Saturday, December 31, 2005

பாவை - பதினாறு

நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே மணிக்கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா நீ
நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்

(பாவை நோன்பில் கலந்து கொள்ள வேண்டிய அனைவரும் எழுந்து குளிர்ந்த நீரில் தூயமாய் நீராடியாகி விட்டது. மாயவனை ஆயவனைப் புகழ்ந்து பாடியாகி விட்டது. அடுத்து செய்ய வேண்டியது என்ன? அண்ணலுடைய திருக்கோயிலுக்குச் சென்று அவனையும் எழுப்ப வேண்டியதுதான்.)

திருவில்லிபுத்தூரில் ஓங்கி வளர்ந்தது இந்த ரங்க மன்னார் திருக்கோயில். அந்தக் கோயிலில் வாயிலில் பாதுகாப்பாக நிற்கும் பாதுகாவலனே! அழகிய கொடிகளைத் தொங்கவிட்டுள்ள தோரணவாயிலைக் காக்கின்றவனே! திருக்கோயிலின் மணிக்கதவம் தாள் திறவாய்!

(இறைவனைக் காணச் செல்கின்றோம். கதவம் தாளிட்டிருந்தால் நமக்கு எவ்வளவு துன்பமாக இருக்கிறது. அப்படியிருக்கையில் விடியலிலேயே எழுந்து சென்ற பொழுதும் கோயில் கதவம் தாளிட்டிருக்கக் கண்டால் ஆண்டாளால் தாங்க முடியுமா? அதான் வாயில் காப்போனிடம் கெஞ்சுகின்றார்.

இதே நிலை அப்பருக்கும் ஏற்பட்டது. திருமறைக்காட்டு விரிசடையான் கோயில் பூட்டப்பட்டுள்ளது. துடித்துப் போய் விடுகிறார். உடனே ஒரு பதிகம் எழுகின்றது.
பண்ணின் நேர் மொழியாள் உமை பங்கரோ!
மண்ணினார் வலஞ் செய் மறைக்காடரோ!
கண்ணினால் உமைக்காணக் கதவினைத்
திண்ணமாய் திறந்தருள் செய்மினீரே!" என்று கதறுகிறார். கண்ணீர் பெருக்குகின்றார். விளைவு? இறையருளால் திருக்கதவம் திறக்கிறது.
)

வாயில் காப்பானே! திருக்கோயில் கதவம் திறவாய்! இன்றல்ல! மாயன் மணிவண்ணன் என்றைக்கோ அறைந்து பாட பறைகளைத் தந்து ஆயர் சிறுமியராகிய எங்களுக்கு வாய் நேர்ந்து வாக்குறுதி தந்தான். அப்படியிருக்க கதவு மூடியிருக்கலாமோ!

விடியலில் எழுந்தோம். தூய்மையுடன் நீராடினோன். நோன்பிற்கான கிரிசைகள் செய்தோம். இப்பொழுது அந்த நந்தனுடைய துயில் எழுப்பப் பாட வேண்டும். அதற்கு முன்னர் செய்யப்பட வேண்டியது என்ன தெரியுமா? எந்தக் காரணமும் சொல்லாமல் தாமதிக்காமல் நேயநிலைக் கதவின் தாளினை நீக்குவாய் எம்பாவாய்!

அன்புடன்,
கோ.இராகவன்

Friday, December 30, 2005

பாவை - பதினைந்து

எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ
சில் என்று அழையேன் மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையாய்
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயானைப் பாடேலோர் எம்பாவாய்


(இந்தப் பாடல் ஆண்டாளுக்கும் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு தோழிக்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையாக இருக்கிறது.)

ஆண்டாள் : எல்லே! இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ! இன்னமும் நீ கிடந்துறங்க என்ன காரணம் இருக்க முடியுமென்று எனக்குத் தோன்றவில்லையே!
(எல்லே என்பது பாண்டி நாட்டு வழக்கு. தூத்துக்குடி திருநெல்வேலிப் பக்கங்களில் இன்னும் ஏலே என்று அழைப்பதைக் கேட்கலாம். எல்லே என்பது மருவி ஏலே என்றாயிற்று. வா போ என்பதற்குக் கூட வாலே போலே என்று சொல்வார்கள். தென்பாண்டி ஆண்டாள் தேன்பாண்டி வழக்கைப் பயன்படுத்தியதும் சிறப்பு.)

தோழி : தோழியர்களே சிலுசிலுவென்று எரிச்சலூட்டும் விதமாக என்னை அழைக்காதீர்கள். இதோ இன்னும் சிறிது நேரத்திலேயே நான் வந்து விடுகின்றேன்.

ஆண்டாள் : அடி தோழி! நயமானவளே! உனது கதைகளை உன் வாயால் சொல்லியே நாங்கள் அறிவோம். ஒழுங்காக எழுந்து வருவாய்!

தோழி : சரி. நீங்களே சிறந்தவர்கள் ஒத்துக்கொள்கின்றேன். நீங்களே சென்று நோன்பு நூற்று நன்றாக இருங்கள். நானே நோன்பு நோற்காமல் இழந்தவளாகப் போகின்றேன். நீங்கள் இன்புற்று வாழுங்கள்.

ஆண்டாள் : ஆகா! வேறு வேலைகள் உடையவளே! விரைவாக (ஒல்லை) எழுந்து வா! யாரெல்லாம் வரவேண்டுமோ அவர்கள் எல்லாரும் வந்தாகி விட்டது. நீயும் வந்து எங்களோடு சேர்ந்து கொள்வாய்.

(தோழியர் ஒன்று கூடி அனைவரும் சேர்ந்து செய்ய வேண்டும் என்று எண்ணிய நோன்பு. ஆகையால் அனைவரையும் ஒரு வழியாக எழுப்புகிறார் கோதையார். நடுவில் தூக்கக் கலக்கத்தில் கோவித்துக் கொண்ட தோழியைக் கூட சமாளித்து எழுப்பி விட்டார். ஒல்லை என்ற சொல்லிற்கு விரைந்து என்று பொருள். இதே சொல்லை சண்முகக் கவசத்தில் பாம்பன் சுவாமிகள் பயன்படுத்தியுள்ளார். "ஒல்லையில் தாரகாரி ஓம் காக்க" அதாவது ஓங்காரமாய் விளங்கும் வேலவன் விரைந்து வந்து காக்க!)

தோழியர்களே! கண்ணன் திருவாய்ப்பாடியை விட்டு வடமதுரைக்குச் சென்ற பொழுது அவனுடைய மாமன் ஆனையை ஏவும் ஆணையை ஏவினான். அந்தோ! அந்த ஆனையும் கோவிந்தன் மீது பாய்ந்தது. அத்தோடு அதன் உயிர் ஓய்ந்தது. அப்படி ஆனையைக் கொன்றானை, தீயவர்களைப் போரில் அழிக்க வல்லானை மாயானைப் பாடிப் புகழ்வாய் எம்பாவாய்!

அன்புடன்,
கோ.இராகவன்

Friday, December 23, 2005

பாவை - பதினான்கு

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணனைப் பாடேலோர் எம்பாவாய்


அன்புடையவளே! உனது வீட்டின் புழக்கடைத் தோட்டத்திற்குச் செல். அங்கிருக்கும் நீர் நிறைந்த கிணற்றைப் பார். காலையில் மலரும் செங்கழுநீர் மலர்கள் வாய் நெகிழ்ந்து விரிந்திருக்கின்றன. இரவில் மலரும் ஆம்பல் மலரோ வாய் கூம்பி காலையின் வரவைச் சொல்கின்றது.

(வாவி என்ற தமிழ்ச் சொல்லிற்குக் கிணறு என்று பொருள். இன்றைக்குத் தமிழில் வாவி என்ற சொற்புழக்கம் இல்லையென்றாலும் இந்த வாவி என்ற சொல் பாவி என்று மருவி கன்னடத்திலும் தெலுங்கிலும் புழங்குகின்றது.

நீர் நிரம்பிய கிணறுகளில் மலர்கள் பூத்திருக்கும். அப்படி செங்கழுநீர் மலர்ந்தும் ஆம்பல் வாய் கூம்பியும் உள்ளன. வந்து பார்த்தாவது விடிந்தது என்று தெரிந்து கொள்ளும் படி தோழியரிடம் கூறுகின்றார் நாச்சியார்.
)

சாம்பல் நிறைத்திலும் செங்கொற்பொடி நிறத்திலும் ஆடையணிந்து கொண்ட தவத்தவர்கள் காலையில் நீராடி திருக்கோயிலுக்குச் சென்று மங்கலச் சங்கொலி முழங்கும் பேரின்ப ஒலியைக் கேளாய்!

ஏதோ எங்களுக்கு முன்னமே நீயெழுந்து கிளம்பி எங்களை எழுப்புவாய் என்று வீண்பேச்சு பேசிய தோழியே எழுந்திராய்! வரவர உனக்கு வெட்கமில்லாமலா போய் விட்டது!

(இந்தத் தோழி வாய்ச் சொல்லில் வீரம் மிகுந்தவள் போலிருக்கின்றது. ஆகையால் எல்லாரையும் தான் வந்து எழுப்புவேன் என்று சொல்லி விட்டுக் கடைசியில் தான் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கின்றாள். அந்த வெட்கமில்லாத வீண்பேச்சுக்காரியையும் விடாமல் எழுப்பி நோன்பில் சேர்க்கிறார்.)

வெண்ணிறச் சங்கும் மின்னிடும் சக்கரமும் இரண்டு கைகளிலும் ஏத்துகின்றானே நாராயணன்! தாமரை மலர்களை ஒத்த அழகிய விழியன்! அவனைப் பாடுவாய் எம்பாவாய்!

(இறைவன் புகழை நாத்தழும்பேற பாட வேண்டும். இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் சிறப்பாகச் சொல்லியிருக்கின்றார்.
பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராயணா வென்னா நாவென்ன நாவேபாண்டவர்களுக்குத் தூதாக நடந்தானைப் பாடிப் புகழாத நாவென்ன நாவே! நாராயணா என்ற பெயரைச் சொல்லாத நாவென்ன நாவே!
)

அன்புடன்,
கோ.இராகவன்

பாவை - பதிமூன்று

புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நந்நாளால்
கள்ளம் தவிர்த்து கலந்தேலோர் எம்பாவாய்


கொக்கின் உருவிலே ஒரு அரக்கன் வந்தான். வந்தவனும் நொந்தான். ஏன் தெரியுமா? அந்தக் கொக்கின் பெரிய நீண்ட அலகுகளைப் பற்றி அதன் வாயைப் பிளந்து எறிந்தான் கண்ணன். அத்தோடு சமருக்கு வந்த பொல்லாதவர்கள் தலைகளைக் கிள்ளிக் களைந்தான்.

(பொல்லாதவர் தலையைக் கிள்ளிக் களைந்தான் என்பதற்கு வேறுவிதமாகவும் பொருள் கொள்ளலாம். பொல்லாத்தன்மை தலையில் விளைவதுதானே. இறைவன் அந்தத் தலைக்கனத்தைக் கிள்ளிக் களைந்தான் என்றும் கொள்ளலாம். நமக்கு நல்லறிவு தரவேண்டிய கடமை இறைவனுக்கு உள்ளது அல்லவா!)

இப்படி நமது பொல்லாத்தனங்களை நீக்கும் பேரிறைவனின் புகழினைப் பாடுவதில் இன்பம் கொண்டு நமது தோழியர் எல்லாம் பாவை நோன்புக் களத்தில் புகுந்தனர். அவர்கள் நிச்சயமாக அந்தக் களத்தில் வெல்வர்.

(நோன்பு என்பதும் போர்க்களமே. முன்பே ஆண்டாள் சொன்னது போல நோன்பு என்பது இறைவனைத் தொழுவது மட்டுமல்ல. நல்ல செயல்களைச் செய்வதும்தான். அப்படி இருப்பது ஒரு சோதனைக் களந்தானே. அதில் வென்றால் பக்குவம் கிட்டும்.)

பின்னிரவில் ஒளிரும் வியாழன் ஒளி மங்கியது. ஏனென்றால் விடியலில் முளைக்கும் வெள்ளி ஒளியால்தான். இந்த விடிகாலையில் பறவைகளும் எழுந்து தமது கடமையைச் செய்ய ஒலியெழுப்பிக் கொண்டு பறக்கின்றன. இதை இப்பொழுதுதாவது உனது மலர்வண்டுக் கண்களைத் திறந்து பார்ப்பாய்!
(போதரி என்பதைப் போது+அரி என்று பிரிக்க வேண்டும். அரி என்றால் வண்டு. போது என்றால் மலரின் பருவம். காலையரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலையில் மலரும் மலர் என்ற வழக்கும் உண்டல்லவா. அரும்பு முழுதும் மூடியிருப்பது. மலர் முழுதும் விரிந்திருப்பது. போது என்பது பாதி மூடியும் திறந்தும் இருப்பது. அத்தகைய அழகிய கண்களை உடைய தோழியைப் பாடி அழைக்கின்றார் ஆண்டாள்.)

காலையில் எழுந்து குளிர்ந்த நீரில் மூழ்கியெழுந்து குளித்துப் புத்துணர்வு பெறாமல் இன்னமும் படுக்கையில் கிடக்கின்றாயே! இந்த நந்நாட்களிலாவது இயல்பான சோம்பலையும் கள்ளத்தனங்களையும் விடுத்து நல்லெண்ணம் கொள்வாய் எம்பாவாய்!

(பொதுவாகவே மதரீதியான நோன்புகளின் பலன் உடலையும் மனத்தையும் கட்டுப் படுத்தும் பக்குவம் பெறுவதே. ஆகையால்தான் தீய எண்ணங்களை விடுத்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஒன்றையே கொண்டு நோன்பு நோற்க வேண்டும். அதுதான் முழுப்பலனைத் தரும்.)

அன்புடன்,
கோ.இராகவன்

பாவை - பன்னிரண்டு

கனைத்து இளம் கற்றெருமைக் கன்றுக்கு இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம்
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்


தோழி! உனது வீட்டைப் பற்றி நீ அறிவாயா? செல்வம் மிகுந்த உன் அண்ணனிடத்தில் மாடுகள் ஏராளமாக உண்டு. பசுக்கள் மட்டுமன்று எருமைகளுந்தான். அந்த எருமைகளின் பால்வளம் அறிவாயோ! தன்னுடைய கன்றிற்கு இரங்கி தானகவே மடியிலிருக்கும் பாலினைத் தரையினில் பொழிந்திடும் எருமைகள். அப்படிப் பொழிந்த பாலானது தரையை நனைத்துச் சேறாகக் குழம்பியிருக்கும் வீட்டினை உடைய நற்செல்வனின் தங்கையே எழுந்திராய்!

(எருமைகள் பால் நிறைந்து மடி கனந்து நிற்கும். தொழுவத்தில் எருமைகள் கட்டப்பட்டிருந்தாலும் அவற்றின் கன்றுகள் அவிழ்த்து விடப்பட்டு திரிந்து கொண்டிருக்கும். அப்படித் திரியும் கன்றுகள் பசியெடுக்கும் வேளைகளையில் "அம்மா" என்று கனைத்துக் குரலெழுப்பும். அந்தக் குரலைக் காதில் கேட்ட மாத்திரத்திலேயே பாசம் மிகுந்து மடியிலிருக்கும் பாலைப் பொழிந்திடும் அந்த எருமைகள்.

வழக்கமாக மாட்டுத் தொழுவங்களில் மூத்திரச் சேறாக இருக்கும். அப்படியில்லாமல் பால் பொழிந்த சேறாக இருக்கும் அளவிற்குச் செல்வச் சீமாட்டியாக இருந்திருக்கின்றனர்கள் அந்தக் காலத்து ஆயர்கள்
.)

தோழி! இது மார்கழி மாதம். விடியற் பொழுது. உனக்காக உனது வீட்டின் வாசற்கடையில் வந்து நிற்கும் எங்கள் தலைகளில் பனி விழுகிறது. இந்தக் குளிரையும் பொருட்படுத்தாது உனது வீட்டு வாயிலில் நின்று தென்னிலங்கை மன்னனை அழித்த மாயவனாம் எங்கள் மனதிற்கு இனியவனைப் பாடுகின்றோமே! நீயும் எங்களோடு சேர்ந்து வாய் திறந்து பாடாயோ!

(மார்கழி என்பது பனிக்காலம். பனியில் நனைந்து கொண்டேனும் நோன்பு நோற்க வேண்டும் என்ற கடமையுணர்ச்சி ஆண்டாளுக்கு. இறைவனை வாயால் பாடக் கூடாது. மனத்தால் பாட வேண்டும். அப்படிப் பாடுவதற்கு அந்த இறைவன் மனதுக்கினியவன் என்று அறிய வேண்டும். மனதுக்கு இனியதைத்தான் உணர்ந்து பாட வேண்டும். எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. அவைகள் மனதிற்கு இனியனவாகவா இருக்கின்றன? அப்படி இல்லாதவைகளைப் பாடினால் அது இனிமையாக இருக்காது.

ஒரு தவறைக் காண்கிறோம். அது மனதிற்குத் துன்பமாக இருக்கிறது. அந்தத் தவறைப் பாடலில் பாடினால் சோகமாகவோ அல்லது ஆவேசமாகவோ அமையும். இறைவனை வணங்கும் பொழுது மனது அமைதியாகி இன்புறும். அதனால்தான் மனதுக்கினியான் என்று இறைவனுக்குப் பெயர் சூட்டுகிறார் சூடிக் கொடுத்த சுடர்கொடி
.)

தோழி! இத்தனை அழைக்கின்றோமே! இனியாவது எழுந்திருப்பாயா? இதென்ன பேருறக்கம். இப்படி நீ தூங்கிக் கொண்டேயிருந்தால் மற்ற இல்லத்தாரும் உனது தூக்கத்தின் பெருமையை அறியக் கொள்வாய் எம்பாவாய்!

அன்புடன்,
கோ.இராகவன்

பாவை - பதினொன்று

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே
புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்


நிறைந்த மந்தையில் கன்றுகளை ஈன்ற பல இளமையான பசுக்களைக் கறந்தவர்கள் ஆயர்கள். அமைதியான பசுக்களோடு பழகும் ஆயர்களே, எதிர்த்து வருகின்றவர்களின் திறமையெல்லாம் அழியும் வகையில் போர் புரிந்திடும் குற்றமற்ற வீரர்கள். அந்தக் கோவலர்தம் பொற்கொடியே எங்கள் தோழி! நான் சொல்வதைக் கொஞ்சம் கேளாய்!

(பசுக்களோடு பழகுகின்ற கோனார்கள் மிகவும் அமைதியானவர்கள். கோவலர் என்றால் கோ+வலர். பசுக்களைப் பெருக்குவதிலும் பராமரிப்பதில் சிறந்தவர்கள். அவர்கள் அமைதியாக வாழ்க்கையை அமைத்திருந்த பொழுதும், நாட்டிற்கு ஆபத்து என்று வருகையில் பால் சுமந்த கையில் வேல் சுமந்து எதிரிகள் தங்கள் ஆற்றலை முழுதும் இழக்கும் விதமாகப் போரிடும் திறம் கொண்டவர்கள். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்களே!)

புற்றில் வாழ் அரவு அறிவாயா? நெளிநெளியென்று வளைந்து நெளிந்து செல்லும் அந்தப் பாம்பை ஒத்த இடையுடையவளே! விண்ணிலே மேகம் வந்த விடத்து மோகம் கொண்டுத் தோகை விரித்தாடும் மயிலின் வனப்பைக் கொண்ட அழகுடையவளே! தொடரும் உறக்கம் விட்டு எழுந்திருந்து வெளியே வா!

(பாம்புக்கு எதிரி மயில். விடத்துப் பாம்பைக் கண்ட விடத்துக் கொத்தித் தின்பது மயில். இந்த இரண்டிலும் உள்ள நல்ல பண்புகளை ஒன்றாகக் கொண்டவளே என்று தோழியைப் பாராட்டுகிறார். எதிரெதிர்த் துருவங்களாக இருந்தாலும் நல்லது எங்கிருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கொள்க.)

நானும் நமது தோழிமார் எல்லாரும் வந்து உனது வீட்டின் முற்றத்தில் இப்பொழுது நிற்கின்றோம். வந்ததோடு இல்லாமல் கருமுகில்களின் அழகிய அடர்வண்ணனின் புகழ் பாடுகிறோம். அப்படி நாங்கள் அன்போடு பாடுவது உன் காதுகளில் விழவில்லையா? செல்வப் பெண்ணே! விடிந்த பிறகும் ஆடாமல் அசையாமல் பேசாமல் எதற்காக இந்த உறக்கம் கொள்வாய் எம்பாவாய்!

(வாசலில் இருந்து அழைத்தாயிற்று. வரவில்லை. கதவையும் தட்டியாகி விட்டது. தோழியின் தாயிரிடத்தில் சொல்லி அழைத்தாயிற்று. இருந்தும் ஒரு பயனில்லை. இப்பொழுது வீட்டிற்குள்ளேயே புகுந்தாயிற்று. இன்னமும் உறங்குகிறாள். கார்மேக வண்ணன் புகழை இவ்வளவு பாடியும் நாடியும் இருக்கும் பொழுது அசைவேயில்லாம் என்னத்திற்காக இப்படித் தூங்குகிறாள் தோழி என்று ஆண்டாள் வியந்து பாடுகிறார்.)

அன்புடன்,
கோ.இராகவன்

பாவை - பத்து

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டொரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்


நோன்பு நோற்பதன் பலன் இன்பம். இன்ப நிலை எய்தினால், நாம் இருக்குமிடமே சொர்க்கம். அப்படி நோன்பு நோற்று சொர்க்கம் புகப் போகும் தோழியே! உனது வீட்டு வாயில் நின்று உன்னை அழைத்தும் கதவைத்தான் திறக்கவில்லை. மறுமொழியாவது தரக்கூடாதா? என்னோடு நமது தோழியர்களும் உனக்காகக் காத்திருக்கின்றார்களே!

(கோதையார் தோழிகளோடு சென்றழைத்த பொழுது சிலர் எழுந்தனர். சிலர் தங்கள் தாயார் எழுப்பவும் எழுந்தனர். சிலர் கதவையே திறக்கவில்லை. கதவைத் திறக்காமல் மறுமொழியும் கொடுக்காமல் உறங்கும் அவர்களை நோக்கி வியப்பில் பாடுகிறார் ஆண்டாள்.)

நறுமணம் கமழும் துளசியைச் சூடிக் கொண்டவனே நாராயணன். அவனுடைய புகழை நாம் பாடிடப் பாடிட மகிழ்வான். அந்த மகிழ்ச்சியில் நமக்குத் தக்கதெல்லாம் தருவான் அவன். அந்தப் புண்ணியனால் முன்னொரு காலத்தில் மடிந்து பட்ட கும்பகருணனை அனைவரும் அறிவார்கள். தூக்கத்தில் பெரியவன் அவன். அந்தக் கும்பகருணன் தன்னுடைய பெருந்தூக்கத்தை எல்லாம் உனக்கே தந்தானோ! இப்படிச் சோம்பல் உடையவளாய்ப் போனாயே!

(சொத்து ஒருவரிடமிருந்து ஒருவருக்குக் கை மாறுவதுண்டே அப்படி முன்பு கும்பகருணன் அனுபவித்த சொத்து இன்று இவளுக்கு உரிமையானதோ என்று கிண்டலாகக் கேட்கிறார். ஏன்? அளவிற்கு மிஞ்சிய தூக்கம் நன்றன்று. அது வியாதிக்கு அடையாளம். ஆகையால்தான் அவர்களை எப்பாடுபட்டாவது எழுப்பிட முயல்கிறார் கோதை.)

துடைத்து வைத்த தங்கப் பாத்திரம் போல வனப்புடைய பாங்கியே! எழுவாய் முன்னிலை. இல்லை பயனிலை. எழுந்து நிலையாக வந்து கதவினைத் திறந்திடுவாய் எம்பாவாய்!

(எழுந்ததும் முதலிலேயே முழுவுணர்ச்சி திரும்பாது. ஒவ்வொரு உணர்வாக விழித்துதான் கடைசியில் மொத்த விழிப்பு ஏற்படும். அப்படி மொத்த விழிப்பு ஏற்படும் முன்னால் நாம் எழுந்து நடக்க முற்பட்டால் தட்டுத் தடுமாற வேண்டியதுதான். தூக்கத்தில் யாரேனும் கதவைத் தட்டினால் பதறி எழுந்து விழுந்து எழுந்து இடித்துக் கொண்டு செல்வோம் அல்லவா. அப்படியெல்லாம் தட்டுத் தடுமாறி வராமல் முழு விழிப்புடன் வரவேண்டும் என்பதைத்தான் தமிழில் சுருக்கமாக தேற்றமாய் வந்து என்று சொல்லியிருக்கின்றார். அருமையான தமிழ்ச்சொல் தேற்றம் என்பது.)

அன்புடன்,
கோ.இராகவன்

பாவை - ஒன்பது

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியத்
தூபம் கமழத் துயிலணை மேல் கண் வளரும்
மாமன் மகளே மணிக்கதவம் தாழ் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள்தான்
ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாயவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்

(வீடுவீடாகப் போய் அழைத்தும் சில தோழியர் இன்னும் தூங்கினர். அவர்களையும் எழுப்பித்தான் ஆக வேண்டும். தான் எழுப்பியது போதாதென்று அந்தத் தோழியரின் தாயாரையும் அழைத்து எழுப்பச் சொல்கின்றார் இந்தப் பாடலில்.)

மாமன் மகளே அடி தோழி! தூய மணிகள் தொங்கி அழகூட்டும் நல்ல மாடத்தில் இன்னும் விளக்கெல்லாம் எரிந்து கரிந்து புகையெழும் போதும் சொகுசான மெத்தையில் மேல் கிடக்கும் தோழியே! நீ தூங்கிக் கிடக்கும் அறையின் மணிக்கதவம் திறந்து வாராய்!

(கோதை நாச்சியாரை நான் வியக்காத பொழுதில்லை. கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் முன்னர் புரட்சிப் பெண்கவியாக திழந்திருக்கின்றார். அத்தோடு அவருடைய நூல்களில் அவர் பதிவு செய்தவை ஏராளம். ஏராளம். தென்பாண்டி நாட்டு வட்டார வழக்கில் ஒரு நூலை எழுதிய பெருமை. இவருக்கு முன்னர் இந்தப் பெருமைக்கு உரியவர் இளங்கோ. சிலப்பதிகாரத்தின் மூன்று காண்டங்களையும் படித்தால் ஒவ்வொரு காண்டத்திலும் அந்தந்த நாட்டு வழக்குகள் பயின்று வரும்.

இரண்டாவது அன்றைய பண்பாட்டையும் பழக்க வழக்கங்களையும் போகின்ற போக்கில் அழகாக ஆனால் மறைவாகச் சொல்வது. மின்சாரம் இல்லாத அந்தக் காலத்தில் night lamp ஏது? இரவில் எழுந்தால் தட்டுத் தடுமாற வேண்டியதுதானா? இல்லை. அதற்குத்தான் மாடக்குழிகளை வீடுகளில் வைத்திருப்பார்கள். இன்றைக்கும் பழைய வீடுகளில் மாடக்குழிகளைக் காணலாம். அந்த மாடக்குழிகளில் விளக்கு வைத்துக் கெட்டியான விளக்கெண்ணெய் அல்லது இலுப்பையெண்ணெய் ஊற்றி விளக்கேற்றுவார்கள். அதுவும் மெல்லிதாக எரியும்படி திரியை எண்ணெய்க்குள் வைப்பார்கள். இரவெல்லாம் எரிந்து காலையில் எண்ணெய் தீர்ந்து விடும். அந்த பொழுதில் எழுகின்றவர்கள் விளக்கை அணைத்து விடுவார்கள். அப்படி அணைக்காவிட்டால் திரியும் எரிந்து கருகி புகை எழும். அதுவரைக்கும் தூங்குகின்ற தோழியரைக் குறிக்கும் பொழுது இதை அழகாக மறைபொருளாகச் சொல்லியிருக்கின்றார்.

சிலர் தூபம் கமழ என்றதும் தூபம் காட்டுவதாக எடுத்துக் கொள்வார்கள். அது தவறென்று தோன்றுகின்றது. "சுற்றும் விளக்கெரியத் தூபம் கமழ" என்று பகுக்க வேண்டும். அப்பொழுது சரியான பொருள் கிடைக்கும்.
)

மாமி, அவள் இன்னமும் தூங்குகிறாள். அவளை எழுப்புங்கள். ஏன் இப்படித் தூங்குகிறாள்? எழுப்பினாலும் எழுந்திருப்பதில்லை? என்னவாயிற்று? ஊமையாகப் போனாளோ? செவிடாகப் போனாளோ? இல்லை சோம்பல் (அனந்தல்) மிகுந்து போனாளோ? அதுவும் இல்லையென்றால் மந்திரத்தில் கட்டுண்டு மயங்கி ஏமப் பெருந்துயிலில் விழுந்தாளோ?

(ஏமப் பெருந்துயில் என்றால் coma. பெருந்துயில் நீண்ட தூக்கம். ஏமம் என்றால் இன்பம். ஏமப் பெருந்துயில் மீளக்கூடியதுதான். ஆகையால்தான் அந்தப் பெயர்.)

மாமாயனென்றும் மாயவனென்றும் வைகுந்தனென்றும் அவனுடைய திருப்பெயர்கள் பல. இன்னும் பல. அந்தத் திருப்பெயர்களைக் காலையில் எழுந்து சொல்லிச் சொல்லி இன்பம் பயில்வாய் எம்பாவாய்!

அன்புடன்,
கோ.இராகவன்

பாவை - எட்டு

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்

(மார்கழி மாதத்தில் காலையின் தன்னோடு நோன்பு நோற்கத் தோழிகளை அழைத்தாயிற்று. சிலர் இன்னும் தூங்குகின்றனர். அவர்கள் வீட்டு வாயிலில் நின்று கதவைத் தட்டியாகி விட்டது. தட்டியும் சிலருக்கு உறக்கம். அவர்களையும் எழுப்ப வேண்டுமே! அதுதான் இந்தப் பாடல்.)

கீழ்வானத்தில் வெள்ளி முளைத்து அதுவும் மறையும் வண்ணம் விடியல் வெளுத்தது பாங்கி. கருத்த எருமைகள் கூட சற்று முன்னர் எழுந்தன. அத்தோடு பரந்து திரிந்து மேயத் தொடங்கின பாங்கி. இதையெல்லாம் எழுத்து பார் நீ!

(மாடுகளில் பொறுமையில் அருமையானது கருமையான எருமை. பசுக்கள் விடியலில் எழுந்து பால் தந்ததால் அவற்றை மூன்றாவது பாடலிலேயே புகழ்ந்தாகி விட்டது. அதற்குப் பிறகு புள்ளினங்களைச் சொல்லியாகி விட்டது. பிறகு பறவைகளிலேயே காலந்தாழ்ந்து எழும் ஆனைச்சாத்தானையும் குறிப்பிட்டாகி விட்டது. இன்னும் தூக்கமா? எருமைகள் கூட எழுந்தனவே. அத்தோடு முடிந்ததா? எழுந்த எருமைகள் மெள்ள ஆடியசைந்து திரிந்து மேயவும் தொடங்கின. இன்னும் தூங்கலாமா என்று தோழியைக் கேட்கிறார்.)

பாவை நோன்பில் ஈடுபாடு கொண்ட நமது தோழியரை தடுத்தி நிறுத்தியிருக்கிறோம். எதற்கென்று தெரியுமா? உன்னுடைய வீட்டிற்கு வந்து உன்னையும் எங்களோடு அழைத்துச் செல்லத்தான். வந்து சும்மா நிற்கவில்லை. எங்கள் தோழியாகிய உன்னை விட்டுப் போகாமல் எங்களோடு அழைத்துச் செல்லக் கூவுகின்றோம். எப்பொழுதும் குதூகலம் உடையவளே எழுந்திருவாய்!

(தோழியை விட்டுச் செல்ல முடியவில்லை ஆண்டாளால். தான் மட்டும் எழுப்பினால் போதாதென்று மற்ற தோழியரையும் அழைத்துச் சென்று எழுப்புகின்றாள். தான் மட்டும் எப்படி நல்லதை அனுபவிப்பது என்ற தவிப்பு கோதைக்கு.)

குதிரை வடிவம் கொண்டு வந்தான் ஒரு கொடியன். அவனைப் பிளந்தெறிந்தவன் நமது மாயவன். இளம் பருவத்திலேயே மல்லரைப் பொருது அவர்களைக் கைப்பிடியில் மாட்டி ஓட்டியவன் நமது தூயவன். தேவாதி தேவனே இந்தத் தேவகி மைந்தன். அவனை நினைத்துப் பாடிப் புகழ்ந்து அவன் திருக்கோயிலுக்குச் சென்று சேவித்தால், நம்முடைய தேவைகளை ஆராய்ந்து சிறந்த முறையில் அருள்வான். இதை நீ அறிவாய் எம்பாவாய்!

(கேட்டதெல்லாம் கொடுப்பவனா இறைவன்? நாம் கேட்பதில் நமக்குச் சிறந்தது எதுவென்று அவன் அறிவான். அதை எப்பொழுது தரவேண்டும் என்றும் அவன் அறிவான். இறைவனை நம்புங்கள். நமக்கு அதனால் நன்மையன்றி ஒன்றில்லை.)

அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, December 22, 2005

பாவை - ஏழு

கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தான் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் முர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்ட கிடத்தியோ
தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்

(காலை விடிந்தது. கடவுளை நினைத்து நீராடி முடிந்தது. நோன்பு துவங்கி அதன் பழக்கங்களை முடிவு செய்தாகி விட்டது. தோழியரையும் அழைத்தாகி விட்டது. சொன்னதுமே வந்தனர் சிலர். அழைத்ததும் வந்தனர் சிலர். இன்னும் சிலர் வரவில்லை. என்ன செய்வது? நன்கு தெரிந்த தோழியர்தானே. வீட்டிற்குச் சென்று கதவைத் தட்ட வேண்டியதுதானே. அதைத்தான் செய்கிறார் ஆண்டாள்.)

தோழி! விடிந்தது பொழுது. ஆனைச்சாத்தான் பறவைகள் கூட விழித்துக் கலந்து கீச்சுகீச்சென்று பேச்சு கொள்வது கேட்கலையோ! பேய்ப்பெண்ணே! இன்னமுமா கிடப்பது!

(ஆனைச்சாத்தான் என்ற பறவை மற்ற பறவைகளை விடச் சோம்பல் மிகுந்ததாம். இன்றைக்கு அந்தப் பறவையின் பெயர் நாம் அறியோம். நேரம் கழித்து எழும் பறவைகள் கூட எழுந்து கத்துகின்ற பொழுதும் தூங்குகின்றனரே சில தோழிமார் என்ற வருத்தத்தில்தான் பேய்ப் பெண்ணே என்று சொல்வது. தோழியரை உரிமையோடு கடிதல் அது.)

நம்மூர் ஆய்ச்சிகளை நீ அறிவாய். அந்த வாச நறுங்குழல் ஆய்ச்சியர்கள் தயிரினைப் பெரிய பானைகளில் ஊற்றி, அந்தப் பானைகளில் மரத்தாலான பெரிய மத்துகளை ஆழ்த்திக் கயிற்றை பிடித்துக் கொண்டு முன்னும் பின்னும் இழுத்துச் சளசளவென்று கடையும் பொழுது அவர்கள் கையணியும் காசுகளைக் கோர்த்த கழுத்தணியும் கலகலவென ஓசைப் படுத்துகின்றனவே! அதுகூட உன் காதுகளில் விழவில்லையா?

(ஆய்ச்சியர்கள் எப்பொழுதும் பாலோடும் தயிரோடும் மோரோடும் வெண்ணெய்யோடும் நெய்யோடும் புழங்குகின்றவர்கள். அந்த வாடை மிகுந்த கையை அடிக்கடி தலையில் தடவிக் கொள்வதால் அவர்கள் குழல் நறுமணம் கொண்டதாம். இதே கருத்தை வேறொரு இலக்கியத்தில் ஆயர்களுக்குப் படித்த நினைவு இருக்கிறது. பள்ளியில் படித்தது. எந்த இலக்கியம் என்று நினைவில் இல்லை.)

அடி தோழி! நாராயண மூர்த்தியாம் கேசவனை நாங்கள் எல்லாம் உன் வீட்டு வாசலில் வந்து நின்று அன்போடு பாடும் பொழுதும் நீ படுக்கையில் கிடக்கலாமா? அது முறையாமோ! எழில் மிகுந்தவளே! விரைந்து எழுவாய். கதவைத் திறவாய் எம்பாவாய்.

அன்புடன்,
கோ.இராகவன்

Wednesday, December 21, 2005

பாவை - ஆறு

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச்சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்


காலைப் பொழுதை வரவேற்க புள்ளினங்கள் குரல் கொடுக்கின்றதைக் கேட்டாயோ! பறவை மேல் அமர்ந்த அரயன் கோயிலில் வெண்ணிறச் சங்கமானது அனைவரையும் வாவென்று அழைக்கும் பேரொலியைக் கேட்டாயோ! எழுந்திராய் பிள்ளாய்!

(விடியலில் முதலில் எழும் ஒலியே பறவைகளின் ஒலிதான். என்றைக்காவது பறவைகள் காலந்தாழ்ந்து எழுந்ததுண்டா? விடியலைக்கூட சேவல் கூவித்தானே அறிகிறோம். ஆகையால்தான் தமிழன் சேவலை தனது கடவுளின் கொடியில் கண்டான்.

இன்னொரு செய்தி. வெறும் சங்கம் என்று சொல்லாமல் விளி சங்கின் பேரரவம் என்று கூறியிருக்கிறார். ஏன்? எல்லா ஒலிகளும் நம்மை அழைப்பதில்லை. சில ஒலிகளைக் கேட்டாலே நாம் அந்த இடத்தை விட்டு நகர விரும்புவோம். ஆனால் புள்ளரையன் கோயில் சங்கொலி நம்மை வரவேற்கும் விதமாக இருந்ததாம். இறையொலி எப்பொழுதும் நம்மை அழைக்கத்தானே செய்யும்.
)

பறவையொலி கேட்டாய். கண்ணன் கோயில் சங்கம் ஊதி அழைக்கக் கேட்டாய். எழுந்திருப்பாய் தோழி. பூதனையில் நஞ்சு தடவிய முலையில் பாலுண்டு பூதனைக்கே நஞ்சான பிஞ்சே கண்ணன். கள்ளச் சக்கரமாக உருண்டு வந்த அரக்கனை தோள்கள் திரண்டு அழித்த சிறுவனே மாதவன்.

(விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பார்கள். கண்ணனும் அப்படித்தான் குழந்தையாக இருந்த பொழுதே கண்ணனின் தெய்வத் தன்மைகள் வெளிப்பட்டன. குழந்தையாக இருந்த பொழுதே ஏசுபிரானும் தீர்க்கதரிசி என அழைக்கப்பட்டதாகச் சொல்வார்கள். குழந்தையாக இருந்த பொழுதே நல்ல பழக்கங்களை விதைக்க வேண்டும் என்று இதனால்தான் சொன்னார்கள்.)

பாற்கடலில் பாம்பணை மேல் பள்ளி கொண்ட உயிர்களுக்கெல்லாம் உயிரான அந்த உயர்ந்தவனை உள்ளத்தில் நினைத்துக் கொண்டு பெரும் முனிவர்களும் தவயோகிகளும் விடியலையிலேயே மெள்ள எழுந்து அரி என்ற பெயரை பாசத்தோடு உச்சரிக்கும் பேரானந்த ஒலியால் உனது உள்ளத்தில் உண்டான மகிழ்ச்சியில் குளிர்வாய் எம்பாவாய்.

(இறைவனை எப்படியெல்லாம் உணர்வது? சுவையை நாவில் உணரலாம். ஒலியைக் காதில் உணரலாம். ஒளியைக் கண்ணில் உணரலாம். நாற்றத்தை நாசியில் உணரலாம். தென்றலை மேனியில் உணரலாம். அதுபோல இறைவனையும் உணர முடிந்தால் சிறப்பாக இருக்கும் அல்லவா. புலன்களுக்கெல்லாம் எட்டாத இறைவன் புலன்களுக்கு எட்டுவானா என்றால் நிச்சயமாக எட்டுவான். எட்ட மாட்டான் என்றால் எட்டான். அப்படிச் செவி வழி இறைவனை உணர்வது எங்ஙனம்?

கண்ணா என்ற பெயரும் கந்தா என்ற பெயரும் அனைவருக்கும் பக்தியை ஊட்டுமா என்றால் இல்லை என்பதே விடை. அப்பொழுது எல்லாரும் உணர முடிகின்ற ஒலிகளில் இறைவனை உணர வேண்டும். காலை எழுந்ததும் காதில் விழுகிறவை பறவைகளின் ஒலிகளே. காலை எழுந்ததிற்கே இறைவனிடம் நன்றி சொல்லி விட்டு பறவையொலிகளில் இறைவனைக் காண வேண்டும். பிறகு கோயில் சங்கின் ஒலி. பிறகுதான் கண்ணனின் திருநாமங்கள். இதுதான் வரிசைக்கிரமம். அதனால்தான் சைவர்களும் ஓங்கார ஒலியை சேவலின் குரலில் கண்டார்கள். இந்த அளவிற்கு இயற்கையோடு இணைந்த தமிழ் வழிபாட்டு முறைகளே சிறப்பு.
)

அன்புடன்,
கோ.இராகவன்

Tuesday, December 20, 2005

பாவை - ஐந்து

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்


ஆயவன் அருளால் நாடெங்கும் நல்ல மழை பெய்து நீர் வளம் சிறக்க, நாம் மார்கழி காலையில் எழுந்து அவன் பேர்பாடி நீராடினோம். அப்படித் துவக்கிய மார்கழி மாதத்துப் பாவை நோன்பில் அடுத்து என்ன செய்வது! சொல்கிறேன் கேளுங்கள்.

(ஆயவன் என்று ஏன் சொல்கிறோம்? மாயைக்குத் தலைவன் மாயவன். ஆயர்களுக்குத் தலைவன் ஆயவன். இந்தச் சொல்லை எனக்குத் தெரிந்து தமிழில் முதலில் பயன்படுத்தியது இளங்கோவடிகளே. மதுரைக் காண்டத்தில் ஆய்ச்சியர் குரவையில் பயன்படுத்தியிருக்கிறார். "மாயவன் என்றாள்.......ஆயவன் என்றாள்...." என்று செல்லும் அந்தப் பாடல்.)

மாயவனை வடமதுரை மைந்தனைத் தூய்மையான நீர் என்றும் பெருக்கெடுக்கும் யமுனை ஆற்றங்கரையின் துணைவனை ஆயர் குலத்தில் சிறந்துதித்த அணிவிளக்கைத் தேவகிக்கு தாய்மைப் பதவி தந்த தாமோதரனை விடிகாலையில் நீராடி நினைத்து தூய மலர்களைத் தூவித் தொழல் வேண்டும். அவனது பெருமைகளை வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்துக் கொளல் வேண்டும்.

(இந்தப் பாடலில் இன்னொரு சிறப்பு உண்டு. கூர்ந்து கவனிக்க வேண்டும். ஆண்டாள் பாண்டி நாட்டாள். மதுரையே பாண்டி நாட்டின் தலைநகரம். சிலர் தென்மதுரை என்பார்கள். அப்படிச் சொல்கையில் வடமதுரைதான் மதுரை என்றாகி விடுகிறது. அதாவது கோலிவுட், பாலிவுட் எனும்பொழுது ஹாலிவுட்டுதான் முதன்மை அல்லவா. அது போலத் தென்மதுரை என்ற சொல்லைப் பயன்படுத்தும் பொழுது வடமதுரைதான் மதுரை என்ற முதன்மை பெறுகிறது. தனது நாட்டை விட்டுக்கொடுக்கவில்லை ஆண்டாள். வடமதுரை என்று சொல்லி பாண்டி நாட்டு மதுரைதான் முதன்மையான மதுரை என்று அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். இத்தனைக்கும் போற்றிப் புகழும் கண்ணன் பிறந்த ஊர். இருந்தாலும் அது வடமதுரைதான்.

இன்னொரு விஷயத்தையும் இங்கு கவனிக்க வேண்டும்.
"தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரன்" என்ற சொற்றொடரை கவனிக்க வேண்டும். ஒரு பிள்ளையைப் பெற்றதும் தாயின் கடமை முடிந்து விடுகிறதா? இல்லையே. பெற்றெடுப்பது ஒரு கடினம் என்றால் வளர்ப்பதும் இன்னொரு கடினம். ஆனால் கண்ணனைப் பெற்றவள் தேவகிதான் என்றாலும் பாலூட்டிச் சீராட்டி வளர்த்தவள் யசோதை. அதனால்தான் முதல் பாடலில் நந்தகோபனையும் யசோதையுமே தாய்தந்தையராகச் சொல்கிறார். ஆகையால் தேவகியைச் சொல்லும் பொழுது தாயைக் குடல் விளக்கம் செய்ததோடு நிறுத்தி விடுகிறார். பெரியவர்கள் ஒன்றைச் சொல்லும் பொழுது ஏன் அப்படிச் சொல்லியிருப்பார்கள் என்று சிந்தித்தே பொருள் கொள்ள வேண்டும். அவசரம் கூடாது.)

அப்படி அவனுடைய திருநாமங்களை வாயாலும் மனதாலும் சிந்திக்க வந்திக்க முன்பு செய்த பிழைகளும் நம்மையறியாமல் இனிமேல் செய்யப் போகும் பிழைகளும் நெருப்பில் வீழ்ந்த தூசு போலப் பட்டுப் போகும். ஆகையால் தூயவனை மாயவனை பல பேர் கொண்டு செப்பாய் எம்பாவாய்.

(இந்த இடத்தில் ஒரு இலக்கிய ஒப்பு நோக்கல் செய்ய விரும்புகிறேன். கச்சியப்பரைத்தான் துணைக்கு அழைக்கிறேன். கந்தபுராணத்தில் இப்படிச் சொல்கிறார். "தீயவை புரிந்தாரேனும் குமரவேள் திருமுன் உற்றால் தூயவராகி மேலைத் தொல்கதி அடைவர்". பொதுப்பண்பு என்ன? இறைவனைச் சரணடைந்தால் பாவங்கள் போகும் என்பதே. அப்படியானால் என்ன பாவம் செய்து விட்டும் இறைவனைச் சரணடையலாமா? உண்மையான உள்ளத்தோடு இறைவனைச் சரணடைகின்றவர்களை இறைவன் கண்டு கொள்வார். ஏமாற்ற நினைப்பவர்கள் ஏமாந்துதான் போவர்.)

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, December 19, 2005

பாவை - நான்கு

ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்
ஆழி உள்புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்துப்
பாழியம் தோளுடைப் பற்பனாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிந்தேலோர் எம்பாவாய்

நோன்பைச் சொல்லி அதன் பெருமையைச் சொல்லி அதன் முறைமைகளைச் சொல்லி அதன் பலன்களையும் சொல்லியாகி விட்டது. இப்பொழுது நோன்பைத் துவக்கலாம். அப்படி நோன்பைத் துவக்கவும் தொடரவும் இறைவன் அருள் வேண்டும். அதை வேண்டுவோம் முதலில்.

கண்ணனே! கடலுக்கும் மழைக்கும் மன்னனே! நீ எங்களை எதற்கும் கை விடாதே. நாங்கள் நோன்பு துவக்குகிறோம். உன்னருளின்றி ஒன்றும் ஆகாது. துவங்கும் நோன்பும் தூய்மையாகத் துவங்க வேண்டும். உள்ளத்தைத் தூய்மைப் படுத்துவதும் நீர். உடலைத் தூய்மைப் படுத்துவதும் நீர். எங்களைக் காக்க நீரே வரவேண்டும் நீராகவும் வரவேண்டும்.

எப்படித் தெரியுமா? ஆழமான ஆழியில் நிறைந்து ததும்பும் உப்புதல் கொண்ட நீரை முகந்து உப்புதல் கொண்டு இடியிடித்துக் கொண்டு விண்ணில் ஏறிடும் மேகங்கள். ஊழி முதல்வனான உந்தன் மேனி போலவே கருத்து விண்ணை மறைத்து நிற்கும் அந்த மேகங்கள். விரிந்த (பாழியம்) தோள்களை உடைய பற்பனாபன் கையில் இருக்கும் சக்கரத்தினைப் போல மின்னிடும் அந்த மேகங்கள். ஓவென்று மங்கலமாய் ஒலிக்கும் உனது கைச் சங்கைப் போல அதிர்ந்திடும் அந்த மேகங்கள்.

(கண்ணனின் கரிய மேனியைப் பாடாத தமிழ்ப் புலவன் யார்? சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் பாடுகிறார். "கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே!" சைவ மரபில் பிறந்த அவரும் கரியவனைப் பாடியிருக்கிறார். வைணவ மரபில் வந்த பகழிக்கூத்தர் முருகனைப் பாடியது போல. சமய மயக்கம் கூடாது என்பதே இதன் பொருள்.)

மின்னியும் அதிர்ந்தும் நின்று விடாமலும் காலம் தாழ்த்தாமலும் உனது கையிலிருக்கும் சார்ங்கம் என்ற வில்லிலிருந்து பொழியப்படும் இடைவிடாத அம்புகளைப் போல சரஞ்சரமாய் மழை பெய்து இந்த உலகத்தில் நாங்கள் அனைவரும் வாழ்ந்திடும் வகை செய்வாய். அப்பொழுதான் நீர்வளம் பெருகி இந்த மார்கழி மாதத்தில் நாங்கள் நீராடித் தூய்மையாவாய் எம்பாவாய்!

(இந்தப் பாடலில் இன்னொரு சிறப்பும் உண்டு. நோக்குமிடமெங்கும் இறைவனைக் கண்டவள் கேட்கும் ஒலியெல்லாம் இறைவனைக் கேட்டாள். இறைவன் புலன்களுக்கு எட்டான் என எப்படிச் சொல்வது? பார்க்கும் பார்வை. கேட்கும் ஒலி. நுகரும் நாற்றம். உணரும் தீண்டல். பேசும் மொழி என்று ஐந்து புலன்களின் வழியாகவும் நாம் உணர்ந்து கொண்டிருப்பது இறைவன் கருணையல்லவா. ஆகையால்தான் மழை மேகங்களைப் பார்த்ததும் இடியிடித்து மின்னியதும் கண்ணன் நினைவில் ஆழ்கின்றார். அதனால்தான் வைணவ அடியவர்களை ஆழ்வார் என்பர். கரிய மேகத்தைப் பார்த்தால் கண்ணனின் கரிய மேனி நினைவில் வருகிறது. இடிக்கும் ஒலியில் கண்ணனின் கைச்சங்கின் ஒலி எழுகிறது. மின்னுகின்ற மின்னல் திருமால் கைச் சக்கரம் போலத் தெரிகிறது. பொழியும் சர மழையில் சார்ங்க வில்லின் அம்பு மழை தெரிகின்றது. அதுதான் அன்பு மழைபெயனப் பெய்கிறது ஆண்டாளுக்கு.)

அன்புடன்,
கோ.இராகவன்

Friday, December 16, 2005

பாவை - மூன்று

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாமும் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெறும் செந்நெல் ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்


தோழியரே! தமிழ்ப் பெண்களே! பாவை நோன்பைச் சொன்னேன். பாவை நோன்பிற்கான கிரிசைகள் சொன்னேன். ஓங்கி வளர்ந்தானே! உலகம் அளந்தானே! அந்த உத்தமனுக்கு எத்தனை பெயர்கள்! அத்தனை பெயர்களையும் பாடிப் பாவை நோன்பு நோற்றால் நடப்பதென்ன தெரியுமா? நோன்பின் சிறப்புகள் என்ன தெரியுமா? சொல்கின்றேன் கேளுங்கள்.

(ஒரு செயலைச் செய்யும் பொழுது அந்தச் செயலினால் விளையும் நன்மைகளை அடுக்குவது மற்றவர்களையும் அந்தச் செயலைச் செய்யத் தூண்டும். ஆகையால்தான் பெருநோன்பு துவக்குகையில் மற்ற தோழிகளையும் ஊக்குவிப்பதற்காக பாவை நோன்பு நோற்பதன் பயன்களைப் பட்டியலிடுகிறார் ஆண்டாள்.)

மூவடியில் முழுவுலகும் அளந்த அனந்தனின் புகழைப் பாடி நோன்பு நோற்றால் நாடெங்கும் ஒவ்வொரு திங்களும் பெய்ய வேண்டிய மும்மாரி தீங்கின்றி பொழியும். அப்படி தவறா மழை பொழியும் பொழுது வயல்வெளிகளெங்கும் செந்நெல் விளைந்திருந்து கதிர் முற்றும்முன் பால் பிடிக்கும் பருவத்தில் அழகிய கயல் மீன்கள் பயிர்களுக்குள் புகுந்து ஊடாடும்.

(நல்லவர்கள் ஒரு செயலைச் செய்யும் பொழுது அதன் பலன் தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்று எதிர் பார்க்க மாட்டார்கள். அனைவருக்கும் அது சேர வேண்டும் என்றே விரும்புவார்கள். நக்கீரரை எடுத்துக் கொள்ளுங்கள். திருமுருகாற்றுப்படையை எப்படித் துவக்குகிறார் தெரியுமா? "உலகம் உவப்ப". உலகமெலாம் மிகிழும் படியாக என்று துவக்கிறார். கச்சியப்பரும் அப்படித்தான் சிவபெருமானின் அம்சமாக முருகப் பெருமான் எழுந்த பொழுது "உலகம் உய்ய ஒரு திரு முருகன் தோன்றினான்" என்கிறார். தமிழருக்கு மட்டுமா? இந்தியருக்கு மட்டுமா? உலகம் முழுவதும் உய்ய வேண்டும் என்பதே அவா. ஏனென்றால் "யாதும் ஊரே! யாவரும் கேளிர்!" என்பதே தமிழ் மரபு அல்லவா. அந்தத் மரபில் வந்த கோதையும் உலகம் முழுவதும் உய்ய வேண்டும் என்று நோன்பு கொள்வதில் வியப்பென்ன இருக்க முடியும்! நாடெல்லாம் மழை பெய்து நிலவளம் செழிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தை வியக்க வேண்டாம். தாயுள்ளம் அப்படித்தான் நினைக்கும்.)

வண்ணப் பொறியெனப் பறக்கும் அழகிய வண்டுகள் பூத்திருக்கின்ற குவளை மலர்களின் மத்தியில் மெத்தையில் படுத்துக்கொண்டு அளவிளாத தேன் பருகிக் கண் செருகிக் கிடக்கும். அந்த இனிமையான பொழுதுகளில் ஆயர்கள் தொழுது மடியில் கை வைத்து சீர் மிகுந்து பருத்த முலைகளைப் பற்றிப் பீய்ச்சவும், அசையாது நின்றிருந்து வைத்த குடம் நிறைக்க நிறைக்கக் கொடுக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் என்னும் நீங்காத செல்வம் நிறைந்து மகிழ்வாய் எம்பாவாய்!

(பசுக்கள் யாரையும் மடி தொட விடாது. தேர்ந்த நல்ல ஆயரே பசுவிடம் பால் பெற முடியும். அப்படிப் பால் கறக்கையில் பசுக்கள் வெருவிப் பதறினால் ஆயர் துணுக்குறுவர். அதனால் விரைவாகக் கறந்து செல்ல முயல்வர். அதனால் முழுமையான பலனைப் பெற முடியாது. ஆகையால்தான் பசுக்கள் தேங்காதே புக்கிருந்து (அசையாதே நின்றிருந்து) ஆயர் முழுமையாகப் பயன் பெறும் வகையில் பால் கொடுக்குமாம். அதனால்தான் அவைகளை வள்ளல் என்று புகழ்கிறார் ஆண்டாள். தமிழில் மாடு என்றால் செல்வம். பசு மாடுதானே. ஆகையால்தான் நீங்காத செல்வம் என்றும் புகழ்கிறார்.)

அன்புடன்,
கோ.இராகவன்

பாவை - இரண்டு

நாளையும் நாளைமறுநாளும் விடுமுறை நாட்களாக இருப்பதால், அன்றைக்குரிய பாடல்களையும் இன்றைக்கே தந்து விடுகின்றேன்.

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்


ஆய்ப்பாடித் தோழிகளே! வாழ்வாங்கு இந்த உலகத்தில் வாழப் போகும் சிறுமிகளே! மார்கழியில் காலையில் எழுந்தோம். கண்ணனை நினைத்தோம். உடலை நனைத்தோம். புத்துணர்வோடு நோன்பைத் துவக்கினோம்.

அப்படித் துவக்கிய இந்தத் தூய நோன்பில் நாம் செய்ய வேண்டியன தெரியுமா? சொல்கிறேன் கேளுங்கள். ஆண்டவனை நாடித் தொழுவதும் பாடித் தொழுவதும் உண்டு. பாற்கடலில் மெல்லத் துயில் கொண்ட அந்தப் பரமன் அடியைப் பாடுவோம். (பைய என்பது தெற்கத்தித் தமிழ். இன்றும் பையப் போ என்பார்கள். பைய என்பது மெதுவாக என்று பொருள்படும்.)

இந்த நோன்பிலே நமக்குச் சில கட்டுப்பாடுகள் உண்டு. நெய்யுண்ணோம். பாலுண்ணோம். விடியலில் நீராடுவோம். கயலொத்த கண்களிலே மையல் தூண்டும் படியாக மையிட்டு எழுதோம். ஒரு மலராயினும் அது நறுமலராயின் அதில் சுகம் பெறுமலராகக் கருதிச் சூடோம். சொன்னால் தீமையொன்றை மட்டுமே பயக்கும் குறளி சொல்ல மாட்டோம். (தீக்குறளைச் சென்றோதோம் என்பதைப் பலர் திருக்குறள் என்று தவறாகப் பொருள் கொள்கின்றனர். அது தவறு. குறளி சொல்வது என்று தெற்கு வழக்கு. இன்றைக்குள்ள வழக்கில் அது கோள் சொல்வது. கோள் மூட்டுவது மிகக் கொடிய பாவம். அதை என்றைக்கும் செய்யக்கூடாது. ஆண்டாளின் பாடல்களைப் படித்துப் பொருள் கொள்ளும் பொழுது தென்பாண்டி வட்டார வழக்கு தெரியாமல் படித்துப் பொருள் கொள்வது முறையாகாது. தெரியாதவிடத்து தெரிந்தவர்களிடம் கேட்டுப் பொருள் பெற வேண்டும்.)

ஏன் நெய்யுண்ணோம்? நெய் சூடு. உடல் சூடானால் உள்ளமும் சூடாகும். மேலும் குளிர்காலத்தில் கொழுப்புப் பதார்த்தங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அது உடலுக்கு நன்று. ஏன் பாலுண்ணோம்? பாலினும் சுவையான தமிழ்ப் பாவினைப் பாடுகையில் பால் சுவையாகுமா? இல்லை சுவைக்கத்தான் ஆகுமா?

கண்களுக்கு அஞ்சனம் தீட்டோம். ஏன் தெரியுமா? அந்த அஞ்சனத் திரட்டுகள் இளைஞர்களின் உள்ளங்களைத் திரட்டுங்கள் என்று எங்கள் உள்ளம் நினையாமல் இருக்கத்தான் அப்படி. மலரிட்டும் முடியோம். வாடைக் காலத்தில் தூது செலுத்த வாடைப் பூவையா சூட்டுவோம்!

அத்தோடு முடிந்தனவா நமது கிரிசைகள்? இல்லை. கையேந்தி வருவோர்க்கும் வேண்டி வருவோர்க்கும் முற்றும் துறந்தவர்க்கும் சேவைகள் செய்வோம். ஏன் தெரியுமா? நமது குறளில் "துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றையவர்கள் தவம்" என்று சொல்லியிருக்கின்றது. சுய கட்டுப்பாடுகள் மட்டுமல்ல, சேவையும் நமது கிரிசையே. இப்படியெல்லாம் செய்து பரகதியை உய்ய இன்புற்று இந்தக் கிரிசைகள் செய்து மார்கழி நோன்பைத் தொடர்வாய் எம்பாவாய்!

அன்புடன்,
கோ.இராகவன்

பாவை - ஒன்று

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்


(தமிழில் ஒரு வழக்கு உண்டு. "தாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்." அது மிகவும் நல்ல பண்பு. தென்பாண்டி நாட்டாள் கோதை ஆண்டாள் அந்தப் பண்பிலே சிறந்தவர். தானுறும் இன்பம் தன்னைப் போன்றோரும் உற வேண்டும் என்பதற்காகப் பாடியது திருப்பாவை. ஆகையால்தான் கண்ணனைப் பாடும் முன்னே தோழியரை அழைக்கிறார். தன்னோடு சேர்ந்து நோன்பு நோற்று இன்பம் உற்று மகிழ அழைக்கிறார். "நோன்பிலே உயிர்ப்பதென்ன கண்ண பெருமானே" என்று பாரதி பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு பாடியதை முன்பே பாடியிருக்கிறார் ஆண்டாள்.)

மார்கழித் திங்கள் உங்களைக் காக்க வந்ததே! சீர் மிகுந்து செழிக்கும் திருவாய்ப்பாடியைச் சேர்ந்த செல்வச் சிறுமிகளே! அழகு மிகுந்த அணிகலன்களைப் பூட்டிக் கொண்டுள்ள தோழிகளே! விடிகிற பொழுதும் நிலவொளி மிகுந்து குளிரும் மார்கழி மாதத்து நல்ல நாட்களின் காலையில் எழுந்து நீராட வேண்டும். அப்படி நீராடி நமது பாவை நோன்பைத் துவக்கலாமா!

நந்தகோபனை நீங்கள் அறிவீர்கள். ஆயர் தலைவன் அவன். கூரிய வேலைக் கையில் கொண்டு பாலூறிய பசுக்களைத் துன்புறுத்துவோரைத் துன்புறுத்துகின்ற அந்த நந்தகோபனின் இளங்குமரனே கண்ணன். மலர் நீள்விழி யசோதை இருக்கிறாளே, அவளுடைய இளைய மைந்தனே சிங்கம் போன்று வீறு கொண்ட மைவிழி வண்ணன். கருத்த மேனியந்தான். சிவந்த கண்ணுடையவந்தான். ஆனாலும் குளிர்ந்து ஒளிர்ந்து மிளிர்ந்திடும் நிலவு முகமுடையான். அவனே நாரணன். அவனே பரந்தாமன். நமக்கு நன்மை தர வல்லான் அவனே. அவனைத் தொழுது கொண்டு விடியற்காலைப் பொழுது கண்டு நீராடிடுவோம்.

(வள்ளுவர் தெளிவாகச் சொல்லியிருக்கின்றார். "புறத்தூய்மை நீரால் அமையும்." ஆகையால் காலை எழுந்து நீராடி அழுக்கு நீக்க வேண்டும். விடியலில் நீராடுவது மிகவும் நன்று. அது உடலுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுக்கும். சரி. இன்னொரு விதத்தில் பார்ப்போம். எந்தப் பொருளையும் தூய்மைப் படுத்த வேண்டுமென்றால் அதை நீரில் இடுகிறோம். அகம் தூய்மையாகத்தான் சைவர்கள் நீறாடுகிறார்கள். வைணவர்கள் திருமண்ணாடுகிறார்கள்.)

இரவில் மனம் தன்வசமில்லாத பொழுது பல இடங்களுக்குச் செல்லும். அந்த நினைவுகள் காலை எழுகையில் இருந்தாலும் ஆண்டவனைத் தொழுகையில் இருக்கலாமா? அதனால்தான் விடியற்காலை நீராடல். தண்ணீர் தலை பட்டு மேல் திரண்டுக் கால் சேரும் பொழுது உடலும் உள்ளமும் உயிரும் குளிர்ந்து விழிப்படைகிறது. அப்படி நமது உயிரினை விழித்துக் கொண்டு தோழியரை விளித்துக் கொண்டு ஊரார் எல்லாம் நம்மைப் பெருமித்துப் புகழும் படியாகக் கண்ணனைப் படிந்து பாவை நோன்பைத் துவக்குவாய் எம்பாவாய்!

அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, December 15, 2005

திருப்பாவை நோன்பு

மார்கழி மாதம் நாளை தொடங்கப் போகின்றது. இந்த மார்கழியில் ஆண்டாள் எழுதிய திருப்பாவைக்கு விளக்கம் சொல்ல முடிவு செய்துள்ளேன். வழக்கம் போல உங்கள் ஆதரவைத் தேடித் தொடங்குகின்றேன்.

கடவுள் வாழ்த்து

அன்னவயற் புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவை பல்பதியம்
இன்னிசையால் பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை
பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு
சூடிக் கொடுத்த சுடர் கொடியே
பாடி அருளவல்ல பல்வளையாய்
நாடி நீ வேங்கடவற்கு நம்மை விதி ஒன்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு


திருப்பாவைக்கு அறிமுகமே தேவையில்லை. அத்துணை புகழ் பெற்ற நூல். தென்பாண்டி நாட்டில் தோன்றிய அமுதநூல். ஆண்டாள் என்று அன்போடு அழைக்கப்படும் கோதை நாச்சியார் அருளிய அருள் நூல். பெருமை மிகு நூல். மார்கழித் திங்கள் தோறும் பாவையர் பாடி வாழ்த்தும் நூல்.

கண்ணனையே தனது மன்னனாக எண்ணி இன்புற்று அந்த இன்பம் தமிழோடு கலந்து பொங்கிப் பெருகி வழிந்த திருப்பாக்களே திருப்பாவை என்று புகழப்படுகின்றன. ஒரு பெண்ணின் நிலையில் எழுந்த உயர்ந்த அகத்திணை பக்தி நூல்.

கோதையார் தென்பாண்டி நாட்டார். திருவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர். ஆகையால் அவருடைய பாக்களில் தென்னாட்டுத் தமிழ்ச் சொற்கள் கலந்து மேலும் சுவைக்கும்.

மொத்தம் முப்பது பாக்கள். நாளுக்கு ஒரு பா என்று மார்கழியின் முப்பது நாட்களுக்கும் முப்பது பாக்கள். ஒவ்வொன்றும் கண்ணனைப் புகழ்ந்து சிறக்கும். காதலும் பக்தியும் கலந்த சிறந்த இந்த நூலிற்கும் ஒரு தொடக்கம் உண்டு. ஆம். திருப்பாவையைத் தொகுத்த உய்யக்கொண்டான் வேங்கடவனோடு ஒன்றிய நிலை மாறாதிருக்கப் பாடுகிறார் ஒரு கடவுள் வாழ்த்து.

அன்னவயற் புதுவை ஆண்டாள் - நெல் விளையும் வயல்வெளிகளைக் கொண்ட புதுமை பல நிறைந்த திருவில்லிபுத்தூரைச் சேர்ந்த ஆண்டாள்
அரங்கற்குப் பன்னு திருப்பாவை - அரங்கனைப் புகழ்ந்து பாடும் இந்த திருப்பாவை
பல்பதியம் இன்னிசையால் பாடிக் கொடுத்தாள் - பதியம் என்றால் ஒன்றிருந்து ஒன்று உண்டாக்குவது. அப்படி ஒவ்வொரு செய்யுளாக உண்டாகப் பட்ட இந்தப் பல பாக்களைப் பாடிக் கொடுத்தாள்.

திருப்பாவையை ஆண்டாள் எப்படிக் கொடுத்தாராம்? ஏட்டில் எழுதியா? கல்லில் செதுக்கியா? இல்லை. சொல்லில் இழைத்துப் பாட்டாகக் கொடுத்தாராம். இறைவனை வழிபடச் சிறந்த வழிகளில் ஒன்று இறைவன் புகழைப் பாடுவது. ஆகையால்தான் ஆண்டாள் திருப்பாவையைப் பாட்டில் பாடினார்.

பூமாலைச் சூடிக் கொடுத்தாளைச் சொல்லு - அப்படி திருப்பாவையைப் படிக்கும் பொழுது ஒவ்வொரு நாளும் பூமாலையைக் கட்டிக் கட்டி தனது தோளிலிட்டு அழகு பார்த்து விட்டு பிறகு மாதவனுக்குச் சூடிய ஆண்டாளை நினைத்துக் கொள்ளுங்கள். இறைவன் பெயரைச் சொல்லும் பொழுதெல்லாம் அதனோடு சேர்த்து ஆண்டாளையும் சொல்வதிலொரு இன்பம்.

சூடிக் கொடுத்த சுடர் கொடியே - கேசவனுக்குப் பூமாலை சூடிக் கொடுத்த சுடர் கொடியே
பாடி அருளவல்ல பல்வளையாய் - அருமையாக பாட வல்லவளும் பலவித வளையல்களை கைகளில் அணிந்து கொண்டவளுமாகிய ஆண்டாளே
நாடி நீ வேங்கடவற்கு எம்மை விதி ஒன்ற இம்மாற்றம் நாங்கடவா வண்ணமே நல்கு - பாடியும் நாடியும் வேங்கடவனோடு ஒன்று பட்ட விதியை என்றும் மாறாமல் இருக்கச் செய்வாய்.

பாடியும் நாடியும் வேங்கடவனை நாடியாயிற்று. உணர்வும் உயிரும் அவனோடு கலந்து ஒன்றாயிற்று. இந்த இன்ப நிலை மாறாமல் இருக்க வேண்டியது ஒன்றே இனி தன்னுடைய கடமை என்று நினைவுறுத்தித் துவக்குகிறார் திருப்பாவையை.

அன்புடன்,
கோ.இராகவன்
பி.கு : நாளை முதல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாவைப் பார்க்கலாம். நீங்கள் உங்கள் மேலான கருத்துகளைச் சொல்லுங்கள்.

Wednesday, December 14, 2005

எங்கே நினைத்தாலும்...

செங்கேழடுத்த சினவடி வேலுந் திருமுகமும்
பங்கே நிரைத்த நற் பன்னிரு தோளும் பதுமமலர்க்
கொங்கே தரளஞ் சொரியும் செங்கோடைக் குமரன் என
எங்கே நினைப்பினும் அங்கேயென் முன் வந்தெதிர் நிற்பனே

செங்கேழடுத்த சினவடிவேல் முருகனுடையது. அதென்ன செங்கேழடுத்த வேல்? குறித்துக் கொள்ளுங்கள். கேழ் என்றால் ஒளி. செங்கேழ் என்றால் செம்மையான ஒளி. செம்மையாக ஒளிரும் வேலாம். பலர் செம்மை என்ற பண்பையும் சிவப்பு என்ற நிறத்தையும் குழப்பிக் கொள்கிறார்கள். முருகனின் பண்புகளில் ஒன்று செம்மை. அதாவது முறையானது. அப்படியென்றால் செங்கேழ் என்றால் முறையாக ஒளிரும் என்று கொள்ளலாமா? கண்டிப்பாகக் கொள்ளலாம். பேரொளி கொடுப்பதுதான் முறையானது என்று கொள்ளக் கூடாது.

பகலில் வரும் பகலவனின் பேரொளி எப்படி முறையானதோ அப்படித்தான் இரவினில் வரும் மதியத்தின் குளிரொளியும் முறையானதே. அதுபோலத்தான் முருகன் கை வேலும். வேல் என்பது ஞானத்தின் அடையாளம். அறிவு கூசக்கூடாது. உண்மையிலே அறிவுள்ளவனைப் பார்த்தால் நமக்குக் கூசாது. அரைகுறைகளின் நடவடிக்கைகளே கூசச் செய்யும்.

சரி. செங்கேழ் புரிந்தது. சினவடிவேல்? வேலுக்குச் சினம் வருமா? வள்ளுவர் என்ன சொல்கிறார் என்று நினைத்துப் பாருங்கள். "சினமெனும் சேர்ந்தாரைக் கொல்லி!" ஆக சினத்தைச் சேர்வது எதுவாயினும் அது சினத்தின் பண்பைப் பெற்று தன் பண்பை இழக்கும். நெருப்பில் போடப்படும் பொருள் நெருப்பின் பண்பைப் பெற்று தனது பண்பை இழக்குமல்லவா! முன்பே சொன்னேன். வேல் என்பது அறிவு. அறிவிற்கு எதன் மீது சினம் வரும்? அறியாமை மீதுதான். அந்த அறியாமை அறிவோடு சேரும் பொழுது அறிவின் பண்பைப் பெற்று அறியாமையின் பண்பை இழக்கும். சினவடிவேல் புரிகிறதா?

பங்கே நிரைத்த பன்னிரு தோள்கள். இருபக்கங்களிலும் வரிசையாக அமைந்த பன்னிரு தோள்களும் என்று பொருள். நிரைத்த என்றால் வரிசையான என்று பொருள்.

பதும மலர்க் கொங்கே - பதுமம் என்றால் தாமரை. தாமரை மலர்க் கொங்கு. கொங்கு என்றால் மகரந்தம். அதாவது பூத்தாது. கொங்கு நாடு என்பது பூத்தாது நிறைந்த நாட்டின் பெயர். முன்பெல்லாம் கொங்கு நாட்டில் மலைவளம் நிறைய. ஆகையால் பூக்களுக்கும் பூத்தாதுகளுக்கும் குறைவிருக்காது. இப்படி பூத்தாதுகளின் நறுமணம் நிரம்பிய நாடு என்பதால் கொங்கு நாடு என்றனர்.

தரளம் - தரளம் என்றால் முத்து. முத்து வெளிரிப் போயிருக்காது. மெல்லிய வெண்மஞ்சள் நிறத்தில் இருக்கும். பதும மலர்க் கொங்கே தரளம் சொரியும் என்றால் தாமரை மலர்களின் மெல்லிய மஞ்சள் முத்துப் போன்ற நுண்ணிய பூத்தாதுகள் நிரம்பிய என்று பொருள். அது எந்த ஊராம்? செங்கோடு. இன்றைய பெயர் திருச்செங்கோடு. மிகவும் பழமையான ஊர். சிலப்பதிகாரத்தில் முருகனுடைய ஊர் என்று குறிப்பிடப்படும் ஊர்.

அத்தகைய பெருமை வாய்ந்த திருச்செங்கோட்டில் குடி கொண்டுள்ள குமரனின் செங்கேழடுத்த சினவடிவேலும் திருமுகமும் பங்கே நிரைத்த பன்னிரு தோள்களும் எங்கே நினைத்தாலும் அங்கே வந்து எதிர் நிற்குமாம்.

எங்கே நினைத்தாலும் குமரன் எதிர் நிற்பானா? நிற்பான். ஆனால் நாம் உணரோம். ஏன்? எங்கே நினைத்தாலும் தூக்கம் வருமா? வராது. மிகுந்த களைப்பில் உடம்பு தூக்கத்தை எங்கே நினைத்தாலும் வந்து விடுகிறதே! தூக்கம் நிச்சயம் வேண்டும் என்று உறுதியாக ஒரே சிந்தனையில் உடல் நினைக்கும் பொழுது தூக்கம் மறுபேச்சு பேசாமல் வந்து விடுகிறது.

ஆக எப்பொழுதும் முருகனை நினைத்தேன் வரவில்லையே என்று வீண் பேசுவதை விடுத்து, உள்ளும் புறமும் ஒன்றி கந்தா எனக் கதறினால் பதறிக் கொண்டு ஓடி வருவான் வடிவேலன். கண்டிப்பாக வருவான். கண் முன்னே கடவுளா என்று விதண்டாவாதம் பேசுவதை விடுத்து அன்போடு கேளுங்கள். தரப்படும்.

இப்படி கந்தனுடைய அற்புத அலங்காரங்களைச் சொல்லில், அதுவும் தமிழ்ச் சொல்லில் படைத்து நமக்கெல்லாம் தந்த கருணைக்கடல் அருணகிரியாரின் கந்தரலங்காரத்தின் பொறுக்கு மணிகளுக்குப் பொருள் செய்யும் பெரும் பணியை இப்பொழுதைக்கு இத்தோடு முடித்துக் கொள்கிறேன். தமிழையும் தமிழ்க்கடவுளையும் போற்றி நாம் தீதின்றி வாழ்வோம்.

அன்புடன்,
கோ.இராகவன்

Tuesday, December 13, 2005

புறக்கண்ணாலும் அகக்கண்ணாலும்

திரும்பத் திரும்ப அருணகிரி சொல்லும் விஷயம் இறைவனைக் கண்டு தொழுதல். பார்க்கும் கண்கள் இரண்டு. ஒன்று புறக்கண். மற்றொன்று அகக்கண். அந்தப் புறக்கண்களும் இரண்டு. அகக்கண் ஒன்று. அந்த ஒரு அகக்கண்ணும் என்றும் திறந்திருக்கிறதா என்றால் இல்லை என்றே கூற வேண்டும். அகமும் புறமும் திறந்து இறைவனின் திருந்து எழிலைக் காண வேண்டும்.

மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை மெய்ஞான தெய்வத்தை மேதினியிற்
சேலார் வயற்பொழிற் செங்கோடனைச் சென்று கண்டு தொழ
நலாயிரம் கண் படைத்திலனே இந்த நான்முகனே


மாலோன் மருகன் என்று அருணகிரி தனது நூல்கள் அனைத்திலும் முருகனைப் புகழ்கிறார். ஏன்? அது சமய ஒற்றுமையை மேம்படுத்த. சைவ வைணவச் சண்டை நிறைந்திருந்த காலத்தில் தோன்றியவர் அருணகிரி. எம்மதமும் சம்மதம் என்ற உயர்ந்த கொள்கையை உடைய மகான் அவர். தன்னுடைய மதம் உயர்ந்தது என்று நம்பும் வேளையில் மற்ற மதம் தாழ்ந்தது என்று நினைக்காத நல்லவர் அவர். அனைவரையும் அனுசரித்து ஒற்றுமையுடன் செல்வதே சிறந்தது என்பதை உணர்ந்தவர் அவர். அதனால்தான் மாலோன் மருகன் என்று அடிக்கடி புகழ்கின்றார்.

மன்றாடி யார்? மன்றாடுவது என்று எல்லாரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். மன்று என்றால் அவை. அவையில் ஆடுவதே மன்றாடுவது. ஆனால் இன்றைக்கு மன்றாடுவது என்ற சொல்லின் பொருள் ஒருவரிடம் கெஞ்சிக் கேட்பது என்று திரிந்து விட்டது.

அவையில் அனைவருக்குமாக அம்பலத்தில் ஆடுகிறவர் சிவபெருமான். விரிசடைக் கடவுள் ஆடலில் உலகம் அடங்கும். அப்படி அம்பலத்தில் நின்று ஆடும் ஈசனின் மைந்தனே முருகப் பெருமான். அந்த முருகப் பெருமான் வானவர்கள் அனைவருக்கும் மேலான தேவன். தேவாதி தேவன் என்றால் சிவபெருமான். "தேவ தேவ தேவாதிப் பெருமானே" என்றால் முருகப் பெருமான். தந்தைக்கு மந்திரம் சொன்னவன் அல்லவா!

மெய்ஞானம் என்பதை முழுதுணர்த்தும் தெய்வம் முருகப் பெருமான். மெய்ஞானம் உணர்ந்தவர்க்கே வீடுபேறு கிட்டும். பிறப்பும் இறப்பும் கடந்த நிலை அது. "செம்மான் முருகன் பிறவான் இறவான்" என்கிறார் அருணகிரி. பிறப்பும் இறப்பும் அற்ற முருகப் பெருமானே வீடுபேறு அளிக்க வல்லவர். ஆகையால்தான் மெய்ஞான தெய்வம் என்று புகழ்கிறோம்.

சேலார் வயற்பொழில் என்றால் மீன்கள் துள்ளி விளையாடும் வயல்வெளிகள் என்று பொருள். அத்தகைய வயல்வெளிகளை உடைய ஊர் திருச்செங்கோடு. "சீர்கெழு செந்திலும் செங்கோடும் ஏரகமும் நீங்கா இறைவன்" என்று இளங்கோவடிகள் முருகப் பெருமானை புகழ்கிறார். இதிலிருந்து திருச்செங்கோட்டின் பெருமை விளங்கும். திருச்செங்கோட்டிலும் பழநியிலும் நவபாஷாணச் சிலையாக நிற்கிறார் முருகர். பழநியில் கருத்த சிலையென்றால் திருச்செங்கோட்டில் வெளுத்த சிலை. அத்தகைய பெருமையுடைய திருச்செங்கோட்டில் இருக்கும் முருகனைக் காண நாலாயிரம் கண் படைத்திலனே இந்த நான்முகன்.

புறக்கண்ணால் கண்டு மகிழ மெள்ள மெள்ள அகக்கண் திறக்கும். அகக்கண்ணில் இறைவனைக் காணும் மெய்ஞான அறிவு வேண்டும். இரண்டு புறக்கண்களால் காண்பதை விட நாலாயிரம் கண்கள் இருந்தால் இந்த மெய்ஞான அறிவு விரைவில் உய்க்குமே என்று பிரம்மனைத் திட்டுவது போல விளையாட்டாக முருகப் பெருமானின் மீதுள்ள அன்பை வெளிக்காட்டுகிறார் அருணகிரி.

அன்புடன்,
கோ.இராகவன்

Sunday, December 11, 2005

சூடாத நாடாத தொழாத பாடாத

இறைவனை பல பெயர்களில் பல விதங்களில் உலகெங்கும் மக்கள் வழிபடுகின்றார்கள். அப்படி இறைவனை வணங்கி மகிழவும் இறையருள் வேண்டும். அதைத்தான் இந்தப் பாடலில் விளையாட்டகக் கூறுகிறார் அருணகிரி.

கோடாத வேதனுக்கு யான் செய்த குற்றமென் குன்றெரிந்த
தாடாளனே தென்றணிகைக் குமர நின்றண்டையந்தாள்
சூடாத சென்னியும் நாடாத கண்ணும் தொழாத கையும்
பாடாத நாவும் எனக்கே தெரிந்து படைத்தனனே!


இறைவனின் பண்புகளைப் பற்றித் தமிழ் என்ன சொல்கிறது. அருட்பெருஞ்சோதியான அந்தத் தனிப்பெருங்கருணை அனைத்தையும் கடந்தும் அனைத்தின் உள்ளும் இருக்கிறது. நம்முடைய புலன்களால் முழுமையாக அறிய முடியாததுமான அந்தக் கருணா மூர்த்தியை நாம் எப்படி வணங்குவது?

உடலால் உணர்வால் வணங்க வேண்டும். உணர்வு என்பது மனதில் எழுவது. மனதுக்குள் இறைவனை நிறுத்தி வழிபட வேண்டும். பூசலார் எப்படி வழிபட்டார் தெரியுமா?
நெஞ்சகமே கோயில்
நினைவே சுகந்தம்
அன்பே மஞ்சன நீர்
பூசை கொள்ள வாராய் பராபரமே!

இறைவனை உள்ளக் கோயிலில் நிறுத்தி அவனை சுகமாக நினைத்து அன்பெனும் மஞ்சன நீர் தெளித்து வழிபடுகிறார். அப்படி வழிபட வேண்டும். வழிபாடுகளில் மிகவும் தேர்ந்த நிலை அது.

ஆனால் இதையெல்லாம் செய்யும் மனத்தின்மையில்லை என்றால் என்ன செய்வது? உடலால் வழிபடலாம். இது தாழ்ந்ததாகாது. இதுவும் இறைவனை வழிபடும் ஒரு முறை. எண்சாண் உடம்பால் இறைவனைப் பணிந்து வணங்க வேண்டும்.

தலையால் வணங்க வேண்டும். இறைவன் திருவடிகளில் பணிந்து வணங்க வேண்டும். அருவமும் உருவமும் இல்லாத இறைவனை காண்கின்ற காட்சிகளில் எல்லாம் கண்டு மகிழ்ந்து இன்புற வேண்டும். எங்கும் நிறைந்தவன் காட்சியில் இல்லாமலா போவான்!

அருணகிரிநாதர் முதலில் இறைவனடி பணியாதிருந்தார். பிறகு இறையருளால் இறைவனடி பணிந்தார். ஆகையால் முதலில் பணியாமைக்கு காரணம் தெரியாமல் புலம்புகிறார்.

கோடாத வேதனுக்கு யான் செய்த குற்றமென் - இந்தப் பிரமனுக்கு நான் என்ன தவறு செய்தேன்!
குன்றெரிந்த தாடாளனே - மாயையாகி நின்ற கிரவுஞ்ச மலையைக் வேலெறிந்து வென்றவனே!
தென்றணிகைக் குமரா நின்றண்டையந்தாள் - தணிகை மலை மீது குடிகொண்டுள்ள குமரனே! உன்னுடைய தாமரை மலரை ஒத்த திருவடிகள்
சூடாத சென்னியும் - சென்னி என்றால் உச்சி. இறைவனின் திருவடிகளைப் பணியும் பொழுது நாம் அந்தத் திருவடிகளைச் சூடிக் கொள்கிறோம் அல்லவா. அப்படிச் சூடாத தலையும்.........
நாடாத கண்ணும் - இறைவனைக் காண்பது எப்படி? அனைத்தையும் கடந்த இறைவனைப் புறக்கண்களால் காண முடியுமா? வெறும் கண்களுக்கு அகப்படும் வகையில் அத்தனை எளியவரா ஆண்டவர்? அப்படி அகப்பட்டால் அவருக்கும் மற்ற பொருட்களுக்கும் என்ன வேறுபாடு? இந்தக் கேள்விகள் யாருக்கும் எழாமல் இருக்காது. இதற்கும் உண்டு ஒரு எளிய விளக்கம். இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான் அல்லவா. அப்படி எங்கும் நிறைந்தவன் கல்லிலும் புல்லிலும் நம்முடைய சகமனிதனிலும் நிறைந்திருப்பான் அல்லவா. ஆக நோக்குமிடமெங்கும் இறைவனைக் காண வேண்டும். ஆனால் அனைவருக்கும் இந்த இறையன்பு எளிதில் கைவராது. அப்படிப் பட்ட நிலையில் நல்லவை என்று நாம் கருதுகின்றவற்றிலாவது இறைவனைக் கண்டு மகிழலாம். "கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்" என்று கவியரசர் எழுதியிருக்கின்றாரே. அப்படி இறைவனை நல்லவற்றில் கண்டு மகிழாத கண்களையும்.......
தொழாத கையும் - கண்ட பின்னும் அன்பு சொரிந்து தொழாத கைகளையும்.........
பாடாத நாவும் - தீந்தமிழில் சொற்களை அடுக்கி அன்போடு பாடாத நாவையும்.........இறைவனைத் தமிழில் வணங்க வேண்டும். ஏன்? இறைவனை எந்த மொழியிலும் வணங்கலாம். தமிழில் வணங்குவதால் என்ன பலம். தமிழ் நாம் பேசும் மொழி. தமிழை நமது மூளை விரைவாகப் புரிந்து கொள்ளும். ஆகையால் நாம் சொல்கின்றதனை உணர்ந்து சொல்வதற்கான வாய்ப்புகள் நிறைய. ஆகையால்தான் இறைவனை அவரவர் தாய்மொழிகளில் வணங்குவது சிறப்பு. அப்படி நமது தாய்மொழியான தமிழில் பாடாத நாவையும்.........
எனக்கே தெரிந்து படைத்தனனே - எனக்கென்று படைத்தானே!

முருகா! உன்னுடைய திருவடிகளைச் சூடாத சென்னியும் நாடாத கண்ணும் தொழாத கையும் பாடாத நாவும் படைத்தானே பிரம்மன். அவனுக்கு நான் என்ன குற்றம் செய்தேன்? இருந்தும் உனது கருணையைத் தந்து என்னை ஆட்கொண்டாயே! அந்த அன்பிற்கு அன்பு செலுத்துவது ஒன்றே கைமாறு.

அன்புடன்,
கோ.இராகவன்

Thursday, December 08, 2005

துணையாக வருவது...

யாருமே நம்மோடு இல்லை என்று ஒரு நிலை இல்லவே இல்லை. அப்படி யாரும் மனது நொந்தால் இந்தப் பாடலை நினையுங்கள். படியுங்கள். உங்கள் உள்ளம் தெளியும். இறைவன் நம்மோடு எப்பொழுதும் இருக்கிறான் என்று நம்புகிறவர்கள் இந்தப் பாடலைப் படியுங்கள். இறைவனின் கருணை விளங்கும்.

விழிக்குத் துணை திரு மென்மலர்ப் பாதங்கள் மொய்மைகுன்றா
மொழிக்குத் துணை முருகா வெனும் நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணை பன்னிரு தோள்களும் பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே


நம்மோடு இருக்கின்ற பல விஷயங்கள் நமக்குத் தோன்றுவதேயில்லை. இதயம் எப்பொழுதும் அடிக்கிறது. ஆனால் தோன்றுகிறதா? ஆனால் இதயம் அளவிற்கு அதிகமாக வேலை செய்யும் பொழுது தோன்றுகிறது. இறைவன் நம்மோடு துணையாக இருக்கிறார். வழக்கமாக நமக்கு அது தோன்றுவதில்லை. ஆனால் துன்பம் வருகையில் தோன்றுகிறது. ஆனாலும் இறைவன் எப்பொழுதும் நம்மோடு இருப்பதால் தமிழ் மொழியானது முருகனைத் தோன்றாத் துணைவன் என்று சொல்கிறது.

விழிக்குத் துணை திருமென் மலர்ப் பாதங்கள் - இறைவனின் திருவடிகள் கண்ட பார்வைதான் பார்வை. "கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே" என்கிறார் இளங்கோவடிகள். இறைவனை எங்கே காண்பது? காக்கைச் சிறகினிலே, பார்க்கும் மரங்களிலே என்று நோக்குமிடமெங்கும் நீங்கமற நின்ற நிமலனைக் காண வேண்டும். அது விழிகளில் அன்பு இருந்தால்தான் முடியும். அதனால்தான் அருணகிரியும் "விழிக்குத் துணை திருமென்மலர்ப் பாதங்கள்" என்றார்.

மொய்மை குன்றா மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் - முருகன் என்ற பெயர் தூய தமிழ்ப் பெயர். தமிழ்ப் பண்பாட்டோடு வந்த பெயர். "அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக" என்கிறார் நக்கீரர். முருகு என்ற பெயரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

அகரமும் உகரமும் மகரமும் சேர்ந்தது ஓங்காரம். இதில் அகரம் படைப்பையும், உகரம் காத்தலையும், மகரம் அழித்தலையும் குறிக்கிறது. இந்த மூன்றில் உகரமானது முருகு என்ற பெயரின் மூன்று எழுத்துகளிலும் வருவதால், முருகு என்ற பெயரின் பெருமை விளங்கும்.

முருகக் கடவுளுக்குப் பிற்காலத்தில் ஆயிரம் பெயர்கள் கூட்டப் பட்டது. சண்முகன், சுப்பிரமணியன், கார்த்திகேயன், காங்கேயன் என்று அடுக்கிக் கொண்டு போனார்கள். ஆனாலும் இத்தனை ஆண்டுகளாக அத்தனை பெயர்களுக்கும் முதன்மையாய் நின்று வந்திருப்பது முருகன் என்ற தூய தமிழ்ப் பெயரே. அந்தப் பெயரைச் சொல்லி முருகனை வழிபடுதல் மிகச் சிறப்பு.

இதைச் சொல்ல வந்துதான் "மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்" என்றார் அருணகிரி. நீ என்றால் ஒருமை. நீங்கள் என்றால் மரியாதை மிகுந்த பன்மை. முருகா எனும் நாமம் என்று சொல்லாமல் நாமங்கள் என்று சொல்லி மதிப்பைக் காட்டியுள்ளார் அருணகிரி.

முன்பு செய்த பழிக்குத் துணை பன்னிரு தோள்களும் - இந்த வரிக்கு விளக்கமே தேவையில்லை. இருந்தாலும் சொல்கிறேன். பழிக்கு ஏன் தோள்கள் துணையென்றார் அருணகிரி? பழியை உணர்ந்த பின் முருகனை வேண்டி தீந்தமிழ்ப் பாக்களை நாம் சூட்டினால் அவைகளை வாங்கிக் கொள்ள ஒரு தோள் போதாமல் பன்னிரண்டு தோள்களோடு நிற்கிறான் முருகன். "மல்லேபுரி பன்னிரு வாகுவில் என் சொல்லே புனையும்" என்று கந்தரநுபூதியில் பாடியிருக்கிறார் அருணகிரி.

பயந்த தனி வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே - எந்த வழியிலும் நமக்குத் தனிமையில்லை. நம்மோடு என்றைக்கும் முருகன் துணையிருப்பான். வேலும் மயிலும் துணையிருக்க எந்தத் தீதும் நமை அண்டாது. அதென்ன வேலும் மயிலும்? வேல் அறிவின் அடையாளம். மயில் ஓங்காரத்தின் அடையாளம். துன்பம் வரும் வேளையில் ஓங்கார வேலன் அறிவாக வந்து நமக்கு நல்ல சிந்தனையைத் தந்து காப்பாற்றுவான் என்பதால்தான் வேலும் மயிலும் துணை என்றார்கள்.

எந்த நிலையிலும் நம்மைத் தனிமையில் விடாது காத்து அருளும் கந்தன் திருமலரடி வணங்கி முருகா எனப் புகழ்ந்து இன்புறுவதே சிறப்பாகும்.

அன்புடன்,
கோ.இராகவன்

Sunday, December 04, 2005

யார் யாருக்கு என்னென்ன மாலை

யார் யாருக்கு என்னென்ன மாலை என்று இந்தப் பாடலில் விளக்குகிறார் அருணகிரியார்.

ஆலுக் கணிகலம் வெண்டலை மாலை அகிலமுண்ட
மாலுக் கணிகலம் தண்ணந் துழாந் மயிலேறும் ஐயன்
காலுக் கணிகலம் வானோர் முடியும் கடம்பும் கையில்
வேலுக் கணிகலம் வேலையும் சூரனும் மேருவுமே


ஆலுக்கணிகலம் வெண்டலை மாலை - ஆலன் என்றால் விரிசடைக் கடவுள். ஏன் அந்தப் பெயர். தமிழர்கள் விரிசடைக் கடவுள் என்று வணங்கிய சிவபெருமானுக்கு இன்றைய பெயர் தட்சிணாமூர்த்தி. அதாவது தெற்கத்திக் கடவுள். அவர் ஆலமரத்தின் அடியில் அமர்ந்து எல்லாருக்கும் நல்வழி போதிக்கின்றவர். ஆகையால் அவருக்கு ஆலன் என்றும் பெயர்.

இந்த விரிசடைக் கடவுளின் கழுத்தில் மாலையான அணிந்து கொள்வது எதை? வெண்டலையை. அதாவது மண்டையோட்டை. ஆணவம் ஆண்டவனிடம் செல்லாது. தன்னிடம் ஆணவம் காட்டிய பிரம்மனைத் தண்டிக்க ஐந்தாவது தலையைக் கிள்ளினார். அந்த மண்டையோட்டை அணிந்து கொண்டு ஆணவம் கொடிது என்று நமக்கெல்லாம் அறிவுறுத்துகிறார்.

அகிலமுண்ட மாலுக்கு அணிகலம் தண்ணந் துழாய் - அகிலம் என்றால் இங்கே மண். மண்ணை உண்டவர் யார்? கண்ணனாக மண்ணை உண்டு காட்டிய திருமாலுக்கு அணிகலன் எது? தண்ணந் துழாய். துழாய் என்றால் துளசி. அதென்ன தண்ணந் துழாய்? உண்மையிலேயே துளசி சூடானது. ஆனால் நீலமேக வண்ணன் குளிர்மையானவன். கடலில் படுத்திருக்கிறான் அல்லவா. அந்தக் குளிர்ச்சி பொருந்திய திருமாலின் திருமார்பில் பட்டுக் குளிர்ந்த துளசி என்கிறார் அருணகிரி.

இங்கே இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். ஆதி அந்தமில்லாத அருட்பெருஞ்சோதியாகிய விரிசடைக் கடவுளுக்கு வில்வம். வில்வம் குளிர்ச்சி பொருந்தியது. குளுமையான திருமாலுக்கு வெப்பம் மிகுந்த துளசி. ஆகையால்தான் வயிற்றுப் பிரச்சனை வரும் பொழுது வில்வம் மருந்தாகிறது. வயிறு வெப்பமான பகுதி. அங்கு பிரச்சனை வருவதும் வெப்பம் கூடும் பொழுது. அதனால் குளுமை மிகுந்த வில்வம் மருந்தாகிறது. குளிர்ச்சியான நீர்க்கோர்வை போன்ற நோய்களுக்கு வெப்பமேற்றும் துளசி மருந்தாகிறது.

மயிலேறும் ஐயன் காலுக் கணிகலம் வானோர் முடியும் கடம்பும் - மயிலேறும் ஐயன் முருகன். தமிழ் மொழியில் ஐ என்றால் கடவுள். அன் என்பது ஆண்பால் விகுதி. மயிலேறியான முருகனுடைய காலுக்கு அணிகலங்கள் எவை? வானவர்கள் விழுந்து வணங்குவதால் அவர்களுடைய முடிகளும் (கிரீடம்) கடம்ப மாலையும் முருகன் திருவடியை அடைகின்றன. ஆகையால் அவைகளே முருகனுடைய திருவடிக்கு அணிகலங்கள்.

கையில் வேலுக் கணிகலம் வேலையும் சூரனும் மேருவுமே - இந்த வரியை மிகவும் ஆழப் புரிந்து கொள்ள வேண்டும். மேலோட்டமாகச் சொன்னால் வேலுக்கு அணிகலங்கள் கடலும் சூரனும் கிரவுஞ்ச மலையும் என்று பொருள் படும். சூரன் கடலில் மறைந்த பொழுது கடலை வற்றச் செய்தது வேல். சூரனை ஈடுடலாக்கி சேவலும் மயிலுமாக்கியது வேல். கிரவுஞ்ச மலையைத் தூளாக்கியது வேல். ஆனால் இதற்கான விளக்கத்தில்தான் பெரும் பொருள் பொதிந்திருக்கிறது.

பிறவி என்பது கடல். "பிறவிப் பெருங்கடல்" என்று சொல்லியிருக்கிறார் வள்ளுவர். அந்தக் கடலைக் கடக்க வேண்டும். கடக்க விடாமல் தடையாக இருப்பவை ஆணவமும் மாயையும். இரண்டும் அகன்றால் பிறவிப் பெருங்கடலைக் கடக்கலாம்.

முதலில் போக வேண்டியது மாயை. இந்த உலக மாயை போனால் நமக்கு ஆணவம் இருப்பது தெரியும். அறிவைக் கொண்டு ஆணவத்தை அறுத்தால் கருமம் தொலைந்து பிறவிப் பெருங்கடல் கடக்கும். இதற்கு வேண்டியதெல்லாம் ஞானம். வேல் ஞானத்தின் வடிவம். ஞானம் வந்தால் மாயை விலகும். பிறகு ஆணவன் தொலையும். பிறகு கருமமாகிய பிறவி இன்பமாகும். இதைத்தான் வள்ளுவர் தெளிவாக "பிறவிப் பெருங்கடல் நீத்துவார் நீத்தார் இறைவனடி சேராதவர்" என்கிறார். முருகனை என்று இல்லை. நீங்கள் எந்தத் தெய்வத்தை நம்புகின்றீர்களோ அந்தத் தெய்வத்தை வழிபடுங்கள்.

அன்புடன்,
கோ.இராகவன்

Friday, December 02, 2005

எதிரில் நிற்கும் எதிரியின் முகத்தில்....

நாம் நிறைய தவறு செய்திருக்கிறோம். குற்றம் செய்திருக்கிறோம். ஆண்டவன் நமக்கும் வாழ்வளிப்பானா என்று என்றைக்காவது ஐயம் ஏற்பட்டால் இந்தப் பாடலைப் படியுங்கள் உண்மை விளங்கும்.

சிந்திக்கிலேன் நின்று சேவிக்கிலேன் தண்டைச் சிற்றடியை
வந்திக்கிலேன் ஒன்றும் வாழ்த்துகிலேன் மயில் வாகனனைச்
சந்திக்கிலேன் பொய்யை நிந்திக்கிலேன் உண்மை சாதிக்கிலேன்
புந்திக் கிலேசமும் காயக் கிலேசமும் போக்குதற்கே

நாம் புகழாததால், நாம் வணங்காததால், நாம் நினைக்காததால் ஆண்டவன் நம்மை ஒரு போதும் தண்டிக்கப் போவதில்லை. ஆண்டவன் அனைவருக்கும் பொதுவானவர். தன்னை வணங்காதவரைத் தண்டிக்க அவர் இரண்டாந்தர எஜமானன் இல்லை. அவர் அனைவருக்கும் பொது. நல்லவருக்கு ஆன அதே இறைவனே தீயவனுக்கும். இருவரையும் வாழ்விக்க வேண்டிய கடமை ஆண்டவனுக்கு உண்டு.

போருக்குப் போகிறான் சூரன். அவனது முகம் கடுகடுவென இருக்கிறது. செக்கச் சிவந்து இரத்த நிறத்தில் இருக்கிறது. கண் பார்வையில் அனல் பறக்கிறது. முருகனை ஒரு பிடி பிடிக்கவேண்டும் என்ற வெறியோடு போகிறான். போர்க்களத்தில் முருகனும் நிற்கின்றார். முருகனைப் பார்த்த சூரனுக்கு வியப்பு. பின்னே. புன்னகை தவழ குளிர் முகத்தோடு வந்து நின்றால்? கச்சியப்பர் சொல்கின்றார்.
"முழுமதியன்ன ஆறுமுகங்களும் முந்நான்காகும்
விழிகளின் அருளும் வேறுள படையி சீரும்
அணிமணி தண்டையார்க்கும் செழுமலரடியும் கண்டாண்
".

ஆக சூரனுக்குதான் முருகன் மேல் ஆத்திரம். ஆனால் முருகனுக்கோ சூரன் மேல் அன்பு. குளிக்காமல் போவதால் ஆறு நம்மீது கோவிக்குமா? நாம் குளிக்கப் போனால் நம்மைத் தூய்மைப் படுத்துவது ஆறு. அப்படித்தான் முருகக் கடவுளும். நாம் வணங்கினால் நம்மை வாழ்விப்பார். நாம் வணங்காமல் போனால் நம்மை கோவிக்கவே மாட்டார். இறைவன் அனைவருக்கும் பொதுவானவன் என்று உணர்த்தும் தத்துவம். இது தமிழுக்கு மட்டுமே உரியது.

சிந்திக்கிலேன் - முருகா உன்னைப் பற்றி உள்ளத்தில் கொஞ்சமும் சிந்திக்கவில்லை

நின்று சேவிக்கிலேன் - உன்னுடைய திருக்கோயிலுக்கு வந்து ஒரு முறையேனும் வணங்கவில்லை

தண்டைச் சிற்றடியை வந்திக்கிலேன் - அணிமணி தண்டை அணிந்த உனது செந்தாமரைப் பாதங்களை நான் கண்டு வழிபடவில்லை

ஒன்றும் வாழ்த்துகிலேன் - ஒருமுறையாவது உனது பெயரைச் சொல்லியும் புகழைப் பாடியும் வாழ்த்தவில்லை

மயில் வாகனனைச் சந்திக்கிலேன் - மயில் மீது அமர்ந்த ஐயனே உன்னைத் தேடி வந்து சரணடையவில்லை

பொய்யை நிந்திக்கிலேன் உண்மை சாதிக்கிலேன் - பொய்யை நிந்தித்து உண்மையே பேசி வாழவில்லை. (பொய்யா விளக்கே விளக்கு என்கிறார் வள்ளுவர். அத்தோடு பொய்மையும் வாய்மையிடத்து புரை தீர்த்த.)

புந்திக் கிலேசமும் - அறிவில் ஏற்படும் துன்பமும்

காயக் கிலேசமும் - உடலில் ஏற்படும் துன்பமும்
போக்குதற்கே - தீர்வதற்கே!

முருகா, உன்னைப் புகழ்ந்து ஒன்றும் சொல்லாது போனாலும், உன்னை வணங்காது போனாலும், உனது புகழைப் பாடாது போனாலும் உடலாம் மனதால் அடையும் துன்பங்களைக் களைந்து எங்களைக் காக்கின்ற உன் கருணைக்கு அளவுண்டோ!

அன்புடன்,
கோ.இராகவன்