Tuesday, November 28, 2006

44. எதைத் தட்டினால் எது கிடைக்கும்

பொருட்காட்சிகளுக்குப் போகின்றவர்கள் பஞ்சு மிட்டாய் பார்த்திருப்பீர்கள். வாங்கியும் உண்டிருப்பீர்கள். அந்தப் பஞ்சு மிட்டாய் செய்வதைப் பார்ப்பதும் ஒரு அழகு. சுற்றிக் கொண்டிருக்கும் இயந்திரத்தில் சிறிதளவு நிறமூட்டப்பட்ட சர்க்கரையைப் போடுவார்கள். அந்த இயந்திரம் போட்ட சிறிதளவு சர்க்கரையைப் பகுத்து மெல்லிய பஞ்சுகளாக மெத்தென விரிக்கும். அதைக் குச்சியில் சுற்றி பெரிதாகத் தருவார்கள். அதை அப்படியே வாங்கி அமுக்கினால் மிகவும் சிறியதாகப் போய்விடும். ஆக சிறிய அளவு சர்க்கரைதான் பெரிய பஞ்சு மிட்டாயானது. அதே பெரிய பஞ்சுமிட்டாயை அமுக்கினால் சிறிய அளவுள்ள அடர்ந்த சர்க்கரைக் கட்டியாகிறது.

அது போலத்தான் கந்தரநுபூதியும். முதலில் அநுபூதிக்குத் தயாராக நாற்பது பாடல்கள் வரை சொல்கிறார் அருணகிரி. நாற்பது பாடல்களிலும் நமக்கு ஓரளவு அநுபூதியைப் பற்றித் தெரிந்து விடுகிறது. உடனே இந்தப் பாடலில் அநுபூதியைச் சொல்லி விடுகிறார். பிறகு பத்து பாடல்களில் அநுபூதியின் பெருமைச் சொல்லி விடுகிறார். விரிவாகச் சொல்லி விளங்க வைக்கிறார் செந்தமிழ் முனி.

தூசாமணியும் துகிலும் புனைவாள்
நேசா முருகா நினது அன்பருளால்
ஆசாநிகளம் துகளாயின பின்
பேசா அநுபூதி பிறந்ததுவே


கந்தரநுபூதியில் மிகவும் சிறந்த பாடல் எதுவென்று கேட்டால், இந்தப் பாடலைச் சொல்லலாம். கடவுள் வாழ்த்தோடு சேர்த்து ஐம்பத்து இரண்டு பாடல்கள். அந்த ஐம்பத்திரண்டு பாடல்களிலும் சொன்னதை இந்த ஒரு பாடலில் அடக்கி விட்டார் அருணகிரி நாதர்.

முதலில் அநுபூதி என்றால் என்ன? இறைவனோடு ஒன்று படுதல் என்று பொருள். சிவனோடு ஒன்றாகுதல் சிவாநுபூதி. சக்தியோடு ஒன்றாகுதல் சாக்தாநுபூதி. இகபர சுகம் வேண்டுவோர் சிவாநுபூதியும் சாக்தானுபூதியும் பெற வேண்டும். கலியுகத்தில் இரண்டையும் பெறுவதற்கு மிகவும் பட வேண்டாமென்று இகம் பரம் என்ற இரண்டு சுகங்களும் கந்தரநுபூதி வழியாக வடிவேலர் வழங்குகிறார். ஆங்கிலத்தில் Two-In-One என்று சொல்கிறார்களே. தொலைபேசவும் வேண்டும். புகைப்படம் பிடிக்கவும் வேண்டும். அதற்கு முன்பெல்லாம் இரண்டு கருவிகள் இருந்தன. இப்பொழுதும் இருக்கின்றன. ஆனாலும் இப்பொழுது ஒரு கருவியிலேயே இரண்டையும் செய்ய முடிகிறதல்லவா. அது போலத்தான்.

சரி. கந்தரநுபூதி என்றால் என்னவென்று விளங்கிற்று. அது எப்படிக் கிடைக்கும்? மஞ்சளைப் பொடியாக்கினால் மஞ்சட் பொடி கிடைக்கும். அரிசியைப் பொடியாக்கினால் அரிசி மாவு கிடைக்கும். அது போல ஆசையென்னும் சங்கிலியைப் பொடியாக்கினால் கந்தரநுபூதி கிடைக்கும்.

"ஆசாநிகளம் துகளாயின பின் பேசா அநுபூதி பிறந்ததுவே!" நிகளமென்றால் சங்கிலி. "ஆசையே துன்பத்திற்குக் காரணம்" என்பது புத்த பெருமான் வாக்கும் கூட. ஆசை என்னும் சங்கிலி நம்மைப் பல துன்பங்களோடு இணைத்திருக்கிறது. அந்தச் சங்கிலிகள் அறுந்து விழுந்தால் இறைவனோடு ஒன்று பட முடியும்.

பெரும் யானையானாலும் சங்கிலியால் கட்டி விட்டால் நடக்க முடியுமா? நல்லவனாக இருந்தால் சொர்க்கம் கிடைக்கும். ஆனால் அநுபூதி கிட்டாது. நல்லவனாக இருந்த புண்ணியம் தீர்ந்ததும் மீண்டும் மண்ணுலகம் வர வேண்டும். அநுபூதி எய்தி விட்டால் இறைனோடு ஒன்றாக இருப்பதே தன்மை. அங்கே பேச்சு மூச்சு கிடையாது. நித்யானந்தம். அதாவது குன்றாத இன்பம். அதைத்தான் "பேசா அநுபூதி பிறந்தது" என்கிறார் அருணகிரி.

அநுபூதி எப்படிக் கிடைக்குமென்று தெரிந்தது. எதனால் கிடைக்கும்? அதையும் அருணகிரி சொல்லி விடுகிறார். மறைத்து வைக்க ஒன்றுமில்லை. "தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்பதே அந்த அன்பரது எண்ணம்.

தூசாமணி என்றால் தூசு இல்லாத மணி. மணியில் தூசு இருந்தால் ஒளி தெரியாது. தூசில்லாத மணியே ஒளிரும். அழுக்கான ஆடை அணிவது நன்றன்று. நீரிருக்குமானால் கந்தையானாலும் கசக்கிக் கட்ட வேண்டும். அப்படிக் குறையில்லாத மணிகளையும் தூய ஆடைகளையும் அணிந்த மலைக் குறத்தி வள்ளியின் நேசனான முருகனின் அன்பாலும் அருளாலும் மட்டுமே அநுபூதி கிட்டும். தமிழ்க் குறத்திகள் தூய ஆடை அணிகலன்களை அணிந்தவர்கள். குறிஞ்சி நிலத்தவர். இன்றைக்கு ஊருக்குள் காணும் குறத்தியர் தமிழ் பேசுகின்றவர்கள் கிடையாது. அது குறையன்று. அவர்கள் உண்மையான மலைக் குறவர்களன்று என்பதைச் சொல்வதற்காக அப்படிச் சொல்லப்பட்டுள்ளது.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Monday, November 20, 2006

43. குறியைக் குறியாது

ஆத்திக-நாத்திக வாதங்கள் பல காலங்களாக இருந்து வருகிறது. எது தவறானது? எது சரியானது? இன்னமும் யாரும் பொது முடிவிற்கு வரமுடியவில்லை. நாத்திகர்கள் நாத்திகம் பேசுகின்றார்கள். ஆத்திகர்கள் ஆத்திகம் பேசுகிறார்கள். ஆனால் நமது தமிழ் மண்ணில் ஒரு பழுத்த ஆத்திகர் நாத்திகம் பேசியிருக்கிறார். அதுவும் நாத்திகர்கள் கூட பேச முடியாத அளவிற்கு.

அருணகிரியைத்தான் நான் சொல்கிறேன். மூச்சுக்கு முன்னூறு முறை முருகா முருகா என்று உருகிய அருணகிரிதான் முருகனைக் கும்பிட வேண்டியதில்லை என்று சொல்லியிருக்கிறார். அப்படியானால் எது மெய்?
"ஓல மறைகள் அறைகின்ற ஒன்றது
மேலை வெளியில் படருஞ் சுடர்
" என்கிறார்.

ஓல மறைகள்.....அதாவது இறைவனை ஓலமிட்டுத் தொழுகின்ற மறைகள். மறைகள் என்றால் வேதம். வேதம் என்றால் ரிக்கு, யஜூர், சாம மற்றும் அதர்வண வேதங்களா? அதை நான்மறைகள் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருப்பாரே!

உலகில் மறைநூல் என்று எவையனைத்தும் கொண்டாடப்படுகின்றனவோ அவையனைத்தையும் பொதுவாகச் சொல்கிறார் அருணகிரி. திருக்குறள், கீதை, பைபிள், குரான், கிரந்த சாகிப் என்று எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். எல்லாம் மறைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு இறைவனைப் பற்றிச் சொல்கின்றன. அப்படி அனைத்து வேதங்களும் ஓலமிட்டுத் தொழுகின்ற இறையவன் யார்? "மேலை வெளியில் ஒளிரும் சுடர்". இதை எந்த மதத்தார் மறுப்பார்.

முருகன் என்றால் திருவரங்கத்தார் ஒப்பார். சரி. துயில்மால் என்றால் வாடிகனில் எடுபடுமா? ஏசு என்றால் அரபு நாடுகளில் ஏற்றுக் கொள்வார்களா? ஆனால் "மேலை வெளியில் ஒளிரும் சுடர்" என்று சொல்லுங்கள். யார் மறுப்பர்.

இதுதான் உண்மையான நாத்திகம். இதைத் தமிழ் என்றோ பேசி விட்டது. இப்படிச் சில நடப்புகளும் பண்புகளும் மதங்களுக்கு அப்பாற்பட்டு வழக்கிலுள்ளன. மதங்களில் தெய்வங்களைக் குறிக்கும் முறைகளும் மாறுபடுகின்றன. சிலை வைப்பர் சிலர். ஏடு வைப்பர் சிலர். சிலையில்லை ஏடில்லை திசையென்பர் சிலர். எல்லாம் சரிதான். ஆனால் அனைவரும் பொதுவாக ஏற்றுக் கொண்ட ஒன்று குறியீடு.

வேல் என்பது தமிழ்க் குறியீடு. வடக்கில் சூலாயுதமும் ஓங்காரமும். கிருத்துவர்களுக்குச் சிலுவைக் குறி. முகமதியர்களுக்கு பிறைச்சந்திரன். ஆக குறியீடு என்பது மதங்களுக்குப் பொதுவான பண்பாகக் காணப்படுகிறது.

தியானம் செய்கின்றவர்களைப் பார்த்தால் மனதில் அந்தக் குறியை நினைத்து மற்ற எண்ணங்களை ஒடுக்குவார்கள். அதாவது எல்லாவற்றையும் நினைப்பதை விட ஒன்றை மட்டும் நினைப்பது. இது இரண்டாம் நிலை. அப்படியானால் முதல் நிலை என்ன? எந்தக் குறியையும் நினைக்காமல் மனத்தை ஒடுக்குவது.

பத்து செங்கல் அடுக்கி வைத்திருக்கிறது. வலு இல்லாதவன் கையில் சுத்தியலை வைத்து உடைப்பான். வலு உள்ளவன் வெறுங்கையாலேயே உடைப்பான். ஆனால் எப்படி உடைத்தாலும் கல் உடையத்தான் செய்யும்.

குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறியைத் தனி வேலை நிகழ்த்திடலும்
செறிவற்று உலகோடு உரை சிந்தையும் அற்று
அறிவற்று அறியாமையும் அற்றதுவே


குறியை நினைத்துக் கொண்டு மனத்தை ஒடுக்குகின்றவர்கள் அந்தக் குறியை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா. அது முழுமையான ஒடுக்கமாகாது. ஒன்றையும் நினைக்காமல் மனம் ஒடுங்குவதே சிறந்தது.

இப்பொழுது முதல் வரியைப் படியுங்கள். "குறியைக் குறியாது குறித்தறியும் நெறியை!" புரிகிறதா? எந்தக் குறியினையும் மனதில் குறியாது ஆனால் இறையருளைக் குறித்து அறியும் நெறியைத்தான் அருணகிரிநாதர் கேட்கிறார்.

அந்த நெறி எப்படிக் கிட்டும்? "குறியைக் குறியாது குறித்து அறியும் நெறியைத் தனி வேலை நிகழ்த்திடலும்!". முருகா! உனதருளால் அல்லவா அது கிட்டும்.

அப்படி ஒரு நெறி தெரிந்தபின் அருணகிரியின் அநுபவம் என்ன? "செறிவற்று உலகோடு உரை சிந்தையும் அற்று அறிவற்று அறியாமையும் அற்றதுவே!"

இருப்பவை அனைத்தும் அற்று போகும் நிலை. அது அனைத்தையும் கடந்த நிலை. சச்சிதானந்த நிலை. சத்து+சித்து+ஆனந்தம் = சச்சிதானந்தம். உலகம் மறந்து போயிற்று. பேச்சில்லை. எண்ணமில்லை. அறிவிற்கும் அறியாமைக்கும் கூட அங்கு இடமில்லை. எல்லாம் மறந்த ஆனந்த நிலை.

பக்தியுடன்,
கோ.இராகவன

Monday, November 13, 2006

42. வீட்டை விட்டுத் துரத்தினால்

தந்தையார் வழியிலே பெருஞ் செல்வம் மகனுக்கு வந்தது. மகன் அதை வீணாடம்பரஞ் செய்தான். கொஞ்சமும் அறம் செய்யவில்லை. "ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்" என்பது தமிழ் மூதாட்டி வாக்கு. கைக்காசு குறைந்தது. கடன் வாங்கினான். அதுவும் தீர்ந்தது. வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியவில்லை. வாசலில் அமீனா வந்து நின்றான். இதுவரை இருந்த இடம் காலாவதியாகி விட்டது என்ற நீதிமன்ற உத்தரவு வேறு. என்ன செய்வது? இருந்த வீட்டை விட்டு வெளியே வராவிட்டாலும் இழுத்துப் போடும் அதிகாரம் வாசலில் நிற்பவனுக்கு இருக்கிறது.

கண்ணீர் விட்டு புலம்பினால் விட்டு விடுவானா? இத்தனை நாள் இருந்த வீடல்லவா. நம் விருப்பபடியெல்லாம் செய்யக் காரணமாயிருந்த வீட்டை விட்டுத் துரத்தினால் என்ன செய்வது? தெருவிலா நிற்பது? வேறு வீடு வேண்டுமே? அப்பொழுது நமக்கு வேண்டியவர் வந்து, அவருடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றால் எவ்வளவு நிம்மதி கிட்டும்!

இதுதான் வாழ்க்கைத் தத்துவம். தாய் தந்தையர் கொடுத்த வீடு இந்த உடம்பு. நமது விருப்பப்படியெல்லாம் வளைந்து கொடுத்து இன்பம் நுகர்ந்த உடல். விதி முடிந்து விட்டது. காலதூதன் வாயிலில் நிற்கிறான். பெருங்கலகம் செய்து இதுவரையிருந்த உடம்பை விட்டுத் துரத்தப் போகிறான். அப்போது எங்கே போவது? இன்னொரு வீடு (உடம்பு) கிடைக்குமா?

அருணகிரி அதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. "முருகா! எனக்குத் தெரியும். இந்த நமன் வந்து கலகம் செய்வான். என்னை உடலைவிட்டுத் துரத்த வருவான். வேறு போக்கிடம் ஏது? அப்பொழுது நீ வா. வந்து என்னைக் கா. இந்த உடம்பாகிய வீட்டை விட்டுப் பிரித்து வீடுபேறு என்ற வீட்டை அருள்வாயாக!"

சாகாது எனையே சரணங்களிலே
காகா நமனார் கலகஞ் செயும் நாள்
வாகா முருகா மயில்வாகனனே
யோகா சிவஞானோப தேசிகனே


நமன் கவர்ந்தால் வீடுபேறு கிட்டாது. இறைவனே வர வேண்டும். அப்பொழுதுதான் வீடுபேறு கிட்டும். பெரிய வீட்டிற்குப் போக முடியும். என்னுடைய கிருத்துவ நண்பியுடன் பேசிக் கொண்டிருந்தேன். கிருத்துவ மதத்திலும் இதே கருத்து சொல்லப்படுகிறதாம். அதை salvation என்கின்றார்கள். நமது தமிழும் அதைத்தான் சொல்கிறது. தமிழில் இல்லாதது என்ன?

இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். "கா கா நமனார் வரும் நாள்" என்கிறார் அருணகிரி. இரண்டு முறை கா கா என்கிறார். அவசரமாகக் கேட்டும் பொழுது "குடு குடு" என்போம். "பர பர" என்று இரட்டைக் கிளவியும் உண்டே. அந்த நேரத்தில் தாமதம் செய்யக் கூடாது. அவ்வளவு அவசரம். அதனால்தான் சீக்கிரம் வர வேண்டும் என்று இரண்டு முறை அழைக்கிறார்.

வாகாக மயில் மீது ஏறி வலம் வருகின்ற முருகா! யோகா! சிவஞானமே சிறந்தது. அதையும் சிவனுக்கே உபதேசித்த பெருந்தேவரே! உயிர் பிரியும் வேளையில் காலனிடத்தில் என்னை விட்டு விடாமல் நீயாக விரைந்து வந்து மெய் வீட்டை (உடம்பு எனும் வீடு) விட்டு என்னைப் பிரித்து மெய் வீட்டைத் (உண்மையான வீட்டை) தருவாயாக.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Monday, November 06, 2006

41. மானைத் தேடி

வள்ளி திருமணம் என்பது மிகவும் தத்துவார்த்தமான சுவையான நிகழ்ச்சி. அதைப் படிப்பதும் கேட்பதும் பாடுவதும் இன்பம். வள்ளி திருமணம் சொற்பொழிவு செய்யாத சைவைப் பிரசங்கிகளே கிடையாது. வாரியார் சுவாமிகளாகட்டும் புலவர் கீரனாகட்டும் வள்ளி திருமணத்தைப் பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார்கள்.

முருகனுக்கும் வள்ளிக்கும் இடையே தோன்றிய காதல் கதை என்பதும் கூடுதல் இனிமை. அதே நேரத்தில் அதில் பொதிந்து கிடக்கும் தத்துவப் பொருளை அறிய அறிய ஆனந்தம் பெருகும்.

"மானைக் கண்டதுண்டா? எனக்குச் சொந்தமான மான் இங்கே வந்துவிட்டது. அதைக் கண்டதுண்டா?" வேடனின் கேள்வி வள்ளிக்கு.

அதுவோ காடு. மானைக் கண்டதுண்டா என்று கேட்டால்? மான்கள்தான் ஆங்காங்கே ஓடுகின்றனவே. "அடையாளம் சொன்னால் தேடிப் பார்க்கலாம்." சுருக்கமான விடை வள்ளியிடமிருந்து. வேடனின் அழகும் வீரமுள்ள உருவமும் அமுதூறும் இனிய பேச்சும் அவனிடமிருந்து வரும் நறுமணமும் அணிந்திருக்கும் அழகான ஆடைகளும் அவளின் கவனத்தைக் கொஞ்சமும் ஈர்க்கவில்லை. அவள் மனதில் வேறொருவன் அரியாசனம் போட்டு அமர்ந்திருக்கிறானே.

வேடன் அடையாளம் சொல்கிறான். "புல்லை மேயாத மான். ஆனால் செந்தமிழ்ச் சொல்லை மேயும். உடலெங்கும் புள்ளி மேவாத மான். ஆனால் முருகனை மனதில் அள்ளி மேவிய மான்."

"இப்படியொரு புள்ளிமானை யாரும் இங்கே பார்த்ததில்லை. புள்ளி மேவாததென்றால் அதென்ன வெள்ளி மானா?" வள்ளி நாச்சியாரின் விடையில் தமிழ்க்குறும்பு தெறித்தது.

தமிழ்க்கடவுளுக்கா பேசச் சொல்லித்தர வேண்டும்? "வெள்ளி மானா? இல்லை. நான் தேடி வந்தது வள்ளி மான். தமிழ்க்குறத்தியாம் கள்ளி மான்." இப்படியெல்லாம் காட்டில் அலைந்து திரிந்து பேசியிருக்கிறார் முருகன்.

இன்றைக்குப் பார்க்கலாம். வயதில் பையனை பல பேர் பல இடங்களில் பார்த்திருப்பார்கள். ஒரு நாள் தட்டச்சுப் பயிலகத்தில். காரணம் அங்கே வேண்டியவர்களும் தட்டச்சு படிப்பதுதான். மற்றொரு நாள் கோலப்போட்டி நடக்கும் இடத்தில். கோலம் போட அல்ல. யாரோ கோலம் போடுவதால். இப்படி ஆங்காங்கே சுற்றிக் கொண்டிருப்பார்கள். இவர்களைப் போலவா முருகன் சுற்றினார்?

காதல் வயப்பட்டு சுற்றுகின்றது நாம். முருகனுமா அப்படி? இப்படி காடு, மலை, அருவிக்கரை என்று சுற்றக் காரணம்? உலக மக்களாகிய நம்மீது அன்பு காட்டுவதலாயே அப்படிச் சுற்றினார். இன்னும் விளக்கமாகச் சொல்கிறேன் கேளுங்கள். இச்சா சக்தி வள்ளியம்மை. உலக இன்பங்களை முருகன் வள்ளியம்மையின் வழியாக அருள்கிறார். அதற்காகத்தான் வள்ளியைச் சுற்றினார். வள்ளி நாச்சியார் வழியாக அருளினாலும் முருகப் பெருமானே இச்சா சக்திக்கு ஆதாரம்.

அதை நேரடியாகவே அருளலாமே. எதற்காக வள்ளி நாச்சியார் வழியாக அருள வேண்டும்? தாய்மைப் பண்பிற்கு உயர்வு கொடுக்க வேண்டியே முருகன் அப்படிச் செய்தார். பிள்ளை பிறப்பதற்கு வித்திடுவது தந்தைதான். ஆனால் அத்தோடு சரி. பத்து மாதம் சுமப்பதை விடுங்கள். மண்ணில் குழந்தை பிறந்ததுமே, பசிக்கு ஒரு வாய் அமுதூட்ட எதன் துணையுமின்றி தாயால் மட்டுமே முடியும். ஆக கருணையின் முதல் துளியே தாயிடமிருந்துதான் வருகிறது. அதை முருகக் கடவுள் உயர்விக்கவே, இகலோக சுகமனைத்தையும் வள்ளியம்மை வழியாக வழங்குகிறார்.

வினை ஓடவிடும் கதிர்வேல் மறவேன்
மனையோடு தியங்கி மயங்கிடவோ
சுனையோடு அருவித் துறையோடு பசுந்
தினையோடு இதணோடு திரிந்தவனே


இப்படி வள்ளியை உய்வித்து அதன் மூலம் உலகோருக்குக் கருணை காட்ட, காடு, மேடு, வயல், அருவி என்றெல்லாம் திரிந்த கந்தனே, இந்த உலகித்துள்ள எல்லா வினைகளையும் எங்களிடமிருந்து ஓட ஓட விரட்டும் கதிர்வேலை நாங்கள் மறவோம். அப்படி மறக்காததால் நாங்கள் இல்லற ஒழுக்கத்தை அரைகுறையாகக் கொண்டு தன்னலம் கூடிக் கெட மாட்டோம். அனைத்தும் முருகனருள்.

பக்தியுடன்,
கோ.இராகவன்