Thursday, December 08, 2005

துணையாக வருவது...

யாருமே நம்மோடு இல்லை என்று ஒரு நிலை இல்லவே இல்லை. அப்படி யாரும் மனது நொந்தால் இந்தப் பாடலை நினையுங்கள். படியுங்கள். உங்கள் உள்ளம் தெளியும். இறைவன் நம்மோடு எப்பொழுதும் இருக்கிறான் என்று நம்புகிறவர்கள் இந்தப் பாடலைப் படியுங்கள். இறைவனின் கருணை விளங்கும்.

விழிக்குத் துணை திரு மென்மலர்ப் பாதங்கள் மொய்மைகுன்றா
மொழிக்குத் துணை முருகா வெனும் நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணை பன்னிரு தோள்களும் பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே


நம்மோடு இருக்கின்ற பல விஷயங்கள் நமக்குத் தோன்றுவதேயில்லை. இதயம் எப்பொழுதும் அடிக்கிறது. ஆனால் தோன்றுகிறதா? ஆனால் இதயம் அளவிற்கு அதிகமாக வேலை செய்யும் பொழுது தோன்றுகிறது. இறைவன் நம்மோடு துணையாக இருக்கிறார். வழக்கமாக நமக்கு அது தோன்றுவதில்லை. ஆனால் துன்பம் வருகையில் தோன்றுகிறது. ஆனாலும் இறைவன் எப்பொழுதும் நம்மோடு இருப்பதால் தமிழ் மொழியானது முருகனைத் தோன்றாத் துணைவன் என்று சொல்கிறது.

விழிக்குத் துணை திருமென் மலர்ப் பாதங்கள் - இறைவனின் திருவடிகள் கண்ட பார்வைதான் பார்வை. "கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே" என்கிறார் இளங்கோவடிகள். இறைவனை எங்கே காண்பது? காக்கைச் சிறகினிலே, பார்க்கும் மரங்களிலே என்று நோக்குமிடமெங்கும் நீங்கமற நின்ற நிமலனைக் காண வேண்டும். அது விழிகளில் அன்பு இருந்தால்தான் முடியும். அதனால்தான் அருணகிரியும் "விழிக்குத் துணை திருமென்மலர்ப் பாதங்கள்" என்றார்.

மொய்மை குன்றா மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் - முருகன் என்ற பெயர் தூய தமிழ்ப் பெயர். தமிழ்ப் பண்பாட்டோடு வந்த பெயர். "அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக" என்கிறார் நக்கீரர். முருகு என்ற பெயரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

அகரமும் உகரமும் மகரமும் சேர்ந்தது ஓங்காரம். இதில் அகரம் படைப்பையும், உகரம் காத்தலையும், மகரம் அழித்தலையும் குறிக்கிறது. இந்த மூன்றில் உகரமானது முருகு என்ற பெயரின் மூன்று எழுத்துகளிலும் வருவதால், முருகு என்ற பெயரின் பெருமை விளங்கும்.

முருகக் கடவுளுக்குப் பிற்காலத்தில் ஆயிரம் பெயர்கள் கூட்டப் பட்டது. சண்முகன், சுப்பிரமணியன், கார்த்திகேயன், காங்கேயன் என்று அடுக்கிக் கொண்டு போனார்கள். ஆனாலும் இத்தனை ஆண்டுகளாக அத்தனை பெயர்களுக்கும் முதன்மையாய் நின்று வந்திருப்பது முருகன் என்ற தூய தமிழ்ப் பெயரே. அந்தப் பெயரைச் சொல்லி முருகனை வழிபடுதல் மிகச் சிறப்பு.

இதைச் சொல்ல வந்துதான் "மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்" என்றார் அருணகிரி. நீ என்றால் ஒருமை. நீங்கள் என்றால் மரியாதை மிகுந்த பன்மை. முருகா எனும் நாமம் என்று சொல்லாமல் நாமங்கள் என்று சொல்லி மதிப்பைக் காட்டியுள்ளார் அருணகிரி.

முன்பு செய்த பழிக்குத் துணை பன்னிரு தோள்களும் - இந்த வரிக்கு விளக்கமே தேவையில்லை. இருந்தாலும் சொல்கிறேன். பழிக்கு ஏன் தோள்கள் துணையென்றார் அருணகிரி? பழியை உணர்ந்த பின் முருகனை வேண்டி தீந்தமிழ்ப் பாக்களை நாம் சூட்டினால் அவைகளை வாங்கிக் கொள்ள ஒரு தோள் போதாமல் பன்னிரண்டு தோள்களோடு நிற்கிறான் முருகன். "மல்லேபுரி பன்னிரு வாகுவில் என் சொல்லே புனையும்" என்று கந்தரநுபூதியில் பாடியிருக்கிறார் அருணகிரி.

பயந்த தனி வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே - எந்த வழியிலும் நமக்குத் தனிமையில்லை. நம்மோடு என்றைக்கும் முருகன் துணையிருப்பான். வேலும் மயிலும் துணையிருக்க எந்தத் தீதும் நமை அண்டாது. அதென்ன வேலும் மயிலும்? வேல் அறிவின் அடையாளம். மயில் ஓங்காரத்தின் அடையாளம். துன்பம் வரும் வேளையில் ஓங்கார வேலன் அறிவாக வந்து நமக்கு நல்ல சிந்தனையைத் தந்து காப்பாற்றுவான் என்பதால்தான் வேலும் மயிலும் துணை என்றார்கள்.

எந்த நிலையிலும் நம்மைத் தனிமையில் விடாது காத்து அருளும் கந்தன் திருமலரடி வணங்கி முருகா எனப் புகழ்ந்து இன்புறுவதே சிறப்பாகும்.

அன்புடன்,
கோ.இராகவன்

11 comments:

said...

வேல் அறிவின் அடையாளம். மயில் ஓங்காரத்தின் அடையாளம். துன்பம் வரும் வேளையில் ஓங்கார வேலன் அறிவாக வந்து நமக்கு நல்ல சிந்தனையைத் தந்து காப்பாற்றுவான் என்பதால்தான் வேலும் மயிலும் துணை என்றார்கள்.//

Beautiful explanation Raghavan!

வேற்று மதத்தவனாகிய என்னையே கவர்ந்திழுக்கிறது உங்களுடைய இந்த பக்திப் பதிவுகள். வாழ்த்துக்கள்.

said...

விழிக்குத் துணை இராகவன் எழுதும் வலைப்பதிவு; மெய்மை குன்றா
மொழிக்குத் துணை அவர்தம் இனிய விளக்கங்கள்; முன்பு செய்த
பழிக்குத் துணை பன்னிரு தோளன் புகழ்; பயந்த தனி
வழிக்குத் துணை அவன்புகழ் பாடும் இவனைப் போற்றுதலே.

said...

Arunagiriyarin pathathi kesa varnanay migavum pramatham.Thiruthani Murugan umakku vazhithunay varuvan. TRC

said...

// இவ்வளவு அருமையாக முருகப் பெருமானின் நாமத்தின் பெருமையை விளக்கியதிற்கு நன்றி! //

நன்றி பல்லவி. இதை எனது தொண்டாக நினைத்துச் செய்கின்றேன்.

said...

// Beautiful explanation Raghavan!

வேற்று மதத்தவனாகிய என்னையே கவர்ந்திழுக்கிறது உங்களுடைய இந்த பக்திப் பதிவுகள். வாழ்த்துக்கள். //

ஜோசப் சார். உங்களது பின்னூட்டத்தை இங்கு கண்டு நான் பெரிதும் மகிழ்கின்றேன். நமக்குதானே சார் மதம். ஆண்டவனுக்குமா?

தூத்துக்குடியில் சர்ச் என்று சொல்ல மாட்டோமே. மாதாகோயில்தானே. அதுலயும் சின்ன கோயில் பெரிய கோயில் என்று சொல்லித்தானே நமக்கும் பழக்கம். அதற்கும் இதற்கும் எப்படி என்னால் வேறுபாடு பார்க்க முடியும்.

சின்னவயதில் புதுக்கிராமம் பெருமாள் கோயில் பஸ்ஸ்டாப்பில் 3A பஸ்ஸைப் பிடித்து பெரிய கோயில் ஸ்டாப்பில் பள்ளிக்கு எறங்குவேன். பலமுறை பெரிய கோயிலுக்கு பதிலாகப் பெருமாள் கோயில் என்றும் பெருமாள் கோயிலுக்குப் பதிலாக பெரிய கோயில் என்றும் டிக்கெட் கேட்டதுண்டு. அது பெரிய கூத்து ஜோசப் சார்.

அப்புறம் நான் உங்களிடம் ஏற்கனவே கேட்டேனே. பைபிள் அறிமுகம். அதை எப்போ போடப் போறீங்க?

said...

// விழிக்குத் துணை இராகவன் எழுதும் வலைப்பதிவு; மெய்மை குன்றா
மொழிக்குத் துணை அவர்தம் இனிய விளக்கங்கள்; முன்பு செய்த
பழிக்குத் துணை பன்னிரு தோளன் புகழ்; பயந்த தனி
வழிக்குத் துணை அவன்புகழ் பாடும் இவனைப் போற்றுதலே. //

என்ன குமரன். பாட்டாவே பாடீட்டீங்களா? எல்லாப் புகழும் அந்த இறைவனுக்கே. அருணகிரி சொன்ன மாதிரி "யாமோதிய கல்வியும் எம்மறிவும் தாமே பெற வேலவர் தந்ததினால்".

said...

// Arunagiriyarin pathathi kesa varnanay migavum pramatham.Thiruthani Murugan umakku vazhithunay varuvan. TRC //

நன்றி TRC, உங்கள் வாழ்த்து எனக்கு உவப்பை அளிக்கின்றது.

said...

Dear Raghavanˆ¼C vè‰î͘F:„¼ªî÷ vè‰îW˜F-

˜º‚ «ñ ðMˆó‹ úî£ î„êKˆó‹

è«ó îvò ‚¼îò‹ õ¹vîvò Š¼ˆò‹

°«ý ú‰¶ hï£ ññ£«êûð£õ£:

è‡èO™ è‰îQ¡ à¼õ«ñ «î£¡ø†´‹, 裶èO™ è‰îQ¡ ¹è¿‹ ºèˆF™ (õ£J™) Üõù¶ ¹‡òñ£ù êKˆFóº‹, ¬èJ™ Üõù¶ «ê¬õ„ ªêò½‹, àìL™ Üõù¶ áNòº‹ -- ÞŠð® ⡠ܬùˆ¶ à혾èÀ‹ vè‰î¬ù„ ꣘‰«î ܬñò†´‹.

said...

TRC, நீங்கள் எழுதியதை என்னால் படிக்க முடியவில்லை. எந்த ஃபாண்டு பயன்படுத்தியிருக்கின்றீர்கள்?

said...

//"யாமோதிய கல்வியும் எம்மறிவும் தாமே பெற வேலவர் தந்ததினால்".//

நீர் ஓதிய பொருளும் தீஞ் சுவையும் யாம் பருகிட வேலவர் தந்ததினால்...

said...

அருமையான எளிமையான விளக்கங்கள். மிக்க நன்றி

வழிப்போக்கன்