Friday, December 16, 2005

பாவை - ஒன்று

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்


(தமிழில் ஒரு வழக்கு உண்டு. "தாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்." அது மிகவும் நல்ல பண்பு. தென்பாண்டி நாட்டாள் கோதை ஆண்டாள் அந்தப் பண்பிலே சிறந்தவர். தானுறும் இன்பம் தன்னைப் போன்றோரும் உற வேண்டும் என்பதற்காகப் பாடியது திருப்பாவை. ஆகையால்தான் கண்ணனைப் பாடும் முன்னே தோழியரை அழைக்கிறார். தன்னோடு சேர்ந்து நோன்பு நோற்று இன்பம் உற்று மகிழ அழைக்கிறார். "நோன்பிலே உயிர்ப்பதென்ன கண்ண பெருமானே" என்று பாரதி பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு பாடியதை முன்பே பாடியிருக்கிறார் ஆண்டாள்.)

மார்கழித் திங்கள் உங்களைக் காக்க வந்ததே! சீர் மிகுந்து செழிக்கும் திருவாய்ப்பாடியைச் சேர்ந்த செல்வச் சிறுமிகளே! அழகு மிகுந்த அணிகலன்களைப் பூட்டிக் கொண்டுள்ள தோழிகளே! விடிகிற பொழுதும் நிலவொளி மிகுந்து குளிரும் மார்கழி மாதத்து நல்ல நாட்களின் காலையில் எழுந்து நீராட வேண்டும். அப்படி நீராடி நமது பாவை நோன்பைத் துவக்கலாமா!

நந்தகோபனை நீங்கள் அறிவீர்கள். ஆயர் தலைவன் அவன். கூரிய வேலைக் கையில் கொண்டு பாலூறிய பசுக்களைத் துன்புறுத்துவோரைத் துன்புறுத்துகின்ற அந்த நந்தகோபனின் இளங்குமரனே கண்ணன். மலர் நீள்விழி யசோதை இருக்கிறாளே, அவளுடைய இளைய மைந்தனே சிங்கம் போன்று வீறு கொண்ட மைவிழி வண்ணன். கருத்த மேனியந்தான். சிவந்த கண்ணுடையவந்தான். ஆனாலும் குளிர்ந்து ஒளிர்ந்து மிளிர்ந்திடும் நிலவு முகமுடையான். அவனே நாரணன். அவனே பரந்தாமன். நமக்கு நன்மை தர வல்லான் அவனே. அவனைத் தொழுது கொண்டு விடியற்காலைப் பொழுது கண்டு நீராடிடுவோம்.

(வள்ளுவர் தெளிவாகச் சொல்லியிருக்கின்றார். "புறத்தூய்மை நீரால் அமையும்." ஆகையால் காலை எழுந்து நீராடி அழுக்கு நீக்க வேண்டும். விடியலில் நீராடுவது மிகவும் நன்று. அது உடலுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுக்கும். சரி. இன்னொரு விதத்தில் பார்ப்போம். எந்தப் பொருளையும் தூய்மைப் படுத்த வேண்டுமென்றால் அதை நீரில் இடுகிறோம். அகம் தூய்மையாகத்தான் சைவர்கள் நீறாடுகிறார்கள். வைணவர்கள் திருமண்ணாடுகிறார்கள்.)

இரவில் மனம் தன்வசமில்லாத பொழுது பல இடங்களுக்குச் செல்லும். அந்த நினைவுகள் காலை எழுகையில் இருந்தாலும் ஆண்டவனைத் தொழுகையில் இருக்கலாமா? அதனால்தான் விடியற்காலை நீராடல். தண்ணீர் தலை பட்டு மேல் திரண்டுக் கால் சேரும் பொழுது உடலும் உள்ளமும் உயிரும் குளிர்ந்து விழிப்படைகிறது. அப்படி நமது உயிரினை விழித்துக் கொண்டு தோழியரை விளித்துக் கொண்டு ஊரார் எல்லாம் நம்மைப் பெருமித்துப் புகழும் படியாகக் கண்ணனைப் படிந்து பாவை நோன்பைத் துவக்குவாய் எம்பாவாய்!

அன்புடன்,
கோ.இராகவன்

9 comments:

said...

இரவில் மனம் தன்வசமில்லாத பொழுது பல இடங்களுக்குச் செல்லும். அந்த நினைவுகள் காலை எழுகையில் இருந்தாலும் ஆண்டவனைத் தொழுகையில் இருக்கலாமா? அதனால்தான் விடியற்காலை நீராடல். //

இந்த புறத்தூய்மையை கிறீஸ்த்துவ மதம் பெரிதாக கருதுவதாகக் கருதுவதில்லை. எத்தனைதான் சுத்தமாக குளித்து, சுத்தமான உடைகளை உடுத்து கடவுளைத் தொழவேண்டுமென்று ஆலயம் செல்லும்போது அகம் தூய்மையாயிருந்தால் என்ன பயன் என்று கேட்டார் இயேசுபிரான் தன்னை எதிர்த்த பரிசேயர்களைப் பார்த்து.

ஆனாலும் நீங்கள் குளிப்பதற்கு எழுதிய விளக்கத்தைப் படித்தபோது சரி என்றுதான் தோன்றுகிறது.

வாழ்த்துக்கள் ராகவன். உங்களுக்கும் ஒரு மெய்ல் அனுப்பியிருக்கிறேன். பாருங்கள்.

said...

அன்பின் ராகவன்,

அருமையான பதிவு.

said...

இராகவன்,
பொன வருடம் நான், இந்த வருடம் நீங்கள். வாழ்த்துக்கள்!
(அதை பற்றிய குறிப்பை என் வலைப்பதிவில் இன்று தந்திருக்கிறேன்.)
தேசிகன்
http://www.desikan.com/blogcms/

said...

// இந்த புறத்தூய்மையை கிறீஸ்த்துவ மதம் பெரிதாக கருதுவதாகக் கருதுவதில்லை. எத்தனைதான் சுத்தமாக குளித்து, சுத்தமான உடைகளை உடுத்து கடவுளைத் தொழவேண்டுமென்று ஆலயம் செல்லும்போது அகம் தூய்மையாயிருந்தால் என்ன பயன் என்று கேட்டார் இயேசுபிரான் தன்னை எதிர்த்த பரிசேயர்களைப் பார்த்து. //

ஏசுபிரானின் கேள்வி மிகவும் நியாயமானது. புறம் மட்டும் தூய்மையாக இருந்தால் போதாது. அகமும் தூய்மையாக இருக்கவேண்டும். ஆகையால்தான் வள்ளுவர் அகத்தூய்மையை மட்டும் கூறாமல் புறத்தூய்மையையும் கூறினார்.

said...

// அன்பின் ராகவன்,

அருமையான பதிவு. //
நன்றி மூர்த்தியண்ணா. இடைவிடாத உங்கள் ஊக்கமே இதற்கெல்லாம் காரணம்.

// இராகவன்,
பொன வருடம் நான், இந்த வருடம் நீங்கள். வாழ்த்துக்கள்!
(அதை பற்றிய குறிப்பை என் வலைப்பதிவில் இன்று தந்திருக்கிறேன்.)
தேசிகன்
http://www.desikan.com/blogcms/ //
நன்றி தேசிகன். நீங்கள் குறிப்பிட்ட வலைப்பூவில் இப்பொழுதே சென்று பார்க்கின்றேன். நீங்கள் இன்னமும் சிறப்பாகவே செய்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அதற்காகவேனும் கண்டிப்பாகப் படிக்க வேண்டும்.

said...

இராகவன், அருமை. நான் இதுவரைப் படித்திராத பல விளக்கங்களை இங்கு கண்டேன்.

தானுறும் இன்பம் தன்னைப் போன்றோரும் உறவேண்டும் என்பதற்காகப் பாடியது திருப்பாவை.
விடிகிற பொழுதும் நிலவொளி மிகுந்து குளிரும் மார்கழி மாதத்து...
புறந்தூய்மை நீரான் அமையும்...
தண்ணீர் தலைப்பட்டு மேல் திரண்டுக் கால் சேரும் போது உடலும் உள்ளமும் குளிர்ந்து விழிப்படைகிறது.

இவையெல்லாம் அற்புதமாக இருக்கிறது.

தமிழில் உள்ள வழக்கு 'தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதை நன்றாய் புரிந்துவைத்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

said...

நன்றி குமரன்.

பெருக இந்த வையகம்......கண்டிப்பான எழுத்துப்பிழை. கையால் எழுதியிருந்தால் வந்திருக்காது. தட்டச்சியதுதானே. இனிமேல் பார்த்துச் செய்கின்றேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

said...

அருமை, ராகவன்.

//கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்//

வசுதேவன், தேவகி பிள்ளை என்று சொல்லாமல்: யசோதைக்கும், நந்தகோபனுக்கும் கிடைத்த பாலகோபாலனை குழந்தையாய் கொஞ்சியும், கெஞ்சியும் வளர்க்கும் பேற்றை அழகாய் கூறுகிறார் ஆண்டாள் என்று நினைக்கிறேன்.

said...

// பதவுரை நன்று! //

நன்றி தமாஷ் பாண்டி. சரி. இப்ப சொன்னது தமாஷ் இல்லையே ;-)

// வசுதேவன், தேவகி பிள்ளை என்று சொல்லாமல்: யசோதைக்கும், நந்தகோபனுக்கும் கிடைத்த பாலகோபாலனை குழந்தையாய் கொஞ்சியும், கெஞ்சியும் வளர்க்கும் பேற்றை அழகாய் கூறுகிறார் ஆண்டாள் என்று நினைக்கிறேன். //

உண்மை இராமநாதன். இது தொடர்பாக ஐந்தாவது பாடலின் விளக்கத்தில் கருத்தொன்று சொல்லியிருக்கின்றேன் பாருங்கள்.