Tuesday, June 13, 2006

21. பாத்திரம் அறிந்து பிச்சையிடு

மிகவும் அரிதான பொருள் பொதிந்த பாடல். அதனால்தானோ என்னவோ "அரிது" என்றே துவக்கியிருக்கிறார் அருணகிரி.

அரிதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன்
உரிதா உபதேசம் உணர்த்தியவா
விரிதாரண விக்கிரம வேள் இமையோர்
புரிதாரக நாக புரந்தரனேபாத்திரம் அறிந்து பிச்சையிடு என்பது தமிழ்ப் பழமொழி. காரணம் அந்தப் பிச்சையைத் தாங்கும் வன்மையும் தன்மையும் பாத்திரத்திற்கு இருக்க வேண்டும் என்பதுதான். தங்கக் கிண்ணத்தில் ஊற்றப்பட்ட கழுதைப்பால் தானுங்கெட்டு கிண்ணத்தையும் கெடுக்கும் என்ற வழக்கு ஊர்ப்புறங்களில் இன்னும் உண்டு. ஒன்றை ஒருவருக்குக் கொடுக்கும் பொழுது அவர் அதற்குத் தகுதியானவர்தானா என்று அறிந்தே கொடுக்க வேண்டும். கொடுப்பது எதுவாயினும் இந்தக் கருத்து பொருந்தும்.

மீன் பிடிக்கத் தெரியாதவனுக்குத் தூண்டிலைக் கொடுத்து என்ன பயன்? கண்கள் இரண்டும் இழந்தவருக்கு ஓவியத்தால் என்ன நன்மை? விரைந்து செல்லும் ஊர்தியைக் காலிழந்தவருக்குக் கொடுப்பதில் எந்தப் பயனும் இல்லை. அதியமான் ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்தான். தானும் உண்ணவில்லை. உற்றார் உறவினர்களுக்கும் கொடுக்கவில்லை. ஆனால் ஔவைக்குக் கொடுத்தான். காரணம் ஔவையார் அந்த நெல்லிக்கனிக்குப் பொருத்தமானவர். தமிழ் வாழ ஆசைப்பட்டான் அதியமான். ஆகையால் பொருத்தமில்லாதவராக இருந்தால் நம்மைப் போன்றவர்கள் கொடுக்காமல் இருந்து விடலாம்.

சாதாரணப் பொருட்களுக்கே இப்படியென்றால், மிகவும் அரிதான பெரிதான பொருட்களுக்கு எத்துணை சிந்திக்க வேண்டும். கொடுக்குமிடத்தில் முருகன் இருந்தால் என்ன செய்வார்? நம்முடைய மனங்களில் அழுக்கு நிறைய இருக்கிறது. இருந்தும் இறைவன் மீது அன்பு வைக்கும் நல்ல பண்பை நமக்குத் தந்திருக்கிறான். அதற்கு நம்மைப் பாத்திரமாக்கி பிறகு நமக்கு அந்த பிச்சையை இட்டிருக்கிறான். பொருத்தமில்லாதவன் என்று இறைவன் ஒதுக்கி விடுவதில்லை. நம்மை அந்தப் பரிசுக்குப் பொருத்தமானவராக்கி அழகு பார்ப்பான் ஆண்டவன். அப்படி கந்தன் அருணகிரிக்குச் செய்த கருணைதான் இந்தப் பாடல். "அரிதாகிய மெய்ப்பொருளுக்கு அடியேன் உரிதாக!" மிகவும் அரிதான உண்மைப் பொருளுக்கு என்னை பொருத்தமுள்ளவனாக மாற்றி உபதேசம் செய்தவனே என்று பாடுகிறார்.

அல்லா முகமது நபிகளிடத்திலே காட்டிய கருணையும், பரமபிதா மோசசிடம் காட்டிய கருணையும், முருகன் அருணகிரிக்குக் காட்டிய கருணையும் எவ்வளவு பெரியவை. இறைவன் நபியண்ணல் வழியாகக் குரானைத் தந்தார். மோசஸ் வழியாகப் பத்து கட்டளைகளைத் தந்தார். அருணகிரி வழியாக தமிழ் அமுதம் தந்தார். ஆக இம்மூவரும் இறைவன் கருணைக்குப் பொருத்தமானவர்கள். ஆகையால்தான் இறைவன் அவர்களுக்குக் கொடுத்த பொருள், அவர்களுக்கும் பயன்பட்டு, இன்றளவும் நமக்கும் பயன்படுகிறது. இப்பொழுது புரிந்திருக்கும் பாத்திரமறிந்து பிச்சையிடும் நுண்மை. பாடலின் முதலிரண்டுனடிகளை இப்பொழுது படியுங்கள். "அரிதாகிய மெய்ப்பொருளுக்கு அடியேன் உரிதாக உபதேசம் உணர்த்தியவா!" பொருள் விளங்குகிறது அல்லவா! மதங்களையெல்லாம் கடந்த தமிழ்.

"சேவலங் கொடியன் காப்ப, ஏம வைகல் எய்தின்றால் உலகே" என்கிறார் பெருந்தேவனார். சேவற்கொடியன் திருக்கரங்களில் உலகம் பத்திரமாக காக்கப் படுகிறது என்பது இதன் பொருள். சங்ககாலத் தமிழ் வரிகள் இவை. அப்படி உலகத்தின் பாரத்தைச் சுமக்கும் கடவுளின் தோள்கள் வலிமை மிகுந்ததாக இருக்க வேண்டும். இது உருவகம்தான். அதனால்தான் "விரிதாரண விக்கிரம வேள்" என்று முருகனைக் கூறுகிறார் அருணகிரி.

இமையோர் என்றால் இமைக்காதவர்கள். யார் அவர்கள்? தேவர்கள் இமைக்காதவர்கள் என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட தேவர்கள் உச்சரிப்பது தாரக மந்திரம். தாரகம் என்றால் பிரணவம். அந்தப் பிரணவ மந்திரமும் முருகனுக்கு உரியது என்கிறார் அருணகிரி. தந்தைக்கே உபதேசித்தவன் அல்லவா. தேவர்கள் எப்பொழுதும் புகழும் தாரக மந்திரமே என்றும் சொல்கிறார். அதுதான் "இமையோர் புரி தாரக" என்பது.

தேவர்கள் கூறும் பிரணவப் பொருளே! விரிந்து பரந்த தோள்களில் உலகத்தைக் காப்பவரே! கிடைப்பதற்கு மிகவும் அரிதான உண்மைப் பொருளினை எனக்கு உபதேசிக்க, அந்தத் தகுதியை எனக்களித்து உபதேசமும் அருளிய முருகா, நீ போற்றி! இது அருணகிரி வாக்கு.

பக்தியுடன்,
கோ.இராகவன்

10 comments:

said...

again.. another awesome song.

i have a question.. ivai thirupugazil irukka?? illa arunagirunaadharin endha padaipai naama ippo paakarom..

btw, neenga perundhevanar paadal ellam solreengale. neenga Tamil Phd yaa.. illai epdi neenga ivlo kathukiteenga??avlo arvamaa?
arumai !!!

said...

:-)

said...

அருமையா சொல்லியிருக்கீங்க இராகவன். 'உரிதா' என்பதற்குச் சொன்ன விளக்கம் தான் மிக மிக அருமை.

இந்தப் பாடலைப் படித்தவுடன் எனக்குத் தோன்றும் பொருளையும் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

விரிதாரண விக்கிரம வேள் - விரிந்து பரந்து இருக்கும் தாரணியை (தரணியை, உலகத்தை) உடையவனே (தாரண); விக்கிரம வேள் - வெற்றிக்குத் தலைவனே.

இமையோர் புரி தாரக - தேவர்களின் இருப்பிடத்தைக் (அமராவதி நகரைக்) காப்பவனே

நாக புரந்தரனே - நாகபுரி எனும் வானுலகத்தைத் தாங்குபவனே (நாகம் என்றால் வானுலகம் என்று ஒரு பொருள் உண்டு)

உரிதா(க) என்பதற்க்கு என்னை உரியவனாக்கி என்றும் பொருள் கொள்ளலாம். நான் உரியவன் ஆகும் போது என்றும் பொருள் கொள்ளலாம். ஆனால் 'அவன் அருளாலே அவன் தாள் வணங்கி' என்றிருப்பதால் அவன் நம்மை அரிதாகிய மெய்ப்பொருளுக்கு உரியவராக்கி உபதேசம் உணர்த்துபவன் என்பது மிகப் பொருத்தம்.

said...

// Priya said...
again.. another awesome song. //

ஆமாம் பிரியா. மிகவும் அருமையான பாடல். அருணகிரியின் திருவாக்கில் முருகன் அருளால் விளைந்தது.

// i have a question.. ivai thirupugazil irukka?? illa arunagirunaadharin endha padaipai naama ippo paakarom.. //

இது திருப்புகழ் அல்ல. இப்பொழுது நாம் பார்ப்பது கந்தர் அநுபூதி. இது இருபத்தோராம் செய்யுள். திருப்புகழ் மட்டுமன்று கந்தர் அநுபூதி, கந்தரலங்காரம், வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், கந்தரந்தாதி என்று இறையருளால் நிறைய எழுதியிருக்கிறார் அருணகிரியார்.

// btw, neenga perundhevanar paadal ellam solreengale. neenga Tamil Phd yaa.. illai epdi neenga ivlo kathukiteenga??avlo arvamaa?
arumai !!! //

ஏங்க கிண்டலா? தமிழ்ல Phd வாங்குற அளவுக்கெல்லாம் அறிவு கெடையாதுங்க. எல்லாம் ஆர்வக் கோளாறுதான்.

said...

// பொன்ஸ் said...
:-) //

என்ன பொன்ஸ் இது! புன்னகை மட்டுமா? என்ன நினைச்சு சிரிக்கிறீங்கன்னு சொல்லுங்க.

said...

// குமரன் (Kumaran) said...
அருமையா சொல்லியிருக்கீங்க இராகவன். 'உரிதா' என்பதற்குச் சொன்ன விளக்கம் தான் மிக மிக அருமை. //

நன்றி குமரன். அனைத்தும் முருகனருள்.

// இந்தப் பாடலைப் படித்தவுடன் எனக்குத் தோன்றும் பொருளையும் சொல்லலாம் என்று நினைக்கிறேன். //

சொல்லுங்க. நல்லாச் சொல்லுங்க.

// விரிதாரண விக்கிரம வேள் - விரிந்து பரந்து இருக்கும் தாரணியை (தரணியை, உலகத்தை) உடையவனே (தாரண); விக்கிரம வேள் - வெற்றிக்குத் தலைவனே.

இமையோர் புரி தாரக - தேவர்களின் இருப்பிடத்தைக் (அமராவதி நகரைக்) காப்பவனே

நாக புரந்தரனே - நாகபுரி எனும் வானுலகத்தைத் தாங்குபவனே (நாகம் என்றால் வானுலகம் என்று ஒரு பொருள் உண்டு) //

புதுமையான விளக்கங்களாகத் தெரிகிறது. உங்கள் பாணியின் சொல்லியிருக்கிறீர்கள்.

// உரிதா(க) என்பதற்க்கு என்னை உரியவனாக்கி என்றும் பொருள் கொள்ளலாம். நான் உரியவன் ஆகும் போது என்றும் பொருள் கொள்ளலாம். ஆனால் 'அவன் அருளாலே அவன் தாள் வணங்கி' என்றிருப்பதால் அவன் நம்மை அரிதாகிய மெய்ப்பொருளுக்கு உரியவராக்கி உபதேசம் உணர்த்துபவன் என்பது மிகப் பொருத்தம். //

நான் என்ன சொல்லியிருக்கிறேன்? எங்கு வேறுபடுகிறேன். கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன்.

said...

உரிதா என்பதற்கு (1) என்னைத் தகுதி உடையவனாக்கி (உன் அருளால் ஆக்கி) என்றோ (2) நான் எப்போது தகுதி உடையவன் ஆகிறேனோ (தானாக என் முயற்சியில்) அப்போது என்றோ பொருள் கொள்ளலாம். ஆனால் (1) தான் மிகப் பொருத்தமாக இருக்கிறது. அதனைத் தான் நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள் என்று சொன்னேன்.

said...

ராகவன் நல்ல விளக்கம். நாகபுரந்தரனே என்பதற்கு குமரன் நன்கு விளக்கமளித்துள்ளார். தி ரா ச

said...

அழகான விளக்கம் இராகவன். முக்கியமாக 'பாத்திரம் அறிந்து பிச்சை இடு' என்ற சொற்றொடருக்கு தங்கள் விளக்கம் அருமை.

ரங்கா.

said...

ungalukku tamil boooks enga kedaikkum.. enga vaanguveenga.. i am looking for some books which i cant find in some shops in chennai..
can u suggest me good places where i can get them..