Sunday, February 24, 2008

09. இஇ - பன்னிரண்டில் தொடங்கி ஒன்றில்

பிற்காலத் தமிழ் இலக்கியங்களில் மிகச் சிறந்தது திருக்குற்றாலக் குறவஞ்சி. திரிகூட ராசப்பக் கவிராயர் எழுதிய சீரிய நூல் இது. முந்நூற்றுச் சொச்ச ஆண்டுகள்தான் ஆனாலும் சுவையால் தமிழால் உணர்வார் பழந்தமிழ் நூல்களுக்கு எந்த விதத்திலும் குறையாத தனிப் பெரும் நூலாகத் திகழ்கின்றது.

திருக்குற்றாலத்தில் குடி கொண்டிருக்கும் குற்றாலநாதரைத் தலைவனாகக் கொண்டு எழுந்த நூல். பாடல்கள் முழுவதும் பக்தியும் காதலும் நகைச்சுவையும் கலந்து ருசிக்கும் அழகு நூல். சந்தங்கள் கொஞ்சக் கொஞ்ச படிப்பவர் நெஞ்சமோ இன்னும் கொஞ்சம் என்று கெஞ்சக் கெஞ்ச வைக்கும் அருமை நூல்.

இந்த நூலில் முருகப் பெருமானின் மேல் கடவுள் வாழ்த்து ஒன்று. கந்தனைத் தவிர யார் தமிழைத் தர வல்லார்! ஆகையால் வேலவனே இந்த நூலை எழுதக் கவி தந்தான் என்று சொல்ல வேண்டும். அதை எப்படிச் சொல்வது? விளையாட்டாக எண்களை வைத்துச் சொல்லியிருக்கின்றார் நமது கவிராயர். பன்னிரண்டில் தொடங்கி ஒன்றில் முடிக்கின்றார்.

பன்னிருகை வேல் வாங்கப் பதினொருவர் படை தாங்கப் பத்து திக்கும்
நன்னவ வீரரும் புகழ மலைகளெட்டும் கடலேழு நாடி யாடிப்
பொன்னின் முடி ஆறேந்தி அஞ்சுதலை யெனக்கொழித்துப் புயநால் மூன்றாய்த்
தன்னிருதாள் தருமொருவன் குற்றாலக் குறவஞ்சித் தமிழ் தந்தானே


பன்னிரண்டு - பன்னிருகை வேல் வாங்க - பன்னிரண்டு கரங்களிலும் வேலினைப் பிடித்துக் கொண்டு
பதினொன்று - பதினொருவர் படை தாங்க - முருகப் பெருமானின் படைக் கலன்கள் மொத்தம் பன்னிரண்டு. ஆனால் பன்னிரண்டு கரங்களிலும் இப்பொழுது வேலைப் பிடித்துக் கொண்டிருப்பதால் மற்ற பதினோரு படைக்கலங்களையும் பதினொருவர் தாங்கிக் கொண்டார்களாம்.

பத்து - பத்துத் திக்கும் - பத்துத் திசைகளிலும். அதென்ன பத்து? எட்டுத் திக்கு என்றுதானே கேட்டுள்ளோம். மிச்ச இரண்டும் எங்கிருந்து வந்தன? சுற்றியுள்ள எட்டுத் திக்குகளோடு மேலும் கீழும் உள்ள இரண்டு திக்குகளையும் சேருங்கள். எட்டு பத்தாகும்.
ஒன்பது - நன்னவ வீரரும் புகழ - பத்துத் திசைகளிலும் நவவீரர்களால் புகழப் படுகின்ற. வீரவாகு முதலான நவவீரர்கள் என்றும் முருகப் பெருமானின் திருப்புகழைப் பாடிக் கொண்டிருப்பார்களாம்.
எட்டு, ஏழு - மலைகள் எட்டும் கடலேழும் நாடி யாடி - எட்டு மலைகளிலும் ஏழு கடல்களிலும் ஏறியும் தாவியும் குதித்தும் ஓடியும் ஆடியும் விளையாடுகின்ற
ஆறு - பொன்னின் முடி ஆறேந்தி - ஆறு தலைகளிலும் பொன்னாலான திருமுடிகளை ஏந்திக் கொண்டிருக்கும்
ஐந்து - அஞ்சுதலை யெனக்கொழித்து - அஞ்சுதல் என்னும் வேண்டாத பண்பை என்னிடத்தில் ஒழித்து
நான்கு, மூன்று - புய நால்மூன்றாய்த் - நால்மூன்று பன்னிரண்டு. பன்னிரண்டு தோள்களோடும்
இரண்டு - தன்னிருதாள் - தன்னுடைய இரண்டு திருவடிகளையும்
ஒன்று - தருமொருவன் - தருகின்ற ஒருவனாகிய முருகப் பெருமான்
குற்றாலக் குறவஞ்சித் தமிழ் தந்தானே - திருக்குற்றாலக் குறவஞ்சி எழுதும் பொருட்டு எனக்குத் தமிழ் தந்தானே.

வெறுமனே முருகன் தமிழைத் தந்தான் என்று சொல்லாமல். எண்களைக் கொண்டு விளையாடியிருக்கும் திரிகூட ராசப்பக் கவிராயரின் தமிழறிவை என்னவென்று வியப்பது!

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்