Friday, October 28, 2005

சரீரியா? அசரீரியா?

தேனென்று பாகென்று உவமிக் கொணமொழித் தெய்வ வள்ளிக்
கொனென்று உபதேசித்தது ஒன்று உண்டு கூறவற்றோ
வானன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று
தானன்று நானன்று அசரீரியன்று சரீரியன்றே


உபதேசம் என்ற சொல்லுக்கு உணர்விப்பது என்று தமிழில் பொருள். எல்லாராலும் உணர்விக்க முடியாது. ஒன்றைக் குற்றமற அறிந்தவரே நல்லவிதமாக உணர்விக்க முடியும்.

அருணகிரிநாதரை உணர்வித்தவன் முருகப் பெருமான். தமிழ்க் கடவுள். அவரிடம் உபதேசம் பெற்றவர் மூவர். தமிழ் முனிவர் அகத்தியர், சிவபெருமான், மற்றும் அருணகிரிநாதர். இவர்களில் சிவபெருமான் முருகன் உபதேசித்ததை அடுத்தவர்களுக்கு எடுத்துச் சொல்லவில்லை. அகத்தியரோ முருகனின் தமிழைத் தரணிக்கு அளித்து வளர்த்தார். அருணகிரியோ முருகன் உணர்த்திய தத்துவப் பொருளை உலகிற்கு எடுத்துச் சொன்னார்.

தேனும் பாகும் இனியவை. ஔவை கூட "தெளிதேனும் பாகும் பருப்பும்" என்று பாடியிருக்கின்றார் என்றால் அவைகளின் சுவை விளங்கும். இந்தச் சுவைகளைப் பழிக்கும் சுவையும் உண்டாம். அது தெய்வத் திருமகள் வள்ளியின் திருவாய் மொழியே அந்தச் சுவை. பேசினால் கேட்டுக்கொண்டேயிருக்கலாம்.

சிலர் பேசினால் காதைப் பொத்திக்கொள்ளத் தோன்றும். சிலர் பேசினால் ஒன்றும் புரியாது. ஆனால் வள்ளியம்மையின் தமிழ்ப் பேச்சு மிகவும் இனியது. அதனால்தான் முருகனே தேடி வந்து வள்ளியிடம் ஏச்சும் பேச்சும் கேட்டார்.

இப்படித் தேனென்று பாகென்று உவமிக்கொணா மொழித் தெய்வ வள்ளியின் கோனாகிய முருகப் பெருமான் உபதேசித்ததைக் கூறவற்றோ!

ஒருவர் ஒரு தகவலைச் சொல்கிறார். அதை மற்றவருக்குச் சொல்ல வேண்டும். கண்டிப்பாக பாதித் தகவல் மறந்து போய்விடும். பாதித் தகவல் மாறிவிடும். இந்நிலையில் ஆண்டவராகிய முருகப் பெருமான் ஒன்றை உணர்வித்தால் அதை மனிதப் பிறப்பெடுத்த அருணகிரியால் முழுமையாகச் சொல்ல முடியுமா?

கண்டிப்பாக முடியாது. இதை அநுபூதியிலும் சொல்கிறார். "சாடும் தனிவேல் முருகன் சரணம் சூடும்படித் தந்தது செப்புமதோ!"

இருந்தாலும் சொல்ல முயல்கிறார். முடிந்ததைச் செய்வோம் என்ற நல்ல எண்ணம் அருணகிரிக்கு. பெற்ற தாய்தான் முடிந்தவரை பிள்ளைகளுக்குக் கொண்டு சேர்ப்பாள். அருணகிரிக்கும் தாயுள்ளம். அதனால் முடிந்த வரை முருகனைப் பற்றிச் சொல்கிறார். இனி அருணகிரியின் வாக்கினிலேயே பார்ப்போம்.

"இறையருள் என்று நான் உணர்ந்து கொண்டது எப்படிப் பட்டது? முருகன் எப்படிப் பட்டது? ஐம்பூதங்கள் இந்த உலகத்தின் அடிப்படை. வானம், நீர், நிலம், நெருப்பு, காற்று ஆகிய ஐம்பூதங்களால் ஆனது இந்த உலகம். இந்த ஐந்துபூதங்களுமா இறைவன்? இல்லை. அவைகளுக்கும் அப்பாற்பட்டவன். வானன்று. காலன்று (காற்றன்று). தீயன்று. நீரன்று. மண்ணுமன்று. சரி. தானும் நானுமா? இல்லை. உருவம் உள்ளவனா? இல்லை. உருவம் இல்லாதவனா? இல்லை?"

அப்படியென்றால்?

"அப்படியென்றால் அனைத்தையும் கடந்தும் அனைத்திற்கும் உள்ளிருப்பதுமே கடவுள். பார்ப்பதனைத்தும் பரமன் காட்சியே. கேட்பதனைத்தும் முருகனொலியே. உணர்வதனைத்தும் சக்தியே. சுருங்கச் சொன்னால் யாதுமாகி நிற்பதே கடவுள். அதை நான் சொல்ல முடியுமா?"

அருணகிரி சொல்வது இப்பொழுது புரிந்திருக்கும். கல்லிலும் திசையிலும் தீயிலும் சொல்லிலும் வில்லிலும் நிறைந்திருப்பது ஒன்றே. அதுதான் இறைமை. பெயர் மாறலாம். முறை மாறலாம். ஆனால் இறைவன் அருள் மாறாது என்று அன்போடு சொல்லிக் கொடுக்கிறார்.

இந்தப் பாடலை மனமகிழ்ச்சியோடு பாடுங்கள். கந்தனருள் பெறுங்கள். வளமோடு வாழுங்கள்.

அன்புடன்,
கோ.இராகவன்

Tuesday, October 25, 2005

மலப்பழமும் மலைப்பழமும்

அழித்துப் பிறக்க ஒட்டா அயில் வேலன் கவியை அன்பால்
எழுத்துப் பிழையறக் கற்கிலீர் எரி மூண்டதென்ன
விழித்துப் புகையெழ பொங்கு வெங்கூற்றன் விடும் கயிற்றால்
கழுத்தில் சுருக்கிட்டிழுக்கின்றதோ கவி கற்கின்றதே


நமது உள்ளத்தில் அச்சம் என்னும் உணர்வு தோன்றி அலைக்கழிக்கும் பொழுது இந்தப் பாடலை சொல்லிக் கொண்டால், வந்த அச்சம் மிச்சமேயில்லாமல் ஓடிப் போகும்.

பைந்தமிழ்ச் சொற்கள் இறையருள் பெற்றவை. அவைகளைச் சொல்லும் பொழுது முறையாக உச்சரிக்க வேண்டும். பாண்டியன் நெடுஞ்செழியன் சொன்னான்.
மன்பதைக் காக்கும் தென்புலக் காவல்
என் முதற் பிழைத்தது கெடுக என் ஆயுள்

"மண்ணுயிர்களைக் காக்கும் பாண்டிய நாட்டு அரசியல் முதன்முறையாகப் பிழையானதே. அதுவும் என்னால். கெடுக என்னுடைய ஆயுள்" என்று அவன் சொல்லிய வேகத்தில் அவன் உயிர் பிரிந்தது.

நல்லவர் நாக்கும் செந்தமிழ் வாக்கும் கூடினால் சொன்னது பலிக்கத்தானே செய்யும். ஆகையால் நாம் தமிழில் பேசுகையிலாவது முறையாக உச்சரித்து, சரியாகப் பேச வேண்டும்.

அருணகிரியும் இதே கருத்தைத்தான் சொல்கிறார். எழுத்துப் பிழையறக் கற்கிலீர். எழுத்துப் பிழையில்லாமல் கற்க மாட்டீர்களா என்று வருந்துகிறார். எதை? அழித்துப் பிறக்க ஒட்டா அயில் வேலன் கவியை. பிறப்பையும் இறப்பையும் மறுப்பாக்கும் வேலவனைப் புகழ்ந்து பாடும் அருந்தமிழ்ப் பாக்களை எழுத்துப் பிழையில்லாமல் கற்க மாட்டீர்களா!

பலருக்கு இந்த ஐயம் உண்டு. ஆன்மீக நாட்டம் எந்த வயதில் வரவேண்டும் என்பதே அந்த ஐயம். வயதான காலத்திலா வரவேண்டும்? நாடியும் நரம்பும் தளர்ந்து நாக்கும் மூக்கும் உலர்ந்து போகும் கிழ வயதிலா இறைவன் திருவடியை நினைக்க வேண்டும்? ஒழுங்காக நினைக்க முடியுமா? கந்தனைப் பாடும் தமிழ்ச் செய்யுளை மனனம் செய்ய வயது ஒத்துழழக்குமா?

பருவத்தே பயிர் செய் என்பது தமிழ் முதுமொழி. இளம் வயதிலேயே நாம் இறைவன் திருவடியைச் சரணடைந்து விட்டால் முதுமை வாட்டாது. போரடித்த நெல்லை குதிரில் சேமித்து வைத்து பின்னாளிலும் பயன்படுத்துவது போல, அருந்தமிழ்ப் பாக்களை, முருகனை வணங்க உதவும் பூக்களை இளம் வயதிலேயே குற்றமறக் கற்க வேண்டும்.

எரி மூண்டதென்ன விழித்துப் புகையெழ பொங்கு வெங்கூற்றன் விடும் கயிற்றால் - கூற்றன் என்றால் காலன். உடலையும் உயிரையும் கூறு செய்கின்றவன் கூற்றன். பகபகவென விழிகளை உருட்டி விழித்து, அந்த விழிகளில் தீப்பொறிகள் பறக்கப் பறக்க கூற்றன் வந்து பாசக் கயிறிட்டு உயிரைப் பறிக்கையிலா முருகன் புகழை கற்கத் தொடங்குவது! அதைத்தான் கழுத்தில் சுருக்கிட்டிழுக்குமன்றோ கவி கற்கின்றதே என்கிறார் அருணகிரி.

இதுவரை நாம் முறையாகச் செய்யவில்லை. சரி. போனது போகட்டும். கந்தன் கருணை என்றைக்கும் உரியது. ஆகையால் இன்றைக்காவது அருந்தமிழ்ச் செய்யுட்களைக் கற்று கந்தனுக்குப் பாமாலையும் பூமாலையும் சாற்ற வேண்டும்.

இன்னொரு கருத்தும் இங்கு போற்றப்பட வேண்டியது. "வேலன் கவியை அன்பால் எழுத்துப்பிழையற".....அதாவது இறைவனை அன்பால் வணங்க வேண்டும். அச்சத்தினால் வணங்கக் கூடாது. இறைவன் அன்பு மயமானவன். அவனா மிரட்டுவான்? இல்லவேயில்லை. இறைவன் மீது அன்பு வைக்க வேண்டும். அந்த அன்பு வளர்ந்தால் நன்மைகள் பல விளையும்.

இந்தச் செய்யுளில் மட்டுமே உள்ள சிறப்பு "எழுத்துப் பிழையற" என்னும் சொற்றொடர். ஒரு சின்ன நகைச்சுவைத் துணுக்கு. ஒருவர் வாழைப்பழக் கடைக்குச் சென்றார். மலைப்பழம் வாங்க வேண்டும். குழந்தைகளுக்கு மலைப்பழம் கொடுப்பது நல்லது. "ஐயா மலப்பழம் கொடுங்க" என்று வாங்கினார். அவர் என்ன வாங்கினார்? மலைப்பழமா? இல்லை. மலப்பழம். பொருள் எவ்வளவு அசிங்கமாக மாறுகிறது பார்த்தீர்களா? முருகனைப் பாடுவது இருக்கட்டும். தமிழில் நாம் பேசுகையிலும் எழுத்துப் பிழையறப் பேசிட வேண்டும்.

அன்புடன்,
கோ.இராகவன்

Friday, October 21, 2005

சேற்றைக் கழுவியவன்

பேற்றைத் தவம் சற்றுமில்லாத என்னை ப்ரபஞ்சமெனும்
சேற்றைக் கழிய வழி விட்டவா செஞ்சாடாவி மேல்
ஆற்றைப் பணியை யிதழியை தும்பையை அம்புலியின்
கீற்றைப் புணைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே


வாழ்க்கையில் இறைவனைச் சரணடைவதன் தத்துவத்தை மிகவும் அழகாக விளக்கும் பாடல் இது. துன்பம் வரும் வேளையிலெல்லாம் இந்தப் பாடலை தொடர்ந்து முணுமுணுக்க துன்பம் மறைந்து இன்பம் தெரியும்.

இந்த உலகத்தில் நாம் பிறப்பே துன்பமயமானது. மூடிய அறையில் காற்றில்லாமல் ஒன்பது மாதங்கள் இருக்கிறோம். பிறக்கும் பொழுதும் நெருக்கிக் கொண்டு பிறக்கிறோம். முதற் கோணல் முற்றும் கோணலாகி விடக் கூடாதே!

பிறந்து விட்டோம். பிரச்சனைகள் பல. கீழே விழுந்தால் ஒட்டிக் கொள்ளும் சேறு போல துன்பங்கள் நம்மைப் பற்றிக் கொண்டிருக்கின்றன. அருணகிரி சொல்கிறார்," முருகா! சேற்றைக் கழுவ நீர் வேண்டும். பிறவித் துன்பங்களைக் கழுவ நீர் வேண்டும்."

வங்கியில் பணம் வைத்திருந்தால்தான் வட்டி கிடைக்கும். பணம் இல்லாவிட்டால் வட்டி கிடைக்குமா? அது போல நல்ல தவம் செய்திருந்தால்தான் பிறவித் துன்பம் போகும்.

எதற்கும் தவம் செய்திருக்க வேண்டும். நல்ல தாய் வயிற்றில் பிறப்பதற்கும், நல்ல தந்தையின் அரவணைப்பிற்கும், நல்ல கல்விச் செல்வம் பெருவதற்கும் தவம் செய்திருக்க வேண்டும். ஔவையாரும் "அரிது அரிது ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது" என்கிறார்.

தவம் என்றால் என்ன? மூச்சடக்கி பேச்சடக்கி புலன்களையெல்லாம் அடக்கி மூலையில் உட்கார்ந்திருப்பதா? இல்லை. நல்ல எண்ணெங்களை வளர்த்தலும் நல்ல செயல்களைச் செய்தலும். போகிற வழியில் கிடக்கும் கல்லை விலக்கி வைப்பது கூட ஒரு வகையில் தவமே. அடுத்தவருக்கு நன்மை செய்யும் எந்தச் செயலும் தவமே.

அப்படி எந்தத் தவமும் செய்திராமல் பிறவித் துன்பத்தில் உழன்றவர் அருணகிரி. இருந்தும் அவருக்கு கருணை காட்டினான் கந்தன். அதைத்தான் முதலிரண்டு வரிகளில் சொல்கிறார். "பேற்றைத் தவம் சற்றும் இல்லாத என்னைப் ப்ரபஞ்சமெனும் சேற்றைக் கழிய வழி விட்டவா!"

அடுத்த இரண்டு வரிகளில் கந்தனின் தந்தையின் பெருமையைச் சொல்லி அதன் மூலம் முருகனின் அருமையை ஊட்டுகிறார்.

ஆற்றைப் - கங்கை ஆற்றை
பணியை - அரவத்தை (பாம்பை)
இதழியை - கொன்றை மலரை
தும்பையை - வெண்ணிற தும்பை மலரை
அம்புலியின் கீற்றை - அழகான நிலவின் பிறையைப்
புனைந்த பெருமான் - திருமுடியின் சூடிக் கொண்டிருக்கின்ற பெருமான் குமாரன் கிருபாகரனே!

ஈசனின் திருமுடியில் நிறைந்திருக்கும் மங்கை கங்கை. கங்கை நமது பாவங்களைப் போக்கும் பண்புடையது. அந்த முடியிலேயே பாம்பையும் சூடிக் கொண்டிருக்கிறார் பெருங்கருணையோடு. அனைவரும் அழகிய பொருட்களைச் சூடிக் கொண்டிருக்க பாம்பைச் சூடியது ஏன்? தான் அனைவருக்கும் பொது என்று சொல்லத்தான்.

ஆகையால்தான் பாம்பைச் சூடிய முடியிலே செந்நிறக் கொன்றையையும் வெண்ணிறத் தும்பையையும் சூடிக் கொண்டிருக்கிறார். கொன்றை என்றால் இன்று பலருக்குத் தெரியாது. குல்மொஹர் என்றால் தெரியும். உள்ளம் தும்பையைப் போல வெண்மை. பண்போ கொன்றையைய் போல செம்மை.

அம்புலியின் கீற்றையும் முடியில் சுமந்து கொண்டிருக்கும் இறைவனாரின் திருக்குமரனாகிய கிருபாகரன் முருகன் நமது பிறவிப் பிணி தீர்த்து அருளுடன் வாழ வைப்பான்.

அன்புடன்,
கோ.இராகவன்

Tuesday, October 18, 2005

தடபடெனப் படு குட்டுடன்

அடலருணைத் திருக் கோபுரத்தே அதன் வாயிலுக்கு
வடவருகிற் சென்று கண்டுகொண்டேன் வருவார் தலையில்
தடபடெனப் படு குட்டுடன் சர்க்கரை மொக்கிய கை
கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே


முருகனை வணங்கி கந்தலரங்காரத்தைத் துவக்குகிறார் அருணகிரி. அவருக்கு முருகன் அருள் காட்டிய இடம் திருவண்ணாமலை. ஆகையால் திருவண்ணாமலையை வைத்தே துவக்குகிறார்.

அடல் என்றால் வலிமை. அடலேறு என்ற சொற்றொடரை நினைவு கொள்ள. அடலேறு என்றால் வலிமை மிகுந்த சிங்கம். அருணை என்பது திருவண்ணாமலை. அதற்கு ஏன் அருணை என்று பெயர்?

அருணம் என்றால் சிவப்பு. ஆகையால்தான் செஞ்சுடராக வானிலிருக்கும் சூரியனுக்கும் அருணன் என்று பெயர். நான்முகனும் நாரணனும் செருங்கு மிகுந்த பொழுது அடியும் முடியும் தெரியாத தீப்பிழம்பாக காட்சி தந்தார் பரமேசுவரன். அடியும் முடியும் காணாமல் தேடித் தோற்றார்கள் பிரம்மனும் பரந்தாமனும். ஆகையால் அண்ணாமலைக்கு அருணை என்றும் பெயருண்டு.

அடலருணை என்றால்? வலிமை மிகுந்த அருணை. அருணைக்கு என்ன வலிமை. சில புண்ணியத் தலங்கள் சென்றால்தான் பலன் கொடுக்கும். சில புண்ணியத் தலங்களைப் பற்றிப் பேசினாலே பலன் கிடைக்கும். ஆனால் உள்ளன்போடு நினைத்த பொழுதிலேயே பலன் கொடுக்கும் தலங்களில் ஒன்று திருவண்ணாமலை. அதனால்தான் அந்த ஊரை அடலருணை என்று அடைமொழியோடு அழைக்கிறார்.

அப்படிப் பெருமையுள்ள திருவண்ணாமலை வல்லாளராஜன் கோபுரத்தின் வடபுறமாக முருகப் பெருமான் கொலு வீற்றிருக்கிறார். இடப்புறமாகச் சென்றால் அங்கே விநாயகப் பெருமான் நன்றாகச் சப்பணமிட்டு அமர்ந்திருக்கிறார். அங்கே எல்லாரும் தலையில் தடபடனெக் குட்டிக் கொண்டு வணங்குகிறார். அவர்கள் படைக்கின்ற சர்க்கைரையில் செய்த தின்பண்டங்களை துதிக்கையில் எடுத்து வாயில் மொக்கிக் கொண்டு அருள் பாலிக்கிறார் பிள்ளையார்.

இப்பொழுது முதல் மூன்று அடிகளையும் படியுங்கள். அடலருணைத் திருக்கோபுரத்தே அதன் வாயிலுக்கு வட அருகில் சென்று கண்டுகொண்டேன். வருவார் தலையில் தடபடனெனப் படு குட்டுடன் சர்க்கரை மொக்கிய கை. புரிந்திருக்குமே!

கடதடக் கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றினையே என்பது கடைசி வரி. அப்படி அருள் கொடுத்துக் கொண்டு அமர்ந்திருக்கின்ற பிள்ளையாருக்குப் பக்கத்திலேயே அவருக்குக்கு இளையவரான முருகப் பெருமானைக் கண்டுகொண்டேன் என்று முடிக்கிறார் அருணகிரி.

இதில் சொல்லாடலைப் பாருங்கள். கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றினையே! கும்பக் களிறு விநாயகர். அவருக்கு இளைய களிறு முருகப் பெருமான். அத்தோடு பாருங்கள் குட்டும் பொழுது உண்டாகும் ஒலியையும் பாட்டில் வைத்திருக்கிறார் அருணகிரி. "தடபடெனப் படு குட்டுடன்" என்ற அடியில் வருகிறது பாருங்கள்.

உண்பதைச் சொல்லப் பல பெயர்கள். கொறித்தல் என்றால் கொஞ்சமாகச் சாப்பிடுவது. நுங்குதல் என்றால் வயிறு நிரம்ப உண்ணுதல். மொக்குதல் என்பது வாய் நிரம்ப உண்ணுதல். ஆனை வாய் நிரம்ப உண்ணும். விநாயகப் பெருமானும் ஆனைமுகர்தானே. ஆகையார் அன்பர் தந்த இனிப்புப் பண்டங்களை துதிக்கையில் தூக்கி வாயில் திணிந்து மொக்கினாராம். "சர்க்கரை மொக்கிய கை". இப்படிப்பட்ட பிள்ளையாருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் முருகப் பெருமானை வணங்கி அருள் வேண்டுகிறார் முருகப் பெருமான்.

ஒரு பாடலிலேயே பிள்ளையாரையும் முருகனையும் பாடும் இந்தப் பாடல் துதிக்கச் சிறந்தது. எந்தக் காரியத்தைச் செய்யும் முன்னும் இந்தப் பாடலை உளமாற நினைத்து விட்டு செய்யுங்கள். வெற்றி நிச்சயம்.

அன்புடன்,
கோ.இராகவன்

கந்தனுக்கு அலங்காரம்

கந்தனுக்கு அலங்காரம்

கந்தரலரங்காரம் அருணகிரிநாதர் எழுதிய நூல். அருள் நூல். அழகு நூல். அறிவு நூல். முருகப் பெருமானின் திரு அலங்காரங்களை விளக்கும் நூல். உச்சி முதல் உள்ளங்கால் வரையிலான அழகினையும் முருகப் பெருமானின் ஊர்தியின் பெருமையையும், வெற்றி வேலின் திறமையையும் இவைகளினால் நாம் பெறும் வளமையையும் விவரித்து எழுதப்பட்ட நூல்.

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலையில் மலரும் பூக்களைக் கொண்டும் அலங்காரம் செய்யலாம். அப்படி இன்றைக்குச் செய்தது நாளைக்கு ஆகாது. என்றைக்கும் ஆகும் வகையில் என்றுமுள தீந்தமிழில் கந்தனுக்கு அலங்காரம் செய்துள்ளார் அருணகிரியார்.

இந்த நூலைப் படித்தாலும் கேட்டாலும் உள்ளத்தில் நினைத்தாலும் இன்பம் பெருகும். துன்பம் கருகும். உள்ளம் உருகும். பாம்பன் சுவாமிகள் அருணகிரியாரைக் குறித்துச் சொல்கையில் ஓசைமுனி என்பாராம். எந்த ஒரு ஓசையையும் தமிழ்ச் சொல்லாக்கி அந்தச் சொல்லையும் பூவாக்கி முருகனுக்கு அலங்காரம் செய்தவர் அருணகிரியார். இறைவன் அருளும் இறைவன் மீது அன்பும் உண்மையிலேயே இருந்தால்தான் இதெல்லாம் நடைமுறைக்கு வரும்.

காப்புச் செய்யுளோடு சேர்த்து மொத்தம் நூற்று எட்டு பாக்கள் உள்ளன. இந்த நூற்றி எட்டுப் பாப்பூக்களையும் படிப்பது இன்பமென்றாலும் நாம் எளிமையாக பாடியும் துதித்தும் மகிழத்தக்க சிறந்த பாடல்களைப் பொறுக்கி அவற்றிற்கு உரையளிக்க உள்ளேன். அனைத்துப் பாக்களுக்கும் உரையளிப்பது என்பது பேரறிஞர்களுக்கே கைவரும். எளியேனாகிய எனக்குப் புரிகின்ற செய்யுட்களை எடுத்து வாரம் ஒன்றாக அவைகளுக்கு விளக்கம் கோர்த்து நீங்கள் படித்து மகிழ்ச்சியும் வளமும் பெறத் தருகிறேன். எல்லாம் முருகன் செயல்.

அன்புடன்,
கோ.இராகவன்