ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்
ஆழி உள்புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்துப்
பாழியம் தோளுடைப் பற்பனாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிந்தேலோர் எம்பாவாய்
நோன்பைச் சொல்லி அதன் பெருமையைச் சொல்லி அதன் முறைமைகளைச் சொல்லி அதன் பலன்களையும் சொல்லியாகி விட்டது. இப்பொழுது நோன்பைத் துவக்கலாம். அப்படி நோன்பைத் துவக்கவும் தொடரவும் இறைவன் அருள் வேண்டும். அதை வேண்டுவோம் முதலில்.
கண்ணனே! கடலுக்கும் மழைக்கும் மன்னனே! நீ எங்களை எதற்கும் கை விடாதே. நாங்கள் நோன்பு துவக்குகிறோம். உன்னருளின்றி ஒன்றும் ஆகாது. துவங்கும் நோன்பும் தூய்மையாகத் துவங்க வேண்டும். உள்ளத்தைத் தூய்மைப் படுத்துவதும் நீர். உடலைத் தூய்மைப் படுத்துவதும் நீர். எங்களைக் காக்க நீரே வரவேண்டும் நீராகவும் வரவேண்டும்.
எப்படித் தெரியுமா? ஆழமான ஆழியில் நிறைந்து ததும்பும் உப்புதல் கொண்ட நீரை முகந்து உப்புதல் கொண்டு இடியிடித்துக் கொண்டு விண்ணில் ஏறிடும் மேகங்கள். ஊழி முதல்வனான உந்தன் மேனி போலவே கருத்து விண்ணை மறைத்து நிற்கும் அந்த மேகங்கள். விரிந்த (பாழியம்) தோள்களை உடைய பற்பனாபன் கையில் இருக்கும் சக்கரத்தினைப் போல மின்னிடும் அந்த மேகங்கள். ஓவென்று மங்கலமாய் ஒலிக்கும் உனது கைச் சங்கைப் போல அதிர்ந்திடும் அந்த மேகங்கள்.
(கண்ணனின் கரிய மேனியைப் பாடாத தமிழ்ப் புலவன் யார்? சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் பாடுகிறார். "கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே!" சைவ மரபில் பிறந்த அவரும் கரியவனைப் பாடியிருக்கிறார். வைணவ மரபில் வந்த பகழிக்கூத்தர் முருகனைப் பாடியது போல. சமய மயக்கம் கூடாது என்பதே இதன் பொருள்.)
மின்னியும் அதிர்ந்தும் நின்று விடாமலும் காலம் தாழ்த்தாமலும் உனது கையிலிருக்கும் சார்ங்கம் என்ற வில்லிலிருந்து பொழியப்படும் இடைவிடாத அம்புகளைப் போல சரஞ்சரமாய் மழை பெய்து இந்த உலகத்தில் நாங்கள் அனைவரும் வாழ்ந்திடும் வகை செய்வாய். அப்பொழுதான் நீர்வளம் பெருகி இந்த மார்கழி மாதத்தில் நாங்கள் நீராடித் தூய்மையாவாய் எம்பாவாய்!
(இந்தப் பாடலில் இன்னொரு சிறப்பும் உண்டு. நோக்குமிடமெங்கும் இறைவனைக் கண்டவள் கேட்கும் ஒலியெல்லாம் இறைவனைக் கேட்டாள். இறைவன் புலன்களுக்கு எட்டான் என எப்படிச் சொல்வது? பார்க்கும் பார்வை. கேட்கும் ஒலி. நுகரும் நாற்றம். உணரும் தீண்டல். பேசும் மொழி என்று ஐந்து புலன்களின் வழியாகவும் நாம் உணர்ந்து கொண்டிருப்பது இறைவன் கருணையல்லவா. ஆகையால்தான் மழை மேகங்களைப் பார்த்ததும் இடியிடித்து மின்னியதும் கண்ணன் நினைவில் ஆழ்கின்றார். அதனால்தான் வைணவ அடியவர்களை ஆழ்வார் என்பர். கரிய மேகத்தைப் பார்த்தால் கண்ணனின் கரிய மேனி நினைவில் வருகிறது. இடிக்கும் ஒலியில் கண்ணனின் கைச்சங்கின் ஒலி எழுகிறது. மின்னுகின்ற மின்னல் திருமால் கைச் சக்கரம் போலத் தெரிகிறது. பொழியும் சர மழையில் சார்ங்க வில்லின் அம்பு மழை தெரிகின்றது. அதுதான் அன்பு மழைபெயனப் பெய்கிறது ஆண்டாளுக்கு.)
அன்புடன்,
கோ.இராகவன்
Monday, December 19, 2005
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
அருமையான விளக்கம் இராகவன்.
//சார்ங்கம் உதைத்த சர மழை போல்
//
இதற்கு பல நாள் முன்னர் தூர்தர்ஷனில் ஒருவர் சொன்ன விளக்கம் நினைவுக்கு வருகிறது.
-
தீயோரை அழிக்க இராமபிரானிற்காக காத்துக்கொண்டிராமல், சார்ங்கம் என்ற வில்லிலிருந்து தாமாகவே இராமபானங்கள் உதைத்துக்கொண்டு பறக்கின்றன -
ஆண்டாளின் சொல்லிற்கும் அன்பிற்கும் அந்தப் பரமனே கட்டுப்பட்டானென்றால், நாமெல்லாம் எம்மாத்திரம்?
எளிமையும் இனிமையும் கொண்ட உரை இராகவன்.
இளங்கோவடிகள் சைவரா? நான் சமணர் என்றல்லவா நினைத்துக்கொண்டிருந்தேன்.
இந்தப் பாடல் மழைக்கடவுளை நோக்கிப் பாடப்பட்டது என்று உரை கூறுவது தான் மரபு. ஆனால் அது ஏன் கண்ணனையே நோக்கிப் பாடுவதாய்க் கொள்ளக்கூடாது என்று அடிக்கடி நான் எண்ணுவதுண்டு. நீங்கள் அந்த அடிப்படையிலேயே பொருள் கூறி இருக்கிறீர்கள். :-)
உங்கள் கருத்துப்படி பாரதியும் ஒரு ஆழ்வார் தானே? அவரும் தான் காக்கைச் சிறகினிலும், பார்க்கும் மரங்களிலும், கேட்கும் ஒலியினிலும், தீக்குள் விரலைவைத்தும் கண்ணனைக் கண்டவர்.
//மழை மேகங்களைப் பார்த்ததும் இடியிடித்து மின்னியதும் கண்ணன் நினைவில் ஆழ்கின்றார். அதனால்தான் வைணவ அடியவர்களை ஆழ்வார் என்பர். //
இராகவன்!
பதிவில் தமிழ் விளையாடுகிறது!!
தொடருங்கள்!
Dear Raghavan,
Pallikudangalil mazhay pozhivathu patri kashtapattu ooru vilakaiyum, neeraviyayum
vaithu vilaku vatharku pathilaga intha pasurathy pada sonnale pothum purinthuvidum. Thamizhiku
matum uriya 'zha' endra ezhuthu 12 edangalil payan paduthapattu irukirathu intha pasurathil.Athu oruvelai ,MAZHAYAY
patriya pattaka irupathalo? konjam vilakka mudiyuma. TRC
கம்ப ராமாயணத்தில் (இராமாவதாரம் - பால காண்டம், ஆற்றுப் படலம்) இரு செய்யுள்கள்:
நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்
ஆறு அணிந்து சென்று, ஆர்கலி மேய்ந்து, அகில்,
சேறு அணிந்த முலைத் திருமங்கை தன்
வீறு அணிந்தவன் மேனியின் மீண்டவே.
பம்பி மேகம் பரந்தது, 'பானுவால்
நம்பன் மாதுலன் வெம்மையை நண்ணினான்;
அம்பின் ஆற்றுதும்' என்று, அகன் குன்றின்மேல்,
இம்பர் வாரி எழுந்தது போன்றதே.
இச்செய்யுள்களும் சரி, திருப்பாவையின் நான்காவது பாசுரமும் சரி, இயற்கையில் நடப்பதை உள்ளபடி காட்டி (மழை எப்படி வருகிறது என்பதை) அதே சமயத்தில் திருமாலின் புகழையும் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ரங்கா.
// அருமையான விளக்கம் இராகவன். //
நன்றி இராமநாதன்.
// இதற்கு பல நாள் முன்னர் தூர்தர்ஷனில் ஒருவர் சொன்ன விளக்கம் நினைவுக்கு வருகிறது.
-
தீயோரை அழிக்க இராமபிரானிற்காக காத்துக்கொண்டிராமல், சார்ங்கம் என்ற வில்லிலிருந்து தாமாகவே இராமபானங்கள் உதைத்துக்கொண்டு பறக்கின்றன //
விளக்கம் நன்றாக இருக்கின்றது இராமநாதன். ஆனால் இறைவனை மீறி இறைவனின் கருவி செயல்படுவதாகக் கொள்ளலாமா? சைவத்திலும் முருகனுக்காக காத்திராமல் வேல் பாய்ந்தது என்றால் நன்றாக இருக்கின்றதா?
மற்ற அன்பர்கள் இது குறித்து மேலும் விளக்குங்களேன்.
// இளங்கோவடிகள் சைவரா? நான் சமணர் என்றல்லவா நினைத்துக்கொண்டிருந்தேன். //
எனக்குத் தெரிந்த வரை இளங்கோவடிகள் சமணர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. சிலப்பதிகாரத்தை ஓரளவாவது வாசித்தவன் என்ற வகையில் அவர் குலம் சைவம் என்றே தெரிகின்றது. செங்குட்டுவன் முழுக்க முழுக்க சைவன். ஆனால் மத வேறுபாடு பாராதவன்.
சமணர்கள் பொதுவாக அருகரை வணங்கித்தான் நூலைத் துவக்குவார்கள். ஆனால் இளங்கோவோ இயற்கையை வணங்கித் துவக்குகின்றார்.
கவுந்தியடிகள் சமணர்தான். அவர் சமணம் பேசுகின்றார் என்பதும் உண்மைதான். ஆனால் அதே போல பல பாத்திரங்கள் தீவிர சைவமும் கொஞ்சம் வைணவமும் பேசுகின்றன. கொற்றவையும் கந்தனும் விரிசடைக் கடவுளும் நூல் முழுக்க வருகின்றார்கள். மதுரைக் காண்டத்தில் ஆய்ச்சியர் குரவையோ கண்ணனையே பாடுகின்றது.
சிலப்பதிகாரத்திற்கு உரையெழுதிய அடியார்க்கு நல்லார், நச்சினார்க்கினியார்........அவற்றையெல்லாம் தொகுத்த தமிழ்த் தாத்தாவும், ஏனைய தமிழ் அறிஞர்களும் இளங்கோவைச் சைவர் என்றே கூறியிருக்கின்றார்கள். இந்தச் சமணர் வாதம் எங்கிருந்து வந்ததென்றே தெரியவில்லை. கலைஞரின் நாடகத்தில் சமணராக வந்திருக்கின்றார் இளங்கோ. அதற்கு ஆதாரம் என்று எதையும் சொல்ல முடியாது. துறவு பூண்டதைச் சிலப்பதிகாரம் சொல்கின்றது. ஆனால் சமணச் சாக்கியங்கள் எதுவும் செய்ததில்லை. அதே போல அவர் அரண்மனையிலும் வாழ்ந்திருக்கின்றார். அண்ணக்கு உதவியாகவும் இருந்திருக்கின்றார். சமணத் துறவிகள் அரண்மனைவாசம் செய்வதில்லை. ஆனால் இளங்கோவடிகள் உண்மையிலேயே சமயச் சார்பு அற்றவர் என்பதில் ஐயமில்லை.
// இந்தப் பாடல் மழைக்கடவுளை நோக்கிப் பாடப்பட்டது என்று உரை கூறுவது தான் மரபு. ஆனால் அது ஏன் கண்ணனையே நோக்கிப் பாடுவதாய்க் கொள்ளக்கூடாது என்று அடிக்கடி நான் எண்ணுவதுண்டு. நீங்கள் அந்த அடிப்படையிலேயே பொருள் கூறி இருக்கிறீர்கள். :-) //
குமரன்...இதுவும் கண்ணனையே பாடியது என்றுதான் எனக்குத் தோன்றியது. ஆகையால் அப்படியே சொல்லி விட்டேன். மேலும் எந்த உரையையும் படிக்காததால் எனக்குத் தோன்றியதை அப்படியே கொடுக்கின்றேன்.
// இராகவன்!
பதிவில் தமிழ் விளையாடுகிறது!!
தொடருங்கள்! //
நன்றி அருட்பெருங்கோ.
// Thamizhiku
matum uriya 'zha' endra ezhuthu 12 edangalil payan paduthapattu irukirathu intha pasurathil.Athu oruvelai ,MAZHAYAY
patriya pattaka irupathalo? konjam vilakka mudiyuma. TRC //
TRC, அருமையான பார்வை. ஆனால் ஏனப்படி என்று தெரியவில்லை. நீங்கள் கூறுவது போல மழை தொடர்பான பாடல் என்பதால் இருக்கலாம் என்றே நினைக்கின்றேன். குமரன் வந்து விளக்கினால் தெரியலாம்.
// இச்செய்யுள்களும் சரி, திருப்பாவையின் நான்காவது பாசுரமும் சரி, இயற்கையில் நடப்பதை உள்ளபடி காட்டி (மழை எப்படி வருகிறது என்பதை) அதே சமயத்தில் திருமாலின் புகழையும் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. //
அருமையான பாடலைத் தந்தீர்கள் ரங்கா. மிகவும் நன்றி. இதுபோல இன்னும் பல தகவல்களை நீங்கள் ஒவ்வொரு பாவைக்கும் தர வேண்டும்.
கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு செய்யுள் கந்தபுராணத்திலும் உண்டு. செய்யுள் மறந்து விட்டது. (உண்மையைச் சொன்னால் செய்யுள் மனப்பாடம் இல்லை.) தேடிக் கண்டு பிடித்துத் தருகின்றேன்.
இராகவன்,
'ராமருக்காக காத்திருக்காமல்' என்பது தவறில்லை. உண்மையில் கடவுளின் சித்தமில்லாமல் எதுவுமே நடப்பதில்லை; அதே சமயத்தில் இதன் உள்ளர்த்தம், ஒரு அவதாரமாக வந்து பாணத்தை எடுத்து செலுத்த வேண்டும் என்றில்லை. இறைவனின் ஆயுதங்களை வெறும் ஆயுதங்களாக மட்டும் பார்க்காமல், இறைவனின் ஒரு குணம் அல்லது சக்தியின் பிரதிநிதியாகப் பார்த்தால் (அது இராமரின் பாணமாக இருந்தாலும் சரி, கந்தனின் வேலாக இருந்தாலும் சரி), அவைகளின் பணியான 'தீயதை அழிப்பது' என்பது இயல்பாக - ஒரு தூண்டுதலுக்கு காத்திராமல் வருவது முறையானதுதான்.
ரங்கா.
இளங்கோவடிகள் பற்றிய மேல் விவரங்களுக்கு நன்றி இராகவன்.
எனக்கும் TRC சொன்னது தெரியவில்லை. நான் எண்ணிப்பார்த்ததில் 10 ழகரம் தான் இந்தப் பாடலில் வந்துள்ளது. TRC அவர்களே நீங்களே விளக்கம் சொல்லிவிடுங்களேன்.
12 ழகரம் என்றவுடன் 12 மாதங்களோ? மாதவனின் 12 நாமங்களோ? அடியார் தம் உடலில் இடும் 12 திருமண் நாமங்களோ? என்று பல தோன்றியது. 10 ழகரம் என்றவுடன் 10 அவதாரத்தைக் குறிக்கிறதோ? என்று தோன்றுகிறது. ஆனால் சரியாகத் தெரியவில்லை.
\\தீயோரை அழிக்க இராமபிரானிற்காக காத்துக்கொண்டிராமல், சார்ங்கம் என்ற வில்லிலிருந்து தாமாகவே இராமபானங்கள் உதைத்துக்கொண்டு பறக்கின்றன //
விளக்கம் நன்றாக இருக்கின்றது இராமநாதன். ஆனால் இறைவனை மீறி இறைவனின் கருவி செயல்படுவதாகக் கொள்ளலாமா? சைவத்திலும் முருகனுக்காக காத்திராமல் வேல் பாய்ந்தது என்றால் நன்றாக இருக்கின்றதா?
\\
ரங்காண்ணாவின் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. இங்கு இறைவனின் கருவி இறைவனை மீறிச் செயல்படுவதாகக் கூறவில்லையே. இறைவனின் கருத்துக்கு இயைந்து இறைவனின் கருவி தானாகவே செயல்படுதல் தானே கூறப்பட்டுள்ளது. அதனால் அந்த கருத்து நன்றாகத் தான் இருக்கிறது. மறுக்கக் கூடியதன்று.
இராகவன்,
ரங்கா மற்றும் குமரன் சொன்னவாறுதான் நானும் அதைக் குறித்து யோசித்தேன். எந்தச்செயலும் இறைவனின் இச்சையின்றி நடக்காதல்லவா?
--
சார்ங்கம் என்பது இராமருக்கு மட்டுமேயானதன்றி நாராயணனின் ஒரு ஆயுதம் தானே, சங்குசக்கரம் போல?
சொல்ல விட்டது,
சார்ங்கத்திலிருந்து சரமாய் பானங்கள் காத்திராமல் பாய்வது : கற்பனை செய்து பார்க்க மிகவும் அழகாகத் தோன்றுகிறதல்லவா?
இராமநாதன். சார்ங்கம் என்பது நாராயணனின் வில்; கோதண்டம் என்பது தான் இராமனின் வில். ஆமாம். சார்ங்கத்திலிருந்து சரமழை தானாகவே பெய்வதை கற்பனை செய்து பார்த்தால் நன்றாய்த் தான் இருக்கிறது. :-)
Ramarudaya villin peyar kothandam(ramavatharathil)
Sarangam enbathu Vishnuvudaya vil
pathu muray than zha varukirathu. ennikkay therayatha kutrm manikkavum. trc
Post a Comment