Monday, November 28, 2005

பார்த்ததும் பற்றிக் கொள்ளும்

இறைவனை நமக்குத் துன்பம் வருகையில் மட்டும் நினைப்பது என்பது ஒரு வழக்கம். அப்படியில்லாமல் மனம் அமைதியாக இருக்கையில் நினைத்து மகிழ இந்தப் பாடல் உதவும். பொருளுணர்ந்து ஓத அருள் கிடைக்கும்.

பத்தித் திருமுகம் ஆறுடன் பன்னிரு தோள்களுமாய்
தித்தித் திருக்கும் அமுது கண்டேன் செயன் மாண்டடங்கப்
புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித்
தத்திக் கரைபுரளும் பரமானந்த சாகரத்தே


வெள்ளம் கரைபுரண்டு வரும் பொழுது பார்த்திருக்கின்றீர்களா? டமடமவென அடித்துக் கொண்டு வரும். பொங்கிப் பொங்கித் துள்ளிக் கொண்டு வரும். வழியில் கண்டதையெல்லாம் அடித்துத் தள்ளிக் கொண்டு தன் வழியில் தடுமாற்றமின்றி போய்க் கொண்டே இருக்கும்? எங்கே போகும்? கடலைச் சேர்வதற்காக. அதுதான் ஆற்றின் பரமானந்த சாகரம்.

நமக்கான பரமானந்த சாகரம் எது? புது வெள்ளமாக எது சுழித்துக் கொண்டு வந்து நம்மிடம் தேங்கியிருக்கும் அழுக்கையெல்லாம் எற்றித் தள்ளிக் கொண்டு போய் கழுவிடும் ஆறு எது? ஆறுமுகம் அன்றி வேறு எது?

பத்தித் திருமுகம் ஆறுடன் - அதென்ன பத்தித் திருமுகம்? பார்த்ததும் பற்றிக் கொள்ளும் முகங்கள் ஆறு. இன்றைக்கும் பாத்ததும் பத்திக்கிச்சு என்று சொல்வதுண்டல்லவா. முருகனின் ஆறு முகங்களின் அழகையும் பார்ப்பதில் அத்தனையின்பம். "முழுமதி அன்ன ஆறு முகங்களும்" என்கிறார் கச்சியப்பர். ஒரு மதியை பார்ப்பதே அழகு. இதில் ஆறு நிலவுகள் வரிசையாகக் காணக் கிட்டினால் எவ்வளவு அழகாக இருக்கும்.

பன்னிரு தோள்களுமாய் - பன்னிரண்டு தோள்களோடு முருகன் ஏன் இருக்கிறார்? வில்லைத் தாங்கவா? இல்லை. மாறாக தமிழ்ச் சொல்லைத் தாங்க. முருகன் தமிழ்க் கடவுள். தமிழர் பாடும் தீந்தமிழ் பாமாலைகளைச் சூடிக் கொள்ள ஒரு தோள் போதாதென்று பன்னிரண்டு தோள்களோடு நிற்கிறான் போலும். "பன்னிரு வாகுவில் என் சொல்லே புனையும் சுடர் வேலவனே" என்று கந்தரநுபூதியில் கூறுகிறார் அருணகிரி.

தித்தித்திருக்கும் அமுது கண்டேன் - தித்திக்கும் பொருள்களெல்லாம் திகட்டும். ஆனால் அமுதம் திகட்டாது. ஆகையால்தான் தித்தித்திருக்கும் அமுதம் என்று கூறுகிறார். முருகனை நினைக்கத் திகட்டாது. முருகன் புகழைச் சொல்லத் திகட்டாது. கந்தன் அழகை காணத் திகட்டாது.

செயன் மாண்டடங்கப் - செயல் மாண்டு அடங்க என்று பிரிக்க வேண்டும். முருகனின் திருவழகைக் கண்டதும் உண்டான வினைதான் இது. செயல் மாண்டு அடங்கி விடுமாம். செயலாவது மாள்வதாவது அடங்குவதாவது? என்ன சொல்ல வருகிறார் அருணகிரியார். இந்த உலகாயத்தில் வீணாக வருந்திச் செய்யும் செயல்கள் மாண்டு அடங்குமாம்.

விளக்கமாகச் சொல்கிறேன். நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறோம். ஒரு கால் குட்டையாக இருக்கிறது. நம்மால் நிம்மதியாக உட்கார்ந்திருக்க முடியுமா? ஒரு பக்கமாக ஆடிக் கொண்டிருக்கும் நாற்காலியில் நிம்மதியாக உட்கார முடியாது. அது போலத்தான் உலக வாழ்வில் ஒரு பிரச்சனைக்கு மேல் மறு பிரச்சனை வரும். அப்பொழுது முருகனைச் சரணடைய வேண்டும். அப்படிச் செய்தால் உலகாய துன்பங்கள் நமக்குத் தெரியாது.

எப்படி? நாற்காலியின் ஒரு கால் ஆடியதற்கே உட்கார முடியவில்லை. ஆனால் நாற்காலியே ஆடும் பொழுது நிம்மதியாக இருப்பதில்லையா? எங்கே இருக்கிறது அந்த நாற்காலி? ஓடும் ரயிலில் இருக்கை எப்பொழுதும் ஆடிக் கொண்டேயிருந்தாலும் நிம்மதியாக உட்கார்ந்திருக்கிறோம். உறங்குகிறோம். அது போல உலகாயத் துன்பங்கள் இருந்தாலும் முருகனைச் சரணடைவதால் நமக்கு எந்தத் துன்பமும் இல்லை.

புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புனமெற்றித் தத்திக் கரைபுரளும் பரமானந்த சாகரத்தே - அப்படி முருகனைச் சரணடந்தை பொழுது நமது அறிவாகிய தாமரையில் அன்பு உருகிப் பெருகிப், அனைத்துத் துன்பங்களையும் எற்றித் தள்ளிக் கொண்டு (புவனம் எற்றித்) தத்திக் கரைபுரண்டு பரமானந்த சாகரத்தைச் சேரும்.

இப்பொழுது புரிந்திருக்குமே. இறைவனை அண்டியவர்களுக்கு என்றும் துன்பமில்லை. அன்பும் அருளும் அனைத்தும் வழங்கும் முருகப் பெருமானின் திருவடிகளைச் சரணடைய வேண்டும்.

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, November 21, 2005

பட்டு பட்டு பட்டு பட்டு

கந்தரலங்காரத்திலுள்ள கவித்துவமான பாடல்களில் இதுவும் ஒன்று என்றால் மிகையாகாது. அழிவது என்பதே துன்பமானாது. இதில் இன்பமான அழிவுகளைப் பட்டியலிடுகிறார் அருணகிரி.

சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன்
வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்
கால் பட்டு அழிந்தது இங்கென் தலைமேல் ஐயன் கையெழுத்தே

திருச்செந்தூர் நீர்வளம் நிரம்பிய ஊர். அதிலும் மாதம் மும்மாரி பெய்த காலத்தில் மிகவும் செழிப்பாக இருந்திருக்கும்.

பகழிக்கூத்தர் பாடுகிறார் திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ். அதில் "பாம்பால் உததி தனைக் கடைந்து" என்ற பாடலில் இப்படிப் புகழ்கிறார்.
"முகையுடைக்கும் பூம்பா சடைப் பங்கயத் தடத்தில்
புனிற்றுக் கவரி முலை நெறித்துப் பொழியும் அமுதந்தனை
பேட்டெகினம் புனலைப் பிரித்துத் தீம்பால் பருகும் திருச்செந்தூர்
"

சுருக்கமாகச் சொல்கிறேன். மொட்டவிழும் தாமரைப் பூவோடையில் கன்று ஈன்ற எருமை இறங்கி உழப்புகையில், அதன் மடியை விரால் மீன் இடிக்க, பாலெல்லாம் தண்ணீரில் சொரிந்தது. அப்பொழுது மலர்களின் மேல் அமர்ந்துள்ள அன்னப் பறவைகள் தண்ணீரில் இறங்கி அந்தப் பாலை மட்டும் பிரித்துக் குடித்ததாம். என்ன அழகான கற்பனை.

அதே போன்ற ஒரு காட்சியைத்தான் அருணகிரியும் காட்டுகிறார். ஏற்கனவே அழகான அழிவுகளை அருணகிரி இந்தப் பாட்டில் சொல்கிறார் என்று சொன்னேன். அதை விளக்குகிறேன்.

சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயற் பொழில் - சேல் என்றால் மீன். திருச்செந்தூரில் வயல்கள் நிறைய உண்டு. அந்த வயல்களில் நீர்பாயும் வாய்க்கால்களில் மீன்கள் நிறைய உண்டு. இந்த மீன்கள் வாய்க்காலைத் தாண்டி வயலுக்குள்ளும் நுழைந்து துள்ளும். அப்படித் துள்ளும் பொழுது வயலிலிருந்த பயிர்கள் சிறிது அழிந்தனவாம்.

தேங்கடம்பின் மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் - மால் என்றால் விருப்பம். ஆசை வேறு. விருப்பம் வேறு. விருப்பம் என்பது துன்பம் தராதது. ஆனால் இன்றைக்கு இரண்டும் ஒரே பொருளில் வழங்கப்படுகின்றன. "மாலாசை கோவம் ஓயாதே நாளும்" என்று திருப்புகழில் பாடுகிறார் அருணகிரி.

மால் என்றால் விருப்பம். யாருக்கு விருப்பம். பூங்கொடியாருக்கு விருப்பம். எதன் மேல்? தேங்கடம்பின் மேல். திருச்செந்தூர் நாயகன் கந்த வேலவன் சூடிக் கொண்டிருக்கும் கடம்ப மாலையின் மேல் பெண்களுக்கு விருப்பம் உண்டானதாம். அந்த விருப்பத்தால் நொந்ததாம் பெண்களின் மனம்.

மாமயிலோன் வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் - வெற்பு என்றால் சிறிய குன்று. சூர் என்றால் துன்பம். வேலை என்றால் கடல். பழைய தமிழ்ச் சொற்கள் இவை. நினைவிற் கொள்க. கிரவுஞ்ச மலையைத் தூளாக்கினார் வேற்படையால். இதை "வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடியானது வேலவா" என்று பாடியிருக்கிறார் பாரதியார்.

சூர் என்றால் துன்பம். துன்பத்தைத் தீர்க்க வல்லது ஞானம். வேல் ஞானத்தின் வடிவம். ஆகையால் முருகனின் திருக்கைவேல் நமது துன்பங்களையெல்லாம் தீர்க்கும்.

வேலை என்றால் கடல். முருகனோடு பொருத முடியாமல் கடலுக்குள் ஒழிந்தான் சூரன். அப்பொழுது வேற்படையைச் செலுத்தி கடலை வற்றச் செய்தார் மயிலேறும் ஐயன்.

அவன் கால் பட்டு அழிந்தது இங்கென் தலை மேல் ஐயன் கையெழுத்தே - பிரமன் கையெழுத்துப் போட்டு அனுப்பிய நமது வாழ்வில் இன்பமும் துன்பமும் அலைக்களிக்கின்றன. "திமிர உததி அனைய ஜனனம்" என்கிறார் திருப்புகழில். குமுறும் கடலைப் போன்ற பிறப்பு என்பது அதன் பொருள்.

அந்தப் பிறவிப் பிணி பிரமன் கையெழுத்தால் வருவது. முருகனைச் சரணடைந்து அவன் திருவடிகளை வணங்க, பிரமனின் கையெழுத்து செல்லாமல் போய் விடும். ஒரு அதிகாரி தண்டிக்கிறார். மேலதிகாரியிடம் போய் முறையிட்டால் அவர் மன்னிக்க முடியுமல்லவா. அப்படித்தன் இதுவும். முருகனை அண்டியவர்களைத் துன்பம் அண்டுவதேயில்லை. துன்பத்திற்குத் துன்பம் கிடைப்பது முருகனடியவர்களிடத்தில்தான். ஆகையால் பன்னிருகை வேலவனை தமிழால் துதித்து வாழ்வு பெற வேண்டும்.

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, November 14, 2005

நாளா கோளா வேலா

நாளென் செயும் வினைதான் என் செயும் எனை நாடி வந்த
கோளென் செயும் கொடுங்கூற்றென் செயும் குமரேசன் இரு
தாளும் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே


இந்த உலகத்தில் நாம் எதற்கெல்லாமோ அஞ்சுகிறோம். எதைச் செய்யவும் அஞ்சிக் கொண்டு ஜோதிடர்களையும், வாஸ்து நிபுணர்களையும், பெயரியலாளர்களையும், மந்திரவாதிகளையும் நம்பிக் கொண்டு திரிகின்றோம். "அஞ்சி அஞ்சிச் சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே" என்று பாவேந்தர் பாரதிதாசன் சொன்னது எவ்வளவு உண்மை.

நவகோள்களும் நம்மைப் கோவிக்கின்றன என்று எண்ணிப் பயந்து பரிகாரங்களில் காசையும் மனசையும் கொட்டுகின்றோம். சாதகமாய்ச் சொன்னால் ஜாதகங்களைத் தூக்கி வைத்துக் கொண்டாடுவதும் பாதகமாய்ச் சொன்னால் பந்தாடுவதும் இன்று பலரிடம் கண்கூடு. இவைகளை எல்லாம் மூட நம்பிக்கைகள் என்று சாடுகின்றார் அருணகிரி.

தவறு நேர்ந்து விட்டதா? வாழ்க்கையில் பிழை செய்து விட்டோமா? கலங்கிப் போய் அங்கும் இங்கும் ஓடுவதை விட இறைவனை நாடுவது நல்லது என்கின்றார் அருணகிரி.

கச்சியப்பர் சொல்கின்றார். "தீயவை புரிந்தாரேனும் குமரவேள் திருமுன் உற்றால் தூயவராகி மேலைத் தொல்கதி அடைவர்".

தவறு செய்திருந்தாலும் முருகனை வணங்கினால், அந்தத் தவறை உணர்ந்து திருந்தி நல்ல வழியை அடைவார்கள். அதற்காகத் தவறு செய்து விட்டு முருகனை நினைத்தால் போதுமா? தண்டனையிலிருந்து தப்பித்து விடலாமா? இல்லவேயில்லை.

தவறு செய்தவன் முதலில் திருந்த வேண்டும். திருந்தி விட்டானானால் அந்தக் குற்றத்துக்குரிய தண்டனையை அவன் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வான். பிறகு செய்த தவற்றிற்குப் பரிகாரம் தேடுவான். இதுதான் இறைவனருள் என்கிறார் கச்சியப்பர்.

அருணகிரி இன்னும் ஒரு படி மேலே போகின்றார். ஒரு செயலைச் செய்ய நல்ல நாளையும் கெட்ட நாளையும் பார்க்க வேண்டாம். அந்தக் கோள் வருத்துமோ இந்தக் கோள் உறுத்துமோ என்று கலங்க வேண்டும். நல்வினையும் தீவினையும் செய்வினையும் கொடுமைப் படுத்துமோ என்று விக்கித்து நிற்க வேண்டாம். இவைகள் எல்லாம் இறைவனுக்கு முன்னால் செயலற்றவை.

திருஞானசம்பந்தரை அனைவருக்கும் தெரியும். ஞானக்குழந்தை அவர். காஞ்சியிலிருந்து மதுரைக்குப் புறப்படுகிறார். மதுரையரசி மங்கையர்க்கரசி அழைப்பு வந்திருக்கிறது. புறப்படுகையில் நேரம் சரியில்லாத நேரத்தில் கிளம்புகிறார். அடியார்கள் எல்லாம் மூடர்களாக பொழுது சரியில்லை என்று எச்சரித்தார்கள். சரித்துக்கொண்டே ஒரு பதிகம் பாடினார் அந்தக் குழந்தையம் பெருமான்.

"வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்தவன் அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டுமுடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே
"

ஈசன் திருவடியை வழிபடும் அடியவர்களுக்கு ஒன்பது கோள்களினாலும் ஒரு துன்பமும் இல்லை என்கிறார் சம்பந்தர். மேலும் இறைவன் மேல் உண்மையான நம்பிக்கையும் அன்பும் வைத்துள்ளவர்கள் இந்த கோள்கள் எது செய்தாலும் நன்மையாகவே இருக்கும் என்பதே பொருள்.

சோதிட, எண்கணிதங்களை எண்ணி உள்ளம் துன்பப்படுகையில் இந்தப் பாடலைச் சொல்லுங்கள். உள்ளம் தெளியும். நன்மை விளையும்.

பக்தியுடன்,
கோ.இராகவன்

Monday, November 07, 2005

இளமையில் கல்லா? கள்ளா?

கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை
மொண்டுண்டு அயர்கினும் வேல் மறவேன் முதுகூளித்திரள்
டுண்டுண் டுடுடுடு டூடூ டுடுடு டுண்டுடுண்டு
டிண்டிண் டெனக் கொட்டியாட சூர் கொன்ற ராவுத்தனே


இளமையில் கல் என்பது பழமொழி. இளமையில் கள் என்பது புதுமொழி. கள்ளருந்தினால் என்னவாகும்? அறிவு மங்கும். அறிவின் வயப்பட்டிருந்த உடல் தன்னிச்சையாக செயலாற்றத் துவங்கும். அது அழிவில் சென்று விட்டு விடும்.

ஆகையால்தான் கள்ளுண்ணாமை என்று அதிகாரமே எழுதியிருக்கின்றார் வள்ளுவர். குடித்த பொழுதே மனதை மயக்குவது கள்ளென்றால், நினைத்த பொழுதே மனதை மயக்குவது காமம்.

கள்ளுக்கடையை கண்ட பொழுதெல்லாம் கள்ளுண்டவனைப் போல காமக் கள்ளை மொண்டு உண்டார் அருணகிரிநாதர்.

கண்டுண்ட - கற்கண்டு உண்ட
சொல்லியர் - பேசுகின்றவர்கள்
கண்டுண்ட சொல்லியர் என்றால் கற்கண்டு போல இனிமையாகப் பேசுகின்றவர்கள்.
கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் என்றால் கற்கண்டு போல இனிமையாகப் பேசும் மென்மையான பெண்கள். அவர்களோடு கூடிக் குலவி காமக் கள்ளை மொண்டு உண்டு அயர்ந்து போகின்ற வேளையில் என்ன நினைக்க வேண்டும்?

வேலை நினைக்க வேண்டும். வேலென்றால் கொலைக்கருவி அல்ல. அறிவின் வடிவம். கொலைக்கருவி என்று கேவலமாகப் பேசக் கூடாது. அறிவு ஆழமானது. அகலமானது. கூர்மையானது. இவை மூன்றையும் குறிப்பது வேல்.

மதி மயங்கிய வேளையில் வேலை நினைக்க வேண்டும். அறிவு வரும். ஆகையால்தால் "அயர்கினும் வேல் மறவேன்" என்றார் அருணகிரிநாதர்.

இன்னும் விளக்கமாகச் சொல்கின்றேன். பாலைக் காய்ச்சுகிறோம். கொதிக்கின்ற பால் பொங்கி வழியப் போகிறது. அப்பொழுது சிறிது தண்ணீரைத் தெளித்தால் பால் அடங்கி விடும். இப்படி அடிக்கடி தண்ணீர் தெளித்து காய்ச்சிக் கொண்டே இருந்தால் பால் திரண்டு வரும். அறிவு மயங்கும் வேளைகளிலெல்லாம் வேலை நினைத்தால் அறிவு திரண்டு வரும். புரிகிறதா?

முருகனை நினைக்க வேண்டுமென்று சொல்லவில்லை. வேலை நினை என்று சொல்கின்றார். இதுதான் அருணகிரியின் மதச்சார்பற்ற பண்பு.

சூர் கொன்ற ராவுத்தனே என்று பாடலை முடிக்கிறார். சூர் என்றால் துன்பம். துன்பத்தைக் கொன்ற ராவுத்தனே என்று முருகனைப் புகழ்கிறார். இந்தப் பாடல் கந்தரலங்காரத்தில் வந்திருப்பதால் முருகனைக் குறிக்கின்றார் என்று சொல்கிறோம். தனிப்பாடலாக எடுத்துப் படித்தால் எல்லா மதத்தினரும் ஒத்துக் கொள்ளும் கருத்து நிறைந்திருக்கிறது.

கூளி என்றால் பேய். முது கூளித்திரள் என்றால் பெரும் பேய்க்கூட்டம். டுண்டுண்டுண்டென்று இந்தப் பேய்க்கூட்டங்கள் ஆடுகையில் துன்பத்தைக் கொன்ற ஆண்டவனை வேண்டுகின்றார் அருணகிரி.

இலக்கியத்தில் ஒரு காட்சி நினைவிற்கு வருகின்றது. சிலப்பதிகாரத்தில் வரும் போர்க்காட்சி. சேரன் செங்குட்டுவன் இமயத்தில் கல்லெடுக்கப் போகின்றான். அங்கே அவனை எதிர்க்கின்ற கனகனையும் விசயனையும் போரில் எதிர்கொள்கின்றான். வெல்கிறார். அப்பொழுதும் பேய்க்கூட்டங்கள் ஆடின பாடின என்று எழுதியுள்ளார் இளங்கோவடிகள். "பறைக்கண் பேய்மகள்" என்று எழுதியிருக்கிறார். பறையை ஒத்த பெரிய வட்ட வடிவமான கண்களை உடைய பேய் மகள் என்று பொருள்.

மனது மயங்கும் பொழுது இந்தப் பாடலை நினைத்துக் கொள்ளுங்கள். அறிவு வேலை செய்யும்.

அன்புடன்,
கோ.இராகவன்

Tuesday, November 01, 2005

காதறுந்த ஊசியும்....

கோழிக் கொடியனடி பணியாமற் குவலயத்தே
வாழக் கருதும் மதியிலிகாள் வல்வினை நோய்
ஊழிற் பெருவலி யுண்ணவொட்டா துங்கள் அத்தமெல்லாம்
ஆழப் புதைத்து வைத்தாலும் வருமோ நும் மடிப்பிறகே


நமக்குச் செருக்கு என்று வரும் பொழுது இந்தப் பாடலை நினைத்துக் கொண்டால் வந்த செருக்கு சரக்கென்று மறைந்தோடி விடும்.

கோழிக் கொடியனடி - முருகனுடைய கொடியில் இருப்பது கோழி. ஏன் கோழி? இருள் விடிந்து ஒளி வருவதை ஓங்காரமிட்டுச் சொல்வது கோழி. அதாவது உறங்கிக் கிடப்பவர்களை விழிக்கச் செய்யும் பணி. அது அறிஞர்களுக்கு மட்டுமே ஆகும். ஞான வடிவமாக கோழி கொடியில் நின்று கூவி உலகமாயையில் உறங்கிக் கிடப்பவர்களை விழிக்கச் செய்வதால் இந்தப் பெருமை.

செவற்கொடியோன் என்றுதானே சொல்வார்கள். இங்கென்ன கோழி என்று கேட்கலாம். கோழி என்பது சேவலின் பெண் பால். பால் வேறுபாடு பார்க்கும் வழக்கம் இறைவனுக்குக் கிடையாது என்பதால் கோழியையும் சேவலையும் அருணகிரி மாறிமாறிப் பயன்படுத்தியிருக்கிறார்.

அப்படி முருகனுடைய அடியைப் பணியாதவர்களுக்கு இந்தப் பாடலை எழுதியிருக்கிறார் அருணகிரி.
"குவலயத்தே வாழக் கருதும் மதியிலிகாள்" - முருகனுடைய திருவடிகளைச் சரணடையாமல் இந்த உலகத்தில் வாழக் கருதும் மதியற்ற்வர்களே உணருங்கள். எதை?

வல்வினை நோய் - நல்வினை தீவினையாகிய நோய்கள் கொடுமைப் படுத்தும்.

ஊழிற் பெருவலியுண்ணவொட்டா துங்கள் அத்தமெல்லாம் - ஊழினைக் காட்டிலும் பெரிது உண்டோ? "ஊழிற் பெருவலி யாவுள? மற்றொன்று சூழினும் தாமுந்துறும்" என்கிறார் வள்ளுவர். விதி வலியது. அந்த விதியின் கொடுமையிலிருந்து தப்பிக்க சேர்த்து வைத்த செல்வம் (அத்தம்) பயன்படுமா? பயன்படாது. ஊழின் பிடியிலிருந்து தப்பிக்க கோழிக்கொடியனடி பிடிக்க வேண்டும்.

ஆழப் புதைத்து வைத்தாலும் வருமோ நும் மடிப்பிறகே - பாடுபட்டுப் பல செல்வந் தேடி அதைக் குழி வெட்டிப் புதைத்து வைத்தால் நம்மோடு கடைவழிக்கு வருமோ? பட்டினத்தடிகள் பெருஞ்செல்வந்தர். தங்கம் மலையாகக் குவிந்த வீடு. வெள்ளித் தரையாக மெழுகிய வீடு. வைரக் கதவாக விளங்கிய வீடு. இப்படி வாழ்ந்தவருக்கும் ஞானம் வந்தது. எப்படி? ஒரு வரியால். "காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே!"

காதறுந்த ஊசி கூட கூட வராத நிலையில் தங்கமும் வெள்ளியுமா வரப் போகிறது. பசித்த வேளைக்குத் திங்கக் கூட முடியாத அந்த அந்தச் செல்வமா நமது விதியிடமிருந்து காக்கப் போகின்றது. இல்லை. இறைவன் திருவடி ஒன்று மட்டுமே நம்மை வாழ வைக்கும். திருவடியென்னும் திருச்செல்வத்தைத் தேடினால் பெருஞ்செல்வம் நம்மைத் தேடி வரும்.

முருகனடி பணிந்தால்தானா இப்படி? வேறு தெய்வங்களை வணங்குகின்றார்களே அவர்களுக்கு? எல்லா தெய்வங்களும் ஒன்றே. உங்கள் மனதிலுள்ள தெய்வத்தை நினைத்துக் கொள்ளுங்கள். "கோழிக் கொடியனடி" என்ற சொல்லை மட்டும் எடுத்து விட்டு, உங்கள் மனதிலுள்ள இறைவனடி என்று போட்டுப் பாருங்கள். இதுவரை நான் விளக்கியது மாறாமல் அப்படியே வரும்.

அன்புடன்,
கோ.இராகவன்