Wednesday, December 14, 2005

எங்கே நினைத்தாலும்...

செங்கேழடுத்த சினவடி வேலுந் திருமுகமும்
பங்கே நிரைத்த நற் பன்னிரு தோளும் பதுமமலர்க்
கொங்கே தரளஞ் சொரியும் செங்கோடைக் குமரன் என
எங்கே நினைப்பினும் அங்கேயென் முன் வந்தெதிர் நிற்பனே

செங்கேழடுத்த சினவடிவேல் முருகனுடையது. அதென்ன செங்கேழடுத்த வேல்? குறித்துக் கொள்ளுங்கள். கேழ் என்றால் ஒளி. செங்கேழ் என்றால் செம்மையான ஒளி. செம்மையாக ஒளிரும் வேலாம். பலர் செம்மை என்ற பண்பையும் சிவப்பு என்ற நிறத்தையும் குழப்பிக் கொள்கிறார்கள். முருகனின் பண்புகளில் ஒன்று செம்மை. அதாவது முறையானது. அப்படியென்றால் செங்கேழ் என்றால் முறையாக ஒளிரும் என்று கொள்ளலாமா? கண்டிப்பாகக் கொள்ளலாம். பேரொளி கொடுப்பதுதான் முறையானது என்று கொள்ளக் கூடாது.

பகலில் வரும் பகலவனின் பேரொளி எப்படி முறையானதோ அப்படித்தான் இரவினில் வரும் மதியத்தின் குளிரொளியும் முறையானதே. அதுபோலத்தான் முருகன் கை வேலும். வேல் என்பது ஞானத்தின் அடையாளம். அறிவு கூசக்கூடாது. உண்மையிலே அறிவுள்ளவனைப் பார்த்தால் நமக்குக் கூசாது. அரைகுறைகளின் நடவடிக்கைகளே கூசச் செய்யும்.

சரி. செங்கேழ் புரிந்தது. சினவடிவேல்? வேலுக்குச் சினம் வருமா? வள்ளுவர் என்ன சொல்கிறார் என்று நினைத்துப் பாருங்கள். "சினமெனும் சேர்ந்தாரைக் கொல்லி!" ஆக சினத்தைச் சேர்வது எதுவாயினும் அது சினத்தின் பண்பைப் பெற்று தன் பண்பை இழக்கும். நெருப்பில் போடப்படும் பொருள் நெருப்பின் பண்பைப் பெற்று தனது பண்பை இழக்குமல்லவா! முன்பே சொன்னேன். வேல் என்பது அறிவு. அறிவிற்கு எதன் மீது சினம் வரும்? அறியாமை மீதுதான். அந்த அறியாமை அறிவோடு சேரும் பொழுது அறிவின் பண்பைப் பெற்று அறியாமையின் பண்பை இழக்கும். சினவடிவேல் புரிகிறதா?

பங்கே நிரைத்த பன்னிரு தோள்கள். இருபக்கங்களிலும் வரிசையாக அமைந்த பன்னிரு தோள்களும் என்று பொருள். நிரைத்த என்றால் வரிசையான என்று பொருள்.

பதும மலர்க் கொங்கே - பதுமம் என்றால் தாமரை. தாமரை மலர்க் கொங்கு. கொங்கு என்றால் மகரந்தம். அதாவது பூத்தாது. கொங்கு நாடு என்பது பூத்தாது நிறைந்த நாட்டின் பெயர். முன்பெல்லாம் கொங்கு நாட்டில் மலைவளம் நிறைய. ஆகையால் பூக்களுக்கும் பூத்தாதுகளுக்கும் குறைவிருக்காது. இப்படி பூத்தாதுகளின் நறுமணம் நிரம்பிய நாடு என்பதால் கொங்கு நாடு என்றனர்.

தரளம் - தரளம் என்றால் முத்து. முத்து வெளிரிப் போயிருக்காது. மெல்லிய வெண்மஞ்சள் நிறத்தில் இருக்கும். பதும மலர்க் கொங்கே தரளம் சொரியும் என்றால் தாமரை மலர்களின் மெல்லிய மஞ்சள் முத்துப் போன்ற நுண்ணிய பூத்தாதுகள் நிரம்பிய என்று பொருள். அது எந்த ஊராம்? செங்கோடு. இன்றைய பெயர் திருச்செங்கோடு. மிகவும் பழமையான ஊர். சிலப்பதிகாரத்தில் முருகனுடைய ஊர் என்று குறிப்பிடப்படும் ஊர்.

அத்தகைய பெருமை வாய்ந்த திருச்செங்கோட்டில் குடி கொண்டுள்ள குமரனின் செங்கேழடுத்த சினவடிவேலும் திருமுகமும் பங்கே நிரைத்த பன்னிரு தோள்களும் எங்கே நினைத்தாலும் அங்கே வந்து எதிர் நிற்குமாம்.

எங்கே நினைத்தாலும் குமரன் எதிர் நிற்பானா? நிற்பான். ஆனால் நாம் உணரோம். ஏன்? எங்கே நினைத்தாலும் தூக்கம் வருமா? வராது. மிகுந்த களைப்பில் உடம்பு தூக்கத்தை எங்கே நினைத்தாலும் வந்து விடுகிறதே! தூக்கம் நிச்சயம் வேண்டும் என்று உறுதியாக ஒரே சிந்தனையில் உடல் நினைக்கும் பொழுது தூக்கம் மறுபேச்சு பேசாமல் வந்து விடுகிறது.

ஆக எப்பொழுதும் முருகனை நினைத்தேன் வரவில்லையே என்று வீண் பேசுவதை விடுத்து, உள்ளும் புறமும் ஒன்றி கந்தா எனக் கதறினால் பதறிக் கொண்டு ஓடி வருவான் வடிவேலன். கண்டிப்பாக வருவான். கண் முன்னே கடவுளா என்று விதண்டாவாதம் பேசுவதை விடுத்து அன்போடு கேளுங்கள். தரப்படும்.

இப்படி கந்தனுடைய அற்புத அலங்காரங்களைச் சொல்லில், அதுவும் தமிழ்ச் சொல்லில் படைத்து நமக்கெல்லாம் தந்த கருணைக்கடல் அருணகிரியாரின் கந்தரலங்காரத்தின் பொறுக்கு மணிகளுக்குப் பொருள் செய்யும் பெரும் பணியை இப்பொழுதைக்கு இத்தோடு முடித்துக் கொள்கிறேன். தமிழையும் தமிழ்க்கடவுளையும் போற்றி நாம் தீதின்றி வாழ்வோம்.

அன்புடன்,
கோ.இராகவன்

13 comments:

said...

சினத்தைச் சேர்வது எதுவாயினும் அது சினத்தின் பண்பைப் பெற்று தன் பண்பை இழக்கும்.//

எத்தனை சத்தியமான வார்த்தை ராகவன். இதை என் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.

said...

அப்புறம் நான் உங்களிடம் ஏற்கனவே கேட்டேனே. பைபிள் அறிமுகம். அதை எப்போ போடப் போறீங்க?//

உங்க கேள்விய இன்னைக்கித்தான் படிச்சேன். அடுத்த திங்கட் கிழமியிலருந்து துவங்கலாம் என்றிருக்கிறேன்.

said...

continue this good work..All the best

said...

// எத்தனை சத்தியமான வார்த்தை ராகவன். இதை என் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். //

நானும் இதை உணர்ந்திருக்கின்றேன் ஜோசப் சார். ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்று சொல்லமலா சொன்னார்கள்.

said...

// உங்க கேள்விய இன்னைக்கித்தான் படிச்சேன். அடுத்த திங்கட் கிழமியிலருந்து துவங்கலாம் என்றிருக்கிறேன். //

சூப்பர். தொடங்குங்க. காத்திருக்கிறேன். கேட்டதும் கொடுத்ததிற்கு நன்றி ஜோசப் சார்.

said...

// continue this good work..All the best //

கண்டிப்பா வீரமணி இளங்கோ. கந்தரலங்காரம் பொறுக்குமணி இத்தோட முடியுது. மார்கழி வர்ரதால திருப்பாவை தொடங்கனும். அதுக்குப் பிறகு கந்தரநுபூதி. அப்புறம்....நெறைய இருக்குல்ல தமிழ்ல. ஒன்னொன்னா போடலாம்.

said...

//நெறைய இருக்குல்ல தமிழ்ல. ஒன்னொன்னா போடலாம். //

பழம் நீ அப்பா.... ஞானப்பழம் நீ அப்பா..... தமிழ் ஞானப் பழம் நீ அப்பா......

நல்ல பதிவுகள் ராகவன்.

நல்லா இருங்க.

said...

// நல்ல பதிவுகள் ராகவன்.

நல்லா இருங்க. //

நன்றி டீச்சர். நீங்களும் இங்க வந்து படிச்சது ரொம்ப சந்தோஷம் டீச்சர்.

said...

என்ன இராகவன். இவ்வளவு சீக்கிரம் கந்தரலங்காரத்தை நிறைவு செய்துவிட்டீர்கள்? எப்போது முழுதுமாகப் பொருள் கூறப்போகிறீர்கள்? திருப்பாவையும், கந்தரனுபூதியும் முடிந்த பிறகா?

இந்தப் பாடலில் சில சொற்களுக்கு நான் வேறு பொருள் கொண்டிருந்தேன். இன்று உங்கள் விளக்கத்தால் அது மாறியது.

செங்கேழடுத்த என்றால் சிவந்த நெருப்பினைப் போன்ற என்றும், கொங்கு என்றால் மலரில் இருக்கும் தேன் என்றும் எண்ணிக்கொண்டிருந்தேன்.

said...

// என்ன இராகவன். இவ்வளவு சீக்கிரம் கந்தரலங்காரத்தை நிறைவு செய்துவிட்டீர்கள்? எப்போது முழுதுமாகப் பொருள் கூறப்போகிறீர்கள்? திருப்பாவையும், கந்தரனுபூதியும் முடிந்த பிறகா? //

இருக்கலாம் குமரன். மார்கழியும் மிகவும் நெருங்கி விட்டதே. அதனால்தான். அநுபூதியில் கடவுள் வாழ்த்தோடு சேர்த்து 52 பாடல்கள். அனைத்திற்கும் விளக்கம் சொல்லியே ஆக வேண்டும்.

// கொங்கு என்றால் மலரில் இருக்கும் தேன் என்றும் எண்ணிக்கொண்டிருந்தேன். //

கொங்கலர்தார் - கொங்கு அலர் தார் என்று இளங்கோவும் சொல்லியிருக்கின்றாரே! கொங்கு என்பதற்குப் பூத்தாது என்ற பொருளே சரியானது.

said...

இராகவன்,

"செங்கேழடுத்த" என்ற வார்த்தைக்கு நானும் குமரன் எண்ணியது போலத்தான் அர்த்தம் கொண்டிருந்தேன். "சினவடிவேல்" வார்த்தைக்கும் தங்கள் விளக்கம் அருமை. கேட்டதேயில்லை. நன்றி!

ரங்கா.

said...

எந்தையெனை ஆண்டருளும் கந்தகுருநாதன் சிந்தையில் நிலையாகவே, நின்றிடும் வண்ணமாய் செந்தமிழ் மந்திரம்
யாவர்க்கும் புரிய வைத்தீர்...
மனமார்ந்த நன்றிகள் ஆசிரியரே...

said...

எந்தையெனை ஆண்டருளும் கந்தகுருநாதன் சிந்தையில் நிலையாகவே, நின்றிடும் வண்ணமாய் செந்தமிழ் மந்திரம்
யாவர்க்கும் புரிய வைத்தீர்...
மனமார்ந்த நன்றிகள் ஆசிரியரே...