Friday, December 30, 2005

பாவை - பதினைந்து

எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ
சில் என்று அழையேன் மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையாய்
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயானைப் பாடேலோர் எம்பாவாய்


(இந்தப் பாடல் ஆண்டாளுக்கும் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு தோழிக்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையாக இருக்கிறது.)

ஆண்டாள் : எல்லே! இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ! இன்னமும் நீ கிடந்துறங்க என்ன காரணம் இருக்க முடியுமென்று எனக்குத் தோன்றவில்லையே!
(எல்லே என்பது பாண்டி நாட்டு வழக்கு. தூத்துக்குடி திருநெல்வேலிப் பக்கங்களில் இன்னும் ஏலே என்று அழைப்பதைக் கேட்கலாம். எல்லே என்பது மருவி ஏலே என்றாயிற்று. வா போ என்பதற்குக் கூட வாலே போலே என்று சொல்வார்கள். தென்பாண்டி ஆண்டாள் தேன்பாண்டி வழக்கைப் பயன்படுத்தியதும் சிறப்பு.)

தோழி : தோழியர்களே சிலுசிலுவென்று எரிச்சலூட்டும் விதமாக என்னை அழைக்காதீர்கள். இதோ இன்னும் சிறிது நேரத்திலேயே நான் வந்து விடுகின்றேன்.

ஆண்டாள் : அடி தோழி! நயமானவளே! உனது கதைகளை உன் வாயால் சொல்லியே நாங்கள் அறிவோம். ஒழுங்காக எழுந்து வருவாய்!

தோழி : சரி. நீங்களே சிறந்தவர்கள் ஒத்துக்கொள்கின்றேன். நீங்களே சென்று நோன்பு நூற்று நன்றாக இருங்கள். நானே நோன்பு நோற்காமல் இழந்தவளாகப் போகின்றேன். நீங்கள் இன்புற்று வாழுங்கள்.

ஆண்டாள் : ஆகா! வேறு வேலைகள் உடையவளே! விரைவாக (ஒல்லை) எழுந்து வா! யாரெல்லாம் வரவேண்டுமோ அவர்கள் எல்லாரும் வந்தாகி விட்டது. நீயும் வந்து எங்களோடு சேர்ந்து கொள்வாய்.

(தோழியர் ஒன்று கூடி அனைவரும் சேர்ந்து செய்ய வேண்டும் என்று எண்ணிய நோன்பு. ஆகையால் அனைவரையும் ஒரு வழியாக எழுப்புகிறார் கோதையார். நடுவில் தூக்கக் கலக்கத்தில் கோவித்துக் கொண்ட தோழியைக் கூட சமாளித்து எழுப்பி விட்டார். ஒல்லை என்ற சொல்லிற்கு விரைந்து என்று பொருள். இதே சொல்லை சண்முகக் கவசத்தில் பாம்பன் சுவாமிகள் பயன்படுத்தியுள்ளார். "ஒல்லையில் தாரகாரி ஓம் காக்க" அதாவது ஓங்காரமாய் விளங்கும் வேலவன் விரைந்து வந்து காக்க!)

தோழியர்களே! கண்ணன் திருவாய்ப்பாடியை விட்டு வடமதுரைக்குச் சென்ற பொழுது அவனுடைய மாமன் ஆனையை ஏவும் ஆணையை ஏவினான். அந்தோ! அந்த ஆனையும் கோவிந்தன் மீது பாய்ந்தது. அத்தோடு அதன் உயிர் ஓய்ந்தது. அப்படி ஆனையைக் கொன்றானை, தீயவர்களைப் போரில் அழிக்க வல்லானை மாயானைப் பாடிப் புகழ்வாய் எம்பாவாய்!

அன்புடன்,
கோ.இராகவன்

2 comments:

said...

ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லையில் அந்நலம் புல்கு பற்றற்றே

என்றே ஆண்டாளும் ஆழ்வாரும் கூறுகிறார்கள்
என்றோ நாம் அவர் சொல் கேட்பது?

said...

// ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லையில் அந்நலம் புல்கு பற்றற்றே

என்றே ஆண்டாளும் ஆழ்வாரும் கூறுகிறார்கள்
என்றோ நாம் அவர் சொல் கேட்பது? //

உண்மைதான் குமரன். அதையும் ஆண்டவனே முடிவு செய்ய வேண்டும்.