Monday, March 27, 2006

10. மையல் வலையா தையல் வலை?

தமிழ் மொழி இல்லறத்தைச் சிறப்பித்து வழங்குகிறது. அதே நேரத்தில் "இல்லறமல்லது நல்லறமன்று" என்று சொல்லவும் தவறவில்லை. அதே நேரத்தில் அனைவரும் இல்லறத்தை ஏற்கும்படி வற்புறுத்தவும் இல்லை. "தவமும் அவமுடையார்க்கு ஆகும்" என்று வள்ளுவம் ஒப்புக்கொள்கிறது. ஆனால் பரத்தையர் ஒழுக்கத்தை எந்தத் தமிழ் நூலும் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. பரத்தையிடம் போன கோவலன் கேவலன் ஆனதைச் சிலப்பதிகாரம் சொல்கிறது. பொருந்தாக் காமம் இலக்கியங்களில் ஓரளவு ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் கூட கட்டிய மனைவி இருக்க பரத்தையரை நாடுவதைத் தமிழ் இலக்கியங்கள் ஏற்றுக் கொள்ளவதில்லை.. முருகப் பெருமானால் ஆட்கொளப் படும் முன்னால் அருணகிரி ஆசைகளின் கிரியாக இருந்தார். நாளும் ஒரு நாயகி என்று வாழ்ந்தார். பட்டுத் தெளிந்த பின் முன் செய்த குற்றங்களைப் பாடுகிறார். அவற்றிலிருந்தெல்லாம் காக்க முருகனை வேண்டுகிறார்.

மட்டூர்குழல் மங்கையர் மையல் வலைப்
பட்டூசல் படும் பரிசென்று ஒழிவேன்
தட்டூற வேல் சயிலத் தெரியும்
நிட்டூர நிராகுல நிர்ப்பயனே


மட்டு என்றால் தேன். மட்டூர் குழல் என்றால் தேனூறும் கூந்தல். கூந்தலிலே தேன் ஊறுமா? மலரில் தேனூறும். "மட்டவிழ் மலர் கொடு பணிவேனே" என்று திருப்புகழ் பிள்ளையாரைப் பணிகின்றது. அத்தகைய தேனூறும் மலர்களை அணிந்த மங்கையர் யார்? எல்லா மங்கையருமா? தெற்கில் மலர்களைச் சூடிக் கொள்வது பெண்களிடையில் பரவலான வழக்கமாயிற்றே! இங்கே யாரைச் சொல்கிறார்? அதைச் சொல்லத்தான் "மையல் வலை" என்று கூறுகிறார். குடும்பப் பெண்கள் மையல் வலை விரிக்க வேண்டியதில்லை. ஏனென்றால் கடை விரிக்காமலே வேண்டியது கிடைக்கும். மையல் வலை விரிக்கும் கண்களோடு தேனூறும் மலர்களைச் சூடிய மங்கையர் யாரென்று இப்பொழுது தெரிகிறதா?

விலைமாதர்களைக் குறை கூறுவதில் எந்த பயனும் இல்லை. விரும்பிக் கொள்ளப்படுவது கடையில் இருக்கிறது. ஆகையால் பரத்தையரை குற்றம் கூறவில்லை அருணகிரி. அந்த பரத்தையரின் மீது தனக்கு உண்டாகும் மயக்கத்தைத் தீர்க்கும் படி இறைவனடி பணிகிறார். பரத்தையர் இருப்பதால் போகிறோம் என்று சொல்லும் கருத்தில் அருணகிரிக்கு உடன்பாடு இல்லை. தான் செய்த தவறுக்குத் தானே பொறுப்பு. அதை மற்றவர் மேல் ஏற்றல் தகாது என்பது அப்பெருமகனார் கருத்து. இந்தக் கருத்து எல்லோரும் நினைவிற் கொள்ள வேண்டியது.

ஊசல் ஓரிடத்தில் நிலையாக இராது. அங்கும் இங்கும் ஆடிக்கொண்டே இருக்கும். பரத்தையர் மையல் வலையில் வீழ்ந்தாலும் அதே நிலைதான். ஊசலில் ஆற்றல் இருக்கும் வரை ஆடும். பிறகு நின்று விடும். அதுபோல செல்வம் இருக்கும் வரை பரத்தையர் வாசல் வரவேற்கும். பிறகு மூடிவிடும். பொய்யாமொழிப் புலவருக்கும் அந்த நிலை ஏற்பட்டது. பரத்தையர் ஆசையில் உண்டாகும் நிலையற்ற வாழ்க்கையெனும் மயக்கத்திலிருந்து காப்பாற்று கந்தா!

தட்டு என்றால் தடை அல்லது தடங்கல். தட்டுத் தடுமாறி என்ற பதத்தை நினைவிற் கொள்க. சூரனுடைய வீரமகேந்திரபுரியை நோக்கி வீரநடை போட்ட தேவர் படைகளைத் தடுக்கும் வகையில் தடையாக நின்றது கிரவுஞ்ச மலை. அது சூரனின் தம்பி தாரகாசுரனின் மாய மலை. தடங்கலாக நின்ற மலை (சைலம்) ஊடுருவ வேலை எறிந்தார் முருகப் பெருமான். கிரவுஞ்ச மலையும் தாரகாசுரனும் வீழ்ந்தனர். மாயை விலக வேலெறிந்தார் முருகன். வேல் ஞானத்தின் வடிவம். ஞானம் வந்தால் மாயை போகும். அதுதான் உண்மை. கந்தபுராணம் கதையல்ல. வாழ்க்கைத் தத்துவம். ஆகையால் அதைப் படித்துப் புகழ தத்துவ அறிவு தேவைப்படுகிறது.

நிட்டூரம் என்றால் வடமொழியில் துயர் செய்கிறவர். ஆகுலம் என்றால் துன்பம். நிர் என்பது எதிர்ப்பதச் சொல். இல்லாதது என்ற பொருளைக் கொடுக்கும். நிராகுலம் என்றால் துன்பமில்லாதது. பயம் என்றால் அச்சம். அச்சமில்லாதது நிர்ப்பயம். நிட்டூர நிராகுல நிர்ப்பயமே என்றால் "துன்பம் தருகிறவைகளைப் பற்றியும் துன்பமில்லாதவைகளைப் பற்றியும் எந்த அச்சமும் இல்லை". முருகனை வழிபடுகிறவர்களுக்கு எந்த பயமும் தேவையில்லை. முருகனுடைய திருவடி எல்லா அச்சங்களையும் நீக்கும். அஞ்சுமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும். அஞ்சேல் என வேல் தோன்றும்.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Monday, March 20, 2006

9. குமரி பெற்ற குமரன்

அமரும் பதிகேள் அகமாம் எனுமிப்
பிமரங் கெடமெய்ப் பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பொரு தானவ நாசகனே


குமரன் யார்? கிரி ராஜகுமாரியின் மகன். எந்த கிரி? மேரு கிரி. இமயமலையரசன் இமவான் பெற்ற மகள் பார்வதி. பர்வத ராஜகுமாரி பார்வதி என்றும் கூறுவார்கள். அகிலாண்ட கோடி பிரும்மாண்ட நாயகி அவள். "அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையே! பின்னையும் கன்னியென மறை பேசும்!" உலகமனைத்தையும் பெற்றவளைக் கன்னியென மறைகள் கொண்டாடுகின்றன. அப்படிப்பட்ட கன்னியின் மகன் குமரனே! என்ன வியப்பு! கன்னி பெற்ற மகனா? கிருத்துவ வேதாகமங்களும் அப்படித்தான் சொல்கின்றன. மரியன்னையின் மைந்தன் ஏசுவைத்தானே உலக கிருத்துவர் தொழுகின்றனர். ஆயினும் கன்னி மேரி என்ற வழக்கும் உண்டே. அதுபோலத்தான் அருணகிரி இங்கே "குமாரி பெற்ற குமரன்" என்று குறிப்பிடுகிறார்.

சமர் என்றால் போர். போர்க்களத்தில் தன்னோடு பொருதும் தானவர்களை நாசம் செய்கின்றவனே! தானவர்கள் என்றால் அரக்கர்கள். கஸ்யபரின் மனைவிகளில் ஒருவளான தானை என்பவள் பெற்ற பிள்ளைகள் தானவர்கள் என்றும் கூறுவார்கள். போரிடுவதற்கு இறைவனுக்கு எதிரிகள் உண்டா? இல்லை. இறைவனுக்கு எதிரிகள் இருக்க முடியுமா? முடியாது. ஆனால் இறைவன் அடியார்களுக்கு எதிரிகள் இருப்பார்கள். தேவர்களைச் சிறையிட்ட சூரனால் முருகனைச் சிறையிட முடியுமா? இல்லை அப்படி நினைத்துப் பார்க்க முடியுமா? இறைவன் போர்க்கோலம் பூண்டிருப்பது அடியார்களின் பகையைத் தீர்க்க. திருஞான சம்பந்தர் தங்கியிருந்த சத்திரத்திற்கு நெருப்பு வைத்தார்கள். இறைவன் கருணை மழை பொழிந்தான். திருநாவுக்கரசை சுண்ணாம்புக் காளவாயிலில் இட்டார்கள். நீறு நீர்த்துப் போனது. அவரையே கல்லில் கட்டி கடலில் போட்டார்கள். அலை தாலாட்டியது.
பட்டினத்தடிகளுக்கு அப்பத்தில் நஞ்சு வைத்தார்கள். அது வைத்தவர் வீட்டைப் பற்றியது. ஆக அடியவர்களுக்குத் துன்பம் வருகையில் போரிட்டு அழிப்பவன் இறைவன். இது எந்த மதத்திற்கும் பொருந்தும்.

இதே வரிக்கு வேறு விதமாகவும் பொருள் கொள்ளலாம். நம்மோடு போருக்கு வரும் காமம், வஞ்சகம், தீய எண்ணங்கள், மதம், மாச்சர்யங்கள் ஆகியவைகளை எதிர்த்துப் போரிட்டு அழித்து நம்மைக் காக்கும் வேலன் என்றும் கொள்ளலாம். நமக்குள் எழும் தீய எண்ணங்களை அழிப்பது எப்படி? மருந்து சாப்பிட வேண்டும். எந்த மருந்து? அருள் தரும் தமிழ்க் கந்த மருந்து. உள்ளேயிருக்கும் அழுக்குகளைப் போக்க வெளியே இருக்கும் மருந்து உள்ளே போக வேண்டும் அல்லவா. அதுபோல உள்ளத்தில் இருக்கும் தீயவை போக இறைவனை அந்த உள்ளத்தில் குடியேற்ற வேண்டும். தீயவை அகலும். தூயவை பெருகும்.

இப்பொழுது பாடலின் முதல் இரண்டு வரிகளைப் பார்க்கலாம். சற்று முதிர்ந்த வரிகள். "அமரும் பதிகேள் அகமாம்" என்பதை "அமரும் பதி, கேள், அகம்" என்று பிரிக்க வேண்டும். பதி என்றால் வாழும் ஊர். திருவிளையாடற் புராணம் மதுரையை மதுரையம்பதி என்று சிறப்பிக்கிறது. சிலப்பதிகாரத்திலும் இந்த சொல் கையாளப்பட்டுள்ளது. "நீ யார்?" என்று வினவிய பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு விடையளிக்கையில் சொல்கிறார் கண்ணகி, "பெரும் பெயர்ப் புகார் என் பதியே." அமர்தல் என்றால் உட்கார்தல் அல்லது உறைதல். அமரும் பதி என்றால்? உட்காரும் கணவன் அல்ல. உறையும் ஊர். கேள் என்றால் வினவுவது எனலாம். ஆனால் இங்கே உறவுமுறைகளைக் குறிக்கும். "யாதும் ஊரே யாவும் கேளிர்" என்ற கனியன் பூங்குன்றனார் வாக்கை நினைவில் கொள்க.

அகம் என்றால் வீடு. எனது ஊர், எனது உறவுகள், எனது வீடு என்று கிறங்கும் மயக்கம். அதைத்தான் பிமரம் என்கிறார். பிரமை என்ற சொல் மருவிச் சிதைந்து இங்கே பிமரமானது. மனப் பிரமை என்றால் மன மயக்கம். அத்தகைய மயக்கம் கெட பேசியவா என்கிறார் முருகனை. முருகன் என்ன பேசினார்? மெய்ப் பொருள் பேசினார். உலகப் பற்றுகளோடு வாழ்ந்த அருணகிரி நாதருக்கு உபதேசம் பேசினார் முருகன். அந்த உபதேசத்தால் உலகப் பற்று போய் இறைப் பற்று வந்தது.

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, March 13, 2006

8. வருகையிலும் போகையிலும்

முருகனிடத்தில் நேரடியாக உபதேசம் பெற்றவர்கள் மூவர். வேத நாயகனான ஈசன். பிறகு அருந்தமிழ் முனி அகத்தியர். கலியுகத்தில் அருணகிரிநாதர். இந்த மூவரில் முதலிருவரும் முருகனிடம் பெற்ற உபதேசத்தின் பலனாக நமக்கு எதுவும் உபதேசிக்கவில்லை. ஆனால் அருணகிரி இந்தப் பாடலில் வழியாக நமக்கு உபதேசிக்கிறார். உள்ளம் சஞ்சலப்படும் பொழுதெல்லாம் நினைக்கப்பட வேண்டிய பாடலிது.

கெடுவாய் மனனே கதிகேள் கரவா
திடுவாய் வடிவேல் இறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடுவேதனை தூள் படவே
விடுவாய் விடுவாய் வினையாவையுமே


மனமே முதலில் கெடுவது. எண்ணம் கெட்டபின் வண்ணம் கெடுகிறது. பிறகு தீய செயல்களைச் செய்யக் கூடாதென்ற திண்ணம் கெடுகிறது. வள்ளுவர் என்ன சொல்கிறார்?
ஈன்றாள் பசிகாண்பாள் எனினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை

பெற்ற தாயே பட்டினி கிடந்தாலும், அறிவில் சிறந்தவர்களால் தடுக்கப்பட்ட விலக்கப்பட்ட செயல்களைச் செய்யக்கூடாது. அப்படிப்பட்ட குற்றங்களைச் செய்யத் தூண்டுவது மனம். அதுதான் முதலில் திருந்த வேண்டும். நோயுண்டவர்களுக்கு பல உபாதைகள் இருக்கும். ஒவ்வொரு உபாதைக்கும் மருந்து கொடுப்பது முழுமையான பலனளிக்காது. நோயின் மூலகாரணத்திற்கு மருந்தளிப்பதே சாலச் சிறந்தது. ஆகையால்தான் தானும் கெட்டு தன்னையும் கெடுக்கும் மனத்தை அழைத்து உபதேசிக்கிறார் அருணகிரி. முருகனிடம் உபதேசம் கேட்டபிறகு அருணகிரியின் மனத்தில் அழுக்கிருந்திருக்குமா? இருந்திருக்காது. அவர் நமக்காகச் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். வயிற்றிலுள்ள குழந்தைக்குத் தாய் உணவு உண்பது போல. அருணகிரிக்குத் தாயுள்ளம்.

மனத்திற்குச் சொல்கிறார். கெடும் மனமே, கதி கேள். உய்வுற்று வாழ்வதற்கான கதியைச் சொல்கிறேன் கேள். முதலில் கரவாது இடுவாய். இதைதான் ஔவை "அறம் செய விரும்பு" என்கிறார். வறியர்கள் வந்து கேட்டால் ஆனதைச் செய் என்கிறார். உலகிற்கு வருகையிலும் வெறுங்கை. போகையிலும் வெறுங்கை. ஆகையால் உயிரோடு இருக்கையில் கொடுங்கையாக இராமல் கொடுக்கும் கையாக இருக்க வேண்டும். பாத்திரம் அறிந்துதான் பிச்சை போட வேண்டும். ஆகையால்தான் வள்ளுவரும் "வரியார்க்கு ஒன்று ஈவதே ஈகை" என்கிறார்.

அப்படி ஏழைகளுக்கு ஈகையில் தோன்றும் செருக்கை அழிக்க வேண்டும். எப்படி? கரவாது இடுவாய் வடிவேல் இறைதாள் நினைவாய். கொடுக்கும் பொழுது கந்தனைத் தொழுது கொடுக்க வேண்டும். நாமா கொடுக்கிறோம்? எல்லாம் அவனருள். ஆகையால் நமது கையால் கொடுத்தாலும் முருகன் திருவடியால் கொடுத்ததாக நினைக்க வேண்டும். இங்கே வடிவேல் இறைதாள் நினைவால் என்கிறார். அந்த கந்தனுடைய திருவடிகளைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் அதற்கே காலமும் நேரமும் பத்தாது.

நெடுவேதனை தூள்படவே சுடுவாய். உலகில் உயிர்களுக்கான உண்மையாதென்றால் பிறப்பும் இறப்பும். இரண்டும் உயிர்களால் தீர்மானிக்கப் படுகிறவை அல்ல. இந்த இரண்டும் இறைவனின் தீர்மானங்கள். இப்படிப்பட்ட பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் நாமாக தீர்மானிப்பதாக நினைத்துக்கொண்டு எடுக்கும் சில பல முடிவுகளால் உண்டாகும் வேதனைகளைச் சுடுவேண்டும். சுட்டால்தான் திருநீறு. வேதனையைச் சுட்டால் நிம்மதி என்ற நீறு கிடைக்கும். விடுவாய் வினையாவையுமே. வினைகள் இரண்டு. நல்வினை மற்றும் தீவினை. நன்மை பயப்பது நல்வினை. தீமை பயப்பது தீவினை. நல்வினைகள் இறைவனின் கருணை. அதில் விட ஒன்றுமில்லை.

ஆனால் தீவினைகள்? இன்னா செய்யாமை என்று வள்ளுவர் ஒரு அதிகாரமே எழுதியிருக்கிறார். இன்னா செய்வதால் அடுத்தவர்க்கு மட்டுமே தீமை என்றில்லை. அது செய்கிறவர் மேலேயே திரும்பும். எப்படி தெரியுமா? "கடையடைத்து வைத்துப் புடைத்தக்கால் நாயும் உடையானைக் கவ்வி விடும்" என்று பழமொழி நானூறு சொல்வதைப் போல. அடைத்து வைத்து அடித்தால், சொந்த நாயும் கூட ஒரு கட்டத்தில் கடித்துக் குதறிவிடுமாம். ஆக வினை விதைத்தவன் வினையறுப்பான். அந்த வினைகளை விட்டொழிக்க வேண்டும். அதன் தீவிரத்தை உணர்ந்தே "விடுவாய் விடுவாய்" என்று இரண்டு முறை கூறுகிறார் அருணகிரி.

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, March 06, 2006

7. கல்லில் பதியுமா பாதம்

மிகவும் எளிமையான பாடல். ஆனால் மறைவான பொருள் கொண்டது. கல் போன்ற எனது மனதில் உனது தாமரைப் பாதங்கள் அரும்ப வேண்டுமே முருகா! பணி என்னவென்று வள்ளியின் பதம் பணியும் முருகனே! மோகம் குறையாத தயாபரனே!

திணியான மனோசிலை மீதுனதாள்
அணியார் அரவிந்தம் அரும்புமதோ
பணியா என வள்ளி பதம் பணியும்
தனியா அதி மோக தயாபரனே


திணியான மனோசிலை என்றால் கடினமான கல் போன்ற மனம். சிலை என்பது கல்லைக் குறிக்கிறது இங்கே. மனோசிலை என்றால் மனமாகிய கல். எப்பேற்பட்ட சொல் நயம். அப்படிப்பட்ட கடினமான மனமாகிய கல்லின் மீது உனது தாமரைப் பாதங்கள் பதிவது என்று என்று கேட்கிறார் அருணகிரி. இந்த இடத்தில்தான் நன்றாகக் கவனிக்க வேண்டும். கல்லில் பூச்செடி முளைக்குமா? மண்ணில் முளைக்கும். சேற்றில் முளைக்கும். கல்லில் முளைக்குமா? கல்லில் செடி முளைத்தால் என்ன ஆகும்? கல் உடைந்து போகும். மனம் உடைந்து போகலாமா? அப்புறம் ஏன் அருணகிரி இப்படிக் கேட்கிறார்?

இளகிய கல்லில் செடி முளைக்கலாம்தானே! தங்கமும் வெள்ளியும் இருக்கிறது. அது அவ்வாறே இருந்தால் மணிகளைப் பொருத்துவது எங்ஙனம்? உலோகம் இளகினால் மணிகளையும் கற்களையும் பதிக்கலாம். அது போல தாமரை மலர் போன்ற சிவந்த பாதங்கள் பதிய வேண்டுமென்றால் மனம் இளக வேண்டும். இளகிய மனமே பாசத்தின் பாசறை. அந்தப் பாசறையே இறைவனின் கோயில். விளங்கியதா! தாமரை மலர் போன்ற திருவடிகள் என்று குறுந்தொகையும் கூறுகிறது. செந்திலாண்டர் செம்மையானவர். ஆகையால் அவரைச் சார்ந்ததெல்லாமே செம்மையானவை. பாரதம் பாடிய பெருந்தேவனார் குறுந்தொகைக்குக் கடவுள் வாழ்த்து எழுதும் பொழுது குறிப்பிடுகிறார் "தாமரை புரையும் காமர் சேவடி" என்று.

இந்தப் பாடலில் மற்றொரு அழகும் உள்ளது. கல் மனம் இளக வேண்டும் என்று கேட்கவில்லை. நேராகவே பாதம் பதிய வேண்டும் என்று கேட்கிறார். கல் இளகவும் இறைவன் மனம் வைக்க வேண்டுமே! அதை எப்போது கேட்பது? அருணகிரி அறிவுகிரி அல்லவா! ஆகையால்தால் கந்தர் அநுபூதி தொடங்கும் பொழுதே நெஞ்சக் கன கல்லும் நெகிழ்ந்து உருக என்று பாடுகிறார். அங்கேயே கல்லாகிய நெஞ்சம் நெகிழ்ந்து விட்டது. ஆகையால் இங்கே பதிந்தால் போதும். என்ன அற்புதமான வரிகள் இவை. நினைத்தாலே கண்ணீர் பெருகும் அருள் வரிகள்.

பாதம் பதிய வேண்டுமென்று யாரைக் கேட்கிறார் அருணகிரி? தயாபரனிடம். தயாபரன் என்றால் உதவும் உள்ளமுடையன் என்று பொருள். அதுவும் தணியா அதி மோக தயாபரனிடம் கேட்கிறார். தணியாத அதி மோகம். அடேங்கப்பா! எவ்வளவு உயர்வு நவிற்சி. மோகம் என்பது அளப்பறிய நாட்டம். அது எதன் மீதிலும் இருக்கலாம். மோகன், மோகினி என்றெல்லாம் பெயரிடுகிறார்களே குழந்தைகளுக்கு. அது காமம் மட்டும் என்ற பொருளைத் தருமானால் வைப்பார்களா? இந்த இடத்தில் அது கருணை அல்லது நாட்டம் என்று பொருள் படுகிறது.

பணியா என வள்ளி பதம் பணியும் தணியாத அதி மோக தயாபரனிடம் வேண்டுகிறார் அருணகிரி. வள்ளியம்மையிடம் பணி என்ன என்று தணியாத நாட்டத்தோடு முருகன் பணிந்தாரா? அனைவரும் பணியும் இறைவன் பணிவாரா? பணியா என்று வள்ளியம்மையானவள் பதம் பணியும் முருகனே என்று பொருள். கொல்லி மலை வாழும் முருகா என்றால் கொல்லி மலை முருகனோடு வாழ்கிறது என்றா பொருள்? முருகன் வாழும் கொல்லி மலை என்று மாற்றிப் பொருள் கொள்ள வேண்டும். தணியாத நாட்டத்தோடு உதவும் உள்ளத்தோடு இருக்கும் இறைவனை அனைவரும் பணிவார்கள். அவ்விதத்தில் வள்ளியம்மையும் பணியும் அந்தப் பதமானது இளகிய கல் மனதில் பதிய வேண்டும் என்று வேண்டுகிறார் அருணகிரிநாதர்.

பக்தியுடன்,
கோ.இராகவன்