட்டு தேசமுடையாள் (தேஜஸ்வினி) இந்தப் பாடலைப் பாடினால் தூங்குகிறாள். :-) //
இல்லையில்லை. தேசமுடையானை நேசமுடைய குழந்தை உள்ளத்தில் எழுப்பும் பாடல். சரிதானா?
// Your blog is very nice. I used to read 'Thirupavai' at Margazhi month in my school days. But till date i don't know the meaning of each and every line in those pa's. You are doing a very good very job by giving meaning for the pa's. //
நன்றி பால்கி. நீங்கள் படித்து மகிழ்ந்ததில் மிக்க மகிழ்ச்சி. நண்பர் தேசிகனும் திருப்பாவைக்குக் கவிதை விளக்கம் தினமும் தருகின்றார். www.desikan.com சென்று அவர் பிளாக் பாருங்கள். மிகவும் அருமையான விளக்கங்கள்.
// இராகவன், குமரன்:
அருஞ்சொல் விளக்கம் தேவை - தேசமுடையாள் //
மணியன்...தேசமுடையாள்......எனக்குத் தெரிந்த பொருளில் இதயத்து தேசமுடையாள் என்று வரும். குமரன் என்ன சொல்கிறாரோ!
தேசமுடையாளுக்கு உரையாசிரியர்கள் கொடுக்கும் விளக்கம் 'தேஜஸ் உடையாள், ஒளி மிகுந்தவள்' என்பது. என் மகள் பெயரும் தேஜஸ்வினி. அதைத் தான் அங்கே குறிப்பிட்டேன். தேசிகன் அவர்களும் இந்தச் சொல்லுக்கு 'பிரகாசமுடையவள்' என்ற பொருள் தான் கொடுத்துள்ளார்.
இராகவன்,
எல்லாப் பாடல்களின் விளக்கங்களையும் படித்து வருகிறேன்; பிரதியெடுத்து என் தந்தைக்கும் கொடுத்து வருகிறேன். அவரும் விரும்பிப் படித்து வருகிறார். தொடர்ந்து எழுத பாராட்டுகள்.
இந்தத் தொடர் முடிந்ததும், திருப்பாவையில் வரும் உவமைகள்/உவமேயங்கள் மற்ற இலக்கியங்களில் எப்படி தொடர்பு பெற்றிருக்கிறது என்று எழுதினால் நன்றாக இருக்கும். நீங்கள் தயிர் கடையும் மத்தைப் பற்றி குறிப்பிட்டு இருந்தீர்கள். அதற்கு நிறைய உபயோகங்கள் - கவிதையில் உவமைகளாக, வந்திருக்கின்றன. உ-ம்.
தயிர் உறு மத்தின் காம சரம் பட, தலைப்பட்டு ஊடும்
உயிர் உறு காதலாரின், ஒன்றை ஒன்று ஒருவகில்லா,
செயிர் உறு மனத்த ஆகி, தீத் திரள் செங் கண் சிந்த,
வயிர வான் மருப்பு யானை மலை என மலைவ கண்டார்.
(கம்ப ராமாயணம், பால காண்டம், மிதிலைக்காட்சிப் படலம்).
நீங்கள் ஒவ்வொரு உவமையாக எடுத்து பதிவு இட்டால், இணையத்தில் விஷயம் தெரிந்த மற்ற அன்பர்களோடு (குமரன், தேசிகன், ஜெயஸ்ரீ போன்றோர்) தொகுப்பாக வெளியிடலாம்.
// எல்லாப் பாடல்களின் விளக்கங்களையும் படித்து வருகிறேன்; பிரதியெடுத்து என் தந்தைக்கும் கொடுத்து வருகிறேன். அவரும் விரும்பிப் படித்து வருகிறார். தொடர்ந்து எழுத பாராட்டுகள். //
முதலில் தாமதமாக இந்தப் பின்னூட்டத்தைக் கவனித்ததிற்கு மன்னிக்கவும். உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி.
// இந்தத் தொடர் முடிந்ததும், திருப்பாவையில் வரும் உவமைகள்/உவமேயங்கள் மற்ற இலக்கியங்களில் எப்படி தொடர்பு பெற்றிருக்கிறது என்று எழுதினால் நன்றாக இருக்கும். நீங்கள் தயிர் கடையும் மத்தைப் பற்றி குறிப்பிட்டு இருந்தீர்கள். அதற்கு நிறைய உபயோகங்கள் - கவிதையில் உவமைகளாக, வந்திருக்கின்றன. உ-ம்.
நீங்கள் ஒவ்வொரு உவமையாக எடுத்து பதிவு இட்டால், இணையத்தில் விஷயம் தெரிந்த மற்ற அன்பர்களோடு (குமரன், தேசிகன், ஜெயஸ்ரீ போன்றோர்) தொகுப்பாக வெளியிடலாம். //
ரங்கா, இது மிக நல்ல முயற்சி. ஊர் கூடி இழுக்க வேண்டிய தேர். தேசிகன், குமரன், ஜெயஸ்ரீ மற்றும் நீங்கள் இருக்கையில் நிச்சயமாக தேர் நிலைக்கு வரலாம். ஆனால் அனைவரின் பங்களிப்பையும் ஒருமுகப் படுத்த வேண்டும். இதற்குத் தனியாக ஒரு பிளாக் தொடங்கி அனைவரும் அதில் மெம்பராக இருந்து செய்யலாம்.
குமரனும் பாவைக்கு விளக்கம் எழுதிக் கொண்டுதான் இருக்கின்றார். பெரிய தொடராகப் போகுமென்று தெரிகின்றது.
ஆகையால் இந்த அனைவரையும் மின்னஞ்சல் மூலம் ஒன்றிணைக்கும் வேலையைத் தாங்களே தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். மேலும் இந்தப் பணியில் வேறு யாரும் பங்கெடுக்கவும் விரும்பினால் அதற்கும் வழி செய்யலாம்.
Post a Comment