Friday, December 23, 2005

பாவை - எட்டு

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்

(மார்கழி மாதத்தில் காலையின் தன்னோடு நோன்பு நோற்கத் தோழிகளை அழைத்தாயிற்று. சிலர் இன்னும் தூங்குகின்றனர். அவர்கள் வீட்டு வாயிலில் நின்று கதவைத் தட்டியாகி விட்டது. தட்டியும் சிலருக்கு உறக்கம். அவர்களையும் எழுப்ப வேண்டுமே! அதுதான் இந்தப் பாடல்.)

கீழ்வானத்தில் வெள்ளி முளைத்து அதுவும் மறையும் வண்ணம் விடியல் வெளுத்தது பாங்கி. கருத்த எருமைகள் கூட சற்று முன்னர் எழுந்தன. அத்தோடு பரந்து திரிந்து மேயத் தொடங்கின பாங்கி. இதையெல்லாம் எழுத்து பார் நீ!

(மாடுகளில் பொறுமையில் அருமையானது கருமையான எருமை. பசுக்கள் விடியலில் எழுந்து பால் தந்ததால் அவற்றை மூன்றாவது பாடலிலேயே புகழ்ந்தாகி விட்டது. அதற்குப் பிறகு புள்ளினங்களைச் சொல்லியாகி விட்டது. பிறகு பறவைகளிலேயே காலந்தாழ்ந்து எழும் ஆனைச்சாத்தானையும் குறிப்பிட்டாகி விட்டது. இன்னும் தூக்கமா? எருமைகள் கூட எழுந்தனவே. அத்தோடு முடிந்ததா? எழுந்த எருமைகள் மெள்ள ஆடியசைந்து திரிந்து மேயவும் தொடங்கின. இன்னும் தூங்கலாமா என்று தோழியைக் கேட்கிறார்.)

பாவை நோன்பில் ஈடுபாடு கொண்ட நமது தோழியரை தடுத்தி நிறுத்தியிருக்கிறோம். எதற்கென்று தெரியுமா? உன்னுடைய வீட்டிற்கு வந்து உன்னையும் எங்களோடு அழைத்துச் செல்லத்தான். வந்து சும்மா நிற்கவில்லை. எங்கள் தோழியாகிய உன்னை விட்டுப் போகாமல் எங்களோடு அழைத்துச் செல்லக் கூவுகின்றோம். எப்பொழுதும் குதூகலம் உடையவளே எழுந்திருவாய்!

(தோழியை விட்டுச் செல்ல முடியவில்லை ஆண்டாளால். தான் மட்டும் எழுப்பினால் போதாதென்று மற்ற தோழியரையும் அழைத்துச் சென்று எழுப்புகின்றாள். தான் மட்டும் எப்படி நல்லதை அனுபவிப்பது என்ற தவிப்பு கோதைக்கு.)

குதிரை வடிவம் கொண்டு வந்தான் ஒரு கொடியன். அவனைப் பிளந்தெறிந்தவன் நமது மாயவன். இளம் பருவத்திலேயே மல்லரைப் பொருது அவர்களைக் கைப்பிடியில் மாட்டி ஓட்டியவன் நமது தூயவன். தேவாதி தேவனே இந்தத் தேவகி மைந்தன். அவனை நினைத்துப் பாடிப் புகழ்ந்து அவன் திருக்கோயிலுக்குச் சென்று சேவித்தால், நம்முடைய தேவைகளை ஆராய்ந்து சிறந்த முறையில் அருள்வான். இதை நீ அறிவாய் எம்பாவாய்!

(கேட்டதெல்லாம் கொடுப்பவனா இறைவன்? நாம் கேட்பதில் நமக்குச் சிறந்தது எதுவென்று அவன் அறிவான். அதை எப்பொழுது தரவேண்டும் என்றும் அவன் அறிவான். இறைவனை நம்புங்கள். நமக்கு அதனால் நன்மையன்றி ஒன்றில்லை.)

அன்புடன்,
கோ.இராகவன்

7 comments:

said...

ஆஆவென்றாராய்ந்து அருளுவான் கண்ணன் கோதுகலமுடன் சென்று நாம் சேவித்தால், கடனே என்று சேவிக்காமல் :-) நல்ல விளக்கம் இராகவன்.

said...

படித்து வருகிறேன்... முப்பது பாடல்களும் பாடம் பண்ணியாயிற்று இருந்தாலும் விளக்கம் நன்றாக தெரியாது. சென்ற வருடம் தேசிகன் அளித்தார். இந்த வருடம் நீங்கள். தொடர்க தங்கள் நற்பணி.

said...

கணேஷ். நானும் ஆரம்பிச்சிருக்கேன். உங்களுக்குத் தெரியும். அடுத்த மார்கழிக்குள்ள நானும் திருப்பாவைக்குப் பொருள் சொல்லியிருப்பேன்னு நினைக்கிறேன். எங்க நம்ம வீட்டுப்பக்கமே காணோம்?

said...

// நல்ல விளக்கம் இராகவன். //

நன்றி குமரன்.

// படித்து வருகிறேன்... முப்பது பாடல்களும் பாடம் பண்ணியாயிற்று இருந்தாலும் விளக்கம் நன்றாக தெரியாது. சென்ற வருடம் தேசிகன் அளித்தார். இந்த வருடம் நீங்கள். தொடர்க தங்கள் நற்பணி. //

நன்றி கணேஷ். எல்லாம் இறைவன் விருப்பம். அப்ப அடுத்த வருஷம் நீங்களா?

said...

// அடுத்த மார்கழிக்குள்ள நானும் திருப்பாவைக்குப் பொருள் சொல்லியிருப்பேன்னு நினைக்கிறேன். //

காத்துக்கிட்டு இருக்கேன். நீங்கள் சொல்லப் போகும் ஆழமான பொருளுரைக்காகக் காத்திருக்கின்றேன். நுனிப்புல் மேய்கின்றவருக்கு அகத்திக்கீரைக் கட்டு கசக்குமா என்ன?

// எங்க நம்ம வீட்டுப்பக்கமே காணோம்? //

இப்பத்தான் கணேசு நம்ம கண்ணுலயே படுறாரு. இனிமே அடிக்கடி வருவாருன்னு நம்புவோம். அடிக்கடி நம்ம வீட்டுப் பக்கமும் எட்டிப் பாருங்க கணேஷ்.

said...

வணக்கம் ராகவன்,

இந்த பாவையின் முதல் வரி மட்டும் நான் படித்திருக்கிறேன். ஒரு வரிக்கே நிறைய அர்த்தம் உண்டு..

"... எருமை சிறுவீடு மேய்வான் பரந்தன காண்.."

பொதுவாக மேய்தலுக்கென்று தனி இடம் இருக்கும். பெரிய பரந்த புள்வெளியாக ஊருக்கு வெளியில் பொதுவாக ஒரு இடம் இருக்கும். காலையில் தாமதமாக எழுந்த எருமைகள் அந்த புள்வெளிக்கு சென்று மேயும் வரையில் காத்திருக்க முடியாமல், சிறிய வீட்டை சுற்றியுள்ள ஆங்காங்கே வளர்ந்துகிடக்கும் புற்களை மேயத் துவங்கிவுடும்.

அதுதான் "எருமை சிறு வீடு மேய்வான்..."

பாவை படிக்க எனக்கு பொருமை வேண்டும். இனி படிக்க முயற்சிக்கிறேன்.
நன்றி,
கீதா

said...

அருமையான விளக்கம் இராகவன்.

//போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம்//

ஆண்டாளின் அளவிலா கருணை தான் தெரிகிறது. அடுத்தவரையும் உய்விக்கவேண்டும் என்பது அதுதானே?