Tuesday, June 27, 2006

23. சுற்றி வளைத்துச் சுருக்கமாகச் சொன்னால்

முருகா, உன்னையே கணவனாக அடைய வேண்டுமென்று விருப்பம் கொண்டு வள்ளி நாச்சியார் அரும் பெரும் தவம் செய்து, அதன் பலனாக உன்னையே அடைந்தார். அழகான கூந்தல் அலங்காரம் கொண்ட வள்ளியின் திருவடிகளை அடையும், மேருமலையையை ஒத்தவரும், தேவர்களுக்கெல்லாம் தலைவரும், வேளையில் வந்து காப்பவருமான முருகா! எங்களையும் காத்து அருள்வாயாக!

காளைக் குமரேசன் எனக்கருதி
தாளைப் பணியத் தவம் எய்தியவா
பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்
வேளைச் சுரபூபதி மேருவையே


மேலே சொன்னது இந்தப் பாடலுக்கான வெளிப்படையான விளக்கம். அதை அப்படியே பொருள் கொள்வதிலும் தவறில்லை. அதே நேரத்தில் உட்பொருளை அறிந்து கொள்ள முடியுமானால் அது மிகவும் சிறந்தது. அதை இப்பொழுது ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். இந்தப் பாடலில் அருணகிரி உலக இயக்கத்தைப் பற்றிக் கூறுகிறார். மிகவும் ஆழமாக அறிந்து தெளிய வேண்டிய பாடலிது.

"காளைக் குமரேசன் எனக் கருதி" என்றால் "தனக்கான ஆண்மகன் என்று கருதி" என்று பொருள். காளை என்றால் ஆண்மகன் என்று வேறு எங்கு சொல்லியிருக்கிறார்கள்? புறநாநூறு உதவிக்கு வருகிறது. "ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே" என்ற பாடலில் "களிறு எறிந்து மீள்தல் காளைக்குக் கடனே" என்று வருகிறது. காளை என்ற ஆகுபெயர் இங்கே வீரத்தைக் குறிக்கிறது. முருகனே மணவாளனாக வரவேண்டும் என்று வள்ளி தவம் இருந்தார். அதைத்தான் "தாளைப் பணியத் தவம் எய்தியவா" என்கிறார் அருணகிரி.

சைவ சித்தாந்தம் என்ன சொல்கிறது? இந்த உலக இயக்கம் மூன்று சக்திகளால் ஆகின்றது. அவை இச்சை, கிரியை மற்றும் ஞானம். இச்சை என்றால் விருப்பம் அல்லது ஆசை. கிரியை என்றால் செயல். ஞானம் என்றால் அறிவு. ஒன்றின் மீது ஆசை வைத்து அதை அடைவதற்குக்கு வேண்டிய செயல் செய்யப்படுகிறது. அந்தச் செயலை அறிவதற்கும், பிறகு செயலாற்றுவதற்கும் அறிவு தேவைப்படுகிறது. உலகத்தில் எந்த இயக்கம் என்று பார்த்தாலும் மேற்சொன்ன மூன்று விளைவுகளுக்குள்ளேயே முடிந்து விடுகிறது. ஞானம் குறைவானால், செயலாற்றல் குறையும். ஆசை கை கூடாது. ஆசை தவறானால், அதை அடையும் அறிவும் இருந்தால் தவறான செயல் நடந்தேறும். இப்படி எல்லாமே மூன்று சக்திகளில் முடிந்து விடுகிறது.

இந்த மூன்று சக்திகளையும் ஒருங்கே கொண்டவர் முருகப் பெருமான். வள்ளி நாச்சியார் இச்சா சக்தி. தெய்வயானை அம்மை கிரியா சக்தி. வேல் ஞான சக்தி. ஆகையால்தான் வள்ளி தெய்வயானையோடு முருகனை வணங்குதல் மிகவும் சிறப்பு. முன்பே சொன்னது போல வள்ளிக்கு முருகனை அடையும் ஆசை இருந்தது. ஆகையால் தவம் செய்தார். அடைய விருப்பம் கொண்டு தவம் செய்தமையால் வள்ளி இச்சா சக்தியாகிறார்.

"வேளைச் சுரபூபதி மேருவையே" என்கின்ற சொற்றொடரை இப்பொழுது பார்ப்போம். மேரு மலை என்பது இமயமலையின் மற்றொரு பெயர். உலகத்தில் உயர்ந்த சிகரம் இமயத்தில்தானே இருக்கிறது. அதுபோல முருகக் கடவுள் உயர்ந்தவர் என்று பொருள். சுரபூபதி என்றால் தேவர்களின் தலைவன். அது சரி. அதென்ன வேளை? காலத்தினால் செய்த உதவி சிறிது எனினும் ஞாலத்தின் மானப் பெரிது என்கிறார் வள்ளுவர். அப்படி காக்க வேண்டிய வேளை வந்ததும் வேலைத் தூக்கிக் கொண்டு காக்கும் வேலை பார்க்க வருகின்றவன் கந்தன். அதனால்தான் அந்த வேளை என்ற அடைமொழி.

"பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்" என்றும் வருகிறதே. முன்பு ஒருமுறை முருகன் வள்ளியைப் பணிவாரா என்று பார்த்தோமே! "பணியா என வள்ளி பதம் பணியும்" என்ற வரிகளைச் சொல்கிறேன். பிறகு இங்கே மறுபடியும் வருகிறதே. இங்கே முருகன் வள்ளியைப் பணிகிறார் என்று வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறாரே அருணகிரி. என்ன நினைத்து சொல்லியிருப்பார்? அது ஒரு உட்பொருள். ஆசை அல்லது இச்சை என்பது அனைத்து செயல்களுக்கும் அறிவிற்கும் ஆதாரமாக இருப்பதைப் பார்த்தோம். உயிர்களுக்கு எல்லாம் ஆதாரமானது ஆன்மா. அந்த ஆன்மா விலகிவிட்டால் வெறும் உடலுக்கு எந்த ஆசையும் இல்லை. ஆகையால் செயலும் இல்லை. அதை அறியும் ஞானமும் இல்லை. அப்படிப்பட்ட ஆன்மாக்களை இறைவன் அணைத்துச் செல்வதுதான் "பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்" என்ற சொற்றொடர். வள்ளி நாச்சியார் இச்சா சக்தி. இச்சா சக்தி ஆன்மாவின் ஆதாரம். அந்த ஆன்மாக்கள் அடைவது இறைவன் திருவடியை. அதுவும் ஆன்மாக்கள் தேடிச்செல்ல வேண்டாம். பெருங்கருணையோடு இறைவனே ஆன்மாக்களை அணைத்துக் கொள்வான் என்பதைத்தான் அப்படிச் சுற்றி வளைத்துச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார் அருணகிரி.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Tuesday, June 20, 2006

22. முருகன் காட்டும் ஒலியும் ஒளியும்

நுண்ணிய கருத்துகளை தண்மையாகச் சொல்வதில் அருணகிரிக்கு நிகர் அருணகிரியே! இந்தப் பாடலில் நான்கு வரிகள். முதல் வரி மிகப்பெரிய வாழ்க்கைத் தத்துவம். மற்ற மூன்று வரிகளும் முருகனைப் புகழ்கின்றன. ஒரு பெரிய விஷயத்தை ஒரு அடியில் அடக்கிவிட்டு, முருகனைப் புகழ மூன்று அடிகளைப் பயன்படுத்தியிருக்கிறார். காரணம் முருகனைப் புகழ்வதிலுள்ள ஆர்வம். எவ்வளவு புகழ்ந்தாலும் போதவில்லை. அதே நேரத்தில் அநுபூதி அடைவதற்கான கருத்தையும் சொல்ல வேண்டும். அதற்குக் கை கொடுகிறது தமிழ். சுருங்கச் சொல்ல பொருள் மிகுந்த சொற்களும், விரித்துச் சொல்ல அழகான சொற்களுமாய் தமிழ் விளையாட்டு நடத்தியிருக்கிறார் அருணகிரி.

கருதா மறவா நெறிகாண எனக்கு
இருதாள் வனசம் தரயென் றிசைவாய்
வரதா முருகா மயில் வாகனனே
விரதா சுரசூரா விபாடணனே


கருதா மறவா நெறி என்றால் என்ன? எதைக் கருதக் கூடாது? எதை மறக்கக் கூடாது? முதலில் எதை மறக்கக் கூடாது என்று பார்ப்போம். "நன்றி மறப்பது நன்றன்று!" இதுவும் வள்ளுவர் வாக்கு. செய்நன்றி மறந்தவர்க்கு உய்வில்லை. ஆகையால் நன்றி மறக்கக் கூடாது. சரி. எதைக் கருதக் கூடாது? "நன்றல்லது அன்றே மறப்பது நன்று". அதை நினைத்துக் கொண்டே இருப்பதால் எந்தப் பயனும் இல்லை. ஆகையால் அதைப் பெரிதாகக் கருதக் கூடாது. சரி. அதற்கும் கந்தர் அநுபூதிக்கும் என்ன தொடர்பு?

சூரபத்மன் சிறந்த தவசி. ஈசனே நேரில் வந்து வேண்டிய வரங்கள் தந்தார். அதிலிருந்து அவனது தவவலிமை புரியும். அப்படி ஈசனிடமே வரத்தைப் பெற்ற சூரன், வரம் தந்த வள்ளலின் அம்சமாக அவரது மகனே வந்து நின்ற பொழுது, நன்றியை மறந்து எதிர்த்தான். அப்படி எதிர்த்த சூரன் செய்தது நன்றல்லது. அந்த நன்றல்லதையும் அன்றே மறந்த முருகப் பெருமான், அவனைத் திருத்தி சேவலும் மயிலுமாக மாற்றி உலகோர் புகழும் வரம் கொடுத்தார். இப்பொழுது புரிகிறதா கருதா மறவா நெறி! இன்னொரு விதமாகவும் சொல்லலாம். யோகநிலை அல்லது தவநிலை என்பது நினைப்பையும் மறப்பையும் கடந்த நிலை. அந்த நிலையையும் இறைவனொடு நம்மை ஒன்று படுத்தும்.

அப்படிப்பட்ட அரிய நெறியும் வேண்டுமென்று முருகனின் தாள் பணிய வேண்டும். அதுதான் "கருதா மறவா நெறி காண எனக்கு இருதாள் வனசம் தர என்று இசைவாய் வரதா!" முருகனுடைய திருவடிகள் எப்படிப்பட்டவை? "அவன் கால் பட்டு அழிந்தது இங்கு என் தலை மேல் அயன் கையெழுத்தே" என்கிறது கந்தரலங்காரம். நான்முகன் நமது தலையில் எழுதியதை அழித்துவிடும் தன்மை முருகனுடைய திருவடிகளுக்கு உண்டு. அப்படி நான்முகன் எழுதியதை அழித்து நல்ல வாழ்வு தரும் பாதங்கள் கந்தனுடையவை. அப்படிப்பட்ட திருவடிகளைத் தர இசைவாய் வரதா என்கிறார். கொடுப்பதையும் விரும்பிக் கொடுக்க வேண்டும். ஆகையால்தான் இசைவாய் வரம் தா என்கிறார்.

முருகா! மயில்வாகனே! மயில் என்பது என்ன? சூரபதுமன். அதே நேரத்தில் ஓங்கார வடிவம். மயில் மேல் ஏறி வருகின்றவன் முருகன். ஆக முருகனைத் தாங்குவது மயில். வேறு விதமாகச் சொன்னால், முருகனின் இருக்கையே ஓங்காரம். ஓங்காரத்தையே அடித்தளமாகக் கொண்டவர் முருகப் பெருமான். அதனால்தான் மயில் வாகவன். மயில் மேல் உட்கார்வதா, பறப்பதா என்று விதண்டாவாதமாக ஆராயாமல், உட்பொருளை உணர்ந்தால் தமிழின் மேன்மை புரியும். தமிழ் உருவகமாகவும் புழங்கக் கூடிய மொழி. ஓங்காரம் என்பதைச் சொல்லி விளங்க வைப்பதற்குள் மயிலைப் பற்றிச் சொல்லி விளங்க வைத்து விடலாம். நமது முன்னோர்களின் அறிவுடைமை அது.

சூர விபாடணன் என்று செய்யுள் முடிகிறது. இது வடமொழிக் கையாளல். தமிழில் சூரனை இரண்டு கூறுகளாகப் பிரித்தவன் என்று பொருள். இங்குதான் நன்றாகக் கவனிக்க வேண்டும். ஏன் இரண்டு கூறுகளாகப் பிரிக்க வேண்டும். மூன்றாக நான்காக அல்லது தூளாக அடித்து நொறுக்கியிருக்கலாமே. அதை விடுத்து இரண்டாகப் பிரித்தது ஏன்? மயில் உருவடிவம். சேவல் ஒலிவடிவம். இந்த உலகப் பொருட்கள் அனைத்தும் ஓங்கார வடிவானவை. சூரனும் அவ்வாறே! வெள்ளை ஒளியை ஏழாகப் பிரிப்பது போல ஓங்காரமான சூரனைப் பிரித்து ஒங்காரத்தின் ஒளி வடிவத்தையும் ஒலி வடிவத்தையும் காட்டியிருக்கிறார் முருகன். சுருங்கச் சொன்னால் ஒலியும் ஒளியும் காட்டியிருக்கிறார்.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Tuesday, June 13, 2006

21. பாத்திரம் அறிந்து பிச்சையிடு

மிகவும் அரிதான பொருள் பொதிந்த பாடல். அதனால்தானோ என்னவோ "அரிது" என்றே துவக்கியிருக்கிறார் அருணகிரி.

அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன்
உரிதா உபதேசம் உணர்த்தியவா
விரிதாரண விக்கிரம வேள் இமையோர்
புரிதாரக நாக புரந்தரனேபாத்திரம் அறிந்து பிச்சையிடு என்பது தமிழ்ப் பழமொழி. காரணம் அந்தப் பிச்சையைத் தாங்கும் வன்மையும் தன்மையும் பாத்திரத்திற்கு இருக்க வேண்டும் என்பதுதான். தங்கக் கிண்ணத்தில் ஊற்றப்பட்ட கழுதைப்பால் தானுங்கெட்டு கிண்ணத்தையும் கெடுக்கும் என்ற வழக்கு ஊர்ப்புறங்களில் இன்னும் உண்டு. ஒன்றை ஒருவருக்குக் கொடுக்கும் பொழுது அவர் அதற்குத் தகுதியானவர்தானா என்று அறிந்தே கொடுக்க வேண்டும். கொடுப்பது எதுவாயினும் இந்தக் கருத்து பொருந்தும்.

மீன் பிடிக்கத் தெரியாதவனுக்குத் தூண்டிலைக் கொடுத்து என்ன பயன்? கண்கள் இரண்டும் இழந்தவருக்கு ஓவியத்தால் என்ன நன்மை? விரைந்து செல்லும் ஊர்தியைக் காலிழந்தவருக்குக் கொடுப்பதில் எந்தப் பயனும் இல்லை. அதியமான் ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்தான். தானும் உண்ணவில்லை. உற்றார் உறவினர்களுக்கும் கொடுக்கவில்லை. ஆனால் ஔவைக்குக் கொடுத்தான். காரணம் ஔவையார் அந்த நெல்லிக்கனிக்குப் பொருத்தமானவர். தமிழ் வாழ ஆசைப்பட்டான் அதியமான். ஆகையால் பொருத்தமில்லாதவராக இருந்தால் நம்மைப் போன்றவர்கள் கொடுக்காமல் இருந்து விடலாம்.

சாதாரணப் பொருட்களுக்கே இப்படியென்றால், மிகவும் அரிதான பெரிதான பொருட்களுக்கு எத்துணை சிந்திக்க வேண்டும். கொடுக்குமிடத்தில் முருகன் இருந்தால் என்ன செய்வார்? நம்முடைய மனங்களில் அழுக்கு நிறைய இருக்கிறது. இருந்தும் இறைவன் மீது அன்பு வைக்கும் நல்ல பண்பை நமக்குத் தந்திருக்கிறான். அதற்கு நம்மைப் பாத்திரமாக்கி பிறகு நமக்கு அந்த பிச்சையை இட்டிருக்கிறான். பொருத்தமில்லாதவன் என்று இறைவன் ஒதுக்கி விடுவதில்லை. நம்மை அந்தப் பரிசுக்குப் பொருத்தமானவராக்கி அழகு பார்ப்பான் ஆண்டவன். அப்படி கந்தன் அருணகிரிக்குச் செய்த கருணைதான் இந்தப் பாடல். "அரிதாகிய மெய்ப்பொருளுக்கு அடியேன் உரிதாக!" மிகவும் அரிதான உண்மைப் பொருளுக்கு என்னை பொருத்தமுள்ளவனாக மாற்றி உபதேசம் செய்தவனே என்று பாடுகிறார்.

அல்லா முகமது நபிகளிடத்திலே காட்டிய கருணையும், பரமபிதா மோசசிடம் காட்டிய கருணையும், முருகன் அருணகிரிக்குக் காட்டிய கருணையும் எவ்வளவு பெரியவை. இறைவன் நபியண்ணல் வழியாகக் குரானைத் தந்தார். மோசஸ் வழியாகப் பத்து கட்டளைகளைத் தந்தார். அருணகிரி வழியாக தமிழ் அமுதம் தந்தார். ஆக இம்மூவரும் இறைவன் கருணைக்குப் பொருத்தமானவர்கள். ஆகையால்தான் இறைவன் அவர்களுக்குக் கொடுத்த பொருள், அவர்களுக்கும் பயன்பட்டு, இன்றளவும் நமக்கும் பயன்படுகிறது. இப்பொழுது புரிந்திருக்கும் பாத்திரமறிந்து பிச்சையிடும் நுண்மை. பாடலின் முதலிரண்டுனடிகளை இப்பொழுது படியுங்கள். "அரிதாகிய மெய்ப்பொருளுக்கு அடியேன் உரிதாக உபதேசம் உணர்த்தியவா!" பொருள் விளங்குகிறது அல்லவா! மதங்களையெல்லாம் கடந்த தமிழ்.

"சேவலங் கொடியன் காப்ப, ஏம வைகல் எய்தின்றால் உலகே" என்கிறார் பெருந்தேவனார். சேவற்கொடியன் திருக்கரங்களில் உலகம் பத்திரமாக காக்கப் படுகிறது என்பது இதன் பொருள். சங்ககாலத் தமிழ் வரிகள் இவை. அப்படி உலகத்தின் பாரத்தைச் சுமக்கும் கடவுளின் தோள்கள் வலிமை மிகுந்ததாக இருக்க வேண்டும். இது உருவகம்தான். அதனால்தான் "விரிதாரண விக்கிரம வேள்" என்று முருகனைக் கூறுகிறார் அருணகிரி.

இமையோர் என்றால் இமைக்காதவர்கள். யார் அவர்கள்? தேவர்கள் இமைக்காதவர்கள் என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட தேவர்கள் உச்சரிப்பது தாரக மந்திரம். தாரகம் என்றால் பிரணவம். அந்தப் பிரணவ மந்திரமும் முருகனுக்கு உரியது என்கிறார் அருணகிரி. தந்தைக்கே உபதேசித்தவன் அல்லவா. தேவர்கள் எப்பொழுதும் புகழும் தாரக மந்திரமே என்றும் சொல்கிறார். அதுதான் "இமையோர் புரி தாரக" என்பது.

தேவர்கள் கூறும் பிரணவப் பொருளே! விரிந்து பரந்த தோள்களில் உலகத்தைக் காப்பவரே! கிடைப்பதற்கு மிகவும் அரிதான உண்மைப் பொருளினை எனக்கு உபதேசிக்க, அந்தத் தகுதியை எனக்களித்து உபதேசமும் அருளிய முருகா, நீ போற்றி! இது அருணகிரி வாக்கு.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Tuesday, June 06, 2006

20. மானம் கப்பலில் குடி போகாமல் இருக்க

வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா
அடி அந்தமிலா அயில்வேல் அரசே
மிடி என்றொரு பாவி வெளிப்படினே

இந்தப் பாடலைப் பொருள் கொள்ளும் பொழுது கீழ்க்கண்ட முறையில் வரிகளை மாற்றி அமைத்துப் படித்தால் எளிதாகப் புரியும்.
அடி அந்தமில்லா அயில்வேல் அரசே
மிடி என்றொரு பாவி வெளிப்படினே
வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா

அடி என்பது தொடக்கம். அந்தம் என்பது முடிவு. அறிவு தொடக்கமும் முடிவும் அற்றது. ஞானத்தின் தொடக்கம் என்று எதைச் சொல்ல முடியும்? பிறக்கும் குழந்தை கூட பசிக்கு அழவும், பாலைக் குடிக்கவும் தேவைப்படும் அறிவோடுதான் பிறக்கிறது. அறிவுக்குக் கரை ஏது? அனைத்தும் அறிந்தவர் யார்? கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு. இது கலைமகள் வாக்கு. கலைமகளுக்கே அப்படியென்றால் நமக்கெல்லாம்? ஆகையால் அடக்கம் வேண்டும். அடக்கம் அமரருள் உய்க்கும்.

ஆக ஞானம் ஆதியும் அந்தமும் இல்லாது. ஞானத்தின் வடிவான வேலும் முதலும் முடிவும் இல்லாதது. அப்படிப்பட்ட வேலைத் தாங்கிய அரசே! முருகா! அதுதான் "அடி அந்தமிலா அயில்வேல் அரசே!"

அடுத்த வரிக்கு வருவோம். இந்த வரி மிடியைப் பற்றிப் பேசுகிறது. மிடி என்றால் வறுமை. வறுமை என்பது வாழ்வில் வெறுமை. கொடிது கொடிது வறுமை கொடிது என்கிறார் ஔவை. அதனிமும் கொடிது இளமையில் வறுமை. குழந்தைப் பருவமும் இளமைப் பருவமும் அனுபவிக்கும் பருவங்கள். அந்தச் சமயத்தில் வறுமையென்றால் அதுதான் கொடுமை. பழநி திருப்புகழ் சொல்கிறது. "செவிடு குருடு வடிவு குறைவு சிறிது மிடியும் அணுகாதே....எனையும் மனதொடு அடிமை கொளவும் வரவேணும்!" வறுமை வருமையில் எல்லாப் பெருமையும் சிறுமையடையும். பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை என்கிறார் வள்ளுவர். அதானால்தான் அருணகிரி வறுமையைப் பாவி என்கிறார். மிடி என்று ஒரு பாவி வெளிப்படின் என்னவாகும் என்று முருகனைக் கூப்பிட்டுச் சொல்கிறார்.

வறியவர் உண்பது குறைவு. குறைந்த ஊட்டம் உடலை இளைக்கச் செய்யும். கட்டிளம் காளையும் காய்ந்த கம்பந்தட்டையாவான். ஆக வடிவு குறையும். தனம் என்றால் செல்வம். நிலையில்லாததேயாயினும் செல்வம் பயனுள்ளது. அதுவும் போகும். விரும்பியதைச் செய்ய முடியாது. வேண்டியதை உண்ண முடியாது. நாடியதைக் கொள்ள முடியாது. அதனால் அடுத்த கட்டமாக வேண்டியது கிடைக்காமல் மனம் நோகும். நொந்த மனத்தால் குணம் கெடும். குணமில்லாத ஒருவனுடைய குடும்பம் நல்ல பெயரை எடுக்காது. ஆகையால் குடும்ப மானம் போகும். அது குலப் பெருமையைச் சாய்க்கும். பேரரசர் வழியில் வந்திருந்தாலும் பேரன் திருடினால் குலப்பெருமை நாசமாகாதா! அதைத்தான் "வடிவும் தனமும் மனமும் குணமும் குடியும் குலமும் குடிபோகியவா" என்கிறார். சுருங்கச் சொன்னால் மானம் கப்பலில் குடிபோகும்.

முதலும் முடிவும் இல்லாத ஞான வடிவமான வேலினைத் தாங்கிய அரசே! வறுமை என்ற வெறுமை தாக்குமானால் பெருமை போகும். உடன் வடிவு, செல்வம், மனத்தூய்மை, குணம், குடும்ப மானம், குலப்பெருமை எல்லாம் போகும். இந்தத் துன்பத்திலிருந்து வேலவா நீ காக்க வா!

பக்தியுடன்,
கோ.இராகவன்